கோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்

நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன.

சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது. இந்தப் பதிவு .சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றி விரிவாக அலசுகிறது.

 நந்தா விளக்கு என்றால் என்ன? இந்த விளக்கின் சிறப்பு என்ன?

 

 

கோழி முட்டை வடிவில் காணப்படும் இந்த அணையா விளக்கினை மணி விளக்கென்றும் தூங்காமணி விளக்கென்றும் குறிப்பிடுகிறார்கள். நந்தா விளக்கு என்றும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. நந்துதல் என்ற சொல்லுக்கு அணைதல் என்று பொருள். நந்தா விளக்கு என்றால் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். தூண்டா விளக்கு என்றும் தீண்டா விளக்கு என்றும் இத்தகைய விளக்குகள் குறிப்பிடப்படுவது உண்டு. இரவும் பகலும் எரியும் இந்த விளக்கின் திரி தூண்டாமல் அல்லது மனிதனால் தீண்டாமல் எரியும் விளக்கு என்பது இதன் பொருள்.

இந்த விளக்குகளில் உருளை வடிவிலான எண்ணெய்க் கலயம், எண்ணெய் வழிவதறகான சிறு துவாரம், விளக்கு ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன. விளக்கில் திரி இட்டு ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டிருக்கும். எண்ணெய்க் கலயத்திலிருந்து சிறு துவாரம் வழியாகச் சிறிது சிறிதாக எண்ணெய் விளக்கில் சொட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணமாக விளக்கும் இரவு பகல் என்று தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். உருள் கலயத்தின் மேற்பகுதியில் அன்னப்பறவை போன்ற உருவங்களை அமைத்து இருப்பார்கள். இந்த விளக்கு சங்கிலியால் இணைக்கப்பட்டுக் கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

”அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திறுக்குஞ்
திருமணி விளக்கின் அலைவாய்ச்”
(அகநானுாறு – மணிமிடைப்பவளம், பாடல் எண்.266, 20, )

தெய்வத்தை உடைய குன்றிடத்தே பொலிவுற வந்து தங்கும் அழகிய திருமணிவிளக்கு ஒளிர்வது குறித்து இப்பாடல் விவரிக்கிறது.

”கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ”
(பட்டினப்பாலை பாடல் வரிகள். 246 – 248)

சிறைப்பிடித்து வந்த பகைவர் மனையோராகிய மகளிர், ஊரார் பலரும் நீருண்ணும் துறையிலே முழுகி, அந்திமாலைப் போதில் ஏற்றிய நந்தா விளக்கினை மலரால் அழகு செய்து வைக்கப்பட்ட மெழுகிய இடம் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

“வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
மாறுசெல் வளியி னவியா விளக்கமும் ”
(பரிபாடல் பாடல். எண்.8: 97-98)

மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பூசை செய்ய எழுந்து மணக்கும் சந்தனமும், தூபத்துக்குரிய பொருட்களும், காற்றால் அணையாத விளக்கமும், மணங் கமழ்கின்ற மலர்களும் ஏந்திப் பரங்குன்றத்தையடைந்து தொழுவோர் பற்றி பரிபாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

“எல்வளை மகளிர் மணிவிளக்கெடுப்ப” (சிலப்பதிகாரம்)

“சிந்தாதேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே…” (மணிமேகலை)

“நந்தா விளக்குப் புறம் ஆகு என நான்கு கோடி நொந்தார்க் கடந்தோன் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்” (சீவகசிந்தாமணி:12:187)

சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன. இவை தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. இவற்றிற்கு உரிய நெய்யினை விவசாயிகள் தனித்தனியே அளித்து வந்தனர். இது தொடர்பாகப் பல தமிழ் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன.

ஒரு நந்தா விளக்கினுக்கு நிசதம் உழக்கு நெய் (S. I. I. i, 142).

மேற்படி பெருமானடி களுக்கு நந்தாவிளக் கெரிப்பதாக (S. I. I. iii, 97).

