புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் நார்த்தாமலை, செவலூர் மலை மற்றும் அன்னவாசல் மலை ஆகிய மலைகளும் (Hills) தனிக்குன்றுகளும் (Knolls) ஆங்காங்கே காணப்படுகின்றன.. இங்கிருந்து நிலப்பரப்பு தட்டையாக கிழக்கு நோக்கிச் சரிகிறது. கிழக்கில் கழிமுகங்களும் நீண்ட கடற்கரையும் அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருங்கற்கால ஈமக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமணர்களின் தொன்மைமிக்க பல நினைவுச் சின்னங்கள் இந்த மாவட்டத்தில் சிதறிக் கிடக்கின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள சோழர்கள் – பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த கருங்கற்றளிகள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒரே பதிவில் இந்த மாவட்டத்தின் சிறப்புகளைப் பதிவு செய்வது மிகவும் கடினமான பணி. இதன் காரணமாகவே இந்தப் பதிவு சற்று விரிவாக அமைந்துள்ளது. .
அமைவிடம்
திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பகுதிகளைப் பிரித்தெடுத்து புதுக்கோட்டைக் கோட்டத்துடன் இணைத்து, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயரில் தனி மாவட்டம் ஜனவரி 14, 1974 ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் புவியிடக் குறியீடு அட்சரேகை 9° 30′ 0” N (9.50′) மற்றும் 10° 24′ 0” N (10.40′) க்கு இடையேயும், தீர்க்கரேகை 78° 15′ 0” E (78.25′) மற்றும் 79° 9′ 0” E (79.15′)க்கு இடையேயும் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பன்னிரெண்டு வட்டங்களைக் (Taluk) கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பளவு 4663 சதுர கி.மீ. ஆகும். 2011 மக்கள் தொகை கணெக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 16,18,345 ஆகும்.
Pudukkottai District Map
வரலாறு
புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்றுக்கு முந்தைய மனிதனின் வாழ்விடமாக இருந்துள்ளதை, குருவிக்கொண்டான்பட்டி என்ற ஊரில் கண்டறியப்பட்ட, இரண்டு இலட்சம் ஆண்டுகள் பழமையான, கல்லாயுதம் நிரூபித்துள்ளது.
தொல்லியல் ஆய்வுகள்
பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் ஒன்று 2012 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. கோட்டைச் சுவருக்கு வெளியே உள்ள வட்டப்பாறையில், 2500 ஆண்கடுளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும், நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண் வார்ப்புக்குழாய்களும் உருக்கு கலன்களும் கண்டறியப்பட்டுள்ளன.

பொற்பனைக்கோட்டை, இரும்பு உற்பத்தி – குழிகள்
பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்
இம்மாவட்டத்தில், பொதுவாக நீர்வளங்களுக்கு அருகில், மிக அதிகமான கல்வட்டங்கள் (Cairn Circles), கல்வட்டத்துடன் கூடிய கல் பதுக்கைகள் (Cairn Circles with Cist), கல்திட்டைகள் (Dolmen) போன்ற பெருங்கற்காலப் ஈமக்குழிகள் (Megalithic Burial Sites) கண்டறியப்பட்டுள்ளன. புதைத்தல் (Grave burial), தாழியில் கவித்தல் (Urn burial) ஆகிய சவ அடக்க முறைகள் இங்கு இருந்துள்ளன.
சுடுவோர், இடுவோர், தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
(மணிமேகலை சக்கரவாளக்கொட்டம் உரைத்த காதை 6-11-66-68)
மணிமேகலைக் காப்பியம் ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.
Image: Ammachatram submitted by motist
கல்வட்டங்கள் (Cairns Circle)
அம்மாசத்திரம், அன்னவாசல், மேலூர், நாரங்கியன் பேட்டை, புத்தம்பூர், சத்தியமங்கலம், தேக்காட்டூர், திருக்கட்டளை, வடுகபட்டி, வதனக் குறிச்சி, விலாப்பட்டி ஆகிய இடங்களில் வரலாற்றுக்கு முந்தைய ஈமப் புதைகுழிகளும் (Pre-historic grave burials), அம்புராப்பட்டி, சொக்கனாதப்பட்டி, கீழையூர், முத்தம்பட்டி, பெருங்களூர், பேயல், சித்தன்னவாசல், தயினிப்பட்டி, திருப்பூர் ஆகிய இடங்களில் கல்திட்டைகளும் (Dolmens), சேந்தக்குடி, செங்களூர் போன்ற இடங்களில் கல்வட்டங்களோடு ஈமத்தழியில் அடைத்துப் புதைத்த குழிகளும் (Urn burials and Cairns) கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் கால அளவீடு கிமு 1 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 1 ஆம் நூற்றாண்டு வரை ஆகும். பெருங்கற்கால அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி, மட்கலன்கள், அணிகலன்கள் போன்றவற்றை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
சங்ககாலத்தில் புதுக்கோட்டை மாவட்டம்
இம்மாவட்டப்பகுதி சங்ககாலம் முதலே சிறப்புற்று விளங்கியது. தமிழ்நாட்டின் பன்னிரு நிலங்களுள் புதுக்கோட்டைப் பகுதிக்குப் பன்றி நாடு என்று பெயர் பெற்றிருந்ததாக ஒரு பழம்பாடல் குறிப்பிடுகிறது. “ராஜராஜ வளநாட்டு பன்றியூர் அழும்பில்” என்று பிற்காலச் சோழர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. பன்றிநாடு, கோனாடு, கானாடு என்ற இரு பிரிவுகளுடன் திகழ்ந்தது., உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் ஆகிய ஐந்து கூற்றங்களாகவும் பன்றிநாடு பிரிக்கப்பட்டிருந்தது.
