திரிபுனித்துரா மலை மாளிகை (அரண்மனை) மற்றும் அருங்காட்சியகம்

திரிபுனித்துரா மலை மாளிகை (கனக்கக்குன்னு அரண்மனை) (തൃപ്പൂണിത്തുറ  ഹിൽ പാലസ്), கி.பி. 1855 ஆம் ஆண்டு முதல், முந்தைய கொச்சி அரசர்களின் அரசவையாகவும் வாழ்விடமாகவும் (Royal Court and Official Residence) திகழ்ந்தது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கொச்சி அரசமரபினர் மகோதயபுரம் பெருமாள்களின் (பிற்காலச் சேரர்களின்), தாய்வழி வாரிசுரிமை முறையின்படி வந்த வழித்தோன்றல்கள் ஆவர். இந்த மாளிகையின் பழைய கட்டமைப்புகள் கி.பி. 1853 மற்றும் 1864 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். கேரளாவின் கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியான திரிபுனித்துராவில் கனக்கக்குன்னு என்ற குன்றின் மீது அமைந்துள்ள இந்த மாளிகை, தற்போது கேரள மாநில தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் முழு அளவிலான பண்பாடு மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் (Ethno-Archaeological Museum) செயல்பட்டுவருகிறது. தொன்மை மிக்க இந்த அரச மாளிகையை ஒரு அரும்பொருள் களஞ்சியம் என்று கூறலாம்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பூங்கா, மான் பூங்கா, கலாச்சார அருங்காட்சியகம், ஆகிய பல வசதிகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாத் தலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். புகழ்பெற்ற மலையாள திரைப்படமான மணிச்சித்ரத்தாழு இங்கே படமாக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

திரிபுனித்துரா மலை மாளிகை, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி, கரிங்காச்சிரா, திரிப்புனிதுரா ஹில் பாலஸ் சாலையில் (பின்கோடு 682019) அமைந்துள்ளது. இது திரிபுனித்துரா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். இதன் புவியிடக் குறியீடு 9°57’09.4″N அட்சரேகை 76°21’50.1″E தீர்க்கரேகை ஆகும். இந்த மாளிகை கொச்சியிலிருந்து 10.3 கி.மீ. தொலைவிலும், எர்ணாகுளத்திலிருந்து 8.8 கி.மீ. தொலைவிலும், ஆலப்புழையிலிருந்து 55.7 கி.மீ. தொலைவிலும், கோட்டயத்திலிருந்து 56.7 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 203 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் – எர்ணாகுளம் 10 கி.மீ. தொலைவிலும், விமான நிலையம் கொச்சி அனைத்து நாட்டு விமான நிலையம் 33 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 29.17 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இவ்வூரின் மக்கள்தொகை 92,522 ஆகும்.

சவுத் பிளாக், ஹில் பேலஸ் மியூசியம். விக்கிமீடியா

பெயர்க்காரணம்

பூர்ணை ஆற்றின் கரையில் அமைந்த நிலப்பகுதி என்ற பொருளில் திருபூரணித்துறை என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று ஒரு சாரர் கருதுகிறார்கள். ‘பூர்ண வேதபுரி’ (வேதங்களின் பூரண நகரம்) என்ற சொற்றொடரிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்று பிற்காலத்திய சமஸ்கிருத ஆர்வலர்கள் கருதுகிறார்கள். திரு + புனிதத் + தரா அல்லது திரு + புனிதத் + துறை = திருப்புனிதத் (தரை) துறை என்பது ஓரளவிற்குப் பொருந்தி வருகிறது.

