தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை, சுமார் 480 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் சேவப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு விஜயராகவ நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது. விஜய ரகுநாத நாயக்கர் காலத்தில் “விஜய விசாலம்” என்றும் “இரகுநாத விலாசம்” என்றும், விஜயராகவ நாயக்கர் காலத்தில் “விஜயராகவா விலாசம்” என்றும் இந்த அரண்மனைக்குப் பெயர் சூட்டியிருந்தனர். சாகித்ய ரத்னாகரம், ரகுநாத நாயக்கப் யூத யமு, மன்னாருதாச விலாசம், போன்ற பண்டைய நூல்கள் இந்த அரண்மனை பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது. இந்தப் பதிவு தஞ்சாவூர் மராத்தா மாளிகையின் வரலாறு, நினைவுச் சின்னங்கள், சுற்றுலா உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் இந்தப்பதிவு விவரிக்கிறது.

அமைவிடம்

தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரின் (அமைவிடம் 10°47′00″N அட்சரேகை 79°8′10″E தீர்க்கரேகை. கடல் மட்டத்திலிருந்து 62 – 21 மீ உயரம்) இராஜகிருஷ்ணபுரத்தில் (பின்கோடு 613001) அமைந்துள்ளது. இந்த அரண்மனை வளாகம் மிகவும் பெரியதாகும். ஏறக்குறைய 110 ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து 950 மீ தொலைவிலும், தஞ்சாவூர் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து 6.9 கி.மீ. தொலைவிலும் இந்த வளாகம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது.

வரலாறு

கி.பி. 655-ஆம் ஆண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை தஞ்சாவூர் குறுநில மன்னர்களான முத்தரையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. முத்தரையர்களை வென்று விஜயாலய சோழன் (கி.பி. 848 – 880) பிற்காலச் சோழ வம்சத்தவர்களின் (கி.பி. 848 – 1279) ஆட்சியை நிறுவினான். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் எழுச்சி பெற்றனர். கி.பி. 1279 ஆம் ஆண்டளவில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்பு தஞ்சை, சிறிது காலம், பாண்டியர்களின் பிடியில் இருந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.

கி.பி. 1532 ஆம் ஆண்டு தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. இதனை சேவப்ப நாயக்கர் (கி.பி. 1532 – 1560) நிறுவினார். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன் ஆவான். தொடர்ந்து அச்சுதப்ப நாயக்கர் (கி.பி. 1560 – 1600), இரகுநாத நாயக்கர் (கி.பி. 1600 – 1632) மற்றும் விஜயராகவ நாயக்கர் (கி.பி. 1633 – 1673) ஆகியோர் ஆட்சி புரிந்தனர். மதுரை நாயக்க அரசர் சொக்கநாதர் கி.பி. 1673 ஆம் ஆண்டு படையெடுத்து வந்து தஞ்சாவூரைக் கைப்பற்றினான். இந்தப்போரில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்பட்டார். தஞ்சாவூர் மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது. போன்ஸ்லே குலத்தைச் சேர்ந்த சத்திரபதி சிவாஜியின் இளைய தம்பியாகிய வெங்கோஜி என்ற ஏகோஜி, தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674 ஆம் ஆண்டு கைப்பற்றித் தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். தஞ்சை மராத்தியர்களின் ஆட்சி 1855 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.

தஞ்சாவூர் மராத்தா மாளிகை வரலாறு 

கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்த தஞ்சாவூர் ஒரு வளர்ந்துவரும் நகரம் ஆகும். தற்போது இங்கு சின்னக் கோட்டை (Little fort) மற்றும் பெரிய கோட்டை (Big fort) ஆகிய இரண்டு முக்கியக் கோட்டைகள் உள்ளன. தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை பெரியகோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் மராத்தா மளிகை என்று பெயர் பெற்றிருந்தாலும் இம்மளிகையைத் தஞ்சை மராத்தியர்கள் கட்டவில்லை. தஞ்சாவூர் மராத்தா மாளிகை கட்டுமானம் சேவப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது. ஏப்ரல்  1674 வரை இம்மாளிகை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாயக்க மன்னர்கள் இந்த மாளிகைக்குச் சிவகங்கை மாளிகை என்று அதிகாரபூர்வமாகப் பெயர் சூட்டி அழைத்தனர். தற்காலத்தில் இந்தப் பெயரை மக்கள் மிகவும் அரிதாகவே பயன்படுத்துகிறார்கள்.

பிற்காலத்தில் (கி.பி. 1674 முதல் 1855 வரை)  தஞ்சாவூர் மராத்தியர்கள் இந்த மாளிகையைத் தங்கள் தேவைகளுக்கேற்ப விரிவு படுத்தி, மேம்படுத்திக்கொண்டனர். இந்த மாளிகை கி.பி. 1674 முதல் 1855 வரை தஞ்சைப் பகுதியை ஆண்டுவந்த மராத்திய போன்ஸ்லே குடும்பத்தினரின் உத்தியோகபூர்வமாக வாசித்த மாளிகையாகத் திகழ்ந்துள்ளது.  தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு இந்தத் தஞ்சாவூர் மராத்தா மளிகை மராத்திய போன்ஸ்லே அரச  குடும்பத்தினருடைய வாரிசுகளின் வசிப்பிடமாகத் திகழ்ந்து வருகிறது.

தஞ்சை மராத்தா மாளிகை அமைப்பு: சிறிய விளக்கம்

காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுச் சின்னமாகத் திகழும் தஞ்சை மராத்தா மாளிகை அமைந்துள்ள பெரிய கோட்டை மற்றும் சிறிய கோட்டை ஆகியவற்றைச் சுற்றி மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி ஆகிய நான்கு பிரதான வீதிகள் அமைந்துள்ளன. தஞ்சை இராசவீதிகளை அடு்த்தடுத்துள்ள சந்துகளின் பெயர்கள் அனைத்தும் அரண்மனை ஊழியர்களின் நினைவாக மராட்டிய மன்னர் காலத்தில் வைக்கப்பட்டனவாம்.

