திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலமும் ஆகும். சங்ககாலம் முதல், வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இவ்வூர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது. எண்பெருங்குன்றங்கள் என்னும் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் ஆகும். லிங்க வடிவில் அமைந்த இம்மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமண்பாழி அருகே உள்ள ஒரு குகைததளத்தில் சமணர் கற்படுக்கைகளும், மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலருகில் அமைந்துள்ள சுனையை ஒட்டியுள்ள பாறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையுச்சியில், காசி விசுவநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள மச்சமுனி சன்னதி அருகேயுள்ள பாறையில் கி.பி 8 – 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுனையையொட்டி அமைந்துள்ள திண்டில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மலையின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குடைவரைக் கோவில் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை, ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்கு குடைவரைகள் அகழப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி,, துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் (கி.பி. 765-815) படைத்தலைவனான சாத்தன் கணபதி என்பவன் இக்குடைவரைக் கோவிலைச் சிவனுக்காக எழுப்பியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளுள் முதல்வீடு என்று கந்தபுராணம் கூறுகிறது.

அமைவிடம்

1,048 அடி (319 மீ) உயரத்தில் ஓங்கி உயர்ந்த பாறைக் குன்று திருப்பரங்குன்றம் நகரத்தின் அடையாளம் எனலாம். புகழ்பெற்ற இக்குன்று 3.2 கி.மீ (2 மைல்) சுற்றளவு கொண்டது. திருப்பரங்குன்றம் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து நகரம் (பின்கோடு 625005) ஆகும். இவ்விடத்தின் புவியிடக்குறியீடு 9°52’12.00″ N அட்சரேகை, 78°04’12.00″ E தீர்க்கரேகை ஆகும். இவ்வூர் கடல்மட்டத்திலிருந்து 145 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. மதுரை திருமங்கலம் சாலையை அடுத்து இடம்பெற்றுள்ள இவ்வூர், மதுரை நகருக்குத் தென்மேற்கில், 9.1 கி.மீ. தொலைவிலும் மதுரை புறவழிச்சாலையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. இவ்வூருக்கு மதுரை நகரிலிருந்து நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆட்டோ மற்றும் வாடகைக் கார்களும் கிடைக்கும். மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் இரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் இரயில் நிலையமும் அமைந்துள்ளது. மதுரை சந்திப்பு இரயில் நிலையம் திருப்பரங்குன்றத்திற்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 48,810 ஆகும்.

இலக்கியச் சான்றுகள்

‘சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து’ (மதுரை மருதன் இளநாகன், அகநானூறு 59), ‘ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து’ (எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், அகநானூறு 149), ‘தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்’ (மதுரைக்காஞ்சி 263).

பரிபாடலின் ஏழு பாடல்கள் திருப்பரங்குன்றம் பற்றிக் குறிப்பிடுகின்றன. ‘“ஒண் சுடரோடைக் களிறேய்க்கு நின்குன்றத்து எழுதெழில் அம்பலம் காம வேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்”’  (எழுத்து மண்டபம்) (குன்றம்பூதனார், பரிபாடல்: 18: 27 – 29), என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சந்தன மரங்கள் நிறைந்த நெடியமலை என்று மதுரை மருதன் இளநாகனார் குறிப்பிடுகிறார்.

விழாக்காலங்களில் பாண்டிய அரசர்கள் தங்கள் குடும்பத்தினரோடும் அமைச்சரோடும் திருப்பரங்குன்றத்து மலையின் மேல் ஏறி, திருக்கோயிலை வலம்வந்து மனம் மகிழ்ந்து துதிபாடியதைப் பரிபாடல்: 19: 19-57 வரிகள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் திருப்பரங்குன்றத்து மலை உச்சியில் வள்ளி, தேவசேனையுடன் அருள்பாலிக்கும் முருகனுக்கு ஒரு கோவில் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது. தற்காலத்தில் இதுபோன்ற கோவில் இல்லை. நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை என்னும் பத்துப்பாட்டு நூலில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட ஆறு படைவீடுகள் வருணிக்கப்படுகின்றன. குன்றத்தின் இயற்கை எழில் நக்கீரரால் அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

எண்பெருங்குன்றம்

இந்நிலை இவர்வந் தெய்த
எண்பெருங் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் … … ..

(சம்மந்தர் தேவாரம் பாடல் எண் : 631)

திருஞானசம்பந்தர் தம்முடைய பாடலில் எண்பெருங்குன்றங்களில் வாழ்ந்த சமணர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

எண்பெருங் குன்றத் தெண்ணா
யிரவரும் ஏறி னார்கள்.
(சம்மந்தர் தேவாரம் பாடல் எண் : 855)

எண் பெருங்குன்றுகளிலும் இருந்து வந்த எண்ணாயிரம் சமணத் துறவிகளும் கழுவில் ஏறினர்.

பரங்குன்றொருவகம் பப்பாரம் பள்ளி
யருங்குன்றம் பேராந்தை யானை – இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டுமோ பிறவித் தீங்கு.
(சமணர் பழம்பாடல்)

இப்பாடலில் கூறப்படும் எட்டு மலைகளுள் திருப்பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை என்னும் சோலைமலை), ஆகிய மலைகள் மதுரையை ஒட்டி அமைந்துள்ளன. ஒருவகம், பப்பாரம், பள்ளி, அருங்குன்றம், ஆந்தைமலை, என்பன எந்த மலையென்று தெரியவில்லை என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. (சமணமும் தமிழும், சமணத் திருப்பதிகள், பக்கம் 151).

