தற்காலிக கீழடி அருங்காட்சியகம், மதுரை நகரில்(பின் கோடு 625020) மருத்துவர் தங்கராசு சாலையில், சட்டக் கல்லூரி அருகில், அமைந்துள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் மூன்று அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் இரண்டு அறைகளில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கீழடியில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் அறையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் முப்பரிமானத் தொழில்நுட்பம் மூலம் மாதிரிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இந்த அருங்காட்சியகத்தை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.
கீழடி அகழ்வாய்வுகள்
கீழடி தொல்லியல் களம் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சி, கீழடி கிராமத்தின் (பின்கோடு 630611) அருகே பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் புவியிடக் குறியீடு 9.8630727°N அட்சரேகை 78.1820931°E தீர்க்கரேகை ஆகும். 110 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்தப் பண்பாட்டு வைப்பு மேடாகிய (cultural deposit mound) கீழடி தொல்லியல் களத்தில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின், பெங்களூர் அகழவாரய்ச்சிக் கிளையினர் 2014-2015, 2015-2016, மற்றும் 2016-2017 ஆகிய பருவங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். இத்துறையினர் இங்கு நாற்பதிற்கும் மேலான ஆய்வுக் குழிகளைத் தோண்டினர். தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாய்வு இதுவாகும்.
கீழடியை சிறந்த தரமாதிரி (index) அகழ்வாய்வுத் தளங்களுள் ஒன்று என்று பட்டணம் அகழ்வாராய்ச்சியாளரும் PAMA இயக்குனருமான, பி.ஜெ. செரியன், குறிப்பிட்டுள்ளார். (பி.ஜெ.செரியன், அணிந்துரை, கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம். சிவானந்தம், இரா, சேரன், மு.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை, 2019. பக். XI.)
தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையினர் இந்தக் களத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். கீழடி நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகளைத் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகவும் தமிழ்நாடு மாநில தொல்லியல்துறை வெளியிட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கொந்தகையில் 12.21 கோடி ரூபாயில் கீழடி அகழாய்வு பொருட்களைக் கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நவம்பர் 1, 2019 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தற்காலிக கண்காட்சியகம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகத்திற்கும், கீழடி அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருட்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த கருத்து முதல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இறுதி நிலைக்கு வந்தது எனலாம். கரிமக் காலக்கணிப்பு அடிப்படையில் கீழடிப் பண்பாடானது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கிற்று என இன்றைய நிலையில் தெரியவருகிறது. …இன்றைய நிலையில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் கீழடி பண்பாட்டிற்கும் இடையேயான காலஇடைவெளி ஆயிரம் ஆண்டுகள் ஆகும். (பேராசிரியர் கா.ராஜன், அணிந்துரை, கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம். சிவானந்தம், இரா, சேரன், மு.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை, 2019. பக். IV.)
அருங்காட்சியகம் திறப்புவிழா
மதுரை உலகத்தமிழ் சங்க வளாகத்தில் அமைந்துள்ள இந்தத் தற்காலிக கீழடி அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பர் 1, 2019 தேதியன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மா. பா.பாண்டியராஜன், பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை உலகத்தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் வினய், தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அருங்காட்சியகம்
நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் இந்த வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்காக மூன்று அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காலை11 முதல் இரவு 7 மணி வரைஅனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். அனுமதி இலவசம். தொல்பொருட்கள் குறித்த ஐயங்களுக்கு விளக்கமளிப்பகாக ஐந்து தொல்லியல் ஊழியர்கள் பணியில் உள்ளனர். தற்காலிகமாகச் செயல்படும் இந்த அருங்காட்சியகம், மக்கள் வருகையைப் பொறுத்து மேலும் நீட்டிப்பதற்கு அரசு முடிவு செய்யும்.
கீழடி எவ்வாறு இருந்தது என்பதற்கான மாதிரிகள், முப்பரிமாண நடைமேடை உள்ளிட்ட, பல்வேறு தொல்லியல் சார்ந்த தகவல்களுடன் கூடிய பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. வைகை நதி பள்ளத்தாக்கில் உள்ள தொல்லியல் களங்கள் குறித்த வரைபடம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கீழடி ஐந்தாம் கட்ட அகழ்வாய்வினை முப்பரிமானக் காட்சிப் பொருளாக அமைத்துள்ளார்கள்.
