நிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்

தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள் அமைந்துள்ளன. திருபுறம்பியம் போரில் வெற்றிபெற்றுத் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றிய பின்னர் விஜயாலய சோழன் இந்த நிசும்பசூதினி கோவிலை நிறுவினான். இந்த நிகழ்வினை திருவாலங்காட்டுச் செப்பேடு பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவு சோழர் வரலாறு, திருப்புறம்பியம் போர், நிசும்பசூதினி வழிபாடு, தஞ்சாவூரின் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள்  பற்றி விரிவாக விவரிக்கிறது.

தஞ்சாவூர் சக்தி வழிப்பாட்டிற்கும், குறிப்பாகக் காளி வழிபாட்டிற்கும் புகழ்பெற்ற தலமாகத் திகழ்கிறது. தஞ்சாவூரைச் சுற்றி எட்டுக் காளி கோவில்கள் காவல் தெய்வங்களாகப் பல்வேறு பெயர்களில் அமைந்துள்ளன:

1. நந்தி மாகாளி (Nandhi Makali); 2. செல்லியம்மன் (Selliamman); 3. உக்ர காளி (நிசும்ப சூதினி) (Ugra Kali (Nisumba soodhini); 4. கோடியம்மன் (கரந்தை) (Kodiamman (Karanthai); 5. வஞ்சியம்மன் (Vanchiamman); 6.சம்வர்த்தினியம்மன் (Samavarthiniyamman); 7. வட பத்ரகாளி (நிசும்பசூதினி) (Vada Bhadra Kali (Nisumba soodhini); 8. குந்தாளம்மன் (Kunthalamman).

கொற்றவை வழிபாடு

கொற்றவை என்னும் வேட்டை தெய்வ வழிபாடு சங்க காலத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொல் + தவ்வை = கொல்லுதலை (வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்டவள்). தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் கொற்றவையை `பழையோள்’, பழையோள் குழவி,’ `ஓங்குபுகழ் கானமர் செல்வி (அகநானூறு),’ ‘விறல் கெழு சூலி’ (குறுந்தொகை), ‘உருகெழு மரபின் அயிரை’ (பதிற்றுப்பத்து), ‘பாய்கலைப் பாவை,’ காடு கிழாள்,’ ‘காடமர் செல்வி,’ என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. காட்டு விலங்குகளையும் வேடுவர்களையும் காக்கும் தெய்வமே கொற்றவை. சிலப்பதிகாரம் கொற்றவை வழிபாடு குறித்த செய்திகளை வேட்டுவ வரியில்  பதிவு செய்துள்ளது.

பாலை நிலத்தின் எயினர் என்னும் ஆறலைக் கள்வர் வழிபடும் தெய்வமாகக் கொற்றவை சித்தரிக்கப்படுகிறாள். காடுகளின் தெய்வமாகவும், போரில் வெற்றி தரும் தெய்வமாகவும் கொற்றவை வணங்கப்பெற்றாள். இனக்குழு மக்களின் வேட்டைக்குக் கொற்றம் தருபவளாக விளங்கிய கொற்றவை பிற்காலத்தில் அரசர்களுக்கும் வேந்தர்களுக்கும் வீரர்களுக்கும் கொற்றம் தரும் தெய்வமாக மருவினாள். முத்தரையர்களுடைய பிடாரி வழிபாடு நீண்ட வரலாறும் மரபும் கொண்டது. பிடாரிக்கு முதன் முதலாகத் தனிக்கோயில் எழுப்பியவர்கள் முத்தரைய மரபில் தோன்றிய மன்னர்களே ஆவர். வரலாற்றுக் காலத்தில் கொற்றவை வழிபாடு பிடாரி,  காளி, துர்க்கை வழிபாடுகளுடன் சேர்க்கப்பட்டது.

பிடாரி, காளி, துர்க்கை வழிபாடு 

வடமொழியில் துர்க்கம் என்றால் கோட்டை என்று பொருள். கோட்டையில் வீற்றிருந்த போர்த்தெய்வமே துர்க்கை ஆனாள். காளி என்னும் சொல் காலி , வெற்று , கருப்பு , காற்று என்னும் பொருளில் வழங்கப்பட்டுக் கரிய நிறமுடைய தெய்வம் என்றானது. இந்து மதத்தில் வெற்றிக்கும், போருக்கும் அதிபதியாகக் கொண்டாடப்படும் பெண் தெய்வம் காளி ஆவாள்.

