அமைவிடம்
அழிவின் விளிம்பில் இருக்கும் இரணியல் அரண்மனை மற்றும் கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டம், இரணியல் பேரூராட்சி, இரணியல் வருவாய்க் கிராமத்தில் (பின் கோடு 629802) அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் சாலையில், தக்கலைக்கு நான்கு கி.மீ முன்னதாக இந்த அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனையும் கோட்டையும், பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் சிதைந்து போனது. மனிதர்கள் உள்ளே நுழைய முடியாமல் சிதலமடைந்து புதர் மண்டிக் கிடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் புதர்களை அகற்றி அரண்மனையை அழிவிலிருந்து மீட்டுள்ளனர். தற்போது இந்த அரண்மனை மாநில இந்து அறநிலையத் துறையினரின் பராமரிப்பில் உள்ளது.
இதன் புவியிடக் குறியீடு 8.2°N அட்சரேகை 77.3°E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 19 மீட்டர் (62 அடி) ஆகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 10375 ஆகும். மொத்த வீடுகள் 2681 ஆகும்.
பெயர்க்காரணம்
வரலாற்றில் இவ்வூர் இரணியசிங்க மங்கலம் என்றும் இரணசிங்க மங்கலம் குறிப்பிடப்பட்டுள்ளன. புராணகாலத்து பிரகலாதனின் தந்தை இரண்யகசிபு இப்பகுதியை ஆட்சி செய்தபடியால் இந்தப் பகுதி இரணியல் என்று பெயர் பெற்றதாக பலர் நம்புகின்றனர். சேரமான் இரணசிங்கன் பெயரால் இப்பகுதி இரணியல் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பது வேறு சிலரின் நம்பிக்கை.
வரலாறு
‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்’ என்று தொல்காப்பியம் பன்னிரெண்டு நாடுகளைக் குறிக்கிறது. பண்டைய சேரநாட்டில் அமைந்திருந்த வேணாடு இந்தப் பன்னிரெண்டு நாடுகளுள் ஒன்றாகும். பாண்டியநாட்டின் தென்பகுதிக்கும், சேரநாட்டின் தென்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில், ‘ஆய் நாடு,’ ‘வேணாடு,’ ‘குட்டநாடு,’ ‘தென்பாண்டி நாடு.’ ஆகிய நாடுகள் இடம் பெற்றிருந்தன. இந்த நாடுகளைச் சேர வம்சத்தைச் சேர்ந்த சில சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று ஆண்டு வந்தனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றிப் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் ‘சேரமான்’ என்னும் அடைமொழியினைத் தங்கள் பெய்ரகளுடன் இணைத்துக் கொண்டனர். கரூர் என்னும் வஞ்சி சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேரநாட்டின் துறைமுகமாகத் திகழ்ந்தது.
சேரமான் பெருமாள் என்ற பெயருடன் சேர மன்னர்கள் சேர நாட்டை ஆட்சிபுரிந்த போது திருவஞ்சைக் களம் இவர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இம்மன்னர்களின் ஆட்சியில் சேர நாடு, வேணாடு, ஓனாடு, கோனாடு, கொடுக்குன்னி நாடு, கோலத்து நாடு, போல நாடு,வேம்பொலி நாடு என்று எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை ஆண்டுவந்த மன்னர்கள் சாமந்த மன்னர்கள் என்றும் இந்த எட்டு நாடுகளும் சாமந்த நாடுகள் என்று பெயர் பெற்றிருந்தன.
மாக்கோதையார் என்ற சேரமான் பெருமாள் ஆட்சிக் காலத்தில் சேரநாடு, ‘நெடியிருப்பு,’ ‘ஆரங்கோடு,’ ‘பெரும்படப்பு,’ ‘திருப்பாப்பூர்,’ ‘குறும்பியாதிரி,’ ‘புறநாட்டுக்கரை,’ ‘கோளத்திரி,’ ‘போர்ளாத்திரி,’ ‘தரூர்,’ ‘பாப்புக்கோயில்,’ ‘பரப்புக்கோயில்,’ ‘ஒன்றில்’ என்று 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 12 மன்னர்களின் தனியாட்சியின் கீழ் வழங்கப்பட்டது. இவை ஸ்வரூப (தனியாட்சி பெற்ற) நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
பாண்டியர்களின் ஆவணங்களில் வேணாடு பற்றிய குறிப்புகள் 8 ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்படுகின்றன. வேணாடு, இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கிய பகுதியாகத் திகழ்ந்தது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டளவில் வேணாடு 12 பிடாகைகளாக (பகுதிகளாகப்) பிரிக்கப்பட்டிருந்தன. தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் (பின்னாளில் பத்மநாபபுரம் என்று பெயரிடப்பட்டது) வேணாட்டின் தலைநகராக இருந்தன. இரணியல் சேரமான் பெருமாள்களின் பருவகாலத் தலைநகராகத் திகழ்ந்தது.
கி.பி. 1601 ஆம் ஆண்டு மன்னர் இரவிவர்ம குலசேகரப் பெருமாள் (கி.பி. 1592-1609) காலத்தில் கல்குளத்தில் பத்மநாபபுரம் கோட்டை கட்டப்பட்டது. பத்மநாபபுரம் கோட்டை மற்றும் அரண்மனை கட்டப்படும் வரை வேணாடு கோட்டை மற்றும் அரண்மனை வேணாடு வம்சத்தினரின் தலைநகராகவும் சிலகாலம் திகழ்ந்தது. இங்கிருந்து அரசாட்சி செய்த வேணாட்டு வம்சத்தின் கடைசி மன்னர் உதயமார்த்தாண்ட வர்மன் ஆவார். கி.பி. 1795 ஆம் ஆண்டு வரை பத்மநாபபுரம் இவர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. பின்னர்த் திருவனந்தபுரம் வேணாட்டின் தலைநகராகியது.
