இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.

இரண்டாம் சேர குலமரபில் வந்த  அரசர்கள் பெருமாள்கள் (Perumals) என்றும் சில சமயங்களில் குலசேகரர்கள் (Kulasekharas) என்றும் அழைக்கப்பட்டனர். இரண்டாம் சேர வம்சத்தவர்களின் அரசு (second Chera kingdom) நிறுவப்பட்டு, கி.பி 9 ஆம் நூற்றாண்டில், பெருமாள் அரசர்களின் ஆட்சி (rule of the Perumals) தொடங்கியது. மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த குலசேகரர்களின் ஆட்சி சேரர் (கேரள) வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்தப் பெருமாள் குல அரசர்கள் கி.பி 800 முதல் கி.பி 1124 வரை அன்றைய சேரநாட்டை ஆண்டு வந்ததாகக் கருதப்பட்டது. எலம்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை மற்றும் எம். ஜி. எஸ். நாராயணன் போன்றவர்கள் இடைக்காலச் சேரர்களின் வரலாற்றைப் பல்வேறு கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். மகோதயபுரம் குலசேகரர்களின் ஆட்சிக்காலம் குறித்த வரலாறு, அறிஞர்களிடையே வாதவிவாதப் பொருளாக இருந்து வருகிறது.

மகோதயபுரம் பண்டைய சேரர்களின் தலைநகர் (தற்போது கொடுங்கல்லூர்)

இரண்டாம் சேர அரசின் தலைநகரம்  மகோதயபுரம்  ஆகும். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், மலபார் கடற்கரையும் பெரியாறும் (Periyar River) சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்த மகோதயபுரம் இன்று கொடுங்கல்லூர் (English: Cranganore; Malayalam: കൊടുങ്ങല്ലൂർ) என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நகரம் திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர் வட்டத்தில் (பின்கோடு  680664) அமைந்துள்ளது. இவ்வூர் தேசிய நெடுஞ்சாலை 66 இல் கொச்சி நகருக்கு வடக்கே 29 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் அமைந்துள்ள துறைமுக நகரமாகும். அயல்நாட்டுப் பயணிகளான எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் மற்றும் பிளினி போன்றோர் முசிறிஸ் (Muziris) என்று பதிவு செய்துள்ளனர். பெரியாரின் முகத்துவாரத்தில்  அமைந்துள்ள பழங்கால துறைமுகமான முசிறியே (முசிரிஸ் Muziris), தற்காலக் கொடுங்கல்லூர் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இவ்வூர் வஞ்சி, என்றும் அழைக்கப்பட்டது. கல்வெட்டுகளில் முயிரிக்கோடு (Muyirikode) என்று பொறிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத நூல்கள் இவ்வூரை மாக்கோதை என்று அழைத்துள்ளன. சங்க இலக்கியங்கள் இவ்வூர் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்தத் துறைமுக நகருக்கு உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து கடலோடி வணிகர்கள் உலகத்திலிருந்து வந்து சென்றுள்ளனர். இவ்வூர் ரோமானியப் பேரரசுடன் தொடர்ச்சியான வணிகத் தொடர்பில் இருந்துள்ளது. இவ்வூர் 66 ஆம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, கொச்சி நகருக்கு வடக்கே 29 கி.மீ.  (18 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இதன் புவியிடக் குறியீடு  10.233761°N  அட்சரேகை 76.194634°E தீர்க்கரேகை ஆகும்.

சங்ககாலச் சேர வம்சம் :

முற்காலச் சேரர்கள் தென்னிந்தியாவில் கொங்குநாட்டையும் (தற்போதைய திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், மற்றும் கோவை, மாவட்டங்களை) மேற்குக் கடற்கரையின் சில பகுதிகளையும் ஆண்டனர். சங்க காலச் சேர நாட்டின் எல்லைகள் கொங்கு நாட்டின் எல்லைகளே ஆகும். சங்க காலச் சேரர்களின் தலைநகரம் வஞ்சி முத்தூர் என்ற கருவூர் (நவீன கருர்) ஆகும். இது ஆண்பொருணை (அமராவதி) நதிக் கரையில் இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வேணாடு (திருவிதாங்கூர்), குட்டநாடு (மலபார்), கொடுந்தமிழ் நாடு ஆகிய பகுதிகளை நிலக்கிழார்கள் (Vassals) மூலம் ஆண்டு வந்தனர். சாதவாகனர், உரோமர் மற்றும் கிரேக்கர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்துள்ளனர்.

முற்காலச் சேரர்கள் குறித்து மிக அரிதான வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன. சங்க காலச் சேரர்களைப் பற்றி சங்க இலக்கிய நூல்களான புறநானூறும் பதிற்றுப்பத்தும் குறிப்பிட்டுள்ளன. சங்ககாலச் சேரர்கள் ஆதன், இரும்பொறை, குட்டுவன், கொல்லிப்புரை, கோதை, மாக்கோதை, சேரல், ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டனர். சங்ககாலத்துச் சேர மன்னர்களைப் போற்றிப் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இம்மன்னர்கள் அனைவரும் ‘சேரமான்’ என்னும் அடை மொழியில் தொடங்கும் பெயருடன் குறிப்பிடப்படுகின்றனர்.

 1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் (புறநானூறு 2)
 2. சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன் (புறநானூறு 369)
 3. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் (புறநானூறு 5)
 4. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் (புறநானூறு 62,368)
 5. சேரமான் பெருஞ்சேரலாதன் (புறநானூறு 65)
 6. சேரமான் குட்டுவன் கோதை (புறநானூறு 54)
 7. சேரமான் கோக்கோதை மார்பன் (புறநானூறு 48,49)
 8. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (புறநானூறு 245)
 9. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் (புறநானூறு 8,14,387)
 10. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ (புறநானூறு 11,282)
 11. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறநானூறு 17,20,22,)
 12. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (புறநானூறு 50)
 13. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறநானூறு 53)
 14. சேரமான் கணைக்கால் இரும்பொறை (புறநானூறு 74)
 15. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை (புறநானூறு 210,211)
 16. சேரமான் வஞ்சன் (புறநானூறு 398)

பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன. இந்நூலில்

 1. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – குமட்டூர்க் கண்ணனார் பாடியது
 2. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – பாலைக் கௌதமனார் பாடியது
 3. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் – காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது
 4. கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் (எ) சேரன் செங்குட்டுன் – பரணர் பாடியது
 5. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் – காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது
 6. செல்வக்கடுங்கோ வாழியாதன் – கபிலர் பாடியது
 7. பெருஞ்சேரல் இரும்பொறை – அரிசில்கிழார் பாடியது
 8. இளஞ்சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர்கிழார்

ஆகிய எட்டு சேர அரசர்களின் வரலாறு, காலவரிசை (Chronology) மற்றும் ஆட்சியாண்டு (Year of Reign) உள்ளிட்ட செய்திகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் பத்தும், பத்தாம் பத்தும் – கிடைக்கவில்லை. சேரர்களின் ஆட்சிக்காலம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் தொடங்குவதாக திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை கணித்திருக்கிறார். சங்க இலக்கியங்களில், சேர மன்னர்கள், குடக்கோ, குட்டுவன், கடுங்கோ, மற்றும் என்ற குடிப்பெயர்களாலும் ஆதன், பொறை, கோதை ஆகிய பின்னொட்டுப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்கள். சேர அரசர்களை மாக்கோதை என்றும் அழைத்தனர்.