ஒல்லையூர் கூற்றத்தில் இருந்த ஒல்லையூரை வெற்றி கொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் , இவன் மனைவி பெருங்கோப்பெண்டு ஆகியோர் பற்றி புறநானூறு பாடல் 71, 246, 247 அகநானூறு பாடல் 25 ஆகிய சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் என்ற சங்கப் புலவரும் இந்த ஊரைச் சேர்ந்தவராவார். அலும்பில் (அம்புக்கோயில்), ஆவூர் (சங்கப்புலவர்கள்: ஆவூர் கிழார் மற்றும் ஆவூர் மூலம் கிழார்), எரிச்சலூர் (இன்றைய எரிச்சி கிராமம்), ஒலியமங்கலம், பறம்புமலை (பிரான்மலை) ஆகிய ஊர்களும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாநிலத்தை ஆண்ட கோமரபுகள் (Dynasties)
பாண்டியா்கள், சோழா்கள், பல்லவா்கள், நாயக்கா்கள், இருக்கு வேளிர், முத்தரையா், விஜயநகர மன்னா்கள் மற்றும் ஹோய்சாளகள் போன்ற அரச வம்சங்கள் புதுக்கோட்டை பகுதியை ஆட்சிபுரிந்துள்ளனர். பின்னர் தொண்டைமான் வம்சத்தவர் ஆட்சி தொடர்ந்தது. தொண்டைமான் வம்ச மன்னர்களுள் முதல் மன்னரான இரகுநாத தொண்டைமான் (கி.பி. 1686 – 1730), சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த இடத்தில் ஒரு புதிய நகரை உருவாக்கி “புதுக்கோட்டை” என்று பெயர் சூட்டினார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர் என்று தொண்டைமான்களின் வரலாறு சொல்கிறது.
புதுக்கோட்டை சமஸ்தானம்
புதுக்கோட்டை சமஸ்தானம், கி பி 1686 முதல் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து தன்னாட்சியாக செயல்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி.1800 ஆம் ஆண்டு முதல் 1948 மார்ச்சு 3ஆம் தேதி வரை ஒரு சமஸ்தானமாகச் செயல்பட்டது. பத்துத் தொன்டைமான் அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.

புதுக்கோட்டை தர்பார் ஓவியம்
தொண்டைமான்கள் தெலுங்கு மொழியை ஆதரித்தனர். ஆகையால் தெலுங்கு மொழியில் பல காவியங்கள் எழுதப்பட்டன. இவர்கள் ‘ தசரா’ பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினர். இது பத்து நாட்களுக்கு நடைபெற்றது.
ரகுநாதராயத் தொண்டைமான் (கிபி 1686 – 1730 வரை) குடுமியான் மலை குகைக் கோயிலில் உள்ள மண்டபத்தைக் கட்டினார். மேலும் இவர், ஆவூரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் கட்ட உதவினார். காட்டுபாவா பள்ளிவாசல் ஒன்று இவர் காலத்தில் கட்டப்பட்டது.
இம்மன்னர்கள் தங்கள் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும் தெலுங்கில் “விஜய” என்றும் பொறித்த ‘புதுக்கோட்டை அம்மன் காசு’ அல்லது ‘புதுக்கோட்டை அம்மன் சல்லி’ என்ற பெயரில் சொந்தமாக ஒரு நாணயத்தை கி.பி. 1738 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டுக்கொண்டார்கள். 1948 ஆம் ஆண்டுவரை இது புழக்கத்தில் இருந்துள்ளது.
அம்மன் காசு, புதுக்கோட்டை
1898ஆம் ஆண்டு இவ்வூரில் நகர்மன்றம் கட்டப்பட்டது. 1928 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை நகரம் முழுமையாக மின்சார வசதி பெற்றது. 1929.ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் தொடங்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு புதிய அரண்மனை கட்டப்பட்டு மன்னர் குடியேறினார்.

