சங்க இலக்கியத்தில் சோழர்களின் உறையூர்

காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள உறையூர் கி.மு. 3 ஆம் நூற்றண்டில் இருந்தே சங்க காலத்துச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. தித்தன், கரிகால் சோழன், ,குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன், ஆகிய சோழர் கோமரபைச் சேர்ந்த மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் உறையூரினைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன..இந்நகரம் ஒரு செழிப்பான வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது.

முற்கால சோழர்களின் ஆட்சிக்காலம் பற்றிய காலவரிசை (Timeline) தெளிவில்லாமல் காணப்படுகிறது. ஏனெனில் அனைத்து தகவல்களும் சங்க இலக்கிய நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை ஆகும், ஆகவே முற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலம் கிமு 200 முதல் கிபி 300 வரை என்று மிகப் பரந்த கால அளவீடே செய்ய முடிகிறது. சங்க இலக்கியங்களும் தொல்லியல் அகழ்வாய்வுகளும் உறையூரின் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன

உறையூர் – உறந்தை

சங்க காலத்தில் உறையூர் உறந்தை என்று அழைக்கப்பட்டுள்ளது. உரபுரம், குக்குடம் , கோழி, கோழியூர், கோளியூர், திருக்கோழி, வாரணம், நிகலாபுரி, ஆகிய பெயர்களாலும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. .”கோழியோனே கோப்பெருஞ் சோழன்” என்று புறநானூற்றுப் பாடல் 212 குறிப்பிடுகிறது.

கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டதற்கான தொன்மக்கதை சுவையானது. ஒரு கோழிக்கும் யானைக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் கோழி யானையை விரட்டியடித்தது. கோழியின் வீரத்தை மெச்சும் வகையில் இவ்வூர் கோழியூர் ஆயிற்றாம்.

முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்செவி வாரணம் புக்கனர் புரிந்தென்
(சிலப்பதிகாரம் ஊர்கான்காதை)

அடியார்க்கு நல்லார் என்ற சிலப்பதிகார உரையாசிரியர் தன் உரையில் இந்தக் கோழிக் கதையை விவரித்துள்ளார். உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் கோழியும்-யானையும் போரிடும் சிற்பம் உள்ளது,

பின்னர், உறையூர், இன்றைய திருச்சிராப்பள்ளி மற்றும் அதன் அண்டைய பகுதிகளுடன், பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 590-630) ஆட்சியின் கீழ் வந்தது. பராந்தக சோழனின் (கி.பி. 907 – 957) தலைநகராக உறையூர் திகழ்ந்தது என்று உதயேந்திரம் செப்பேடு பதிவு செய்துள்ளது. பின்னர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 – 1235), உறையூரையும் தஞ்சையையும் வெஞ்சினம் கொண்டு தீக்கிரையாக்கினான் என்பது திருக்கோயிலூர் கல்வெட்டு தரும் செய்தியாகும். ஆகவே மாறவர்மன் சுந்தரபாண்டியன் அழிக்கும்வரை உறையூர் சிறப்பான நகராய் இருந்துவந்துள்ளது என்று கருதலாம் இவை தவிர உறையூர் அழிந்ததற்கான காரணத்தைச் சுட்டும் தொன்மக் கதைகள் ஏராளமாக உள்ளன.. இவ்வூர் 63 தமிழ் சைவ நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனர் வாழ்ந்து சிவத்தொண்டாற்றிய ஊராகும். இவருடைய சிலை உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோவிலில் தனிச் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

உறையூர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரத்தில் உள்ள ஒரு பகுதி ஆகும். இதன் புவியிடக் குறியீடு 10° 49′ 49.8432” N அட்சரேகை 78° 40′ 56.7084” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 85 மீ. உயரத்தில் அமைந்துள்ள இவ்வூரின் பின் கோடு 620003 ஆகும். உறையூர் திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து 4.3 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3.2 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து 7.1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

சங்க காலத்தில் உறையூர்

“வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை” (குறுந்தொகை 116, இளங்கீரனார்) என்றும் ‘உறந்தை அன்ன பொன்னுடை நெடுநகர்’ (அகம். 385) என்றும் ‘உறந்தை அன்ன நிதியுடை நன்னகர்’ (அகம் 369) என்றும் சங்க இலக்கியங்கள் உறையூரின் செல்வவளத்தைச் குறிக்கின்றன. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய “தமிழகம் ஊரும் பேரும்” (பழனியப்பா பிரதர்ஸ், 2008) என்ற நூலில் “ஊர் எனப்படுவது உறையூர்” என்று குறிப்பிட்டுள்ளார்..