சங்கம் மருவிய காலம்: களப்பிரர், பல்லவர், பாண்டியர், ஆட்சியில் தமிழகம்

கி.மு . 3 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை சேரர்களைப் பற்றி எந்தச் செய்தியுமில்லை. சுமார் மூன்று நூற்றாண்டுகளாகக் களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டு வந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களும் பாண்டியர்களும் களப்பிரர்களை வென்று ஆட்சியமைத்தனர். பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 730 – 765) பல கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் இடம் பெற்றுள்ளான். இவன் ஒரு பிரபல சேர மன்னனை வென்றதாகக் கூறிக்கொள்கிறான். இந்தச் சேர மன்னன் யார் என்ற குறிப்பு இல்லை. போர்க்களம் குறித்த வர்ணனையைக் கொண்டு இந்தப் போர் வேணாடு மற்றும் குட்ட நாட்டில் நடந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பல்லவர் கல்வெட்டுகள் சேரர் மேற்கொண்ட போர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளன. மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் ஐஹோளே கல்வெட்டும் சேரர் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 765 – 790) ஆட்சிக் காலத்தில், சேரர்கள் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பல்லவர்களுடன் நட்பு நாடாகவும் இருந்துள்ளனர். பல்லவ மல்லன் நந்திவர்மன் சேரர்களின் துணையுடன் பாண்டியன் வரகுணனைத் தோற்கடித்துள்ளான்.

இரண்டாம் சேர வம்சம்: சேரமான் பெருமாள்கள் (எ) குலசேகரர்கள்

மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சேரமான் பெருமாள்கள் என்னும் குலசேகர வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் சேரவம்சத்து அரசர்களின்  காலவரிசை வரலாற்றாசிரியர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. பெருமாள் அரசர்களின் ஆட்சி தொடங்கிய சரியான தேதி மற்றும் அதன் நிறுவனர் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே வாதவிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. போதிய வரலாற்றுச் சான்று இல்லாமையால் இவ்வம்சத்தினரின் வரலாற்றை மீட்டுருவாக்குவது சவாலாகவே உள்ளது. அண்மையில் நிகழ்ந்த அகழ்வாய்வுகள், ஆய்வுப்பயணங்கள் மற்றும் கண்டறிதல்கள் மூலம் புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இளங்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை மற்றும் எம். ஜி.எஸ். நாராயணன் போன்ற அறிஞர்கள் சேரர் பெருமாள்களின் வரலாற்றை, குறிப்பாகப் பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் தீர்வுகாண முயன்றனர். மகோதயபுரம் சேரர் பெருமாள் ஆட்சியாளர்களின் ஆட்சியாண்டுக் காலவரிசைகளைச் மீட்டுருவாக்குவதில் இந்த ஆய்வறிஞர்கள் இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன.

எம். ஜி.எஸ். நாராயணன் காலத்தில் 150 கல்வெட்டுகள் (138 கல்வெட்டுகள் மற்றும் 12 செப்பேடுகள்) கண்டறியப்பட்டிருந்தன. கல்வெட்டுகள் கலியுக சகாப்தம், கொல்லம் சகாப்தம் மற்றும் உள்ளூர் சகாப்தம்,  போன்ற பல்வேறு ஆண்டு (சகாப்த) முறைகளில் தேதியிடப்பட்டிருந்தன.  80 கல்வெட்டுகளில் மன்னர்களின் ஆட்சிக் காலம் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற கல்வெட்டுகளில் கால அளவீட்டுக் குறிப்புகள் இல்லை. இவற்றுள் சேரர் பெருமாள்களுடன் தொடர்பிலிருந்த சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் இராஷ்டிரகூட அரசர்களின் கல்வெட்டுகளும் அடங்கும்.

கல்வெட்டாய்வாளரான இராமநாத அய்யர், பல்வேறு திருவிதாங்கூர் வரலாற்று அறிஞர்கள் மற்றும் கல்வெட்டாய்வாளர்களின் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், இராஜசேகர வர்மா முதல் இராம குலசேகரா வரையிலான மன்னர்களின் காலவரிசையை முதன்முறையாக நிர்ணயித்தார். 

இளங்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை பல்வேறு அரசர்களின் ஆட்சியாண்டுகளில் புதிய பரிந்துரைகளை முன்மொழிந்து, புதிய திருத்தப்பட்ட அரசர்களின் காலவரிசையை முன்மொழிந்தார். எம்.ஜி.எஸ். நாராயணன் இளங்குளம் பி.என். குஞ்சன் பிள்ளையின் கருத்துக்களை பொதுவாக ஏற்றுக்கொண்டார். சில புதிய ஆட்சியாளர்களின் பெயர்களைச் சேர்த்தார் மற்றும் வேறு சில மன்னர்களின் ஆட்சி ஆண்டுகளைச்  சற்று மாற்றியும் அமைத்தார்.

இளங்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை … … … எம்.ஜி.எஸ். நாராயணன் … … …
அரசர் பெயர்கள்  காலவரிசைஅரசர் பெயர்கள்  காலவரிசை
குலசேகர ஆழ்வார்கி.பி. 800 ‐ கி.பி. 820இராம ராஜசேகராகி.பி. 800 ‐ கி.பி. 844
ஸ்தாணு ரவிகி.பி. 844 ‐ கி.பி. 885ஸ்தாணு ரவி குலசேகராகி.பி. 844 ‐ கி.பி. 883
இராம வர்மாகி.பி. 885 ‐ கி.பி. 917கோதா ரவி விஜயராகாகி.பி. 883 ‐ கி.பி. 913
இந்து கோதா வர்மாகி.பி. 944‐ கி.பி. 962இந்து கோதாகி.பி. 943‐ கி.பி. 962
முதலாம் பாஸ்கர ரவி வர்மாகி.பி. 962 ‐கி.பி. 1019பாஸ்கர ரவி மனுகுல ஆதித்தியாகி.பி. 962 ‐ கி.பி. 1021
இரண்டாம் பாஸ்கர ரவி வர்மாAD 979 ‐AD 1021
சேரர் அரசர்களின் காலவரிசை

குலசேகர வர்மா (எ) குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார், நம்மாழ்வாரால் வைணவத்தின்பால் ஈர்க்கப்பட்டார் என்று தெரிகிறது. இவரே குலசேகர ஆழ்வாரானார் என்ற கருத்தை வைணவர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும். இவர் ஏழாவது ஆழ்வார் ஆவார். குலசேகர ஆழ்வார் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களத்தில் மாசி மாதம், புனர்பூச நட்சத்திரத்தன்று பிறந்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது. இவர் திருமாலின் மார்பில் இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சமாக அவதரித்தவராகக் கருதப்படுகிறார். “கொல்லி – காவலன் கூடல் – நாயகன்  கோழிக்கோன் குலசேகரன்” என்று பெருமாள் திருமொழி பாசுரம் 667 குலசேகர ஆழ்வாரை வருணிக்கிறது. இவர் கொங்கு நாட்டின் தலைவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