புது அரண்மனை, புதுக்கோட்டை
சமணர் நினைவுச் சின்னங்கள்
கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 13 நூற்றாண்டு வரை, 1500 ஆண்டுகளுக்கும் மேலாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியதாக தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், முழு சமண புடைப்புச் சிற்பங்கள், உடைந்த சமணச் சிலைகள், சிதைந்த சமணக் கோவில்கள், சமணத் துறவிகளின் வாழ்விடங்கள் (Monastries), கல்வெட்டுகள் ஆகிய சமணச் சின்னங்கள் (Jain Monuments) சிதறிக் கிடக்கின்றன. தென்னிந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் (ASI) பராமரிக்கப்படும் சமண நினைவுச் சின்னங்கள் இந்த மாவட்டத்தில்தான் அதிகம். தமிழ் நாட்டில் உள்ள 42 சமணர் நினைச் சின்னங்களுள் 30 சின்னங்கள் புதுக்கோட்டைப் பகுதியில் உள்ளன.
சித்தன்னவாசல்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சித்தன்னவாசல் அமைந்துள்ளது. சுமார் 70 மீட்டர் உயரம் கொண்ட குன்றில் சமணர்களின் படுக்கைகளும், குடைவரையும் ஓவியங்களும் காணப்படுகின்றன.
ஏழடி பட்டம் என்ற சமணர் இயற்கைக் குகைத் தளத்தில் 17 சமணர் படுக்கைகளும் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டும் காணப்படுகின்றன. “எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்” என்பது கல்வெட்டு வரியாகும்.

ஏழடிப்பட்டம்
குகைப் பகுதியின் மேற்கூரையில் தீட்டப்பட்டுள்ள பல்வேறு ஓவியங்களை திரு. நா.அருள்முருகன் கண்டறிந்துள்ளார். இவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என்று இவர் பெயரிட்டுள்ளார்.

சமணர் குடைவரை
அறிவர் கோயில்: இங்குள்ள அறிவர் கோயில் என்னும் சமணர் குடைவரை முற்பாண்டியர் காலத்தில் (கி.பி: 7 ஆம் நூற்றாண்டு) அகழப்பட்டதாகும். முற்காலப் பாண்டியமன்னன் அவனிபாதசேகரன் ஸ்ரீவல்லபனுடைய (கி.பி.815-862) கல்வெட்டு மூலம் இளங்கெளதமன் என்னும் மதுரை ஆசிரியரால் இக்கோயில் கருவறையைச் செப்பனிட்டமை மற்றும் முகப்பு மண்டபத்தை கட்டியமை ஆகிய திருப்பணிகளைப் பற்றி அறிய முடிகிறது.
அறிவர் கோயில் ஓவியங்களான யானை, மீன், அன்னப் பறவை, தாமரைத் தடாகம், மான், நடன மாது, அரசன், அரசி ஆகியன சித்தன்னவாசல் ஓவியம் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்கவை ஆகும். இவை இளங்கௌதமன் என்பவனால் கி.பி. 9-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நார்த்தாமலையின் மேலமலை சமணர் குடகு குகைத்தளம் பிற்காலத்தில் விஷ்ணு தலமாக மாற்றப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள பிற சமணச் சின்னங்கள் இவை: (பட்டியல்)
ஆலங்குடிபட்டி (சமண தீர்த்தங்கரர் சிற்பம் ), ஆலத்தூர் (சமணச் சிற்பம்), அம்மாசத்திரம் (இரண்டு குடைவரைகள், இரண்டு புடைப்புச் சிற்பங்கள், சிதைந்த கல்வெட்டு), அன்னவாசல் (தென்னந்தோப்பில் இரண்டு சமணர் சிற்பங்கள்), செட்டிபட்டி (சிதைந்த சமணர் கோவில், சமண தீர்த்தங்கரர் சிற்பம், கல்வெட்டு), கண்ணங்கரகுடி (சமண தீர்த்தங்கரர் சிற்பம் ), கண்ணங்குடி (சமணச் சிற்பம், கல் சிங்கம், சமணக்கோவிலின் அடித்தளம்), குளத்தூர் (குடகுமலையில் எட்டு இயற்கை குகைகள், சமண சிலைகள் மற்றும் கல்வெட்டுகள்,), லெட்சுமணப்பட்டி (சமண சிலைகள் மற்றும் சமண கோவிலின் எச்சங்கள்), மங்கதேவன்பட்டி (சமணர் கோவில்), மேலூர் (சமண தீர்த்தங்கர சிலை மற்றும் பழைய சமண கோவிலின் நினைவுச்சின்னங்கள்), மைலாபட்டி (i) சமண தீர்த்தங்கரர் உருவம் (Ii) கோவிலின் எச்சங்கள்), நத்தம்பண்ணை (ஜெயின் உருவம் மற்றும் சடையம்பாறை உச்சியின் தெற்கே உள்ள கல்வெட்டு), புலியூர் (சமண தீர்த்தங்கர உருவம்) , புட்டம்பூர் (சமண உருவம், மொட்டைப் பிள்ளையார்), செம்பட்டூர் (சமண மேடு, சமண உருவங்கள், பிற சிலைகள் மற்றும் சிங்கத் தூண்கள்), செம்பூதி (ஆண்டார்மடம் சமணக் குகைத்தளம்), சித்தன்னவாசல் (அகழப்பட்ட சமணக் குடைவரை, சமணர் படுக்கைகள் கொண்ட இயற்கைக் குகைத்தளம் – எழடிப்பட்டம்), வீரகுடி (சமண தீர்த்தங்கரர் சிற்பம்), செட்டிப்பட்டி (சமண தீர்த்தங்கர உருவம் மற்றும் தமிழிக் கல்வெட்டு), செட்டிப்பட்டி (பாழடைந்த சமண கோயில்), திருப்பூர் (புதுக்குளத்தின் நீர்வழியில் சமண உருவம்), தேக்காட்டூர் (பீடத்தில்அமர்ந்த நிலையில் சமணத் தீர்த்தங்கர உருவம் கிழக்கு ஏரிக்கரை மீது உள்ளது),

