கல்லில் பகவதி குகைக் கோவில்: கேரளாவின் எர்ணாகுளம் அருகே மெத்தலாவில் அமைந்துள்ள சமண / புத்த இயற்கைக் குகைதளம்

கல்லில் (English: Kallil Malayalam: കല്ലിൽ) சமணக் குகைக்  கோவில்,  கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூவப்பாடி (Malayalam: കൂവപ്പാടി) வட்டம் , மெத்தலா (Malayalam: മേത്തല) கிராமத்தில் (பின் கோடு 683545) அமைந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மெத்தலா கிராமத்தை இந்தக்  கிராமத்துடன் இணைத்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தக் குகைக் கோவில், கூவப்பாடியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், ஆதி சங்கராச்சாரியார்  பிறந்த இடமான காலடியிலிருந்து 22 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைமையகமான எர்ணாகுளத்திலிருந்து 42 கி.மீ தொலைவிலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 217 கி.மீ  தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் புவியிடக் குறியீடு 10.112921 ° N அட்சரேகை 76.5517132 ° E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 30 (100 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசமனூரில் 4714 வீடுகள் உள்ளன, மக்கள் தொகை 19311 ஆகும் (ஆண் 9574, பெண் 9737). கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 84.57%.ஆகும்.

இந்தக் கோவில் கல்லில் பிஷரோடி (English Kallil Pisharody Malayalam കല്ലിൽ പിഷാരോടി)) குடும்பத்திற்குச் சொந்தமானது. இந்தக் கோவிலின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டுப்பாடும் இந்தக் குடும்பத்தின் தற்போதைய காரணவர் (കാരണവർ) வசம் உள்ளது.  ‘செங்கோட்டுக்கோணம் ஸ்ரீ ராமதாசப்பிரமம்’ (സെൻകോട്ടുക്കോണം  ശ്രീ രാമദാസ് ആശ്രമം)  இந்தச் சொத்துக்களைப் பராமரித்து வருகின்றனர். இந்தக் கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

கல்லில் பகவதி இயற்கை குகைத்தளம்

Kallil Bhagavathi Temple_Cochin_Kerala.jpg (600×399)
கல்லில் பகவதி குகைத்தளம்
Kallil Rock Cut Temple
குகைத்தளம்

கல்லில் பகவதி (English Kallil Bhagavathy Malayalam കല്ലിൽ ഭഗവതി), புராணக்கதையும், புனைகதையும் வரலாறும் கலந்த இயற்கைக் குகைத்தளமாகும். கேரளாவின் தொன்மைமிக்க சமணக் குகைக் கோவில்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அடர்ந்த காடுகளின் நடுவே, 28 ஏக்கர் பரப்பளவில், இக்கோவில் அமைந்துள்ளது. இக்குகைத்தளம் 75 அடி நீளமும், 45 அடி அகலமும் 25 அடி உயரமும் கொண்ட ஒற்றைப் பாறைக்குக் கீழே அமைந்துள்ளது. இந்த ஒற்றைப்பாறை, தரையைத் தொடாமல், அந்தரத்தில் தொங்கியவாறு காணப்படுகிறது. இந்தக் குகைத்தளத்திற்குச் செல்வதற்கு 120 படிகள் உதவுகின்றன. இந்தக் குகைத்தளக் கோவில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து வழிப்பாட்டில் இருந்திருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். இந்தச் சமணக் குகைத்தளம், தற்போது, பகவதி அம்மனுக்குரிய (மகிஷாசுர மர்த்தினி என்னும் சக்தி வடிவம்) தலமாக மாற்றப்பட்டு, இன்றுவரை வழிபாட்டில் இருந்து வருகிறது. பகவதியே இங்கு மூலவராக வீற்றிருக்கிறாள்.