கோட்டையின் கீழவாசல் பகுதியில் வெள்ளை பிள்ளையார் கோயில் அருகே பீரங்கி மேடு அமைந்துள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற இராஜகோபால பீரங்கி வார்ப்பிரும்பு (Cast Iron) பட்டைகளால் 26 அடி நீளத்தில் இந்தப் பீரங்கி 300 மி.மீ. உருட்டு உருளையும் 150 மி.மீ. உட்சுவர் கனமும் கொண்டு இரு பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்குக் கோட்டை மதிற்சுவர்களில் பெரிய நுழைவாயில்கள் உள்ளன. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, கீழராஜவீதி வழியாக,  எளிதாக நடந்து சென்றுவிடலாம். கீழராஜவீதியில் இருந்து ஒரு சந்து வழியாகச் சென்று வடக்குப் பிரதான நுழைவாயிலைக் கடந்தால் தஞ்சாவூர் மராத்தா மாளிகை அமைந்துள்ள பெரிய கோட்டை வளாகத்திற்குள் நுழைந்து விடலாம். இந்த மாளிகை வளாகம், மொத்தம் 110 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.

இந்தப் பெரிய தஞ்சை மராத்தா மாளிகை / அரண்மனையின் ஒரு பகுதி கோட்டை கொத்தளங்கள் நாயக்கர்களாலும் மற்றொரு பகுதி மராட்டியர்களாலும் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணி ஒருவர் நடந்து செல்கையில், சிதைந்துபோன கோட்டையின் எச்சங்களை ஒரு புறத்திலும், நினைவுச் சின்னங்களைப் புதுப்பித்துப் பாதுகாப்பதற்காக  மறு சீரமைப்புப் பணிகள்  நடைபெறுவதை வேறொரு புறத்திலும் காண முடியும். குறுகிய இடைவெளியில் அகலம் குறைந்த மாடிப் படிக்கட்டுகள்,  திடீர்த் திருப்பங்கள் மற்றும் தாழ்ந்த கூரைகள் போன்ற அம்சங்களை இம்மாளிகையில் காணலாம்.  இந்த மாளிகை ஒரு கோட்டைக்கான தற்காப்பினைக் கொண்டுள்ளது.  இந்தத் தற்காப்பு அமைப்புகள் எதிரிகள் விரைவாக முன்னேறி வராமல் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிரிகளின் குதிரைப்படையினர் வேகமாக முன்னேறி வந்து மாளிகையினுள் நுழைய முடியாதபடியும், தரைப்படையினர் வேகமாக  ஏறி வர முடியாதபடியும்  இந்தத் தற்காப்பு அமைப்புகள் தடுக்கும்.  

எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்தப் பெரிய கோட்டையைச் சுற்றிக் கட்டப்பட்ட கோட்டை மதிற்சுவரின் எஞ்சிய பகுதிகளை வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்குத் திசைகளில் இன்றும் காணலாம். இந்தப் பெரிய கோட்டையின் தெற்குப் பகுதி முழுவதும் அழிந்துபோயிற்று. நீர் நிரம்பிய சிறிய அகழியை இன்றுகூட உன்னிப்பாகப் பார்த்துக் கண்டுபிடித்துவிட முடியும்.

tanjore palace entrance க்கான பட முடிவு

தஞ்சாவூர் மராத்தா மளிகை: ஒரு வழிகாட்டி

தஞ்சாவூர் மராத்தா மாளிகை வளாகத்தின் நுழைவாயில் வளைவின்  (Entrance Arch) வழியாக நுழைந்து வளைவுகளுடன் கூடிய குறுகிய தாழ்வாரத்தைத் (Corridor with Narrow Arches) தாண்டிச்  சிறிது தூரம் சென்றால் நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தை அடையலாம்.  பார்வையார்களை அனுமதிக்கும்  நேரம்:  காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தஞ்சைக் கலைக் கூடம் காலை மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இங்கு நினைவுச் சின்னங்களைக் காண்பதற்கான நுழைவுச் சீட்டு (இந்தியர் ரூ. 50.00 / வெளிநாட்டவர் ரூ. 200.00) மற்றும் கேமராக் கட்டணம் (இந்தியர் ரூ. 30.00 / வெளிநாட்டவர் ரூ. 100.00) ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். ராயல் அரண்மனை அருங்காட்சியகம் (நுழைவுக் கட்டணம் ரூ. 2.00) மற்றும் ராஜா சரபோஜி நினைவு மண்டபம் (நுழைவுக் கட்டணம் ரூ. 4.00)ஆகியவற்றிற்கான நுழைவுச் சீட்டும் கேமரா கட்டணமும் இந்த நினைவுச் சின்னங்களின் நுழைவாயில்களிலேயே கிடைக்கும். நுழைவுச் சீட்டுகளை ஒவ்வொரு நினைவுச் சின்னத்தின் நுழைவாயிலிலும் காட்ட வேண்டும்.