உறையூர் என்றால் மக்கள் உறையும் ஊர் என்று பொருள்படும். உறையூருக்குக் கிழக்கே நெடும்பெருங் குன்றம் ஒன்று இருந்த செய்தியை அகநானூறு சுட்டுகிறது.

கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்
(அகநானூறு பாடல் 4)

செல்லா நல்லிசை உறந்தைக் குணாது (புறநானூறு.395) என்ற பாடலில், “பிடவூர் என்ற ஊர் உறந்தைக்குக் கிழக்கில் உள்ளது” என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

உறையூர் சமஸ்கிருதத்தில் உரகபுரா என்று அழைக்கப்பட்டுள்ளது. உரக என்ற அசை (syllable) நாகர்களை குறிக்கிறது. சோழர்களின் நாணயங்களில் “உரக” என்ற சொல் இடம்பெற்றுள்ளது குறப்பிடத்தக்கது.

சங்க இலக்கியப் பாடல்களில் உறந்தை

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் உறந்தை என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.

மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு

(புறநானூறு 39, பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்)

உறையூரின் நீதிமன்றம் நேர்மைக்கும் முறைமைக்கும் பேர்பெற்றது

மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறங்கெட அறியாதாங்கு, சிறந்த

(நற்றிணை 400, ஆலங்குடி வங்கனார்)

நற்றிணையும் உறந்தையின் சிறப்பைக் கூறுகிறது.

ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன

(அகநானூறு 93, புலவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார்)

புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருளாகத் தவிரலர்,

(அகநானூறு 237, புலவர் தாயங்கண்ணனார்)

புதவம் என்னும் மதகு வழியாக நீர் பாய்ந்து வயலைச் செழிப்பாக்கும் ஊர். இந்த உறையூர் வாழ்க்கை அவருக்குக் கிடைத்தாலும், பொருளீட்டும் செயலுக்காக அங்கு அவர் தங்கமாட்டார்.

கடல் அம் தானைக் கைவண் சோழர்
கெடல் அரு நல்லிசை
உறந்தை அன்ன
நிதியுடை

(அகநானூறு 369, புலவர் நக்கீரர்)

கடல் போல் பெரும்படையும், கைவளக் கொடையும் கொண்ட சோழர் போல் உன் பெற்றோர் நிதியம் படைத்தவர்.

கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை
உறந்தை அன்ன

(அகநானூறு 385, புலவர் குடவாயிற் கீரத்தனார்)

போரிடுவதில் கைத்திறம் மிக்க யானையும், விரைந்து செல்லும் தேர்ப்படையும் கொண்ட சோழரின் காவிரி பாயும் விளைநிலத்தில் உள்ள உறந்தை என்னும் உறையூர்.

நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை
உறந்தையும் வறிதே, அதாஅன்று

(சிறுபாணாற்றுப்படை,82-83, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் அரசன் ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்)

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உறந்தை, உறையூர் மற்றும் வாரணம் ஆகிய பெயர்களுடன் உறையூரைக் குறிப்பிடுவது குறப்பிடத்தக்கது.

மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும் (சிலப்பதிகாரம், 8. வேனில் காதை 3)

உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப் (சிலப்பதிகாரம், 10. நாடுகாண் காதை 242)

முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய

புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன் (சிலப்பதிகாரம், 10. நாடுகாண் காதை 247,248)

சங்ககாலச் சோழர்கள்: கரிகால் பெருவளத்தான் என்னும் திருமாவளவன்

புகழ்பெற்ற சங்ககாலத்துச் சோழ மன்னனான கரிகாலச் சோழனின் தந்தை இளஞ்செட்சென்னி இறந்தபோது, சோழர்களின் வாரிசு யார் என்பதில் பெரும் சண்டை ஏற்பட்டது. பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருந்தமையால் சோழ அரச குடும்பங்கள் மிகப் பெரியவையாக இருந்தன. சோழ அரியணை ஏற பலரும் உரிமை கோரினர். போட்டியிலிருந்து கரிகாலனை நீக்குவதற்காக, தாயாதி ஒருவன் சிறுவனான கரிகாலனை ஒரு மாளிகையில் அடைத்து அம்மாளிகைக்குத் தீயிட்டான். தீப்பற்றிய மாளிகையிலிருந்து தப்பிக்கையில், இளவரசன் கரிகாலனின் கால் கருகிப் போன காரணத்தால் கரிகாலன் என்று பெயர்பெற்றான். பின் கரிகாலனே மிகச் சிறுவயதிலேயே சோழமன்னனாக அரியணை ஏறினான். வழக்குகளை அணுகி ஆய்ந்து நீதி வழங்குவதில் நுண்மதி படைத்தவன் என்று பழமொழி நானூறு குறிப்பிடுகிறது. இது மட்டுமின்றி பாடல் இயற்றுவதிலும் வல்லமை பெற்றிருந்தான். புலவர்களுக்கு 1600000 பொற்காசுகளை வழங்கிச் சிறப்பித்தவன் இவன்.

karikaala_chozan_memorial_building_28229

 

கரிகாலனின் தலைநகராகவும் உறையூர் திகழ்ந்துள்ளது. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், பெருவளத்தான் ஆகிய பட்டப்பெயர்களும் உள்ளன. சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்களைப் பெற்ற சோழ மன்னன் கரிகாலச் சோழன் என்று எண்ணத் தக்கவாறு கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை, முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படை ஆகிய ஆற்றுப்படை நூல்கள், கரிகால் வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட பத்துப்பாட்டு ஆற்றுப்படை நூற்களாகும்.

காடுகளை வெட்டி அழித்து நாடாக மாற்றி, குளங்களைத் தோண்டி பல்வேறு வளங்களையும் பெருகச்செய்து, பெரிய மடங்களைக் கொண்ட உறந்தை நகரை விரிவுபடுத்தி, அரண்மனைகளுடன் குடிகளை நிறுவியவன் திருமாவளவன் என்னும் கரிகால் பெருவளத்தான் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் போற்றியுள்ளார்.

காடு கொன்று நாடாக்கிக்,
குளம் தொட்டு வளம் பெருக்கிப்,
பிறங்கு நிலை மாடத்து
உறந்தை போக்கிக்,
கோயிலொடு குடிநிறீஇ,
வாயிலொடு புழையமைத்து,
ஞாயில்தொறும் புதை நிறீஇப்,

(பட்டினப்பாலை 283 – 288, புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அரசன் திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)

புறநானூறு, பழமொழி நானூறு, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களும் இம்மன்னனைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன.

தித்தன் மற்றும் தித்தன் வெளியன்

உறந்தையை தித்தன் என்ற சோழர் குடியின் தலைவன் (Chieftain of Chola clan) ஆண்டுவந்த செய்தியை புறநானூற்றில் புலவர் பரணரும் (புறநானூறு 352) நக்கீரரும் (புறநானூறு 395) பாடியுள்ளனர். தித்தன் வேளிர் குடியைச் சேர்ந்தவன் என்று இரா.இராகவையங்கார் தன்னுடைய “தித்தன்” (அண்ணாமலை யுனிவர்சிட்டி தமிழ் சீரிஸ், அண்ணாமலை நகர், 1949) குறிப்பிட்டுள்ளார். கரிகால் சோழனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தான் தித்தன். கடற்கரைப் பட்டினமான வீரையை ஆண்ட வெளியன் என்பவன் மைந்தனே தித்தன் ஆவான். தித்தன் உறந்தையை வென்று தன் அரசை நிறுவினான். சோழனின் மகளை மணந்ததனால் சோழனான். தித்தனுக்கு கொப்பெருநற்கிள்ளி, வெளியன் என்று இரு மைந்தர்களும், ஐயை என்ற மகளும் இருந்தனர்.

ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
குன்று ஏறிப் புனல் பாயின்,
புற வாயால் புனல் வரை யுந்து……..
……………….நொடை நறவின்
மாவண்
தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரை சால் நன்கலம்

(புறநானூறு 352, புலவர் பரணர்)

ஆம்பல் மலர்க்கொடியைத் தோளில் அணிந்துகொண்டிருக்கும் மகளிர் குன்று போன்ற மேட்டில் ஏறி ஆற்றுப் புனலில் பாயும்போது அந்த நீர் ஆற்றங்கரையில் அலைமோதும். உறந்தை பெருங் கொடைவள்ளளாகிய தித்தன் என்னும் மன்னனுக்கு உரியது. அங்கு நறவு (கள்) விற்கப்படும். இந்த ஊரில் வெண்ணெல் விளைந்திருக்கும் வயல்கள் வேலியாக அமைந்துள்ளது.

ஆங்கப் பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழுச் சிறப்பின்
சிறுகண் யானைப் பெறல் அரும்
தித்தன்
செல்லா நல்லிசை
உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும!

(புறநானூறு 395, புலவர்: மதுரை நக்கீரர்)

நல்ல நிலங்களின் அழகினைக் கொண்டது பிடவூர். உயர்வும் விழுமிய சிறப்பும் கொண்டது. மாறாத புகழ் கொண்ட உறந்தைக்குக் கிழக்கில் இந்தப் பிடவூர் உள்ளது.அப்போது அந்நாட்டு அரசன் தித்தன். பெறுதற்கு அரிய நற்பண்புகள் கொண்டவன். சிறிய கண் கொண்ட யானைமேல் தோற்றம் தருபவன். பிடவூர் வள்ளல் ‘பிடவூர் கிழான்’. அவன் மகன் பெருஞ்சாத்தன்.

… … … … … … … … … அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா 20
நொச்சி வேலித்
தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டன்ன,
பல் முட்டின்றால் தோழி, நம் களவே.

(அகநானூறு 122, பரணர்)

அதனால், தோழி, திருட்டுத்தனமாக (களவு-ஒழுக்கம்) அவர் என்னை அடைவதில் இருக்கும் இடர்ப்ப்பாடுகள், உறந்தை மன்னன் தித்தன் காலத்தில் உறந்தைக் கோட்டைக்கு வெளியே அரணாக அமைக்கப்பட்டிருந்த காவல்காடுகளைப் போல பல தடைகளை உடையதாக இருக்கிறது. (சிறந்த குதிரை வீரனான தித்தன் அம்பறாத் தூணியில் அம்புகளை செருகிக்கொண்டு ஆதி தாளம் போல் ஒலி கேட்கும்படி நடைபோடும் குதிரைமேல் செல்லும் பழக்கம் கொண்டவன்.)

அகநானூறு 6 ஆம் பாடலில் பரணர் கூறும் செய்தி இது: தித்தன், மழை பெய்து வளம் தரும் வண்ணம், நல்லாட்சி புரிந்த பெருங்கொடையாளி. இவன் ஐயை என்னும் பெண்ணின் தந்தை. உறந்தை கொத்துக்கொத்தாக நெல் விளையும் நிலத்தை உடையது. காவிரி இங்கு பாய்கிறது. காவிரி ஆற்றில், புணையை (படகை) மூங்கில் கழையால் ஊன்றித் தள்ளமுடியாத அளவுக்குப் பெருவெள்ளம் பாய்கிறது. இந்த வெள்ளத்திலும் அவன் (இந்தப் பாடலின் தலைவன்) யானையின் முகம் கொண்ட துடுப்புப் படகில் சென்று நீராடினான். பூழியர் (பூழி நாட்டவர்) காட்டு யானைகளைப் பிடித்துப் பழக்குவர். அவற்றை ஆற்றுவெள்ளத்தில் நீராட விடுவர்.

நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்,
சினங்கெழு தானைத்
தித்தன் வெளியன்,
இரங்கு நீர்ப் பரப்பின்
கானலம் பெருந்துறைத்,
தனந்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள்ளிறவின் குப்பை அன்ன

(அகநானூறு 152, பரணர்)

தித்தன் வெளியன், தித்தனின் மைந்தனாவான். கடல் சார்ந்த‘கானலம்பெருந்துறையில்’ (புகார்) ஆட்சி புரிந்தான். இவன் அரசன். கையில் கோலை வைத்துக்கொண்டு குறி சொல்லிப் பாடும் அகவுநர் மக்களைப் பேணிப் பெரும்புகழ் கொண்டவன். சினம் கொண்ட பெரும்படை உடையவன் என்பது பரணர் கூற்று.

இன் கடுங்கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி,
ஒரு கால் மார்பு ஒங்கின்றே ஒரு கால்
வருதார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே,
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
போர் அருந்
தித்தன் காண்க தில் அம்ம,
பசித்துப் பணை முயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்
களம் புகும் மல்லன் கடந்து அடு நிலையே.

(புறநானூறு 80, புலவர் சாத்தந்தையார் . பாடப்பட்டோன்:போர்வைக்கோப் பெருநற்கிள்ளி)

கோப் பெருநற்கிள்ளி, தித்தனின் மற்றொரு மைந்தன். நல்ல உடற்கட்டு உடையவன். மற்போர் புரிவதில் மாவீரன்; என்ன காரணத்தினாலோ தித்தன் இவனிடம் வெறுப்பும் பகையும் கொண்டான். எனவே கோப்பெருநற்கிள்ளி தன் தந்தையைப் பிரிந்து, தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய முக்காவல் என்னும் நாட்டைச் சேர்ந்த ஆமூருக்குச் சென்றான். அங்கே அவன் வறுமையுற்றுப் புல்லரிசிக் கூழை உண்டு தனித்து வாழ்ந்திருந்தான். ஆமூரில் மல்லன் ஒருவன் தனக்கு இணையாகப் போர் புரியக் கூடிய மல்லர் ஒருவரும் இல்லை என்று செருக்குடன் இருந்தான். கோப் பெருநற்கிள்ளி அவனுடன் மற்போர் புரிந்து அவனைக் கொன்றான்.

வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
போர் அடு தானைக்
கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.

(அகநானூறு 226, புலவர் பரணர்)

பாணன் என்பவன் தமிழ்நாட்டின் வடபால் இருந்த நாடுகளில் ஒன்றை ஆண்டு வந்தான். இந்தப் பாணன் கட்டி என்னும் அரசனைத் தனக்குத் துணை சேர்த்துக்கொண்டு உறந்தை மன்னன் தித்தன் வெளியனைத் தாக்குவதற்காகப் படையுடன் வந்தான். அப்போது வழக்கம்போல் காலையில் உறந்தை நாளவையில் இனிய கிணை (முரசு) முழக்கம் கேட்டது. தாக்க வந்த இருவரும், அதனைப் போர்முழக்கம் என எண்ணி, அஞ்சிப் போரிடாமலேயே ஓடிவிட்டனர்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ‘உறந்தையைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவன். .இவன் திண்தேர் வளவன்’ (புறநானூறு – 226,) என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையாரால் போற்றப்படுகிறான். தேர்மேல் இருந்து வலிமையாகத் தாக்க வல்லவன் என்பது இதன் பொருள்.

மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று … … … … … … …

(புறநானூறு 39, புலவர் மாறோக்கத்து நப்பசலையார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்)

இச்சோழன் மீது பாடியுள்ள பதினேழு பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இந்தச் சோழ மன்னன் பாடிய பாடல் ஒன்று மட்டுமே (புறநானூறு 173) புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

கிள்ளிவளவன் ஒரு சமயம் மலையமானின் இரு மகன்களை யானையின் காலால் மிதிக்க வைத்துக் கொல்ல முற்பட்டான். புலவர் கோவூர்க்கிழார் இக்குழந்தைகளைக் காப்பாற்ற கிள்ளிவளவனிடம் தூது சென்றார். ஒன்றுமறியாத சிறார்களைக் கொல்வது பாவம் என்று எடுத்துக்கூற சோழன் மனம் மாறினான். கிள்ளிவளவன் – மலையமான் இடையே மூள இருந்த பகையும் போரும் தடுத்து நிறுத்தப்பட்டது.