வரலாறு

கி.பி 800 முதல் 1102 வரை 13 குலசேகரர்கள் வம்சத்து மன்னர்கள், மகோதயபுரத்தைத் (திருவஞ்சிக்களம்) தலைநகராகக் கொண்டு, கேரளத்தை ஆண்டு வந்தனர். இந்த மகோதயபுரம் (மாக்கோதைபுரம்), தற்போதைய கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில், பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள கொடுங்கள்ளூர் ஆகும். தேவாரப் பாடல்பெற்ற தலமான திருவஞ்சிக்களம் சிவன் கோவிலைச் சுற்றி மகோதயபுரம் நகரம் அமைக்கப்பட்டது. தற்போது கொடுங்கள்ளூர் என்று அழைக்கப்படும் மகோதயபுரம், கொச்சிக்கு வடக்கே 29 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது முசிறி என்ற பெயரும் உள்ளது. பெரிப்ளூஸ் மற்றும் தாலமி போன்றோர் முஜிரிஸ் (Muziris) என்றும் அழைத்துள்ளனர்.

கொச்சி அரசு (Kingdom of Cochin) என்னும் பெரும்படப்பு ஸ்வரூபம் (Perumpadappu Swarūpam), மகோதயபுரம் பெருமாள்களின் (பிற்காலச் சேரர்களின்) உதிரவழி வழித்தோன்றல்கள் ஆவர். மகோதயபுரம் பெருமாள்களின் அரசு, 12 ஆம் நூற்றாண்டில் சரிவடைந்ததனால், தாய்வழி வாரிசுரிமை முறையின்படி (the Matrilineal System of Inheritance), திருவஞ்சிக்களம் கோவிலும் கொச்சி அரசின் அரச உரிமைகளும் பெரும்படப்பு ஸ்வரூபத்திடம் ஒப்படைக்கப்பட்டது. போர்த்துகீசிய வருகைக்கு முன்னர், மத்திய கேரளாவில் ஒரு பரந்த பகுதியை, கொச்சி அரசு ஆட்சி செய்து வந்தது. இவர்களுடைய குலதெய்வம் திருவஞ்சிக்களத்தின் சிவன் கோவில் ஆகும்.

பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி அரசின் தலைநகராக, கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை, மலப்புரம் மாவட்டம், பெரும்படப்பு வட்டம், பெரும்படப்பு கிராமத்தின் வன்னேரிநாட்டு சித்திரகூடம் திகழ்ந்தது. கொச்சி மன்னர்கள் இங்கு முடிசூட்டிக்கொண்டனர். ஜாமோரின் படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல் காரணமாக முடிசூட்டும் விழா நடக்கமுடியாமல் போனது. மன்னர் இராஜ ராம வர்மாவால் (கி.பி. 1701-1721) சித்திரகூடத்தில் முடிசூட்டிக்கொள்ள முடியவில்லை. எனவே இவர் மணிமுடியை அணியமாட்டேன் என்று சொல்லி வந்தாராம். கி.பி. 1405 ஆம் ஆண்டளவில் கொச்சி அரசின் தலைநகர் கொச்சிக்கு மாற்றப்பட்டது.

கி.பி. 1503 முதல் 1949 ஆம் ஆண்டு வரை (446 ஆண்டுகளாக) 42 மன்னர்கள் கொச்சியில் இருந்து ஆட்சி புரிந்துள்ளனர். கொச்சி அரசு கி.பி. 1500 முதல் 1790 வரை போர்த்துகீசு மற்றும் டச்சு அரசுகளின் நட்பு நாடாக (Portuguese and Dutch Allied State) விளங்கியது. கி.பி. 1790 முதல் 1864 வரை கொச்சி அரசு பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் (Under British suzerainty) இருந்தது. கி.பி. 1863 முதல் 1947 வரை கொச்சி அரசு பிரிட்டிஷ் ஆட்சியில் சுதேச அரசாக (Princely State) திகழ்ந்தது.

சேரமான் பெருமாளின் மருமகனான வீரகேரள வர்மனே (கி.பி. (1537–1565) கொச்சி அரசின் முதல் மன்னர் என்று நம்பப்படுகிறது. எனினும் முதலாம் உன்னிராமன் கொய்கல் (கி.பி. 1500 to 1503) மற்றும் இரண்டாம் உன்னிராமன் கொய்கல் (கி.பி. 1503 to 1537) ஆகிய மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர். கொச்சி அரசி கங்காதர லட்சுமி (கி.பி. 1656–1658) மட்டும்,கொச்சி அரசை ஆண்டவர்களுள் ஒரே பெண் ஆட்சியாளர் ஆவார். இராமவர்மா பரீக்ஷித் தம்புரான் (கி.பி. 1948 – 1949) இந்த அரசின் கடைசி மன்னராவர்.