ரூ. 100 செலுத்தி முழு நுழைவுச் சீட்டு (Full Ticket) வாங்கிக் கொண்டு பார்க்க வேண்டிய இடங்கள்:-

சதர் மஹால் மாளிகையில்  (Sadar Mahal Palace) (ஜார்ஜவா மாளிகை Sarjah Madi)

  1. ராயல் அரண்மனை அருங்காட்சியகம் (Royal Palace Museum)
  2. ராஜா சரபோஜி நினைவு மண்டபம் (Raja Serfoji Memorial Hall),
  3. மராட்டா தர்பார் மண்டபம் (Mahratta Darbar Hall)

மற்றும்

  1. தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் அருங்காட்சியகம்  (Thanjavur Maharaja Saraswati Mahal Library Museum),
  2. ஆயுத சேமிப்பு மாளிகை கூடகோபுரம் (Arsenal Tower)
  3. தஞ்சைக் கலைக் கூடம் (Thanjavur Art Gallery) (Sadar Mahal Palace courtyard) Arsenal Tower)
  4. மணிமண்டபம் (Bell Tower),
  5. சார்ஜா மாடி என்னும் சர்தார் மாடி  (Sadar Madi (Sarjah Madi),
  6. சங்கீத மஹால் (Sangeeth Mahal)

ஆயுத சேமிப்பு மாளிகை கூடகோபுரம் (Arsenal Tower), மணிமண்டபம் (Bell Tower), மராத்தா தர்பார் மண்டபம் (Darbar hall of the Marathas) மற்றும் ஷார்ஜா மாடி ( Sarjah Madi) ஆகிய நினைவுச் சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் (Tamil Nadu State Arachaeology Department) பராமரிப்பில் உள்ளது. ராஜா சரபோஜி நினைவு மண்டபம் (Raja Serfoji Memorial Hall) தஞ்சை மராத்திய அரச மரபினரின் வாரிசுகளின் பாதுகாப்பில் உள்ளது. இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை (Archaeological Survey of India) சில நினைவுச் சின்னகளைப் பாதுகாத்து வருகிறது.

மாளிகையில் இருந்த பண்டகசாலையில் அரண்மனையின் கலைக்காட்சிக்கூடமாகப் பயன்பட்டு வருகிறது. இங்கு கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

thanjavur-palace-2

தஞ்சாவூர் மராத்தா மாளிகை வளாகத்தின் நுழைவாயில் வளைவின்  (Entrance Arch) வழியாக நுழைந்து வளைவுகளுடன் கூடிய குறுகிய தாழ்வாரத்தைத் (Corridor with Narrow Arches) தாண்டிச்  சிறிது தூரம் சென்றால் நுழைவுச் சீட்டு வழங்கும் இடத்தை அடையலாம்.  பார்வையார்களை அனுமதிக்கும்  நேரம்:  காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தஞ்சைக் கலைக் கூடம் காலை மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இங்கு நினைவுச் சின்னங்களைக் காண்பதற்கான நுழைவுச் சீட்டு (இந்தியர் ரூ. 50.00 / வெளிநாட்டவர் ரூ. 200.00) மற்றும் கேமராக் கட்டணம் (இந்தியர் ரூ. 30.00 / வெளிநாட்டவர் ரூ. 100.00) ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். ராயல் அரண்மனை அருங்காட்சியகம் (நுழைவுக் கட்டணம் ரூ. 2.00) மற்றும் ராஜா சரபோஜி நினைவு மண்டபம் (நுழைவுக் கட்டணம் ரூ. 4.00)ஆகியவற்றிற்கான நுழைவுச் சீட்டும் கேமரா கட்டணமும் இந்த நினைவுச் சின்னங்களின் நுழைவாயில்களிலேயே கிடைக்கும். நுழைவுச் சீட்டுகளை ஒவ்வொரு நினைவுச் சின்னத்தின் நுழைவாயிலிலும் காட்ட வேண்டும். ரூ. 100 / ரூ. 200 செலுத்தி முழு நுழைவுச் சீட்டு (Full Ticket) வாங்கிக் கொண்டீர்களா?

தஞ்சாவூர் மராத்தா மாளிகையினுள் ஈர்க்கும் இடங்கள் 

சதர் மஹால் மாளிகையில்  (Sadar Mahal Palace) (ஜார்ஜவா மாளிகை Sarjah Madi)

  1. ராயல் அரண்மனை அருங்காட்சியகம் (Royal Palace Museum)
  2. மன்னர் (இரண்டாம்) சரபோஜி நினைவரங்கம் (Raja Serfoji Memorial Hall)
  3. மராட்டா தர்பார் மண்டபம் (Mahratta Darbar Hall)

மற்றும்

  1. தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் அருங்காட்சியகம்  (Thanjavur Maharaja Saraswati Mahal Library Museum),
  2. ஆயுத சேமிப்பு மாளிகை கூடகோபுரம் (Arsenal Tower)
  3. தஞ்சாவூர் கலைக் கூடம் (Thanjavur Art Gallery)
  4. மணிமண்டபம் (Bell Tower),
  5. சார்ஜா மாடி என்னும் சர்தார் மாடி  (Sadar Madi (Sarjah Madi),
  6. சங்கீத மஹால் (Sangeeth Mahal)

ஆயுத சேமிப்பு மாளிகை கூடகோபுரம் (Arsenal Tower), மணிமண்டபம் (Bell Tower), மராத்தா தர்பார் மண்டபம் (Darbar hall of the Marathas) மற்றும் ஷார்ஜா மாடி ( Sarjah Madi) ஆகிய நினைவுச் சின்னங்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் (Tamil Nadu State Arachaeology Department) பராமரிப்பில் உள்ளது. ராஜா சரபோஜி நினைவு மண்டபம் (Raja Serfoji Memorial Hall) தஞ்சை மராத்திய அரச மரபினரின் வாரிசுகளின் பாதுகாப்பில் உள்ளது. இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை (Archaeological Survey of India) சில நினைவுச் சின்னகளைப் பாதுகாத்து வருகிறது.