சமணச் சிற்பங்கள்

பிரம்மாவின் புடைப்புச் சிற்பம் ஒரு பறையின் உச்சியில் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொங்கு பாறை பகவதியின் அருளால் ஸ்திரமாக நிற்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். இந்தக் குகைத்தளத்தில் இருபத்திமூன்றாம் தீர்த்தங்கரரான பார்சுவநாதர், இருபத்துநான்காம் தீர்த்தங்கரரான மகாவீரர், மற்றும் பார்சுவநாதரின் சாசானாதேவியான இயக்கி பத்மாவதி ஆகியோருடைய சிற்பங்களும் இக்குகைத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. சமண முனிவர்கள் இந்தக் குகைத்தளத்திற்கு வந்து வணங்கிச் சென்றுள்ளார்கள்.

பகவதி வழிபாடு 

பகவதி வழிபாடு கேரளா, கோவா, மற்றும் கொங்கன் ஆகிய மாநிலங்களில் பரவலாகக் காணப்படுகிறது. பகவதி வழிபாடு தீய்யம்  (English Theyyattam, Malayalam തെയ്യം) வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இது கேரளத்தில், வடக்கு மலபாரில் நிகழ்த்தப்படும் ஒருவகை  ஆவி வழிபாடாகும். தீய்யம் (theyyam) என்ற சொல் தெய்வம் என்ற சொல்லின் திரிந்த வடிவமாகும். இது வடக்குக் கேரளாவின் பிரபலமான சடங்குக் கலை வடிவமாகும் (popular ritual art form). குறிப்பாகப் பாரம்பரியம் மிக்க  கொளத்துநாட்டில் (தற்போதைய கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்கள்) இச்சடங்கு முறை பரவலாக உள்ளது. பரசுராமர் கேரளத்து மக்களுக்காகக் களியாட்டம் (அதாவது, தீயாட்டம் அல்லது தெய்வாட்டம்) என்ற திருவிழாவை உருவாக்கியதாகக் கேரளோற்பதி, என்ற புகழ்பெற்ற புராண வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. பரசுராமர், இந்தத் தீய்யம் நடனத்தை நிகழ்த்துவதற்கான பொறுப்பைப் பாணன், வேலன், வண்ணன், மலையன் மற்றும் வேலன் போன்ற பழங்குடி சமூகங்களுக்கு ஒதுக்கினார்.

தீய்யம் சமூகங்கள் மற்றும் சங்ககால நடன மரபுகள்

தீய்யம் நடனம் ஆடுவோர் பற்றிச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்துப் பாரம்பரியத்தின் படி, “காதல் வயப்பட்ட கன்னிப் பெண்களின் தாய்மார்கள், தங்கள் மகள்களைப் பிடித்த கெட்ட ஆவிகளை அகற்றுவதற்காக”  தீய்யம் நடனக் கலைஞர்கள் வாயிலாக தீய்யம் நடனம் நிகழ்த்தப்பட்டது. உதயன் வேண்மான் நன்னன் ஆண்டுவந்த குறிஞ்சி நிலப்பகுதியான எழிமலை குறித்துச் சங்க இலக்கியம் விவரிக்கிறது. எழிமலைப் பகுதி, தற்காலத்துக் கேரளா மாநிலம், பைய்யனூருக்கு அருகில், தற்போது கொளத்துநாடு என்று அழைக்கப்படும் பகுதியே என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் சங்ககாலத்து வழிபாட்டு முறையான தீய்யம் நடனம், வட்டார வேறுபாடுகளுடன், இன்றும் தொடர்வதாகத் தெரியவருகிறது.

கேரளாவின் தாந்திரீக வஜ்ராயன பௌத்தத்திற்கு எதிரான  பிராமணிய இந்து மதம்

இடைக்காலம் வரை, தெற்கு மற்றும் மத்திய   கேரளத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் பௌத்தர்களாக இருந்தனர். வைக்கம் உள்ளிட்ட கேரளாவின் பெயர்பெற்ற இந்துக் கோவில்களுள் பெரும்பாலானவை முதலில் மகாயான ஆலயமாகவும், பௌத்த விகாரைகளாகவும், பௌத்த கன்னியாஸ்திரி மடங்களாகவும் திகழ்ந்தன என்பது மிகவும் வியப்பான செய்தியாகும்.

