நாம் உண்ணும் உணவு நம் உடலில் எப்படி செரிமானம் ஆகிறது?

நமது செரிமான மண்டலம் ஒரு விந்தையான உறுப்பு எனலாம். உதட்டிலிருந்து தொடங்கி ஆசனவாயில் வரை நீளும் நமது செரிமான மண்டலத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபத்தெட்டு அடி நீளம் கொண்ட செரிமான பாதை (Digestive Tract) ஆகும். உணவு மற்றும் திரவங்கள் இந்த செரிமானப் பாதை வாயிலாகக் கடந்து சென்று செரித்த பின்னர் சத்துக்களாக மாற்றப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இப்பாதையின் வாயிலாகவே கழிவுகளும் அகற்றப்படுகிறது.

செரிமான உறுப்புகள்

செரிமானப் பாதையின் தொடக்கத்தில் இடம்பெறும் உறுப்புகள்: முதல் உறுப்பு வாய் . உணவை அரைக்கப் பற்கள், சேர்த்துப் பிசைந்து உமிழ்நீருடன் கலக்க நாக்கு உதவுகிறது. தொண்டை (Pharynx); உணவுக்குழாய் (esophagus); இரைப்பை (Stomach) ஆகியவை அடுத்த நிலையில் உள்ள உறுப்புகள் ஆகும்.; முன்சிறுகுடல் (Duodenum), இடைச் சிறுகுடல் (Jejunum) மற்றும் பின் சிறு குடல் (Ileum) ஆகியவற்றைக் கொண்ட சிறு குடல் மூன்றாம் நிலை உறுப்புகள் ஆகும்; பெருங்குடலின் உறுப்புகளான, பெருங்குடல்வாய் (Cecum), ஏறும் பெருங்குடல் (Ascending Colon), குறுக்குப் பெருங்குடல் (Transverse Colon), இறங்கு பெருங்குடல் (Descending Colon) மற்றும் சிக்மாய்டு பெருங்குடல் அல்லது வளைகுடல் (Sigmoid Colon) ஆகியவை இறுதி நிலை உறுப்புகள் ஆகும். இப்பாதை ஆசனவாயில் முடிவடைகிறது.

செரிமான பாதையின் சுரப்பிகள்

செரிமானப் பாதையில் பல சுரப்பிகள் பங்குபெற்று உணவை செரிமானச் சாறுகளாக (Digestive Juices) மாற்றுகின்றன. உமிழ்நீர் சுரப்பிகள் (Salivary Glands), இரைப்பையின் உட்புறச் சுவர்களில் உள்ள சுரப்பிகள் வாயிலாகச் சுரக்கும் இரைப்பை சுரப்பிகள் (Gastric Glands in the Stomach lining), கணையம் (Pancreas), கல்லீரல் (Liver) இதனோடு தொடர்புடைய இணைப்புகளான; பித்தப்பை (Gallbladder) மற்றும் பித்த நாளங்கள் (Bile Ducts) ஆகிய சுரப்பிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

மனிதன் தன் வாழ்நாளில் உண்ணும் உணவின் அளவு எவ்வளவு?

உணவு பொதுவாக தாவரம் அல்லது விலங்குகள் மூலம் கிடைக்கிறது. இவை கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் போன்ற இன்றியமையாத ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

மனித உடலில் உணவின் செயல்பாடுகள் மூன்று: 1. உணவு பசியைத் தணிக்கிறது.2. வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி; 3..ஆற்றல் வழங்கல்;. 4. உடலின் திசுக்களைச் சரிசெய்தல் மற்றும் பராமரித்தல்.

தன் வாழ்நாளில் ஒவ்வொரு மனிதனும் சுமார் 50 டன் உணவையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது எட்டு யானைகளின் எடைக்குச் சமமான உணவை உண்கிறான். ஒரு நாளைக்கு மனிதன் உண்ணும் அளவு 1.36 கி.கிராம் ஆகும்.

மனிதன் உணவு உண்ணாமல் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும்?

நீர் அருந்தாமல் இரண்டு நாட்கள் வாழமுடியும் என்கிறார்கள். “ஒருவேளை கூட உணவு இல்லாமல் அதிகபட்சம் 48 மணி நேரம் தாக்குப் பிடிக்கலாம்…” என்று ஒரு பொது மருத்துவர் சொல்கிறார். ஆனால், உணவில்லாமல் எழுபது நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர்களும் உண்டு. நம் மெட்ராஸ் மாகாணத்திற்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டி சங்கரலிங்கனார் என்பவர் 76 நாள்கள் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்கிறார்.