அசுரவதம் 

தேவிமகாத்மியம் என்ற நூலில் சும்பன் நிசும்பன் என்ற அசுர உடன்பிறப்புகளைத் துர்க்கை போரில் வதம் செய்த புராணக்கதை விவரிக்கப்பட்டுள்ளது. சண்டன் முண்டன் என்போர் சும்ப-நிசும்பர்களின் அசுர ஒற்றர்கள் ஆவர். இவர்களையும் துர்க்கையே வதம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. மகிஷாசுரமர்த்தினி என்னும் துர்க்கை மகிஷனை வதம் செய்ததாகவும் ஒரு புராணக்கதை உள்ளது.

காளி: இந்துப் படிமவியல் (Hindu iconography)

இந்துப் படிமவியல் (Hindu iconography) காளியை மிகவும் கோரமாகக் கட்டுகிறது. நீண்டு தொங்கும் நாக்கு, வாய்க்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கோரைப் பற்கள், கழுத்தணியாகப் பாம்புகள், மண்டை ஓடுகள், மனிதத் தலைகள், இடையில் அணிந்துள்ள இடுப்புப் பட்டையில் துண்டித்த அசுரர்களின் கைகள் எல்லாம் காளியின் முழுமையான உக்கிரத்தைப் பறைசாற்றுகின்றன. காளி கைகள் எப்போதும் பல எண்ணிக்கைகளில் சித்தரிக்கப்படுகிறார்கள். காளி மற்றும் ருத்ரகாளி நான்கு கைகளுடனும், சாமுண்டி எட்டுக் கைகளுடனும், பத்ரகாளி பத்துக் கைகளுடனும், மகாகாளி பன்னிரெண்டு, பதினான்கு கைகளுடனும், பத்ரகாளி பதினெட்டுக் கைகளுடன் அல்லது நூறு கைகளுடன் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கையும் கத்தி, குத்துவாள், இரத்தம் சொட்டும் சூலாயுதம், கிண்ணம், உடுக்கை, சக்கரம், தாமரை மொட்டு, சவுக்கு, பாசக்கயிறு, மணி, கேடயம் போன்று ஏதாவது ஓர் ஆயுதத்தையோ அல்லது பொருளையோ ஏந்தியவாறு காணப்படுகிறது. இவள் மகிஷாசுரன், சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன், மது, கைடபன் போன்ற அசுரர்களை அழித்துத் தன் அடியவர்களைக் காப்பவள் ஆவாள்.

முத்தரையர் வரலாறு

பிற்காலச் சோழர்களின் போர் தெய்வமாகக் காளியின் ஒரு வடிவமான நிசும்பசூதினியும் நிசும்பசூதினி வழிபாடும் சித்தரிக்கப்படுகிறது. கொற்றவை வழிபாடு சாங்க காலத்தில் இருந்து தொடரும் செய்தியினைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தமிழ் நிலத்தின் போர், வெற்றி ஆகிய செயல்களுக்கான சிறு தெய்வமாகவும், தாய்த்தெய்வமாகவும் கொற்றவை வணங்கப்பட்டுள்ளாள்.

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்னும் சுவரன் மாறன் (கி.பி. 705 – 745) தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த காவிரி படுகையின் பகுதிகளை ஆண்டு வந்தான். சோழர்கள் காலத்திற்கு முன்பு இது முத்தரையர் நாடு என்று பெயர் பெற்றிருந்தது, திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை என்னும் ஐம்பது கல் நகரமே இவர்களுடைய தலைநகராகத் திகழ்ந்தது. இவ்வூருக்குச் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உண்டு.

முத்தரையர்களின் பிடாரி வழிபாடு

பிடாரி வழிபாடு கி.பி. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிற்று. இது தென்னிந்தியாவில் மட்டும் நிலவிய வழிபாடாகும். முத்தரையர்களின் பிடாரி வழிபாட்டிற்கு நெடிய வரலாறு உள்ளது.  பெரும்பிடுகு முத்தரையன் என்னும் சுவரன்மாறன் ஆயிரத்தளி எனப்படும் நியமத்திலே மாகாளத்துப் பிடாரிக்கு கோயிலொன்று எடுப்பித்தான். திருச்சியிலிருந்து கல்லணை வழியாகத் தஞ்சை செல்லும் சாலையில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊருக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரையில் நியமம் என்னும் சிற்றூரில் இக்கோவில் அமைந்திருந்தது.

