குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலும், அரபியிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். இஸ்லாமிய சமயத்தைக் குறித்தும், இறைவனைக் குறித்தும் இவர் இயற்றிய தமிழ் இலக்கியங்கள் புகழ் பெற்றவை ஆகும் இல்வாழ்க்கையைத் துறந்து துறவியாக வாழ்ந்த இவரைத் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் மக்கள் போற்றுகிறார்கள். இவருடைய தர்க்கா (நினைவிடம்) வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டம், மேற்கு கல்மண்டபம், பிச்சாண்டி சந்து கதவிலக்கம் 68 இல் அமைந்துள்ளது. பின்கோடு 600013 ஆகும்.
குணங்குடி மஸ்தான் இராமநாதபுரம் மாவட்டம், வட்டம், தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவில் அமைந்துள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் சுல்தான் அப்துல்காதிர் என்பதாகும். இவர் இளம் வயதிலேயே குர் ஆன் உள்ளிட்ட இஸ்லாமிய சமய நூல்களையும் ஐயம் திரிபுரக் கற்றுத் தேர்ந்தார்.
இவர் திருமண வயதை அடைந்த போது, இவரது உறவினர்கள், இவருடைய தாய்மாமன் மகளான மைமூன் என்ற பெண்ணை இவருக்குத் திருமணம் செய்வதற்கு ஆலோசித்தனர். அப்துல்காதிருக்குத் திருமணம் மற்றும் இல்லறத்தில் நாட்டமில்லை. எனவே பெரியவர்களுக்குத் தன் நிலையை எடுத்துரைத்த பின்பு தன்னுடைய பதினேழாவது வயதில் தன் தந்தையின் ஆசியுடன் துறவறத்தை மேற்கொண்டார்.
காதிரிய்யா தரீக்கா
தரீக்கா (Thareeka) என்ற சொல்லுக்கு வழி பாதை என்று பொருள். அதாவது இறைவனை அறியவும் அவனை அடையவும் வழிகாட்டும் வழிகள் என்று அர்த்தம். தரீக்காக்கள் என்பன இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹீ வஸல்லம் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித் தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும்.
முஹிய்யுதீன் அப்துல்காதர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்களை ஞானாசிரியராகப் பின்பற்றி ஞானவழியை அடைந்தவர்கள் காதிரிய்யா தரீக்காவைச் (Qadriya Thareeka) சேர்ந்தவர்களாவர்.
இஸ்லாமிய சமய ஞானப் பயிற்சியும் ஆலிம் பட்டமும்
சுல்தான் அப்துல்காதிர் இஸ்லாத்தின் இணையற்ற ஊராகத் விளங்கிய கீழக்கரை சென்று அங்கு ‘தைக்காசாஹிபு’ என்று அழைக்கப்பட்ட ஷைகு அப்துல் காதிரிலெப்பை ஆலிம் ஞானியிடம் மாணாக்கராக இருந்து இஸ்லாமிய சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றுத் தெளிந்தார். பின்னர் 1813 ஆம் ஆண்டில் இவர் திரிசிரபுரத்திற்குப் போய் அவ்வூரின் மௌல்வி ஷாம் சாஹிப் என்ற முகமதிய மத குருவிடம் தீட்சை பெற்று இஸ்லாமிய யோக நெறியில் ஆழ்ந்தார்.
‘ஆலிம்’ என்னும் இஸ்லாமிய சமயக் கல்வி அறிஞர் பட்டத்தையும் பெற்றார். ஆலிம் என்றால் இஸ்லாம் தொடர்பான பல்வேறு துறைகளை நன்கு கற்றறிந்தவர் என்று பொருள். இவர்கள் ஃபிக்ஹ் என்னும் சட்டவியலை கற்றறிந்தவர்கள். இஸ்லாமியரிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவர்கள். பெண்கள் ஆலிமி எனப்படுவார்கள்.
‘கல்வத்’ என்ற தனிமைத் தவம்
இதன் பின்னர் “சிக்கந்தர் மலை” என்று அறியப்படும் திருப்பரங்குன்றத்திற்குப் போய் அங்கு நாற்பது நாட்கள் ‘கல்வத்’ எனப்படும் தனிமைத் தவத்தில் ஈடுபட்டார். இறைவனுடைய நினைவைத் தவிர்த்து மற்ற எந்த பொருளின் நினைவிலும் இவர் மனம் செல்லவில்லை. இந்த நிலையே கல்வத் என்று அழைக்கிறார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தில் முழு ஈடுபாடு
இதன் பின்னர் அறந்தாங்கி நகருக்கு அருகில் உள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்கள் தங்கி தவமியற்றினார். தொண்டியில் தன் தாய்மாமனின் ஊராகிய வாழைத்தோப்பில் நான்கு மாதங்கள் தங்கி தவம் புரிந்தார். இதனைத் தொடர்ந்து சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் அலைந்து திரிந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார். இறைவன் மீது கொண்ட பற்றால் இஸ்லாம் மார்க்கத்தில் முழுவதும் ஈர்க்கப்பட்டார். இஸ்லாமிய மார்க்கம் இவரைச் சுவீகரித்துக் கொண்டது.
