வளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி

வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தொலைவில் இருக்கும் எதிரியைத் தாக்குவதற்குச் சிறந்த ஆயுதம் இதுவாகும். வளரிக்கு ஒத்த எறிகருவிகளை எரிவளை, திகிரி, வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

மரத்திலும் இரும்பிலும் தந்தத்திலும் செய்து பயன்படுத்தப்பட்ட வளரி எறிகருவியின் வகைகளை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்திலும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் சில அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

 

வளரியின் பண்புகள்

இக்கருவி பொதுவாகத் தட்டையாகவும் (Flat), வளைவுக்கோண (Angle of Curvature) வடிவிலும், ஒருபுறம் கனமாகவும், மற்றொரு புறம் இலேசாகவும், கூர்மையான வெளிப்புற விளிம்புடன், வடிவமைத்தார்கள். இயக்க எதிர்வினையை (Aerofoil) உண்டாக்கியவாறு காற்றில் வேகமாகச் சுழன்று சென்று இலக்கைத் தாக்கும். இலக்கை தாக்கிவிட்டு திரும்பி வரும் வண்ணமும், திரும்பாத வண்ணமும் வளரியை ஏறிய முடியும்.

காற்றில் இயங்க வல்ல ஏரோடைனமிக் பண்புகளுடன் இலக்கு (Target) தொலைவெல்லை (Range), திசைவேகம் (Velocity), தொடக்க எறியியல் (Initial Ballistics), இடைநிலை எறியியல் (Intermediary Ballistics) மற்றும் இலக்கு ஏறியியல் (Terminal Ballistics) ஆகிய பண்புகளையும் கொண்டது. காற்றில் நிலை நிறுத்துவதற்காக (Stabilization) தட்டையான வடிவமைப்பும், வளை கோணமும் (Angle of the curvature), காற்றில் பயணிப்பதற்கான துல்லியமான எடையும், சமநிலைப் புள்ளியும் (Point of Equilibrium), காற்றை எதிர்த்து இலக்கை நோக்கி துல்லியமாகத் தாக்கும் திற்னும் கொண்டது வளரி.

புராண இதிகாசங்களில் வளரி

மகாவிஷ்ணுவின் வலது கையில் ஏந்தி இருக்கும் சக்கரம் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. வெளிப்புற விளிம்பில் கூர்மைப்படுத்தப்பட்ட வட்ட வடிவ சக்கர ஆயுதம் பற்றி ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன. ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். குருச்சேத்திரப் போரில் கிருஷ்ணன் சக்கர ஆயுதத்தை பயன்படுத்திய செய்தியினை மகாபாரதம் குறிப்பிடுகிறது. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் குடியினர் பயன்படுத்திய ஆயுதம் அரை வட்ட வடிவுடைய சக்கரம் (வளரி) ஆகும். சங்ககாலத் தமிழர்களிடையே வழங்கி வந்த வளரி என்னும் ஆயுதமாகும்

ராபர்ட் டேபர்ட்டின் (Robert Tapert) ஜீனா: வாரியர் இளவரசி (Xena: Warrior Princess) ஒரு கற்பனையான பாத்திரம் ஆகும். ஜீனா என்ற பெயர் பண்டைய கிரேக்க புராணங்களிலிருந்து உருவானது. இது புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடர் ஆகும். ஜீனாவின் முக்கிய ஆயுதம் சக்ரம் ஆகும், இந்த ஏறி ஆயுதம் கூரான பல் முனைகள் கொண்டது. இதனை ஜீனா அடிக்கடி போரில் பயன்படுத்தினாள்..