செரிமானப் பாதை: வாய்க் குழி (Oral Cavity)

வாய்: உதடுகள்

நாம் உண்ணும் உணவின் சிறிய அளவிலான செரிமானம் நம் வாயிலேயே நடைபெறுகிறது. நமது செரிமான மண்டலம் வாயிலிருந்து தொடங்குகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். வாய் என்பது உதடுகள், பற்கள், நாக்கு, உள்நாக்கு, அண்ணம், கன்னம், உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகியவை ஆகும். நீர்ம உணவை உறிஞ்சிக் குடிக்க உதடுகள் உதவுகின்றன. தாய்ப்பாலைக் குடிப்பதற்குக் குழந்தைகளுக்கு யார் சொல்லித் தருகிறார்கள்?

வாய்: பற்கள்

உணவை மெல்லவும், அரைக்கவும் வெட்டுப் பற்கள், கோரைப்பற்கள், ஈறு, நாக்கு, கன்னம் ஆகிய உறுப்புகள் உதவுகின்றன.

வாய்: நாக்கு

இளஞ்சிவப்பு நிறத் தசையால் ஆன நாக்கு ‘குரல்வளை மூடி’ (Epiglottis) யிலிருந்து தொடங்கி உதடு வரை நீள்கிறது. நுனி நாக்கு, உடல் நாக்கு, பின் நாக்கு என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஆணுக்குச் சராசரியாக 8.5 செ.மீ.; நீளமும் பெண்ணுக்கு 8 செ.மீ நீளமும் கொண்டிருக்கும். ஆணுக்கு நாக்கு நீளம் என்பது உண்மைதான்.

நரம்புப் பின்னல்கள் வாயிலாக மூளையுடன் இணைக்கப்பட்டுள்ள நாக்கின் சுவை அரும்புகள் (Taste buds) உணவின் இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு எனும் நான்கு ஆகிய சுவைகளை உணர்வதற்கு உதவுகிறது. சராசரியாக, மனித நாக்கில் 2,000–8,000 சுவை அரும்புகள் உள்ளன. டெப்ரிஸ் (Debris) என்னும் பாக்டீரியா மற்றும் நாக்கில் உள்ள இறந்த செல்களால் ஒரு வெண்படலம் நாக்கில் படர்ந்து இருக்கும். நமது வாயில் 40000 பாக்டீரியாக்கள் இருக்கின்றனவாம்.

உமிழ்நீரும் உமிழ்நீர் சுரப்பிகளும்

உணவின் செரிமானம் வாயிலிருந்து தொடங்குகிறது. இதற்காக மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் (Salival glands) உதவுகின்றன. ஒரு ஜோடி, சுரப்பி செவிக்கு முன்னாலும் (Parotid glands), மற்றொரு ஜோடி தாடைக்கு அடியிலும், (Sub mandibular gland) மூன்றாவது ஜோடி நாக்கிற்குக் கீழேயும் (Sub lingual glands) அமைந்துள்ளன.

 

இந்த சுரப்பிகளும் நாள்தோறும் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை சுரக்கின்றன. உமிழ்நீர்க் குழாய்கள் வாயிலாக நம் வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. நமது வாயில் ஊறும் உமிழ்நீர் நாக்கை எப்போதுமே ஈரமாக வைத்திருக்கிறது. உமிழ்நீரில் ஆல்ஃபா அமிலேசு (Alpha Amylase) என்ற நொதி (Enzyme) கலந்துள்ளது. இது மாவுச்சத்தை செரிமானம் செய்ய உதவுகிறது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பார்கள் உணவை நன்றாக மென்று அரைத்துக் கூழாக்கி உண்பது செரிமானத்தை எளிதாக்கும். வாயில் உணவு சிறிய மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டுக் உணவுக் கூழாகிறது.