இவருடைய மறைவிற்குப் பிறகு, 1964 ஆம் ஆண்டில், திரிபுனித்துரா மலை மாளிகை வளாகம் அரண்மனை நிர்வாக வாரியத்தின் (Palace Administration Board) கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1972  ஆம் ஆண்டு முதல் இந்த வளாகம் கொச்சி பல்கலைக் கழகத்திற்குக் குத்தகைக்கு (Lease) விடப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் கேரள மாநில தொல்லியல் துறை இந்த வளாகத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. சில மறுசீரமைப்புகளுக்குப் பின்னர், 1984 ஆம் ஆண்டில் இந்த வளாகம் தொல்லியல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. கொச்சி மற்றும் திருவிதாங்கூர் அரச குடும்பங்கள் நன்கொடையாக அளித்த தொல்பொருட்களைக் கொண்டு 15 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டு மே மாதம் இந்த வளாகம் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது.

திரிபுனித்துரா மலை மாளிகை வளாகம்

சுமார் 51.75  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனை வளாகத்தில், கேரளத்தின் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட, 49 கட்டடங்கள் அமைந்துள்ளன. இவற்றின் கட்டடப் பரப்பு (Plinth Area) 13,000 ச.அடியாகும். இந்த வளாகத்தில் பூமுகம் (நுழைவாயில்), அகத்தளம் (உள் மண்டபம்), ஹோமப்புரா (பூசை அறை), மடப்பள்ளி (மன்னர் குடும்பத்துச் சமையலறை), ஊட்டுப்புரா (உணவருந்தும் அறை), அனுமன் கோயில், தேவரப்புரா (Thevarappura), குலப்புரா மாளிகை (Kulappura Malika), விளம்புபுரா (Vilampupura), வலிய ஊட்டுப்புரா (பெரிய சாப்பாட்டு மண்டபம்) போன்றவற்றைக் காணலாம். இவை கேரளத்தின் பண்டைய சுதேச கட்டடக்கலை மரபினைப் பறைசாற்றுகின்றன.

அரண்மனை வடக்குப் பக்கத்திலிருந்து ஒரு காட்சிக் கோணம், விக்கிமீடியா

இந்த வளாகத்தில் உள்ள மிகப் பழமையான கட்டிடம் கி.பி. 1853 மற்றும் 1864 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி புரிந்த 33 ஆம் கொச்சி மன்னரான இரவி வர்மா என்பவரால் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இரண்டு நடுமுற்றங்களைக் (Courtyards) கொண்ட எட்டுக்கெட்டு மாளிகை மற்றும் ஊட்டுப்புரா (Dining Hall) ஆகியவை 1855 ஆம் ஆண்டில் கட்டப்பட்டன. ஐரோப்பியப் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட பிரதான வளாகத்தின் வடக்குத் தொகுதி (Northern Block of the Main Complex), 1898 ஆம் ஆண்டில், மன்னர் இராம வர்மாவின் (கி.பி. 1895-1914) ஆட்சிக் காலத்தில் நிறைவடைந்தது. அரசவை மண்டபம் (Cabinet Hall) மற்றும் மத்திய தொகுதியில் உள்ள கட்டமைப்பும் இராம வர்மாவே கட்டியுள்ளார்.

இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4730.jpg
மரத்தால் அமைக்கப்பட்ட மாடிப்படிக்கட்டு

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனித்துவம் மிக்க மின்தூக்கி (Lift) அமைச்சரவை மண்டபத்தில் நிறுவப்பட்டது. அமைச்சரவை மண்டபத்தின் வெளிப்புறச் சுவரில் மலர் அலங்கரிப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட விக்டோரியன் ஓடுகள் ஒட்டப்பட்டுள்ளன. உலோகப் பொருட்களைப் பயன்படுத்தி இங்குள்ள கூரையினைக் கேரளக் கலைஞர்கள் பகட்டாக வடிவமைத்துள்ளனர். தாழ்வாரங்களில் பதிக்கப்பட்டிருக்கும் இத்தாலியப் பளிங்கு ஓடுகளும் (Italian Marble Tiles) அரசரின் படுக்கையறையில் பதிக்கப்பட்டுள்ள பீங்கான் ஓடுகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

வளாகத்தின் நிலப்பரப்பு மிக அழகாகத் தளவமைக்கப்பட்டுள்ளது (Landscaped). வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பூங்கா (Pre-Historic Park), மான் பூங்கா (Deer Park), குதிரையேற்ற வசதிகள், ஆகியவற்றை இங்கு காணலாம். இந்த வளாகத்தில் மிக அரிதான மருத்துவ மூலிகை மரங்களும் நிறைந்துள்ளன. கேரள மாநில தொல்லியல் துறையினர் இவ்வளாகத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாத்தும் பராமரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

தொல்பொருள் அருங்காட்சியகம்

மலை அரண்மனை முன் நுழைவாயில் விக்கிமீடியா

நீண்ட நெடிய படிக்கட்டுகள் வழியே மேலேறிச் சென்றால் இந்த வளாகத்தில் அமைந்துள்ள முழு அளவிலான பண்பாடு மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகத்தை (Ethno-Archaeological Museum) அடையலாம். இங்குள்ள வைப்பறையில் (cloakroom) சாமான்கள், காலணிகள், கைப்பைகள், கைபேசிகள், புகைப்படக் கேமரா ஆகியவற்றை வைக்கும்படி சொல்கிறார்கள். அமைச்சரவை மண்டபம், ஓவியக் காட்சிக்கூடம், மரச்சிற்பக் காட்சிக்கூடம், அரச குடும்பத்தின் நகைகளின் காட்சிக்கூடம், கல்வெட்டுக் காட்சிக்கூடம் மற்றும் பல காட்சிக் காட்சிக்கூடங்களை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம்.

இது கேரளத்தின் முதல் அருங்காட்சியகமும் மிகப்பெரும் அருங்காட்சியகமும் ஆகும். இங்கு கொச்சியின் முன்னாள் மன்னர்களின் மிகப்பெரிய சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் கொச்சி மன்னர்களின் தைல ஓவியங்கள் (Oil Painting), சுவரோவியங்கள் (Murals), சிற்பங்கள் (Stone Sculptures), தூரக் கிழக்கு நாடுகளிலிருந்து (Far East Countries) சேகரிக்கப்பட்ட பழங்கால பீங்கான் தொல்பொருட்கள் (Antique Ceramics), மன்னர்களின் மணிமுடிகள் மற்றும் அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள் (Manuscripts), ஆயுதங்கள் (Armoury), நாணயங்கள் (Numismatics), தற்காலத்துக் கலைப்பொருட்கள் மற்றும் அறைகலன்கள் (Furniture) போன்ற பதினைந்து வகை தொல்பொருட்கள் இங்குள்ள மிகப்பெரிய அருங்காட்சியகத்தின் காட்சிக் கூடங்களில் (Galleries) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4732.JPG
கோச் வண்டி – மன்னர்கள் பயன்படுத்தியது
இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் 1800352_london47.jpg
கோச் வண்டி மன்னர்கள் பயன்படுத்தியது

போர்ச்சுக்கல் மன்னர் இம்மானுவேல், கொச்சி மன்னருக்குப் பரிசளித்த, 1.75 கி.கிராம் எடையுடைய, மன்னரின் தங்க மணிமுடி (Golden Crown of the Maharaja) இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நாம் காணும் எபிரேய பைபிள் பழைய ஏற்பாடு (the Hebrew Old Testament Bible) ஆட்டின் தோலால் ஆனது; கேரள வர்மா, இராம வர்மா போன்ற முன்னாள் மன்னர்களின் ஓவியங்களும் மற்றும் பல அரச குடும்பத்துக் கலைப்பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4701.JPG
அரண்மனைத் தோட்டம்
இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4746.jpg
அரண்மனை வளாகம் தோட்டத்திற்குச் செல்லும் வழி