சோழர்களின் நிர்வாகம்

தென்னிந்தியா முழுவதும் முதன்முறையாகச் சோழப் பேரரசின் ஆட்சியின் கீழ் தழைத்தோங்கியது. சோழர்களின் நிர்வாகம் மைய அரசு (Central Government), மண்டல அரசு (Provincial Government) மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் (Local Self Government) ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த நிர்வாக அமைப்புகள் வாயிலாகச் சோழர்களின் நிர்வாகம் பரவலாக்கப்பட்டிருந்தது.

உள்ளாட்சி நிர்வாகம்

உள்ளாட்சி நிர்வாகத்திலும் நீதி விசாரனையிலும் சோழர்கள் முன்னோடியாக விளங்கினர். சோழ அரசில் மக்கள் வாழ்விடங்களின் மிகச்சிறிய அலகு (Smallest Unit) கிராமம் ஆகும். சராசரிக் குடிமக்கள் வசித்த வாழ்விடம் ஊர் என்று அழைக்கப்பட்டது. பிராமணர்கள் வசித்த வாழ்விடத்திற்கு கிராமம் என்று பெயர், இந்தக் கிராமங்கள் சதுர்வேதி மங்கலம் அல்லது பிரம்மதேயம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. வணிகர்களின் வாழ்விடம் நகரம் என்று வழங்கப்பட்டது. நாடு (District) பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவு ஆகும். இவை கோட்டம் அல்லது கூற்றம் (Division) என்றும் அழைக்கப்பட்டன. வளநாடு என்பது பல நாடுகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும். சோழ நாட்டின் ஒரு மண்டலத்தில் ஒன்பது வளநாடுகள் இடம்பெற்றிருந்தன.

ஊர்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களை, முறையே ஊர் சபைகள், கிராம சபைகள், மற்றும் நகர சபைகள் என்ற பெயருடன் கூடிய தன்னாட்சி அமைப்புகள் நிர்வாகம் செய்தன. உழவர்கள் குழுவினர்களுக்கென்று சித்திரமேழி என்ற நிர்வாகக்குழு செயல்பட்டது. கோட்டத்து அவைகளில் (Divisional Assemblies) மேலே குறிப்பிட்ட சபைகளின் பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர். கோட்டத்து அவையின் தலைவர்கள் நாட்டார்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த நாட்டவை மாவட்ட அளவிலான நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தது. சட்டம் ஒழுங்கு இந்தச் சபைகளால் நிர்வாகிக்கப்பட்டன. இச்சபைகளின் கூட்டங்கள் (Assembly) ஊர் பொது இடங்களிலோ அல்லது கோவில் மண்டபங்களிலோ நடைபெற்றன.

கோவில்கள் படிநிலை நிர்வாக மையங்கள் – ஒருங்கிணைந்த சமுதாய மையங்கள்

சோழ கோமரபினர் (Chola Dynasty) சைவர்கள் ஆவர். சிவனுக்காகப் பல ஆலயங்கள் இவர்களால் கட்டப்பட்டன. கிராமங்களில் இருந்த கோவில்கள் படிநிலை நிர்வாக மையங்களாகவும் (Hierarchical Administrartion Centers) ஒருங்கிணைந்த சமுதாய மையங்களாகவும் (Integrated Social Centers) செயல்பட்டன. கோவில்களை நிர்வகித்து நடத்தும் அதிகாரங்கள் ஊர் மற்றும் கிராம சபைகள் மற்றும் நகரவைகளுக்கு இருந்தன.

