இந்திய ரூபாயின் வரலாறு

ஒவ்வொரு நாளும் நாம் செலவிடும் ரூபாயின் (Rupee) வரலாறு பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ரூபாய்க்கு சுமார் 2200 ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு சிறப்புகள் கொண்ட நம் இந்தியக் குடியரசின் நாணய முறையான (Currency of the Republic of India) ரூபாயைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோமா? .

ரூபாய் இந்தியக் குடியரசின் நாணய முறை என்பது உங்களுக்குத் தெரியும். உலகில் நன்கு மதிக்கப்படும் நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று எனலாம். இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.பி.ஐ சட்டம் 1934 (RBI Act 1934.) வழங்கும் அதிகாரத்தின்படி இந்திய ரூபாய நாணயத்தை (Indian Rupee Currency) வெளியிட்டுக் கண்காணிக்கிறது.. இந்திய சூர் வம்சத்து மன்னன் ஷெர் ஷா சூரி காலத்திலிருந்து இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் ஊடாக தற்போதைய இந்தியக் குடியரசு வரையிலான ரூபாயின் வரலாற்றை இந்தப் பதிவு விவரிக்கிறது.

ரூபாய்: பெயர்க்காரணம்

ரூபாய் என்ற சொல் எப்படி வந்தது? ரூபா (Sanskrit: रूप) என்றால் தோற்றம் அல்லது வடிவம் அல்லது உருவம்என்று பொருள். “ரூப்யா” (Sanskrit: रूप्य) என்றால் நன்கு வடிவமைக்கப்பட்ட வெள்ளி (Wrought Silver) என்று பொருள்.

 

சாணக்கியன் (கி. மு நான்காம் நூற்றாண்டு) சந்திரகுப்த மௌரியனின் முதல் அமைச்சராவார்.இவர் , ரூப்யகம் (Devanagari:रूप्यकम्) என்ற சொல்லை அர்த்தசாஸ்திரம் என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். ரூப்யகம் என்றால் வெள்ளி நாணயம் என்று பொருள். அர்த்தசாஸ்திரம் நூலில் வெள்ளி நாணயத்தை ரூப்யரூபா (Rupyarupa) என்று குறிப்பிடுகிறார். தங்க நாணயத்தை ஸ்வர்ணரூபா (Suvarnarupa) என்றும், செம்பு நாணயத்தை தாம்ரரூபா (Tamararupa) என்றும் ஈய நாணயத்தை சிஸரூபா (Sisarupa) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கலாச்சுரி பேரரசின் நாணயம்

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் மகிஷ்மதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கலாச்சுரி பேரரசின் (Kalachuri Empire) மன்னர் கிரிஷ்னராஜாவின் (Krishnaraja) (r. c. 550-575) கலாச்சுரி ‘ரூபக்’ என்ற பெயரில் ஒரு நாணயத்தை வெளியிட்டிருந்தார். இந்த நாணயத்தின் படம் கீழே தரப்பட்டுள்ளது. கலச்சூரி ஆட்சியின் குறுநில மன்னரான கலாஹசிலாவின் (Ca 575-610) வெளியிட்ட நாணயத்தின் கீழே படமும் தரப்பட்டுள்ளது..

ஷெர் ஷா சூரியின் முதல் ரூபாய் நாணயம்

முதன் முதலில் ரூபாயை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? டில்லி சுல்தான் ஷெர் ஷா சூரி என்ற சூர் வம்சத்து அரசன் ரூபாயை அறிமுகப்படுத்தினார் இவர் டெல்லியை தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை 1540 முதல் 1545 வரை ஆண்டு வந்தார். .இந்த வெள்ளி ரூபாய் நாணயத்தின் எடை 178 Grains (11.534 கிராம்). ஒரு கிரேய்ன் = 64.79891 மில்லிகிராம்.

