கடந்த ஆண்டு டிசம்பர் 25, 2019 ஆம் தேதி அன்று, இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) கல்வெட்டியல் கிளை சப்தமாதர்கள் வழிபாட்டின் காலத்தால் மிகவும் முந்தைய கல்வெட்டு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. தென்னிந்தியாவில் கண்டறியப்பட்ட மிகவும் முந்தைய சமஸ்கிருத கல்வெட்டும் இதுவே ஆகும். இந்தக் கண்டுபிடிப்பு சமஸ்கிருத மொழியின் பரிணாம வளர்ச்சியைக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்கிறது. .
இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் (ஏ.எஸ்.ஐ) கல்வெட்டியல் கிளை (Epigraphy Branch of Archaeological Survey of India (ASI) ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டைக் கண்டறிந்துள்ளார்கள். இக்கல்வெட்டே தென்னிந்தியாவில் கிடைத்த சம்ஸ்கிருதக் கல்வெட்டுகளுள் மிகவும் பழமையான கல்வெட்டாகும். சப்தமாதர்கள் என்னும் எழு கன்னிமார் வழிபாட்டுக்கான இக்கல்வெட்டு, இதுவரை கிடைத்த கல்வெட்டுகளுள் மிகவும் பழமையானதும் குறிப்பிடத்தக்க கல்வெட்டும் ஆகும், இந்தக் கல்வெட்டு ஆந்திர பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், செப்ரோல் மண்டல், செப்ரோலு (ஆங்கிலம்: Chebrolu; (தெலுங்கு: చేబ్రోలు) (பின் கோடு 522212) கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இதன் அமைவிடம் 16°11′48″N அட்சரேகை 80°31′30″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூர் மாவட்ட தலைமையகமான குண்டூரிலிருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வூரில் அமைந்துள்ள பீமேஸ்வரர் கோவிலை மீட்டெடுத்துப் பழுதுபார்த்தபோது, சில உள்ளூர் கிராமவாசிகள் ஏ.எஸ்.ஐ அதிகாரிகளுக்கு, வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு தூண் பற்றித் தகவல் தெரிவித்தபோது இந்த கல்வெட்டு வெளிச்சத்திற்கு வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தூணைப் பாதுகாக்கவும் பத்திரப்படுத்தவும் ASI ஏற்பாடு செய்துள்ளது.
சப்தமாதர்கள் யார்? பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்திராணி ஆகிய ஏழு பெண் தெய்வங்கள் அடங்கிய குழுவிற்குச் சப்தமாதர்கள். என்று பெயர். மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோவில்களில் கருவறையை ஒட்டி அமைந்துள்ள முதல் திருச்சுற்றின் தென்புறம் காணப்படும் தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்பாகச் சப்தமாதர்கள் சன்னதியைக் காணலாம். இடது காலை மடக்கியும் வலது காலை தொங்கவிட்டும் அமர்ந்தவாறு லலிதாசனக் கோலத்தில் ஏழு பெண் தெய்வங்களும் காட்சி தருகிறார்கள். செவ்வகப் பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருந்தால் அது மிகவும் தொன்மையானது என்றும், . தனித்தனிச் சிற்பமாக வடித்திருந்தால் அது காலத்தால் சற்று பிந்தையது என்றும் விளங்கிக் கொள்ளலாம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமிய தாய்த்தெய்வ வழிபாடாகும். அண்ட முண்டர்கள் என்ற அசுரர்களை அழிப்பதற்காக மனிதனின் கருவிலோ ஆண் பெண் சேர்க்கையிலோ பிறக்காமல், ஏழு சக்தியின் அம்சங்களிலிருந்து உருவானவர்களே இந்த சப்த மாதர்கள் ஆவர்.
முற்காலக் கடம்பர்களின் செப்பேடுகளிலும், முற்காலச் சாளுக்கியர்கள் மற்றும் கிழக்குச் சாளுக்கியர்களின் செப்பேடுகளிலும் சப்தமாதர்கள் வழிபாடு பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பீமேஸ்வரர் கோவில் கல்வெட்டு இவை எல்லாவற்றையும்விடக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் மிகவும் முந்தைய சமஸ்கிருத கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டு கண்டறியப்பட்டதற்கு முன்புவரை, இக்ஷவகு மன்னர் வசிஷ்டி-புத்ரா எஹுவலா சாந்தமுலா (Ikshavaku king Vashishthi-putra Ehuvala Chantamula) (கி.பி 274-297) தனது 11 வது ஆட்சி ஆண்டில் வெளியிட்ட (கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்கு இணையானது) நாகார்ஜுனகொண்டா கல்வெட்டே சம்ஸ்கிருத மொழியின் மிக முந்தைய கல்வெட்டாகக் கருதப்பட்டது.
சமஸ்கிருத மொழியில் பிராமி எழுத்து முறையில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டை சாதவாஹன மன்னர் விஜயா (Satavahana king Vijaya) தனது 5 ஆம் ஆட்சியாண்டுக்கு இணையான கி.பி. 207 ஆண்டில் பொறித்துள்ளார். தாம்ப்ரப்பே (Tambrape) என்ற இடத்தில் உள்ள பகவதி (தேவி) சக்திமாத்ருகா (சப்தமாத்ரிகா) கோவிலின் தெற்குப் பகுதியில், கார்த்திகா என்பவர் மன்னருக்காக, ஒரு பிரசாதா (கோவில்), ஒரு மண்டபம் கட்டியது மற்றும் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தது பற்றி இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. தாம்ப்ரப்பே என்பது செப்ரோலுவின் பண்டைக்காலத்துப் பெயராகும். தற்போது வரை கிடைத்துள்ள அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர், சாதவாகன மன்னர் விஜயாவின் செப்ரோலு கல்வெட்டுத் தென்னிந்தியாவில் பொறிக்கப்பட்ட காலத்தால் மிகவும் முந்தைய கல்வெட்டு என்று நிரூபணமாகியுள்ளது.
பார்வை
சுவாரஸ்யமான விவரங்கள்.
LikeLike
அறியாத செய்தி
நன்றி ஐயா
LikeLike