கி.பி. 1000 ஆம் ஆண்டு, முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் நிலங்கள் முறையாக அளக்கப்பட்டு மதிப்பிடப்பட்டன. நிலத்தின் அளவுகள், எல்லைகள், உரிமையாளர் பெயர் குறித்த தகவல்கள் நிலப் பதிவுகளாக (Land Registry) பதிவு செய்யப்பட்டன. நஞ்சை மற்றும் புஞ்சை விளைநிலங்கள். தரிசு காடுகள் எல்லாம் கோவில் மூலவர் பெயரிலோ ,சபைகள் அல்லது நகரவைகளின் பெயரிலோ அல்லது தனியார் பெயரிலோ பதிவு செய்யப்பட்டு இருந்தன. நில விளைச்சலில் இருந்து மூன்றில் ஒரு பங்கு தானியம் அரசுக்கு விளைச்சல் வரியாகச் செலுத்த வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. நஞ்சை, புஞ்சை, தரிசு நிலங்கள், காடுகள் ஆகிய நிலங்களின் தன்மைக்கேற்ப விதிக்கப்பட வேண்டிய வரிவிகிதத் தீர்வைகளையும் கணக்குகளையும் “புரவு வரித் திணைக்களம்” என்ற சோழ அரசு அலுவலர் பராமரித்து வந்தார்.

இந்த வரிவிகிதத் தீர்வைகள் நிலத்தின் தன்மைக்கேற்ப சிறிது மாறுபட்டது. மேலும் விவசாயிக்கான வரி (Cultivator’s Tax), நீர் வரி (Water Tax) போன்ற உபரி வரிகளும் விதிக்கப்பட்டன. வணிகர்களிடம் இருந்து தொழில்முறை வரி வசூலிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கும் (Manufactured Goods) வரி வசூல் செய்யப்பட்டது. சுங்கச் சாவடிகள் (Toll Gate) வழியாகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்களுக்கு ஆயம் (Excise Duty) என்னும் தீர்வை வசூலிக்கப்பட்டது. இது தவிர சோழர்கள் ஆட்சியில் பல இனங்களில் ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. வரி செலுத்த தவறியவர்களுக்கும் (Defaulters) குற்றங்களை இழைத்தவர்களுக்கும் வட்டி, அபராதங்களும் தண்டங்களும் Over-due Interests, Penalties and Fines) விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன.

வருவாய் நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த புள்ளிகளாகவும் கோவில்கள் செயல்பட்டன. கோவில்களுக்குச் சோழப் பேரரசர்களும் அரசிகளும், அமைச்சர்களும், தளபதிகளும் நிலம், தானியங்கள், அணிகலன்கள், ஐம்பொன் படிமங்கள், பொற்காசுகள் போன்றவற்றைத் தேவதானங்களாகவும் நிவந்தங்களாகவும் வழங்கினார்கள். நிலவரி (Land Tax), வணிகவரி (Commercial Tax), நிவந்தங்கள் (Conditional Grants), நிலக்கொடைகள் (Land Grants), அறக்கொடைகள் (Donations of Cash and Kind) ஆகிய கூறுகள் சோழர்களின் வருவாயாக இருந்தன. சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம் திருநாமத்துக்காணி என்றும் திருமால் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம் திருவிடையாட்டம் என்றும் பௌத்த சமணத் தலங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பள்ளிச்சந்தம் என்றும் பெயர் பெற்றிருந்தது.

நேர்முகம் மற்றும் மறைமுக வரிகளை விதிக்கும் அதிகாரமும் நன்கொடை மற்றும் வரி வசூல் செய்யும் அதிகாரமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. வரி பணமாகவும் விவசாய விளைபொருட்களாகவும் (குறிப்பாக நெல்) வசூலிக்கப்பட்டன. வரி செலுத்துவோர் யாவரும் இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினாராக இருந்தனர்.

நில ஆவணங்கள், படிமங்கள், அணிகலன்கள், பொற்காசுகள், தானியங்கள், பூசனைப் பொருட்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் இடங்கள் கருவூலங்கள் என்று அழைக்கப்பட்டன. பண்டாரங்கள் என்றும் இவற்றிற்குப் பெயர் வழங்கியது.

