‘அக்னிசாட்சி (புதினம்), ‘அந்தர்ஜனம் – ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுகள்’ : கேரளத்து நம்பூதிரிகள் இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் பற்றி விவரிக்கும் இரண்டு நூல்கள் அறிமுகம்

பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் பெண்ணியவாதிகள், வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் குரல் எழுப்பியுள்ளனர். கேரளாவில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றிப் பேசும்போது, நம்பூதிரி (கேரளத்துப் பிராமணர்கள்) இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றியும் ஆணாதிக்க சமுதாயம் விதித்த எண்ணற்ற அடக்குமுறைக் கட்டுப்பாடுகள் பற்றியும் கட்டாயம் பேசத்தான் வேண்டும். நம்பூதிரிப் பெண்களின் உரிமை எவ்வாறெல்லாம் மறுக்கப்பட்டது? முதலில் இவர்கள் பெண்கள் என்பதானாலும் கேரளத்தின் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதனாலும் வீட்டிற்குள்ளேயே அடக்கி வைத்து அடிமைப்படுத்தப் பட்டார்கள்.

கீழ்ககாணும் இரண்டு நூல்களும் ஆணாதிக்கம் மிகுந்த நம்பூதிரி வகுப்பில் நிலவிய பெண்ணடிமைக் கொடுமைகள் குறித்த விரிவான தகவல்களைப் பதிவு செய்துள்ளன.

 1. லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதி, 1976 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட புதினமான ‘அக்னிசாட்சி,’ (അഗ്നിസാക്ഷി) (ஆங்கில மொழிபெயர்ப்பு வசந்தி சங்கரநாராயணன்) வெளியீடு Oxford University Press, 1980 பக். 208.
 2. தேவகி நிலையங்கோடு எழுதி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாழ்க்கை நினைவுக் குறிப்பான ‘அந்தர்ஜனம்: ஒரு நம்பூரிப் பெண்ணின் நினைவுகள்’ (അന്തർജനം: ഒരു നമ്പൂതിരി സ്ത്രീയുടെ ഓർമ്മക്കുറിപ്പുകൾ) (ஆங்கில மொழிபெயர்ப்பு, இந்திரா மேனன் மற்றும் ராதிகா மேனன்) வெளியீடு Oxford University Press, 2012. பக். 111

‘அக்னிசாட்சி’ என்ற புதினமும் ‘அந்தர்ஜனம்’ என்ற வாழ்க்கை நினைவுக் குறிப்பும் அக்காலத்தில் நிலவிய பெண்ணடிமை முறையினை விவரிக்கும் நேரடி சாட்சிகளாகும். நம்பூதிரிகள், சாதியின் பெயரால் தன் இனத்துப் பெண்களின் மீது விதித்த கடுமையான சாதிக்கட்டுப்பாடுகளும் அடக்குமுறையும், பெண்ணடிமை வாழ்க்கை குறித்த சமூகப் பிரச்சனைகளையும் இவர்களுடைய எழுத்துக்களில் நாம் காணலாம்.

நம்பூதிரிப் பெண்களுக்கு ‘அந்தர்ஜனம்’ (Malayalam: അന്തർജനം) அல்லது அகத்தம்மா என்று பெயர். வீட்டினுள்ளே இருப்பவள் என்பது இதன் பொருள். இவர்கள் வீட்டின் இருண்ட சமையல் அறை, பூஜை அறை ஆகியவற்றில் தனிமையில் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டனர். எளிமையான வெள்ளை ஆடையை அணிந்தனர். ஆண்கள் கண்ணில் படாமல் தங்கள் உடலையும் முகத்தையும் மறைத்துக் கொண்டனர். இவர்களுடைய சொந்தத் தந்தையோ சகோதரர்களோ கூட இவர்களைப் பார்ப்பதில்லை. ஆறு அல்லது ஏழு வயதிற்குப் பிறகு, நம்பூதிரிப் பெண்கள் வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே சென்றாலும் பணிப்பெண்கள் புடைசூழ, தாழங்குடையால் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லவேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்காது. குழந்தைத் திருமணங்கள் நடந்தன. விதவை மறுமணத்திற்கு அனுமதியில்லை.

நம்பூதிரி யோகச் சேமசபா (Namboodiri Yogakshema Sabha – Welfare Association) மற்றும் அன்றைய காலத்தின் பிரபலத் தலைவர்களான வி டி பட்டத்திரிப்பாத் (Malayalam: വി ടി ബത്തത്തിരിപ്പാട്), ஆர்யா பல்லம் (Malayalam: ആര്യ ഗ്രോവ്) மற்றும் பார்வதி நிலையம்கோடு (Malayalam: പാർവതി നിലയംകോട്) ஆகியோரால் நம்பூதிரிப் பெண்களின் வன்கொடுமைக்கு எதிராக மேற்கொண்ட சமூக சீர்திருத்தங்கள் மூலம் நம்பூதிரி பெண்களின் அவலநிலை முடிவுக்கு வந்தது.

நம்பூதிரிகள்: சிறு அறிமுகம்

‘நம்பு’ என்றால் நம்பகமானவர் என்றும் ‘திரி’ என்றால் ஒளி, விளக்கு என்றும் பொருள். நம்பூதிரி என்றால் நம்பிக்கை ஒளி என்று பொருள். கேரள சாதி ஆதிக்க சமுதாயத்தில், நம்பூதிரிகள் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஸ்மார்த்த பிராமணர்கள் ஆவர். இவர்கள் கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் ஆந்திராவிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலைக் கணவாய்ப் பாதை வழியாக. கேரளத்துக்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்பது பிரபலமான ஊகம்.

