வரலாற்றில் விழிஞம்: பண்டைய துறைமுக நகரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

விழிஞம் (Malayalam: വിഴിഞ്ഞം),  அரபிக் கடற்கரையில், கலங்கரை விளக்கமும் இயற்கைத் துறைமுகமும் கொண்ட ஒரு சிறிய மீன்பிடி கிராமம் ஆகும். பிரபல சுற்றுலாத் தலமான கோவளம் கடற்கரை அருகே விழிஞம் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழிஞம் துறைமுகம் கிழக்கு மேற்கு வணிக வழியின் முக்கியமான இடத்தில் அமைந்திருந்தது. இடைக்காலத் தமிழ் கல்வெட்டு, விழிஞத்தை மலைநாட்டின் தலைநகராகக் குறிப்பிடுகிறது, மேலும் இவ்வூர் விலின்டா (Vilinda), விலினம் (Vilinam) அல்லது விலூனம் (Vilunum) என்றெல்லாம் அழைக்கப்பட்டது. சோழர்கள் இவ்வூரைக் கைப்பற்றியதும், இராஜேந்திர சோழபட்டினம் என்றும் குலோத்துங்க சோழபட்டினம் என்றும் பெயர் மாற்றம் செய்தனர். இந்த நகரத்தைக் கைப்பற்றுவதற்காகவே,   கி.பி. 8  மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே, ஆய், சேரர், பாண்டியர் மற்றும் சோழ அரசர்களிடையே பல போர்கள் நிகழ்ந்தன. ஆய் வம்சத்தினர் இப்பகுதியில் தங்கள் அரசை முதன்முதலாக நிறுவியிருந்தனர்.

கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய் வம்சத்தின் கோட்டையைக் கண்டறிவதற்காக, அண்மையில் விழிஞத்தைச் சுற்றி தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் அரிய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது விழிஞம் இந்தியாவின் எதிர்கால நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இத்துறைமுகக் கட்டுமானங்களை அதானி போர்ட்ஸ் லிமிடெட் கட்டிவருகிறது.

அமைவிடம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், அதியன்னூர் வட்டத்தில் விழிஞம் (பின் கோடு 695521) கிராமம் அமைந்துள்ளது. இதன் புவியிடக் குறியீடு 8° 22′ 30″ N அட்சரேகை, 76° 59’15” E தீர்க்கரேகை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 71  மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் பரப்பளவு 794 ஹெக்டேர். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரில் 20,714 மக்கள், 5,040 வீடுகளில் வாழ்கிறார்கள். இவ்வூர் அதியன்னூரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், கோவளத்திலிருந்து 3.4 கி.மீ. தொலைவிலும், நெய்யாட்டிங்கராவிலிருந்து 13.2 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து தெற்கே 14.8  கி.மீ. தொலைவிலும், நாகர்கோயிலிலிருந்து 62.9 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

நிலக்கூற்றியல்

விழிஞம் பகுதியை ஒட்டித் தெற்கு மற்றும் மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் அதியன்னூரும் கரீம்குளமும், வடக்கில் கோவளமும் எல்லையாக அமைந்துள்ளன.  இது செம்புரைக்கல் மற்றும் கருங்கல் வரிப்பாறைக் குன்றுகள் நிறைந்த அழகிய கடற்கரையாகும். இந்தத் துறைமுகத்தை ஒட்டி வடக்கே கடல், ஒரு கால்வாய்க்குள் புகுந்து, மேற்குத் திசை நோக்கி  வளைந்து நெளிந்து மீண்டும் கடலுக்குள்ளேயே கலக்கிறது. வடமேற்குத் திசையில் சிறு நிலப்பரப்பு தீவாக உருவாகியுள்ளது.

விழிஞம் குறித்து அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள்

பண்டைய காலங்களிலிருந்து ஒரு கோட்டையையும், ஆழ்கடல் கொண்ட பன்னாட்டுத் துறைமுகத்தையும் பெற்றிருந்த விழிஞத்தை, முற்கால வரலாற்றாசிரியர்களும் அயல்நாட்டுப் பயணிகளும், தங்கள் பயணக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.  ”இது கன்னியாகுமாரியின் வடக்கில் அமைந்திருந்த இயற்கை ஆழ்கடல் கொண்ட ஒரு கிராமம் என்றும், இது முன்னர் கோமரி என்று அழைக்கப்பட்டதாகவும்” எரித்ரேயக் கடலின் பெரிபுளூஸ் என்ற பயணக்குறிப்பை எழுதிய கிரேக்க மாலுமி குறிப்பிட்டுள்ளார். ஆய் நாடு பெரிஸ் (பம்பை நதி) தொடங்கி குமரி முனை வரை விரிந்திருந்ததாகக் கிரேக்கப் பயணி தாலமி குறிப்பிட்டுள்ளார். பொட்டிக்கோ (பொதிகைமலை) பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. விழிஞம் கொமாரிக்கு (Comari; கன்னியாகுமரி) அருகிலிருந்த கடற்கரை நகரம் என்று பியூடிங்கர் அட்டவணைகள் (Peutinger Tables or Tabula Peutingeriana) குறிப்பிட்டன. இது பண்டைய ரோமானிய வரைபடம் குறிப்பிடும் பிளின்கா (Blinca) என்றும் ஊகிக்கப்பட்டது. கிபி இரண்டாம் நூற்றாண்டளவில், ஆய் நாடு,  பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாடாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வேறு சிலர் இதனைச்  சேரர்களின் ஆட்சிக்குட்பட்ட மலைநாட்டின் ஒரு பகுதியாக அடையாளம் கண்டுள்ளனர்.