குளமுற்றம் என்ற ஊரில் இறந்தமையால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்று பெயர் பெற்றான். மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் ஆகிய புலவர்கள் இரங்கற்பாக்களைப் பாடியுள்ளனர்.

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை;

(புறநானூறு 58, புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்)

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் உறந்தையைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவன். இவன் குராப்பள்ளி என்னும் ஊரில் இருக்கும்போது இறந்துபட்டமையால் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று பெயர் பெற்றான். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர் பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் இனைபிரியாத நண்பர்களாக ஓரிடத்தில் சேர்ந்து இருப்பது கண்டு பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் (புறநானூறு 58) இடம்பெற்றுள்ளது. நீங்கள் இருவரும் இப்படியே என்றும் விளங்கினால் பிற நாட்டார் குன்றங்களிலெல்லாம் பாண்டியனின் கயல் சின்னத்தையும், சோழனின் புலிச் சின்னத்தையும் சேர்த்துப் பொறிக்கலாம் எனப் பாராட்டுகிறார்.

இன்றே போல்க நும் புணர்ச்சி வென்று வென்று
அடு களத்து உயர்க நும் வேலே, கொடுவரிக்
கோள் மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி 30
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.

(புறநானூறு 58, பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்)

பங்குனி முயக்கம்

உறந்தை என்னும் உறையூரில், பங்குனி உத்தர நாளில் காவிரி ஆற்றங்கரை மணலை அடுத்திருந்த குளிர்ந்த சோலையில் பங்குனி முயக்கம் என்னும் பங்குனி திருவிழா நடைபெறும். சோழ அரசர்களும் இதில் கலந்துகொள்வர்.

வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர் 5
இன் கடுங்கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகு கரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகு நாறு தண் பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்

(அகநானூறு 137, புலவர் உறையூர் முதுகூத்தனார்)

“நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியாற்றின் கரையில் மணல் பரப்பில், சருகுகள் கொட்டிக்கிடக்கும் மரச்சோலையில் பொங்கலிட்டுப் படைக்கும் பங்குனித் திருவிழா நடைபெறும். விழாவுக்கு அடுத்த நாள் பொங்கல் வைத்த ஆடுப்புகள் வெறிச்சோடிக் கிடக்கும்.” நற்றிணைப் பாடல் ஒன்று உறந்தையில் நடைபெற்ற இவ்விழாவை பங்குனி விழா என்று நற்றிணை குறிக்கிறது.

கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு

(நற்றிணை.234)

சங்ககாலப் புலவர்கள்

உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், உறையூர் கதுவாய்ச் சாத்தனார், உறையூர் சல்லியங்குமரனார், உறையூர் சிறுகந்தனார், உறையூர் பல்காயனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முதுகூத்தனார் ஆகிய சங்க காலப் புலவர்கள் உறையூரை முன்னொட்டுப் பெயராகக் கொண்டிருந்தமையால் உறையூருடன் இவர்களுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு புலனாகிறது.

