திருநந்திக்கரை குடைவரைக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம்

திருநந்திகரை (English: Thirunandhikarai, Malayalam: തിരുനന്തികര ) குகைக் கோவில், ஒரு குடைவரைக் கோவிலாகும். இது நந்தியாற்றங்  கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதியாகும். இக்குடைவரைக் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்,  கல்குளம் வட்டம், திருநந்திக்கரை கிராமத்தில் (பின் கோடு 629161) அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தில் மிகவும் தொன்மையான குடைவரைக் கோவிலாகக் கருதப்படுகிறது. கி.பி. 8 ஆம் ஆண்டில் அகழப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், சமண மதத்தின் தொன்மைமிக்க கோவிலாகவும் கருதப்படுகிறது. இக்கோவிலினுள் ஏராளமான சிற்பங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவற்றைத் தற்போது காண இயலவில்லை. 1956 ஆம் ஆண்டுவரை கேரளா அரசின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பகுதி, தற்போது தமிழ்நாடு அரசின் பகுதியாகத் திகழ்கிறது.

கி.பி.  7 ஆம் நூற்றாண்டில் சமணர்களால் அகழப்பட்ட இக்குடைவரை பிற்காலத்தில் பிராமணீய இந்துக் கோவிலாக மாற்றப்பட்டது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வீரநந்தி என்ற சமண முனிவர் இந்தக் கோவிலில் தங்கி சமண சமயப்பணி ஆற்றியுள்ளார். முதலாம் இராஜராஜ சோழன் முட்டம் என்ற ஊரைக் கைப்பற்றி அதற்கு மும்முடி சோழ நல்லூர் என்று பெயர் மாற்றம் செய்வித்தான். கி.பி. 1003 ஆம் ஆண்டு, இம்மன்னன் இக்கோவிலில் தங்கித் தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான் 

அமைவிடம்

இக்குடைவரைக் கோவில் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், திருநந்திக்கரை கிராமம், (பின் கோடு 629161) மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் அமைந்துள்ளது. மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையில் அமைந்துள்ள இக்கோவில்  திற்பரப்பு சிறப்புக் கிராம பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கோவில் குலசேகரம் தபால் அலுவலக வரம்பின் ஒரு பகுதியாகும். இதன் புவியிடக் குறியீடு 8° 22′ 5.1445″ N அட்சரேகை 77° 18′ 3.0622″E தீர்க்கரேகை ஆகும். இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 280 மீ (920 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் குலசேகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், பேச்சிப்பாறையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், திற்பரப்பிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், திருவட்டாரிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், மார்த்தாண்டத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், குளித்துறையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்,  தக்கலையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், பத்மநாபபுரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், இரணியலிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும், கொளச்சலிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 57 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

திருநந்திகரை மற்றும் அதன் அருகிலுள்ள நகரமான குலசேகரம் ஆகியவை திருவனந்தபுரம் அல்லது கோவளம் கடற்கரையில் இருந்து சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்  (கே.டி.டி.சி) உள்ளூர் சுற்றுலாத் தலங்களைப் பார்ப்பதற்கான சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது. அருகிலுள்ள இரயில் நிலையம் குழித்துறை மற்றும் இரணியல் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

திருநந்திகரை கோவில்கள்

திருநந்திகரையில் இரண்டு முக்கியமான சிவன் கோயில்கள் உள்ளன: 1. திருநந்திக்கரை நந்தீஸ்வரன் கோவில்  2. திருநந்திக்கரை குகைக் கோவில்.

நந்தீஸ்வரன் கோவில்

நந்தீஸ்வரன் கோவில் நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சைவ ஆலயங்களுள் திருநந்திக்கரை நந்தீஸ்வரன் கோவில் நான்காவது சிவாலயம் ஆகும். மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து கன்யாகுமரி மாவட்டம் 1. திருமலை, 2. திக்குறிச்சி, 3. திற்பரப்பு, 4. திருநந்திக்கரை, 5. பொன்மனை, 6. பன்றிப்பாகம், 7. கல்குளம், 8. மேலாங்கோடு, 9. திருவிடைக்கோடு, 10. திருவிதாங்கோடு, 11. திருப்பன்றிக்கோடு மற்றும் 12 திருநட்டாளம். ஆகிய 12 சிவாலயங்களை அன்றைய ஒரே நாளில், ஓடி ஓடித் தரிசிப்பதே சிவாலய ஓட்டம் எனப்படும். இந்த சிவாலயத்தில் சிவனும் விஷ்ணுவும் இணைந்துள்ளனர்.