பூமராங்

ஆஸ்திரேலிய பழங்குடியினர் வேட்டையாடுவதற்காகவும் விளையாட்டுப் போட்டிகளுக்காகவும் பொழுதுபோக்காகவும் பூமராங் (Boomerang) என்ற எறிகருவியைப் பயன்படுத்தியுள்ளதை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் அல்லாவா? இந்த பூமராங் வீசியவனைத் தேடித் திரும்ப வந்துவிடும். மரம் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட பூமராங் குறிப்பிட்ட காற்றியக்கவியல் பண்புகளைக் (Aerodynamic Properties) கொண்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் சின்னமாகவும் கருதப்படுகிறது. தற்போது இந்த பூமராங் ஓட்டுப் பலகை (Plywood) மற்றும் பாலிப்ரொப்பிலீன், பாலிப்ரோபீன், கார்பன் ஃபைபர்-வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் ஆகிய பிளாஸ்டிக் பொருட்களால் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

பண்டைத் தமிழர்களின் வளரி

பண்டைத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி பல்வேறு வடிவமைப்புகளை உடையது. வளைந்த இறக்கை வடிவம் (Angled Feather Shaped) அனைத்து வளரி வடிவமைப்புகளிலும் காணப்படுகிறது. மான்வேட்டையில் பயன்படுத்தப்பட்ட வளரி விலங்கினைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. போரில் பயன்பட்ட பட்டையான வளரி எறிகருவிகள் துல்லியமான வடிவமைப்புகளையும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது. தப்பிக்க எண்ணியவாறு ஓடியவரை உயிருடன் பிடிக்க வளரியை எறிவதுண்டாம். போர் வீரர்கள் தங்களுடைய கொண்டையில் வளரியைச் செருகி வைத்திருப்பார்களாம். தாக்க வேண்டிய சமயத்தில் கொண்டையிலிருந்து உருவிய வளரியின் தட்டையான கனமற்ற முனையைக் கையில் பிடித்துத் தோளுக்கு மேலே உயர்த்திப் பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிவதுண்டாம். புதுக்கோட்டை திவானாகிய விஜய இரகுநாத பல்லவராயர் வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியுள்ளார்.

வளரி காற்றில் வேகமாகச் சுழன்று சென்று இலக்கைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடும். திரும்ப வரும் வளரி ஆபத்தானது. எறிந்தவரைத் தாக்க வல்லது. எனவே எறிந்தவர் இதனைக் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

சங்க இலக்கியத்தில் வளரி

குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்

நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;

(புறநானூறு 339 , 4 – 5)

ஆனிரை மேய்க்கும் கோவலர் பூப் பறிக்கும்போது அங்கு மேயும் முயலை நோக்கி அவர்கள் குறுங்கோல் என்னும் வளரியை வீசுவர். அந்த முயல் தப்பி ஒடி அங்குள்ள பரந்த நீர்நிலையில் வாளைமீனோடு சேர்ந்து புரண்டு துள்ளும்.

பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்

சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய

பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!

(புறநானூறு 233, 2 – 4)

அகுதை கூடல் நகரின் அரசன். இவன் ஒரு வள்ளல். அவன் பரிசில் வேண்டுவோருகெல்லாம் யானைகளைப் பரிசாக வழங்கியவன். ஒருமுறை பகைவன் வீசிய சக்கரம் (வளரி?) அவன் மார்பில் பாய்ந்தது எனப் பேசப்பட்டது. அந்தக் காயம் ஆறி அவன் பிழைத்துக்கொண்டான்.

எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்

மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை,

குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன

(புறநானூறு 347, 4 – 6)

அகுதை கூடலை ஆண்டுவந்த குறுநிலத் தலைவன் . இவன் ஒரு வள்ளல். போர்க்கோலம் பூண்டு அவன் சூடிய தும்பைப் பூ வாடியது. அவன்மீது பகைவர் சக்கரம் வீசினர். அது அவன் மார்பில் பட்டு அதன் கூராக்கப்பட்ட முனை முறிந்துபோயிற்று. சக்கர வீச்சால் குழைந்துபோன அவன் மார்பில் அணிந்திருந்த தும்பைப் பூவின் அவன் மார்பில் கமழ்ந்தது.