செரிமானப் பாதை: உணவுக்குழாய் (Esophagus)

சுமார் 8 அங்குல நீளம் கொண்ட உணவுக்குழாய் ஈரமான இளஞ்சிவப்பு நிற மென்திசுக்களால் (Mucosa) வரிசையாக அமைந்துள்ளது. மேல் உணவுக்குழாய் சுருக்குதசை (Upper Esophageal Sphincter (UES)) என்பது உணவுக்குழாயின் மேற்புறத்தில் நம் விருப்பம்போல மூச்சுவிடும் போதும், உண்ணும்போதும், ஏப்பம்விடும்போதும், வாந்தி எடுக்கும்போதும் சுருக்கி விரிக்கும் வண்ணம் அமைந்துள்ள தசைகளின் கட்டமைப்பு ஆகும்.

 

தொண்டையிலிருந்து (குரல்வளை) (throat (pharynx) தொடங்கும் உணவுக்குழாய் (esophagus) இரைப்பையில் (Stomach) திறந்துகொள்கிறது. நாம் வாயிலிருந்து மென்று விழுங்கும்போது மூக்கையும், குரல்வளையையும் (Trachea) அடைத்து, உணவை உணவுக்குழாய்க்குள் அனுப்புகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் 600 முதல் 2000 முறை விழுங்குகிறோம் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.உணவு உணவுக்குழாய் வழியே ஐந்து முதல் பத்து நொடிவரை பயணிக்கிறது. வாயைக் கடந்து சென்றபின்பு ரசகுல்லா, சூடான பிஸி பேளா பாத், ஹைதராபாத் தம் பிரியாணி, வடா பாவ், ஆலு பரத்தா,  ஐஸ்கிரீம், கொதிக்கும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிய எல்லாம் ஒன்றுதான். செரிமானப் பாதையில் சூடு, குளிர்ச்சி ஆகியவற்றை உணரமுடியாது.

.வாயிலிருந்து தொண்டை வழியாக உணவுக்கூழ் உணவுக்குழாயில் ஏற்படும் பல்வேறு விதமான தொடர் அலை இயக்கம் (Peristaltic Movement) மூலம் இரைப்பையை நோக்கி நகர்கிறது.. கீழ் உணவுக்குழாய் சுருக்குதசை (Lower Esophageal Sphincter (LES) என்பது உணவுக்குழாயின் கீழ் முனையில், உணவுக்கூழை இரைப்பையில் கொண்டு சேர்க்கும்போது, சுருங்கி விரியும் வண்ணம் அமைந்துள்ள தசைகளின் கட்டமைப்பு ஆகும்,

செரிமானப் பாதை: உதரவிதானம்

உணவுக்குழாய் இந்த உதரவிதானத்தில் உள்ள ஒரு சிறு துளை (Hiatus) வழியாக இரைப்பையுடன் இணைகிறது. இந்த சிறு துளையைச் சுற்றி ஒரு சவ்வுப்படலம் இத்துளை விரிவடையாமல் இழுத்துப் பிடித்துக் கொள்கிறது. உணவுக் குழாய் வழியாக உணவு செல்லும்போது விரிந்து சுருங்கும் தன்மை கொண்டது.

செரிமானப் பாதை: இரைப்பை

இரைப்பை அடிவயிற்றின் இடது பக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழ்புறம் சற்றே படுத்த நிலையில் அமைந்துள்ள முழுக்க முழுக்கத் தசையால் ஆன ஒரு உறுப்பு ஆகும். மண்ணீரல் இரைப்பைக்குக் கீழே காணப்படுகிறது.

கொள்ளளவு

விரிந்து கொடுக்கும் தன்மைகொண்ட இரைப்பை விரிந்து கொடுக்கும் தன்மை உடையது. செரிமானம் இன்றி ஓய்வெடுக்கும் இரைப்பையின் உட்சுவர் ஒரு சுருக்குப் பையைப் போல சுருண்டு சுருங்கிப்போயிருக்கும். இந்த நிலையில் இரைப்பையின் கொள்ளளவு சுமார் 50 – 70 மி.லி. மட்டுமே. நாம் உணவை உள்ளே தள்ளத் தள்ள இது நன்கு விரிந்துகொடுக்கும் தன்மையுடையது. இதன் அதிக பட்சக் கொள்ளளவு சுமார் ஒரு லிட்டர் வரை இருக்கலாம். என்றாலும் இந்த அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

உறுப்புகள்

கழுத்து (Fundus), உடல் (Body), முன்சிறுகுடல் முனை (Pylorus) ஆகியவை இரைப்பையின் பகுதிகள் ஆகும். இரைப்பைச் சுவர் பல மெல்லிய சவ்வு (Mucous Membrane), இரத்த நாளங்கள் (Blood Vessels) மற்றும் நரம்புகளுடன் (nerves), இணைப்பு திசு (Connective Tissue) மற்றும் தசை நார்களைக் (Muscle Fibers) கொண்ட பல அடுக்குகளால் ஆனது. தசை அடுக்கு மட்டுமே மூன்று வெவ்வேறு துணை அடுக்குகளைக் கொண்டுள்ளது.