குடைவரைக் கோவில்: கட்டமைப்பு

தெற்கு நோக்கிய திருநந்திகரைக் குன்றின் தெற்குச் சரிவில் (southern slope) அகழப்பட்டுள்ள இக்குடைவரை கிழக்கு-மேற்கு திசையமைப்பில் (east-west orientation) அமைந்துள்ளது. குகைத் தளம் தரை மட்டத்திலிருந்து 4 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து குகைத்தளத்திற்குச் செல்வதற்குத் தாய்ப்பாறைச் சரிவில் பத்துப் படிக்கட்டுகள்  வெட்டப்பட்டுள்ளன. இவற்றுள் இரண்டு படிக்கட்டுகள்  தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் பிற்காலத்தில் வெட்டப்பட்டுள்ளன.  குடைவரைக்கு முன்பு கிழக்கு மேற்காக 5.68 மீ நீளமும், வடக்கு தெற்காக 64 செ.மீ நீளமும் கொண்ட பாறைத் தரை காணப்படுகிறது, இக்குடைவரை முகப்பு, மண்டபம், முகமண்டபம், உள்மண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

திருநந்திக்கரைக் குடைவரை

முகப்பு

இக்குடைவரையின் முகப்பு இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு அரைத்தூண்களும் (Pilasters) கொண்டு அமைந்துள்ளது. நான்கு தூண்களும் மூன்று அங்கணங்களும் (Inter‐spaces) இந்த முகப்பில் செதுக்கப்பட்டுள்ளன. கூரைச் சரிவில் கபோதம் முறையாகக் காட்டப்படவில்லை. முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேலே விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. அரைத்தூண்களை ஒட்டிய பாறையில் பக்கத்திற்கொன்றாக இரண்டு ஆழமில்லாத கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. இக்கோட்டங்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

குடைவரை முகப்பு

மண்டபம்

முகப்பிலிருந்து மண்டபத்தின் தரை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. தரையின் முன் பகுதி சற்று தாழ்வாகவும் பின் பகுதி 6 செ.மீ. உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியை முகமண்டபம் என்றும் பின்பகுதியை உள்மண்டபம் என்றும் அழைக்கலாம். முகமண்டபத்தின் மேற்புறச் சுவரில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உள்மண்டபத்தின் வடபுறத்துச் சுவர்மீது சுதை பூசி எழுதப்பட்ட பல ஓவியங்கள் அழிந்து காணப்படுகின்றன. ஒரு ஓவியத்தில் உள்ள மனிதமுகத்தை மட்டும் தற்போது அடையாளம் காணமுடிகிறது.

சுதை ஓவியம்

கருவறை

உள்மண்டபத்தின் மேற்குச் சுவரில், கிழக்குப் பார்த்த கருவறை அகழப்பட்டுள்ளது. சதுர வடிவில் அமைந்த கருவறையின் அளவுகள் 2.15 மீ. நீளம் x 2.15 மீ. அகலம் x  1.86 மீ. உயரம் ஆகும். கருவறைச் சுவரின் நுழைவாயிலின் நிலையமைப்பை ஒட்டி இரண்டு அரைத்தூண்கள் உள்ளன.

சிவலிங்கம்

குடைவரைக்குக் கிழக்கேயுள்ள பாறைச் சரிவின் கீழ்புறத்தில் அகழப்பட்ட  கோட்டத்தில் சிவலிங்கத்தின் பாணம் செதுக்கப்பட்டுள்ளது.

வரலாறு

முற்காலச் சேர அரசிற்குத் தெற்கே, நெல்சிந்தா (Nelcynda) முதல் குமரி (Kumari) வரை ஆய் நாடு செழித்திருந்ததாகவும், பாண்டிய நாடு குமரிக்கு அப்பால் (‘past Komaria’) இருந்ததாகவும் தாலமி கூறியுள்ளார். மலைநாட்டின் மன்னர்களே ஆய் வம்சத்தவர் என்று இராபர்ட் செவெல் (Robert Sewell) கூறியுள்ளார். ஆய்நாடு, குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி, வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது. (தற்காலத்துக் கேரளாவின் கொல்லம், பத்தனந்திட்டா மாவட்டங்களையும், தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய பகுதியாகும்). ஆய்குடி (தற்போதைய தென்காசி மற்றும் குற்றாலம் அருகேயுள்ள ஊர்) (அட்சரேகை 8°59′13″N தீர்க்கரேகை 77°20′20″E) ஆய்நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது. 