மறவர்களின் ஒரு பிரிவினரான அகதை மறவர்களின் மூதாதையனாக அகுதை கருதப்படுகிறான். அகுதை மன்னன் ஆண்டுவந்த கூடல் என்பது கூடலூராக இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் திரு.எஸ்.இராமச்சந்திரன் கருதுகிறார். “‘பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன்” என்று எஸ்.இராமச்சந்திரன் விவரிக்கிறார்.

புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,

கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்

வடி நவில் அம்பின் வினையர்

(நற்றிணை-48, 5 – 7)

முல்லை நிலம் பூத்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் காட்டுவழி. இடி போன்ற முழக்கத்துடன் வழிப்பறி மறவர்கள் அங்குத் தோன்றுவர். மின்னல் வேகத்தில் தாக்கும் கோலை உடையவர். கூர்மையான அம்பு எய்வதில் அவர்கள் வல்லவர்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆவணங்களில் வளரி

கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) இந்திய பிரிட்டிஷ் அரசாங்கத்துக் (Indian British Raj) குறிப்புகளில் வளரி பற்றி வியக்கவைக்கும் செய்திகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் விசித்திரமான ஆயுதம் (Strange Weapon) வளரி ஆகும். இரண்டு விதமான வளரி வடிவங்கள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தன. பொதுவாக இவை மரத்தினால் தயாரிக்கப்பட்டவை ஆகும். கனமான மேல்பகுதியும், இலகுவான கீழ்பகுதியும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது வளரி குச்சி ஆகும்.

மருதுபாண்டியர்களும் வளரியும்

சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த மருது பாண்டியர்கள் வளரி ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இம்மன்னர்களின் தளபதியான போர்ப்படை தளபதியும் வளரி எறிவதில் வல்லவருமான வைத்தியலிங்க தொண்டைமான் வளரி ஏறி படையை நடத்தியுள்ளார். சிவகங்கை அருங்காட்சியகத்தில் இந்த வளரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய மருதுவின் வளரியின் வல்லமை

பெரிய மருதுவும் வளரி வீசுவதில் வல்லவராம். இவர் ஒரு முறை தன் வளரி வீசும் திறனை பார்வையாளர்கள் முன் செய்து காட்ட மதுரையில் உள்ள வண்டியூர் தெப்பக் குளத்திற்குச் சென்றார். இந்த தெப்பக்குளம் 304.8 மீட்டர் நீள அகலம் கொண்டது. இதன் நடுவில் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது.

தெப்பக்குளத்தின் ஒரு கரையில் தன் கால்களை நன்கு தரையில் ஊன்றி நின்றவாறு எதிர் கரையை நோக்கி வளரி வீசினார். இவர் வீசிய வளரி தெப்பக்குளத்தின் நடுவே இருந்த உயரமான நீராழி மண்டபத்திற்கு மேலே உயரப் பரந்து எதிர்க்கரையில் போய் விழுந்தது. வளரி வீசிய போது இவர் இடுப்பில் அணிந்திருந்த தங்க அரைஞான் கயிறு அறுந்து கீழே விழுந்த்ததாம்.

கர்னல் ஜேம்ஸ் வெல்ஷின் இராணுவ நினைவுகள் நூலில் வளரி

கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் (Colonel Jamesh Welsh) (கி.பி. 1790–1848) கிழக்கிந்திய கம்பெனியின் மாண்புமிகு கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ராணுவத்தில் (1757–1895) (The Madras Army of the Honourable East India Company 1757–1895) ஆங்கில அதிகாரியாக இருந்தவர். ஜேம்ஸ் வெல்ஷ் 1795 ஆம் ஆண்டு சிவகங்கை மருது சகோதரர்களுள் இளையவரான சின்ன மருதுவை அரண்மனை சிறுவயல் என்ற ஊரில் பார்க்கச் சென்றுள்ளார். இவர் எழுதிய இராணுவ நினைவுகள் (Military Reminiscences) என்ற நூலை இதை லண்டன் பதிப்பகம் ஒன்று 1830 ஆம் ஆண்டு வெளியிட்டது. இவர் தன்னுடைய இராணுவ நினைவுகள் (Military Reminiscences) நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்:

“சின்னா மருது தான் எனக்கு முதலில் ஈட்டியை வீசவும், வளரிக் குச்சியை (colliery stick) வீசவும் கற்றுக் கொடுத்தார். வளரி வேறெங்கும் அறியப்படாத ஆயுதம். ஆனால் (வளரிக் கலையில்) தேர்ந்த ஒரு வல்லவரால், நூறு கஜத்திற்கு உட்பட்ட தூரத்தில் உள்ள எந்த இலக்கை நோக்கி குறிதவறாமல் வீச முடியும்.”

இவ்வாறு சின்ன மருதுவைப் பார்த்து வியந்த அதே வெல்ஷ் கும்பனி படைக்குத் தலைமையேற்று போர்க்களத்தில் சிவகங்கைப் படையையும், இதர பாளையத்தின் படைகளையும் எதிர்கொண்டார்.

“சிவகங்கையில் மருது சகோதரர்கள் மீது நடைபெற்ற விசாரணையின் போது நாங்கள் அரண்மனை சிறுவயல் என்னும் குக்கிராமத்தில் அத்தகைய ஆயுதங்களின் தொகுப்பைப் பார்த்தோம். “பரந்த தெருக்களும் நன்கு கட்டப்பட்ட வீடுகளும் கொண்ட ஒரு சுத்தமான நகரம்” என்று அரண்மனை சிறுவயல் குறித்து வெல்ஷ் நினைவு கூர்ந்துள்ளார். இந்தக் கிராமம் மருது சகோதரர்களின் தலைமை இடமாகவும் இருந்துள்ளது. “ஜூலை 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிறுவாயலை நோக்கிப் படையெடுத்தபோது, சிவகங்கைப் படையினர் துடிப்புடன் எதிர்த்து நின்றனர், ஆங்கிலேயர்களைத் தடுத்து நிறுத்த இந்த ஊரையே எரித்தனர்.” என்று வெல்ஷ் தன்னுடைய நூலில் வியப்புடன் வெல்ஷ் எழுதியுள்ளார்.

பாளையக்காரர்களின் போர்களில் வளரி பற்றி கும்பினிப் படை அச்சம்

பாளையக்காரர்களுடன் நடந்த போர்களில் இதே வளரியை கொடிய இயல்புள்ள ஆயுதமாக கும்பினிப் படை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாளையக்காரர்கள் வளரி வீசுவதில் வல்லவர்களாய் இருந்தனர்.கும்பினி இராணுவத்தின் பீரங்கிப்படையை எதிர்த்துப் போரிடும் துணிச்சலை வளரி பெற்றுத் தந்தது. கொரில்லாப் போர் முறையில் பயன்படுத்தப்பட்ட களரி, கண்ணிமைக்கும் நேரத்தில், பறந்து வந்து கும்பினிப் படை வீரர்களின் தலைகளை அறுத்து உயிர்களைப் பறித்தது. கும்பினிப்படை வளரியைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கியது.

பிரிட்டிஷ் ஆயுதச் சட்டம் 1801

1801 ஆம் ஆண்டில், கிழக்கிந்தியக் கும்பினி அரசு, பிரிட்டிஷ் ஆயுதச் சட்டத்தைக் கொண்டுவந்தது, இந்தச் சட்டம் வளரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாக சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது குறைந்தது 15,000 வளரிகளாவது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பெரும்பாலானவை உடனடியாக அழிக்கப்பட்டன, சில பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கு (லிவர்பூல், ஃபிட்ஸ்வில்லியம் அருங்காட்சியகங்கள் போன்ற அருங்காட்சியகங்கள்) கொண்டு செல்லப்பட்டன. வளரியை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற காரணத்தால் பின்னாளில் வளரிகளை கோவில்களுக்கு படையலாகப் படைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம்.