சோழர்களின் கிளைக் கருவூலங்கள் கோவில்களிலேயே செயல்பட்டன. வரிகள் மற்றும் இதர வருவாய்கள் வசூலிக்கப்பட்டு இந்தக் கருவூலங்களில் செலுத்தப்பட்டன. கோவில் கருவூலங்கள் முக்கிய வங்கியாளர்களாகவும் (Bankers) செயல்பட்டனர். பணம் கடனாகத் தேவையானவர்களுக்குக் வழங்கப்பட்டு வட்டி வசூலிக்கப்பட்டது. அசல் மற்றும் வட்டி கட்டத் தவறியர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாவா மூவா பேராடுகள் என்றால் என்ன பொருள்?

சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள் கொள்ளலாம். தமிழ்க் கல்வெட்டுக்களில் கீழே கொடுத்துள்ளது போன்ற சொற்றொடரைக் காணலாம்.

நந்தாவிளக் கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண் ணூறு (S. I. I. III, 107).

“சாவா மூவா பசு” என்றும் சில கல்வெட்டுகளில் காணப்படும். பசுவின் நெய்யும் ஆட்டின் நெய்யும் சோழர்கள் காலத்துக் கோவில்களில் விளக்கு எரிக்கப் பயன்பட்டது.

.பண்டைக்காலத்தில் கோவில் உண்ணாழிகை என்னும் கருவறைகளில் இரவும் பகலும் எரியும் பொருட்டு அணையா விளக்கு வைப்பது வழக்கம்..அரண்மனையின் பள்ளியறைகளிலும் அணையா விளக்கு வைப்பதுண்டு.

கோவிலில் நந்தா விளக்கெரிப்பதற்கு ஏராளமான நெய் தேவைப்பட்டது. தேவையான நெய் தினமும் கிடைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கோவிலுக்கு இருந்தது. நந்தா விளக்கெரிப்பதற்கான நிவந்தங்களை மக்கள் சபையோரிடம் செலுத்தினார்கள். சிலர் பொற்காசுகளாகவும் சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடு அல்லது பசுக்களாகவும் நிவந்தம் கொடுத்தார்கள்.

சாவா மூவா பேராடுகள் திட்டம் எவ்வாறு உருவானது?

முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது எனலாம்.

இராஜராஜ சோழன் க்கான பட முடிவு

சோழநாட்டில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் வாழ்வில் சில பிரச்சினைகள் இருந்தன. அவள் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை மனமுருக வேண்டிக்கொள்கிறாள். தன்னுடைய பிரச்சினைகளைச் சிவபெருமான் தீர்த்துவைத்தால் ஆண்டு முழுவதும் உண்ணாழிகையில் நந்தா விளக்கு ஏற்றிக் காணிக்கை செலுத்துவதாக மனமுருகி நேர்ந்துகொள்கிறாள்.

கோவிலில் பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் தனது விண்ணப்பத்தையும் நந்தா விளக்கெரிப்பதற்கான விருப்பத்தையும் தெரிவித்தாள். கோவில் அதிகாரி கணக்குப் போட்டு, உண்ணாழிகையில் ஆண்டு முழுவதும் நெய் விளக்கேற்றுவதற்கு இவ்வளவு காசுகள் செலவாகும் என்று விடை சொல்கிறார். இந்தப் பெண்ணிடம் இருந்து ஓர் ஆண்டிற்கு உண்ணாழிகையில் நந்தா விளக்கேற்றுவதற்கான பொற்காசுகளையும் உடனே பெற்றுக் கொள்கிறார். கோவில் கணக்கர் அந்தப் பொற்காசுகளைக் கோவில் கருவூலத்தில் வரவு வைத்துக் கொள்கிறார்.

கோவில் அதிகாரி வாங்கிய காசிற்கு உரிய அளவு நெய்யினை வாங்கி உண்ணாழிகையில் ஓர் ஆண்டிற்கு விளக்கு ஏற்றி இருந்தால் இந்த நிகழ்ச்சி அப்போதே முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் முடித்து வைக்க இறைவன் திருவுளம் கொள்ளவில்லை போலும்.