ஆய் அண்டிரன், முதலாம் திதியன், இரண்டாம் திதியன், எழினியாதன், ஆகிய நான்கு சங்க கால ஆய் மன்னர்களின் பெயர்களைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆய் வம்சத்தவர்களின் வளர்ச்சியைக் கண்ட பாண்டியர்கள் ஆய் நாட்டைத் தாக்கினர். பாண்டியர்களின் தாக்குதல்களால் நிலைகுலைந்த ஆய் அரசர்கள் கன்னியாகுமரி நோக்கி ஓடினர். கோட்டாரைத் தலைநகராக உருவாக்கி, அங்கு புது ஆய் அரசினை நிறுவிக்கொண்டனர். பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் விரோதத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருந்த காரணத்தால் ஆய் நாட்டின் தலைநகரைக் கோட்டாரிலிருந்து விழிஞத்திற்கு மாற்று வேண்டிய கட்டாயம் ஆய் மன்னர்களுக்கு ஏற்பட்டது.

எட்டாம் நூற்றாண்டில் பிற்காலத்து ஆய் மன்னர்களான சடையன்,. கருநந்தன்,  கோ கருநந்தடக்கன் (கோ+கருநந்தன்+அடக்கன்) (கிபி 857-885) ஆகியோர் பாண்டியர்களின் மேலாண்மையை ஏற்று ஆட்சிபுரிந்தனர். கருநந்தடக்கன், ஸ்ரீ வல்லப பார்த்திபசேகரன்  என்ற பாண்டியர் பெயரைச் சூடிக்கொண்டான். கருநந்தடக்கன் மகன் விக்ரமாதித்தியன், பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனின் பெயரைச் சூட்டிக்கொண்டான். இம்மன்னன் ஆய் நாட்டின் அசோகன் என்று வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறான். 

பிற்காலத்து ஆய் மன்னர்கள் வெளியிட்ட ஆறு உதிரிச் செப்பேடுகள் திருவிதாங்கூர் தொல்லியல் துறையின் தலைமை அலுவலகமான திருவனந்தபுரத்தில் கிடைத்தது.  இவற்றுள் பார்த்திவசேகரபுரம் செப்பேடு, திருநந்திக்கரைச் செப்பேடு, திற்பரப்புச்   செப்பேடு மற்றும் பாலியம் செப்பேடு ஆகிய நான்கு செப்பேடுகள் தொகுக்கப்பட்டு, திரு டி.ஏ. கோபிநாதராவால்,   திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை எண் ஒன்றாக (1910-1913) வெளியிடப்பட்டது. இந்தச் செப்பேடுகள் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளன.

திருநந்திக்கரைச் செப்பேடு / ஹுசூர் கருவூலச் செப்பேடு

திருநந்திக்கரைச் செப்பேடு என்னும் ஹுசூர் கருவூலச் செப்பேடு (Huzur Treasury Copper Plates), கி.பி 865-866 ஆம் ஆண்டில் (கொல்லம் வருஷம் 41) ஆய் மன்னர் கருநந்தடக்கனால் (கி.பி. 857-83) வெளியிடப்பட்டது.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-

இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி. 865-866 ஆகும். முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தை மாற்றி அதற்கு ஈடாக முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளையில் மற்றொரு புதிய நிலம் வாங்கியதை இச்செப்பேடு ஆவணப்படுத்தியுள்ளது. புதிய நிலத்தில் ஒரு விஷ்ணு கோவிலும் ஒரு வேத பாடசாலையும் (குருகுல வேதப் பயிற்சி மையம்) கட்டப்பட்டன. காந்தளூர்ச் சாலாவை (சாலையை) முன்மாதிரியாகக் கொண்ட வேத பாடசாலையில் 95 வேத மாணவர்களைச் சேர்க்கவும், அங்கு அவர்கள் தங்கிப் பயிலவும் வசதி செய்யப்பட்டிருந்தது. கருநந்தடக்கன் ஸ்ரீ வல்லபன், பார்த்திவசேகரன் ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்தான். இம்மன்னனின் பெயராலேயே பார்த்திவசேகரபுரம் என்று வழங்கப்பட்ட இவ்வூர், இன்று திரிபுற்ற மக்கள் வழக்கில் பார்த்திவபுரம் என்று அழைக்கப்படுகிறது. இச்செப்பேட்டின் காலம் ஜூலை 7, 866 ஆம் தேதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (Travancore Archaeological Series I. P. 1-14.)

குடைவரைக் கல்வெட்டு

இக்குடைவரையில் நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, படியெடுக்கப்பட்டுள்ளன.

முகப்பின் மேற்குப் பாறைச் சுவரில் பொறிக்கப்பட்ட  முதலாம் இராஜராஜ சோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 1003), இராஜராஜத் தென்னாட்டின், வள்ளுவநாட்டைச் சேர்ந்த திருநந்திக்கரை மகாதேவருக்கு, தன் பிறந்த நாளான ஐப்பசி சதய நாளன்று விழாவெடுக்கவும், ஆற்றில் நீராட்டவும், நாழி நெய் ஊற்றி நந்தா விளக்கேற்றவும் எதுவாக இந்நாட்டில் இருந்த முட்டம் என்னும் ஊரை, மும்முடிச்சோழ நல்லூர் என்று பெயர் மாற்றம் செய்து தானமாக வழங்கிய செய்தியினைப் பதிவு செய்துள்ளது.

முகப்பின் கிழக்குப் பாறைச் சுவரில் பொறிக்கப்பட்ட கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, திருநந்திக்கரை இறைவனுக்கு நாள்தோறும் உரி நெய் ஊற்றி நந்தா விளக்கெரிப்பதற்கு, நாஞ்சில் நாட்டு வேய்க்கோட்டு மலையில் வாழ்ந்த சித்தகுட்டி அம்பி என்னும் ஐந்நூற்றுவ முத்தரையன் ஒன்பது எருமைகளை வழங்கிய செய்தினைப் பதிவு செய்துள்ளது.

கி.பி. 8 நூற்றாண்டளவில், குடைவரை முகப்பின் தூணில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, திருநந்திக்கரைப் பெருமக்களும் தளியாள்வானும் குருந்தம்பாக்கத்தில் கூடியிருந்த போது, கோவிலில் நள்ளிரவில் திருவமுது படைப்பதற்காக, ஊரின் பெயரை ஸ்ரீ நந்திமங்கலம் என மாற்றிய பின்னர் அவ்வூரை நம்பி கணபதிக்கு வழங்கிய செய்தியினைப் பதிவு செய்துள்ளது. 

கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில், குடைவரை முகப்பின் தூணில் பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டு, திருநந்திக்கரை திருவல்லவாழ் மகாதேவருக்கு, மங்கலச்சேரி நாராயணன் சிவாகரன் என்பவன் அளித்த நிலங்களைப் பட்டியலிடுகிறது. நிலத்தின் வாயிலாகக் கிடைக்கும் விளைச்சலைக் கொண்டு சாந்திப்புரம், உவச்சர், உடையார், தூய்மைப் பணியாளர் ஆகியோருக்குத் தரவேண்டிய தானியத்தின் அளவு குறிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் அறுநாழி உரி நெய் கொண்டு நந்தாவிளக்கெரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகப்புத் தூண் கல்வெட்டுகளின் காலத்தைக் கணக்கில் கொண்டு இக்குடைவரையின் காலத்தை கி.பி.   8 ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் காலவரையறை செய்துள்ளார்கள். 

குறிப்புநூற்பட்டி

  1. A topographical list of the inscriptions of the Madras presidency (collected till 1915) with notes and references by Rangacharya, V. (Vijayaraghava); Archaeological Survey of India 1919
  2. Hajjur inscription http://www.keralaculture.org/hajjoor-plates/352
  3. Kerala State Archaeology Department (Wikipedia)
  4. On the southern tip of India, a village steeped in the past. The Hindu November 17, 2011
  5. Thirunandikkara Cave Temple in Thirparappu in Kanyakumari. Yatra to Temples.com (http://www.yatrastotemples.com/thirunandikkara-cave-temple-in-thirparappu-in-kanyakumari/)
  6. Thirunanthikarai (Wikipedia)
  7. Thirunanthikarai Cave Temple. C.P.R. Environmental Education Centre, Chennai. (http://www.cpreecenvis.nic.in/Database/ThirunanthikaraiCaveTemple_2939.aspx)
  8. Thirunanthikarai Cave Temple. Tourmet.com (http://tourmet.com/thirunandhikarai-cave-temple/)
  9. Thirunanthikarai inscription. Kerala Culture.org (http://www.keralaculture.org/thirunanthikara-inscriptions/366)
  10. திருநந்திக்கரைக் குடைவரை இரா.கலைக்கோவன், மு.நளினி வரலாறு.காம் இதழ் 63 (செப்டம்பர் 15 – அக்டோபர் 15, 2009)

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to திருநந்திக்கரை குடைவரைக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம்

  1. ஸ்ரீராம்  சொல்கிறார்:

    ஒருமுறையாவது சென்று பார்த்துவர ஆசைதான்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.