இங்குள்ள காட்சிப் பொருட்கள், இம்மாளிகையில் வாழ்ந்தவாறு, இந்தக் கொச்சி தன்னாட்சி அரசை (Kochi Princely State) ஆட்சிபுரிந்த மன்னர்களின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றுகின்றன. புதிய கற்காலத்துக் குடக்கல்லு (Tombstone), தொப்பிக்கல்லு (Hood stone), செம்புராங்கல் நினைவுச் சின்னங்கள் (Laterite Memorials), சிந்து சமவெளியின் ஹாரப்பாவிலிருந்து சேகரிக்கப்பட்ட மரத்தினாலான தொல்பொருட்கள், ஆகியவற்றையும் இங்கு காணலாம்.

இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4703.jpg
தோட்டம்

இந்த வளாகத்தின் பெரிய தோட்டத்தில் அரிய மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இங்குள்ள மான்களின் பூங்காவில் புள்ளி மான்களையும், கஸ்தூரி மான்களையும் காண முடிந்தது. வரலாற்றுக்கு முந்தைய காலப் பூங்காவில் டைனோசர்களையும் பார்க்கலாம். மொத்தத்தில், இந்த வளாகம் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பின்னணியைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4755.JPG
தோட்டம் நீரூற்று

இங்குள்ள மரபு அருங்காட்சியகத்தில் (Heritage Museum) குளம் (Pond), துளசி போன்ற மருத்துவ மூலிகைகள் போன்றவற்றைக் காண முடிந்தது. கற்சிற்ப அருங்காட்சியகத்தில் பல சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4742.jpg
அரண்மனை வளாகம் தோட்டத்திற்குச் செல்லும் வழி

இங்குள்ள மரபு அருங்காட்சியகத்தில் (Heritage Museum) குளம் (Pond), துளசி போன்ற மருத்துவ மூலிகைகள் போன்றவற்றைக் காண முடிந்தது. கற்சிற்ப அருங்காட்சியகத்தில் பல சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் DSCF4740.JPG
அரண்மனையின் பழைய கட்டடங்கள்

அருகிலுள்ள பஸ் நிறுத்தம்: ஹில் பேலஸ் பஸ் ஸ்டாப், கரிங்காச்சிரா பஸ் நிறுத்தம்.

பார்வையாளர் நேரம்: திங்கள் தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் மதியம் 14: 00 முதல் 16:30 மணி வரை.

நுழைவு கட்டணம்: பெரியவர் – ரூ. 30 / – குழந்தைகள் (5-12) – ரூ. 10 / கேமரா கட்டணம்: ரூபாய் 20, வீடியோ கேமரா: ரூபாய் 1500.

குழந்தைகள் பூங்கா: மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்

தொடர்பு விவரங்கள்: +91 484 2781113

குறிப்புநூற்பட்டி

 1. Hill Palace Museum, Department of Archaeology. http://www.archaeology.kerala.gov.in/monuments/museums-hill-palace/89
 2. History of the Cochin Royal Family: Tracing the Journey of Perumpadappu Swarūpam. Ashalatha Thampuran. https://www.sahapedia.org/history-cochin-royal-family-tracing-journey-perumpadappu-swarupam
 3. Kingdom of Cochin Wikipedia
 4. Kulasekharas of Mahodayapuram https://mindfulnessreddit.blogspot.com/2019/01/Kerala-history-of-kulasekhara-dynasty-social-systems.html

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கேரளா, சுற்றுலா, வரலாறு and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to திரிபுனித்துரா மலை மாளிகை (அரண்மனை) மற்றும் அருங்காட்சியகம்

 1. Dr B Jambulingam சொல்கிறார்:

  உங்கள் பதிவு மூலமாக மற்றொரு அருமையான இடத்திற்குச் சென்ற திருப்தி. அதிகமான, பயனுள்ள செய்திகள். நன்றி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.