பண்டைய விழிஞம் துறைமுகம்

விழிஞம் ஒரு வளமான துறைமுகமாகவும், நறுமணப் பொருட்களுக்கான வணிக மையமாகவும் திகழ்ந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்பட்ட மிளகு மற்றும் பிற மசாலாப் பொருட்கள், படகுகளில் விழிஞத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அயல்நாட்டு வணிகர்களுக்கு விற்கப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையையும், விழிஞத்தையும் இணைக்கும் நீர்வழிகள், நறுமணப் பொருட்களின் வணிகத்தைப் பல மடங்கு அதிகரித்தன. பெரிய அயல்நாட்டுக் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்பதற்கு இடமளிக்கும் வகையில் விழிஞம் ஆழமான இயற்கைத் துறைமுகம் ஆகும். மிளகு வணிகத்தின் மையமாகத் திகழ்ந்ததால்  அயல்நாட்டு வணிகர்கள் பெரும் அளவில் விழிஞத்திற்குக் கடற்பயணம் மேற்கொண்டனர்.   மிளகிற்குக் கருப்பு முத்து என்று பெயர்.

தமலம் கல்வெட்டு குறிப்பிடும் வணிக நகரம் விழிஞம்

தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் அன்று பாண்டியர்களின் ஆட்சிப்பரப்பில் இடம்பெற்றிருந்தது. பாண்டியர்கள் ஆரம்போலிக் கணவாய் வாயிலாக வணிகம் மற்றும் அரசியல் உறவு கொண்டிருந்தனர். திருவனந்தபுரம், தமலம் பகுதியில் அமைந்துள்ள திரிவிக்ரமங்கலம் மகா விஷ்ணு கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு, விழிஞத்தில் நடைபெற்ற வளமான வணிகம் மற்றும் வணிகர்கள் பற்றிய சிறப்பான பதிவை அளிக்கிறது. “விழிஞத்தின் செல்வாக்குமிக்க வணிகர்களான புத்தன்விக்கிராமன் என்னும் வீரசெட்டி, விக்ரமங்கன்-தீரன் அல்லது திகைமாணிக்க-செட்டி ஆகிய இருவரும் ஒரு மண்டபத்தை நிறுவினர்.” என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. வணிகர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் கோவில்களுக்கு மிகுதியாக ஆதரவளித்தனர்.

விழிஞம் கோட்டை

அயல்நாட்டு மிளகு வணிகம் மட்டுமல்ல, மூன்று புறமும் நீர் சூழ, விழிஞத்தில் கட்டப்பட்ட பெரிய கோட்டை ஒன்றும் ஆய் நாட்டிற்குப் பாதுகாவலாகத் திகழ்ந்தது.  கோட்டையில் வானளாவிய கோட்டைச் சுவரும் கட்டடங்களும் இருந்தனவாம். சங்க இலக்கியங்களிலும், பாண்டிக்கோவை, கலிங்கத்துப்பரணி, குலோத்துங்க சோழன் உலா, விக்கிரம சோழனுலா ஆகிய பிற்கால இலக்கியங்களிலும்  விழிஞம் கோட்டை மற்றும் துறைமுகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய் நாட்டின் எல்லை கன்னியாகுமரிவரை பரவியிருந்த செய்தியினை இறையனார் அகப்பொருள் உரை குறிப்பிடுகிறது. ஜடில பராந்தக நெடுஞ்சடையன் என்னும் முதலாம் வரகுணன் என்னும் மாறன் சடையன் வெளியிட்ட மெட்ராஸ் மியூசியம் பட்டயங்கள் விழிஞத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடும் விழிஞம் கோட்டையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