புராணக் கதைகள்

‘கேரளோற்பத்தி’, ‘கேரளமகாத்மியம்’ ஆகிய மலையாள புராணங்கள் நம்பூதிரிகளைப் பற்றி விவரிக்கின்றன. பரசுராமர் தனது கோடரியைக் கடலில் எறிந்து கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரி இடையேயான நிலத்தை (கேரளத்தை) உருவாக்கினாராம். 64 கிராமங்களை உருவாக்கி, அங்கு துளு நாட்டிலும் கேரளத்திலும் பிராமணரகளை அழைத்து வந்து, பிராமணர்களைக் குடியமர்த்தி, நம்பூதிரிப் பட்டங்களையும் வழங்கியதாக இந்தப் புராணங்கள் வாயிலாகத் தெரிகிறது. இவற்றுள் 32 கிராமங்கள் துளு நாட்டிலும் மீதி 32 கிராமங்கள் கேரளத்திலும் இருந்தனவாம். கேரளத்தில் கோவிலோடு இருந்த கிராமங்கள், கிராமச் சேத்திரங்கள் என்று அறியப்பட்டன. இவர்கள் பரசுராமரின் பாரம்பரிய நில உரிமையாளர்களாக மலபாரின் சமூக-ஆன்மீக பிரபுத்துவத்தை உருவாக்கினர். இவர்கள் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் மாகாணங்களில் வாழ்ந்தனர். இவர்கள் பெரும் நிலக்கிழார்களாக இருந்தனர். இவர்களுடைய நிலங்களை நாயர் வகுப்பினர் பராமரித்தனர்.

மாபெரும் அரசியல் சமூக சக்திகள்

சேரமான் பெருமாள் காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிர்வாகம் செய்ததாகக் கிருஷ்ண சைதன்யா கூறியுள்ளார். மகோதயபுரத்துச் சேரர்களின் அரசியலில் பிராமணர்கள் சிறு குழுவாக (Brahmanan oligarchy) இருந்து அதிகாரம் செலுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மகோதயபுரத்துச் சேரர்களின் அரியணைக்குப் பின்னால் பிராமணர்கள் மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தனர்.

சேரர்களின் தலைநகரமான மகோதயபுரத்தில் நாலு தளி (நெடிய தளி, மேல் தளி, கீழ் தளி, சிங்கபுரம் தளி) என்று அழைக்கப்படும் பெருமாளின் நிரந்தர சபை (அமைச்சர்கள்) என்னும் பிராமணர்களின் சபை இருந்துள்ளது. தலைநகரிலிருந்த நான்கு நம்பூதிரிப் பிராமணர்களின் கோவில்களையும் இவர்களே நிர்வகித்து வந்துள்ளனர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டளவில் சேரர்களின் ஆட்சி குன்றிய போது, பிராமணர்களின் செல்வாக்கு சிறிதும் குறையவில்லை. இவர்களின் வளர்ச்சி தவிர்க்க முடியாததாக இருந்தது. இவர்கள் பிற்கால கேரள சிற்றரசுகளின் அரசியலில் வலுவான அதிகாரமும், சத்திரியர்கள் மீது ஆதிக்கமும் செலுத்தினர்.

இவர்கள் பெரும் நிலக்கிழார்களாகவும் திகழ்ந்தனர். இதன் காரணமாகக் கோவில் சொத்துக்களோடு இணைந்த ஊர், ஊரார், (நிர்வாக) சபைகளின் நடவடிக்கைகளிலும் சபை தீர்ப்புகளிலும் முதன்மையும் பெரும் பொறுப்பும் வகித்தனர். இவர்கள் சாக்தர் என்றும் சாக்கியர் என்றும் அழைக்கப்பட்டனர். கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த, நம்பூதிரி இளைஞர்களுக்குக் களரி போன்ற தற்காப்புக் கலை மற்றும் இராணுவப் பயிற்சி அளித்த, சாலைகள் (Chalas = Ancient Martial Arts Training Centers) என்னும் நிறுவனங்களைக் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன.

இந்தக் காலகட்டத்தில் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக நம்பூதிரிகளின் வைதிகம் திகழ்ந்தது. நம்பூதிரிகளின் இராஜதந்திர அணுகுமுறையால், படையெடுப்புகளும் உயிர்ச்சேதமும் நிகழாமல், சிற்றரசுகள் ஒன்றிணைக்கப்பட்டு கோழிக்கோடு சாமூதிரி (Zamorin of Calicut) (Malayalam: സമൂതിരി), கொச்சி, திருவிதாங்கூர் ஆகிய சமஸ்தானங்கள் உருவாகியதாக வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி கருதுகிறார்.

இதன் வாயிலாக அளவற்ற மதம் மற்றும் வைதிகச் சடங்குகளுக்கான சிறப்பான அந்தஸ்தைப் பெற்று அனுபவித்தனர். இந்தக் காலகட்டத்தில் மலையாளமும் சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாள நடையில் இலக்கியங்கள் சமைக்கப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டின் ‘லீலாதிலகம்’ என்ற நூல், மணிப்பிரவாளம் ஒரு கலப்பு மொழி என்று கூறுகிறது. “மலையாளத்தையும் சமஸ்கிருதத்தையும், சிவப்புக்கல் மற்றும் பவளம் ஆகிய மணிகளை மாற்றி மாற்றிக் கோர்ப்பதைப் போல, எந்தவொரு முரண்பாடும் இல்லாமல், ஒன்றிணைக்க வேண்டும்.” என்று சொல்கிறது. கூடியாட்டம் (Malayalam: കൂഡിയാട്ടം) மற்றும் கூத்து (Malayalam: കൂത്തു) ஆகிய கலை வடிவங்கள் கூத்தம்பலங்களில் (Malayalam: കൂത്തമ്പലം) உருவாகி வளர்ந்தன. தேவதாசி முறையும் சேர்ந்து வளர்ந்தது.