கிரேக்க மாலுமிகளின் பயணக்குறிப்பில் உறையூர்

உறையூர் எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் எரித்திரிய (செங்கடலைச்) கடலைச் சுற்றி கிரேக்க மொழி பேசும் எகிப்திய வணிக மாலுமிகளால் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் பாய்மரக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணத்தை விவரிக்கிறது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பயணக் குறிப்புகள் அந்தக் காலத்திய இந்தியத் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மற்றும் கங்கையாற்றுச் சமவெளி பற்றி எல்லாம் விவரிக்கின்றன. இந்த நூலின் 59 வது பாராவில் உறையூர் ஆர்கெய்ரு Argairu என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் எகிப்திலுள்ள அலெக்சாந்திரியா நகரில் வாழ்ந்த தாலமி (Ptolemy) என்னும் கிளாடியஸ் தாலமி (Claudius Ptolemy (கி.பி. 130) ஒரு கிரேக்கர் ஆவார். கணிதவியல், வானியல், பூகோளவியல், சோதிடவியல் ஆகிய துறைகளில் சிறந்திருந்தார். இவர் ஜியாக்ரஃபியா (Geographia) என்ற தலைப்பில் கிரேக்க மொழியில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்நூலில் “கெரபோத்ரோஸ்” (Kerabothros) (அசோன் கல்வெட்டில் வரும் கேரள புத்ரர்), பாண்டியன் (Pandion)”சொர்னகோஸ்”, (Sonagos), “பளபர்னகோஸ்” (Basanagos) என்ற நான்கு அரச இனங்களைத் தாலமி குறிப்பிடுகிறார். இவற்றுள் “பளபர்னகோஸ்” (Basanagos) என்ற சொல் “பல்லவராஜா” என்ற சொல்லின் திரிபு வடிவமென்றும் இது பல்லவர்களையே குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அரச இனங்களின் தலைநகர்களும் தாலமியால் குறிக்கப்பட்டுள்ளது. கரூரை “கரெளரா”, (Karoura) என்றும், மதுரையை “மொதெளரா” (Modowra) என்றும், உறையூர் (உறந்தை) என்னும் உரபுராவை (சமஸ்கிருதம்) “ஒர்தொரா’ (Orthowa) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உறையூர் தொல்லியல் அகழ்வாய்வுகள்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியில் துறை ஆகியோர் இணைந்து, 1965 முதல் 1969 வரையான காலத்தில் நான்கு பருவங்களுக்கு மேல், உறையூரில் தொல்லியல் அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். பல்வேறு ஆய்வுக்குழிகள் பல்வேறு இடங்களில் அகழப்பட்டு பெரும் அளவில் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. ஒரு ஆய்வுக் குழியில், 4 X 4 அடி அளவு உடைய சாயத் தொட்டி ஒன்றின் எச்சம் தரைக்குக் கீழே எட்டடி ஆழத்தில் கண்டறியப்பட்டது. இது துணிகளுக்குச் சாயமிடுவதற்கான நீர்த் தொட்டி ஆகும். இச்சாயத்தொட்டியே உறையூர் நெசவுத்தொழில் சிறந்திருந்தது என்பதற்கான சான்றாகும்.

தமிழி எழுத்துப் பொறிப்புப்பெற்ற சிவப்புநிற பானை (Red Pottery ware) ஓடு ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது. இப்பானை ஓடு கி.மு. 3 ஆம் நூற்றாண்டினது என்று கால அளவீடு செய்யப்பட்டுள்ளது. ரோமானியர் தொடர்புகளைச் சுட்டுகின்ற ரௌலட்டட் வகை பானை ஓடுகளும் ( Rouletted Pottery ware), மெருகேற்றிய சிவப்புப் பானை (Polished Red Pottery ware) ஓடுகளும், கீறல்குறிகள் (graffitti) பெற்ற நாட்டுப் பானை (Grey Pottery ware) ஓடுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இக் கீறல்குறியீடுகள் (graffitti) சிந்துவெளி நாகரிக காலத்து வரிவடிவுடன் ஒப்பிடத்தக்கன. இத்தொல்லியல் களத்தின் காலத்தை, மண்ணடுக்கியல் (stratigraphy) அடிப்படையிலும், இங்கு கண்டறியப்பட்ட கருப்பு – சிவப்புநிற மட்பாண்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் கி.மு.1000 – கி.மு. 300 க்கு இடையேயான காலம் என்று கால அளவீடு செய்யப்பட்டுள்ளது..