அன்னவாசல் சமணர் சிலை
புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள்
திருகோகர்ணம் குடைவரைக் கோவில்
புதுக்கோட்டை நகரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் திருகோகர்ணம் ஊர் அமைந்துள்ளது. முதலாவது மகேந்திர வர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோவில் உள்ளது. இது கி.பி, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். மலைச்சரிவில் உருவாக்கப்பட்ட கருவறையில் கோகர்னேஸ்வரர் சிவலிங்க வடிவில் காட்சிதருகிறார். நான்கு தூண்கள் தாங்கும் முன்மண்டபத்தின் இடப்புறச் சுவரில் விநாயகர், இடப்புறச் சுவரில் கங்காதரமூர்த்தி ஆகிய தெய்வ உருவங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. பாறைச்சரிவை ஒட்டி ஏழு பெண் தெய்வத் திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. தொண்டைமான்கள் ஆட்சியில் சித்திரை பெருவிழா, ஆடிபூரம் நவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குன்றாண்டார் கோயில்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் குன்றாண்டார் கோயில் (குன்னாண்டார் கோயில்) அமைந்துள்ளது. கி.பி.775 ஆண்டில் நந்திவா்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில்(சிவன்கோயில்) இங்கு அமைந்துள்ளது. மலையின் மேல் சிறிய முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள கல்யாண மண்டபம் தோ் போன்ற அமைப்பில் குதிரைகள் பூட்டிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
குடுமியான்மலை
புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது. திருநாலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இந்த ஊர் இருந்ததாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ள தொனமையான ஊர் இதுவாகும். குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் குடுமியான்மலைக் கோவில் என்ற கட்டுமானக் கோவில் அமைந்துள்ளது. கிழக்குச் சரிவில் அகழப்பட்ட, ஒரு கருவறையும் முன்மண்டபமும் கொண்ட குடைவரைக்கோவில் திருமூலட்டானத்து எம்பெருமானான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. துவாரபாலர்கள், விநாயகர் ஆகிய புடைப்புச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரையை ஒட்டி ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. இங்கு 120 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் கி..பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிவாதினி என்னும் இசைக்கருவியோடு (7 நரம்புகள் கொண்ட வீணை) தொடர்புடையதாகக் கருதப்படும் இசைக்கல்வெட்டு .திருமெய்யம், மலையடிபட்டி ஆகிய ஊர்களில் பொறிக்கப்பட்டுள்ள இசைக்கல்வெட்டுகளுடன் தொடர்புடையது. மலைமீது அமைந்துள்ள மலைக்கோவிலில் சிவன் பார்வதி காளை மீதமர்ந்து காட்சி தருகின்றனர். 63 நாயன்மார் சிற்பங்கள் உள்ளன.
திருமயம் குடைவரைகள்: திருமெய்யர் குடைவரை மற்றும் சத்தியகிரீஸ்வரர் குடைவரை
புதுக்கோட்டை காரைக்குடி சாலையில், புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருமயம் அமைந்துள்ளது. திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச்சரிவில் சத்யகிரீஸ்வரருக்கும் (சிவன்) திருமெய்யருக்கும் (பெருமாள்) குடைவரை குகைகோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துளது. இரண்டு குடைவரைகளுள் ஒன்று திருமெய்யர் (பெருமாள்) குடைவரைக் கோவிலாகும். திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்யகிரீஸ்வரரையும், திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்யகிரீஸ்வரர் கோவிலுக்கும் திருமெய்யர் – சத்தியமூர்த்திக் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.
விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி என்ற முத்தரைய அரசியால் திருமெய்யர் குடைவரை முகப்பையொட்டி தூண்கள் அமைக்கப்பட்டுக் கோவிலாக மாற்றப்பட்டதாகக் கே.ஆர்.ஸ்ரீநிவாசன் கருதுகிறார்.