இரைப்பை சுரப்பி நீர், ஹைட்ரோகுளோரிக் அமிலம்

உட்புற மெல்லிய சவ்வு அடுக்கு (Inner Mucous Membrane Lining) பெரிய மடிப்புகளைக் கொண்டுள்ளது, இந்த அடுக்கில் உள்ள சிறிய சுரப்பிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைச் (Hydrochloric Acid) சுரக்கின்றன. ஒருவருடைய இரைப்பையில் தினமும் 3 – 4 லிட்டர் இரைப்பை சுரப்பி நீர் சுரக்கிறது. செரிமான நொதிகள் (Digestive Enzymes), ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric Acid) மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு தேவையான பிற பொருட்களுடன் இரைப்பை சுரப்பி நீர் தயாரிக்கப்படுகிறது.

உணவுக்கூழை செரிமானம் செய்வதற்கு இரைப்பை அமிலம் மற்றும் நொதிகளை இரைப்பை சுரக்கிறது. உணவில் நீங்கள் சுவைக்கும் உணவின் தன்மை பற்றி இரைப்பைக்கு சமிக்கைகள் செல்கின்றன. இரைப்பைச் சுவரின் விரிவாக்கத்திற்கு ஏற்ப இரைப்பை சுரப்பி நீர் (Gastric Juice) இரைப்பையில் சுரக்கிறது.

உணவின் எளிமை மற்றும் கடினத் தன்மைக்கு ஏற்ப இரைப்பை அமிலத்தைச் சுரக்கிறது. இரைப்பை அமிலம் புரதத்தை ஜீரணிக்காது. பெப்சின் என்ற நொதி மட்டுமே புரதத்தைச் செரிக்க உதவுகிறது. உருளைக் கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், கேப்ஸிகம் சீஸ் பிஸ்ஸா, பர்கர், பாவ் பாஜி, டோக்ளா, முறுகலா அடை அவியல், மிளகாய் பஜ்ஜி, பட்டர் நான், பனீர் பட்டர் மசாலா, ஆகியவற்றைச் செரிக்க அடர்த்தியான அமிலம் தேவைப்படும், ஒரு கோப்பை தர்பூஸ் பழத்தைச் செரிப்பதற்கு நீர்த்த அமிலமே போதும். மிளகாய், மிளகு, திடமான காபி மற்றும் தேநீர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதை அதிகரிக்கும். உணவு உண்ணும்போது தண்ணீர் அருந்துவதால் இந்த அமிலம் மேலும் நீர்த்துபோக வாய்ப்புள்ளது.

நமது துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள ட்ரம் அப்படியும் இப்படியும் சுழன்று சுழன்று துணிகளைக் கசக்கிப் பிழிவதைப் போல இரைப்பையும் சுருங்கி விரிந்து உணவைக் சிறு சிறு மூலக்கூறுகளாக நொறுக்குகின்றன. இதனால் உணவின் திடப் பகுதிகள் நசுக்கி அரைத்துக் கலக்கப்பட்டு மென்மையான இரைப்பைக் குழம்பாக (Chyme) மாற்றப்படுகின்றன.

இரைப்பையிலிருந்து அமிலமோ இரைப்பைக் குழம்போ உணவுக் குழாய்க்குச் செல்வதற்கு கீழ் உணவுக்குழாய் சுருங்குதசை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் இது பாதி திறந்த நிலையில் இருந்தால் அமிலமும் இரைப்பைக் குழம்பும் உணவுக்குழாய்க்கு வந்து நெஞ்செரிச்சலை உண்டு பண்ணும்.

செரிமானப் பாதை: சிறுகுடல்

சிறு குடல், இரைப்பையில் இருந்து பெருங் குடல் வரை நீளும் மிக நீளமான, குறுகிய, குழாய்ச் சுருள் ஆகும். இரைப்பையின் கீழ்முனையில் நமது சிறுகுடல் தொடங்குகிறது. தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டங்களில் பயன்படும் தண்ணீர் குழாய் சுருள் போல இந்தச் சிறுகுடல் இரைப்பைக்குக் கீழே அடிவயிற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சிறுகுடலில் தான் உண்மையில் உணவு செரிமானமும் (digestion) உட்கிரகித்தலும் (absorption) நடைபெறுகிறது. சிறுகுடல் சுமார் 22 முதல் 25 அடி (6.7 முதல் 7.6 மீட்டர்) நீளமுள்ளது. முன்சிறுகுடல் (Duodenum), இடைச் சிறுகுடல் (Jejunum), பின் சிறுகுடல் (Ileum) என மூன்று பகுதிகளைக் கொண்டது. சிறுகுடல் பெருங்குடலில் முடிகிறது.

முன்சிறுகுடல் (Duodenum)

முன்சிறுகுடல் இரைப்பை குடல் பாதையின் (Gastrointestinal (GI) Tract) ஒரு இன்றியமையாத அங்கம் ஆகும். இது 9 முதல் 12 அங்குலம் (23 முதல் 30 செ.மீ) நீளமுள்ள “சி” (“C”) வடிவ, வெற்றுக் குழாய் ஆகும். இது இரைப்பைக்கும் சிறுகுடலின் நடுப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது, பைலோரிக் சுருக்குதசை (pyloric sphincter) என்ற கட்டமைப்பு இரைப்பையையும் முன்சிறுகுடலையும் பிரிக்கிறது. உணவு இரைப்பை சுரப்பி நீருடன் கலந்து கூழாக அரைக்கப்பட்ட இரைப்பைக் குழம்பு முன்சிறுகுடல் பகுதிக்கு வருகிறது. ஆனால் இக்குழம்பு பின்னோக்கி இரைப்பைக்குள் செல்ல முடியாதபடி பைலோரிக் சுருக்குதசை தடுக்கிறது.

கணையம், கல்லீரல், பித்தப்பை சுரப்பிகள்

முன்சிறுகுடலில் கணையமும் கல்லீரலும், பித்தப்பையும் இணைந்து செரிமானத்தில் பங்கேற்கின்றன. பித்தப்பையிலிருந்து (Gall Bladder) சுரக்கும் பித்தநீர் (Bile Juice) இங்கு சுரக்கிறது.

கணையத்திலிருந்து அனைத்து முக்கிய உணவுக் குழுக்களையும் உடைக்கும், பல்வேறு வகையான, அதிக செறிவுடைய பைகார்பனேட் நொதிகள் (Enzymes) சுரக்கின்றன. கணையத்தில் உள்ள அசிநார் செல்கள் (Acinar Cells) இந்த நொதிகளை உருவாக்குகின்றன.

  • கணைய புரோட்டீஸ்கள் (டிரிப்சின் மற்றும் சைமோட்ரிப்சின் போன்றவை (Pancreatic proteases (such as trypsin and chymotrypsin) – புரதங்களை செரிப்பதற்கு உதவுகின்றன.
  • கணைய அமிலேஸ் (Pancreatic amylase) – இது சர்க்கரைகளை (கார்போஹைட்ரேட்டுகள் (carbohydrates) செரிப்பதற்கு உதவுகிறது.
  • கணைய லிபேஸ் (Pancreatic lipase) – இது கொழுப்பை செரிப்பதற்கு உதவுகிறது.

நடுச்சிறுகுடல் மற்றும் பின்சிறுகுடல்

6.5 அடி (2.0 மீட்டர்) மீட்டர் நீளமுள்ள நடுச்சிறுகுடலும், 11.5 அடி (3.5 மீட்டர்) நீளமுள்ள பின்சிறுகுடலும் இதன் தொடர்ச்சியாக உள்ளன. செரிமானத்தின் பெரும்பகுதி சிறுகுடலில் நடைபெறுகிறது. சிறுகுடலின் உட்புறச் சுவரில் வேகத்தடை அமைப்பைப் போன்றே ‘பிளைக்கே’ (Plicae) என்று பெயர் கொண்ட புடைப்பான மடிப்புகள் உள்ளன. சிறுகுடலின் மொத்தப்பரப்பில் சுமார் 30 கோடி புடைப்புகள் உள்ளனவாம். இவற்றிற்கு விரலிகள் அல்லது குடலுறிஞ்சி (Villi) என்று பெயர். விரலிகள் சுமார் 1.6 மி.மீ. நீளம் கொண்டது.