தொல்லியல் அகழ்வாய்வுகள்

2006 ஆம் ஆண்டில், முனைவர். அஜீத்குமார் தலைமையிலான கேரளப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட கடல் தொல்லியல் அகழ்வாய்வில் (Marine Archaeological Excavation) விழிஞம் கோட்டையின் (Vizhinjam Fort) எச்சங்களைக் கண்டறிந்தனர். இந்தக் கோட்டையின் எச்சங்களைக் கொண்டு இக்கோட்டை, கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காலவரையறை செய்யப்பட்டுள்ளது. இதனை ஆய் மன்னர்களின் கோட்டையாகக் கருதலாம். ஐரோப்பிய மட்பாண்டம், சீன மட்பாண்டம் ஆகியவற்றின் ஓடுகள் இக்களத்தில் கிடைத்துள்ளபடியால் இந்தக் கடற்பகுதியில் நடைபெற்ற கடல் வணிகம் (Marine Trade) மற்றும் கடற்பயணிகள் (Sailors) குறித்துத் தெரியவருகிறது.

தொல்லியல் அகழ்வாய்வுச சான்றுகள்

கேரளப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் ஆய்வுக் குழுவினர், அஜீத்குமார் தலைமையில், 2010 ஆம் ஆண்டு தொடங்கி, மூன்றாண்டுகளுக்கு மேலாக, விழிஞத்தில் அகழ்வாய்வினை மேற்கொண்டனர். தெற்குக் கேரளத்துக் கடற்கரையில் தொன்மை மிக்க துறைமுகங்களில் விழிஞமும் ஒன்றாக இருக்கலாம் என்பதற்கான பல தொல்லியல் சான்றுகள் இங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. பல தொல்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்த அகழ்வாய்வில் ரௌலட்டட் மண்பாண்டம், ஆம்போரா ஜாடி, இரண்டு விதமாக மெருகூட்டப்பட்ட மண்பாண்டம், டார்பிடோ ஜாடி ஆகிய மண்பாண்டங்களின் ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. விழிஞத்தில் நடைபெற்ற கடல்வழி வணிக வரலாற்றின் காலம் கி.மு. 2 அல்லது 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காலவரையறை செய்யப்பட்டுள்ளது.

ஆய் குடியினர்

சங்க காலத் தமிழகத்தில் வாழ்ந்த தொன்மைமிகு குடிகளுள் ஒன்று வேளிர் குடியினர் ஆவர். சுமார் 20 சங்ககாலத்து வேளிர் குடிகள் குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. பாண்டிய நாட்டு வேளிர்கள், சேர நாட்டு வேளிர்கள், மற்றும் சோழ நாட்டு வேளிர்கள் என்று மூன்று பிரிவினர் குறித்தும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இவர்கள், மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். ஆய் என்னும் (ஆயர்குல) பாண்டிய நாட்டு வேளிர் குடியினர் ஆய் நாட்டை ஆண்டு வந்தனர்.

கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை ஆய்குடி (தற்போதைய தென்காசி மற்றும் குற்றாலம் அருகேயுள்ள ஊர்) (அட்சரேகை 8°59′13″N தீர்க்கரேகை 77°20′20″E) ஆய்நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது. பாண்டியர்கள் ஆய் நாட்டைத் தாக்கி ஆய்குடியைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆய் அரசர்கள் பாண்டியர்களின் தாக்குதல்களால் நிலைகுலைந்தனர். தோல்விகண்ட அய் அரசர்கள் கன்னியாகுமரி நோக்கி ஓடினர். திருவட்டாற்றைத் (அட்சரேகை 8°19′47″N தீர்க்கரேகை 77°15′57″E), தலைநகராக உருவாக்கி, அங்கு புது ஆய் அரசினை நிறுவிக்கொண்டனர்.

நாகர்கோயில் அருகே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இடலாக்குடி என்னும் இடராய்க்குடியும் தலைநகராக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தாலமி, முதல் நூற்றாண்டளவில், கொட்டியாரா என்னும் நகருக்கு வந்து சென்றது மட்டுமின்றி, அதனைக் கொட்டியாரா என்று குறிப்பிட்டு பெருநகர் (Metropolis) என்றும் அழைத்துள்ளார். இதுவே கோட்டார் என்பது கனகசபை என்ற இலங்கைத் தமிழறிஞர் கருத்தாகும். விழிஞமும், திருவட்டாரும் பல காலங்களில் ஆய்நாட்டின் தலைநகராகத் திகழ்ந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. கோட்டார் ஆய் நாட்டின் இரண்டாம் தலைநகராகவும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் விரோதத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், ஆய் அரசர்களின் தலைநகரான திருவட்டாறு மிகவும் பாதுகாப்பற்றதாக இருந்தது. இதன் காரணமாக ஆய் நாட்டின் தலைநகரைத் திருவட்டாரிலிருந்து விழிஞத்திற்கு மாற்று வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முற்காலத்திலும், இடைக்காலத்திலும், விழிஞம் பாண்டியர்களின் ஆட்சிப் பகுதியாகக் கணிசமான காலம் வரை இருந்தது.