பெரும்பிடுகு முத்தரையன் தனது ஆட்சி காலத்தில் இக்கோயிலுக்கு வந்து சப்தமாதர் மற்றும் பிடாரியை வழிபட்டுப் போருக்கு சென்றதாகவும் பல வெற்றிகளைப் பெற்றுப் பேரரசராக விளங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த முத்தரைய சிற்றரசன் வல்லமை மிக்க வீரனாகத் திகழ்ந்தான். இவன் சேரர் மற்றும் பாண்டியர்களுடன் கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், அழிந்தூர், காரை, மாங்கூர், அன்னவாயில், செம்பொன்மாரி, தஞ்சை செம்புலனத்து, வெங்கூடல், புகழி, கண்ணனூர் ஆகிய 12 போர்க்களங்களில் பொருதி அனைத்துப் போர்களிலும் வெற்றிவாகை சூடினான்.

மாகாளத்துப் பிடாரி கோவில் வடநாட்டுப் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இன்று இக்கோவில் வயல் வெளியில் சிறிய மேடாகக் காணப்படுகிறது. கன்னிமார் / பிடாரி கோவில் என்று இதனை அழைக்கிறார்கள்.

செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கல்வெட்டு 

முத்தரைரையர் நாட்டின் தலைநகரான செந்தலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முகமண்டபத்தினைத் திப்ப தேவமகாராயர் என்பவர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் முன்மண்டபத்தில் காணப்படும் தூண்களில் நான்கு தூண்கள் இந்தக் கோவிலைச் சேர்ந்தது அல்ல. இந்த நான்கு தூண்களுமே நியமம் மாகாளத்துப் பிடாரி கோவிலைச் சேர்ந்த தூண்களாகும். செந்தலைக் கோவில் கட்டுமானத்தில் நியமம் மாகாளத்துப் பிடாரி கோவிலின் தூண்களும் கட்டுமானக் கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தூண்களைத் தான் செந்தலைக் கோவில் முன் மண்டபத்தில் காண்கிறோம். இவற்றின் அடிப்பாகம் சிதைந்துள்ளது.  செந்தலைத் தூண் கல்வெட்டில் முத்தரையர் மரபில் வந்த மூன்று அரசர்களின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன இந்தத் தூண்களில் பொறித்துள்ள முத்தரையர் கல்வெட்டு ஒன்று பெரும்பிடுகு முத்தரையன் என்னும் சுவரன்மாறன் பிடாரிக்குக் கோவில் எழுப்பிய செய்தியைப் பதிவு செய்துள்ளது.

இந்தக் கல்வெட்டில் காணப்படும் செய்யுள்களைப் பாச்சிள்வேள் நம்பன், கோட்டாற்று இளம்பெருமானார், கிழார் கூற்றத்து பவதாயமங்கலத்து அமருண்ணிலை ஆயின குவாவங்காஞ்சன், ஆசாரியர் அநிருத்தர் ஆகிய நான்கு புலவர்கள் 27 வெண்பாக்களாக இயற்றியுள்ளார்கள். இவற்றுள் “பாச்சிள்வேள் நம்பன்” பாடிய இரண்டாவது வெண்பா இது :

“வஞ்சிப்பூச்சூடிய வாளமருள் வாகைப்பூக்
குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன்-தஞ்சைக்கோன்
கோளாளி மொய்பிற் கொடும்பாளூர் காய்ந்தெறிந்தான்
தோளால் உலகமளிக்கும் தோள்”

பொருள்: “வஞ்சிப்பூ சூடி வாட்போரில் வெற்றிபெற்று, வாகைப்பூசூடிய கோமாறனும், தஞ்சைஅரசனும், சிங்கம் போன்று கொடும்பாளூர் பகைவரை கோபித்துக் கொன்றளித்தவருமாகிய சுவரன்மாறனின் தோள்களே இவ்வுலகை காக்கும் தோள்கள்” இப்பாடல் சுவரன் மாறனை “தஞ்சைகோன்” என்று குறிப்பிடுகிறது, விஜயாலய சோழன் முத்தரையரிடமிருந்து தான் தஞ்சையைக் கைப்பற்றினார் என்கிற அறிஞர்களின் வாதத்திற்கு இப்பாடல் வலுசேர்க்கிறது.

