சிதாறல் சமணக் கோவில் (Chitharal Jain Monuments) என்றும் சிதாறல் மலைக்கோவில் என்றும் சிதாறல் குகைக் கோயில் என்றும் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படும் சமண நினைவுச் சின்னங்கள் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் வட்டம், வெள்ளங்கோடு பார்க் ஜங்க்சன் கிராமத்தில் (பின்கோடு 629151) உள்ள திருச்சாரணத்து மலையில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் சொக்கன்தூங்கி மலை (Chokkanthoongi Hill) என்றும் இம்மலையினை அழைப்பதுண்டு. இங்கு அமைந்துள்ள குடைவரை, இயற்கைக் குகைத்தளத்தில் செதுக்கப்பட்டுள்ள கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கன் / இயக்கி ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் ஆகியவை கண்டு களிக்கத்தகன. இந்தச் சமணக் கோவில் 13 ஆம் நூற்றாண்டளவில் பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சமணத்தளம் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது.
அமைவிடம்
தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் வட்டம், வெள்ளங்கோடு பார்க் ஜங்க்சன் (பின்கோடு 629151) என்னுமிடத்தை ஒட்டி அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரின் புவியிடக் குறியீடு 8°19′57.1″N அட்சரேகை 77°14′18.2″E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து 37 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் மார்த்தாண்டத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், திருவட்டாரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், குளித்துறையிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், குலசேகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், இரணியலிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், குளச்சலிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 29 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பராசலா (Parassala) இரயில் நிலையம், மற்றும் குழித்துறை மேற்கு (Kuzhithurai West) இரயில் நிலையம் ஆகிய இரயில் நிலையங்கள் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளன. குன்றின் உச்சிக்கு கார்களும் ஜீப்புகளும் சென்று வருகின்றன. படிக்கட்டு வழியாக 10 நிமிடத்தில் உச்சிக்குச் செல்லலாம். இந்த மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
வரலாறு
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் (கி.பி. 610 – 640) ஆட்சிக்காலத்தில் குமரி நாட்டில் சமணம் தழைத்தோங்கி இருந்தது. இதற்கான வரலாற்றுச் சான்றுகள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவின் தென்மாவட்டங்களிலும் காணக்கிடைக்கின்றன. இவற்றுள் மிகவும் முக்கியமானது திருச்சாரணத்து மலை என்னும் சிதாறல் மலை ஆகும். திருவிதாங்கூர் தொல்பொருள் தொகுப்பைத் தொகுத்த வரலாற்றாசிரியர் டி.ஏ. கோபிநாத ராவ் , 1920-21 ஆம் ஆண்டளவில் இந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ஆய் மன்னன் விக்கிரமாதித்ய வரகுணனின் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. சமண சமயவியல், குடைவரைக் கட்டமைப்பு, சமணப் படிமவியல் மற்றும் கல்வெட்டு குறித்த சான்றுகள் இங்கு காணக்கிடைக்கின்றன. கி.பி. 1250 ஆம் ஆண்டளவில், இந்தச் சமணக் குகைப்பள்ளியில் ஒரு பகவதி அம்மன் சிலை நிறுவப்பட்டு, பகவதி கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.
பஞ்ச பரமேஷ்டி வழிபாடு சிறு அறிமுகம்
சமணவழிபாட்டு முறையில் தீர்த்தங்கரர்களை வணங்குவதோடு பஞ்ச பரமேஷ்டி வழிபாடு என்பதும் இன்றியமையாத வழிபாடாகவும் அமைகிறது. பஞ்ச பரமேஷ்டிகளாகக் குறிப்பிடப்படுவோர் அருகர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், சாதுக்கள் ஆகியோர். அருகர் எனும் அருகதர் (Arihant) விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி மற்றும் கவலைகளை வென்று வாகை சூடியவர் அல்லது வெற்றியாளர் அல்லது ஜீனர் ஆவர். இவர்கள் போதித்த சமயம் எனும் பொருளில் ஆருகதம்-அருகமதம்-அருக சம்யம் எனப்பட்டது. தீர்த்தங்கரர் என்போர் சமண சமயத்தின்படி ஞான நிலையை அடைந்த மனிதர்கள் ஆவர். கணாதரர் என்போர் தீர்த்தங்கரரின் தலைமை மாணக்கர் ஆவர். இவருடைய பணி தீர்த்தங்கரின் நல்லுரைகளை மக்களிடம் பரப்புரை செய்தவர்கள் ஆவர். ஆச்சாரியார் என்பவர் மிக உயர்ந்த நிலையில் இருந்த குரு ஆவார். சமணத் துறவறத்தில் இன்றியமையாத முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர். இளம் ஆண்களையும் பெண்களையும் துறவறத்தில் ஈடுபடுவதற்கான சங்கற்பங்களைச் செய்விக்கும் அதிகாரம் படைத்தவர். பெண் ஆச்சாரியர்கள் குரத்தியர், குரத்தி அடிகள் என்றும் குறிக்கப்படுகின்றனர். பல மடங்களுக்கும் பள்ளிகளுக்கும் பெண் ஆச்சாரியர்கள் தலைமை வகித்துள்ளனர். உபாத்தியாயர் சமணப் பள்ளிகளில் சமயக்கல்வியினைக் கற்பித்த ஆசிரியர்கள் ஆவர். சாதுக்கள் என்போர் சமணத் துறவிகள் ஆவர். ஆண் துறவிகள் யதி என்றும், பெண் துறவிகள் ஆர்யை என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஓர் ஆடையினை மட்டும் உடுத்துபவரைச் சுல்லகர் என்றும், கோவணத்தை மட்டும் உடுத்துபவரை ஐலகர் என்றும், ஆடை ஏதும் இன்றி இருப்பவரை நிர்கந்தர் என்றும் அழைத்துள்ளனர்.