ஆய் அண்டிரன், முதலாம் திதியன், இரண்டாம் திதியன், வட்டாற்று எழினியாதன் (எழினி மகன் ஆதன்), ஆகிய நான்கு சங்க கால ஆய் குடி மன்னர்களின் பெயர்களைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆய் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாவான். களிறுகளைப் பரிசாக அளித்தவன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (புறநானூறு  127, 128, 129,130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375 ஆம் பாடல்கள்), துறையூர் ஓடைகிழார் புறநானூறு 136 ஆம் பாடல்),   இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் (சிறுபாணாற்றுப்படை பாடல் வரிகள் 95-99) ஆகியோர் ஆய் அண்டிரனைப் பற்றிப் பாடியுள்ளனர். இவன் அந்துவன் சேரல் காலத்தைச் சேர்ந்தவன் ஆவான். அகநானூறு 25, 36, 45, 126, 145, 196, 262, 322, 331 பாடல்கள்  திதியர்களைக் குறித்துப் பாடியுள்ளன. ‘பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்’ (அகநானூறு 25) என்று போற்றப்படும் முதலாம் திதியனுக்கு அதியன் என்ற பெயரும் உள்ளது. தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனைத் தாக்கியவன் இரண்டாம் திதியன் ஆவான் (அகநானூறு 36). வட்டாற்றைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த வட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் (புறநானூறு 396) பாடியுள்ளார்.

பிற்காலத்து ஆய் வம்சம்

எட்டாம் நூற்றாண்டில் பிற்காலத்து ஆய் மன்னர்களான சடையன்,. கருநந்தன்,  கோ கருநந்தடக்கன் (கோ+கருநந்தன்+அடக்கன்) (கிபி 857-885) ஆகியோர் பாண்டியர்களின் மேலாண்மையை ஏற்று ஆட்சிபுரிந்தனர். கழுகுமலைக் கல்வெட்டு சடையன் மற்றும் கருநந்தன் ஆகிய ஆய் மன்னர்கள் விழிஞத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. தொடக்கத்தில் நாஞ்சில் நாடு (தற்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம்) ஆய் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆய் மன்னர்களான கருநந்தன் மற்றும் கோகருநந்தடக்கன் ஆகியோருடைய ஆட்சிக்காலத்தில் ஆய்நாடு குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது. (தற்காலத்துக் கேரளாவின் கொல்லம், பத்தனந்திட்டா மாவட்டங்களையும் உள்ளடக்கிய பகுதி). விழிஞம் இந்நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது.

ஆய்நாடு

கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன், ஸ்ரீ வல்லப பார்த்திபசேகரன்  என்ற பாண்டியர் பெயரைச் சூடிக்கொண்டான்.   இவன் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கோகருநந்தடக்கன் ஆட்சிக் காலத்தில் விழிஞம் ஆய்நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது என்று பல கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன. இவனுடைய ஆட்சிக்காலத்தில் இரண்டு முக்கியமான ‘சாலா’ அல்லது கல்வி மற்றும் இராணுவ பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டன. ‘கந்தளூர் சாலா’ (தமிழில் கந்தளூர் சாலை என்றழைக்கப்படுகிறது) இவனால் முதலாவதாக அமைக்கப்பட்ட சாலாவாகும். அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற இந்தச் சாலா ‘தென்னிந்தியாவின் நாளந்தா’ என்று அழைக்கப்பட்டது. இந்த சாலாவின் பாடத்திட்டத்தில் இலக்கணம், புத்ததர்ஷன், சங்கதர்ஷன், வைஷிகா தர்ஷன், மீமாம்ச தர்ஷன், இசை, இலக்கியம், கலை போன்றவை இடம்பெற்றிருந்தன.

காந்தளூர்ச்சாலை என்பது திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலை என்றும், தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி உதியன் பேரூர் – பூவாறு சாலையில் அமைந்துள்ள காந்தளூர் என்றும் அடையாளம் காணப்படுகிறது. ஆனால் காந்தளூர் என்பது மலைப்புரம் மாவட்டம் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூரே என்று தொல்லியல் அறிஞர் எஸ்.இராமச்சந்திரன் நிறுவியுள்ளார். எனினும், இது இன்னும் விவாதத்திற்குரிய பொருளாகவே இருந்து வருகிறது.