வேளாண் சமூகமும் கால்நடை வளர்ப்பும்
இங்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ள விலங்குகளின் எலும்புத் துண்டுகள் மற்றும் கொம்புகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததில் இவை திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய கால்நடைகளுக்கு உரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கீழடியில் வாழ்ந்த சமூகத்தினர் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு மட்டுமின்றிக் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்த செய்தியினையும் செய்தியினைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
சுட்ட செங்கற்சுவர் கட்டுமானம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் கீழடியில் மேற்கொண்ட நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் 13 மீட்டர் நீளமுடைய மூன்று வரிசைகள் கொண்ட செங்கல் சுவர் ஒன்று அகழப்பட்டுள்ளது. இந்தச் செங்கல் கட்டுமானத்தில் 38x23x6 அளவு மற்றும் 38x26x6 அளவுகளில் சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு செங்கல் மாதிரிகளின் அகலம் மட்டுமே சிறிதளவு மாறுபட்டு உள்ளது. ஆனால் நீளம் மற்றும் தடிமன் ஆகிய அளவுகளில் எந்த மாறுதலும் இல்லை. தமிழ்நாட்டின் பிற தொல்லியல் களங்களில் கண்டறியப்பட்ட செங்கல் மாதிரிகளைப் போலவே 1:4:6 என்ற விகித அளவுகளில் காணப்படுவதை இங்கு குறிப்பிடவேண்டும். “தமிழ்நாட்டிலுள்ள தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த பிற தொல்லியல் இடங்களில் கிடைக்காத செங்கல் கட்டுமானங்கள் அதிக அளவில் வெளிப்பட்டதே இவ்வகழ்வாய்வின் தனித்தன்மையாகும்” என்று பேராசிரியர் கா.ராஜன் குறிப்பிடுகிறார். கீழடி அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட சுட்ட செங்கற்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கீழடி அகழ்வாய்வில் செங்கல் கட்டுமானத்தை வெளிக்கொணர தரைத்தளம் வரை அகழப்பட்டுள்ளது. மிகவும் நுண்மையான களிமண்ணால் தரைத்தளம் அமைத்து, செங்கற்களால் பக்கச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன..கூரை அமைக்க மரத்தூண்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் மரத்தூண்களின் பயன்பாட்டிற்கான எந்த நேரடிச் சான்றும் கிடைக்கவில்லை. இங்கு கண்டறியப்பட்ட இரும்பு ஆணிகள் மூலம் மரத்தூண்கள் நட்டு மேற்கூரை அமைக்க மரச்சட்டங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானப் பகுதியில் அதிக அளவில் கூரை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றின் தலைப் பகுதியில் இரண்டு துளைகள் காணப்படுகின்றன. கூரையில் அமைக்கப்பட்ட மரச்சட்டங்களின் மீது கீழிருந்து மேலாக ஓடுகளை வேய்ந்து இருக்கலாம் என்றும் ஓடுகளின் துளைகளில் நார் அல்லது கயிறு கொண்டு பிணைத்துக் கட்டியிருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்கள் குறித்த பகுப்பாய்வு
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார்கள். இந்த மாதிரிகள் ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணப்படுவதாகவும் இவற்றின் கலவை (Composition) மற்றும் தன்மை (Characteristics) பற்றியும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகச் சிலிக்கா கலந்துள்ளது என்றும் பிணைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு 7 சதவிகித அளவு கலந்துள்ளது என்றும் சுண்ணாம்புச் சாந்தில் 97 சதவிகிதம் சுண்ணாம்பு கலந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பானை வகைகள்
கீழடி ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் அழகுற வனையப்பட்ட சுடுமண் பானை வகைகள், சட்டிகள், மூடிகள், தட்டுக்கள், கருப்பு-சிவப்புக் குவளைகள், தண்ணீர் ஊற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கைப்பிடியும், மூக்கும் கொண்ட நீர்க்கலன்கள், அடுப்பு, சமைத்தபின்பு மட்கலனை இறக்கி வைப்பதற்கான சுடுமண் தாங்கிகள் என்று பல சுடுமண் கலன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தொன்மை வாய்ந்த மட்பாண்ட வகைகளின் எச்சங்களான கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், கருப்பு நிறப் பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கருப்புப் பானை ஓடுகள், சிவப்பு நிறப் பானை ஓடுகள், ரோமானிய முத்திரையிட்ட பானை ஓடுகள், ரோம் நாட்டு அரிட்டைன் பானை ஓட்டுத் துண்டுகள் ஆகியவை கிடைத்துள்ளன. இந்த வகை அரிட்டைன் பானைகள் கி.மு. 2-ம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்தில் இருந்தனவாம். இதன் மூலம் ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் கீழடிக்கு வந்திருக்கலாம் அல்லது கீழடி பண்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த மக்கள் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்துக்கலாம் என்பது புலனாகிறது.
கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள்
இங்கு ஏராளமாகக் கருப்பு-சிவப்புப் பானை (black and red ware) ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓடுகளின் மாதிரிகள் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பகுப்பாய்வு (Spectroscopic Analysis) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. கீழடியின் குயவர்கள் கருப்புச் சிவப்பு நிறங்களில் பானை வனையும் கலையை நன்கு அறிந்திருந்தனர், கருப்பு நிறத்திற்காகக் கரியையும் (கார்பன்) (carbon material) சிவப்பு நிறத்திற்காக ஹேமடைட் (hematite) என்னும் இரும்புத் தாதினையும் பயன்படுத்திய செய்தியினைச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உற்பத்தி செய்வதற்குச் சூளையின் வெப்ப நிலையை (kiln temperature) 1100 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்த்தும் தொழில்நுட்பத்தைக் கீழடி குயவர்கள் அறிந்திருந்தனர்.
கீழடி மட்கலங்கள் சிறிய சிறிய துளைகளுடன் காணப்படுகின்றன. பானைகளை மூடுவதற்கான மண் மூடிகள் இது போன்ற துளைகளுடன் காணப்படுகின்றன. சமையல் செய்வதற்கு ஏற்ப இந்தத் துளைகளைக் கீழடிக் குயவர்கள் மட்கலங்களில் இட்டுள்ளார்கள். இது மிகவும் வியப்பான தொழில்நுட்பமாகும்.
சுடுமண் உருவங்கள்
களிமண் கொண்டு மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்கள், நூற்புக் கருவிகள், காதணிகள், வளையல்கள் மற்றும் பிற பயன்பாட்டுப் பொருட்களைச் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்தால் அது திடப்பட்டுவிடும். இவ்வாறு சுட்டெடுத்த மண் சிற்பம் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது. ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் 13 மனித உருவங்கள், 35 காதணிகள், மூன்று விலங்கு உருவங்கள் கிடைத்துள்ளன. கிரீடம் போன்ற தலை, குழந்தையின் உருவம், மனித முகம், காளை மற்றும் குதிரை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும் நட்சத்திர வடிவ சுடுமண் காதணி போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எழுத்துப் பொறிப்புடன் பானை ஓடுகள்
“ஆரம்பத்தில், தமிழ் மொழியானது குறியீடுகளாக (Graffiti) வடிவம் பெற்று, பிறகு படிப்படியாகப் பரிணாமம் அடைந்து வரி வடிவமானது (Script).” இந்தியத் துணைக்கண்டத்தில் கண்டறியப்பட்ட குறியீடுகளுள் சிந்து சமவெளி தொல்லியல் களங்களில் கண்டறியப்பட்ட குறியீடுகளே மிகவும் தொன்மையானவை ஆகும். சிந்துவெளி நாகரிகப் பண்பாடு மறைந்துபோய்த் தமிழ் பிராமி எழுத்து வடிவம் தோன்றிய காலத்திற்கு இடையே கீறல் குறியீடு (Scratch Graffiti) என்று ஒரு குறியீட்டு வடிவம் இருந்ததாகத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பொதுவாக இது போன்ற பானைப் பொறிப்புகள், குயவர்களால் பானை சுடுவதற்கு முன்பாகவே ஈர நிலையில் பொறிக்கப்படுவதுண்டு.