குலசேகர ஆழ்வார்

தன் மகனுக்கு அரசபட்டம் கட்டிய பின்னர் துறவறம் பூண்டு, தலயாத்திரை மேற்கொண்டு திருவரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்), அயோத்தி ஆகிய தலங்களுக்குச் சென்று பெருமாளைச் சேவித்தார். இவருடைய மகளான சேரகுலவல்லியை அரங்கனுக்கு  மணம் முடித்து வைத்ததாக வைணவர்களால் நம்பப்படுகிறது. இதனைப் போற்றும் விதமாக ஒவ்வொரு இராமநவமி அன்றும் திருவரங்கம் கோவிலில் சேர குல வல்லி நாச்சியார் சேர்த்தி உத்சவம் நடைபெறுகிறது. திருவரங்கத்தின் மூன்றாவது திருச்சுற்றில் ‘சேனைவென்றான் திருமண்டபத்தைக்’ கட்டியவர் குலசேகர ஆழ்வார் ஆவார். மூன்றாம் திருச்சுற்றை இவரே  செப்பனிட்டார். எனவே திருஅரங்கத்தின் மூன்றாம் சுற்று குலசேகரன் சுற்று  என்று பெயர் சூட்டப்பட்டது.

பெருமாளைப் போற்றி இவர் பாடிய 105 பாசுரங்கள் (647 முதல் 750 வரை) ‘பெருமாள் திருமொழி’ என்ற பெயரில் நாலாயிர திவ்யப்ரபந்தத்தின் முதல் ஆயிரத்தில் தொகுத்தளித்தவர் நாதமுனிகள் ஆவார். திருமலையில் உள்ள வேங்கடவன் ஆலயத்தின் “படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே” என்று குலசேகர ஆழ்வார் பாடியதால் அனைத்து வைணவ ஆலயங்களிலும், மூலவரான பெருமாள் சன்னதிக்கு முன்னால் இருக்கும் படிக்கட்டினை “குலசேகரன் படி ” என்று பெயரிட்டு அழைப்பது மரபு.

குலசேகர ஆழ்வார் சன்னதி, மன்னார்கோயில்

குலசேகர ஆழ்வார், பல வைணவத் தலங்களைத் தரிசித்த பின்னர், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மன்னார் கோவில் இராஜகோபாலசாமி குலசேகரப் பெருமாள் கோயிலில் 30 ஆண்டுகள் தங்கிச் சேவை செய்த பின்னர், தனது 67 ஆம் வயதில், அங்கேயே முக்தியடைந்தார். இக்கோவிலில் இவருக்குத் தனிச் சன்னதி உள்ளது.

இரண்டாம் சேரப் பேரரசின் நிறுவனர் குலசேகர ஆழ்வார் என்று இளங்குளம் பி. என். குஞ்சன் பிள்ளை கருதுகிறார்.  அனைத்துச் சேர மன்னர்களும் குலசேகரப் பெருமாள் என்ற அதிகாரப்பூர்வ பட்டத்தை ஏற்றுக்கொண்டதால், இந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் குலசேகர ஆழ்வார் என்று முடிவு செய்ய முடியும் என்கிறார் குஞ்சன் பிள்ளை. ஆனால், குலசேகர வர்மாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இராஜசேகரா, குலசேகர பெருமாள் என்ற அதிகாரப்பூர்வ பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

முகுந்தமாலா (சமஸ்கிருதம்) மற்றும் பெருமாள் திருமொழி (தமிழ் பாசுரம்) ஆகியவற்றை இயற்றிய குலசேகர ஆழ்வாரும், தபதி சம்வரணா, சுபத்ர தனஞ்சயா,  விச்சின்னபிஷேகா, ஆச்சார்யமஞ்சரி ஆகிய நூல்களை இயற்றிய குலசேகர வர்மாவும் ஒருவரே என்பது பிள்ளையின் வாதம். பாண்டியர் கல்வெட்டுகளில் ‘சேரமானார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், குலசேகரவர்மன்  பெயரோ விவரங்களோ இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. குலசேகரவர்மன் பெயராலேயே குலசேகர வம்சம் ஏற்பட்டது என்ற கருத்திற்கு ஆதரவாக போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

இராஜசேகரா

குலசேகர ஆழ்வாருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் இராஜசேகரா என்ற சேரமான் பெருமாளே என்பது குஞ்சன் பிள்ளையின் வாதம். சேரர் பெருமாள் வம்சத்தின் முதல் மன்னன் இராம இராஜசேகரா என்று எம்.ஜி.எஸ். நாராயணன் கருதுகிறார்.

Kurumattur inscription (9th century AD)

குருமத்தூர் கல்வெட்டு வரலாற்றாய்வாளர் எம்.ஜி.எஸ். நாராயணின் கருத்திற்கு வலுவூட்டுகிறது. மலப்புரம் மாவட்டம், அரிகோடு வட்டம், குருமத்தூர் கிராமத்தில் உள்ள விஷ்ணு கோவிலில் 2011 ஆம் ஆண்டு மேற்கொண்ட பராமரிப்புப் பணியின் போது கண்டறியப்பட்டது. பல்லவ கிரந்த வரிவடிவத்தில் பலகைக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள இந்தச் சமஸ்கிருத கல்வெட்டு கலியுக சகாப்த ஆண்டில் தேதியிடப்பட்டுள்ளது (ஆங்கிலத் தேதி கி.பி 24, மே 871). இது கேரளாவில் கண்டறியப்பட்ட அரிய சமஸ்கிருத கல்வெட்டுகளில் ஒன்றாகும். மகோதயபுரம் (கொடுங்கல்லூர்) சேர வம்சத்தின் முதல் சேர மன்னன் இராம ராஜசேகராவின் பெயரையும் ஆட்சித் தேதியையும் துல்லியமாகக் பதிவு செய்துள்ள முதல் கல்வெட்டு இதுவாகும். கல்வெட்டாய்வாளர் எம்.ஆர்.இராகவ வாரியார், முதலில் இக்கல்வெட்டினைப் படித்து விளக்கியுள்ளார்.

Vazhappally copper plate (9th century AD)

வாழப்பள்ளி மகாதேவர் கோவில், கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் உள்ளது. முதலாம் சேர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலை கட்டியதாகக் கருதப்படுகிறது. பரசுராமனே நிறுவிய 108 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். பரசுராமனே மூலவர் மகாதேவன் சிலையை நிறுவியதாகக் கருதப்படுகிறது. இக்கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டதென்று தெரியவில்லை. இக்கோவிலில் இரண்டு நாளம்பலங்ககளும் (கருவறையைச் சுற்றியுள்ள நான்கு சுவர்கள் கொண்ட கட்டமைப்பு) இரண்டு கொடி மரங்களும்உள்ளன.