பார்த்திவசேகரபுரம் (அட்சரேகை 8°16’30″N, தீர்க்கரேகை   77°10’15″E) என்ற இடத்தில் இம்மன்னன் மற்றொரு சாலாவையும் தொடங்கினான். அந்த நேரத்தில் விழிஞத்தில் ஒரு புகழ்பெற்ற ஆயுத உற்பத்திப் பிரிவும் (arms manufacturing unit) ஒரு ஆயுதக் கிடங்கும் (arsenal) இருந்தன. இந்தச் சாலாக்களில், பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் போதனைகளோடு இணைந்த இராணுவப் பயிற்சிகளைப் பற்றிக் கேள்வியுற்ற பாண்டியர்களும் சோழர்களும் ஆத்திரம் அடைந்திருக்கலாம் என்பது சில வரலாற்றாசிரியர்களின் வாதமாகும். பாண்டியர்களும் சோழர்களும்  தீவிர இந்து மதத்தவர்களாக இருந்ததால், காந்தளூர் சாலாவின்   வேற்று மத போதனைகளையும்  இராணுவப் பயிற்சியையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இராணுவ அறிவியல் மற்றும் ஆயுத உற்பத்திக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக இம்மன்னனின் ஆட்சி பிரபலமானது.

கோகருநந்தடக்கன் கி.பி. 866 ஆம் ஆண்டில் வெளியிட்ட பார்த்திவசேகரபுரம் செப்பேடு, பார்த்திவசேகரபுரம் சாலா உருவாக்கப்பட்ட செய்தியினை விவரிக்கிறது. பார்த்திவசேகரபுரம் சாலா, காந்தளூர்ச் சாலாவை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறது. கோகருநந்தடக்கன் வெளியிட்ட திற்பரப்பு செப்பேடு இரு ஏடுகளைக் கொண்ட சாசனமாகும். இது கிரந்தத்திலும் மற்றும் பல்லவர் காலத்துத் தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. விழிஞத்தில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செய்தி இச்செப்பேட்டில் காணப்படுகிறது.

கருநந்தடக்கன் மகன் விக்ரமாதித்தியன், பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனின் பெயரைச் சூட்டிக்கொண்டான். பௌத்த மதத்தைப் பின்பற்றிய இம்மன்னன் கி.பி. 885 முதல் 925 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவனுடைய மத சகிப்புத்தன்மை காரணமாக இந்துக்களுக்கும் சமணர்களுக்கும் நிலக்கொடை உள்ளிட்ட பல கொடைகளை வழங்கினான். சிறந்த துறைமுகம், முத்துக் குளித்தல், பன்னாட்டுக் கடல் வணிகம் ஆகிய நடவடிக்கைகள் காரணமாக விழிஞம் நகரம் செழித்திருந்தது. விழிஞத்தின் மீது அண்டை நாட்டினர் படையெடுத்து அடிபணிய வைக்கும் நோக்கில் பல ஊடுருவல்களை மேற்கொண்டனர். இம்மன்னனின் ஆட்சிக் காலத்தில் முதலாம் பராந்தக சோழன் பெரும் அச்சுறுத்தலாக இருந்தான். சோழர் படையை இவனால் எதிர்கொள்ள இயலவில்லை.  

விக்ரமாதித்ய வரகுணன், “ஸ்ரீமூலவாசம் செப்பேடு” என்னும் பலியம் செப்பேட்டினைத் தனது பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் வழங்கினான். இச்செப்பேடு பௌத்த நிறுவனமான திருமூலவாதத்திற்கு (ஸ்ரீமூலவாசம்) நிலம் வழங்கியது குறித்த செப்பேடாகும். இதில் நிலக்கொடையளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. திருநந்திக்கரை குடைவரை கோவிலில் கண்டறியப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் இம்மன்னனின் கல்வெட்டுகளாகவே கருதப்படுகின்றன. இம்மன்னனின் பிற கல்வெட்டுகள் சிதாறல், கழுகுமலை, ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. சிதாறல்  சமணக் குகைக் கோவிலில் செதுக்கப்பட்ட சமணப் புடைப்புச் சிற்பங்கள் இம்மன்னனின் ஆட்சிக்காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம். இம்மன்னன் ஆய் நாட்டின் அசோகன் என்று வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறான்.