நம்பூதிரி இனத்தின் சொத்துரிமை, திருமணம், கட்டுப்பாடுகள்

அதிகாரத்தின் உச்சத்தில் திகழ்ந்த நம்பூதிரிகள் தங்கள் இனத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் திட்டமிட்டுச் செயல்பட்டனர். மதம் மற்றும் சாதிச் சடங்குகள், வைதிக நடைமுறைகள், மரபு சார்ந்த நம்பிக்கைகள், கட்டுப்பாடான வாழ்க்கை நெறி ஆகியவற்றைத் தவறாது கடைப்பிடித்தனர். இவர்களுடைய இனத்துக்கான நிர்வாக சபைகளும், நீதி சபைகளும் உருவாக்கப்பட்டு, சட்டதிட்டங்கள் வரையறை செய்யப்பட்டு, முறையாகச் செயல்படுத்தப்பட்டன.

நம்பூதிரிகள் ஆண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நம்பூதிரி குடும்பத்தின் மூத்த மகனை, நிலபுலன்களுக்கும் சொத்துக்களுக்கும், வாரிசாக்கும் நடைமுறை வழக்கத்திலிருந்தது. மூத்த மகனுக்கு மட்டும் நம்பூதிரி சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமையும் வழக்கத்திலிருந்தது. இளைய மகன்கள் மன்னர் குடும்பங்களிலோ, நாயர் சாதியிலோ திருமணம் செய்துகொள்ள வழிவகை செய்துகொண்டனர். இளைய மகன்களுக்கு நம்பூதிரிகளின் குடும்பத்துச் சொத்தில் எந்த வாரிசு உரிமையும் இல்லை. ஆனால் நாயர்கள் பெண்வழிச் சொத்துரிமை கொண்டவர்கள். நாயர் இனப் பெண்கள் வழியாக இளைய மகன்களுக்கு நாயர்களின் சொத்துக்களையும் அனுபவித்தனர்.

நம்பூதிரி சமூகத்தில் பெண்ணடிமைத்தனம்

நம்பூதிரிப் பெண்களுக்கு எந்த விதமான அதிகாரமும் அளிக்காமல் அவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்குப் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தப் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகவும், எவ்விதச் சுதந்திரமும் முக்கியத்துவமும் இல்லாதவர்களாகவே கருதப்பட்டனர். இவர்களுக்கு அடிப்படைக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. ஆண்கள் இடும் கட்டளைகளைப் பின்பற்றவும், விதிகளுக்குக் கீழ்ப்படியவும், அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும் பெண்கள் வலியுறுத்தப்பட்டனர். பெண்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல், இந்தப் பெண்ணடிமை முறையை ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்ந்தனர்.

நம்பூதிரிகள் தங்கள் இனத்துப் பெண்களைப் பிற இனத்தில் மணமுடித்துக் கொடுப்பதை அறவே தவிர்த்தனர். தந்தைவழி சித்தாந்தமே பலதார மணத்தை அங்கீகரித்தது. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட இந்த சமூகத்தில், அறுபது எழுபது வயதைக் கடந்த நம்பூதிரிக் கிழவர்கள் பத்துப் பன்னிரண்டு வயது நிறைந்த பெண் குழந்தைகளை மணந்து கொண்டனர். தங்கள் சொத்துக்கள் பிளவுபடாமலும் பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாக நம்பூதிரிப் பெண்கள் பெயரளவில் மட்டுமே மனைவியாக வாழும் அவலநிலை உருவாகியது. பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி வைப்பதற்கு இம்முறை அடிகோலியது எனலாம். இதனால் பெரும்பாலான நம்பூதிரிப் பெண்கள் கன்னியராகவும் விதவைகளாகவும் அவல வாழ்க்கை வாழ நேர்ந்தது.

‘ஸ்மார்த்த விசாரம்’ விசாரணை முறை

நம்பூதிரியின் இல்லத்தில் இருக்கும் ஒரு மணமாகாத கன்னியோ, விதவையான ஒரு நம்பூதிரிப் பெண்ணோ முறைதவறிக் கருவுற்றால். இவர்களின் சமூகத்தில் வழக்கிலிருந்த ‘ஸ்மார்த்த விசாரம்’ என்னும் குற்ற விசாரணை முறையின்படி விசாரிக்கப்படுவதுண்டு. முறைதவறிய பாலுறவைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி விசாரணை அமைப்பை செயல்படுத்திய ஓர் இனம் நம்பூதிரிகள் இனமாகும். ஆசார விதிகளின்படி மேற்கொள்ளப்படும் இந்தச் சாதிச்சடங்கில் ஒரு ஸ்மார்த்தர் பிற ‘மீமாம்சகர்களின்’ (நம்பூதிரிகளின்) உதவியுடன் ஒழுக்கமீறல்களை விசாரிப்பார். ‘நாடுவாழி’ என்று அழைக்கப்படும் அரசரின் அனுமதியுடன் விசாரணை நடைபெறும். ‘புறக் கோய்மை’ என்ற அரசப் பிரதிநிதியும் இந்த விசாரணையில் பங்கேற்பார்.

குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிற்கு ‘சாதனம்’ என்று பெயர். குற்றச்சாட்டிற்கு அடுக்களை தோஷம் என்று பெயர். குற்றம்சாட்டப்பட்டதால் இவளை அஃறிணைப் பொருளாகக் கருதிச் சாதனம் என்று அழைத்துள்ளார்கள். இவள் ‘அஞ்சாம்புறை’ என்னும் தனியறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்படுவாள். அஞ்சாம்புறையில் நடைபெறும். விசாரணையில் உதவி செய்வதற்கு ஒரு நாவிதர் அல்லது வண்ணார் இனத்தைச் சேர்ந்த ஒரு முதிய பெண் அமர்த்தப்படுவாள். இவளுக்குத் தாசி என்று பெயர். ஸ்மார்த்தரின் வினாக்களைக் கேட்டு, குற்றவாளியிடம் விடை பெறுவதில் இவள் உதவி செய்வாள். இதற்குத் தாசி விசாரம் என்று பெயர்.