இராஜசேகரா வாழப்பள்ளிச் செப்பேட்டைத் தனது 12 ஆம் ஆட்சியாண்டில் பொறித்தார். வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட ஓர் இன்றியமையாத ஆவணம் இதுவாகும். இதுவே சேரர் பெருமாள்களின் முதல் செப்பேடாகும். ஒற்றைச் செப்பேட்டின் இரு புறமும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட இந்தச் செப்பேடு, திருவாற்றுவை கோவிலில் தினசரி வழிபாட்டிற்கான நில மானியம் குறித்த வழக்கு பற்றிய ஒரு தீர்ப்பாய ஆணையும் (Tribunal decree), திருவாற்றுவை பதினெட்டு நாட்டார் மற்றும் வாழப்பள்ளி ஊரார் ஆகிய இருவரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்த உடன்படிக்கை மன்னர் இராஜசேகரா முன்னிலையில் ஏற்பட்டது. இந்தச் செப்பேட்டில் எந்தத் தேதியும் குறிப்பிடப்படவில்லை. இச்செப்பேட்டின் காலம் குறித்து ஆய்வாளர்கள் முரண்படுகிறார்கள். கொல்லம் சகாப்தம் (Kollam Era) இவருடைய ஆட்சியில் – புழக்கத்திற்கு வந்தது.

சேரமான் பெருமாள் மறைவு குறித்த பல புராணக்கதைகள்

சேரமான் பெருமாள் நாயனார் (எ) கழறிற்றறிவார் நாயனார்

திருவஞ்சைக்குளம் மகாதேவர் கோவில் கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர் வட்டம் , திருவஞ்சிக்குளம் ( തിരുവഞ്ചിക്കുളം) கிராமத்தில். இது தேவாரப் பாடல் பெற்ற மலைநாட்டுத் தேவாரத்தலம் ஆகும். இக்கோவிலின் கருவறை தேர் வடிவில் அமைந்துள்ளது. சுயம்பு மூர்த்தியான மூலவர் மகாதேவர் உமையம்மையுடன் காட்சி தருகிறார். தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். இங்குள்ள பஞ்சலோக நடராசர் சிலையின் “திருவஞ்சைக் களத்து சபாபதி” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது சேரமான் பெருமாள் பூசித்த சிலையாகும். சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கொடிமரத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன.

இராஜசேகரா பிரபல சிவனடியாரான சேரமான் பெருமாளுடன்  (English: Cheraman Perumal;  Malayalam: ചേരമാൻ പെരുമാൾ) இணைத்து அடையாளம் காணப்படுகிறார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்ட போது சேரமான் பெருமாள் நாயனார் என்று வழங்கப்பட்டார். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தின் கழறிற்றறிவார் புராணம்’ மற்றும் ‘வெள்ளானைச் சருக்கம்’ ஆகிய சருக்கங்களில் இவர் கழறிற்றறிவார் நாயனார் எனப் போற்றப்படுகிறார். சேரமான் பெருமாளின் அவதரித்து முக்தி பெற்ற தலம் இதுவாகும். தனது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த சேரமான் பெருமாள்:

 1. சமயக்குரவரான சுந்தரர் சேரமானின் உற்ற நண்பர். சுந்தரரும் சேரமான் பெருமாளும், ஆடி மாத ஸ்வாதி தினத்தன்று, கைலாயம் சென்ற நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்தது. கைலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து சுந்தரை அழைத்துச் சென்ற இடம் ‘யானை வந்த மேடை’ என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி சுவாதி தினத்தன்று சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
 2. கிபி 843-ஆம் ஆண்டு மெக்கா சென்று அப்துல் ரஹ்மான் சமிரி எனும் பெயர்மாற்றத்துடன் இஸ்லாத்தைத் தழுவியதாக மற்றொரு கதை சொல்கிறது.
 3. மெக்கா பயணித்து முகமது நபியைச் சந்தித்து அவருடைய வழிகாட்டுதலில் தாஜுதீன் (நம்பிக்கையின் மகுடம்) என்று பெயர்மாற்றம் கொண்டு இஸ்லாத்தைத் தழுவியதாக வேறொரு கதை உள்ளது.
 4. கோழிக்கோட்டைச் சேர்ந்த நாயர் தலைவருக்கு வாள் கொடுத்து அப்பகுதியின் சாமுத்திரியாக ஆக்கிய ஒரு கதையும் உண்டு.
 5. கிறித்தவ வணிகர்களுக்கு வணிக உரிமை வழங்கியதாக ஒரு கதையும் உள்ளது.
 6. பௌத்த மதத்தைத் தழுவியதாகவும் ஒரு கதை உள்ளது.

கேரளாவின் சேரமான் மாலிக் நகரில் இவர் எழுப்பிய சேரமான் மசூதி உள்ளது. இதுவே இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாமியர்களுக்கு என்று ஏற்பட்ட மசூதியாகவும் கருதப்படுகிறது. அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு ஹிந்து மன்னனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. ஓமனில் ஒரு கேரள இந்து மன்னரின் சமாதி இருப்பதாகவும் அது சேரமான் பெருமாளுடையது என்றும் நம்பப்படுகிறது.

’சேரமன்னர் வரலாறு’ என்ற நூலை எழுதிய ஒளவை துரைசாமிப் பிள்ளை இது முற்றிலும் தவறான செய்தி என்கிறார். சேர மன்னர் மக்கா சென்றது பற்றிய விவரங்கள், கேரளோற்பத்தி மற்றும் கேரள மான்மியம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் அது காலத்தால் பிந்தியது, பெரிய புராண காலத்திற்கு மிக மிகப் பிற்பட்டது. ஆகவே அதனை ஆதாரமாக ஏற்க இயலாது என்கிறார் பிள்ளை. வேறு சில ஆய்வாளர்கள் சேக்கிழார் குறிப்பிடும் சேரமான் பெருமாள் வேறு. இஸ்லாத்தை ஏற்று மெக்கா சென்ற சேரமான் வேறு என்றும் குறிப்பிடுகின்றனர்.

வாழப்பள்ளிச் செப்பேட்டை அடிப்படையாகக் கொண்டு, சேரர் பெருமாள் வம்சத்தின் முதல் மன்னன் இராம இராஜசேகரா என்று எம்.ஜி.எஸ். நாராயணன் கருதுகிறார். இவருடைய ஆட்சிக் காலத்தில், கேரளத்தில் கொல்லம் சகாப்தம் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இராஜசேகரா வாழப்பள்ளிச் செப்பேட்டைத் தனது 12 ஆம் ஆட்சியாண்டில் வெளியிட்டார். இதுவே சேரர் பெருமாள்களின் முதல் செப்பேடாகும். இந்தச் செப்பேட்டில் எந்தத் தேதியும் குறிப்பிடப்படவில்லை. இச்செப்பேட்டின் காலம் குறித்து ஆய்வாளர்கள் முரண்படுகிறார்கள்.