விழிஞத்தின் மீது பாண்டியர்கள் நிகழ்த்திய தாக்குதல்கள்

துறைமுக நகரான விழிஞத்தை, முதன்முதலாகப் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் (கி.பி. 670- 700) தாக்கினான். அரிகேசரிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த பாண்டியன் கோச்சடையான் என்ற இரணதீரனும் (கி.பி. 700-730) விழிஞத்தைத் தாக்கினான். கோச்சடையானைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன்  (கி.பி. 730-765) மற்றும் பேரன் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் என்னும் முதலாம் வரகுணன் என்னும் மாறன் சடையன் (கி.பி. 756–815) / (கி.பி. 768–815) ஆகியோரும் விழிஞத்தைத் தாக்கினர். முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் விழிஞத்தைத் தாக்கிய காலத்தில் ஆய்நாட்டை ஆட்சி செய்தது யார் என்பதற்கான வரலாற்றுச் செய்தி எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், கி.பி. 788 ஆண்டளவில், அருவியூரை பாண்டியன் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் என்னும் முதலாம் வரகுணன் தாக்கியபோது, சடையன் கருநந்தன் ஆய்நாட்டின் அரசனாக இருந்தான் என்று கழுகுமலைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பாண்டியர்களின் மேலதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற இப்போரில் விழிஞம் நகரத்தைக் கொள்ளையிட்டு அழித்தனர். ஆய்நாட்டின் அரணாகத் திகழ்ந்த அருவியூர் என்னும் அருவியூரும் தீக்கிரையானது. இந்தப் போர் குறித்து வேள்விக்குடிச் செப்பேடு, சென்னை அருங்காட்சியக (சீவரமங்கலச்) செப்பேடு மற்றும் சின்னமன்னூர் செப்பேடு (பெரிய சாசனம்) ஆகிய செப்பேடுகள் விவரிக்கின்றன.

கி.பி 792 ஆம் ஆண்டு (மாறன் சடையனின் 27 ஆம் ஆட்சியாண்டு) சேரநாட்டு வீரர்கள் (சேரமனார் படை) விழிஞம் மற்றும் காரைக்கோட்டில் (தலக்குளத்திற்கு அருகிலுள்ள காரைக்கோடு), ஒரு கோட்டையைக் காப்பதற்காக, மாறன் சடையனின் தளபதிக்கு எதிராகப் போராடிய செய்தியினை மாறன் சடையனின் திருவனந்தபுரம் அருங்காட்சியகம் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இப்போரில் விழிஞம் பெரும் சேதத்திற்கு உள்ளானது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் மற்றும் சேரர் பெருமாள்கள், ஆய்நாட்டை ஆக்கிரமித்ததால், பண்டைய ஆய்நாடு இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது. ஆய் நாட்டின் ஒரு பகுதியைக் கொல்லத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேணாட்டுச் சேரர் பெருமாள் அரசு  கைப்பற்றியது. மீதமிருந்த மற்றொரு பகுதியைப் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன்  (கி.பி. 815–862) கைப்பற்றிய செய்தியைப் பெரிய சின்னமனூர் செப்பேடு தெரிவிக்கிறது.  ‘குன்னூரிலும்,  சிங்களத்தும், விழிஞத்தும் வாடாத  வாகை சூடி’ என்று இச்செப்பேடு குறிப்பிடுகிறது. பாண்டியரின் மேலாண்மையின் கீழிருந்த ஆய் மன்னன் கருநந்தடக்கனை ஸ்ரீ வல்லபன் வென்று விழிஞத்தைக் கைப்பற்றினான். பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு ஶ்ரீ மாறன் ஶ்ரீ வல்லபன் விழிஞத்தில் சேரனைக் கொன்றதைக் குறிப்பிடுகிறது.

சோழர்களின் தாக்குதல்கள்

பாண்டியர்களின் அச்சுறுத்தல் முடிவிற்கு வந்தாலும், விழிஞம் சோழர்களிடமிருந்து மற்றொரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த சிக்கலை எதிர்கொள்ள விழிஞத்தில் ஒரு ஆயுதக் கிடங்கு தொடங்கப்பட்டது, காந்தளூர் சாலா முழுநேர இராணுவ பயிற்சி மையமாக மாற்றப்பட்டது.

முதலாம் இராஜராஜ சோழன், கி.பி. 989 ஆம் ஆண்டு, மேற்கொண்ட முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, காந்தளூர் சாலாவை முற்றிலுமாக அளித்த செய்தி “சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு விதமான மெய்கீர்த்தி வரிகளாகக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆய் நாட்டின் பகுதிகளைச் சிறு சோழர் படையின் பொறுப்பில் விட்டுவிட்டு, இராஜராஜ சோழன் நாடு திரும்பினான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சேரர்கள், சோழர் படையினரைத் தாக்கி வெளியேற்றினர். இதனால் கோபமடைந்த இராஜராஜ சோழன் கி.பி. 1004-1005 ஆம் ஆண்டளவில் சேரநாட்டின் மீது மற்றொரு தாக்குதலை நடத்தினான். விழிஞம் மீண்டும் அழிவுக்குள்ளானது.