முகலாய பேரரசர் முஹம்மது ஷாவின் வெள்ளி நாணயம்

பிற்காலத்தில் நாணயத்தின் எடைத் தரமும் (Weight Standard) வெள்ளி உலோகமும் (Silver Metal) முகலாய பேரரசால் தொடரப்பட்டது. முகலாய பேரரசர் முஹம்மது ஷா (ஆட்சி கி.பி. 1719–1748) பெயரில் அச்சிடப்பட்ட வெள்ளி நாணயம் இது.

 

பம்பாயிலிருந்து முகலாய பேரரசர் முஹம்மது ஷாவின் ஆட்சிக் காலத்தில் அச்சிடப்பட்ட ஒரு வெள்ளி நாணயம் இது.

 

பிரிட்டானியக் கிழக்கிந்தியக் கம்பெனி நாணயம்

இந்த ரூபாய் பிரிட்டானியக் கிழக்கிந்தியக் கம்பெனி (கி.பி. 1757–1858) ஆட்சிக் காலத்திலும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் (கி.பி. 1858–1947) ஆட்சிக் காலத்திலும் புழக்கத்தில் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியால் கி.பி. 1835 ஆம் ஆண்டு வெளிடப்பட்ட ஒரு ரூபாய் வெள்ளி நாணயம்

கி.பி. 1868 ஆம் ஆண்டு வெளிடப்பட்ட ஒரு ரூபாய் வெள்ளி நாணயம்.

கி.பி. 1947 ஆம் ஆண்டு வெளிடப்பட்ட ஒரு ரூபாய் வெள்ளி நாணயம்

 

சென்னை மாகாணத்தில் 1815 ஆம் ஆண்டு வரை பணம் (Faham) என்ற நாணய மதிப்பு புழக்கத்தில் இருந்துள்ளது. ஒரு ரூபாய்க்கு 16 பணங்கள் (Fahams). பின்னாளில் பணத்திற்குப் பதில் அணா (Anna) என்ற நாணயம் புழக்கத்திற்கு வந்தது. ஒரு ரூபாய் 16 அணாக்கள் கொண்டது. ஒரு அணா நாலு பைசா கொண்டது.

 

ஒரு ரூபாய் காகித நாணயம் 1917

18ஆம் நூற்றாண்டில்தான் இந்திய நாணயம் (Indian Currency) காகிதத்தில் வெளியிடப்பட்டது. முதலாம் உலகப்போரின் (28 ஜூலை 1914–11 நவம்பர் 1918) போது வெள்ளிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெள்ளி நாணயத்திற்குப் பதிலாக ஜார்ஜ் மன்னர் படம் போட்ட ஒரு ரூபாய் காகித நோட்டு நவம்பர் 30, 1917 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

 

1926 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று இந்த ரூ. 1/- நோட்டு திரும்பப் பெறப்பட்டது. 1940 ஆகஸ்டு மாதம் ரூ. 1/- நோட்டு திரும்ப அறிமுகப் படுத்தப்பட்டது. 1944 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு.

ஒரு ரூபாய் நோட்டிற்கு வயது நூற்றி இரண்டு ஆண்டுகள் . 1917 ஆம் ஆண்டு, 1 ₹ என்பது அமெரிக்க டாலரை விட வலிமையாக இருந்துள்ளது. 1917 ஆம் ஆண்டு ரூபாய் பரிமாற்ற மதிப்பு 1 ₹ = $ 13 அமெரிக்க டாலர்கள். 19 மே 2020 ஆம் தேதி அன்று பரிமாற்ற மதிப்பு 1 ₹ = $ 0.013 அமெரிக்க டாலர்; 1 ₹ = 0.012 யுரோ.

காகிதப் பணம் வெளியிட்ட பிரிட்டிஷ் இந்திய வங்கிகள்

முதன் முதலில் பாங்க் ஆஃப் இந்துஸ்தான் (Bank of Hindustan) (1770–1832), வாரன் ஹேச்டிங்ஸ் உருவாக்கிய ஜெனரல் பாங்க் ஆஃப் பெங்கால் மற்றும் பீஹார் (the General Bank of Bengal and Bihar (1773–75), பெங்கால் பாங்க் (Bengal Bank (1784–91) ஆகிய வங்கிகள் காகிதத்தினாலான பணத்தை அச்சிட்டன.

