“துடியன் பாணன் பறையன் காடவன்”ஆகிய நால்வரே தமிழர் எனத் தொல்காப்பியம் கூற இன்று 340 மேற்பட்ட சாதிப்பிரிவுகள் வந்தது எப்படி? இப்போது இருப்பவர் தமிழர்கள் இல்லையா? மதம் மாற முடியும் எப்படிச் சாதி மாற முடியும்? மழுப்பாமல் பதில் அளியுங்கள்.
QUORA கேள்வி பதில் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடை இது.
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
‘துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை என்பது இதன் பொருள். மாங்குடி கிழார் இயற்றிய இப்பாடல் வாகைத் திணைக்கு உரியது. போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத் திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
மூதின்முல்லை என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும். மூதின் முல்லை புறத்திணையில் ஒன்றான வாகைத்திணையில் இடம்பெறும் துறையாகும். மூதில் என்றால் மூத்தகுடி என்று பொருள். அதாவது . மூத்த முல்லைக் குடி.
மலர்களுள் சிறந்தவை குரவம், தளவு, குருந்து, முல்லை ஆகிய நான்கு மலர்கள் தான் என்றும், உணவுப் பொருட்களுள் சிறந்தன வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டும் தான் என்றும், மூத்த முல்லைக் குடிகளுள் சிறந்த குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர, வழிபடுவதற்கேற்ற கடவுள் வேறு எதுவும் இல்லை என்றும் தன் கருத்தை இப்பாடலில் புலவர் மாங்குடி கிழார் பதிவு செய்துள்ளார்.
அடலருந் துப்பின் .. .. .. ..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறநானூறு 335; மாங்குடி கிழார்)
“திணை என்பதற்கு இடம், வீடு, குலம், ஒழுக்கம், பிரிவு என்று பல்வேறு பொருள்கள் உண்டு.” சங்க இலக்கியத்தில் திணை என்ற சொல் ஒழுக்கம் பிரிவு என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை ஆகிய ஏழும் புறத்திணைகள் ஆகும். துறை என்பது திணையின் உட்பிரிவுகளாகும்.
திணை: வாகை. வாகைப் பூவைத் (Binomial Name: Albizia lebbeck) தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல். வாகை மொத்தம் ஏழு வகைப்படும். வாகைத் திணையில் 32 துறைகள் உள்ளதாகப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. அரச வாகை, முரச வாகை, மறக்கள வழி, களவேள்வி, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை, அரசமுல்லை, பார்ப்பனமுல்லை, அவையமுல்லை, கணிவன்முல்லை, மூதின் முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண் முல்லை, காவன் முல்லை, பேராண்முல்லை, மறமுல்லை, குடை முல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்புமுல்லை, கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் – ஆகிய 32 துறைகள் ‘வாகைத் திணையில்’ உள்ளன.
துறை: மூதின் முல்லை. மூதில் + முல்லை என்று பிரிக்கலாம். முது என்றால் தொன்மையான என்று பொருள். இல் என்றால் குடி என்று பொருள். மூதின் என்றால் தொன்மையான் குடி என்று பொருள். மூதின் முல்லை என்றால் “மறக்குடியில் பிறந்த ஆடவர்க்கேயன்றி அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் மரம் உண்டாதலை சிறப்பித்துக் கூறும் புறத்திணை என்று சென்னைப்பேரகராதி குறிப்பிடுகிறது..
மாங்குடி
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் மாங்குடியாகும். இராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 9.354519°N அட்சரேகை 77.522922°E தீர்க்கரேகை ஆகும். பின்கோடு 626111. இவ்வூரில் வாழ்ந்தவர் மாங்குடி கிழார் ஆவார். சங்க இலக்கியத் தொகுப்பில் இவர் இயற்றியதாகக் கருதப்படும் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 13 ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றிய மாங்குடி மருதனாரும் மாங்குடி கிழாரும் ஒருவரே. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், என்ற பாண்டிய மன்னனின் அரசவையில் புலவராக வீற்றிருந்தவர் இவர். இந்தப் புலவரைச் சிறப்பிக்கும் வகையில் மாங்குடி கிராமத்தில் ஒரு நினைவுத்தூண் அமைத்துள்ளார்கள்.,
தொல்காப்பியம் காட்டும் நான்கு வருணப் பகுப்புகள்

தொல்காப்பியத்தில் சாதி குறித்த எவ்வகைக் குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் இந்நூலின் பொருளதிகாரத்தின் கற்பியலிலும், மரபியலிலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு தொழில்வழி சமூகப் பாகுபாடு குறித்த கருத்துக்கள் முதன்முறையாக இடம்பெற்றுள்ளன.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் கடைசி இயல் மரபியல் ஆகும். மரபியலில் மொத்தம் 112 நூற்பாக்கள் உள்ளன. அதில் 72 முதல் 86 வரையான 15 நூற்பாக்கள் சமூக வகுப்புப் பிரிவுகள் குறித்துப் பேசுகிறது.