கீழடி நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு பெரும்பாலும் கழுத்துப் பகுதியில் பொறிக்கப்பட்ட 1,100 கீறல் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குறியீடுகளில் காணப்படும் எழுத்தமைதி (வடிவம் மற்றும் கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. எனவே இவை பல குயவர்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம். இந்தக் கிறுக்கல்கள் மற்றும் குறியீடுகளில் இருந்தே தமிழ் பிராமி வரிவடிவம் உருவாகி வளர்ந்திருக்கலாம். இந்தக் கீறல் குறியீடுகளுடன் கீழடியில் கண்டறியப்பட்ட பானை ஓடுகள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

PC: Tamil Nadu State Archaeology Department
தமிழ் பிராமி எழுத்து பொறிப்புடன் கூடிய 56 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குவிரன் ஆதன் என்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. “இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.” இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள பானை ஓடுகளை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு இன்புறுகிறார்கள். எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல் போன்ற பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உறைகிணறு
வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக உறைகிணறு தோண்டும் முறை சங்க காலத்தில் இருந்துள்ளது. பட்டினப்பாலையின் நூலாசிரியரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி “உறை கிணற்று புறச்சேரி” என்று குறிப்பிடுகிறார்.
கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட 4 அடி உயரம் கொண்ட உறைகிணற்றின் மாதிரி சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு உறைகள் காணப்படுகின்றன. சேதமடைந்த இரண்டு உறைகளையும் தனியாக வைத்துள்ளார்கள்.
வடிகால் அமைப்புகளும் நீர்மேலாண்மையும்
ஐந்தாம் கட்ட அகழாய்வின்போது நகர நாகரிகத்தின் அடிப்படைச் சான்றாகக் கருதப்படும் வடிகால் அமைப்புகள் கண்டறியபட்டுள்ளது. ஒரு குழியில் 47 செ.மீ. ஆழத்தில் சிவப்பு வண்ணத்தில் வடிகால் அமைப்புகளுக்குப் பயன்பட்ட (60 செ.மீ நீளமும், 20 செ.மீ விட்ட மும் கொண்ட) இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வடிகால் குழாய் ஒவ்வொன்றிலும் விளிம்புகளைப் போல ஐந்து வளையங்கள் காணப்படுகின்றன. ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் இரு குழாய்களும் காணப்படுவதால் நீரைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சுடுமண் வடிகால் குழாய்களுக்குக் கீழே, பீப்பாய் வடிவில் மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் காணப்படுகின்றன. பீப்பாய் வடிவிலான வடிகால் குழாயில் வடிகட்டி ஒன்றும் காணப்படுகிறது. இந்த இரண்டு வடிகால்களுமே வெவ்வேறு பயன்பாட்டில் இருந்திருக்கவேண்டும் என்பது தொல்லியலாலர்களின் கணிப்பாகும்.
50 செ.மீ. ஆழத்தில் திறந்தவெளியில் நீர் செல்லும் வடிகால் ஒன்று இங்கு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல் கட்டுமானத்திலான 11 அடுக்குகளுடன் கூடிய இந்த வடிகால் 5.8 மீட்டர் நீளமும், 1.6 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இந்த வடிகால் அமைப்பின் மீது ஓடுகள் பாவப்பட்டுள்ளன. இந்தத் திறந்தநிலை வடிகால் அமைப்பில் தண்ணீர் எளிதாக வெளியேறிச் செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கண்டறியப்பட்ட சுடுமண் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்ட நீர் மேலான்மை முப்பரிமான மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தக்களியின் பயன்பாடும் நெசவுத் தொழிலும்
நூல் நூற்கப் பயன்படும் தக்களி (Spindle whorls) என்ற கருவி 200- மேற்பட்ட எண்ணிக்கையில் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. களிமண், மணல்கல், சோப்புக்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் தக்களியினைச் செய்துள்ளார்கள். துணியின் மீது உருவங்களை வடிவமைப்பதற்குப் பயன்படுத்திய கூரிய முனைகளையுடைய எலும்புத் துரிகை, தறியில் பாரமாகப் (weight) பயன்படுத்தப்பட்ட கருங்கல் மற்றும் சுடுமண்ணில் செய்த குண்டு, செம்பு ஊசி, சுடுமண் கலங்கள் போன்ற தொல்பொருட்களும் நெசவுத் தொழிலோடு தொடர்புடையவை ஆகும். இதன் மூலம் கீழடியில் வாழ்ந்த மக்கள் நெசவு தொழிலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
அணிகலன்கள் மற்றும் மணிக்கற்கள்
ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்களின் ஏழு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. கூம்பு, நட்சத்திரம் போன்ற வடிவங்களில் கிடைத்த இந்தப் பொன் துண்டுகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றிச் செம்பினாலான அணிகலன்களையும் காண முடிகிறது. இங்கு கண்டறியப்பட்ட மதிப்புமிக்க மணிகள் (precious stones), 4000க்கும் மேற்பட்ட குறை மணிக்கற்கள் (semi precious stones) கண்ணாடி மணிகள், சுடு மண்ணாலான மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள், பளிங்கு கற்களிலான மணிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட சூது பவளம் (கார்னீலியம்) முக்கிய இடம்பெறுகிறது. இவை ரோம் நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கீழடியிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. குஜராத், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட கல் மணிகளும் கீழடியில் கிடைத்துள்ள காரணத்தால் கீழடி பண்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த மக்கள், வெளிமாநிலத்தவருடன் வணிகத் தொடர்பிலும் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையும் இதன்மூலம் தெரிய வருகிறது.