இந்திய பிரிட்டிஷ் அரசாங்கம் நான்காம் ஜார்ஜ் மன்னர் படத்துடன் அச்சடித்து வெளியிடப்பட்ட நூறு ரூபாய் நோட்டு

 

காகித நாணய சட்டம்

1861ஆம் ஆண்டு காகித நாணய சட்டம் அறிமுகமான பின்னர் ஆங்கிலேய இந்திய அரசிற்கு (Government of British India) காகித பணம் அச்சிடுவதற்கு ஏக போக உரிமை வழங்கப்பட்டது.

1935 ஏப்ரல் முதல் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 காகித நோட்டுக்களை வெளியிடும் உரிமையை இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.

இந்திய ரூபாய் / நாணயம் அச்சடிப்பு மையங்கள்

இந்திய ரூபாய் மற்றும் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது. மத்திய அரசின் நிதி அமைச்சகமே ஒரு ரூபாய் நோட்டை நேரடியாக வெளியிட்டு வந்தது. நிதி அமைச்சகத்தின் செயலாளர் கையெழுத்துப் போட்டிருப்பார்.

இன்றைய ரூபாய் 100 பைசாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய நாணயங்கள் 5, 10, 20, 25 மற்றும் 50 பைசா ஆகிய மதிப்புகளிலு ம் இந்திய ரூபாய் நாணயங்கள் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் மதிப்புகளிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன. . இந்திய நாணயங்கள் டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. 10 ₹ நாணயத்தை அச்சிடுவதற்கான செலவு 6.10 ₹ ஆகிறதாம்

இந்திய ரூபாய் நோட்டுகள் 1, 2, 5, 10, 20, 50, 100, 500,1000 மற்றும் 2000 ரூபாய் ஆகிய மதிப்புகளில் அச்சடிக்கப்படுகின்றன.

 

ரூபாய் வரலாறு காலவரிசை

1938 ஜனவரி முதன் முதலாக ரூ. 5 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. இது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவத்தைப் பெற்றிருந்தது..

 

1938 பிப்ரவரி முதல் ஜூன் வரை ரூ. 10/-, ரூ. 1000/-, ரூ. 10000/- நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. 5,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் 1954 முதல் 1978 ஆம் ஆண்டு வரையில் புழக்கத்தில் இருந்தன.

1938: ரூ. 2/- நோட்டும் எட்டு அணா நாணயமும் திரும்பப் பெறப்பட்டன.

1943 ஆகஸ்டு ரூ. 2/- நோட்டு திரும்ப அறிமுகப் படுத்தப்பட்டது.

1950 சுதந்திரத்திற்குப் பிறகு 1 பைசா, அரை அணா, ஒரு அணா, இரண்டு அணா, கால் ரூபாய் அல்லது 4 அணா, அரை ரூபாய் அல்லது எட்டு அணா நாணயங்கள் வெளியிடப்பட்ட்டன.

1953 ரூபாய் புதிய நோட்டில் இந்தி மொழி பிரதானமாகக் காட்டப்பட்டது. இந்தி மொழியில் ரூபாய்கள் ரூப்யே (Rupye) என்று பன்மையில் குறிப்பிடப்பட்டது.

1954 ரூபாய் நோட்டுகள் ரூ. 1000/- ரூ. 5000/- ரூ. 10000/- மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்டன.

1957 ஒரு ரூபாய் டெசிமல் முறைப்படி 100 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு ஒரு ரூபாய் என்பது 16 அணாக்களாகவும் 64 பைசாக்களாகவும் (காலணா) பிரிக்கப்பட்டிருந்தன.

1957 – 1967 ஒரு நயா பைசா, இரண்டு நயா பைசா, மூன்று நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா நாணயங்கள் அலுமினியத்தில் வெளியிடப்பட்டடன.