ஸ்தாணு ரவி (எ) ஸ்தாணு ரவி குலசேகரா

ஸ்தாணு ரவி, இராம இராஜசேகராவிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்தார். ஸ்தாணு ரவியின் கல்வெட்டுகள் கேரளாவின் பல இடங்களில் கண்டறியப்பட்டன. என்றாலும் ஸ்தாணு ரவியின் முடிசூட்டு விழா குறித்து துல்லியமான தேதி இல்லை. இவரின் ஆட்சியாண்டு குறித்துப் பல அனுமானங்கள் உள்ளன. (குஞ்சன் பிள்ளை கி.பி. 844 ‐ 885 / எம்.ஜி.எஸ் நாராயணன் கி.பி. 844 ‐ 883). இவரைக் குலசேகர ஆழ்வார் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். தரிசப்பள்ளிச் செப்பேடு, அய்யன் அடிகள் திருவடிகள் என்பவரால், ஸ்தாணு ரவியின் 5 ஆம் ஆட்சியாண்டில்,  வெளியிடப்பட்டது. மார்சாபீர் இம்போவால் (Marsapir Imbo) நிறுவப்பட்ட கொல்லத்தில் உள்ள தரிசப்பள்ளி தேவாலயத்திற்கு, வேணாடு ஆட்சியாளர், அய்யனடிகள் திருவடிகள், நன்கொடை அளித்ததையும் அதன் நிர்வாகத்தையும் தரிசப்பள்ளி செப்பேடுகள் ஆவணப்படுத்துகின்றன. வேணாடு அய்யானடிகள், குலசேகர மன்னர் ஸ்தானு ரவியின் கீழ் ஒரு குறுநில ஆட்சியாளராக இருந்தார். மேலும் நிலக்கொடை இவருடைய ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 849) நிகழ்ந்தது.

தரிசப்பள்ளி

தில்லைஸ்தானம் கிருனேஷ்வரர் கோவில் (Grishneshwar Temple) (தஞ்சாவூர்) கல்வெட்டு (கி.பி. 844-45) (திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை (தொகுதி II) இந்தக் குழப்பத்தைத் தீர்க்க உதவுகிறது. இராஜகேசரிவர்மன் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871-907) பல்லவ மன்னன் அபராஜித வர்மனை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றியதாக திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. இக்காலத்திலேயே  ஸ்தாணு ரவி ஆட்சி சேரநாட்டில் நடந்துள்ளது என்று பி.ஏ.  கோபிநாதராவ் கருதுகிறார். ஸ்தாணு ரவியும் முதலாம் ஆதித்த சோழனும் சமகாலத்தவர்கள் என்றும் நெருங்கிய உறவு கொண்டிருந்தவர்கள் என்று தில்லைஸ்தானம் கல்வெட்டு கூறுகிறது.

தரிசப்பள்ளி செப்பேட்டில் (கொல்லம் சிரியன் கிறிஸ்தவச் செப்பேட்டில்), விஜயராகதேவர் கோயிலதிகாரிகளாக (இளவரசராக) குறிப்பிடப்படுகிறார். இவருடைய மனைவியும் அரசியுமான கிழானடிகள் என்பவர் திருநந்திக்கரை கோவிலுக்கு அளித்த பொன் கொடை குறித்த செய்தி திருநந்திக்கரைக் கல்வெட்டில் இடம்பெறுகிறது. கிழானடிகள் ஸ்தாணு ரவியின் மகள் ஆவாள். ஸ்தாணு ரவிக்கு கி.பி 870 ஆம் ஆண்டளவில் ஒரு மகன் பிறந்ததாகத் தெரிகிறது. அரசவைக் கவிஞரும், சமஸ்கிருத மொழியின் யமக கவிஞருமான  வாசுதேவ பட்டாத்திரி, தனது யுதிஷ்டிரா விஜயா நூலில், இரண்டாவது மன்னரும் தனது புரவலருமான குலசேகராவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சான்றுகளின் அடிப்படையில், தொடக்க கால வரலாற்றாசிரியர்கள் கி.பி 9 ஆம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் ஸ்தாணு ரவியின் தேதியை நிர்ணயிக்கின்றனர்.

கணிதமேதை முதலாம் பாஸ்கராவின் லகு பாஸ்கரியா (Laghu Bhaskariya) என்ற நூலுக்கான உரையினை, வானியலாளரும், அரசவை உறுப்பினருமான, சங்கரா நாராயணா (கி.பி. 840 – கி.பி. 900) என்பவர் எழுதினார். இந்த உரையின் காலம் கலியுக சகாப்தம் தேதி – 3967 ஆண்டுகள் மற்றும் 86 நாட்கள் = 25 மிதுனம், கொல்லம் சகாப்தம் 41 = சக வருஷம் 791 = கி.பி. 870 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குருவும் சனியும் தனுர் இராசியில் நின்றது ஸ்தாணு ரவியின் 25 ஆம் ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. லகுபாஸ்கரியம் நூலுக்கான உரையின் அடிப்படையில் இளங்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை ஸ்தாணு ரவியின் ஆட்சியாண்டை முடிவு செய்துள்ளார். இரண்டாம் சேர வம்ச அரசர்களின் காலவரிசையினை மாற்றியமைப்பதற்கு இந்தச் சான்று ஒரு வலுவான அடித்தளத்தை அளித்தது. கி.பி. 844 ஆம் ஆண்டு ஸ்தாணு ரவி குலசேகராவின் முடிசூட்டு விழா நடந்ததாக இந்த வானியல் நூலின் உரை உறுதி செய்கிறது.

ஸ்தானு ரவியின் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் மேலும் இரண்டு கல்வெட்டுகளை இரிஞ்சலகுடா கூடல்மணிக்கியம் கோயிலிலும், திருவாற்றுவாய் (திருவல்லா) கோயிலிலும் காணலாம். கி.பி. 854 ஆம் ஆண்டு தேதியிட்ட  ஸ்தானு ரவி வர்மாவின் 11 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே கூடல்மணிக்கியம் கோவிலின் காலத்தால் மிக முந்தைய வரலாற்றுச் சான்றாகும். இக்கோவிலுக்கு ஏராளமான நிலங்களை நன்கொடையாக அளித்துள்ள செய்தி இக்கல்வெட்டில் காணப்படுகிறது.. மூவிடத்து மேச்சேரி இல்லத்திற்குச் சொந்தமான திருவாற்றுவாய் (திருவல்லா)  செப்பேடுகள், இம்மன்னர், தனது 17 ஆம் ஆட்சியாண்டில், ஓணம் பண்டிகையின்போது, வழங்கிய அன்னதானம் குறித்து விவரிக்கின்றன. கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் தொடக்ககாலக் குறிப்புகளில் இதுவும் ஒன்றாகும்

இராம வர்மா (குஞ்சன் பிள்ளை)

ஸ்தாணு ரவி குலசேகராவைத் தொடர்ந்து இராம வர்மா குலசேகரா (கி.பி 885 – 917) ஆட்சிக்கு வந்ததாகக் குஞ்சன் பிள்ளை கருதுகிறார். ஸ்தாணு ரவியைத் தொடர்ந்து கோதா ரவி விஜயராகா (கி.பி. 883 ‐ 913)  ஆட்சிக்கு வரவில்லை என்றும் இவர் கருதுகிறார். ஆனால் இராம வர்மா குலசேகரா குறித்த எந்தக் கல்வெட்டுச் சான்றும் கிடைக்கவில்லை. இராம வர்மா குலசேகரா ஆட்சியைத் தொடரவில்லை என்றும், கோதா ரவி விஜயராகாவே (கி.பி. 883 ‐ 913) தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார் என்று  எம்.ஜி.எஸ். நாராயணன் கருதுகிறார்.