சிதாறல் குகைத்தளங்கள்
இங்குள்ள கல்வெட்டுகள் இக்குன்றைத் திருச்சாரணத்து மலை என்று குறிப்பிடுகின்றன. திருச்சாரணத்துக் குன்று சுமார் 400 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளைக் கடந்தவுடன் முதலில் நம் கண்களுக்குத் தென்படுவது சமணக் குகைத்தளங்கள் ஆகும். வடமேற்காகப் பார்த்தவாறு அமைந்துள்ள சமணக் குகைத்தளம். காலத்தால் முந்திய இயற்கைக் குகைத்தளம் ஆகும். இக்குகை கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் தங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சமணத் துறவிகளுக்காகச் செதுக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகளைக் காணலாம். மழைநீர் வடிவதற்கு குகையின் புருவத்துப் பாறையில் வடிகால் வெட்டப்பட்டுள்ளது.
சிதாறல் குகைத்தளத்தில் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பத் தொகுதிகள்
பிற்காலத்தில் சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பத்தொகுதியில் 23 ஆம் தீர்த்தங்கரான பார்சுவநாதர், சாசனா தெய்வமான பத்மாவதி இயக்கியுடனும் தர்னேந்திர இயக்கனுடனும் படமெடுத்தாடும் ஐந்துதலை நாகத்தின் கீழ் நின்றவாறு (காயோத்சர்க) தவயோக நிலையில் காட்சி தருகிறார். கமடன் என்னும் சம்பரதேவன் இவருடைய தவத்தைக் கலைக்க கல்லையும் ஆயுதங்களையும் வீசுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
இதனருகே அர்த்த பரியங்க யோகநிலையில் அமர்ந்து காட்சிதரும் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களின் தலைக்கு மேல் முக்குடையுடன் காட்டப்பட்டுள்ளது. மூன்று தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளன. தலைக்கு மேல் முக்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. கீழ் காட்சிதருகிறார். இலைகளுடன் கூடிய மர விதானத்தின் கீழ் அமைந்துள்ள ஆசனத்தில் அமர்ந்துள்ள மகாவீரர் சிற்பத்திற்கு மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. இருமருங்கிலும் யட்சர்கள் காட்டப்பட்டுள்ளனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அம்பிகாவின் உருவம் இரு குழந்தைகளுடன் காட்டப்பட்டுள்ளது. எல்லா சிற்பங்களுக்கு மேல் வித்யாதாரர்கள் பறப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பிற்கு மேலே அர்த்த பரியங்க யோகநிலையில் அமர்ந்து காட்சிதரும் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் நீண்ட வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது.
இதனைக் கடந்து சென்றால் மலையின் மேலே உள்ள ‘சிதறாலம்மா’ என்ற பகவதி கோவிலை அடையலாம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோவிலில் பகவதி சிலை நிறுவப்பட்டு இங்கிருந்த சமண மடாலயம் பகவதி கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.
கருவறை மற்றும் மண்டபம்
இங்கு காணப்படும் குடைவரைக் கோவிலை இடைக்காலத்தில் (Medieval Period) அகழ்ந்துள்ளனர். குடைவரைக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. மூன்று கருவறைகள், மேற்குப்பார்த்த பாறையில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. மகாமண்டபம், முகமண்டபம், பலிபீடம், மடைப்பள்ளி ஆகியவை குடைவரையை ஒட்டி எழுப்பப்பட்ட கட்டுமானங்கள் ஆகும். மகாமண்டபத்தைத் தூண்கள் தாங்குகின்றன. கூரையில் கஜலக்ஷ்மி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தூண்களின் மீது தீர்த்தங்கரர்கள், விலங்குகள், முனிவர்கள், நடனமாதர்கள், ஆகியோர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பூமொட்டுகள் செதுக்கப்பட்ட போதிகைகளின் (Potika) மீது சிங்கங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் இருபுறங்களிலும் வாயிற்காவலர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்தை ஆறு தூண்கள் தாங்குகின்றன. குடைவரைக் கோவிலுக்கு மேலே உள்ள பாறையில் கட்டப்பட்டுள்ள விமானம் மின்னல் தாக்கி சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

கல்வெட்டுகள்
திருச்சாரணத்து மலை வளாகத்தில் 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 12 கல்வெட்டுகள் சமண சமயத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை. ஆய்மன்னன் விக்கிரமாதித்திய வரகுணனின் கல்வெட்டுகள், மிகவும் தொன்மையானவை, கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு அண்மையில் பொறிக்கப்பட்டது ஆகும். இங்கு காணப்படும் 9 வட்டெழுத்துக் கல்வெட்டுகளும், ஒரு கிரந்தக் கல்வெட்டும், ஒரு மலையாளக் கல்வெட்டும் காணப்படுகின்றன. இவை சமணத் திருமேனிகளைச் செய்து அளித்த கொடையாளர்கள் பெயர்களையும், சமண சமயக் குரவர்கள் (ஆண் சமணத் துறவிகள்), குரத்தியர்கள் (பெண் சமணத் துறவியர்கள்) பெயர்களையும் குறிப்பிடுகின்றன. இங்கு காணப்படும் கல்வெட்டுகளைத் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் காணப்படும் சமணக் கல்வெட்டுகளுடன் ஒப்பிடுகிறார்கள்.