வைணவர்களால் மிகவும் போற்றி வணங்கப்படும் 108 திவ்யதேசங்களுள் 97வது திவ்யதேசக் கோவிலாகும். பாண்டியநாட்டில் அமைந்துள்ள 18 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று. வைணவர்கள் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்து வணங்கும் திருமயம் ஆதி அரங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தைவிடப் பழைமையானது இக்கோவில்.

திருமெய்யர், திருமயம்
இங்குப் பள்ளி கொண்ட பெருமாள் என்ற யோகசயன மூர்த்தி அனந்தசயனநிலையில் காட்சி தருகிறார். ஆதிசேஷன் என்ற பாம்பணையில் மேற்கில்தலைவைத்துக் கிழக்கில் காலை நீட்டியபடி தெற்கு நோக்கி அரிதுயில் கொள்ளும் பெருமாளின் உருவம் சுமார் 30 அடி அல்லது 9 மீட்டர் நீளத்தில் குகை முழுதும் வியாபித்துள்ளது. (மேலதிக விவரங்களுக்கு)

சத்தியகிரீஸ்வரர் கோவில், திருமயம்
சத்தியகிரீஸ்வரர் (சிவன்) குடைவரை சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்குடைவரை திருமயத்தில் அமைந்துள்ள இரண்டு குடைவரைகளுள் காலத்தால் முந்தியது என்று கருதப்படுகிறது. இதன் காலம் 7ஆம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்றும், குடுமியான்மலை மற்றும் திருக்கோகர்ணம் குடைவரைகளின் காலத்தையொட்டிக் குடையப்பட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
சத்தியகிரீஸ்வரர் குடைவரைக் கோவிலில் முகப்பு, முகமண்டபம் மற்றும் கருவறை ஆகிய உறுப்புகள் உள்ளன. பிற்காலத்து இணைப்பாகத் தூண்களுடன் கூடிய மண்டபங்கள், பரிவார தேவதைகளுக்கான கருவறைகள் மற்றும் இராஜகோபுரம் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சத்தியகிரீஸ்வரர் கோவில் இராஜகோபுரம் பிற்காலத்துப் (13ஆம் நூற்றாண்டு) பாண்டியர்களின் கலைப்பாணியாகும்.
இந்த மண்டபத்தின் வடக்குப்புறத்தில் மெய்யமலையின் பாறை அமைந்துள்ளது. இந்த பாறைச் சுவற்றில்தான் அழிக்கப்பட்ட பரிவாதினி என்னும் இசைக்கருவியோடு (7 நரம்புகள் கொண்ட வீணை) தொடர்புடையதாகக் கருதப்படும் இசைக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இசைக்கல்வெட்டின் மேல் அப்பண்ணா தண்டநாயகர் தலையேற்ற மெய்யம் சபையின் (தீர்ப்பாயத்தின்) தீர்ப்பும் பொறிக்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் நீளமான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. (மேலதிக விவரங்களுக்கு)
மலையடிப்பட்டி ஆலத்தூர் தளி மற்றும் ஒளிபதி விஷ்ணு கிருகம்
மலையடிப்பட்டி கீரனூர் கிள்ளுக்கோட்டை சாலையில், குளத்தூர் வட்டத்தில், அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலையடிப்பட்டியில், திருமயத்தில் உள்ள குடைவரைகளைப் போன்றே ஒரே பாறையில் இரண்டு குடைவரைக் கோயில்களை அகழ்ந்துள்ளனர்..குன்றின் கிழக்குப் பகுதியில் அகழப்பட்டுள்ள ஆலத்தூர் தளி என்ற குடைவரை சிவனுக்கும், குன்றின் மேற்குப் பகுதியில் அகழப்பட்டுள்ள ஒளிபதி விஷ்ணு கிருகம் என்ற குடைவரை விஷ்ணுவிற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இரண்டு குடைவரைகளும் வடக்கு நோக்கிய நுழைவாயில்களைக் கொண்டுள்ளன. மகிஷாசுரமர்த்தினியின் புடைப்புச் சிற்பம் கண்ணைக் கவர்கிறது. சப்தமாதர்களின் குறுஞ்சிற்பங்கள் கொள்ளை அழகு. விஷ்ணு கிருகத்தின் சுவர்கள் மற்றும் கூரைகளில் கண்கவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தேவர்மலை குடைவரை
புதுகோட்டையிலிருந்து நமனசமுத்திரம் சாலையில் சென்று அங்கிருந்து பொன்னமராவதி பேரையூர் சாலையில் பயணித்தால் பேரையூர் வரும். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் தேவர்மலை அமைந்துள்ளது. குடைவரை அமைப்பின் அடிப்படையில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்குடைவரையில் கருவறை முன்மண்டபம் ஆகிய இரண்டு உறுப்புகள் இடம்பெற்றுள்ளன. குகைச் சுவர்களின் கோஷ்டங்களில் பிள்ளையார், ஆடவர் (சிவன்), முனிவர், பெருமிழலைக் குறும்பர் ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு கல்வெட்டு நிலக்கொடை குறித்துப் பதிவு செய்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டக் கற்றளிகள்
நார்த்தாமலை: திருச்சிராப்பள்ளி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் நார்த்தாமலை அமைந்துள்ளது. பல்லவர்,தஞ்சாவூர் முத்தரையர் மற்றும் சோழர் காலத்தில்வணிகர் குழுவினர்களின், குறிப்பாக, ‘நானாதேசத்து ஐநூற்றுவர்’ என்கிற வணிகர் குழுவினரின், தலைமையகமாக விளங்கியுள்ளது. விஜயாலய சோழன் தஞ்சாவூர் முத்தரையர்களிடமிருந்து நார்த்தாமலையை வென்றுள்ளான்.
மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை ஆகிய 9 குன்றுகளால் இவ்வூர் அமைந்துள்ளது. மேலமலை, மேற்கு மலை என்றும் சமணர் மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் தென்கிழக்கில் காப்புக்காடு அமைந்துள்ளது.

விஜயாலய சோழீஸ்வரம்
மேலமலை மீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கற்றளியைக் காணலாம். இக்கோவிலை முத்தரையர் மன்னன் சாத்தன் பூதி கட்டியதாகவும் மல்லன் விடுமன் என்பவன் மழையினால் இடிந்த கோவிலை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்ததாகவும் கோவில் வெளிப்புறச் சுவர் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. திராவிடக் கோவில் அமைப்புகளில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோவில் விமானமும் கருவறையும் வட்டவடிவில் அமைந்துள்ளன. கருவறையில் சிவலிங்கம் உள்ளது. துவாரபாலர்கள் சிற்பங்கள் அழகு மிக்கவை. அர்த்த மண்டபத்தின் சுவர்களில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறையைச் சுற்றி எட்டு துணை ஆலயங்கள் உள்ளன.
கடம்பர் மலைக்குன்றில். மலைக்கடம்பூர் தேவருக்கு (சிவன்) முதலாம் இராஜராஜன் கோவில் எடுத்துள்ளான். நகரீஸ்வரம் சிவன் கோவிலை மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். குன்றின் அடிவாரப்பகுதியில் பாறை குடையப்பட்டுள்ளது. இங்கு பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மூவர் கோவில், கொடும்பாளூர்
கொடும்பாளூர் திருச்சிராப்பள்ளி- மதுரை சாலையில் அமைந்துள்ள நினைவுச்சின்னம் இதுவாகும். சிலப்பதிகாரத்தில் பேசப்படும் ஊர் கொடும்பாளூர். கி.பி. 6 – 9 நூற்றாண்டு வரை இப்பகுதி இருக்கு வேளிர்களின் ஆட்சியில் இருந்துள்ளது. இருக்குவேளிர்களின் தலைநகரமாக இருந்த காரணத்தால் இருக்குவேளூர் என்ற பெயரும் இருந்துள்ளது.சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகை, சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் ஆகிய பக்தி இலக்கியங்களில் இவ்வூர் ‘கோனாட்டுக் கொடிநகரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. கொடும்பாளூர் திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் இவ்வூருடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
இவ்வூரில் அழகிய கோவில்கள் அமைந்துள்ளன. இவை தமிழகத்தின் மிகச்சிறந்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. இரண்டு நினைவுச்சின்னங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. இவை புகழ்பெற்ற 1. முசுகுந்தேஸ்வரர் கோயிலும், 2. மூவர் கோயிலும் ஆகும்.. ஐவர் கோயிலின் அடித்தளமும் இங்கு உள்ளது. மற்றொரு சிவன் கோவிலும் இங்கு உள்ளது. இவைசோழர் பாணியில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் ஆகும். மூவர் கோயிலைக் கட்டியது பெருவீரனான பூதி விக்கிரம கேசரி ஆவான். மூவர் கோவில் கட்டாயம் பார்க்கவேண்டிய நினைவுச் சின்னம் ஆகும். .
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் ஆலங்குடி வட்டத்தில் உள்ளது. இக்கோவில் கி.மு. 874 ஆம் ஆண்டில் முதலாம் ஆதித்ய சோழனால், கருவறையைச் சுற்றி, துணை சன்னதிகளுடன், கட்டப்பட்ட சிவாலயம் ஆகும். இங்குள்ள கல்வெட்டுகள் இக்கோவிலின் வரலாற்றை அரிய உதவுகின்றன.