தொடரும் பிடாரி வழிபாடு

பாண்டிய மன்னன் மாறன் சடையன் பராந்தக வீரநாராயணன் என்ற நெடுஞ்சடையன் (Pandya king Maranchadaiyan Paranthaka Veeranarayanan alias Nedum Chadayan) (கி.பி. 866 – 911), இரண்டாம் நந்திவர்மன் (பல்லவமல்லன்) (Nandivarman II (Pallavamalla) (கி.பி. 720–796), பரகேசரி முதலாம் ஆதித்த சோழன் (Aditya Chola I) (கி.பி 871 – 907) ஆகியோர் பிடரியை வழிபட்டுள்ளார்கள்.

விஜயாலய சோழன்

இந்த மரபிலேயே விஜயாலய சோழன் என்ற பரகேசரிவர்மன் (Vijayalaya Chola aka. Parakesarivarman) (கி.பி. 848-891) திருப்புறம்பியம் போரில் தஞ்சையை வென்றதன் நினைவாகத் தங்கள் குலத்தின் போர்க்கடவுளான நிசும்பசூதினிக்குத் தஞ்சையில் கோவில் கட்டினான். விஜயாலய சோழன் பல்லவர்களின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னனாகப் (Feudatory) உறையூரில் பதவி வகித்தான். இதே காலகட்டத்தில்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் .மிகவும் வலிமை பெற்றிருந்தனர்.  விஜயாலய சோழனும் முத்தரையர்களும் சுதந்திரமான ஆட்சியை நிலைநாட்ட முடியாத காரணத்தால் பல்லவர்களுடனோ பாண்டியர்களுடனோ நட்புப் பாராட்டவேண்டியிருந்தது.

திருப்புறம்பியம் போர்

பல்லவ அரசன் அபராஜிதவர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையே நடைபெற்ற திருப்புறம்பயம் போரில் பல்லவர்களுக்கு ஆதரவாகச் சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் பங்கேற்றனர். அப்போது விஜயாலய சோழனின் வயது 90 ஆகும். இவர் இரு கால்களும் செயலிழந்த நிலையில் இருந்தான். எனவே விஜயாலய சோழனின் மகனாகிய முதலாம் ஆதித்த சோழன் சோழர் படையின் மாதண்ட நாயக்கராகப் பங்கேற்றான்.

திருப்புறம்பயம் போரில் பல்லவர் படைகள் தோல்வியைத் தழுவி சரணடையும் நிலை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் தன்னுடைய மகனின் ஆற்றலைக் காண விழைந்து விஜயாலய சோழன் பல்லக்கில் போர்க்களம் சென்றான். பல்லவர் படைகளின் நிலை கண்டு கோபமுற்றான். இரு வீரர்களின் தோள்களின் மீது ஏறி அமர்ந்துகொண்டு வாளினை சுற்றியவாறு போர்க்களத்தினுள் புகுந்தான். இதைப் பார்த்து உற்சாகமடைந்த சோழர் படை வெறியுடன் போராடி வெற்றிபெற்றது. பல்லவர்களும் இந்தப் போரில் வெற்றி பெற்றனர் என்றாலும் அவர்களின் வலிமை வெகுவாகக் குறைந்து போயிற்று.

முத்தரையர்கள் இப்போரில் வீழ்ச்சியடைந்தனர். கி.பி. 848 ஆம் ஆண்டில் முத்தரையர்களின் கடைசி அரசனாகிய இளங்கோ முத்தரையரிடமிருந்து விஜயாலய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றினான். தஞ்சாவூர் சோழர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. போரில் வெற்றிபெற்றதற்கான நன்றி கடனைச் செலுத்தும் விதமாக விஜயாலய சோழன் தஞ்சாவூரில்   தங்கள் குலதெய்வமான நிசும்பசூதினியை (வடபத்ர காளியை) நிறுவினான்.

திருவாலங்காட்டுச் செப்பேடு

பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டைச் சொல்லலாம். முதலாம் இராஜேந்திர சோழன் தமது ஆறாம் ஆட்சியாண்டில் வெளியிட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டன. சமஸ்கிருதப் பகுதியில் உள்ள ஸ்லோகங்கள் சோழ வம்சத்து அரசர்களின் பெருமைகளைப் பற்றிப் பேசுகிறது. திருவாலங்காட்டு கோவிலிற்குப் பழையனூர் கிராமத்தை முதலாம் இராஜேந்திர சோழன் தானம் செய்ததைச் சாசனத்தின் தமிழ்ப்பகுதி பதிவு செய்துள்ளது.