ஈர்க்கும் இடங்கள் 

சதர் மஹால் மாளிகை Sadar Mahal Palace (ஜார்ஜவா மாளிகை Sarjah Madi)

சதர் மஹால் மாளிகை கிருஷ்ணவிலாஸ் குளத்தின் அருகே அமைந்துள்ளது. தற்போது கிருஷ்ணவிலாஸ் குளம் இல்லை. மன்னர் இரண்டாம் சரபோஜி, தன்னுடைய காசி யாத்திரையை முடித்த பின்னர், கி.பி. 1824 ஆம் ஆண்டு சதர் மஹால் மாளிகையைக் கட்டினார். இந்த மஹால் சுமார் 195 ஆண்டுகள் பழமையானது. இந்த மஹால் மன்னர் சரபோஜி மற்றும் இவர் வாரிசுகளின் வசிப்பிடமாகத் திகழ்ந்துள்ளது. இந்த மாளிகையில் மன்னர் சரபோஜி நினைவரங்க அருங்காட்சியகம் (Maharaja Serfoji’s Memorial Hall Museum), மராட்டா தர்பார் மாளிகை (Mahratta Dharbar Hall), அரச அருங்காட்சியகம் (Royal Museum) ஆகிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு சமயம் இந்த மஹால்கள் புதிப்பிக்கப்பட்டன. தற்போது இந்த நினைவுச் சின்னங்கள் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை (Archaeological Survey of India), தமிழ் நாடு அரசு தொல்லியல்துறையின் (Tamil Nadu State Arachaeology Department), தஞ்சை மராத்திய அரச மரபினரின் வாரிசுகள் ஆகியோர்களின் பாதுகாப்பில் உள்ளன.

ராயல் அரண்மனை அருங்காட்சியகம் (Royal Palace Museum)

நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு இடதுபுறம் செல்லும் சாலை வழியே 30 மீ. நடந்து சென்றால் சதுர வடிவிலான முற்றத்தைக் (Square Corridor) காணலாம். இந்த முற்றத்தையொட்டி பளிச்சென்ற வண்ணம் பூசிய முகப்புடன் சரஸ்வதி மஹால் நூலகம் (Saraswati Mahal Library Museum), மிளிர்வதைக் காணலாம். சரஸ்வதி மஹாலுக்கு இடதுபுறம் செல்லும் வழியே சென்றால் ராயல் அரண்மனை அருங்காட்சியகத்தை (Royal Palace Museum) சென்றடையலாம்.

ராயல் அரண்மனை அருங்காட்சியகம் தஞ்சை நகரத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகங்களில் மிகப்பழமையானது ஆகும். இங்கு செல்வதற்குத் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் கேமரா கட்டணம் செலுத்த வேண்டும். பழங்காலத்து நாணயங்கள், ஆயுதங்கள், சமையலறைப் பாத்திரங்கள், இசைக் கருவிகள் ஆகிய பொருட்கள் இந்தச் சிறிய அருங்காட்சியகத்தின் இரண்டு நடைக் கூடங்களில் (Corridors) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய படம்

Royal Palace Museum

மன்னர் (இரண்டாம்) சரபோஜி நினைவரங்கம் (Raja Serfoji Memorial Hall) – சதர் மஹால் அரண்மனை (Sadar Mahal Palace)

வகை: கலை மற்றும் கைவினை, வரலாறு
நிறுவப்பட்டது: 1997 ஆம் ஆண்டு
திறந்திருக்கும் நேரம்: வாரத்தின் 7 நாட்களும்
நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
நுழைவுக்கட்டணம்: உண்டு
சுற்றிப்பார்க்கத் தேவைப்படும் நேரம்: ஒரு மணி நேரத்திற்கும் குறைவு

ராயல் அரண்மனை அருங்காட்சியகத்தை அடுத்து ஒரு நுழைவுச் சீட்டு விற்பனை மையம் உள்ளது. இங்கு நுழைவுச் சீட்டு கேமரா கட்டணம் ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இங்கிருந்து செல்லும் வளைவுகளுடன் கூடிய அழகிய நீண்ட பாதை வழியாக நடந்து, குறுகிய படிகள் வழியாக ஏறிச் சென்றால் மன்னர் (இரண்டாம்) சரபோஜி நினைவரங்கம் (Raja Serfoji Memorial Hall) சென்றடையலாம். இஃது ஒரு பெரிய கூடம் ஆகும். இங்கு புகைப்படங்களும் தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சதர் மஹால் அரண்மனையில் (Sadar Mahal Palace) மன்னர் (இரண்டாம்) சரபோஜி நினைவரங்க அருங்காட்சியகத்தை, இரண்டாம் சரபோஜியின் நான்காம் வாரிசாகிய, இளவரசர் துளஜேந்திர ராஜா பி. போஸ்லே கி.பி. 1997 ஆம் ஆண்டு நிறுவினார். மன்னர் இரண்டாம் சரபோஜி சேகரித்த கலை மற்றும் கலைப்பொருட்கள் இவர் வாசித்த மாளிகையிலேயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை இளவரசர் துளஜேந்திர ராஜா பி. போஸ்லே அக்டோபர் 11, 1997 அன்று துக்கி வைத்தார். இது தனியார் அருங்காட்சியகம் ஆகும். தென்னிந்திய கலாசாரம் மற்றும் இலக்கியத்திற்குத் தஞ்சை மராத்திய மன்னர்கள் ஆற்றிய பங்களிப்பை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த மாளிகையைப் புதுப்பித்துப் புதிதாக வண்ணம் பூசியுள்ளார்கள். இந்த மாளிகையின் மேற்புற சுவர்களின் ஒரத்தை சுதை வேலைப்பாடுகளால் அலங்காரம் செய்துள்ளார்கள்.   வீட்டுச் சாமான்கள், அரச உடைகள், போன் மற்றும் வெள்ளிக் கலன்கள், படைக்கலன்கள், மட்கலன்கள், கையெழுத்துப் பிரதிகள், மரம் மற்றும் தந்தத்தில்  செய்த கைவினைப் பொருட்கள், பலவிதமான தைல ஓவியங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறிகள், 3 1/2 அடி உயரம் கொண்ட மாபெரும் கண்ணாடி பாட்டில்கள், பாத்திரங்கள், கி.பி. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசர்கள் அரசிகள் பயன்படுத்திய நாற்காலிகள் எல்லாம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தந்தத்திலான கலைப்பொருட்கள் (Ivory Artefacts), பழங்காலத்திய தஞ்சாவூர் ஓவியங்கள் (Antique Tanjore Paintings), தானியங்களைக் கொண்டு உருவாக்கிய காஞ்சி சங்கராச்சாரியாரின் அறிய உருவப்படம் ஆகிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

