ஆந்திரப்பிரதேச மாநிலம், கரீம்நகர் மாவட்டம் குரிக்கியாலா கிராமத்தில் அமைந்துள்ள பொம்மலகுட்டா குன்றின் மீது, இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனின் கீழ் ஆட்சிபுரிந்து வந்த வேமுலவத சாளுக்கிய (Chalukyas of Vemulavada) மன்னன் இரண்டாம் அரிகேசரி (கி.பி. 930-55) காலத்தில் ஆதிகவி பம்பாவின் இளைய சகோதரரான ஜீனவல்லபா, திரி-புவனா-திலக என்னும் பெயர் தாங்கிய சமண யாத்திரைத் தலத்தை அமைத்துள்ளார். இக்குன்றின் உச்சியில் உள்ள பாறை ஒன்றின் மீது சமண இயக்கி (யட்சி) சக்ரேஸ்வரியின் புடைப்புச் சிற்பமும், இச்சிற்பத்தைச் சுற்றி காயோசர்க்க கோலத்தில் எட்டு சமணர்களின் புடைப்புச் சிற்பங்களும் நான்கு தொகுப்புகளாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பிற்கு நேர் கீழே இரண்டாம் அரிகேசரியின் பதினோரு வரிக் கல்வெட்டு தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் சிறந்த கவிஞராகத் திகழ்ந்த பம்பாவின் புரவலர் அரிகேசரி ஆவார். இந்த சமணக் கவிஞரின் பரம்பரை மற்றும் கவித்திறன் பற்றிய சிறப்பான செய்திகளை இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
அமைவிடம்
பொம்மலகுட்டா என்னும் பொம்மலம்மாகுட்டா என்னும் பொம்மலம்ம தல்லி குட்டா (விருஷாபத்ரி மலை) தெலங்கானா மாநிலம், கரிம்நகர் மாவட்டம், கங்காதரா மண்டல், குரிக்கியாலா (பின்கோடு 505445) கிராமத்திற்குத் தெற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் புவியிடக்குறியீடு 18°33’14″N அட்சரேகை 79°0’56″E தீர்க்கரேகை ஆகும். இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 371 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. குரிக்கியாலா, கங்காதராவிலிருந்து 4.8 கி.மீ. தொலைவிலும், கரீம்நகரிலிருந்து 18.8 கி,மீ. தொலைவிலும், ஜகதியாலிலிருந்து 29.8 கி.மீ. தொலைவிலும், சிர்சில்லாவிலிருந்து 35.6 கி.மீ. தொலைவிலும், ஹைதராபாத்திலிருந்து 182 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. கங்காதரா அருகிலுள்ள இரயில் நிலையம் ஆகும்.
சமணச் சிற்பங்கள்
குன்றின் உச்சியில் இயற்கைக் குகைத்தளங்கள் காணப்படுகின்றன. இங்கு அமைந்துள்ள தட்டையான பாறை ஒன்றின் மீது இரண்டு சாமரம் வீசும் பெண்களுக்கு நடுவே, முக்குடையின் கீழே, எட்டுக்கரங்களுடன் லலிதாசனத்தில் வீற்றிருக்கும், யட்சி என்னும் இயக்கியான சக்கரேஸ்வரி உருவம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. பீடத்தின் கீழ் சக்கரேஸ்வரியின் வாகனமான கருடன் உருவம் காட்டப்பட்டுள்ளது. இவர் முதலாம் சமண தீர்த்தங்கரரான ரிஷபநாதரின் யட்சி ஆவார். சக்கரேஸ்வரி சிற்பத்தில் எட்டுக் கரங்களைச் சித்தரிப்பது பொதுவான படிம மரபில்லை (Iconographic Tradition). சக்ரேஸ்வரியின் சிற்பத்தை உள்ளூர் மக்கள் சீதம்மா என்று அழைக்கின்றனர். இந்தச் சிற்பத் தொகுதிக்கு இருபுறமும் நான்கு, நான்கு நிர்கந்த சமண ஜீனர்கள் காயோத்சர்க்க கோலத்தில் (Kayotsarga Posture) காட்சி தரும் புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். புகழ்பெற்ற கன்னட கவிஞர் வல்லபுடு இந்த சிலைகளில் சிலவற்றை செதுக்கியதாக நம்பப்படுகிறது.
கல்வெட்டு
கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டாம் அரிகேசரி ஆட்சிக் காலத்துக் கல்வெட்டையும் இப்பாறையில் காணலாம். இக்கல்வெட்டு, இக்குன்றை ரிஷபாத்ரி குன்று என்று குறிப்பிடுகிறது. பம்பாவின் இளைய சகோதரரான ஜினவல்லபா (Jina Vallabha) சமணக் கோயில்களைக் கட்டுவதில் ஆர்வமாக இருந்த செய்தியையும் தெரிந்துகொள்ள முடிகிறது..
இக்கல்வெட்டு ஆதி கவி பம்பாவின் முன்னோர்களைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டின் படி அவரது தந்தையின் பெயர் அபிமானதேவராயர் என்ற பீமப்பையா. இவரது தாத்தா அபிமானாச்சந்திரர், இவர்கள் வேங்கிநாட்டின் ஆங்கிபற்று (Angiparru in Vengi Nadu) என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ஆதிகாவி என்று பட்டம் பெற்ற பம்பா, விக்ரமார்ஜுன விஜயம் (Vikramarjuna Vijayam) அல்லது பம்பா பாரதம், சோமதேவசுரி (Somdevasuri), யசதிலகா சம்பூ (Yasatilaka champu), ஆதி புராணம் ஆகிய காவியங்களை இயற்றியவர் ஆவார்.
ஒருமுறை மன்னர் இரண்டாம் அரிக்கேசரி, அழியாத ஒரு காவியத்தை இயற்றும்படி பம்பாவைப் பணித்தார். இந்தக் கட்டளையை ஏற்று பம்பா இயற்றிய மாபெரும் காவியமே விக்ரமார்ஜுன விஜயம் ஆகும். இக்காவியத்தில் இரண்டாம் அரிகேசரியை மகாபாரதத்தின் நாயகன் அர்ஜுனனாக கற்பனை செய்து புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பம்பாவிற்கு கவிதகுணர்னவா (“kavithagunarnava”) என்ற பட்டத்தை அரிகேசரி வழங்கினார்.
குறிப்புநூற்பட்டி
- ஆதிகவி பம்பா, விக்கிபீடியா.
- Bommalagutta cries for attention. Deccan Chronicle.Mar 31, 2019
- Bommalagutta inscription sheds light on poetic use of Telugu. Serish Nanisetti. The Hindu. December 14, 2017
- Bommalammagutta (with inscription). Department of Heritage, Telangana.
- Historian finds Neolithic tools in Bommalamma Gutta shrine. Indian Express 11th October 2019
- History of Bommalagutta http://www.jainglory.com/research/bommalagutta
- History of Jainism Jainism in Andhra Pradesh P.M. Joseph.
- Telangana Museum https://www.facebook.com/telanganamuseums/photos/a.416345681888118/610393605816657/?type=3&theater
சுவாரஸ்யமான தகவல்கள்.
LikeLike
இதுவரை கேள்விப்படாத இடத்தினைப் பற்றி அறிந்தேன். அருமை.
LikeLike