அந்தணர்
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய (தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்.1570)
முப்புரிநூல், கரகம் என்னும் சிறிய கமண்டலம், முக்கோல், அமர்வதற்கான இருக்கை ஆகியன அந்தணர்களுக்கு உரியனவாகும்.
அந்தணர்: திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது.
அறவாழி அந்தணன் (திருக்குறள் 8)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். (திருக்குறள்)..
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் (திருக்குறள் 543)
அறம் என்ற சொல் நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் ஆகும்.
எனவே அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் சான்றோர்களைத்தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல.
ஐயர் என்பது பார்ப்பனரைக் குறிக்கும் தமிழ்ச் சொல் அல்ல. ஐயர் என்றால் உயர்ந்தவர், வியக்கத்தக்கவர், தலைவர், சமூகத் தலைவர் என்று பொருள்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ (தொல்காப்பியம்)
ஐயர் ஆண்பால். ஐயை என்பது.பெண்பாலாகும்.
பார்ப்பனர் என்றால் பிராமணர், சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டோர் பார்ப்பார் என்று அழைக்கப்ப்ட்டுள்ளனர்.
தனக்கு விதிக்கப்பட்ட நியமங்களைச் சரிவரச் (யாகம்) செய்யாத “வேளாப் பார்ப்பான்” விராத்திய பிராமணர் (வேள்வி செய்யாத பார்ப்பனர்) சங்கை அறுக்கும் தொழிலைச் செய்வதுண்டு என்று அகநானூறு கூறுகிறது.
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
(அகநானூறு 24 ஆவூர் மூலங்கிழார்)
குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பன மகனே பார்ப்பன மகனே என்று விளித்துப் பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் சேருவதற்கு மருந்து உள்ளதா? என்று கேட்கிறது. இப்பாடலில் இடம்பெறும் வரி எழுத்து வடிவம் இல்லாத கல்விதான் வேதம் என்றும் குறிப்பிடுகிறது.
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும் (குறுந்தொகை பாடல் 156)
அரசர்
படையும் கொடியும் குடையும் முரசும்
நடை நவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய (தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்.1571)
படை, கொடி, வெண்கொற்றக் குடை, முரசு, குதிரை, யானை, தேர், மாலை, மணிமுடி, செங்கோல் ஆகியவை அரசருக்கு உரியனவாகும்.
பண்டைய தமிழகத்தில் அரசன் என்பவன் ஒரு பொறுப்பை வகிப்பவன். அரச பதவியில் அமர்ந்திருப்பவன். அரசன் என்பது சாதிப் பெயரல்ல, அது ஒரு தொழிற்பெயர். குடவர், குட்டுவர், அதியர், உதியர், மலையர், மழவர், மறவர், இளையர், புளியர், வில்லோர், கொங்கர், குறவர் ஆகிய சேரர் குடிகளும்; பஞ்சவர், கவுரியர் ஆகிய பாண்டியர் குடிகளும்; ஆவியர், ஓவியர், வேளிர், அறுவர், அண்டர், இடையர், தொண்டையர், திரையர், வடுகர் ஆகிய பிற குடிகளும் தமிழகத்தை அரசாண்ட குடிகளாகும். மனுநீதி சுட்டும் சத்திரியர் என்பது சாதிப்பெயரே.
வைசிகர் / வணிகர்
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை
(தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்.1578)
வைசிகன் என்னும் வணிகனுக்கு வணிகம் மேற்கொண்டு வாழ்க்கை நடத்துபவன் என்கிறார் தொல்காப்பியர். மனுநீதி நூலோ ‘வேளாண்மை, கால்நடை வளர்த்தல், வணிகம் செய்தல் ஆகிய மூன்றுமே வணிகனுக்கு உரியவை என்று சொல்கிறது. எனவே, தொல்காப்பியம் சுட்டும் ‘வைசியர்’ என்ற வணிகருக்கும், மனுநீதி காட்டும் ‘வைசியர்’ என்ற சாதியினருக்கும் வேறுபாடு உள்ளது.