முதலாம் இராஜராஜனின் திருவாலங்காட்டுச் செப்பேடு, “கடலினையே அகழியாகக் கொண்டதும் சுடர்விடுகின்ற மதில்களுடன் கூடியதும் வெற்றித் திருவின் உறைவிடமும் எதிரிகளால் புகமுடியாததுமாகிய விழிஞத்தை வென்றார்“ என்ற செய்தியினைக் குறிப்பிடுகிறது. முதலாம் இராஜராஜனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் இராஜேந்திர சோழன், கி.பி. 1019 ஆம் ஆண்டு, சேர நாட்டின் மீது படையெடுத்து வந்து விழிஞத்தை வென்றான். சோழர் ஆதிக்கத்தின் கீழிருந்த விழிஞம், இராஜேந்திர சோழப்பட்டினம் என்று பெயர் மாற்றம் கண்டது. இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்களான இராஜாதிராஜனும் மற்றும் குலோத்துங்கனும் விழிஞத்தையும் காந்தளூர் சாலாவையும் தாக்கி அழித்தனர். 

விழிஞம் துறைமுக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்

திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ சித்திரத் திருநாள் பலராமவர்மா,  திருவிதாங்கூர் திவான் சர். சி.பி. இராமசாமி அய்யர் மேற்பார்வையில், விழிஞம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான வேலைகளைத் தொடங்கினார்.  துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்காக, ரூ. 375 லட்சம் வழங்கப்பட்டது. கொச்சி மற்றும் திருவிதாங்கூர் மாகாணங்கள் இணைக்கப்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. 1955-57 ஆம் ஆண்டளவில், ஒரு வல்லுநர் குழு  விழிஞம் துறைமுக மேம்பாட்டிற்கான அறிக்கையைத் தயார் செய்தனர்.

விழிஞம் துறைமுகம்

விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம் (Vizhinjam International Seaport), ரூபாய் 6 ஆயிரத்து 595 கோடி செலவில், புதியதாகக் கட்டமைக்கப்பட்டு வரும் பன்னாட்டு நவீனத் துறைமுகம் ஆகும். இதனைக் கட்டும் பணி தனியார் நிறுவனமான அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டால், உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விழிஞம் துறைமுகம் இருக்கும் என்றும், இதன்மூலம் பன்னாட்டு வாணிபம் ஈர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விழிஞம் குடைவரைக் கோவில்

விழிஞம் குடைவரைக் கோவிலை ஒரு சிறு பாறைக் குன்றின் கிழக்கு முகத்தை அகழ்ந்து உருவாக்கியுள்ளனர். இக்குடைவரையில் ஒரு ஒற்றைக் கருவறை இடம்பெற்றுள்ளது. இந்தக் கருவறை 1 மீ (3 அடி 2 அங்குலம்) கிழக்கு-மேற்கு நீளம், 0.70 மீ (2 அடி 3 அங்குலம்) வடக்கு-தெற்கு அகலம் மற்றும் 1.50 மீ (4 அடி 11 அங்குலம்) உயரம். கொண்டுள்ளது. கருவறையின் கூரை கிழக்கு நோக்கிச் சரிந்துள்ளது. கருவறையின் பின் சுவர், தெற்கு மற்றும் வடக்குச் சுவர்கள் நன்கு செதுக்கப்படவில்லை. இக்கருவறையில் வீணாதர தட்சிணாமூர்த்தியின் சிலை பிற்காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. விழிஞம் பேருந்து நிலையம் அருகே விழிஞம் குடைவரைக் கோவில் அமைந்துள்ளது.

Vizhinjam
விழிஞம் குடைவரைக் கோவில்

விழிஞம் பகவதி கோவில்

விழிஞம் நகருக்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விழிஞம் பகவதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சுற்றுப்பிரகாரமில்லாமல் அமைந்த செவ்வகத் திராவிடக் கோவில் ஆகும். கருவறை வடக்கு நோக்கி அமைந்துள்ளது. சதுர வடிவிலான விமானத்தின் மேல்கட்டுமானமும் சிகரமும் குவிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதிஷ்டானம், தூண்கள், அரைத்தூண்கள், பிரஸ்தரம் (entablature), ஆகிய விமான உறுப்புகள் மற்றும் மண்டபம் ஆகியவை கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. மேல்கட்டுமானம் சுண்ணாம்பு மற்றும் சுதையால் அமைக்கப்பட்டது. மண்டபம் செவ்வக வடிவிலானது. கருவறை முன்பு ஒரு முற்றம் உள்ளது. பகவதி அம்மன் கோவில் மூலவர் ஆவார். சிவன், வீரபத்திரன், கணபதி ஆகிய துணைத் தெய்வங்களுக்குச் சன்னதிகள் உள்ளன.

Bhagavathy Temple, Vizhinjam
விழிஞம் பகவதி கோவில்

விழிஞம் மீன்பிடி துறைமுகம்

விழிஞம் மீன்பிடி துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். விழிஞம் இன்று மீன்பிடி படகுகளால் நிரம்பிய ஒரு பரபரப்பான துறைமுகமாகும். கடல் அலைகளை மின்சக்தியாக மாற்றுவதற்கான செயல்விளக்க தொழிற்கூடம் (demonstration plant) இங்கு உள்ளது. இங்கு சேமிக்கப்படும் கடல் அலை மின்சாரம் இப்பகுதியின் மின்தொகுப்பில் சேர்க்கப்படுகிறது.