இராமவர்மனின் மகள் முதலாம் பராந்தக சோழனைத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்திக் குறிப்பு உள்ளது. அந்த நாளில் சோழருக்கும் சேரருக்கும் இடையே நிலவிய நல்லுறவினைச் இது சித்தரிக்கிறது. இராமவர்மாவின் அரசவையில் ‘யுதிஸ்டர விஜயம்’ எழுதிய வாசுதேவ பட்டாத்திரி அதிகாரப்பூர்வமான அரசவைக் கவிஞராக இடம் பெற்றிருந்தார். இவர் பெரிய யமக கவிஞர் ஆவார். (யமக என்பது ஒரே செய்யுளின் எந்தப் பகுதியில் பார்த்தாலும் சொற்களும் ஒலிகளும் ஒத்து இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும். யமகா என்பது ஒரு வகையான தொடை (Rhyme) நயமாகும்).

கோதா ரவி வர்மா (குஞ்சன் பிள்ளை)

இராம வர்மா குலசேகராவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் கோதா ரவி வர்மா (கி.பி. 944 ‐ 962) என்கிறார் குஞ்சன் பிள்ளை. திருச்சூர் மாவட்டம், நெடும்புரம் (தற்போது வடக்கஞ்சேரி) தளி சிவன் கோவிலில் காணும் நெடும்புரம்  தளிக் கல்வெட்டு, குலசேகரப் பெருமாள் கோதா ரவியின் 17 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதாகும். குரு மிதுனத்தில் நின்ற ஆண்டு ‘கலியுகம்நாலயிரத்துமுப்பத’ என்று கல்வெட்டில் குறிப்பிட்டதைக் குஞ்சன் பிள்ளை  ‘கலியுகம்நாலயிரத்துமுப்பதஞ்சு’ என்று திருத்திப் படித்தார். இதன்படி இவரால் ‘கலியுகம் 4035’ ஆம் ஆண்டுக்குச் சமமான ஆண்டு கி.பி. 917 என்ற முடிவை எட்ட முடிந்தது. இந்த ஆண்டிலேயே கோதா ரவி வர்மா ஆட்சிப் பொறுப்பேற்றார் என்பது தெளிவாயிற்று. இம்மன்னர் திரிபுன்னித்துராவில் உள்ள சந்தான கோபாலசாமி கோவிலில், தனது 30 ஆம் ஆட்சியாண்டில், வெளியிட்ட கல்வெட்டின் காலம் கி.பி. 947 என்று குஞ்சன் பிள்ளை கருதினார். இதனையே இம்மன்னனின்  ஆட்சியின் இறுதி ஆண்டு என்று முடிவிற்கும் வந்தார்.  எனினும், கி.பி 936 ஆம் ஆண்டிற்குரிய முதலாம் பராந்தக சோழனின் திருவொற்றியூர் கோவில் கல்வெட்டில்  சேர மன்னன் விஜயராகாவின் பெயர் இடம்பெறுவதால் குஞ்சன் பிள்ளையின் முடிவு கேள்விக்குள்ளாகிற்று.

கோதா ரவி வர்மா (எம்.ஜி.எஸ். நாராயணன்)

இராம வர்மா குலசேகரா குறித்த எந்தக் கல்வெட்டுச் சான்றும் கிடைக்கவில்லை. இராம வர்மா குலசேகரா ஆட்சியைத் தொடரவில்லை என்றும், ஸ்தாணு ரவி குலசேகராவைத் தொடர்ந்து கோதா ரவி வர்மாவே (கி.பி. 943 ‐ 962) ஆட்சிக்கு வந்தார் என்றும்  எம்.ஜி.எஸ். நாராயணன் கருதுகிறார்.

கோதா ரவி விஜயராகா அரியணை ஏறியது கி.பி 883 ஆம் ஆண்டு என்று எம். ஜி.எஸ். நாராயணன் கருதுகிறார். தரிசப்பள்ளிச் செப்பேடு இவரைக் கோயிலதிகாரிகள் என்று குறிப்பிடுகிறது. முதலாம் பராந்தக சோழனின் செப்பேட்டில் விஜயராகா சேர அரசின் மன்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நெடும்புரம் தளிக் கல்வெட்டை ‘கலியுகம்நாலயிரத்துமுப்பத’ என்றே பொருள் கொள்கிறார். இதன் அடிப்படையில் கோதா ரவி விஜயராகாவின்  17 ஆம் ஆட்சியாண்டிற்கு இணையான ஆண்டு கி.பி. 900 என்பதால், இம்மன்னன் ஆட்சிக்கு வந்தது கி.பி. 883 என்று முடிவு செய்துள்ளார். திருப்புன்னித்துராக் கல்வெட்டில் 30 ஆம் ஆட்சியாண்டு என்ற குறிப்பு இடம்பெறுவதால் இம்மன்னனின் ஆட்சி கி.பி. 913 ஆம் ஆண்டு வரை நீடித்ததாக முடிவு செய்துள்ளார்.

கோதா ரவி வர்மனின் ஆட்சிக் காலத்தில் சோழர்கள் தென்கேரளத்தில் நிகழ்த்திய தாக்குதலால் சேரர் மற்றும் சோழ வம்சங்களுக்கிடையே நிலவிய நட்பு சிதைந்தது. ஆய் அரசர்கள் சேரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். காந்தளூர் சாலை மற்றும் விழிஞம் ஆகிய இராணுவப் பயிற்சி மையங்கள் (Military Training centers) சோழர்களால் தாக்கி அழிக்கப்பட்டன. சோழ மன்னரால் தோற்கடிக்கப்பட்ட மாறவர்மன் (Maravarman) பாண்டிய மன்னன் சேர மன்னர்களிடம் தஞ்சம் அடைந்தார். இதன் காரணமாகவும் நட்பு சிதைவுற்றது.

பாஸ்கர ரவியின் முடிசூட்டு விழா நிகழ்ந்த ஆண்டை மதிப்பிடுவது குறித்து வரலாற்றாசிரியர்களிடையே நீண்ட வாதவிவாதங்கள் நடந்துள்ளன. எம். ஏ. கம்மியேட் (M. A. Cammiade) கண்டறிந்த பாஸ்கர ரவியின் நாற்பத்தி மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு (திருநெல்வேலிக் கல்வெட்டு), இவருடைய ஆட்சிக்காலத்தை வரலாற்று அறிஞர்கள் துல்லியமாகக் கணிப்பதற்கு உதவியது. இவருடைய நாற்பது மூன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் வானியல் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு மீன மாதம் (சூரிய சித்தாந்தப் பஞ்சாங்க முறை) எட்டாம் நாளான புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது. அன்று உத்தரம் (உத்தர ஃபல்குனி) நட்சத்திரம் வியாழன் மகர இராசியில் நின்றிருந்தது. இதற்குச் சமமான ஆங்கிலத் தேதி புதன், 1 மார்ச், கி.பி 1021. என்று எல்.டி.சுவாமிக்கண்ணு பிள்ளை என்பவர் கணக்கிட்டுள்ளார். இவ்வாறாக இவரது ஆட்சி கி.பி 978 இல் தொடங்கியது என்று முடிவு செய்யப்பட்டது.