1967 ஆம் ஆண்டு இந்த அலுமினியம் நாணயங்களின் அளவுகள் குறைக்கப்பட்டன.

1980 அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த சின்னங்கள் புதிய நோட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. எ.கா.ரூ. 2/- நோட்டில் ஆர்யபட்டா கோளின் படம்; ரூ. 2/- நோட்டில் எண்ணெய் கிணறு படம்; ரூ. 5/- நோட்டில் பண்ணை இயந்திரமயமாக்கல் படம்; ரூ. 10/- நோட்டில் இந்திய கலை வடிவம் படம் (கோனார்க் சக்கரம்); ரூ. 2/- நோட்டில் இந்திய கலை வடிவம் (மயில்) படம்.

1987 அக்டோபர் புதிய ரூ. 500/- நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

1988 புதிய 10, 25, 50 பைசா நாணயங்கள் எஃகு (Stainless Steel) உலோகத்தில் வெளியிடப்பட்டன.

1992 புதிய 1 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் எஃகு (Stainless Steel) உலோகத்தில் வெளியிடப்பட்டன.

1995 ரூ. 1/-, , ரூ. 2/- நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

1996 புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு அசோக ஸ்தூபி படத்துடன் வெளியிடப்பட்டு வந்தன. புதிய நீரோட்டக் குறியீடு, சாளரத்துடன் கூடிய பாதுகாப்பு நூல், (Windowed Security Thread), மறைந்திருக்கும் படம் (Latent Image), பார்வையற்றோருக்காக புடைப்பு வரிக்கோட்டுடன் படம் ஆகியவை இந்த நோட்டுகளில் இடம்பெற்றன.

2005 – 2008 புதிய 50 பைசா, ரூ. 1/-, , ரூ. 5/- நாணயங்கள் எஃகு உலோகத்தில் வெளியிடப்பட்டன.

2009 – ரூபாய்க்கான குறி எழுத்தை “₹” இந்திய அரசு மார்ச் 5, 2009 ஆம் தேதி அறிவித்தது. ரூபாயின் குறியீட்டைத் கணனியில் தட்டச்சு செய்ய, நீங்கள் ‘Ctrl + Shift + press’ ஐ அழுத்த வேண்டும்.

2010 ரூபாய் குறியீடான (sign: ₹; code: INR) சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 50 பைசாவிற்குக் கீழே புழக்கத்தில் இருந்த 25 பைசா நாணயம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

2012 ரூபாய் குறியீடாக (sign: ₹; code: INR) சின்னம் ரூ.10. ரூ.20. ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகளில் பொறிக்கப்பட்டன.

2016 நவம்பர் புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பண மதிப்புகளில் புதிய நோட்டுகள் வெளியடப்பட்டன. வங்கிகள் பழைய நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கின. இது போலவே 12 ஆகஸ்டு 1946 ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000, மற்றும் ரூ. 10000 நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார்கள். 1954 ஆம் ஆண்டு இந்த நோட்டுகள் மறுபடியும் அறிமுகப் படுத்தப்பட்டன. 16 ஆகஸ்டு 1978 ஆம் தேதி அன்று ரூ.100/- க்கு மேற்பட்ட பண மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன.

குறிப்புநூற்பட்டி

  1. இந்திய நாணயங்கள் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்..!
  2. ஒரு ரூபாய் (இந்திய நாணயம்) – தமிழ் விக்கிப்பீடியா
  3. Facts About Rupee and Coins | My India
  4. Indian rupee Facts for Kids
  5. Interesting facts about Coinage and Currency notes in India
  6. Reserve Bank of India
  7. Rupee
  8. Story behind Indian Rupee
  9. What is the brief history of the Indian rupee?

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இந்தியா, வரலாறு and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to இந்திய ரூபாயின் வரலாறு

  1. தொகுப்பு மிகவும் அற்புதம்…

    தலைவரே… நன்றி…

    Like

  2. அடேங்கப்பா பிரமிப்பான தகவல்கள் நண்பரே மிக்க நன்றி.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.