குற்றம் செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் அவள் மீது குற்றம் சுமத்தி விபச்சாரிப் பட்டம் கட்டுவதற்கான ஒரு தலைப்பட்சமான விசாரணை முறை இதுவாகும். சாதனம் முகத்தை மூடியிருப்பாள். கதவிற்குப் பின்னால் நின்று விடை சொல்லுவாள். இந்த விசாரணை முடியும் வரை அன்னம், தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தித் தாசி அவளை அடிப்பதும் சூடு போடுவதும் உண்டு. அறைக்குள் மிளகாயை நெருப்பில் இட்டுப் புகை போடுவார்கள், தரையில் தண்ணீர் ஊற்றி ஈரமாக வைத்திருப்பார்கள். குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்வரை சித்திரவதைகள் நாட்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் தொடர்வதுண்டு.

குற்றவாளி தன்னைக் கெடுத்தவனின் பெயரைச் சொன்னதும், அந்தப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேறிய அவளைச் சாதியிலிருந்து விலக்கி விடுவார்கள்.  ‘படியடைச்சுப் பிண்டம் வைத்தல்’ என்னும் வைதிகச் சடங்கு நடத்தி அவளது சாதி அடையாளத்தை அழித்துவிடுவர். இனி அவள் அந்தர்ஜனம் அல்ல. பிறகு அந்தப் பெண்ணை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து தாழ்ந்த இனத்து ஆண்களுக்கு விற்றுவிடுவார்கள். விற்பனை மூலம் கிடைத்த தொகை அரசாங்கக் கருவூலத்தில் கட்டப்படும்.

இந்த விசாரணையில் குற்றவாளியால் சுட்டப்பட்ட ஆண் / ஆண்களைப் பற்றிய செய்தியினை அரசருக்குத் தெரிவிப்பார்கள். இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்ட ஆண்களுக்கு அரசர் தண்டனை வழங்குவார். குற்றவாளி நம்பூதிரி ஆனால் சாதிவிலக்கும், நாயர் என்றால் நாடுகடத்தலும், நாயர் சாதியைவிடத் தாழ்ந்தவர்களுக்குச் சிரச்சேதமும், தலித்துகளுக்கு கழுவேற்றமும் தண்டனையாக வழங்கப்பட்டது.

குறியேடத்து தாத்ரிக்குட்டி – ஸ்மார்த்த விசாரணை

குறியேடத்துத் தாத்ரிக்குட்டி (குறியேடத்துச் சாவித்திரி) செம்மன்தட்டா குறியேடத்து இராமன் நம்பூதிரியின் மனைவியும், முகுந்தபுரம் தாலுகாவின் கல்பகசேரி அஷ்டமூர்த்தி நம்பூதிரியின் மகளும் ஆவாள். 1905 ஆம் ஆண்டு, இந்த நம்பூதிரி இனத்து இளம்பெண் ஸ்மார்த்த விசாரணைக்கு ஆளானாள். இவள் சிறந்த அழகி. தன் அழகாலேயே ஆணாதிக்க நம்பூதிரி சமூகத்தால் எல்லாக் கொடுமைகளுக்கும் ஆளானாள். அவள் தந்தையும் சகோதரனுமே அவளை பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்குகிறார்கள். முதலிரவன்று, அவள் கணவனின், மூத்த சகோதரன் அவளை அனுபவிக்கிறான். இதற்கெல்லாம் பழி தீர்க்கும் வண்ணம் சமூகத்தின் பிரபலங்களை வசீகரித்துத் தன் வலையில் வீழ்த்துகிறாள். இதற்கான சான்றுகளையும் சேகரித்து வைத்துக் கொள்கிறாள்.

64 ஆண்களின் பெயர்களைச் சொல்லிக் குற்றம் சாட்டுகிறாள். கோழிக்கோடு சாமூதிரி (Zamorin of Calicut) மன்னரின் அரசில் ‘அம்சம்’ அதிகாரியாகப் பணியாற்றிய கொல்லங்கோட்டை (இரிஞ்ஞாலக்குடா) சேர்ந்த மேலங்கத்துக் கோபால மேனனும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குத் தண்டனையாகச் சாதி விலக்கம் அளிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இலங்கைக்குச் சென்ற அவர் சத்தியவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுள் ஒருவர் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் திரையுலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்.

சாதி விலக்கம் பெற்ற தாத்ரிக்குட்டி, தமிழக எல்லையில் கோயம்புத்தூருக்கு அருகில் வாழ்ந்த, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, ஒரு இரயில்வே ஊழியரைத் திருமணம் செய்து கொண்டாளாம். இவர்களுக்குப் பிறந்த அழகான பெண் குழந்தை பிற்காலத்தில் மலையாளத் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த ஒரு முன்னணி நடிகை என்று உறுதிப்படுத்தப்படாத செய்தியும் உள்ளது.

தாத்ரிக்குட்டியிடம் 1905 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்மார்த்த விசாரணை நம்பூதிரிகளின் இன வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றதாகும். இதற்குப் பிறகு ஸ்மார்த்த விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இந்த ஸ்மார்த்த விசாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் கதை வசனத்தில், ஹரிஹரினின் இயக்கத்தில் ‘பரிணயம்’ என்ற மலையாளப் படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. மாடம்பு குஞ்சுக்குட்டனின் ‘பிரஷ்டு’, அரவிந்தனின் ‘மாறாட்டம்’ போன்ற படைப்புகளும் வெளிவந்துள்ளன.