இங்கிருந்த மகாயான போதிசத்வா சிலைகள், இந்து மத வழிபாட்டிற்குரிய முருகன், ஐயப்பன், மற்றும் குட்டி கிருஷ்ணன் ஆகிய கடவுளர் சிலைகளாக  மாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. வஜ்ராயன பிரிவைச் சேர்ந்த சித்தர்கள் மற்றும் தாரா தேவியர், இடைக்காலத்திற்குப் பின்னர், தொழுவன்கள் என்றும் இந்து மத வழிப்பாட்டிற்குரிய பகவதிகள் என்று  பரவலாக அழைக்கப்பட்டனர். பௌத்த வஜ்ராயண சித்தித் தெய்வமான தாரா தேவி பகவதியாக (துர்கா) மாற்றம் கண்டார்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த,  கணிதவியலாளரும், வாஸ்து நிபுணருமான,  நாராயணன் நம்பூதிரிபாத் என்பவர் தந்திர சமுச்சயம் என்ற நூலை இயற்றினார். வாஸ்து முறைப்படி தாந்திரீக பௌத்த கடவுளர்களை, முற்றிலும் தாந்திரீக பிராமணக் கடவுளர்களாக மாற்றுவதற்கு இவருடைய நூல் அடிப்படையாக அமைந்தது.

பௌத்தத்திற்குள் கடைப்பிடிக்கப்பட்ட தாந்திரீக வஜ்ராயன (பௌத்தத்தின் தாந்திரீக அமைப்பு) நடைமுறை பகவதி வழிபாட்டுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். தாய்வழி சமூக அமைப்பு ஆதிக்கம் பெற்ற கேரளத்தில், பௌத்தம் முற்றிலும் அழிக்கப்பட்டதால், தாரா தேவி வழிபாட்டு முறை, தாய்த்தெய்வ வழிபாட்டு முறையாகவும், ஆவி வழிபாட்டு முறையாகவும் மருவியது.

கேரளத்து அவர்ணர்களின் (தலித் / ஈழவர்கள்) தீண்டாமை மற்றும் வர்க்கப் போராட்டம்

கி.பி. 8 மற்றும் 12 ஆம் நூற்றாண்டளவில் பௌத்த விகாரைகள் பிராமணீய இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன. பிராமணீய இந்து மதம் வர்ணாஸ்ரம (சாதி) முறையை அறிவுறுத்தியது. பௌத்த விகாரைகள், கன்னியாஸ்திரி மடங்கள், மற்றும் மடாலயங்களை நிறுவி நடத்தி வந்த ஆதி பௌத்தர்களே அவர்ணர்கள் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினராக, பிராமணர்களால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

கேரளாவில் கி.பி. 8 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், தற்போதைய பட்டியல் சாதிகள் (Scheduled Castes) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (Other Backward Castes) உள்ளிட்ட அவர்ணர்கள் மீது தீண்டாமை நடைமுறைப்படுத்தப்பட்டது. கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் அவர்ணர்கள் நடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. அவர்ணர்கள் மீது ஏற்பட்ட அச்சத்தால், பிராமணீய இந்து மதத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள், தீண்டாமையை அமல்படுத்தியிருக்கலாம்.

பூசை முறைகள்

கேரள அகம முறைப்படி இக்கோவிலிலுள்ள தெய்வத்திற்கு தினசரி பூஜைகள் செய்யப்படுகின்றன. மதியத்திற்குப் (நண்பகல்) பிறகு கோவில் மூடியிருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இங்கு பூசைகள் நடப்பதில்லை.

கோவில் திருவிழாக்கள்

இக்கோவிலின் வருடாந்திரத் திருவிழா, கார்த்திகை மாதம் (விருச்சிக மாதம்) கார்த்திகை நட்சத்திரத்தன்று தொடங்கி, எட்டு நாட்கள் நடைபெறும். இங்குள்ள உற்சவர் சிலை, பெண் யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

கோவிலுக்கு எப்படிச் செல்வது?