இஸ்லாமிய இறைப்பித்தர்
உலகப்பற்றை அறவே நீக்கினார். பொது வாழ்க்கை நெறிக்கு உடன்படாமல் இஸ்லாமிய இறைப் பித்தரானார். நாடு, நகரம், மொழி இனம் என அத்தனையும் கடந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார்.
குணங்குடி மஸ்தான்: சென்னை இராயபுரத்தில் லெப்பைக்காடு பகுதியில் சித்தராக வாழ்க்கை
நாட்களில் வடசென்னையில் இராயபுரத்தில் பாவாலெப்பை என்ற இஸ்லாமியருக்குச் சொந்தமான லெப்பைக் காடு என்ற பகுதியில் தங்கினார். முட்புதர்களும், சப்பாத்திக் கள்ளியும் அடர்ந்த குப்பைமேட்டில் தவவாழ்க்கை மேற்கொண்டார். இயற்கையைக் கடந்த (supernatural) சக்திகள் பெற்று சித்தர்களின் வழியில் “சித்துக்கள்” என்னும் அற்புதங்களையும் புரிந்தார். பாவாலெப்பை இவருடைய சித்துக்களின் மகிமையை உணர்ந்து அந்த இடத்தில் இவருக்கு யோக ஆஸ்ரமம் ஒன்றை அமைத்துள்ளார். இப்பகுதியில் இருந்தபோது பொதுமக்கள் கண்களிலும் தென்படாமல் மறைந்து அமர்ந்து யோகத்தில் திளைத்தார்.
இவர் புரிந்த அற்புதச் சித்துக்களை எல்லாம் கண்ணுற்ற பொதுமக்கள் இவரை “மஸ்தான்” என்று அழைத்தனர். பிற்காலத்தில் குணங்குடியைச் சேர்ந்தவர் என்ற பொருளில் “குணங்குடி மஸ்தான்” என்ற பெயரே நிலைத்துவிட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதலால் இவரைத் “தொண்டியார்” என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் இவர் வாழ்ந்த பகுதி “தொண்டியார்பேட்டை” என்று பெயர்பெற்றது. இப்பகுதியே இன்று வடசென்னையின் புறநகர்ப் பகுதியான தண்டையார்பேட்டை (Tondiarpet) ஆகும்.
சிலர் இவரிடம் தீட்சை பெற்றும் பக்குவமடைந்தனர். சென்னையில் அக்காலத்தில் வாழ்ந்த ஆற்காடு நவாப் இவரிடம் தீட்சை பெற்றதாகச் சொல்கிறார்கள். இஸ்லாமியர் மட்டுமின்றி இந்துக்களும் இவருடைய மார்க்கத்தில் லயித்தனர். இவர்களுள் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
- குணங்குடி மஸ்தான் – இறைவனின் காதலர் தி இந்து 13 Mar 2014
- குணங்குடி மஸ்தான் சாஹிபு
- 02/05/2011 இல் 12:30 (இசை, குணங்குடி மஸ்தான்) https://abedheen.com/2011/05/02/kunangudi-masthan-sahib-audio/
- குணங்குடியார் பாடற்கோவை நாஞ்சில் நாடன் 19/10/2010
- சித்தபுருடர் ‘குணங்குடி’ மஸ்தான் சாகிபு முகநூல் 29 நவம்பர், 2010.
- To sing like Mastan Sahib https://sriramv.wordpress.com/2013/09/03/to-sing-like-mastan-sahib/
அறியாத தகவல்கள் அறிந்தேன்
நன்றி ஐயா
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
LikeLike
குணங்குடி மஸ்தானைப் பற்றி அரிய செய்திகள் அறிந்தேன். பௌத்த களப்பணியின்போது அரியலூர்/பெரம்பலூர் மாவட்டத்தில்கூட லப்பைக்குடிகாடு என்ற ஊர் சென்ற நினைவு.
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike
அரபு மொழியில் “தரீக்” என்றால் வழி என்று அர்த்தம் அந்த வார்த்தை நாளடைவில் மருவி தரீக்கா என்றாகி முடிவில் தர்கா என்று வந்து விட்டது என்பதை தங்களது பதிவு வழி அறிய முடிகிறது.
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike