பாலயூர் மகாதேவா கோவில் (English: Palayur Mahadeva Temple, Malayalam: പാലയൂർ മഹാദേവക്ഷേത്രം) , கேரளாவின் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு வட்டம் பாலயூரில் (Malayalam: പാലയൂർ) அமைந்திருந்த தொன்மை மிக்க கோவிலாகும். இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோவில் சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் இக்கோவில் இன்று இல்லை. இந்தக் கோவில் கிறிஸ்தவர்களால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புனித தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கட்டப்பட்டது. இந்தச் சிரிய தேவாலயம் (English: Syrian church) கி.பி 52 ஆம் ஆண்டளவில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் (அப்போஸ்தலர்களில்) ஒருவரான செயின்ட் தாமஸால் நிறுவப்பட்டதாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.
பரசுராமர் தோற்றுவித்த கேரளா
விஷ்ணுவின் ஆறாம் அவதாரமாகக் கருதப்படும் பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்ததால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை. சத்திரியர்களைக் கொன்ற பாவத்தைக் களைவதற்கு கோகர்ணாவில் தவமியற்றிய பரசுராமர், வருணனின் உதவியைக் கொண்டு கோகர்ணாவிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையில் நிலத்தை உருவாக்கினார். இதுவே கேரளம் ஆகும். பரசுராமர் இந்த நிலத்தை நம்பூதிரி பிராமணர்களுக்கு நன்கொடையாக அளித்து அங்கு 64 கிராமங்களை உருவாக்கினார். இந்தக் கிராமங்களில் நம்பூதிரி பிராமணர்களைக் குடியேற்றினார். 64 கிராமங்களுள் 32 துளு மொழி பேசும் பகுதியில் (கோகர்ணம் மற்றும் பெரம்புழா இடையே) உள்ளன, மீதமுள்ள 32 கிராமங்கள் கேரளாவில் மலையாள மொழி பேசும் பகுதியில் (பெரம்புழா மற்றும் கன்னியாகுமரிக்கு இடையில்) உள்ளன.
கேரள மக்களின் வாழ்வு தழைப்பதற்காகப் பரசுராமர் கேரளத்தில் 108 எனும் எண்ணிக்கையில் சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள் மற்றும் தேவி (பகவதி = துர்க்கை) ஆலயங்களை நிறுவினார். அதோடு அவற்றைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்காகப் பல நம்பூதிரி பிராமணர் குடும்பங்களை நியமித்தார். இந்த 108 சிவன் கோவில்களின் பெயர்கள் புகழ்பெற்ற 108 சிவாலய நாம ஸ்தோத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்தோத்திரம் மலையாளத்தில் எழுதப்பட்டு. இதனை யார் இயற்றினார்கள் என்று தெரியவில்லை.
அவற்றில் ஒன்று பாலையூர் மகாதேவா கோவில் என்று 108 சிவாலய நாம ஸ்தோத்திரம் சொல்கிறது. இந்த ஸ்தோத்திரத்தில் உள்ள கோவில்களின் வரிசையில் 89 ஆவதாக பாலயூர் மகாதேவர் கோவில் இடம்பெறுகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக இந்த வளாகத்தைச் சுற்றிலும் குளங்கள் காணப்படுகின்றன.

அமைவிடம்
புனித தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், (English: St. Thomas Syro-Malabar Catholic Church, Malayalam: സെന്റ് തോമസ് സിറോ-മലബാർ കത്തോലിക്കാ പള്ളി) கேரளாவின் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு வட்டம், பாலயூரில் (Malayalam: പലയൂർ) அமைந்துள்ளது. இதன் பின் கோடு 680506 ஆகும். இதன் புவியிடக் குறியீடு 10° 34′ 57.108” N அட்சரேகை 76° 1′ 54.9516” E தீர்க்கரேகை ஆகும். சாவக்காடு, குருவாயூர், திருச்சூர், குட்டிப்புரம், கொடுங்களூர், மற்றும் பல இடங்களிலிருந்து பாலயூருக்குப் பஸ் வசதி உள்ளது.
செயின்ட் தாமஸின் கேரளப் பயணம்
செயின்ட் தாமஸ் இயேசு தமது நற்செய்தி பணிக்காகத் தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவர் ஆவார். இயேசுவின் நற்செய்தியினை அறிவிப்பதற்காக யூத வணிகர்களுடன் இந்தியாவிற்குக் கடற்பயணம் மேற்கொண்டார்.
கி.பி 52 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்த, கேரளத்தின் முசிறித் துறைமுகம் (பிளினியின் பிரைம் எம்போரியம் இந்தியா) வழியாக இவர் இந்தியாவிற்குள் நுழைந்தார். கிறிஸ்தவ மத பிரச்சாரம் மேற்கொண்டு, பலரையும் இயேசுவின் விசுவாசிகளாக மாற்றினார். இங்கு கிறிஸ்தவ மதம் நிலைபெறப் பல்வேறு பணிகள் ஆற்றியதாகக் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கேரளம் மற்றும் தமிழகத்திற்கு வந்த செயின்ட் தாமஸ் இயேசுவின் போதனைகளைப் பற்றி விளக்கியும், சில தேவாலயங்களைத் தோற்றுவித்தும் தொண்டாற்றியுள்ளதாகப் ‘புனித தாமஸின் பணிகள்’ என்ற நூல் வாயிலாக அறிய முடிகிறது. இப்பகுதியில் பலருக்குத் திருமுழுக்காட்டு அளித்து ‘புனித தோமாக் கிறிஸ்தவர்கள்’ என்றழைக்கப்படும் கிறிஸ்தவ சமூகத்தைத் தோற்றுவித்தார்.
தான் சுவிசேஷம் செய்த விசுவாசிகளுக்காகக் கேரளத்தின் மலபார் கடற்கரையில் ‘ஏழரப்பள்ளிகள்\ என்னும் ஏழு மற்றும் அரை தேவாலயங்களை நிறுவினார். இவற்றுள் கோட்டக்காவில் (மாலியங்கராவில்) உள்ள கோட்டக்காவு தேவாலயமே கேரளாவில் செயின்ட் தாமஸால் நிறுவப்பட்ட முதல் தேவாலயமாகக் கருதப்படுகிறது. செயின்ட் தாமஸ் சிரோ – மலபார் கத்தோலிக்கத் தேவாலயம் இவரால் நிறுவப்பட்ட இரண்டாம் தேவாலயம் ஆகும். இந்தச் சிறிய தேவாலயத்தின் மூலக் கட்டமைப்பு (original small church structure) அதன் பூர்வீக மனையில் (original site) தக்கவைக்கப்பட்டுள்ளது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டில், தேவைக்கேற்ப, இந்த இடத்தின் புனிதத் தன்மை கெடாதவாறு, இந்த மனையைச் சுற்றிக் கணிசமான புதிய கட்டுமானங்களை, ரெவரெண்ட் ஃபெனிச்சி (English: Reverend Fenichi) மேற்கொண்டார். திருவிதாங்கோட்டில் (கன்னியாகுமரி) அரச்சன் (மன்னன்) கொடுத்த நிலத்தில் செயின்ட் மேரி தேவாலயம் கட்டப்பட்டது. எனவே அரப்பள்ளி (அரை தேவாலயம்) என்று பெயர். இந்தத் தேவாலயங்களை மக்கள் எழரைப்பள்ளிகள் என்று அழைத்து வருகின்றனர்.
- கோட்டக்காவு தேவாலயம் – வடக்கு பராவூர் (Kottakkavu Church – North Paravur) – இது கேரளாவின் முதல் தேவாலயமாகக் கருதப்படுகிறது. செயின்ட் தாமஸால் கி.பி. 52 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தேவாலயத்தில் நிறுவப்பட்ட ஒரு மர சிலுவை 18 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது, ஆனால் திப்பு சுல்தான் முற்றுகைக்குப் பின்னர் அழிக்கப்பட்டது. இங்கு பாதுகாக்கப்படும் பாரசீகச் சிலுவை கி.பி 880 ஆம் ஆண்டில் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
- செயின்ட் தாமஸ் சிரோ – மலபார் கத்தோலிக்க தேவாலயம் – பாலயூர் (St Thomas Syro – Malabar Catholic Church – Palayoor). அப்போஸ்தலரான செயின்ட் தாமஸால் கி.பி. 52 ஆம் ஆண்டு கட்டப்பட்டதால் இது ஒரு திருத்தூதர் (அப்போஸ்தலர்) தேவாலயம் (Apostolic Church) என்று பெயர் பெறுகிறது. இயேசுவின் நற்செய்திகளை இங்கு போதிக்கத் தொடங்கினார். இங்கிருந்த மக்கள் சிலரைக் கிறிஸ்தவ விசுவாசிகளாக மாற்றினார்.
- மார்தோமா போன்டிஃபிகல் ஆலயம் – மல்லியங்கரா, கொடுங்கல்லூர் (The Marthoma Pontifical Shrine – Maliankara in Kodungallur) – இந்தத் தேவாலயம் கேரளாவின் அழிகோடு கிராமத்தில், கொடுங்கல்லூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் பெரியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்தோ பெர்சியன் பாணியில் கட்டப்பட்ட இத்தேவாலயத்தில், இத்தாலியின் ஆர்டோனா (Ortona in Italy) நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட செயின்ட் தாமஸின் வலது கை எலும்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- செயின்ட் தாமஸ் தேவாலயம் – கொக்கமங்கலம் (St Thomas Church – Kokkamangalam) – ஆலப்புழா மாவட்டத்தில் சேர்த்தலா அருகே அமைந்துள்ளது. செயின்ட் தாமஸ் கொக்கமங்கலத்திற்குச் சென்று அங்கு தங்கி ஒரு வருடம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இவர் இங்கிருந்த 1600 பேரைக் கிறிஸ்தவ விசுவாசிகளாக மாற்றினார். இவர் தன் விசுவாசிகளுக்காக இங்கு ஒரு சிலுவையை நிறுவினார். கேரளாவில் புகழ்பெற்ற ‘ராம்பன் பட்டு’ என்ற கிறிஸ்தவ நாடோடிப் பாட்டு இது குறித்து விவரிக்கிறது.
- செயின்ட் தாமஸ் தேவாலயம் – நிலக்கல் (St Thomas Church – Nilakkal) – நிலக்கல் ஒரு காடு, இது ரன்னிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட 52 கிலோமீட்டர் தொலைவிலும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமாலா அருகிலும் உள்ளது. கி.பி. 54 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. செயிண்ட் தாமஸ், ஹப்பனுடன் இங்கு வந்தார். இங்கிருந்த 1100 பேரைக் கிறிஸ்தவ விசுவாசிகளாக மாற்றினார்
- கொல்லம் தேவாலயம் (Kollam Church) – பண்டைக் காலத்தில், கொல்லம் ஒரு பெரிய துறைமுகமாகவும் வர்த்தக மையமாகவும் இருந்தது, இதன் காரணமாக செயின்ட் தாமஸ் துறைமுகத்திற்கு அருகில் ஒரு தேவாலயத்தை நிறுவினார். அரேபியக் கடலின் சீற்றத்தால் இந்தத் தேவாலயம் அழிக்கப்பட்டது.
- செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலயம் – நிரணம் (St. Mary’s Orthodox Syrian Church – Niranam) – கொல்லத்திலிருந்து திரும்பிச் செல்லும் வழியில், செயின்ட் தாமஸ் கடல் வழியாகத் திருவல்லா அருகேயுள்ள நிரணம் வந்தார். நிரணம் வலிய பள்ளி என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்தத் தேவாலயத்தை, நிரணம் என்ற இடத்தில், கி.பி 54 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நிரணம் வலிய பள்ளி என்னும் “திரிக்பலேஸ்வரம்” கேரளாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். அவர் பட்டமுக்கில் (Pattamukkil) மற்றும் தய்யில் (Thayyil) என்ற இரண்டு இந்து பிராமண குடும்பங்களையும், மாங்கி (Manki) மற்றும் மாடத்திலன் (Madathilan) என்ற இரண்டு நாயர் குடும்பங்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். பட்டமுக்கில் குடும்ப உறுப்பினர்களுக்கும் மதகுருவிற்கான அதிகாரங்களையும் (priestly powers) இவர் வழங்கினார்.
- செயின்ட் மேரி தேவாலயம் – திருவிதாங்கோடு (St Mary’s Church – Thiruvithamcode) – கி.பி 63 ஆம் ஆண்டில் திருவிதாங்கோட்டில் (தமிழ்நாடு) கட்டப்பட்ட இந்த தேவாலயம் அரப்பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. சேர மன்னன் உதியன் சேரலாதன் ‘அமலகிரி தேவாலயம்’ என்று பெயரிட்டு அழைத்ததாகத் தெரிகிறது. கேரள மாநில எல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தேவாலயம் உலகின் பழமையான தேவாலயங்களுள் ஒன்றாகும். இந்தத் தேவாலயத்தில் இன்றும் பிரார்த்தனை நடைபெறுகிறது. இந்தத் தேவாலயம் இன்றுவரை ஒரு முறை கூட புனரமைக்கப்படவில்லை.
பாலயூர் தேவாலயம்
இந்த ஏழு தேவாலயங்களுள் பாலயூர் தேவாலயம் மட்டுமே செயின்ட் தாமஸின் காலத்திலிருந்து ஒரே இடத்தில் தொடர்ச்சியாக இருந்துள்ளது. இது இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கான தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளது. செயின்ட் தாமஸ் நிறுவிய ஆதி தேவாலயம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இருந்துள்ளது. பாலயூர் திருச்சபைக்கு (English: Parish of Palayur), அப்போதிருந்த பழைய கட்டமைப்பைச் சுற்றி மிகவும் வசதியான தேவாலயத்தை உருவாக்க, கி.பி. 1607 ஆம் ஆண்டு, இத்தாலிய இயேசு சபையின் அருட்தந்தையின் (English: Italian Jesuit Fr.), – திருச்சபை அதிகாரிகளிடமிருந்து – அனுமதி கிடைத்ததாம். ஏப்ரல் 16, 2000 ஆம் தேதியன்று பாலயூர் தேவாலயம், முதல் பேராயரால், யாத்திரை மையமாக (English: first Archdiocesan pilgrim center) உயர்த்தப்பட்டது. இத்தாலியின் ஓர்டோனாவிலிருந்து (English: Ortona, Italy) வரவழைக்கப்பட்ட புனித தாமஸின் நினைவுச்சின்னம் (Relic of St. Thomas) தேவாலயத்தின் பிரதான பலிபீடத்தில் நிறுவப்பட்டது.