நாம் உண்ணும் உணவில் மாவுச் சத்து (carbohydrate), புரதம் (Protein), கொழுப்பு (Fat), வைட்டமின்கள், தாது உப்புகள் (Minerals), நீர் (water) ஆறு வகை சத்துக்கள் இருக்கின்றன. இரைப்பைக் கூழில் இருந்து இந்தச் சத்துகளை தனித்தனியாக உறிஞ்சி இரத்தத்தில் கலக்கச் செய்யும் பணிதான் சிறுகுடலில் பெரிதும் நடைபெறுகிறது.

முன்சிறுகுடலில் கணையத்திலிருந்து கணைய நீர் சுரப்புகளும் மற்றும் கல்லீரலின், பித்தப்பையிலிருந்து பித்தநீர் சுரப்புகளும் சுரந்து சிறுகுடலை அடைகின்றன. இவை இரைப்பைக் கூழுடன் கலந்து செரிமானத்தைத் தொடர்கின்றன.

சிறுகுடல் சுவரில் உள்ள இரண்டு விரலிகளுக்கு நடுவே ‘லீபர்கூன் பள்ளங்களில்’ (Crypts of Lieberkuhn) சிறுகுடல் சாறு (Small Intestine Juice) சுரக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் குடற்சாறும், ஒன்றைரை லிட்டர் கணையநீரும், அரை லிட்டரிலிருந்து ஒரு லிட்டர்வரை பித்தநீரும் சுரக்கின்றன. இந்த சிறுகுடற்சாறு இரைப்பைக்கூழில் உள்ள உணவுப்பொருட்களை மிகவும் சிறிய துகள்களாக உடைக்கின்றன.

விரலிகளைச் சுற்றி ரத்தத் தந்துகிக் குழாய்கள் வலைபோல் பின்னியுள்ளன. நிணநீர்நாளங்கள் விரலிகளின் மையத்தில் அமைந்துள்ளன. கொழுப்பை நிணநீர்நாளங்கள் உறிஞ்சுக்க்கொள்ளும். இவை கல்லீரலில் கொலஸ்ட்ராலாக சேமித்து வைக்கப்படுகிறது. இந்தக் கொலஸ்ட்ரால் தான் நம் கல்லீரலில் பித்தநீர் சுரக்க உதவுகிறது.

தண்ணீர், தாதுக்கள், வைட்டமின்கள், ஆகியவை தனித்தனியாகப் பிரிந்து சவ்வூடு பரவல் வாயிலாக நேரடியாக இரத்தத்தில் கலக்கின்றன. பிற சத்துகளைத் தந்துகிகள் உறிஞ்சிக்கொள்கின்றன

யூரிக் அமிலம்

கடல் உணவு மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவில் பியூரின் என்ற மூலக்கூறு அடங்கியுள்ளது. இவை சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு உடலில் செரிமானம் ஆகும்போது யூரிக் அமிலம் என்ற துணைப்பொருள் (Bye-product) உற்பத்தியாகிறது. நல்ல நிலையில் இருக்கும் சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. மீதியுள்ள அமிலம் இரத்தத்தில் கலக்கிறது. பழுதான சிறுநீரகங்களால் சிறுநீரகத்தை வெளியேற்ற முடியாததால் அமிலம் இரத்தத்தில் தேங்கி விடுகிறது.

செரிமானப் பாதை: பெருங்குடல்

செரிமானப் பாதையில் பெருங்குடல் சுமார் ஒரு மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள உறுப்பு ஆகும். இது சிறுகுடலின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. சிறுகுடலும் பெருங்குடலும் பெருங்குடல் முனை (Caecum) என்ற பகுதியில் இணைகின்றன.