விஜயாலய சோழன் பற்றி இச்செப்பேடு : “இந்த வம்சத்தில் தோன்றிய விஜயாலயன், குபேரனுடைய அளகாபுரியைப் போன்ற தஞ்ஜாபுரியை அழகான கண்களையுடைய தன் மனைவியைப் பிடிப்பதுபோல இலகுவாகப் பிடித்தான், அங்கே தேவர்களும் அசுரர்களும் வணங்கும் நிசும்பசூதனியின் ஆலயத்தை அமைத்தான்” என்று குறிப்பிடுகிறது.

இது பற்றி  திருவாலங்காட்டுச் செப்பேட்டின் வடமொழிப்பகுதி

ஸத்ருஞ்சி(ங்வசி)த்ராம் அளகாபிராமம் வ்யாப்தாம் பராமாத்மவதூமிவாசௌ
தஞ்ஜாபுரீம் சௌத ஸுதாங்கராகாம் ஜக்ராஹ ரந்தும் ரவிவம்ச தீப:
(திருவாலங்காட்டுச் செப்பேடு வடமொழி ஸ்லோகம் 46/202)

சூரியவம்சத்தின்  விளக்கான விஜயாலயன் அனுபவிப்பதற்காகத் தன் தேவியைக் கொள்வது போலத் தஞ்சாவூர் என்ற நகரைக் கைக்கொண்டான். அந்த ஊர் கண்களுக்குத் தகுந்த சித்திரங்களை உடையது. (கண்களால் ஓவியமானவள் என்பது தேவிக்குச் சிலேடையால் அடைமொழி). அழகாபுரி நகர்போன்று அவ்வூர் அழகியது. (அளகம் என்றால் கூந்தல் என்பதால் – கூந்தலால் அழகானவள் என்பது மன்னன் மனைவிக்குச் சிலேடை). கட்டடங்களால் ஆகாயம் வரை பரவியது   (ஆடையால் மறைக்கப்பட்டவள் என்பது மனைவிக்குச் சிலேடை). சுண்ணத்தால் மாளிகைகள் வண்ணமயமாக விளங்குகின்றன. (சந்தனத்தால் பொலிவுகொண்ட மேனியினை உடையவள் என்பது தேவிக்குச் சிலேடை).

அத பிரதிஷ்டாப்ய நிஸு(சு)ம்ப சூதநிம் ஸுராஸுரைர் அர்ச்சிதபாத பங்கஜாம்
சதுஸ் ஸமுத்ராம் பர ஸோபி புவம் பபாரமாலா மித தத் ப்ர தத் பிரஸாதத
(திருவாலங்காட்டுச் செப்பேடு வடமொழி ஸ்லோகம் 47/202)

சுரர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட பாத தாமரைகளை உடையவளும் நிசும்பன வதைத்தவளுமான துர்க்கையை விஜயாலயன் பிரதிஷ்டை செய்தான். அவளுடைய கருணையினால் நான்கு கடல்களையும் ஆடையாகக் கொண்டு திகழும் பூமி தேவியை ஒரு மாலையைப் போலத் தாங்கினான்.

இந்தச் செப்பேட்டின் மூலம் தஞ்சாவூரில் சோழர்களின் ஆட்சியை நிறுவிய போதே நிசும்பசூதினியையும் நிறுவிக் கோவில் எழுப்பினான். தஞ்சையை நிசும்பசூதினிக்குக் காணிக்கையாக்கினான்.

அன்று முதல் நிசும்பசூதினி சோழர்களின் போர் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறாள். இந்தச் சோழ மன்னன் காலத்தில்தான் பிற்காலச் சோழர்களின் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. விஜயலாய சோழனைத் தொடர்ந்து சுந்தர சோழன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியோருடைய குல தெய்வமாக நிசும்பசூதினி திகழ்ந்தாள். ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் பொழுதும் சோழர்கள் நிசும்பசூதினியை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தஞ்சாவூரில் நிசும்பசூதினி கோவில்கள் 

நிசும்பசூதினி என்னும் வடபத்திர காளி அம்மன் கோவில், பூமால் இராவுத்தர் தெரு, தஞ்சாவூர் 