தந்தத்திலான பகடைக்காய்கள், சதுரங்கக் காய்கள், வட்டச் சில்லுகள்
இங்கு காட்சிப்படுத்திப்பட்ட பகடைக்காய் யானைத் தந்ததால் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகடைக்காயினைக் கீழடியில் வாழ்ந்த செல்வந்தர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காத இது போன்ற பகடைக்காய் கீழடியில் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. யானைத் தந்தத்தைச் செதுக்கி உருவமாகச் செய்யும் தொழில்நுட்பம் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில், தற்போது பெண்களால் விளையாடப்படும் பாண்டி என்ற விளையாட்டில் பயன்படுத்தப்படும் வட்டச் சில்லுகளைப் போன்றே, வட்ட வடிவில் சுட்ட களிமண் சில்லுகளின் எண்ணிக்கை 600 ஆகும். சுடு மண்ணாலான வட்ட வடிவச் சக்கரங்கள், சிறுவர்கள் கயிறு கட்டி இழுத்து விளையாடும் பொம்மை வண்டிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதத்தக்க 80 சதுரங்க விளையாட்டுக் காய்களும், தாய விளையாட்டுக்கான பகடைக்காய்களும் இங்கு கிடைத்துள்ளன. இவற்றைப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதனிடையே பழந்தமிழர்களின் நாகரிகத்தை பற்றி தெரிந்துக்கொள்ள பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகள், என கடந்த 10 நாட்களில் மட்டும், சுமார் 7 ஆயிரம் பேர், அருங்காட்சியகத்திற்கு வருகை தந்துள்ளதாக, அதன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கலாச்சார மற்றும் தொல்லியல் துறை அமைச்சரின் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட தொல்பொருட்களுடன் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை, ரூ .121.21 கோடி செலவில், அமைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தமிழக கலாச்சார மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பண்டியராஜன் நவம்பர் 4, 2019 ஆம் தேதி அன்று தெரிவித்தார். தற்போதைய தற்காலிக அருங்காட்சியகத்தில் 6,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இங்குள்ள தொல்பொருட்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்படும் என்றும், தற்போது இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 10,000 தொல்பொருட்களை இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
குறிப்புநூற்பட்டி
- கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம். சிவானந்தம், இரா, சேரன், மு. பதிப்பாசிரியர்கள். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2019. பக்கம் 57. ரூ. 50/-
- கீழடி பொக்கிஷங்கள் தினத்தந்தி நவம்பர் 10, 2019
- கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள். பிழம்பு, யாழ். September 19, 2019.
- கீழடி ஸ்பெஷல்: வியக்க வைக்கும் கட்டுமானப் பொருட்கள், கட்டட தொழில்நுட்பம்!C.P.சரவணன், வழக்குரைஞர் தினமணி 02nd October 2019
- Keeladi: Unearthing the ‘Vaigai Valley’ Civilisation of Sangam era Tamil Nadu S. Annamalai NOVEMBER 02, 2019.
என்ன ஒருமுன்னேறிய நாகரீகத்தில் அப்போதே வாழ்ந்திருக்கிறார்கள்? ஆச்சர்யமான விஷயங்கள். மதுரை செல்லும்போது பார்த்து வரவேண்டும்.
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
LikeLike
எவ்வளவு விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்து இருக்கின்றார்கள்.
வியப்பாக இருக்கிறது.
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
LikeLike
வியப்பு ஐயா
. கீழடிக்கு இருமுறை சென்றுள்ளேன்
அருங்காட்சியகத்தைப் பார்க்கேவேண்டும என்ற ஆவல் எழுகிறது.
LikeLike
கட்டாயம் பார்க்க வேண்டிய அருங்காட்சிகம்தான். கருத்திற்கு நன்றி
LikeLike