செயின்ட் தாமஸ் – பாலயூர் பயணம்
செயின்ட் தாமஸ் முசிறியிலிருந்து (கொடுங்கல்லூர்) இருந்து, உப்பங்கழிகள் வழியாகப் படகில் பயணித்து, பாலயூருக்கு வந்தார். அந்த நேரத்தில், பாலயூர் கிராமம், பிராமணர்கள் மற்றும் யூதர்களின் கைப்பிடியில் இருந்தது. இவர் பாலயூரில் “ஜூடங்குன்னு” (யூதர்களின் மலை என்று பொருள்) என்னுமிடத்தில் வாழ்ந்த யூத வியாபாரிகளைச் சந்திக்கவும், கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் வந்தார். இன்று இங்குள்ள ‘பொட்டுக் குளம்’ (English: ‘Bottukulam’) என்று அழைக்கப்படும் படகுத்துறை செயின்ட் தாமஸின் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செயின்ட் தாமஸ் பாலயூரில் நிகழ்த்திய அற்புதம் – புராணக்ககதை
செயின்ட் தாமஸ் பாலயூருக்கு வந்து மதப்பிரச்சாரம் மேற்கொண்டது குறித்து ஒரு வரலாற்றுப் புராணக்கதை உள்ளது. புனித தாமஸ் பாலயூரில் வந்திறங்கியபோது, பாலயூர் கோவிலுக்கு அருகிலிருந்த தலியகுளத்தில் (Malayalam: തലിയകുലം, English: Thaliakulam) இந்து பிராமணர்கள் நீரடிக் கொண்டிருந்தர்கள். தலியகுளத்தில் நீராடிய பிராமணர்கள், மந்திரங்களை உச்சரித்தபடி, இரு கைகளிலும் நீரை அள்ளி மீண்டும் குளத்தில் விட்டு அர்க்கியம் (English ‘Arghyam’) செய்து சூரியக் கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அர்க்கியம் என்ற வடமொழிச் சொல்லுக்குக் காணிக்கை, படையல் என்று பொருள். பிராமணர்கள் சந்தியாவந்தனம் போன்ற சடங்குகளைச் செய்யும்போது, காயத்திரி மந்திரத்தை உச்சரித்தபடி, வலது உள்ளங்கையில் நீரை அள்ளி வானத்தில் எறிவதுண்டு. இந்த வழிபாட்டுமுறை ஹாரப்பன் மற்றும் பாரசீக மரபைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
அர்க்கியம் செய்துகொண்டிருந்த பிராமணர்களின் உள்ளங்கையிலிருந்த தண்ணீர் மீண்டும் குளத்திலேயே விழுந்து கொண்டிருந்ததைக் கண்ட செயின்ட் தாமஸ் பெரும் வியப்படைந்தார். பிராமணர்கள் அர்க்கியம் விட்டு இறைத்த நீரைச் சூரியக் கடவுள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? தண்ணீர் மீண்டும் குளத்தில் விழுவது ஏன்? என்று அவர்களிடம் செயின்ட் தாமஸ் கேட்டார்.
அவர்கள் செய்ததைப் போலவே தான் நீரை இறைத்தால் எனது கடவுள் அதனை ஏற்றுக்கொள்வார். நீர் மீண்டும் குளத்தில் விழாது. என்று சவால் விட்டார். பரிசுத்த திரித்துவத்தை (English: Holy Trinity) ஒன்று கூட்டி, சிலுவையின் அடையாளத்தை நிறைவு செய்தபடி, குளத்து நீரை உள்ளங்கையில் அள்ளி வானத்தை நோக்கி இறைத்தார். அப்போது அற்புதம் நிகழ்ந்தது. மேல்நோக்கி இறைத்த நீர் அப்படியே நிலையாக நின்றது. நீர் கீழே விழவேயில்லை.
இந்த அற்புதத்தை நிகழ்த்தியதன் வாயிலாக அவர் பாலயூரில் இருந்த பல பிராமணர்களையும் யூதர்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றினார். அவர்களை அந்தத் தலியகுளத்திலேயே திருமுழுக்காட்டி ஞானஸ்நானம் வழங்கினார். கேரள சூரியானி வரலாற்று (English: Kerala Sooriyani history), ஆவணம் செயின்ட் தாமஸ் 12 நம்பூதிரி வைதிகப் பிராமணர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார் என்று குறிப்பிடுகிறது.
கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாத பிராமணர்கள் பாலயூருக்குச் சாபமிட்டனர். இதன் பிறகு இந்த இடம் ‘சாபக்காடு’ (தற்போது சாவக்காடு என்று பெயர்) அல்லது “சபிக்கப்பட்ட இடம்” என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிராமணர்கள் தங்களது அடுத்த நீராடலை வேம்பநாட்டில் மேற்கொள்வதாகக் கூறி, அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றனர்.
அன்று செயின்ட் தாமஸ் நிகழ்த்திய அற்புதத்தை நினைவுகூறும் விதமாக இன்று இக்குளக்கரையில் கருங்கல்லாலான ஞானஸ்நானத் தொட்டி ஒன்றைக் காட்சிப்படுதியுள்ளார்கள். செயின்ட் தாமஸால் கட்டப்பட்ட தேவாலயத்தையும் முன்பிருந்த அதே இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். செயின்ட் தாமஸால் புனிதப்படுத்தப்பட்ட ஆதி பலிபீடம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 45 அடி உயரம் கொண்ட செயின்ட் தாமஸின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்தியக் கிறிஸ்தவ வரலாறு மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது.

செயின்ட் தாமஸின் கேரள வருகை குறித்தும், தேவாலயங்களை எழுப்பியது குறித்தும், இங்கிருந்த இந்துப் பூர்வ குடியினரைக் கிறிஸ்தவ விசுவாசிகளாக மாற்றியது குறித்தும் கீழ்காணும் சான்றுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கி.பி. மூன்றாம் நூற்றண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், ‘தாமஸின் செயல்கள்’ என்ற உரைநடை ஆவணத்தை செயின்ட் தாமஸை இந்தியாவுடன் இணைக்கும் மிகப்பழைய சான்று என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.
மிலன் நகரைச் சேர்ந்த ஆம்ப்ரோஸ் (English: Ambrose of Milan), நாசியன்சஸின் ஜெரோம் கிரிகோரி (English: Gregory of Nazianzus, Jerome), மற்றும் சிரியரான எஃப்ரெம் (English: Ephrem the Syrian) உள்ளிட்ட, கி.பி. 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல ரோமானிய எழுத்தாளர்கள் செயின்ட் தாமஸின் இந்திய பயணத்தைப் பற்றிக் குறிப்பிள்ளனர்.
அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த செயின்ட் கிளெமென்ட்டின் (English: St. Clement) ஆசிரியரான பான்டீனஸ் (English: Pantaenus) என்பவர், புனித எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தியுடன் (English: Gospel of Matthew in Hebrew language) இந்தியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ சமூகத்திற்கு வருகை புரிந்ததாக, சிசேரியாவைச் சேர்ந்த யூசிபியஸ் பதிவு (Eusebius of Caesarea) செய்துள்ளார்.
கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பாரம்பரியத்தின் தோற்றம் குறித்த சான்று 1601 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தாமஸின் பாடல்கள் அல்லது ‘தோமா பர்வம்’ என்ற பதிப்பில் காணப்படுகிறது. இப்பாடல்கள் வடிவில் பெரியதும் பழையதுமான படைப்பின் சுருக்கம் என்றும் நம்பப்படுகிறது.
பக்கலோமட்டம் (Pakalomattom), சங்கரபுரி (Sankarapuri), கல்லி (Kalli), காளியங்கல்(Kaliyankal), நெடம்பிள்ளி (Nedumpilly), பனக்கமட்டம் (Panakkamattom), குன்னப்பிள்ளி (Kunnappilly), வாழப்பிள்ளி (Vazhappilly), பயப்பள்ளி (Payyappilly), மாலியக்கல் (Maliakkal), பட்டமுக்கு (Pattamukku) மற்றும் தையில் (Thaiyil) ஆகிய பிராமணக் குடும்பங்களைக் கிறிஸ்தவ விசுவாசிகளாக மாற்றியதன் மூலம் கிறிஸ்தவ சமூகம் உருவானதாக ‘ஒன்னாம் நூற்றாண்டில் தோமாஸ்லீஹாயுடே கேரளா கிறிஸ்தவ சபா’ என்ற ஆவணத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. செயின்ட் தாமஸின் விசுவாசிகள் குடுமி வைத்துக்கொண்டும் பூணூல் அணிந்துகொண்டும் காட்சியளித்தனராம்.