thanjavur-palace-12

நிலத்தடிப் பாதை 

கிருஷ்ணவிலாஸ் குளம் இருந்த இடத்தில் தற்போது ஒரு சிறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சதர் மஹாலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இரகசிய நிலத்தடி பாதை கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்பாதை கி.பி. 1855 ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்துள்ளது. தற்போது பொதுமக்களின் பார்வைக்காக இந்தப்பாதை திரும்பவும் திறக்கப்பட்டுள்ளது.

மராட்டா தர்பார் மண்டபம் (Mahratta Darbar Hall) 

மன்னர் (இரண்டாம்) சரபோஜி நினைவரங்கத்தில் (Raja Serfoji Memorial Hall) இருந்து பார்த்தல் ஒரு திறந்தவெளி முற்றம் காணப்படும். இங்கு நுழைவுச் சீட்டு மையம் கிடையாது. ஆனால் நுழைவுச் சீட்டை சோதிக்கும் சவுக்கை (Ticket Checking Booth) உண்டு. ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டு மற்றும் கேமரா கட்டண இரசீது ஆகியவற்றின் மீது இங்கு முத்திரை பதித்துத் தருகிறார்கள். இதன் பின்னர் சிறிது நடந்தால் பெரிய கூடம் வருகிறது. இங்கு மராத்தா மன்னர் தம் அமைச்சர்கள், குடிமக்கள் போன்றோரைச் சந்திக்கும் இடம் ஆகும். எனவே இந்தக் கூடம் தர்பார் மண்டபம் என்று பெயர் பெற்றது.

மராட்டா தர்பார் மண்டபத்தின் உன்னத ஓவியங்கள்  இந்த மண்டபத்தை ஒரு சிறந்த கலைக்கூடமாக்கியுள்ளது. வண்ணம் பூசிய எண்கோணத் தூண்கள், மேற்கூரை விதான வளைவுகளில் மேற்கொள்ளப்பட்ட அலங்கார வடிவமைப்புகள் ஆகிய எல்லாவற்றையும் மராட்டா தர்பார் மண்டபத்தில் காணலாம். சரபோஜி உள்ளிட்ட தஞ்சை மராத்திய மன்னர்களின் உருவப்படங்களைக் காணலாம். சுவர்களில் சிவன், விஷ்ணு, இந்திரன் போன்ற இந்துக் கடவுளர்கள் தங்கள் தேவியருடன் காட்சி தருகிறார்கள்.

ராயல் அரண்மனை அருங்காட்சியகம் (Royal Palace Museum), மன்னர் (இரண்டாம்) சரபோஜி நினைவரங்கம் (Raja Serfoji Memorial Hall), மராட்டா தர்பார் மண்டபம் (Mahratta Darbar Hall) ஆகிய மூன்று நினைவுச் சின்னங்களைப் பார்த்த பின்னர் போன வழியே திரும்பி சரஸ்வதி மஹால் நூலக முகப்பிற்கு வரவேண்டும். இங்கிருந்து சற்று தூரம் நடந்த பின்னர் இடது பக்கம் திரும்பினால் தஞ்சைக் கலைக் கூடத்தைக் . (Thanjavur Art Gallery) (Arsenal Tower) காணலாம்.

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் அருங்காட்சியகம்  (Thanjavur Maharaja Saraswati Mahal Library Museum)

2013-sarasvati-mahal-library-101

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம், உலகில் உள்ள சில இடைக்கால நூலகங்களில் ஒன்றாகும் ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. ஈடு இணையற்ற கலாச்சாரத்தின் களஞ்சியமாகத் திகழும் இந்த நூலகத்தை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த நாயக்கர்களும் தஞ்சாவூர் மராத்தியர்களும் உருவாக்கியுள்ளனர். இந்த நூலகம், நாயக்கர் மற்றும் தஞ்சை மராத்திய மன்னர்கள், முன்னூறு ஆண்டுகாலமாகச் சேகரித்த நூல்களின் தொகுப்பாகும். தஞ்சை நாயக்க மன்னர்கள் (கி.பி.1531-1675) அரசாங்க நூலகம் ஒன்றைத் தோற்றுவித்தார்கள். தொடர்ந்து தஞ்சையைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த மராத்தியர்களும் இந்த அரசாங்க நூலகத்தை முறையாக அமைத்து நிர்வாகித்து வந்தனர். இந்நூலகத்தைக் கட்டமைத்தவர்களில் இன்றியமையாதவராக மன்னர் சரபோஜி (கி.பி.1798-1832) கருதப்படுகிறார். இவர் இந்நூலகத்திற்கு ஆற்றிய சேவையினைப் போற்றும் விதமாக இந்நூலகத்திற்கு “தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நினைவு நூலகம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மிக அரியதும் மதிப்புமிக்கதுமான கலை, கலாச்சாரம், இலக்கியம் சார்ந்த கையெழுத்துப்படிகள் (Manuscripts), நூல்கள் (Books), வரைபடங்கள் (Maps), ஓவியங்கள் (Painting) போன்ற ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. இங்கு பேணிக் காக்கப்படும் அரிய ஓலைச்சுவடிகள் தனித்தன்மை வாய்ந்தனவாகும். இங்குள்ள தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவைச் சார்ந்த பிறமொழிக் கையெழுத்துப்படிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். இந்த நூலகச் சேகரிப்பில் 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும், 6, 426 புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களும் அடங்கும். சங்க இலக்கியங்களுக்கான உரைகளும் மருத்துவக் குறிப்புகளும் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தின் நூற்பட்டி பற்றிய குறிப்புகளை இங்கு காணலாம்