நாரணக்குட்டியார் திருச்சாரணத்துக் கோவிலுக்கு நுந்தாவிளக்கு எரிக்கத் தானம் கொடுத்த செய்தி (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 549/2004) விக்கிரமாதித்த வரகுணனின் 21 ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 906) கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
அருளாக்கி என்பவன் ஐந்து கல் தூண்கள் செய்தளித்த செய்தியினை (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 551/2004) ஒரு கல்வெட்டு ஆவணப் படுத்தியுள்ளது.
ஸ்ரீ வெம்பூர் என்னும் ஊரைச் சேர்ந்த சாத்தங்குவை வாதுலன் என்பவன் ஒரு சமணத் திருமேனியை செய்தளித்த செய்தியினை ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 552/2004) பதிவு செய்துள்ளது.
திவாகர மாணாக்கர் சந்திரநந்திவைரியார் என்பவன் இங்கு ஒரு சமணத்திருமேனி செய்தளித்த செய்தி மற்றொரு (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 554/2004) வட்டெழுத்துக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
திருச்சாரணத்துப் பட்டினிப்படாரர் சட்டன் வரகுணன் என்பவன் தீர்த்தங்கரர் திருமேனி செய்வித்த செய்தியினை (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 555/2004) ஒரு கல்வெட்டு வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெடும்பறைக்காட்டாம்பள்ளியைச் சேர்ந்த உத்தணந்தி அடிகள் தீர்த்தங்கரர் திருமேனி செய்தளித்த செய்தியினை (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 556/2004) மற்றொரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
திருநறுங்கொண்டை மேலைப்பள்ளியைச் சேர்ந்த வீரநந்தி அடிகள் திருமேனி செய்தளித்ததை (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 557/2004) வேறொரு கல்வெட்டு பதிவு செய்துள்ளது.
அச்சனந்தி என்பவர் செய்வித்த திருமேனி குறித்த (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 558/2004) கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
கோயிக்கல் திரு இரட்டபாகன் கணிதி பண்டிதரின் மாணாக்கர் சந்திரநந்தி உறையூர் தமிழ்ச்சிரமணன் என்பவன் செய்தளித்த திருமேனி குறித்து வேறொரு (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 559/2004) கல்வெட்டு பதிவு செய்துள்ளது.
திரிபுவன சுந்தரன் என்பான் துவாரபாலர் சிலையினைச் செய்தளித்த செய்தியினை (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 560/2004) ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
பேரயக்குடி அரிட்டநேமி படார மாணாக்கிகள் குணந்தாங்கிக் குரத்திகள் திருச்சாரணத்துப் படாரியாருக்கு பொன்னும் பொற்பூவும் வழங்கிய செய்தியினை (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 562/2004) விக்கிரமாதித்த வரகுணனின் 28 ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 913) வட்டெழுத்துக் கல்வெட்டு ஆவணப்படுத்தியுள்ளது.
இவை 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தன என்று கணிக்கப்பட்டுள்ளது. விஜயபத்ர விபஜித் என்பவர் சிதாறல் பகவதி அம்மன் கோவிலுக்கான நுழைவாயில் கல் அமைத்த செய்தி (த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் 563/2004) சமஸ்கிருத மொழியில், கிரந்த லிபியில் கோவில் குளப்படிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புநூற்பட்டி
- சிதறால் சமணக் குகைக் கோயில். தமிழிணையம் தமிழர் தகவலாற்றுப்படை
- Chitharal Jain Monuments C.P.R. Environmental Education Centre, Chennai
- Chitharal Jain Monuments Wikipedia
வியப்புதான் ஏற்படுகிறது ஐயா
LikeLike
நன்றி ஐயா
LikeLike
பதிவு அருமை, நான்இருமுறை பார்வையிட்ட இடம்…
LikeLike
மிக்க நன்றி
LikeLike
சிதாறல் சமணப்பள்ளி பற்றி படித்துள்ளேன். இப்பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.
LikeLike
அவசியம் சென்று வாருங்கள். கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.
LikeLike