பாஸ்கர ரவியின் பதினான்காம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றொரு கல்வெட்டு கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரிக்கு அருகிலுள்ள பெருண்ணா கோவிலில் இருந்து கண்டறியப்பட்டது. திருநெல்வேலிக் கல்வெட்டைப் போலவே இந்தக் கல்வெட்டிலும் வானியல் செய்திகள் உள்ளன. இக்கல்வெட்டு மீன மாதம் (சூரிய சித்தாந்தப் பஞ்சாங்க முறை) இருபதாம் தேதியன்று வெளியிடப்பட்டது. அன்று புனர்வாசு நட்சத்திரம் வியாழன் மகர இராசியில் நின்றிருந்தது. இதற்குச் சமமான ஆங்கிலத் தேதி கி.பி 1155, மார்ச் 13 ஞாயிறு என்று எல்.டி.சுவாமிக்கண்ணு பிள்ளை என்பவரே கணக்கிட்டுள்ளார். கி.பி 1155 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் குறிப்பிடப்படும் தேதியினை வரலாற்று ஆய்வாளர்கள் நிராகரித்துள்ளனர். காரணம் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சேர அரசு மறைந்து போனது. இவ்வாறு கணக்கிடுவதில் சில முரண்பாடுகள் உள்ளதாகச் சில வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட பெருண்ணா கோவிலின் பாஸ்கர ரவியின் பதினான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டைப் படித்த பின்னர் பி.என். குஞ்சன் பிள்ளை அதன் தேதி கி.பி. 976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாள் என்று கண்டறிந்தார். இதன் அடிப்படையில் திருநெல்வேலிக் கல்வெட்டு குறிப்பிடும் பாஸ்கர ரவி வர்மனுக்கு முன்னர் வேறொரு பாஸ்கர ரவி வர்மன் ஆண்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார். மூன்று பாஸ்கர ரவி வர்மன்கள் இருந்திருக்க வேண்டும் என்பது குஞ்சன் பிள்ளையின் வாதம். முதலாம் பாஸ்கர வர்மன் கி.பி. 962 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1019 வரை ஆட்சியில் இருந்திருக்கலாம். இரண்டாம் பாஸ்கர வர்மன் கி.பி. 979 ஆம் ஆண்டு இளவரசரானார். கி.பி. 1021 வரை இவருடைய ஆட்சி தொடர்ந்திருக்கலாம். மூன்றாம் பாஸ்கர ரவியின் ஆட்சிக் காலம் கி.பி 1043 முதல் கி.பி 1082 வரை என்று நிர்ணயித்துள்ளார். முதலாம் பாஸ்கர ரவியின் 38 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1000 ஆம் ஆண்டு), யூதப் பட்டயம் (செப்பேடு) (the Jewish Copper Plate) வெளியிடப்பட்டது.

பாஸ்கர ரவி மனுகுலாதித்யா என்ற ஒரே ஒரு அரசர் மட்டுமே ஆட்சியிலிருந்தார் என்று எம்.ஜி.எஸ். நாராயணன் கூறுகிறார். கி.பி 962 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இவர் 58 ஆண்டுகள் ஆட்சியிலிருந்ததாகவும் கருதுகிறார். இரண்டாம் பாஸ்கர ரவி வர்மன் இளவரசனாக இருந்ததாகவும் கருதுகிறார்.

முதலாம் பாஸ்கரா ரவி வர்ம மனுகுலாதித்யா (Bhaskara ravi varman 1 Manukuladitya) (கி.பி 961-1019)

முதலாம் பாஸ்கர ரவி வர்ம மனுகுலாதித்யா ஆட்சிக் காலத்தில் சேரர் மற்றும் சோழ வம்சங்களுக்கு இடையில் நூற்றாண்டுகளாக மாபெரும் போர் நீடித்தது. முதலாம் இராஜராஜ சோழன் (ஆட்சிக் காலம் கி.பி. 985–1014) சோழப் பேரரசின் மன்னனாக ஆட்சிப் பொறுப்பேற்றார். இவர் சேரர்களை அடக்கும் எண்ணம் கொண்டு, சேர நாட்டின் தென் பகுதிகளை நோக்கிப் படையெடுத்தார். இவருடைய 15 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 999 ஆம் ஆண்டில்) கன்னியாகுமரி மற்றும் கோட்டாறு பகுதிகளை வென்றார். இந்த வெற்றிக்குப் பின்னர் கன்னியாகுமரி இராஜராஜேஸ்வரம் என்றும் கோட்டாறு மும்முடிச்சோழநல்லூர் என்றும் பெயர் மாற்றம் கண்டன. வென்ற பகுதிகளுக்கு இராஜராஜ பாண்டிநாடு என்று பெயர் பெற்றது. விழிஞம் மற்றும் காந்தளூர்ச்சாலை ஆகிய இராணுவப் பயிற்சிச் சாலைகள் (Military Training Chalas) அழிக்கப்பட்டன. முதலாம் இராஜராஜன் வெளியிட்ட திருவாலங்காடு செப்பேடு (கி.பி. 1012-1044) சேரநாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது. விழிஞம் படையெடுப்பு பற்றிக் குறிப்புகள் உண்டு. இராஜராஜ சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய (முதல் காந்தளூர்ச்சாலை போர் – கி.பி. 1019) நிகழ்வே ஆகும். இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டு (கி.பி. 988) தொடங்கி, இந்த அடைமொழி, இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. முதலாம் இராஜேந்திரன் சோழன் ஆட்சியின் போது நிகழ்ந்த இரண்டாம் காந்தளூர்ச்சாலை போரிலும் சோழர்கள் வெற்றி கண்டார்.  கடற்கரையோரம் சார்ந்த கப்பற் படையின் துணையோடு சோழர்களின் கடற்படை மகோதயபுரத்தைத் தாக்கியது. எனினும் சோழர்களால் இப்பகுதியைக் கைப்பற்ற இயலவில்லை. முதலாம் பாஸ்கர இரவி வர்மனும் ஏராளமான சேரநாட்டுப் படைவீரர்களும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வுகள் குறித்து எந்தக் கல்வெட்டுகளும் கண்டறியப்படவில்லை.

இரண்டாம் பாஸ்கர ரவி வர்மன் (Bhaskara ravi varman 1) (கி.பி 1019-1021)

இவர் இளவரசனாக மட்டுமே இருந்துள்ளார்.