சோழர்கள் காலத்தில் தஞ்சையில் செயல்பட்ட நூலகம் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும், நூலகத்தின் பணியாளர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் அழைக்கப்பட்டதாக கி.பி. 1122 ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில், 1918-ம் ஆண்டு அக்டேபர் 5-ம் தேதி, சரஸ்வதி மஹால் நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு, பொது நூலகமாக அறிவிக்கப்பட்டது. தற்போது சரஸ்வதி மஹால் நுாலகம் அரசுடமயைாக்கபட்டு 100-வது ஆண்டைத் தொட்டுவிட்டது.

சித்திரம் மற்றும் விளக்கம் தாங்கிய மூன்று இராமாயணம் பற்றிய தாள்கள் இங்குள்ள சிறப்பான தொகுப்பாகும். ஒவ்வொரு தாளிலும் ஒரு காண்டம் விவரிக்கப்பட்டுள்ளது. பாலகாண்டம், அயோத்தியா காண்டம் மற்றும் ஆரண்ய காண்டம் ஆகிய காண்டங்கள் விவரிக்காப்பட்டுள்ளன.

பறவைகள் பற்றிய புத்தகங்கள் – வல்லூறு (Books on Birds – Falcon) : – இந்தப் புத்தகங்களில் பல பறவைகளின் படங்கள் இயற்கை வண்ணத்துடன் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இது போல வரையப்பட்ட ஒரு பறவையின் ஓவியம் ராஜா சரபோஜியின் வல்லூறு ஆகும். ஹைதராபாத்திற்குச் அனுப்பிவைக்கப்பட்ட புஜங்க ராவ் மற்றும் ஹரி ராவிடம் உதயகிரி நவாப் (Nawab of Udayagiri) இந்த நூலை, ராஜா சரபோஜிக்காக, அன்பளிப்பாக வழங்கியுள்ளார். சரபோஜியிடம் இருந்த உருது மொழியில் இயற்றப்பட்ட “பாஜினாமா”: (“Bajinamah”) – வல்லூறு (Falconry), என்ற நூலின் மராத்தி மொழிபெயர்ப்பாகும். பறவைகளுக்கான சிகிச்சை பற்றிய நூல் இதுவாகும்.

பல்லாக்கு (Palanquin) : -முழுவதும் அலங்கரிக்கப்பட்ட அரச பல்லாக்கின் தோற்றங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

அஸ்வ சாஸ்திரா (The Science of the Horse): படங்களுடன் கூடிய இந்நூலில் சாலிஹோத்ரா (Salihotra), தினபதி (Dinapati), கர்கா (Garga), நகுலா (Nakula), கனா (Gana) மற்றும் பல அறிஞர்களின் போதனைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கஜ சாஸ்திரா (The Science of the Elephant) : – பட விளக்கங்களுடன் கூடிய இந்த நூலின் ஆசிரியர் பாலகாப்பியமுனி என்றும் இவர் சாமகாயனமுனியின் மைந்தர் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் மேல் பகுதியில் சமஸ்கிருத மொழி மூலமும் கீழ்ப்பகுதியில் சமஸ்கிருதச் செய்யுளின் மராத்தியில் மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலபோத முக்தாவளி (Balabhoda Muktavali) :- இது வண்ணப் படங்களுடன் கூடிய ஈசாஃப் நீதிக்கதைகளின் மராத்தி மொழிபெயர்ப்பாகும். மன்னர் சரபோஜியின் ஆணைக்கிணங்க சக வருஷம் 1728 (கி.பி. 1806) இந்த நூல் தொகுக்கப்பட்டது. ஒவ்வொரு நீதிக்கதையின் இறுதியிலும் கதை பற்றிய ஒரு மாரத்திக் குறிப்பு இடம்பெறுகிறது. சமஸ்கிருதத்தில் ஓரிரு வரிகளில் கதை மற்றும் உணர்த்தும் நீதி பற்றிய செய்யுளும் இடம்பெறுகிறது.

இந்த நூலகத்தைப் பற்றிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு (Awareness) ஊட்டும் விதத்தில் இங்கு ஒரு அருங்காட்சியகம் செயல்பட்டுவருகிறது.