நிசும்பசூதினி என்னும் வடபத்திர காளி அம்மன் கோவில் தஞ்சாவூர் நகரில், கீழ வாசல், பூமால் இராவுத்தர் தெருவில் அமைந்துள்ளது. இஃது இராகுகாலக் காளியம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. அசல் நிசும்பசூதினி கோவில் (தற்போது இருக்கும் கோவில் கட்டுமானம் அல்ல) விஜயாலய சோழனால் (கி.பி. 850-880) கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

Nisumba soodhini Temple, Thanjavur: War Deity of Imperial Chola க்கான பட முடிவு

சுமார் 1169 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்களின் தெய்வமான நிசும்பசூதினி, இக்கோவிலின் கருவறையில் ஆறு அடி உயரத்தில் மூலவராகக் காட்சி தருகிறாள். விரிந்த கேசம். விலா எலும்புகள் தெரியும்படி ஒல்லியான தேகம். நீண்டு தொங்கும் மார்பகங்கள். தலையில் கிரீடமகுடம் அணிந்துள்ளாள். வலது காதில் பிரேத குண்டலமும். இடக்காதில் குழையும் அணிந்துள்ளாள், இடுப்பைச் சுற்றிப் பாம்பினைக் கச்சையாக அணிந்துள்ளாள். மூக்கு அழுந்தி, வாயில் தெற்றுப் பற்கள் துருத்திக் கொண்டிருக்க இடப்புறம் தலையைச் சாய்த்தவாறு அமர்ந்த நிலையில் காட்சிதரும் இந்தப் பெண்தெய்வம்  சூலாயுதம் தாங்கி உக்கிரமாகக் காட்சி தருகிறாள்.

பதினாறு கைகள் கத்தி, கேடயம், சூலம், வில், மணி, பாசம், கபாலம் ஆகியவற்றைத் தாங்கியுள்ளன. இடக்கரத்தால் தன் காலின் கீழே வீழ்ந்து கிடக்கும் ஓர் அசுரரைச் சுட்டுகிறாள். தனது வலது காலை துண்டிக்கப்பட்ட ஒரு பெரிய தலையின் மீது வலுவாக அழுத்தி ஊன்றியுள்ளாள்.. இடது காலைத் தளர்வாகத் தரைமீது வைத்துள்ளாள். தேவியின் பீடத்திற்குக் கீழே சும்பன், நிசும்பன், சண்டன், முண்டன் ஆகிய நான்கு அசுரர்கள் மூச்சுத் திணறியவாறு தங்கள் தவிப்பைக் காட்டுகிறார்கள். இவ்வாறு நிசும்பசூதினியின் சிற்பம் உயிரோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. தேவிமகாத்மியம் எடுத்தியம்பும் படிம வடிவத்தைச் சோழர்கள் சிற்பவடிவில் வடித்துள்ளார்கள்.

தொடர்புடைய படம்

கருவறை விமானத்தின் கீழ் கட்டுமானம் (Sub- structure) மட்டும் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு மேலே பிரஸ்தாரம், கிரீவம் (கண்டம்), செவ்வக வடிவுடைய சால சிகரம், மற்றும் ஸ்தூபி ஆகிய மேல்கட்டுமான (organs of super-structure) உறுப்புகள் சுதையாக அமைக்கப்பட்டுள்ளது. கிரீவத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு சிங்கங்கள் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

Nisumba soodhini Temple, Thanjavur: War Deity of Imperial Chola க்கான பட முடிவு

கருவறையை ஒட்டி அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப கூரை முகப்பில் அமைந்துள்ள சுதை வேலைப்பாட்டில் நிசும்பசூதினி அசுரனை வீழ்த்துவது போலச்  சித்தரிக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தை ஒட்டி தகரம் வேய்ந்த முன்மண்டபம் விசாலமாக அமைந்திருந்தது. இந்தக் கோவிலின் குடமுழுக்கு ஜூன் 23, 2016 ஆம் தேதி காலை விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கோவில் முன் மண்டபம் விரிவாகக் கட்டப்பட்டுள்ளது.

Nisumba soodhini Temple, Thanjavur: க்கான பட முடிவு

காலை 7.00 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை; மாலை 5.00. முதல் இரவு 8.00 மணி வரை இக்கோவில் திறந்திருக்கும். இக்கோவில் தினமும் நான்கு காலப் பூஜை நடந்து வருகிறது. ஆடி மாதம் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்புப் பூஜை மற்றும் அபிஷேகம் எல்லாம் நடைபெறுகிறது. இக்கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் இந்தக் கோவிலைப் பராமரித்து வருகிறது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து இக்கோவில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நகரப் பேருந்துகளும் ஆட்டோ ரிக்சாக்களும் வந்து செல்கின்றன.