நூலறிமுகம் 1: அக்னிசாட்சி

லலிதாம்பிகா அந்தர்ஜனம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டம், பதானபுரம் வட்டம், கொட்டவாட்டம் (English: Kottavattom, Malayalam: കോട്ടവാറ്റോം) என்ற ஊரில் மார்ச் 30, 1909 தேதி அன்று பிறந்தார். தந்தை தாமோதரன் நம்பூதிரி தாயார். சங்கரப்பள்ளி மனய்கல் ஆரியதேவி அந்தர்ஜனம். நாராயணன் நம்பூதிரி என்பவருடன் 1926 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பீதி மிகுந்த தனிமையுடன் கூடிய, புகை படிந்த சமையலறை மற்றும் ஈரமான மூடிய முற்றங்களில் மேற்கொண்ட கடும் உழைப்புடன் இவரது நாட்கள் கடந்தன. அதிகாலையில் தொடங்கிய வேலையை இரவில் முடித்துக் கொண்டு, குழந்தைகளை உறங்கவைத்த பின்னர், கதவைத் தாழிட்டுவிட்டு சிறு விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு எழுதுவாராம். புகை, போதிய வெளிச்சமின்றி எழுதியதால் கண்கள் பழுதாயிற்று. வலி மிகுந்தால் கண்ணை மூடிக்கொண்டு எழுதுவாராம்.

லலிதாம்பிகா அந்தர்ஜனம்

அக்னிசாட்சி’ புதினம்

அக்னிசாட்சி என்பது லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய மலையாளப் புதினம் ஆகும். லலிதாம்பிகா பல சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதியிருந்தாலும், அக்னிசாட்சி அந்தர்ஜனத்தின் ஒரே புதினம் ஆகும். தன்னுடைய முதுமைப்பருவத்தில் எழுதியுள்ள இந்தப் புதினம், முதலில் மாத்ருபூமி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இதழில் தொடராக வெளிவந்தது. கரண்ட் புக்ஸ் பதிப்பகத்தாரால் 1976 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கேரள சாகித்திய அகதெமி பரிசை வென்றுள்ள இந்தப் புதினம் அந்தர்ஜனம் என்ற நம்பூதிரி பெண்ணின் கதையைச் சொல்கிறது. இப்பெண்கள் சமூக மற்றும் அரசியல் விடுதலைக்காகப் போராட முயன்றாலும், இவர்களைப் பிணைத்திருந்த ஆணாதிக்க நம்பூதிரி சமூகத்தின் பெண்ணடிமைச் சங்கிலிகளை எளிதில் அசைக்க முடியாது போயிற்று.

அக்னிசாட்சி

புராணங்களைப் பிழையில்லாமல் படிக்கும் அளவிற்குப் பெண்குழந்தைகள் கல்வி கற்றால் போதும் என்று கருதப்பட்டது. புராண நூல்கள் தவிர்த்து வேறு நூல்களைப் படிக்க அனுமதியில்லை. நம்பூதிரிப் பெண்கள் கருவுற்றதும் ஆண் குழந்தை வேண்டிப் பூசைகளும், வேண்டுதல்களும் நடப்பது உண்டாம். பலதார மணம் அனுமதிக்கப்பட்ட இந்த சமூகத்தில், அறுபது எழுபது வயதைக் கடந்த நம்பூதிரிக் கிழவர்கள் பத்துப் பன்னிரண்டு வயது நிறைந்த பெண் குழந்தைகளை மணந்து கொண்டனர்.

இவரது புகுந்த வீட்டில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார். பெண்கள் வீட்டின் தலைவாயில் வரைகூடப் போக முடியாதாம். சமையலறையை ஒட்டி பெண்கள் குளிப்பதற்காகச் சிறு குளம் இருக்குமாம். வருடத்திற்கு ஒரு முறைதான் பிறந்தவீடு சென்றுவர முடியும். பிற நம்பூதிரி இல்லங்களில் நடைபெறும் திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளுக்குக் கூடச் செல்ல இயலாது. விருந்துச் சாப்பாடு இவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுமாம்.

இவருடைய கணவரான அச்சன் நம்பூதிரி தன் இனத்திலேயே இரண்டு பெண்களைத் திருமணம் புரிந்தார். வாரியார் இனப் பெண்களுடனும் தொடர்பில் இருந்துள்ளார். கணவர் இவருடைய அறைக்கு வருவதற்கு நாள் நட்சத்திரம் பார்ப்பதுண்டாம். கணவன் மனைவி உறவு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அல்ல என்று இவருக்குத் தெளிவாகப் புரியவைக்கப்பட்டதாம்.

நம்பூதிரி விதவையின் நிலை வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு விதவையை விட பரிதாபகரமானது. தங்கள் கணவர்களின் குடும்பங்களில், கண்ணீரோடும், வலியோடும் வேதனையோடும் வாழ்ந்துவந்த பல குழந்தை விதவைகளே லலிதாம்பிகாவின் புதினங்களில் கருப்பொருள்களாகத் திகழ்ந்தனர். நம்பூதிரி இல்லங்களில் இருட்டறைகளில் விதவைகள் நடைபிணங்களாகவே வாழ்ந்து மடியவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

‘அக்னிசாட்சி’ புதினத்தின் கதைச் சுருக்கம்:

“மானம்பள்ளி மனையின் ஐதீகங்களை, நம்பூதிரி சமூக அனுஷ்டானங்களை அணு பிசகாமல் மேற்கொள்ளும், நம்பூதிரி வீட்டு உண்ணியண்ணன்,” தேதிக்குட்டியை (தேவகிக்குட்டி) திருமணம் செய்துள்ளான். தேதிக்குட்டி பேரழகி, படித்தவள், அன்பே உருவானவள், சாதி வேறுபாடு பார்க்காதவள். அக்னிசாட்சி புதினம் தேவகி என்ற கதாபாத்திரத்தை, சிறைப்பட்ட புனுகுப் பூனை என்று வரையறுக்கிறது. ‘பெண் தனிமைப்பட வேண்டிய வஸ்து அல்ல’ என எண்ணுபவள். உண்ணி இளைஞன், அன்பான மனிதன்; ஒழுக்கமானவன். ஆனால் தேதிக்குட்டியின் பார்வையில் உண்ணி தன் குல ஆசார மரபுகளையோ, விதிகளையோ, அனுஷ்டானங்களையோ எள்ளளவும் மறுக்கவும் ஒதுக்கவும் முடியாதவன்; மாற்றவும் முயலாதவன். கட்டிய மனைவியை இரவில் பார்க்கவும் ‘நல்ல நேரம்’ பார்க்க வேண்டும் என்ற மரபால் பல இரவுகள் கட்டிய மனைவியைப் பார்க்க இயலாமல் போனவன். அவன் நல்லவன்; ஆனால் தனக்குப் பயன்படாதவன்; தன் சாதாரண ஆசையை நிறைவேற்ற ஆசாரம் பார்ப்பவன். இறுதியில் அவ்வளவு பெரிய மனையில் தேவகி மிகவும் தனிமைப்படுகிறாள்.

வெறுத்துப்போன தேதிக்குட்டி, மானம்பள்ளி மனையைவிட்டு வெளியேறி தன்னுடைய பிறந்த வீட்டிற்குப் புறப்படுகிறாள்; கணவனோ வாய் பேசாது கல்லைப் போல நிற்கிறான். மீண்டும் மானம்பள்ளிக்கு வரத் தேதிக்குட்டிக்குத் தடை விதிக்கப்படுகிறது. தேதிக்குட்டி காந்திய இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றுகிறாள். பின்னர் கங்கைக் கரையை அடைந்து கடுமையான தவ வாழ்க்கை மேற்கொள்கிறாள். இதன் மூலம் யோகினி மடத்தின் தலைவியாகிறாள்.  சுமித்திரானந்தா என்று பெயர் பெறுகிறாள். உண்ணி ஒரு பக்திமானாக வாழ்கிறான். ஒரு விசித்திரமானவன் என்று முத்திரை குத்தப்பட்டு இறந்து போகிறான். உண்ணியண்ணனின் மரணத்திற்குக் ‘கடனாற்ற’ காசிக்கு வந்த தங்கம்  சுமித்திரானந்தாவைச் சந்திக்கிறாள். உண்ணி தந்தனுப்பிய ‘சிறு தாலியை’ அவளிடம் ஒப்படைக்கிறாள். தங்கத்தின் மகனைக் காணும் சுமித்திரானந்தா அவனைத் தனக்குப் பிறவாத மகனாக வரித்துக் கொள்கிறாள்.

இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுத்த வரிகள்

மலையாள இலக்கிய வரலாற்றில் சில பெயர்கள் காலத்தின் – வரலாற்றின் – மாற்றங்களின் குறியீடுகளாக விளங்குகின்றன. கேரளாவின் 99 விழுக்காடு நில உரிமைகளைத் தங்கள் கைவசம் வைத்திருந்த (ப.14) நம்பூதிரிகளின் வாழ்வியல் ஆச்சார அனுஷ்டானங்கள் ஒட்டுமொத்தக் கேரளாவையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கப் பயன்பட்டன. குடும்பத்தின் மூத்த மகன் அச்சன் நம்பூதிரிக்கு மட்டுமே நம்பூதிரி குலப் பெண்களை மணமுடிக்கும் உரிமை இருந்தது; சகோதரர்களாகிய அப்பன் நம்பூதிரிகள், குறிப்பாக அரசர் குலத்தோடு உறவு கொண்டிருந்த நாயர் குலப் பெண்களோடு “சம்பந்தம்” வைத்துக்கொள்ளலாமே தவிர, மண உறவு கொள்ள முடியாது. அப்பன் நம்பூதிரியைப் பிற சாதித் தாய்க்குப் பிறந்த குழந்தைகள் தீண்டவும் கூடாது என்ற கொடுமை இருந்தது (ப.15). நம்பூதிரிகளை மணக்கும் நம்பூதிரிப் பெண்களின் ‘குடும்ப வாழ்வு’ அடிமைச் சிறை வாழ்வாகவே இருந்தது. மார்புவரை சேலையுடுத்தி, ஓலைக் குடைகளைப் பிடித்துக்கொண்டு குளிக்கக்கூடத் தனிக் குளத்திற்குப் புறப்பட்ட இவர்கள் வாழ்க்கை, ஆசாரங்களுக்கு அடிமைப்பட்ட நடைப்பிண வாழ்க்கையாகவே இருந்தது. இவர்கள் ‘அந்தர்ஜனங்கள்’ என அழைக்கப்பட்டனர்.

விரக்தி மற்றும் சீரழிவால் பாதிக்கப்பட்ட இவரது சாதியைச் சேர்ந்த சகோதரிகளுக்கு லலிதாம்பிகாவின் புகழ்பெற்ற மலையாள புதினமான அக்னிசாட்சி அறிமுகமானது. இந்தப் புதினம் இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, 1997 ஆண்டு வெளிவந்தது.

நூலறிமுகம் 2: அந்தர்ஜனம்: ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுக் குறிப்புகள்

தேவகி நிலயம்கோடு

கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், பொன்னானி அருகேயுள்ள மூக்குத்தலா (Mookkuthala) பக்கரவூர் மனாவில் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை கிருஷ்ணன் சோமயாஜிபாத், தாயார். பார்வதி அந்தர்ஜனம். முன்னணி கல்வி சிந்தனையாளரும் எழுத்தாளருமான பி. சித்ரன் நம்பூதிரிப்பாத்தின் (P. Chitran Namboodirippad) சகோதரி ஆவார். முறையான கல்வி கற்கவில்லை .1943 ஆம் ஆண்டில், தன்னுடைய 15 ஆம் வயதில், சத்தன்னூர் நிலயங்கோடு மனாவைச் சேர்ந்த ரவி நம்பூதிரியை மணந்தார். நிலயங்கோடுகள் ஒரு முற்போக்கான குடும்பத்தினர் ஆவர். இவருடைய புகுந்த வீட்டில் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும் ஒரு ஆசிரியர் வந்தாராம். இவர் இரவிக்கை அணியவும் அனுமதி கிடைத்ததாம். இப்போது திரிசூரில் வசிக்கிறார். சதீசன், சந்திரிகா, கிருஷ்ணன், கங்காதரன், ஹரிதாஸ் மற்றும் கீதா அவரது குழந்தைகள்.