கேரளத்துப் பெருமாள் குலத்தை (English: Perumals of Kerala) சேர்ந்த சேர மன்னரான ஸ்தாணு இரவி வர்மாவின் (Malayalam: സ്ഥാണു രവി വർമ) (கி.பி. 844 – 885) ஆட்சிக்குட்பட்ட கொல்லத்தின் ஆளுநரான அய்யனடிகள் திருவடிகள் (English: Ayyanadikal Thiruvadikal), மார் சபீர் இம்போ (English :Mar sapir Imbo) என்ற கேரளத்து சிரிய கிறிஸ்தவ வணிக அதிபரால், கொல்லத்திற்கு அருகில் நிறுவப்பட்ட, தரிசப்பள்ளி தேவாலயத்திற்கு (தெரசா (பள்ளி) தேவாலயத்திற்கு) நிலக் கொடை (English: Land Grant) வழங்கினார். ஸ்தாணு இரவி வர்மாவின் 5 ஆம் ஆட்சியாண்டிற்கு (அதாவது கி.பி. 849 ஆம் ஆண்டு) இந்தச் செப்பேடு தேதியிடப்பட்டுள்ளது. தேவாலயத்திற்கு நிலக்கொடையளிக்கப்பட்டதோடு, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட பல உரிமைகள் மற்றும் சலுகைகளையும் இச்செப்பேடு விவரிக்கிறது. கேரளத்தின் முக்கிய வரலாற்றுச் செப்பேடுகளுள் ஒன்றான இந்த ஆவணத்தின் தேதியினைத் துல்லியமாக தீர்மானிக்க முடிகிறது. இந்த அரச பட்டயம் கிரந்தம் கலந்த வட்டெழுத்தில் ஆறு செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிறிஸ்தவ வரலாறுத் தொடர்பான முதல் செல்லுபடியாகும் / உண்மையான ஆவணம் இதுவாகும். (செயின்ட் தாமஸ் கட்டியதாகக் கூறப்படும் எட்டுத் தேவாலயங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிட வேண்டும்)
குறிப்புநூற்பட்டி
- 108 Shiva Temples in Kerala created by Lord Parasurama https://www.vaikhari.org/108shivalaya.html
- Ezharappallikal or the Seven and a Half Churches built by St Thomas in Kerala. Pranav Native Planet March 29, 2018
- Palayur Church http://www.thrissurkerala.com/tourist/palayur-church.html
- Palayoor Church of St Thomas Thrissur Kerala India http://www.angelfire.com/indie/peoples/palayoor.html
- Palayoor Mahadeva Temple https://www.vaikhari.org/palayoor.html
- Palayur Mahadeva Temple. Wikiwand (https://www.wikiwand.com/ml/പാലയൂർ_മഹാദേവക്ഷേത്രം)
- Quilon Syrian copper plates Wikipedia
- St Thomas Church, Palayur. Archdiocese of Trichur.https://www.trichurarchdiocese.org/sacellum/palayur
- St. Thomas Syro-Malabar Church, Palayoor, Wikipedia
- Sthanu Ravi Varman https://peoplepill.com/people/sthanu-ravi-varman/
- ThomaaSleehaayude Kerala ChristhavaSabha Onnaam Noottaandil. Mani, Thattunkal Zachariah. 2016. . p. 14
தங்களின் ஒவ்வொரு பதிவுமே ஆய்வுப் பதிவுதான் ஐயா
நன்றி
LikeLike
மிக்க நன்றி ஐயா…
LikeLike