ஆயுத சேமிப்பு மாளிகை (கூடகோபுரம்) (Arsenal Tower)

ஆயுத சேமிப்பு மாளிகை எட்டு அடுக்குகள் கொண்டு கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்ட கட்டடம் ஆகும். இதன் உயரம் 58.5 மீ (192 அடி) ஆகும். இந்த மாளிகை கி.பி. 1855 ஆம் ஆண்டில் மராத்தியர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இது கண்காணிப்புக் கோபுரமாகவும் ஆயுத சேமிப்புக் கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட படைக்கருவிகள் (Weapons) மற்றும் படைத்தளவாடங்கள் (Ammunition) இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. கி.பி. 1855 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் இங்கிருந்த ஆயுதங்கள் கி.பி, 1863 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்தக் கட்டடத்தின் முதல் இரண்டு தளங்கள் தஞ்சை நாயக்கர்களால் கி.பி. 1645 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தஞ்சை மராத்தியர்கள் கி.பி. 1855 ஆம் ஆண்டில் இக்கட்டதைப் புதுப்பித்து முடித்துள்ளார்கள். மராத்தியர்கள் காலத்தில் இக்கட்டடம் பலவித இராணுவ பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தை மன்னரின் தற்காப்புக் கலைப் பயிற்சிகளுக்காக ஒதுக்கியுள்ளார்கள்.

இக்கட்டடத்தின் ஒரு பகுதியில் 92 அடி நீளமுள்ள பலீன் திமிங்கலம் (Baleen Whale) என்னும் பல்லற்ற திமிங்கலத்தின் எலும்புக்கூடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று இறந்த நிலையில் இந்தத் திமிங்கலம் தரங்கம்பாடி கடற்கரையில் கரையொதுங்கி உள்ளது. இதன்  எலும்புக்கூடு மட்டும் இங்கு கொண்டுவரப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிருந்து தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் விமானத்தைப் பறவை பார்வையாகக் காணலாம். தஞ்சாவூர் கோவில் விமானத்தைப் போலவே ஆயுத சேமிப்பு மாளிகையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

thanjavur_palace

தஞ்சாவூர் கலைக் கூடம் (Thanjavur Art Gallery)

தஞ்சாவூர் கலைக்கூடம் 1951 ஆம் ஆண்டு நாயக்கர் மண்டப வளாகத்தில் (Nayakar Hall Complex) நிறுவப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் அசல் பெயர் இராஜராஜ சோழன் கலைக்கூடம் என்பதாகும். பொதுமக்கள் தஞ்சாவூர் கலைக்கூடம் என்று அழைக்கிறார்கள்.

இங்கு பண்டைய கற்சிற்பங்கள், வெண்கலப் படிமங்கள், நாணயங்கள் எல்லாம் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மூன்று பிரிவுகள் உள்ளன: பூஜா மஹால்; இந்திரா மந்திர், இராமா சௌதம் மண்டபம் ஆகிய மூன்று பிரிவுகள். பூஜா மஹால் என்னும் இந்தக் காட்சிக்கூட வளாகத்தின் நுழைவாயிலை ஒட்டிய கூடம் மற்றும் தென்புறப் பகுதிகளில் கற்சிற்பங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள கற்சிற்பங்கள் தனித்துவமானவை; விலைமதிப்பற்றவை. இந்திரா மந்திர் ஆயுத சேமிப்பு மாளிகையின் பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு அற்புதமான வெண்கலப் படிமங்களின் தொகுப்பைக் காணலாம். இறுதியாக ராமா சௌதம் மண்டபமும் வெண்கலச் சிலைகளைக் காட்சிப்படுத்தியுள்ளது.

இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்துக் கடவுள்களின் வெண்கலச் சிலைகள் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தெய்வங்கள் மற்றும் முனிவர்களின் சிலைகள் தனித்தன்மை வாய்ந்தவைகளாகும் (unique deities and saints). இந்தச் சிலைகள் காட்டும் ஆடை ஆபரணங்கள், தலை அலங்காரங்கள் எல்லாம் மலைக்க வைக்கின்றன.

கல்யாணசுந்தரமுர்த்தி (முற்கால சோழர் கலைப்பாணி. திருவெங்காடு மாவட்டம்), சிவன் பார்வதி திருமணக்கோலம், உண்மையிலேயே ஒரு தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவின் எல்லாக் காலத்திலும் தலைசிறந்த வெண்கலச் சிற்பமாகும்.

பிக்ஷாடனமூர்த்தி சிவனின் மூர்த்தங்களில் ஒன்றாகும். இது பிட்சைக்கார வடிவம் ஆகும்..சிவன் மரச்செருப்பு அணிந்துள்ளார். இடையில் ஆபரணமும் பாம்பும் காட்டப்பட்டுள்ளன. அருகில் துள்ளும் அழகிய மான். கையில் கபாலம் ஏந்தியுள்ளார்..கோபம் கொண்ட சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்தார். இந்தக் கபாலம் தான் சிவன் கையில் காணப்படுகிறது. பிக்ஷாடனமூர்த்தியின் வெண்கலச் சிற்பம் இங்கு காணப்படும் தலைசிறந்த படைப்பாகும்.

ரிஷபாந்திகர் தேவி மற்றும் நந்தியுடன் காட்சி தரும் வெண்கலச் சிற்பம் புகழ்பெற்றது. சிவன் கையை மடக்கி உயர்த்தியுள்ளார்.

கி.பி. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்து வெண்கலச் சிற்பங்களும் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தைச் சேர்ந்த வெண்கலச் சிற்பங்களும் இங்கு உள்ளன. தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில நாணயங்கள் கி.மு. 300 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

தர்பார் மண்டபத்தைச் சுற்றிக் காட்சிப் படுத்தப்பட்டுள்ள வெண்கலச் சிற்பங்கள் நேர்த்தியான கைத்திறனை வெளிப்படுத்துகின்றன.