மடத்துக்கோயில் அல்லது திருப்பெருமான் ஆண்டார் கோயில். புதுக்கோட்டையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இது சோழர் காலத்துக் கோயில் ஆகும். கருங்கற்களாலான முன்மண்டபத்தைச் சோழர்களும், சிவப்புக் கற்களாலான உள்மண்டபத்தை விஜயநகர அரசர்களும் கட்டியுள்ளனர். கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் முழுமையான கலை நயத்தை வெளிப்படுத்துகின்றன. சோழர், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழையூர் (காளியாப்பட்டி) சிவன் கோயில்:, கி.பி. 9 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய கருங்கல் கோவில் கட்டுமானம். கொடும்பாளூர் மூவர் கோவிலைப் போன்றே களியபட்டியில் கருங்கற்றளி அமைந்துள்ளது. இக்கருங்கற்றளி சதுர வடிவிலான கருவறையும் நாற்கர ஏகதள விமானமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மகாநசிகைகள் வெறுமையாக உள்ளன. இந்தச் சோழர் கலைப்பாணியில் அமைந்த கட்டுமானக் கோவில் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இக்கோவிலில் முன்மண்டபம் இல்லை. இவ்வூர் குன்றாண்டார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது.
கண்ணனூர் பாலசுப்பிரமண்யர் கோயில் திருமயம் வட்டத்தில் ராங்கியம் அருகே இக்கோவில் அமைந்துள்ளது. இது அதிஸ்டானம் முதல் சிகரம், ஸ்தூபி வரை எழுப்பப்பட்ட கருங்கல் கட்டுமானம் (கருங்கற்றளி) ஆகும். அரைத்தூண்கள், கொடிக்கருக்கு, பூதகணங்கள், கொடுங்கை போன்றவை சோழர-பாண்டியர் பாணியில் அமைந்த கட்டடக்கலை அம்சங்கள் இக்கோவில் விமானத்தின் வெளிப்புறச் சுவர்களிலும், ஏகதள விமானத்தின் கிரீவம், சிகரம் பகுதிகளில் காணப்படுகின்றன. மூலவர் பாலசுப்ரமணியர் யானைமீது அமர்ந்து காணப்படுவது சிறப்பு. முதலாம் ஆதித்ய சோழன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கோவிலுக்கு வழங்கப்பட்ட நிவந்தம் குறித்த ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
ஏனாதி சிவன் கோவில் திருமயம் வட்டத்தில் பொன்னமவராவதி அருகே இக்கோவில் அமைந்துள்ளது. ஏகதள விமானமும் முன்மண்டபமும் கொண்ட சிறிய அளவிலான கருங்கற்றளி ஆகும். விமானத்தின் வெளிப்புறச் சுவர் . அரைத்தூண்களுடன் கோஷ்டங்களும் அழகணிகளும் இல்லாமல் வெறுமையாக உள்ளது. பாண்டியர்களின் கலைப்பாணியில் அமைக்கப்பட்ட கோவில்.
பனங்குடி அகத்தீஸ்வரம் சிவன் கோவில் புதுக்கோட்டை அன்னவாசல் சாலையில் சித்தன்னவாசலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஏகதள விமானமும் முன்மண்டபமும் கொண்ட கருங்கற்றளி ஆகும். சதுர வடிவிலான கோவில் கருவறையும் நாற்கர விமானமும் . சோழர் காலத்துக் கட்டடக் கலையைப் பறைசாற்றுகின்றன. கோஷ்டங்களை இந்திரன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிராம்மா ஆகியோர் அலங்கரிக்கின்றனர். சோழர்கள் காலத்தில் ஜேஷ்டாதேவி (மூதேவி) பரிவார தேவதையாக வழிபடப்பட்டுள்ளார்.
குளத்தூர் சுந்தர சோழீஸ்வரர் கோவில் குன்னாண்டார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள பாழடைந்த கருங்கற்றளி ஆகும். சுந்தர சோழீஸ்வரா என்பது கல்வெட்டுகளில் காணப்படும் பெயராகும். இக்கோவில் வளாகத்தில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் 30 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு காலத்தால் முந்தையது ஆகும். இக்கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டதாக இக்கல்வெட்டு சொல்கிறது. இக்கோவில் விமானமும் அர்த்தமண்டபமும் இக்காலத்தைச் சேர்ந்தனவாகும். இங்குள்ள மகாமண்டபம் சற்று பழமையானது.
விசலூர் வாசுகீஸ்வரமுடையா மகாதேவர் கோயில்குன்னாண்டார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஏகதள விமானம் கொண்ட கருங்கற்றளி ஆகும். சோழர் கல்வெட்டுகளில் வாசுகீஸ்வரமுடைய மகாதேவர் என்றும் பாண்டியர் கல்வெட்டுகளில் வரதகுசுரமுடையா-நயனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. சதுர வடிவிலான கோவில் கருவறையும் நாற்கர விமானமும் . சோழர் காலத்துக் கட்டடக் கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது. மகாநசிகைகளில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு பிரம்மா ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
திருப்பூர் சிவன் கோவில் குன்னாண்டார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள சதுர வடிவிலான ஏகதள விமானமும் சதுர வடிவிலான கோவில் கருவறையும் கொண்ட கருங்கற்றளி ஆகும்.