உக்ர காளியம்மன் கோவில், குயவர் தெரு, கீழவாசல் கருவக்காடு, தஞ்சாவூர்

உக்ர காளியம்மன் கோவில் தஞ்சாவூர் கீழவாசல் கருவக்காடு, குயவர் தெருவில் அமைந்துள்ளது. இக்கோவிலிற்கு இரண்டு கருவறைகள் உள்ளன. கருவறையை ஒட்டி அர்த்தமண்டபமும் மகாமண்டபமும் அமைந்துள்ளன. இக்கோவிலில் வலப்புறம் அமைந்த பிரதான கருவறையில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உக்ர காளியம்மன் சிலை வடிவில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். இந்தச் சிலை தஞ்சை மராத்தியர்கள் காலத்தைச் சேர்ந்தது என்று கோவில் அர்ச்சகர் சொன்னார். இக்கருவரையில் உள்ள மூலவருக்கே அர்ச்சனையும் அபிஷேகமும் நடைபெறுகிறது. இடப்புறம் அமைந்துள்ள கருவறையில் குடிகொண்டுள்ள நிசும்பசூதினி சிலை 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.

Nisumba soodhini Temple, Thanjavur: க்கான பட முடிவு

நிசும்பசூதினி படிமம் நிசும்பன் என்னும் அசுரனை வதைப்பதைச் சித்தரிக்கிறது. நிசும்பசூதினி தன் இடது மற்றும் வலது கால்கள் அசுரனை மிதித்து நசுக்கியவாறு காட்சிதருகிறாள் தேவியின் வலது கை திரிசூலத்தைப் பற்றியவாறு நிசும்பனை நோக்கித் திருப்பியுள்ளாள். சண்டன், முண்டன், பீஜா மற்றும் சும்பன் ஆகியோர் உடல்கள் மீது அமர்ந்துள்ளாள்.. தேவியின் கழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்துள்ளது.

Nisumba soodhini Temple, Thanjavur: க்கான பட முடிவு

கோவில் நேரம்: காலை 06.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை. இக்கோவில் உக்ர காளியம்மன் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

எது விஜயாலய சோழன் எழுப்பிய நிசும்பசூதினி கோவில்?

திருவாலங்காட்டுச் செப்பேட்டில் விஜயாலய சோழன் தஞ்சாவூரில் (கிழக்கில் இருந்த நகர்ப்பகுதியில்) தங்கள் போர் தெய்வமாகிய நிசும்பசூதினிக்கு ஒரு கோவில் எழுப்பிய செய்தி குறிப்பிடப்படுகிறது. உக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ள கீழவாசல் என்று அழைக்கப்படும் பகுதியைச் சுற்றி இன்று கருவக்காடு நிறைந்துள்ளது. இப்பகுதி அன்று நகர்ப்பகுதியாக இருந்துள்ளது. வடபத்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ள பூமால் இராவுத்தன் தெருவும் கீழவாசல் பகுதியிலேயே அமைந்துள்ளது.

இந்த இரண்டு நிசும்பசூதினி கோவில்களுள் எது விஜயாலய சோழன் எழுப்பிய கோவில்? வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி கீழவாசல் கருவக்காடு குயவர் தெருவில் குடிகொண்டுள்ள நிசும்பசூதினி கோவிலே விஜயாலய சோழன் எழுப்பிய கோவில் கோவில் ஆகும். இந்தக் கருத்தை ‘தமிழக வரலாற்றுச் செய்திகள்’ எனும் நூலில் பேராசிரியர் கோவிந்தராசனார் பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தன் ‘சோழர் கலை’ என்ற நூலில் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார். குடவாயில் பாலசுப்பிரமணிமும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இந்தக் கருத்து குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