வேளாளர்
‘வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி
(தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்.1581)
வேளாண்மையில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு உழுது படைப்பது தவிர வேறு உரிமைகள் இல்லை.
“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தன ரென்ப விவர்பெறு பொருளே”
(தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்.1582)
இதுமட்டுமின்றி வணிகர்களும் வேளாளர்களும் அரசர்களால் வில், வேல், வீரக்கழல், வாள் ஆகிய படைக்கலன்களையும் ஆரம், தேர், போர் மாலை(தார்) போன்ற பெருமைகளையும் பெற்றிருந்தனர். எனவே அரசர்க்குரிய போர்த்தொழில் வணிகர்க்கும், வேளாளருக்கும் உண்டு என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
இழிந்தோர்
“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”
(தொல்காப்பியம். பொருளதிகாரம். கற்பியல்)
தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர் கூற்றுப்படி மேலோர்களாகிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று பிரிவினர்கள் சடங்குடன் கூடிய திருமண விழாவிற்கு உரிமையுடைவர்கள். நான்காமவராகிய வேளாளருக்கு அவ்வாறான திருமண விழா உரிமை எதுவும் இல்லை என்றும் அதற்கு வேறு காலம் உண்டு.
அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை
(தொல்காப்பியம். பொருளதிகாரம். மரபியல்.1584)
இழிந்தோராகக் கருதப்பட்ட சிலருக்கு மேற்கூறப்பட்ட தகுதிகள் இல்லை. அரசன், அந்தணன், வைசிகன், வேளாளன் என்போர் உயர்ந்தோர் என்றும் ஏனையோர் இழிந்தோர் என்றும் தொல்காப்பியர் காலத்தில் சமூகம் பிரிக்கப்பட்டிருந்தது இந்த நூற்பா மூலம் தெளிவாகிறது.
“‘அடியோர் பாங்கினும், வினைவலர் பாங்கினும்,
கடிவரை இல; புறத்து’ என்மனார் புலவர்”
(தொல்காப்பியம். பொருளதிகாரம். அகத்திணையியல் 25);
அடியோர் என்ற சொல் உரிமையின்றித் தலைமைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த அடிமைகளைக் குறித்தது.
“ஏவல் மரபின் ஏனோரும் உரியர்;
ஆகிய நிலைமை அவரும் அன்னர்”
(தொல்காப்பியம். பொருளதிகாரம். அகத்திணையியல் 26)
மேற்சொன்ன அகத்திணையியல் நூற்பாக்களில் கைக்கிளை ஒழுக்கும் மேற்பாலோரான உயர்ந்தோருக்கு இல்லை. ஏவல் மரபினர், வினை செய்வோர் மற்றும் அடிமைத் தொழில் புரிவோருக்கே கைக்கிளை ஒழுக்கம் ஏற்றது.
இவ்வாறு தொல்காப்பியர் சங்ககாலத் தமிழகத்தின் சமுதாயம் நால்வகைப் பிரிவுகளாகப் பிரிந்திருந்ததைச் சுட்டிக்காட்டி இவர்களுக்கான உரிமைகளையும் வரையறுத்துக் கூறியுள்ளார்.
சத்ரியர் மற்றும் சூத்திரர் என்ற இரண்டு சொற்கள் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படவில்லை. என்பது குறப்பிடத்தக்கது. நான்கு வருண முறையினை வலியுறுத்தும் மனு நீதி (மனுஸ்மிருதி) முறை தொல்காப்பியர் வாழ்ந்த இடைச் சங்க காலத்தில் முழு அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்று தெளிவு பெறலாம்.