பிற கோவில்கள்
ஆவுடையார்கோயில்
திருப்பெருந்துறை என்ற ஆவுடையார்கோயில் இம்மாவட்டத்தின் ஆவுடையார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற தலமாகும். இக்கோவிலிலே மூலவர் ஆத்மநாத சுவாமிக்கு உருவம் இல்லை, நந்தி இல்லை, கொடிமரம் இல்லை. பலி பீடம் இல்லை. மாணிக்கவாசகர் இங்கு சோதியில் கலந்துள்ளார் என்பதால் தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதியில்லை..கோயிலின் தாழ்வாரத்தில் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் கொண்ட வியக்கத் தக்க கொடுங்கைகள் புகழ்பெற்றவை. இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று சிற்பிகள் தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவது மரபு. 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலா
புதுக்கோட்டை அருங்காட்சியகம்
புதுக்கோட்டை அருங்காட்சியகம் திருக்கோகர்ணத்தில் 1910 ஆம் ஆண்டில் தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பட்டு, தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் நடைபெற்றுவரும் பழமையான அருங்காட்சியகம் ஆகும். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இதுவாகும். (மேலதிக விவரங்களுக்கு)
திருமயம் மலைக்கோட்டை
புதுக்கோட்டை காரைக்குடி சாலையில், புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருமயம் அமைந்துள்ளது. திருமயத்தை சென்றடையும் முன்பே திருமயம் மலைக்கோட்டையைக் காணலாம். மலைக்கோட்டை வெளிப்புற மதிலில் அமைக்கப்பட்டுள்ள பைரவர் கோயில் முன் பல கார்கள் நின்று செல்வது வாடிக்கை. மலைக்கோட்டைக்குப் போவதற்கு கோட்டையின் மேற்கு வாசலில் நுழைவாயில் உள்ளது.
கிழவன் சேதுபதி என்று பலராலும் அறியப்பட்ட விஜயரகுநாத சேதுபதி இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டுகளில் இந்நகரம் இராமநாதபுரம் சேதுபதிகளின் வடக்குப் பிரதேசங்களின் புறக்காவல் நிலையமாக (northern outpost of the territories) மாறியது. இந்தப் பிரதேசங்களைப் பல்லவராயர்கள் (Pallava-rayar-s) நிர்வகித்தனர். எதிரிகளிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாக்க திருமயம் கோட்டை கட்டப்பட்டது. வலிமை மிக்க பீரங்கிகள் இக்கோட்டையின் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்பட்டன. கி.பி 1686 ஆம் ஆண்டில் கிழவன் சேதுபதி தன்னுடைய மைத்துனர் இரகுநாத ராயத் தொண்டைமானுக்குப் புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பரிசாக வழங்கினார். இதன் பின்னர் திருமயம் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒரு பகுதியாயிற்று.
பொற்பனைக்கோட்டை
கி.பி. 13-14 ஆம் நூற்றண்டில் பாணர்களால் கட்டப்பட்ட பொற்பனைக்கோட்டை, என்ற சிதிலமடைந்த செங்கல் கோட்டை, புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள பனைமரம் பொன் பழம் கொடுத்ததாம் (பொன் + பனைக் கோட்டை). பொன் பரப்பினான்பட்டி என்ற பெயரையும் பொற்பனைக் கோட்டையுடன் தொடர்பு படுத்துகிறார்கள். புகைப்படங்கள்:
புகைப்படங்கள் – நன்றி My Travelogue – Indian Travel Blogger, Heritage enthusiast & UNESCO hunter!
குறிப்புநூற்பட்டி
- திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்
- திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோவில் மற்றும் மலைக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம் – தமிழ் விக்கிப்பீடியா
- புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்
- Balasubramanayam, S R (1965). Early Chola Art Part 1. Asia Publishing House. Mumbai.
- Jain vintages in Pudukkottai Slideshare
- My Travelogue – Indian Travel Blogger, Heritage enthusiast & UNESCO hunter!
- R.K. Lakshmi
- Indian History and Architecture
- List of Monuments of National Importance in Pudukkottai district – Wikipedia
- Megalithic burial sites of Tamil Nadu – induscivilizationsite – The first website
தமிழகத்தில் அதிகமான வரலாற்றுசிறப்புமிக்க இடங்களைக் கொண்ட ஊர்களில் ஒன்றான புதுக்கோட்டையைப் பற்றிப் பகிர்ந்துள்ள விதம் மிகவும் அருமை. வழக்கம்போல முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையைப் போலத் தந்துள்ளீர்கள். இளைஞர்களும், ஆய்வாளர்களும் நீங்கள் எழுதும் முறையைக் கவனிப்பதோடு, கடைபிடிக்கவேண்டும். மனம் நிறைந்த வாழ்ததுகள்.
LikeLike
எல்லா விளக்கங்களுடன் சிறந்த புகைப்படங்களுடனும் தொடர்புள்ள நூல்கள் வரையில் நன்றாக உள்ளது. நன்றி, மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
LikeLike