விழிஞம் கலங்கரைவிளக்கம்

விழிஞம் கலங்கரைவிளக்கம் (Vizhinjam Lighthouse) கோவளம் கடற்கரையில் அமைந்துள்ளது. சிவப்பு மற்றும் வெள்ளைப் பட்டைகளுடன் உருளை வடிவமும்,  36 மீ. உயரமும் கொண்ட, இந்தக்  கலங்கரைவிளக்கம்  30 ஜூன் 1972 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. நேரடி இயக்க வழிமுறையில் (direct drive mechanism) இயங்கும் இந்தக் கலங்கரைவிளக்கத்தில் மெட்டல் ஹலைடு விளக்குகள் (metal halide lamps) பொருத்தப்பட்டுள்ளன.

விழிஞம் கலங்கரைவிளக்கம்

போர்ச்ச்கீசிய கத்தோலிக்க தேவாலயம் / எங்கள் கடற்பயண மாதா தேவாலயம்

இந்தக் கடலோரக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமைமிக்க போர்ச்ச்கீசிய கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் இப்பகுதியில் பலரை ஞானஸ்நானம் செய்தார் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். எங்கள் கடற்பயண மாதா தேவாலயம் (Our Lady of the Sea Voyage) என்பது இதன் பெயராகும். 1875 ஆம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் இந்தத் தேவாலயத்தைப் புதுப்பித்துள்ளனர். 1949 ஆம் ஆண்டு இங்கு ஒரு புதிய தேவாலயம்  கட்டப்பட்டது.

VIZHINJAM OLD PORTUGUESE CHURCH
போர்ச்சுகீசிய தேவாலயம், விழிஞம்

மசூதி

பரபரப்பான விழிஞம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் ஒரு அழகான மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியிலிருந்து கோவளம்  3 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது.

மீன் அருங்காட்சியகம்

விழிஞத்தில், மீன் அருங்காட்சியகம் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த அருங்காட்சியகத்தில் லயன் மீன் (Pterois), சர்ஜன் மீன் (Tangs, Acanthuridae), கிளௌன் மீன் (Clownfish, Amphiprioninae), ஸ்குரில் மீன் (Squirrelfish, also called soldierfish, Holocentridae), பிரானா மீன் (piranha fish), மாபெரும் ஆமைகள், பேலெலும்பு மீன் ( moon wrasse or crescent wrasse or lyretail wrasse, Thalassoma lunare),  பட்டாம்பூச்சி மீன் (butterflyfish, Chaetodontidae), கிளாத்தி மீன் (triggerfish Balistidae) மற்றும் சுறாக்கள் ஆகிய மீன் இனங்களைக் காணலாம்.

குறிப்புநூற்பட்டி

  1. செந்தீ நடராசன் முழுமையான பண்பாட்டை நோக்கி… ஜெய் தமிழ் இந்து திசை 27 May 2018
  2. George, S. B. 2015. Vizhinjam in Historical Perspective. July 27 https://www.thehindu.com/news/national/kerala/vizhinjam-in-historical-perspective/article7468781.ece.
  3. Gopinatha Rao, T.A., Travancore Archaeological Series Vol. I-IV
  4. History and Archaeology of the recently discovered fort at Vizhinjam. Ajit Kumar. Aadharam A Journal for Kerala Archaeology and History. Vol. I. 2006.
  5. Paliyam Copper Plates. keralaculture.org http://www.keralaculture.org/paliyam-plates/351
  6. The rise and fall of Vizhinjam. M.K. Sajeev Singh. Advance Research Journal of Social Science Volume 9 | Issue 1 | June, 2018.
  7. Vizhinjam: Once a port, always a port, T. Nandakumar. The Hindu, August 09, 2013
  8. Vizhinjam Through the Ages: Situating the Development of Vizhinjam Port Alphonsa Joseph and Bushra Beegom R. K. Journal of Multidisciplinary Studies in Archaeology 7, 2019: pp .531-545

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குடைவரைக் கோவில், கேரளா, வரலாறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வரலாற்றில் விழிஞம்: பண்டைய துறைமுக நகரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

  1. rajendan சொல்கிறார்:

    “நம் கடற்பயண மாதா தேவாலயம்” (Our Lady of the Sea Voyage) என்பது இதன் பெயராகும்.

    Like

  2. பவள சங்கரி சொல்கிறார்:

    அருமையான கட்டுரை. பாராட்டுகள்.

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.