சங்க இலக்கியத்திலும் சாதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. சாதி என்ற கருத்தாக்கமும் (Concept) இக்காலகட்டத்தில் உருவாகவில்லை. ஆனால் குடிகள் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. குடி என்ற சொல்லுக்குக் குடி | அகராதி | Tamil Dictionary கூறும் பொருள் இது:
1. Ryot; குடியானவன். கூடு கெழீஇய குடிவயினான் (பொருந.182).
2. Tenants; குடியிருப்போர்.
3. Subjects,citizens; ஆட்சிக்குட்பட்ட பிரசைகள். மன்னவன்கோனோக்கி வாழுங் குடி (குறள், 542).
4. Family;குடும்பம். ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும் (புறநா.183).
5. Lineage, descent; கோத்திரம் (பிங்.)
6. Caste, race; குலம் (பிங்.)
7. House, home,mansion; வீடு சிறுகுடி கலக்கி (கந்தபு. ஆற்று 12).
8. Town, village; ஊர் குன்றகச்சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து (திருமுரு. 196).
9. [T. K. kuṭi.]Abode, residence; வாழ்விடம். அடியாருள்ளத் தன்புமீதூரக் குடியாக்கொண்ட (திருவாச. 2, 8).
குடி என்றால் குடிமக்கள் என்று திருக்குறள் பொருள் கொள்கிறது. மன்னவன்கோனோக்கி வாழுங் குடி (திருக்குறள், 542). குடும்பம் என்று புறநானூறு பொருள் கொள்கிறது ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும் (புறநானூறு.183). சிறிய நகரம் அல்லது கிராமம் என்ற பொருள் திருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் “குன்றகச்சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து” (திருமுருகாற்றுப்படை. 196). சொற்றொடர் மூலம் தெரிய வருகிறது.
மாங்குடி கிழார் சங்ககாலத் தமிழகத்தின் ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த குடிகளைப் பற்றிக் கூறவில்லை. முல்லை நிலத்தில் வாழ்ந்த மூத்த குடிகளைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார்.
இன்று 340 மேற்பட்ட சாதிப்பிரிவுகள் வந்தது எப்படி? இந்தச் சாதிகளுக்கு அடிப்படை யார்? என்ற கேள்வி இப்போது நம்மிடம் தோன்றுகிறது அல்லவா? இது பற்றிப் பார்ப்போம்.
மனுநீதி நூல் மனிதர்களை வர்ண முறையில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது. வர்ண முறையில் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்றும், ஆசிரம முறையில் சிறுவர், மணமாகாதவர், இல்லறத்தோர் மற்றும் துறவி என்றும் பிரிக்கிறது.
வர்ணம் என்ற சொல்லிற்கு வகை (type), வரிசை (order), நிறம் (color) பிரிவு அல்லது வகுப்பு (class) உட்பட பல பொருள்கள் உள்ளன. வர்ணம் என்பது பிறப்பால் ஆன அடுக்குமுறை (vertical divide) என்று ஒரு கருத்தும் தொழிலால் ஆன அடுக்குமுறை (horizontal divide) என்று மற்றொரு கருத்தும் உள்ளது போல தோன்றினாலும் பிறப்பால் உருவான சாதியும் தொழில் முறையால் உருவாக்கப்பட்ட சாதிப்பிரிவுகளும் வெவ்வேறானவை அல்ல; ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே.
புருஷசூக்தம்
ரிக் வேதத்தின் 10 ஆவது இயலான புருஷசூக்தத்தில் (10.90.12) இடம்பெறும் சுலோகம்:
ब्राह्मणोऽस्य मुखमासीद् बाहू राजन्यः कृतः ।
ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत ॥१२॥
பிராமன்னோ-அஸ்ய முகம்-ஆசித் பாஹு ராஜான்யா கிருத்தா |
ஊரு தத்-அஸ்ய யாத்-வைஷ்ய பத்ப்யாம் ஷுத்ரோ அஜயதா || 12 |
பிரபஞ்சத்தின் அதிபதியான புருஷனின் (திருமால்) வாயிலிருந்து “பிராமணர்களும், அவருடைய புஜத்திலிருந்து சத்திரியர்களும், அவருடைய தொடைகளிலிருந்து வைஷ்யர்களும் , அவரது பாதத்திலிருந்து சூத்திரர்க்களும் தோன்றினர்”என்று புருஷசூக்தம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பகவத்கீதை
“चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश: |
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् || 13||”
“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்” – (பகவத்கீதை (4.13)
“மக்களின் குணங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப நான்கு வகை வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன. நான் இந்த அமைப்பை உருவாக்கியவன் என்றாலும்,ஒன்றும் செய்யாதவன் மற்றும் நித்தியமானவன் என்று என்னை நீங்கள் அறிவீர்கள்”. என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மனுமனுஸ்மிருதி (சம்ஸ்கிருதம்:मनुस्मृति) என்னும் மனுதர்ம சாத்திரம் (Code of Manu)
மனு ஸ்ம்ருதி எப்போது எழுதப்பட்டது என்பதையும் யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதனைச் சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இதில் 3 பகுதிகளும், 12 அத்தியாயங்களும், 2,694 செய்யுட்களும் உள்ளன. மனுஸ்மிருதி, அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87 முதல் 97முடிய உள்ள சுலோகங்கள் நால்வகை வர்ண சமூகம், நால்வகை ஆசிரமம் மற்றும் அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விவரிக்கிறது.