உறையூர்: வணிக மையம்

உறையூர் நகரை நோக்கி கிரேக்கர்களும் ரோமானியர்களும் அடிக்கடி வந்து வணிகம் மேற்கொண்ட செய்தியினைத் தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. மேற்குக் கடற்கரையிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாகத் தொடங்கும் ‘இராஜகேசரி பெருவழி’ (இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″) என்ற வணிகப் பெருவழி உறையூர் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது. உறையூரிலிருந்து காவிரி ஆற்றின் வாயிலாக பூம்புகார் துறைமுகம் வரை சிறு படகுப் போக்குவரத்து இருந்துள்ளது. உள்நாட்டின் சரக்குகள் இப்படகுகள் மூலமாகவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சோழநாட்டின் பருத்தித் துணிக்கு, சர்வதேச அளவில் பெரும் கிராக்கி இருந்துள்ளது; குறிப்பாக, கிரேக்கர்களால் ஆர்கரிடிக் (Argaritic) என அழைக்கப்பட்ட, உறையூரின் மஸ்லின் துணி உலகின் மிகச்சிறந்த துணியாகக் கருதப்பட்டது, கிரேக்க உயர் குடியினர் இவ்வகை மஸ்லின் துணியினை விரும்பி அணிந்தனர். சோழநாட்டிற்கு மிகுந்த அயல்நாட்டு வருவாய் ஈட்டித் தரும் பண்டமாக மஸ்லின் துணி திகழ்ந்தது.

உறையூர் மணிகிராமம் வணிகர் குழு

தமிழகத்தில் சங்ககாலத்திலேயே வணிகச் சாத்து என்னும் பெயரில் செயல்பட்ட வணிகக் குழுக்கள் (கூட்டம்) பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சோழர்கள் காலத்தில் வாணிகம் செழித்து வளர்ந்தது. தமிழகத்தில் கி.பி. 11 – 13 ஆம் நூற்றாண்டுகளில் நானாதேசி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர், சித்திரமேழிப் பெரியநாடு, அத்திகோசத்தார், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார் ஆகிய வணிகக் குழுக்கள் (Trade Guilds) இயங்கி வந்துள்ளன. “மணிக்கிராமம்” என்ற வணிகருக்குரிய பட்டம் பெற்ற வணிகர்களே மணிக்கிராமத்தார் ஆவர். எட்டுத் திசைகளும் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்த ‘மணிக்கிராமம் செட்டிகள்’ பற்றி நிறையச் செய்திகள் உள்ளன. உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

குறிப்புநூற்பட்டி

 1. உறையூர் தொல்லியல் அகழாய்வு
 2. உறையூர் மறைந்த வரலாறு – மயிலை சீனி. வேங்கடசாமி
 3. சங்ககாலம். ப.சரவணன். கிழக்குப் பதிப்பகம்.
 4. சோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது
 5. சோழர்கால வாணிகம் – தமிழ் விக்கிப்பீடியா
 6. தமிழகம் ஊரும் பேரும், ரா. பி. சேதுப்பிள்ளை. 8ஆம் பதிப்பு 2008; பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை
 7. தித்தன் – தமிழ் விக்கிப்பீடியா

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சோழர்கள், தமிழ், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to சங்க இலக்கியத்தில் சோழர்களின் உறையூர்

 1. ராஜ.பார்த்த சாரதி சொல்கிறார்:

  உண்மையில் வயலூரே பழய உறைஊராகும். இப்போதும் அங்கு சோழன் மேடு என்னும் இடம் உள்ளது. ஆதில் அகழ்வாராய்ச்சி செய்தால் தான் உண்மையான சொழர் தலைந
  கரம் கண்டதாக ஆகும்.

  Like

 2. Dr B Jambulingam சொல்கிறார்:

  உறையூரைப் பற்றிய அருமையான தொகுப்பாக அமைந்த ஆய்வுக்கட்டுரை. ஆய்வின்போது உறையூர்ப்பகுதியில் புத்தர் சிலைகள் இருப்பதாகக் கூறி அந்த இடங்களில் இரு நாள்கள் தேடினேன். காண முடியவில்லை. நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஊரைப் பற்றிய வரலாற்றை சங்ககாலம் முதல் அறியத் தந்தமைக்கு நன்றி.

  Like

 3. Bhanumathy Venkateswaran சொல்கிறார்:

  அருமையான தகவல்களின் தொகுப்பு. 

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.