குறிப்புநூற்பட்டி

 1. அசுரனை அழித்த அன்னை Dina Thanthi http://202.191.144.181/2014-03-10-The-monster-Deleted-Mother-Spiritual-News
 2. கீழவாசல் கருவக்காடு நிசும்பசூதனி ஆலயம் https://bharathipayilagam.blogspot.com/2010/05/blog-post_23.html
 3. குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997
 4. சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு. Narathar, September 10, 2005
 5. சசிதரன் (Sasi Dharan) https://en-gb.facebook.com/SasidharanGS/posts/581917588538232
 6. சோழர்கள் – கள்ளர் குடியில் தோன்றியவர்களா – 3 https://kallarkulavaralaru.blogspot.com/2018/03/3.html
 7. சோழர்களின் குல தெய்வம் – நிசும்பசூதனி https://www.facebook.com/arivarsangam/posts/604887932890161
 8. பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் கல்வெட்டு தஞ்சாவூர் சிற்றரசன் http://fbtamildata.blogspot.com/2018/07/blog-post_86.html
 9. நிசும்பசூதினி – சோழர்களின் குல தெய்வம் தஞ்சையின் காவல் தெய்வம் – Nisumbasoothini By lokesh.  April 22nd, 2014 http://www.mythanjavur.com/2014/04/nisumbasoothini/
 10. நீதியைக் காக்கும் நிசும்பசூதனி : தஞ்சாவூர் தினகரன் ஜூலை 27, 2015
 11. முத்தரையர் வரலாறு http://www.mutharayar.org/history.php
 12. விசயாலய சோழன் Vijayalaya.blogspot. அக்டோபர் 25, 2016
 13. Nisumba soodhini Temple, Thanjavur: War Deity of Imperial Chola Muthusamy R Know Your Heritage July 5, 2014 http://know-your-heritage.blogspot.com/2014/07/niumba-soodhini-temple-thanjavur-war.html
 14. Seminar on the eve of the 1337th Birthday Celebrations of Perarasar Perumbidugu Mutharaiyar II: The King Who ruled Mutharaiyar Nadu with Tanjore as Capital. Held at Valasaravakkam, Chennai on 27th May 2012 from 10 am to 6 pm. http://www.mutharaiyar.in/
 15. Thanjavur Nisumbasuthani Temple Wikipedia
 16. Thiruvalangadu copper plates discovered in 1905 C.E. is one of the largest so far recovered and contains 31 copper sheets. The copper plates, issued by emperor Rajendra Chola (1012-1044 A.D., regnal years), contain text written in Sanskrit and Tamil.
 17. Vada Bhadra Kali Amman Temple (Nisumba Soodhani Amman Temple), Thanjavur. Tamilnadu Tourism. May 6, 2016

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், சோழர்கள், வரலாறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to நிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்

 1. துரை செல்வராஜூ சொல்கிறார்:

  மிக அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..
  ம்கிழ்ச்சி.. ஆயினும் தங்களது பதிவில் காட்டப்பட்டிருக்கும் கோயில் கூட சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு திருக்குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது..
  ஸ்ரீவடபத்ரகாளியைப் பற்றி பதிவுகளும் எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்…

  Like

 2. Dr B Jambulingam சொல்கிறார்:

  அருமையான முன்னுரையுடன் காளியைப் பற்றிய பதிவு. இக்கோயில்களைப் பற்றி சுருக்கமாக தமிழ் விக்கிபீடியாவில் குடமுழுக்கிற்குப் பின் உள்ள படங்களையும் பகிர்ந்துள்ளேன்.

  Like

  • முத்துசாமி இரா சொல்கிறார்:

   கோவில் தகவலுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி. 2014 ஆம் ஆண்டு இக்கோவிலுக்கு சென்றுவந்தேன். இது பற்றிய ஆங்கிலத்தில் KNOW YOUR HERITAGE ஒரு பதிவினை வெளியிட்டேன். தற்போது இதையே சற்று மேலதிக விவரங்களுடன் வெளியிட்டுள்ளேன்.

   Like

 3. ஸ்ரீராம் சொல்கிறார்:

  சுவாரஸ்யமான விவரங்கள்.

  Like

 4. Thanjaimohan சொல்கிறார்:

  மிக தெளிவான பதிவு அருமை

  Like

 5. மிகவும் நல்ல தகவல்கள் நன்றி நண்பரே

  Like

 6. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  எங்கள் தஞ்யைப் பற்றியத் தங்களின் பதிவகள் தொடரட்டும் ஐயா
  அருமை

  Like

 7. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  எங்கள் தஞ்சையைப் பற்றிய தங்களின் அற்புதப் பதிவுகள் தொடரட்டும் ஐயா
  நன்றி

  Like

 8. Rethinavelu N சொல்கிறார்:

  அருமை அருமை நன்றாக உள்ளது தொடருங்கள்

  Like

 9. பிங்குபாக்: சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி - smmaheshcreation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.