மாமன்னர் இராஜராஜரின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. கோவிலுக்கும் மக்களுக்கும் பயன்படுமாறு நந்தா விளக்கு ஏற்றும் திட்டம் தயாரிக்கப்படுகிறது. சாவா மூவா பேராடுகள் என்று இந்தத் திட்டத்திற்குப் பெயரும் சூட்டப்படுகிறது.

உழுவதற்கு நிலம் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்த விவசாயிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. இந்த விவசாயிகள் கோவிலுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி ஒரு விவசாயி தஞ்சை கோவிலுக்கு வருகிறார். கோவில் அதிகாரி விவசாயிகளிடம் திட்டத்தை விவரிக்கிறார். உண்ணாழிகையில் ஓர் ஆண்டுக்கு நெய் விளக்கு ஏற்றுவதற்கு நாள் ஒன்றுக்கு ஓர் ஆழாக்கு நெய்யினை விவசாயி தரவேண்டும். விவசாயி தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகளையும் இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் படி ஆண்டு முழுவதும் தினமும் ஓர் ஆழாக்கு நெய் தருவதற்கு எத்தனை ஆடுகள் தேவைப்படும்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

96 ஆடுகள், ஒரு கடா மற்றும் குட்டிகள் அடங்கிய ஆட்டுக்கிடையினைக் கொடுத்தால் தான் தினமும் கோவிலுக்கு ஓர் ஆழாக்கு நெய் தர முடியும் என்று விவசாயி விடை சொல்கிறார். கோவில் அதிகாரி நேர்த்திக்கடன் செய்துகொண்ட பெண்ணிடம் பெற்றுக்கொண்ட பொற்காசுகளைக் கொண்டு விவசாயி கோரிய கணக்கில் ஆட்டுக்கிடையினை வாங்கி விவசாயியிடம் ஒப்படைக்கிறார்.

மாமன்னர் இராஜராஜர் விதித்த நிபந்தனையையும் கோவில் அதிகாரி விவசாயியிடம் தெரிவிக்கிறார்: விவசாயி கேட்டுக்கொண்ட எண்ணிக்கையில் ஆடுகள் ஒப்படைக்கப்படுகிறது. விவசாயியின் கணக்கில் இந்த ஆடுகள் நிலுவையில் இருக்கும். ஒப்புக்கொண்டபடி விவசாயி ஓர் ஆழாக்கு நெய் கொடுத்துவிட வேண்டும். ஆண்டு முடிவில் இதே எண்ணிக்கையில் ஆடுகளைத் திரும்பக் கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். விவசாயி விரும்பினால் இத்திட்டத்தின்படி வரும் ஆண்டுகளிலும் கோவிலுக்கு ஓர் ஆழாக்கு கொடுத்துவரலாம் என்பதுதான் இந்த நிபந்தனை.

விவசாயி மகிழ்ச்சியுடன் ஆடுகளைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் செல்கிறார். நிபந்தனைப்படி அவர் கோவிலுக்கு நாள் தோறும் ஓர் ஆழாக்கு நெய் வழங்கி வருகிறார். சில நாட்களுக்குள்ளாகவே கோவிலில் கிடைத்த ஆடுகள் குட்டிபோட்டு பல்கிப் பெருகிவிட்டன. ஆட்டுக்குட்டிகளை விற்று தன் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடுகளை திரும்ப ஒப்படைக்க முடியும் என்ற நம்பிக்கை விவசாயியின் மனதில் குடிகொண்டுள்ளது.

கோவிலில் நேர்ந்து கொண்ட பெண்ணின் பிரச்சினை தீர்ந்த காரணத்தால் உண்ணாழிகையில் நாள்தோறும் நந்தா விளக்கு ஏற்றப்படுகிறது. உழுவதற்கு நிலம் இல்லாத விவசாயிக்கு ஆடுவளர்ப்புத் தொழில் கைகூடியுள்ளது. ஆடுவளர்ப்புத் திட்டத்தால், விவசாயியின் வாழ்க்கை, சிக்கலின்றி நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கி, விவசாயிக்குக் கொடுக்கப்பட்ட ஆடுகள் அதே எண்ணிக்கையில் எப்போது வேண்டுமானாலும் திரும்பக் கிடைத்துவிடும். இது தான் சாவா மூவா பேராடுகள் திட்டத்தின் மேன்மை. இதில் பங்கேற்கும் அனைவருக்குமே வெற்றி (Win-Win Situation).