ஷரியா என்பது இஸ்லாத்தின் சட்ட அமைப்பு, தேவாலய நம்பிக்கைக் கோட்பாடுகள் என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கானது என்பது போல மனுசுமிருதியை இந்துக்களின் சட்டப் புத்தகம் என்று கருதுகின்றனர், .இது சரியல்ல. மனுஸ்மிருதி என்பது பிராமணர்களால், முக்கியமாக பிராமணர்களுக்காகவும், மற்றும் பிற “உயர்” சாதி சமூகங்களுக்காகவும், குறிப்பாக அரசருக்கு வழங்கப்பட்ட நடத்தை நெறியாகும். ஸ்ருதி என்றால் கேள்வியில் இருந்து வரும் அறிவு என்று பொருள். மனுஸ்மிருதி அல்லது மனவ-தர்ம-சாஸ்திரம் என்பது ஒரு ஸ்மிருதி (நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள்) ஆகும். அம்பேத்கர் போன்றோர் கோபத்தில் எரித்த நூல் இது.
இது பற்றி பாரதிதாசனே என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
வேதம் உணர்ந்தவன் அந்தணன் – இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் – மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் – மிக
நாதியற்று வேலைகள் செய்தே – முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே – சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் – இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம்
(பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் 6)
மாந்தரில் சாதி வகுப்பது சரியா?
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?
(பாரதிதாசன் கவிதைகள் 50. ஆய்ந்துபார் – 1)
என்று கேட்கும் கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்வோம்? ‘மக்கள் ஒரே குலமாய் வாழ்வதுதான் சரி’ என்றுதானே சொல்வோம்
இந்த வருணப் பாகுபாட்டை முதலில் மனு என்பவர் வகுத்ததாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். (வருணம் – நிறம், நிறம் அடிப்படையில் உண்டான பிரிவு) இந்தச் சாதிப்பிரிவு உலகநாடுகளில் எல்லாம் உள்ளதா? அல்லது நம் இந்திய நாட்டில் மட்டுமே உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலாகப் பாரதிதாசன்,
தீண்டாமை என்னும் ஒருபேய் – இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் – எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் – செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்
(பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் – 3)
என்று பாடியுள்ளார். இந்தப் பாடல் மூலம் தீண்டாமைக் கொடுமை இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று பதில் தந்துள்ளார். இந்தக் கொடுமையைப் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்தால் நம்மை உமிழ்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவுக்குப் பொருந்தாத இந்தச் சாதிப்பிரிவை ஏன் இந்தியாவில் நாம் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கும் பாரதிதாசன் தமது பாடல் வழியே பதில் சொல்லியிருக்கிறார்.
சாதிப்பிரிவு செய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி-சகியே
நீதிகள் சொன்னாரடி
(பாரதிதாசன் கவிதைகள் 3, சமத்துவப்பாட்டு – 45)
என்று தம்மை மேலும் உயர்த்திக் கொள்வதற்காகத்தான் சாதிப்பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள். தாங்கள் வகுத்த சாதிப்பிரிவுகளுக்கு ஏற்ப அவர்கள் நீதியையும் வகுத்துக் கொண்டார்கள் என்றும் பாரதிதாசன் பாடியுள்ளார்.
நன்றி: QUORA தளம்
நன்றி, பற்பல காலங்களில் இருந்து மேற்கோள்கள், நிறைய ஆராய்ச்சி செய்ததின் வெளிப்பாடு … ஒரு சிறு வேண்டுகோள், ஆரம்பத்தில், மிகச்சிறப்பாக தொடங்கியது போல், இறுதியிலும் ஒரு சுருக்கமான முடிவுரை (summary) இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தொடரட்டும் உங்கள் பணி.
LikeLike