வீரகேரள வர்மன் (Veerakerala Varman) (கி.பி 1022-1028)

முதலாம் இராஜேந்திர சோழன் மேற்கொண்ட வடநாட்டுப் படையெடுப்பு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது மேற்கொண்ட படையெடுப்புக் காலங்களில், வீரகேரள வர்மனால் சேரர் படையினை வலுப்படுத்திக்கொள்ள முடிந்தது. சேரர் படை, இராஜாதி ராஜ சோழனின் படையினை,  எதிர்த்து நின்றது. போரின் இறுதியில் வீரகேரள வர்மன் கைது செய்யப்பட்ட பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இவரின் உறவினரான மூஷக மன்னனும் இப்போரில் கொல்லப்பட்டான். கி.பி 1046 ஆம் ஆண்டு தேதியிட்ட மணிமங்கலம் கல்வெட்டு இந்த நிகழ்வைப் பதிவு செய்துள்ளது. இதன் பின்னர் சேரர்களின் வலிமை குன்றியது.

இராஜசிம்மன் (Rajasimhan) (கி.பி 1028-1043)

இவர் சோழர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட செய்தியினை மன்னார்கோயில் கல்வெட்டுகள் (Mannarkoyil inscriptions) பதிவு செய்துள்ளன. திருச்சூர், இரிஞ்சலகுடாவில் உள்ள கிறிஸ்தவ குடும்பத்திற்கு வணிக அதிகாரங்களை வழங்குவதற்காக இவரது காலத்தில் தாழக்கட்டு கல்வெட்டு (Thazhakattu inscription) வெளியிடப்பட்டது.

இரவிராம வர்மன் (Ravirama varman) (கி.பி 1082-1090)

சேரர்களின் உதவியுடன்  பாண்டியர்கள்  நாஞ்சில் நாடு மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளைத் திரும்பவும் வென்றனர். சோழர்கள் மீண்டும் மீண்டும் படையெடுப்பு நிகழ்த்தி பாண்டியர்களைத் தோற்கடித்தனர்.

இராமவர்மா குலசேகரன் (Ramavarma kulasekharan) (கி.பி 1090-1102)

குலசேகர வம்சத்தின் கடைசி அரசன் ஆவான். இரண்டாம் குலோத்துங்கன் (Kulothunga chola-2) வேணாட்டைத் தாக்கிய பின்னர், வடகேரளத்தை நோக்கித் தன் படையைச் செலுத்தினான். சோழர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்குச் சேரர் படை புதிய தற்கொலைக் குழுவினை அமைத்தது. சோழர்களுக்கு எதிரான இறுதித் தாக்குதலுக்காக, சேர மன்னர் அனைத்துப் படைப் பிரிவுகளையும் தன் தலைமையின் கீழ்  ஒருங்கிணைத்தார்.

இறுதிப் போரில் சேரர்கள் தோற்றார்கள். சோழர்கள் மகோதயபுரத்தைத்  தீக்கிரையாக்கினர். சேரர்களின் தலைநகரம் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது. சேர மன்னன் கொல்லம்  பனம்காவு அரண்மனையில் (Quilon Panamkavu palace) ஒடி ஒளிந்து கொண்டார். அங்கிருந்தபடி படை திரட்டிக் கொல்லத்தில் இருந்த சோழர் படையினை எதிர்த்துப் போராடி அங்கிருந்த சோழர் படைகளை விரட்டியடித்தார். மீண்டும் அவர் அனைத்து உள்ளூர்ப் படைகளை ஒன்றிணைத்து, சோழர்கள் மீது பெரிய தாக்குதலை நிகழ்த்தினார். இறுதியாக சேரர் தற்கொலைப் படையின் கடுமையான தாக்குதல் காரணமாகச் சோழர் படை கோட்டார் நோக்கிப் பின்வாங்கியது.

இராமவர்மா குலசேகரன் சேரநாட்டின் தலைநகரைக் கொல்லத்திற்கு மாற்றி அமைத்த பின்னர் சேரர்களின் மற்றொரு சகாப்தம் தொடங்கியது,. ஆமாம் குலசேகர சேர வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து வேணாட்டு சேர வம்சத்தின் ஆட்சி தொடங்கியது. கொல்லம் தென்வஞ்சி என்று அழைக்கப்பட்டது. சேரர்கள் தென்வஞ்சியர் என்று அறியப்பட்டனர்.

குறிப்புநூற்பட்டி

 1. கொங்கு வேளாளர்களே சேரமரபினர் http://kongucheramanperumal.blogspot.com/2014/07/blog-post.html
 2. சேர மன்னர்களின் வரலாறு! http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/100-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
 3. சேர மன்னர்களின் வரலாறு https://tamilarnaagarigam.blogspot.com/2012/07/blog-post_8650.html
 4. சேரமான் பெருமாள் ஒரு இஸ்லாமியரா? https://ramanans.wordpress.com/2011/08/11/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D/
 5. சேரர் விக்கிப்பீடியா
 6. மறந்துவிட முடியுமா சேரர்கள் ஆட்சியை? http://thathuvathoothuvan.blogspot.com/2014/08/blog-post.html
 7. Ancient inscription throws new light on Chera history Abdul Latheef Naha, The Hindu, February 11, 2011
 8. Chera Dynasty https://tamilnation.org/heritage/chera/index.htm#_ref-0
 9. Chera Dynasty | List of Chera Rulers and their contributions https://www.jagranjosh.com/general-knowledge/list-of-chera-rulers-and-their-contributions-1509369202-1
 10. Gopinatha Rao, T. A Travancore Archaeological Series Volumes II. 1992. Thiruvananthapuram: Department of Cultural Publications.
 11. Kongu Nadu Wikipedia
 12. Krishna Sastri, R. S. H. South Indian Inscriptions Volume III. 1987. New Delhi: Archaeological Survey of India.
 13. Kulasekharas of Mahodayapuram  https://mindfulnessreddit.blogspot.com/2019/01/Kerala-history-of-kulasekhara-dynasty-social-systems.html
 14. Kunjanpillai, Elangulam. P. N. Studies in Kerala History. 1970. Thiruvananthapuram: National Book Stall.
 15. Nagaswami, R. (1995). Roman Karur: A peep into Tamil’s past. Brahad Prakashan, Madras.)
 16. Narayanan, M. G. S. Perumals of Kerala. 2013.Thrissur: CosmoBooks.
 17. Subrahmanyaaiyer. Travancore Archaeological Series Volumes IV. 1992. Thiruvananthapuram: Department of Cultural Publications.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கேரளா, சேரர்கள், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.

 1. ஸ்ரீராம் சொல்கிறார்:

  அருமையான தொகுப்பு.  உங்கள் உழைப்புக்குப் பாராட்டுகளும், வணக்கங்களும்.  சுவாரஸ்யமான தகவல்.

  Like

 2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  அருமை
  தங்களின் அயரா உழைப்பு போற்றுதலுக்கு உரியது ஐயா
  நன்றி

  Like

 3. rvenkatesasn2307 சொல்கிறார்:

  நன்றாக உள்ளது. நிறைய ஆராய்ச்சி செய்தது தெரிகிறது. குலசேகர ஆழ்வார் பற்றிய குறிப்புகள் சிறப்பாக உள்ளன. தொடரட்டும் உங்கள் பணி நன்றி.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.