வளரி குறித்த பல செய்திகள்

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர்களுடைய படையில் வளரி போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வளரிக்காகத் தனிப் படையே இருந்ததாம். ஏராளமான வளரிகளை இவர்கள் ஆயுதக் கிடங்கில் சேமித்து வைத்திருந்தார்களாம்.

எட்கார் தர்ஸ்டன் (Edgar Thurston) எழுதிய ‘தென்னிந்தியாவின் குலங்களும் குடிகளும்’ (‘Caste and Tribes of Southern India’) என்ற நூலில், கொடிய ஆயுதமான வளரி தென்தமிழகத்தின் கள்ளர் மற்றும் மறவர் குடியினரின் குடும்பங்களில் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடுகிறார்.

பிரிட்டிஷ் தொல்லியல் வல்லுனரான ராபர்ட் புரூஸ் ஃபுட் மதுரை மாவட்டத்தில் வளரியின் பயன்பாட்டைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கள்ளர் இனத்து மணவினைச் சடங்குகளில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் இடையே வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் குற்ப்பிட்டுள்ளார்.

நடுகற்களில் வளரி

கி.பி. 1311 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு இறந்த செய்த வீரத்தேவர், கழுவத்தேவர் ஆகிய போர்வீரகளுக்கு கீழக்குயில்குடி என்னும் கிராமத்தில் நடுகல் எடுத்து பட்டவன் என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இந்த நடுகல்லில் வீரத்தேவர்,கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர். பிரமலைக்கள்ளர் இனத்து மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் நடுகற்களில் காணப்படும் வீரர்களும் வீராங்கனைகளும் வாள், வேல், வளரி ஆகிய ஆயுதங்களுடன் காணப்படுகின்றன. கொல்லிமலையில், அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் உள்ள நடுகல்லில் இடம்பெற்றுள்ள வீரன் ஒருவன் வளரி ஏந்தியுள்ளான்.

சிறுதெய்வ வழிபாட்டில் வளரி

மதுரைக்கு அருகிலுள்ள கோவிலங்குளம் என்னும் கிராமத்தில் உள்ள பட்டசாமி கோவிலில் சுமார் 200 வளரிகளைக் கண்டதாக வரலாற்று ஆய்வாளரும், தமிழ் நாவலாசிரியரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.வெங்கடேசன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் இந்த ஆயுதம் பட்டசாமி என்னும் உள்ளூர் தெய்வத்திற்குக் படையலாகப் பெறப்பட்டிருந்ததாம். ஒவ்வோர் ஆண்டும் இந்த வளரி படையலாகப் பெறப்படுகிறதாம். இன்றும் மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பாராம். ஆங்கிலேயர்களின் மொத்த ஆதிக்கத்தில், ‘வளரி’ என்ற பெயர் வழக்கற்றுப் போய்விட்டது அல்லது மறந்து போய்விட்டது.

குறிப்புநூற்பட்டி

 1. வளரி – PaperBoys
 2. வளரி : திகிரி / கள்ளர் தடி / வளரி
 3. மறவர்களின் முதல் போர் ஆயுதம் வளரி
 4. வரலாறு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India
 5. Boomerang – Wikipedia
 6. Maruthu Pandiyar Hanged Photos and History from General welsh
 7. Reclaiming Sivaganga https://openthemagazine.com/freedom-issue-2017/freedom-issue-2017-dispatches-from-history/reclaiming-sivaganga/
 8. Valari and the Early Uprising against East India Company: A Brief History

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in வரலாறு and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to வளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி

 1. ஸ்ரீராம் சொல்கிறார்:

  மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்.

  Like

 2. JAYAKUMAR K சொல்கிறார்:

  வளரி பற்றி அறியாத பல அரிய செய்திகளை அறிந்தேன் ஐயா
  நன்றி

  Like

 3. Maathevi சொல்கிறார்:

  வளரி நிறைந்த பல தகவல்கள் .

  Like

 4. Dr B Jambulingam சொல்கிறார்:

  நாம் மறந்த, அறியவேண்டிய முக்கியமான வளரியைப் பற்றிய அரிய செய்திகள். நன்றி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.