சூரியன், சந்திரன், பூமி குறித்த தகவல்
சூரியனின் விட்டம் 13,91,000 கி.மீ. சந்திரனின் விட்டம் (Diameter) 3,474 கி.மீ. சந்திரனின் விட்டத்தை விட சூரியனின் விட்டம் 400 மடங்கு அதிகம். பூமியிலிருந்து சூரியன் 14,71,50,000 கி.மீ. தொலைவிலும் சந்திரன் 3,84,400 கி.மீ. .தொலைவிலும் அமைந்துள்ளன. இதனால்தான் சூரியனும் சந்திரனும் ஒரே அளவாக தெரிகின்றன.
இரண்டு சங்கராந்திகள் (Solstices)
ஒரு ஆண்டில் இரண்டு சங்கராந்திகள் (Solstices) ஏற்படுகின்றன. ஒன்றுகோடைக்கால சங்கராந்தி (Summer Solstices) மற்றொன்று குளிர் கால சங்கராந்தி (Winter Solstices). ஆண்டின் நீண்ட நாள் கோடைகால சங்கராந்தியின்’ (Summer Solstice) போது ஏற்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், பூமி சூரியனைச் சுற்றிவரும்போது, பூமியின் வட்டப்பாதை சூரியனை நோக்கி அதிகபட்ச சாய்வை அடைகிறது. எனவே இது போன்ற சூரிய கிரகணங்கள் கோடைக்கால சங்கராந்தி காலமான ஜூன் 21, 1982 ஆம் தேதி அன்றும் ஜூன் 21, 2001 ஆம் தேதி அன்றும் நிகழ்ந்துள்ளன. இது போன்ற சூரிய கிரகணம் வரும் 2039 ஆம் ஆண்டில் நிகழவிருக்கிறது.
மூன்று வகை சூரிய கிரகணங்கள்
சூரிய கிரகணங்கள் நிகழும் இடத்திற்கேற்ப மூன்று வகைகளாகப் புரிந்து கொள்ளலாம். 1. சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அதனை பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) என்று அழைக்கிறார்கள். 2. சந்திரனின் நிழல் சூரியனை முழுவதும் மறைத்தால் அதனை முழு சூரிய கிரகணம் (Full Solar Eclipse) என்று அழைக்கிறார்கள். 3. சந்திரனின் நிழல் சூரியனை 98.8 சதவீதம் மறைக்கும்போது சில பகுதிகளில் சூரியன் மோதிர வடிவில் ஜொலிக்கும். அறிவியலாளர்கள் இதனை ‘ரிங் ஆப் ஃபயர்’ (Ring Of Fire) என்று குறிப்பிடுகின்றன.
‘ரிங் ஆப் ஃபயர்’
‘ரிங் ஆப் ஃபயர்’ (Ring Of Fire) என்பது ஒரு அரிய வானியல் நிகழ்வு ஆகும். கிரகணம் நடைபெறும் நேரத்தில் சூரியனின் புறவளி மண்டலமாகிய’கரோனா ‘ நம் கண்ணுக்குத் தெரியும். சூரியனில் இருந்து புறஊதாக் கதிர்கள் அதிக பிரகாசமாக வெளிவரும். இந்த நேரத்தில் சூரியனைச் சுற்றிசூரிய காந்த அலைகளும் தோன்றும். கிரகண நேரத்தில் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. என்றும் பாதுகாப்பு கண்ணாடி அணிந்து பார்க்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட உணவைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என எந்த விஞ்ஞானிகளும் அறிவுறுத்தவில்லை.
சூரிய கிரகணம் தெரிந்தது
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. இப்பகுதிகளின் சில இடங்களில் பிற்பகல் 3.30 மணிக்கு முடிவடைந்தது. இந்தியாவில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் காலை 9.58க்கு தொடங்கியது. பகல் 12.10 மணிக்கு உச்சத்தை பெற்றது.அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகாரில் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிக நீண்ட சூரிய கிரகணம் இதுவாகும். இந்தச் சூரிய கிரகணத்தை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்க முடிந்தது. கங்கன சூரிய கிரகணம் என்று அழைக்கப்பட்ட இந்த நிகழ்வு ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரிந்தது.
சூரிய கிரகணம் ஜூன் 21, 2020 நிகழ்ந்த பாதை
இந்தியாவில் சூரிய கிரகணம் ஜூன் 21, 2020 நிகழ்ந்த பாதை
இந்தியா
- டெல்லியில் 95 நிமிடங்கள் தெரிந்தது (காலை 10.19 மணி முதல் மதியம் 1.48 மணி வரை உச்சம் 12.01 மணி).
- ஜெய்பூரில் 91 நிமிடங்கள் காண முடிந்தது (காலை 10.14 மணி முதல் மதியம் 1.44 மணி வரை உச்சம் 11.55 மணி).
- ஜோத்பூரில் 91 நிமிடங்கள் தெரிந்தது. (காலை 10.08 மணி முதல் மதியம் 1.35 மணி வரை உச்சம் 11.47 மணி).
- ஆக்ராவில் 90 நிமிடங்கள் நிகழ்ந்தது. (காலை 10.19 மணி முதல் மதியம் 1.50 வரை. உச்சம் 12.02 மணி). ஸ்ரீநகரில் 86 நிமிடங்கள் தெரிந்தது. (காலை 10.19 மணி முதல் மதியம் 1.50 வரை. உச்சம் 12.02 மணி).