சேரமான் பெருமாள் கட்டிய கோட்டை, அரண்மனை
இந்த அரண்மனை மற்றும் கோட்டை ஆகியவற்றைச் சேர வம்சத்தின் புகழ்பெற்ற சேரமான் பெருமாள் கட்டியதாக கேரள அரசின் தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். வேணாடு என்னும் திருவிதாங்கூர் மன்னர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த அரண்மனையைத் தாய் கொட்டாரம் (Mother Palace) என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை வளாகம் 2-ஏக்கர் 16-சென்ட் பரப்பளவு கொண்டது ஆகும். இந்த மாளிகை வேணாட்டு மன்னர்களின் நிர்வாக அலுவலகமாகவும் செயல்பட்டுள்ளது. இப்போது நாம் காண்பது பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓடு வேய்ந்த அரண்மனைக் கட்டடம். இன்று உருமாறி, உருக்குலைந்து, சிதைந்து, இடிபாடுகளுடன் காணப்படுகிறது.

தாழ்வாக ஓடுகள் வேயப்பட்ட கட்டடம், நடுமுற்றம், கோம்பைச் சாளரம் (gable windows) ஆகியவற்றைக் காணமுடிகிறது. ஆயுதங்கள் சேமித்துவைக்கும் இடமாகவும், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்ற அரசு அலுவலர்கள் ஓய்வெடுக்கும் இடங்களையும் இரட்டை மாடி வீட்டில் காண முடிகிறது. இஃது அரண்மனையின் மையமான பகுதி ஆகும். வசந்தமாளிகையை ஒட்டி அரச குடும்பத்தினர் நீராடும் குளம் இருந்துள்ளது. தற்போது நீர்வற்றிய நிலையில் பொலிவிழந்து காணப்படுகிறது. கலையம்சங்கள் நிறைந்த வசந்தமாளிகை அரண்மனையின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது. வசந்தமாளிகை மரத்தால் கட்டப்பட்ட இரட்டை அடுக்குக் கட்டடம். இரண்டாம் தளத்தில் மன்னரின் படுக்கை அறை உள்ளது. இந்த அறை மரச்சுவர்களால் தடுக்கப்பட்டுக் காற்று வருவதற்குச் சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறையின் கூரையில் நுட்பமான செதுக்கு வேலைப்பாடுகள் மற்றும் சுவரோவியங்கள் ஆகியவற்றைக் காணமுடிகிறது. வசந்தமண்டபத்தின் படுக்கை அறையில் எட்டரை அடிக்கு நான்கரை அடி அளவில் ஒரே பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட அழகிய கட்டில் ஒன்று காணப்படுகிறது. இதற்கு ‘ஒத்தக்கல் கட்டில்’ என்று பெயர். இது பள்ளியறை என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடாவிளக்கு என்னும் அணையாத விளக்கு எரிந்துள்ளது.
சேரமான் பெருமாள்கள் தங்கள் தலைநகரை கி.பி. 1601 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் அரண்மனைக்கு மாற்றிய பின்னர் இரணியல் அரண்மனை பொலிவிழந்து போயிற்று. இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர்த் தளவாய் வேலுத்தம்பி (கி.பி. 1802-1809) திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதியாக மாறிய பின்னர் இந்த அரண்மனை மீண்டும் புதுப்பொலிவு பெற்றது. 1956 ஆம் ஆண்டு கேரள அரசின் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சில காலம் இஃது அரிசி சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள கூரை ஓடுகள், செம்மரக் கதவுகள், (Rosewood doors), தேக்குமர உத்தரங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. அரிய ஓவியங்களும் திருடப்பட்டுள்ளன. மரத்தாலான சிற்பங்களைக் கப்பலில் ஏற்றி வெளிநாடு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதி உள்ள மரங்களைக் கரையான்கள் அரித்துள்ளன. மழைநீர் வடிந்ததால் சுவர்கள் வலுவிழந்துள்ளன. அரண்மனையின் சுற்றுப்புறம் முட்செடிகள் நிறைந்த புதர்கள் சூழ்ந்திருந்தன.
தமிழ்நாடு அரசு 2014-2015 ஆம் ஆண்டு 3 கோடி 85 லட்ச ரூபாய் நிதியினை இந்த அரண்மனையைப் புனரமைப்பதற்கு 110 விதியின் கீழ் ஒதுக்கினார்கள். ஆனால் எவ்விதமான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்புநூற்பட்டி
- அடையாளத்தை இழந்து அவமானங்களை சுமந்து நிற்கும் இரணியல் அரண்மனை. என்.சுவாமிநாதன். இந்து தமிழ் திசை 15 Jun 2017
- இரணியல் அரண்மனை விக்கிப்பீடியா
- சேர மன்னர் வரலாறு ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை விக்கிசோர்ஸ்
- வேணாடு விக்கிபீடியா
- Eraniel Palace | A Perishing Heritage Monument
- Eraniel palace in Nagercoil – Once a treasure house of Venad now in complete chaos
பிரமிப்பான தகவல்கள் நண்பரே
LikeLike
கருத்திற்கு நன்றி ஐயா..
LikeLike