சாலை வழியாகப் பயணிக்க: இக்கோவிலை அடைவதற்கு ஓடக்கலியில் (English Odakkali Malayalam ഓടക്കലി ) இருந்து, அலுவா மூணார் சாலையில், சுமார் 2 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். பெரம்பாவூரிலிருந்து 10 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். பெரம்பவூர் அருகிலுள்ள நகரம் ஆகும்.

அருகிலுள்ள ரயில் நிலையம்: மெத்தலாவிலிருந்து 10 கி.மீ. சுற்றளவில் எந்த இரயில் நிலையமும் இல்லை. மெத்தலாவிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள ஆல்வாயி இரயில் நிலையம், ஒரு பெரிய ரயில் நிலையம் ஆகும்.

அருகிலுள்ள விமான நிலையம்: கொச்சின் விமான நிலையம் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்புநூற்பட்டி

  1. Buddhism in Kerala. Ajaysekhar Margins January 3rd, 2010 (http://ajaysekher.net/2010/01/03/buddhism-kerala/)
  2. Dalava Kulam Massacre: Caste Killing in 19th Century Kerala Ajaysekhar in Margins . September 28, 2015 (http://ajaysekher.net/2015/09/28/dalava-kulam-massacre-caste-killing-19th-century-kerala/)
  3. Boddhisatva Idols from Kerala: Modification of Utariya into Sacred Thread and the Problems of Misrepresentation Ajaysekhar in Margins January 27, 2015 (http://ajaysekher.net/2015/01/27/boddhisatva-idols-kerala/
  4. Kasargod (http://kasargod.nic.in/profile/theyyam.htm)
  5. Rise and fall of Buddhism in Kerala R Madhavan Nair. The Hindu. February 5, 2012
  6. Siddha of Kayikara: Vajrayana in Kerala. Ayaysekhar Margins January 12th, 2013 (http://ajaysekher.net/2013/01/12/siddha-kayikara-vajrayana-kerala/)
  7. Sree Kallil Bhagavathy Temple, Methala (http://kallilcavetemple.com/about-en.html
  8. Tara Buddhism (Wikipedia)
  9. Theyyam (Wikipedia)
  10. Theyyam : A Ritual Art Form of North Kerala. Map of India. April 14, 2015 (http://www.mapsofindia.com/my-india/travel/theyyam-a-ritual-art-form-of-north-kerala)
  11. The Bhagavathi cult. Tulu Research. January 16, 2008.
  12. Vajrayana (Wikipedia)
  13. Vajrayana Buddhism Vis-Ã -vis Hindu Tantricism by Acharya Mahayogi Sridhar Rana Rinpoche (http://www.byomakusuma.org/teachings/VajrayanaBuddhismVisAVisHinduTantricism.aspx)
  14. What wiped the Buddhism traces from Kerala History? History Beta (http://history.stackexchange.com/questions/15191/what-wiped-the-buddhism-traces-from-kerala-history)

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குகைகள், கேரளா, சமண சமயம், பெளத்த சமயம், வரலாறு and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to கல்லில் பகவதி குகைக் கோவில்: கேரளாவின் எர்ணாகுளம் அருகே மெத்தலாவில் அமைந்துள்ள சமண / புத்த இயற்கைக் குகைதளம்

  1. ஸ்ரீராம்  சொல்கிறார்:

    மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்.  சுவாரஸ்யமான இடம்.

    Like

  2. Dr B Jambulingam சொல்கிறார்:

    பல நூற்றாண்டு காலமாக அமைந்துள்ள குகை…அதில் கோயில்..கால இடைவெளியில் ஏற்பட்ட மாற்றங்கள். அருமை.

    Like

  3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    வியப்பு ஏற்படுகிறது ஐயா
    நன்றி

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.