Devaki Nilayangode
தேவகி நிலையம்கோடு

‘அந்தர்ஜனம்: ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுக் குறிப்புகள்’

தேவகி நிலயம்கோடு தன்னுடைய ‘அந்தர்ஜனம்: ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுக் குறிப்புகள்’ என்ற நூலில், சமூகத்தின் மேலடுக்கில் இருந்த, நம்பூதிரி இல்லத்தின் சமூகத்தின் சுவர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கழித்த வாழ்க்கையை நினைவு கூர்கிறார். அந்தர்ஜனப் பெண்களைக் கட்டுப்படுத்துவதற்கு, மனிதாபிமானமற்ற நம்பூதிரிகள் வகுத்த வாழ்க்கைமுறை, பிற்போக்கான கலாச்சாரம், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள், திருவிழாக்கள், மற்றும் விருந்து ஆகியவை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

Antharjanam Memoirs of a Namboodiri Woman

தேவகி இந்த நூலைத் தனது 75 ஆம் பிறந்தநாளுக்குப் பிறகு எழுதத் தொடங்கினாராம். இவரது பேரன் ததகதனின் (English: Thadhagathan, Malayalam: തതഗതൻ) வற்புறுத்தலின் பேரில், அவருக்குத் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைக் கதையாகச் சொன்னாராம். இவருடைய நினைவுக் குறிப்புகள் முதலில் மலையாள மொழியில் ‘நாஷ்டபோதங்கலிலத்தே (Malayalam: നഷ്ടബോധിംഗലില്ലത്തേ = Meaning: With no Sense of Loss or Regret) என்ற தலைப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. ‘யாத்ரா: காட்டிலும், நாட்டிலும் – காடுகள் மற்றும் நிலங்கள் வழியாக ஒரு பயணம்’ என்ற தலைப்பிட்ட வாழ்க்கைக் குறிப்பின் இரண்டாம் தொகுதி தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2003 மற்றும் 2006 ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் மற்றும் சில சுயசரிதை நூல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, இந்திரா மேனன் மற்றும் இராதிகா பி. மேனன் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் வாயிலாக வெளியிடப்பட்டது.

“அந்த நாட்களில் நம்பூதிரி இல்லங்களில் பெண் குழந்தை பிறப்பது அமங்கலமாகக் கருதப்பட்டதாம். ஆண் மற்றும் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் முற்றிலும் வேறுபாடுகள் இருந்தனவாம். இவர் இடப மாதம், திருவோண நட்சத்திரத்தன்று பிறந்தாராம். அன்று உற்சாகமான ஆரவாரங்கள் எதுவும் கேட்கவில்லை.” என்று எழுதியுள்ளார்.

“நம்பூதிரி குடும்பத்து ஆண்கள் தங்கள் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை மிக அரிதாகவே காண்பதுண்டாம். இவர்களுக்கிடையே மிகக் குறைவாகவே பேச்சு வார்த்தை நடப்பதுண்டாம். வீட்டிலிருந்த இரிக்கனம்மாக்கள் (பாட்டிகள்) பெண் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டார்கள். இன்னொரு இல்லத்திற்குச் செல்லும் பெண் குழந்தைகள் மீது அக்கறை எடுத்துக் கொள்வது தவறு என்று கருதப்பட்டது.”

நல்ல உடை உடுத்த முடியாமலும், ஒப்பனை செய்துகொள்ள முடியாமலும். புகுந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாமலும் பிற ஆண்களின் கண்ணில் படாமலும் கழிந்த இளமைக் காலம் அது என்கிறார். அப்படியே அரிதாக வெளியே சென்றாலும் தாழங்குடைக்குள் முகத்தை மறைத்தவாறு சென்றுவர வேண்டுமாம்.

“அப்போது எங்கள் ஊருக்குச் செய்தித்தாள் வந்ததா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. நம்பூதிரிகள் பயன்படுத்திய பத்தாயப்புறாவில் (Malayalam പഥയപ്പുര) செய்தித்தாள் வந்திருக்கலாம். ஆனால் அவை எங்களுக்குக் கிடைக்கவேயில்லை.” என்கிறார்.

மனைவி என்னும் உரிமை உதாசீனப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட கோபம் மற்றும் பொறாமை ஆகியவை தொடர்ந்து உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தின. பல குடும்பங்களில், ஒரு கணவரை மணந்த மனைவிகள் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.

தாலியறுத்த நிலையில் இளம் விதவைகளைக் காண பெரும்பாலானோர் தயங்கினர். நம்பூதிரி இல்லங்களில் வாழ்ந்த விதவைகள் மிகக் குறைவான வயதுடையோர் ஆவர், தேவகியின் உறவுப் பெண் ஒருவர் 10 வயதிலேயே விதவையாகிவிடாராம். பெண் குழந்தைகள் கிழவர்களுக்கு மணமுடித்து வைக்கப்பட்டதே இதற்கான காரணம். பல குழந்தை விதவைகளை இவர்கள் கணவர்கள் தொட்டதுகூடக் கிடையாது என்கிறார்.