உறுப்புகள்

ஏறும் பெருங்குடல் (Ascending Colon), குறுக்குப் பெருங்குடல் (Transverse Colon), இறங்கு பெருங்குடல் (Descending Colon) மற்றும் சிக்மாய்டு பெருங்குடல் அல்லது வளைகுடல் (Sigmoid Colon) ஆகியவை பெருங்குடலின் உறுப்புகள் ஆகும். இப்பாதை ஆசனவாயில் முடிவடைகிறது. கிரேக்க மொழியில் “S” என்ற எழுத்து “சிக்மா” (Sigma) என்று அழைக்கப்படுகிறது. சிக்மாய்டு பெருங்குடல் “S” வடிவில் காணப்படுவதால் இந்தப்பெயரை வைத்துள்ளார்கள்.

தடித்த சுவர்களையுடைய பெருங்குடலின் விட்டம் சிறுகுடலின் விட்டத்தைவிட அதிகம். பெருங்குடலின் வெளிப்புறம் சில இடங்களில் உப்பியும் சில இடங்களில் சுருங்கியும் இருக்கும். பெருங்குடலில் எந்த நொதியும் (Enzyme) சுரப்பதில்லை. நீர் போன்ற வழவழப்பான திரவமும், சளி போன்ற வழவழப்பான திரவமும் பெருங்குடலில் சுரக்கின்றன. பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் புரதச் சத்துக்களைச் செரிப்பதற்கும் சில வைட்டமின்களை உற்பத்தி செய்வதற்கும் உதவுகின்றன. செல்லுலோஸ் என்ற நார்ப் பொருளைச் செரிப்பதற்கும் இந்த பாக்டீரியாக்களே உதவுகின்றன.

சிறுகுடலில் சத்துக்கள் செரிக்கப்பட்டு உறிஞ்சி இரத்தத்தில் கலக்கிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்டது போக மீதமுள்ள, சுமார் 1 முதல் 2 லிட்டர் வரையிலான, சக்கையான திரவக்கூழ் பெருங்குடலுக்கு வந்து சேரும். பெரிஸ்டாலிஸ் என்ற சுருங்கி விரியும் இயக்கத்தால் பெருங்குடலில் திரவக்க்கூழ் நகர்கிறது. இந்தத் திரவக்கூழ் இதில் பெருமளவு நீர் கலந்து இருக்கும். பெருங்குடல் சுமார் 1 1/2 லிட்டர் நீரையும் சில தாதுச் சத்துக்களையும் உறிஞ்சிக் கொள்கிறது.

மீதமுள்ள திடக்கழிவுகளும் பாக்டீரியாவும் சிக்மாய்டு பெருங்குடல் பகுதியில் தேக்கிவைக்கப்படுகிறது. ஆசனவாய் என்பது ஒரு சுருக்குப்பை போல செயல்படுகிறது. ஆசனவாய்க்கும் மூளைக்கும் சிறு தொடர்பு உள்ளது. மலம் கழிக்க வேண்டும் என்ற சமிக்ஞை மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. நாம் கழிவறைக்குச் செல்வதை மூளையே முடிவு செய்கிறது. நாம் கழிவறைக்குச் செல்கிறோம்.. ஆசனவாய் வாயிலாக மலம் (Stool) வெளித்தள்ளப்படுகிறது..

மலச்சிக்கல்

மலச்சிக்கல் என்றால் என்ன? வழக்கம்போல மலம் கழிக்காமல் இருப்புதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைகளை மலச்சிக்கல் என்று அழைக்கிறோம். இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழ்வோருள் 14 சதவிகிதம் பேர் நீண்டகால மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.

இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 3 லிட்டருக்குக் குறையாமல் நீர் அருந்துங்கள்; நார்ச்சத்து மிகுந்த உணவை உண்ணுங்கள்; உடற்பயிற்சி செய்யுங்கள், நாள்தோறும் குறிப்பிட்ட (அதிகாலை) நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்புநூற்பட்டி

  1. 48 மணி நேரத்துக்குமேல் உணவு உண்ணாமல் இருந்தால் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
  2. உடலின் அதிசயங்கள்…… Google Groups
  3. மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
  4. Human digestive system
  5. Human digestive system – Wikipedia
  6. large intestine | Definition, Location, Anatomy, Length, Function, & Facts
  7. Small intestine | anatomy
  8. stomach | Definition, Function, Structure, Diagram, & Facts
  9. The Digestive System
  10. Your Digestive System

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in உடல் நலம், உணவு, மருத்துவம், லைப் ஸ்டைல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.