நாக பஞ்சமி என்றால் என்ன? நாகவழிபாடு குறித்த நம்பிக்கைகள், புராணங்கள், வழிபாட்டு முறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாக பஞ்சமி வழிபாடு இந்தியா மற்றும் நேபாள நாடுகளில், நாகங்கள் மற்றும் நாகக் கடவுள்களின் வழிபாட்டுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து பஞ்சாங்கக் குறிப்புகளின்படி ஆடி மாதம் (வடஇந்தியாவில் ஆஷாட மாதம்) வளர்பிறை பஞ்சமி திதியன்று கொண்டாடப்படுவது வழக்கம். இதே பஞ்சமி திதியில் கருடன் அவதாரம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்நாள் கருட பஞ்சமி என்றும் பெயர் பெற்றுள்ளது. குஜராத் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் ஆஷாட மாதம் தேய்பிறைப் பஞ்சமியன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் தீபாவளி கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தியன்று நகுலசவிதி என்ற பெயரில் நாகபஞ்சமியினைக் கொண்டாடுகிறார்கள். இதற்கடுத்து வரும் சஷ்டியும் புனிதமான நாள் ஆகும். இது போலவே பூசை முறைகளும் இடத்துக்கு இடம் மாறுபடுவது உண்டு.
நாக பஞ்சமி வழிபாடு
இந்தப் புனித நாளில் மக்கள் நாகப் புற்றுகளுக்குக் காலையும் மாலையும் விளக்கேற்றி பூசை செய்து வழிபடுவது வழக்கம். திருமணமான பெண்கள், தங்கள் குடும்ப நன்மைக்காக விரதமிருந்து, கோவில்களில் பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது வழக்கம். திருமணத்தடை, குழந்தைப்பேரின்மை, குழந்தைகளுக்கான நோய்கள் போன்றவற்றிற்கு இந்த விரதம் நல்ல பலனளிப்பதாகச் சொல்கிறார்கள்.
உலக நாகரிகங்களில் நாகங்கள்
நாகம் போற்றத்தக்க உயிரியாகும். உலகின் அனைத்து தொன்மையான நாகரீகங்களிலும் நாகம் இன்றியமையாத இடத்தைப்பிடித்துள்ளது. தென் அமெரிக்காவின் பூர்வகுடிகளான மாயன் இனத்தவர் நாகத்தைச் செல்வத்தின் குறியீடாகவும், இனவிருத்தியின் அடையாளமாகவும் கருதினர். தமிழர்களின் முன்னோர்களாகக் கருதப்படும் நாகர்களும் நாகவழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம், ரோம் நாடுகளில் நிலவிய நாகரிகத்தில் பாம்பு போற்றப்பட்டுள்ளது.
இந்துமத வழிபாட்டில் நாகங்கள்
எல்லா மரபுகளும் நாகவழிபாட்டை ஓர் இயற்கை வழிபாடாகக் கடைபிடித்து வருகின்றன. நாகவழிபாடு உலகெங்கிலும் பரவலாகக் காணப்படுகிறது. இந்து மதத்தில் நாகங்களுக்குச் சிறப்பான இடம் உள்ளது. எட்டு நாகங்களை தெய்வீக நாகங்களாகப் பல இந்துப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பாதாள லோகத்தை நாகலோகம் என்றே புராணங்கள் குறிக்கின்றன. நாகலோகத்தில் வசிக்கும் நாககன்னிகைகள் குறித்து பல கதைகள் உள்ளன. தாய் தெய்வ வழிபாட்டில் நாககன்னியம்மன் முக்கிய இடம் பெற்றுள்ளது.
சிவன் பாம்புகளை அணிகலன்களாகப் பூண்டுள்ளார். விஷ்ணு பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்டுள்ளார். முருகன் பாம்புகளின் தலைவனாகக் காட்டப்படுகிறார். இராகு மற்றும் கேது ஆகிய நிழல் கோள்கள் இந்து பஞ்சாங்க முறையில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.
சமண சமயத்தின் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் ஐந்து தலை நாகத்தின் கீழ் காட்சி தருகிறார். பௌத்த மதத்திலும் புத்தர் அவதாரமாகப் பாம்புடன் தொடர்புபடுத்தப் படுகிறார்.
பாம்பை அடிப்பதோ கொல்லுவதோ பாவம் என்பது இந்துமத நம்பிக்கை. அப்படியே தவறுதலாகக் கொல்ல நேரிட்டாலும் அதற்குரிய பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பாம்பு கனவில் வந்தாலும், கடித்தாலும் பல்வேறு பலன்களைச் சொல்கிறார்கள்.
சோதிடத்தில் இராகு மற்றும் கேது இராசிகள், நாக தோஷம் மற்றும் (கால) சர்ப்பதோஷம் ஆகிய தோஷங்களை ஏற்படுத்துவதால் இது குறித்து மக்களிடம் மிகுந்த அச்ச உணர்வு காணப்படுகிறது. வேம்பு மற்றும் அரசமரம் இணைந்த மரத்தடியில் நாகப்பாம்பும் சாரைப்பாம்பும் இணைவது போல செதுக்கப்பட்ட நாகக்கல் சிற்பத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவது நாகதோஷத்திற்கான பரிகாரமாகக் குறிப்பிடப்படுகிறது. குடைபிடிக்கும் ஐந்துதலை நாகத்தின் கீழ் சிவலிங்கமோ கண்ணன் நடனமாடுவது போலவோ காட்டும் சிலைகளும் செதுக்கி வைப்பதுண்டு.

அனைத்து சிவன் கோவில்களிலும் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதியன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நந்திக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். இந்தக் காலத்தில் தான் சிவபெருமான், ஆலகால விஷத்தை உண்டு உலகத்தைக் காத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
கேரளாவில் அமைந்துள்ள மன்னார்சாலா கோவில் நாகவழிபாட்டிற்கான பெரிய கோவில் ஆகும். பரசுராமர் இதைத் தோற்றுவித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. கர்நாடகாவில் குக்கி சுப்ரமணியர் கோவிலின் மூலவரான முருகன் பாம்பின் கடவுளாகக் கருதப்படுகிறார். குஜராத்தில் புஜின் புறநகரில் உள்ள பூஜியா கோட்டை என்ற பழங்கால கோட்டை நாகர் தலைவனுக்குச் சொந்தமானது என்று புராணம் சொல்கிறது.. பூஜாங் நாகக் கோவில் இம்மலையில் அமைந்துள்ளது.
கும்பகோணம் நகருக்கு அருகில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் இராகுவிற்குரிய தலமாகக் கருதப்படுகிறது. ஆதிசேஷன், கார்கோடன் மற்றும் தட்சன் ஆகிய நாகங்கள் இந்தக் கோவில் தலபுராணத்துடன் தொடர்புள்ள .தெய்வீக நாகங்களாகும். திருநெல்வேலிக்கு அருகில் அமைந்துள்ள சங்கரநாராயணர் கோவிலில் புற்று மண்ணையே பிரசாதமாகத் தருகிறார்கள். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் வாசுகி நாகம் மூலவராக வழிபடப்படுகிறது.
நாக வழிபாடு அறிந்தேன்
நன்றி ஐயா
LikeLike
மிக்க நன்றி ஐயா..
LikeLike