நந்தா விளக்கு ஏற்றுவதற்கான வேண்டுதல்கள் எவை?

பொதுவாக ஒருவர் நோய்நொடி அகன்று உடல் நலம் பெற வேண்டியோ அல்லது ஒருவர் உயிர்நீத்த சமயத்தில் அவர் நற்கதி அடைவதற்காக வேண்டியோ நந்தா விளக்கு ஏற்றுவதற்குக் குடும்பத்தார் அல்லது உற்றார் உறவினர்கள் நிவந்தம் வழங்குவது வழக்கம்.

சாவா மூவா பேராடுகள் திட்டம் எப்படிப் பரவலாக்கப்பட்டது?

கோவிலில் விளக்கெரிப்பதற்காகப் பொதுமக்கள் பொற்காசுகளை நந்தாவிளக்கு நிவந்தங்களாகச் சபையோருக்கு வழங்கினார்கள். இதற்கு மாறாக 90 அல்லது 96 என்ற எண்ணிக்கையில் ஆடுகளையோ அல்லது 32 பசுக்கள் மற்றும் ஒரு காளையையோ நிவந்தமாகக் கொடுத்துள்ளார்கள். அரை நந்தா விளக்கு எரிக்க 45 அல்லது 48 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடுகளையும் பசுக்களையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சபையோர் அதே எண்ணிக்கையில் நிலமற்ற விவசாயிகளிடம் கொடுத்து அவர்களிடமிருந்து தினமும் ஓர் ஆழாக்கு நெய் பெற்றுக்கொண்டார்கள். கோவில் உண்ணாழிகைகளில் இடையறாது இரவுபகலாக நந்தா விளக்கு ஏற்றப்பட்ட செய்தியினைத் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி கோவில் கல்வெட்டு பதிவு செய்துள்ளது..

ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரி பர்மற்கு யாண்டு – -ஆவது நாள் தேவதானந் திருத்துருத்தி மகாதேவர்க்குச் சோழப் பெருமானடிகள் போகியார் நங்கைசாத்தப் பெருமானார் நொந்தா விளக்கனுக்கு

வைத்த பொன்(ங). இப்பொன் முப்பத்தின் கழஞ்சுங் கொண்டு இரவும் பகலும் முட்டாமே ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்த வல் ஏரிப்போமானோந் திருத்துருத்தி சபையோம் இது பன்மாயேசுஸ்வர ரக்ஷை

இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் 27 ஆம் ஆட்சி ஆண்டின் (கி.பி.966) போது பல்குன்றக் கோட்டத்து, தரையூர் நாட்டில் இடம்பெற்றிருந்த மாம்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த கோதண்ட மன்றாடி என்பவன் திருவோத்தூர் மகாதேவர்க்குப் பகல் பொழுதில் விளக்கு எரிக்க 50 இளம் ஆடுகளை (அரை நந்தா விளக்கு எரிப்பதற்காக என்று கருதப்படுகிறது) கொடுத்துள்ள செய்தியினை கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு பதிவு செய்துள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து] / த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க]த்து கோதண்ட மன்றாடி திருவோத்தூர் மஹாதேவர்க்கு பகல் விளக்குக்கு வைத்த சாவா [மூ]வா பேர்[ஆடு அ]ஞ்பது

பார்வை

சாவா மூவா பேராடுகள்

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்

 1. Cuddalore Ramji சொல்கிறார்:

  நல்ல தகவல்

  Liked by 1 person

 2. ராஜராஜ சோழன் போற்றுதலுக்கு உரியவர்
  அருமையான கட்டுரை ஐயா
  நன்றி

  Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.