பார்வை நேரம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மற்றும் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
நுழைவுக்கட்டணம் இந்தியர் பெரியவர் ரூ.10.00, சிறுவர் ரூ.5.00  மாணவர்களுக்கு ரூ.1.00
நுழைவுக்கட்டணம் வெளிநாட்டவர் பெரியவர் ரூ.50.00, சிறுவர் ரூ.25.00
பிற கட்டணங்கள் கேமரா கட்டணம் ரூ 30.00
வீடியோ கேமரா ரூ.200.00
காட்சிக்கூடம் தேசிய விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.
தொலைபேசி எண்: 239823

மணிமண்டபம் (Bell Tower)

மணிமண்டபம் (Bell Tower) என்னும் மணிக்கூண்டு ஆயுத சேமிப்பு மாளிகைக்கு வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது. மணிமண்டபத்தின் ஒவ்வொரு மாடியின் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கlளைக் காணலாம் . இதன் காரணமாகவே இந்த மண்டபத்தைத் தொள்ளக்காது விதான மண்டபம் (“the wide holed ear pavilion”) என்றும் மக்கள் அழைக்கிறார்கள். செஞ்சி நாயக்கர்களின் கலைப்பாணியை நினைவுறுத்தும் இந்த மண்டப வடிவமைப்பில் மொத்தம் 11 அடுக்கு மாடிகள் இருந்துள்ளன. தற்போது 8 அடுக்கு மாளிகைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இடி மின்னல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மணிமண்டபத்தின் தளங்களுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கலாம். ஆயுத சேமிப்பு மாளிகையைவிட இதன் உயரம் குறைவு.

இங்கு மிகப்பெரிய அபூர்வ கடிகாரம் இருந்துள்ளது என்றும் இந்தக் கடிகாரத்தில் இருந்து ஒரு குரங்கு உருவம் வெளியே வந்து மணியடிப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருந்ததாக ஓர் ஆய்வுக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தில் இருந்து தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் கம்பீரமான தோற்றத்தையும் தஞ்சை நகரின் எழிலையும் பறவைப்பார்வையாகக் காணலாம். தஞ்சை நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் தினமும் மதிய நேரத்தில் இந்த மணிமண்டபத்தில் ஏறி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் கோபுரங்களையும் விமானங்களையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

ஷார்ஜா மாடி (Sharja Madi) என்னும் சர்தார் மாடி  (Sadar Madi (Sarjah Madi)

தஞ்சாவூர் மராத்தா மளிகை வளாகத்தில் கிழக்குப் பகுதியில் ஷார்ஜா மாடி என்னும் ஐந்தடுக்கு அரச மாளிகையின் பால்கனி முகப்பு அமைந்துள்ளது. கீழ வீதியை நோக்கியவாறு நிற்கும் தனித்தன்மை வாய்ந்த பால்கனி மிகுந்த  அழகுடன் திகழ்கிறது.

பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும் நேரம்: காலை 10.00 முதல் மாலை 05.45 வரை
கட்டணம்: பெரியவர் – ரூ. 2.00, சிறுவர் ரூ. 1.00

சங்கீதமஹால்

இசை, நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சதர் மஹாலில் உள்ள சங்கீத மஹாலில் நடைபெற்றுள்ளது. சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் மோடி ஆவணங்கள் இந்தக் கலை நிகழ்சிகள் நடைபெற்றது பற்றிச் சான்று பகர்கின்றன.

குறிப்புநூற்பட்டி 

  1. 110 ஏக்கர்… 400 ஆண்டுகள் பழைமை… இப்போது எப்படி இருக்கிறது
    தஞ்சாவூர் அரண்மனை? https://www.vikatan.com/news/miscellaneous/150389-how-is-the-ancient-thanjavur-palace-now.html
  2. தஞ்சாவூர் அரண்மனை தமிழிணையம் மின்நூலகம் http://tamildigitallibrary.in/archaeology-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZhy
  3. தஞ்சை அரண்மனை விக்கிபீடியா
  4. சுற்றிலும் நீரால் சூழ பிரம்மாண்டமாக கட்டப்பட்ட தஞ்சை மாளிகை இப்போது எப்படி இருக்கு?
    https://tamil.nativeplanet.com/travel-guide/thanjavur-maratha-palace-entry-fee-history-timings-how-re-003064.html
  5. Maratha palace http://thanjavur.info/maratha-palace-thanjavur/
  6. Thanjavur Maharaja Serfoji’s Sarasvati Mahal http://www.sarasvatimahal.in/index.php
  7. Thanjavur Maratha Palace https://tamilnadu-favtourism.blogspot.com/2016/05/thanjavur-maratha-palace-thanjavur.html
  8. Thanjavur Palace https://indianvagabond.com/2016/11/04/thanjavur-palace/
  9. Thanjavur Palace https://www.thanjavur.org.in/thanjavur_palace.php
  10. Thanjavur Palace: Thanjavur http://www.tnarch.gov.in/cons/palace/palace1.htm

 

 

 

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சுற்றுலா, தொல்லியல், படிமக்கலை, வரலாறு and tagged , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை

  1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    ஆகா
    எங்கள் தஞ்சாவூர் அரண்மனை பற்றிய அற்புதமானப் பதிவு
    நன்றி ஐயா

    Like

  2. துரை செல்வராஜூ சொல்கிறார்:

    தஞ்சை அரண்மனையைப் பற்றிய செய்திகளுடன் மகத்தான பதிவு….
    வாழ்க நலம்..

    மகிழ்ச்சி… நன்றி..

    Like

  3. Dr B Jambulingam சொல்கிறார்:

    ஆய்வாளர்களுக்கும், பயணிகளுக்கும், ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் அதிகமான செய்திகளுடன் அருமையான பதிவு. இதனை வைத்து ஒரு எம்ஃபில் ஆய்வேட்டினையே தயாரித்துவிடலாம் போலுள்ளது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    Like

  4. விமல் ராஜ் சொல்கிறார்:

    தஞ்சாவூர் அரண்மனை பற்றிய விஷயங்கள் மிக நன்று.. நன்றியும் வாழ்ததுக்களும்…

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.