- லே பகுதியில் 87 நிமிடங்கள் நிகழ்ந்தது.(காலை 10.29 மணி முதல் மதியம் 12.06 மணி வரை உச்சம். 12.06 மணி)
- அகமதாபாத்தில் 82 நிமிடங்கள் தெரிந்தது (காலை 10.03 மணி முதல் மதியம் 1.32 மணி வரை உச்சம். 11.41 மணி)
- மும்பையில் 70 நிமிடங்கள் நிகழ்ந்தது (காலை 10 மணி முதல் மதியம் 1.27 வரை. . உச்சம் 11.37 மணி) .
- புனேவில் 67 நிமிடங்கள் தெரிந்தது (காலை 10.02 மணி முதல் மதியம் 1.30 மணி வரை உச்சம் 11.40 மணி)
- ஹைதராபாத்தில் 60 நிமிடங்கள் நிகழ்ந்தது..( காலை 10.14 மணி முதல் மதியம் 1.44 மணி வரை உச்சம் 11.55 மணி).
- பெங்களூரில் 47 நிமிடங்கள் தெரிந்தது. (காலை 10.12 மணி முதல் மதியம் 1.31 மணி வரை. உச்சம் 11.47 மணி).
- திருவனந்தபுரத்தில் 35 நிமிடங்கள் தெரிந்தது. (காலை 10.14 மணி முதல் மதியம் 1.15 மணி வரை உச்சம் 11.39 மணி).
பல இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகவே தெரிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு
தமிழ்நாட்டில் சூரிய கிரகணம்காலை சுமார் 10.15 மணிக்குத் தொடங்கியது. நண்பகல் சுமார் 11.48 மணிஅளவில் கிரகணம் உச்சம் தொட்டது. மதியம் சுமார் 1.42 மணியளவில் கிரகணம் முடிவடைந்தது!
- சென்னையில் (காலை 10.22 மணி முதல் மதியம் 1.41 வரை உச்சம் 11.58 மணி) நிகழ்ந்தது .
- மதுரையில் (காலை 10.17 மணி முதல் மதியம் 1.46 வரை உச்சம் 11.46 மணி) நிகழ்ந்தது.
- கோவையில் (காலை 10.15 மணி முதல் மதியம் 1.23 வரை உச்சம் 11.43 மணி) நிகழ்ந்தது.
- திருச்சியில் (காலை 10.18 மணி முதல் மதியம் 1.29 வரை உச்சம் 11.49 மணி) நிகழ்ந்தது.
- சேலத்தில் (காலை 10.15 மணி முதல் மதியம் 1.30 வரை உச்சம் 11.48 மணி) நிகழ்ந்தது.
- கன்னியாகுமரியில் (காலை 10.17 மணி முதல் மதியம் 1.15 மணி வரை உச்சம் 11.41 மணி)..
வரும் டிசம்பர் 14, 2020 ஆம் தேதியன்று வரும் டிசம்பர் 14-ஆம் தேதி இந்த ஆண்டின் கடைசி கிரகணம் ஏற்படவிருக்கிறது. இந்தியாவில் இதனைக் காண முடியும். இதற்கடுத்து 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்தியாவில் கிரகணத்தைக் காணவியலும்.
ஆன்மீக நம்பிக்கைகள்
- இந்த நேரத்தில் உணவருந்தக் கூடாது.
- தர்ப்பைப் புல்லினை இட்டால் தோஷம் இல்லை.
- கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது.
- இறைவனின் மந்திரங்களை சொல்லியபடி இருக்கலாம்.
- கொரானா வைரஸ் தொற்று இந்த சூரிய கிரகணத்தால் முற்றிலும் நீங்கிவிடும்.
- சூடாமணி சூரிய கிரகணம் என்னும் கங்கன சூரிய கிரகணம் மிருகஷீர்ச நட்சத்திரத்தில் தொடங்கி. சித்திரை, அவிட்டம், திருவாதிரை, ரோஹிணி நட்சத்திரங்களைக் கடந்து சென்றது. எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்று சோதிடர்கள் சொல்லியிருந்தார்கள்.
- ஒரு சில சோதிடர்கள் கிரகங்கள் நேர்கோட்டில் இணையும் இந்தக் காலத்தில் பெரும் கேடு நிகழவிருக்கிறது என்றார்கள்.
- உலக்கையை எந்த பிடிமானம் இல்லாமல் நேராக நிறுத்தி இருந்ததை தொலைக்காட்சிகளில் காண்பித்தார்கள். சென்னை பெரியார் கோளரங்கத்திலிருந்து ஒருவர் கிரகண நாள் தவிர மற்ற நாட்களிலும் இவ்வாறு உலக்கையை நேராக நிறுத்த முடியும் என்று சொன்னார். உலக்கையின் புவியீர்ப்பு விசை உலக்கையின் நேர் கோட்டில் விழுவதால் இவ்வாறு நிறுத்த முடிகிறது என்று அவர் விளக்கம் சொன்னார்.
சூரிய கிரகண நிகழ்வினை மிகவும் எளிதாகப் புரியும் வகையில் தந்தமை பாராட்டுக்குரியது.
LikeLike