கணவன் மறைவிற்குப் பின்னர் பிறந்தகம் செல்ல இயலாது. இவர்கள் கணவன் வீட்டிலேயே வாழ்ந்து மடிய வேண்டும் என்பது நம்பூதிரி இனத்தின் கட்டுப்பாடு ஆகும். விதவைகள் மோசமாக நடத்தப்பட்டனர். விதவைகள் இது போன்ற ஒரு இருண்ட அறையில் வாழ வேண்டியிருந்தது. மிக எளிய மதிய உணவைச் சமைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு விலக்காகும் (தீட்டுப்படும் காலம்) போது, மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டியிருந்தது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண்கள் மீது யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை. வயதான பெண்கள் கடும் நோய்வாய்ப்பட்டால் மட்டும் வைத்தியர் நேரில் வந்து வாசலுக்கு வெளியே நின்றவாறு நோயாளியைத் தொடாமலேயே வைத்தியம் பார்ப்பதுண்டு. திருமணங்கள் மற்றும் மத விழாக்களில் கலந்து கொள்ள இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. நம்பூதிரிகளுடைய ஆணாதிக்க சமுதாயம் குறித்த இவருடைய எழுத்து வியப்பளிக்கின்றன.

தன் புகுந்த வீட்டு மனிதர்களைப் பற்றிய எந்த மதிப்பீட்டையும் இவர் தெரிவிக்கவில்லை. பெண்களை நியாயமற்ற முறையில் நடத்தியது குறித்து, குறிப்பாகத் தன்னை நடத்தியது பற்றி, எந்த விதத்திலும் கோபமோ காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல் எழுதியது வியப்பளிக்கிறது. பெண்களின் துன்பங்களையும், குறிப்பாக நம்பூதிரி சமூகத்தில் பெண்கள் ஒரு பொருளாகக் (objectification of women) கருதப்பட்டதையும் முன்வைக்கும் ஒரு முயற்சி தன்னுடைய நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் வாதிடுகிறார்.

மதிப்பாய்வு

நம்பூதிரிப் பெண்களின் பெண்ணடிமைத்தனத்திற்கும் பரிதாபகரமான நிலைமைக்கும் ஆண் ஆதிக்கம் மிக்க உயர் சாதி நம்பூதிரி இனத்தை எந்த அளவிற்கு தொடர்புபடுத்த முடியும்? இந்த வினாவிற்கான விடையை மேற்சொன்ன இரண்டு நூல்களிலும் காணலாம். கேரளாவில், பெண்களை அடிமையாக்குவதில் நம்பூதிரி ஆணாதிக்க சமுதாயம் வகித்துள்ள முக்கிய பங்கு குறித்து இந்த இரண்டு நூல்களும் சான்று பகர்கின்றன. அநீதி மிக்க, மதம் சார்ந்த ஆணாதிக்க சமுதாயம் காரணமாக மட்டுமே, நம்பூதிரிப் பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள் அல்லது அடிபணிய வைக்கப்பட்டார்கள் என்பது இந்த நூல்கள் உணர்த்தும் நீதி.

யோகச் சேம சபையினரின் சிறந்த முயற்சிகள் மற்றும் வி.டி.நம்பூதிரிபாத் போன்ற சமூக சேவகர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, இன்று நம்பூதிரி பெண்கள் இந்தப் பெண்ணடிமை அல்லது அடக்குமுறைகளிலிருந்து பெரும் அளவில் விடுதலை பெற்றுள்ளனர். சமுதாய மாற்றத்திற்குக் காரணமாகத் திகழ்ந்த இந்த இரண்டு நூல்களை நம்பூதிரிப் பெண்கள் நன்றியுடன் போற்றி வருவது கண்கூடு.

குறிப்புநூற்பட்டி

 1. அக்கினி சாட்சி. ப. விமலா ராஜ். https://www.commonfolks.in/bookreviews/agni-saatchi
 2. நம்பூதிரி விக்கிபீடியா
 3. விலக்கப்பட்டவர்கள். ஜெயமோகன். https://www.jeyamohan.in/972/
 4. A window into a social milieu The Hindu , July 03, 2011
 5. An Antharjanam remembers. The Hindu July 02, 2011
 6. Dual subjugation of Namboodiri Women before the 1950s: An analysis of Agnisakshi and Antharjanam. Shinu Sabu and Garnet P T.
 7. Chera/Perumals of Makotais
 8. The Namboothiri Community – A History

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கேரளா, பெண் விடுதலை, மலையாளம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ‘அக்னிசாட்சி (புதினம்), ‘அந்தர்ஜனம் – ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுகள்’ : கேரளத்து நம்பூதிரிகள் இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் பற்றி விவரிக்கும் இரண்டு நூல்கள் அறிமுகம்

 1. ஸ்ரீராம் சொல்கிறார்:

  சிறந்த பகிர்வு.  சுவாரஸ்யம்.

  Like

 2. Dr B Jambulingam சொல்கிறார்:

  அக்கால சமூகச் சூழலை அலசி ஆராய்கின்ற இரு நூல்களின் மதிப்புரை சிறப்பு.

  Like

 3. துரை செல்வராஜூ சொல்கிறார்:

  அந்த காலத்தில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் வேதனையாகிறது…

  Like

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  பெண்களை மதிக்காமல் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கிறோம்.

  கட்டுரை (நிறைய தகவல்கள் முன்னமே தெரியும் என்றாலும்) ரொம்பவே சுவாரஸ்யம். ஆனால் ரொம்ப ரொம்ப நீளம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

  இன்னொன்றையும் படித்திருக்கிறேன். ‘விரும்பி திருமணமானவளை வரச் சொன்னால், சென்றுவிடுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. கணவன் அந்தச் சமயங்களில் ஒன்றும் சொல்லாமல் கடந்து செல்வதும் அங்கு சாதாரணமான நிகழ்வாக இருந்திருக்கிறது’.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.