வேதப்பகைவர் தம்முடம்பு
வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்கு
கேதப்படுமென் பெருங்குன்றத்து
எல்லாவசோகும் எறிகெனவ
(தக்கயாகபரணி 218)

தக்கயாகப்பரணி 218 ஆம் தாழிசைக்கான உரை: எண்பெருங்குன்றாவன யானைமலையும், நாகமலையும், சுனங்கமலையும், செப்புமலையும் … … … வெள்ளிமலையும் மதிரையைச் சூழ்ந்திருப்பன என உணர்க என்று கூறியுள்ளது . பரங்குன்றம், சமணர்மலை (திருவுருவகம்), பள்ளி (குரண்டி மலை), யானைமலை, இருங்குன்றம்(அழகர்மலை) ஆகிய ஐந்து மலைகளை எண்பெருங்குன்றங்களுள் நிச்சயம் இடம்பெற்றுள்ளன. திரு.வெ.வேதாச்சலம் அவர்கள் மதுரையைச்சுற்றியிருக்கும் எட்டு சமண மலைகளைப் பற்றி விளக்கி எழுதிய நூலின் தலைப்பு ’எண்பெருங்குன்றம்’ என்பதாகும். .திருப்பரங்குன்றம் எண்பெருங்குன்றங்களுள் முதன்மையானதாகும்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே சமணர்கள் தமிழகம் வந்துள்ளனர். பாண்டியர்களின் தலைநகரான மதுரையை ஒட்டி அமைந்திருந்த எண்பெருங்குன்றங்களில் சமணமுனிவர்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை தங்கிச் சமயத் தொண்டாற்றியுள்ளனர். இக்காலகட்டத்தில் உள்ளூர் வணிகர்கள் அளித்த ஆதரவு காரணமாக, இப்பகுதியில் சமணம் தழைத்தோங்கிச் சிறப்பாக இருந்துள்ளது.

பரங்குன்றம் அமண் பாழி கற்படுக்கைகள்

திருப்பரங்குன்றம் மலையினைச் சுற்றிவரும் கிரிவலப் பாதையில் அரசு மருத்துவமனை வளாகத்தையொட்டிக் காணப்படும் நிலையூர் திருப்பத்தில் அமண் பாழி கற்படுக்கைகள் (Jain Cavern Rock cut Beds) என்ற அறிவிப்புப் பலகை காணப்படும்.

மலைமேல் ஏறிச்செல்ல கருங்கற் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு அளவுகளில் மூன்று குகைகள் (பாறையில் ஓட்டை போன்று காணப்படுகின்றன. சுனை ஒன்றும் காணப்படுகிறது. பாறையின் தரையில் படுக்கைகள் போன்ற அமைப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் மனிதர்கள் படுத்துக்கொள்ளும் அளவிற்கு நீளமாகச் செதுக்கப்படவில்லை.

மலைமேலுள்ள மற்றொரு குகைத்தளத்திற்குச் செல்வதற்குப் பாறையின்மீது படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள். இரும்புக் குழாய்களைக் கொண்டு பிடிமானம் அமைத்துள்ளார்கள். மலையின் மடிப்பில் இந்தக் குகைத்தளம் அமைந்துள்ளது. இதனையொட்டி ஒரு சுனை காணப்படுகிறது. இங்குள்ள பாறைத் தரையில் நான்கு படுக்கைகள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. படுக்கைகளின் தலைமாட்டில் உள்ள பாறையில் மூன்று தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவையாவன:-

‘அந்துவன் கொடுபிதவன்’

(பொருள்: அந்துவன் என்பவன் கற்படுக்கையைச் செய்து கொடுத்தான்)

‘எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தான் ஆய்சயன நெடுசாதன்’

(பொருள்: எருகாட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த இழ குடும்பத்தைச் சேர்ந்த போலாலயன் வழங்கியது என்பது இக்கல்வெட்டின் பொருள். இழ என்ற சொல், ஈழ என்று பொருள் தரும்படி குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று திரு ஐராவதம் மகாதேவன் கருதுகிறார் ஈழ என்பது இலங்கை ஈழத்தையோ (இலங்கை) மரம் ஏறும் ஈழவர்களையோ குறிப்பிட்டிருக்கலாம் என்பதும் இவர் கருத்தாகும்.)

‘மாரயது கயம’

(பொருள்: ‘மாரயம்’ என்பது அரசனால் வழங்கப்படும் ஒருவகைப் பட்டம் ஆகும். ‘கயம்’ என்ற சொல் குளம் அல்லது நீர்நிலையைக் குறிக்கும். மாரயம் என்ற பட்டம் பெற்ற ஒருவன் அமைத்துக் கொடுத்த நீர்நிலை.)

பழனியாண்டவர் கோவில் சுனையருகே பாறைச் சிற்பத் தொகுதி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலின் துணைக் கோவிலான பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ள மலையடிவாரத்தினருகே, அமைந்துள்ள சுனையை ஒட்டி அமைந்துள்ள பாறையில் மகாவீரர், பார்சுவநாதர், கோமதீஸ்வரர் என்ற பாகுபலி ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

பழனியாண்டவர் கோவிலருகே உள்ள சுனையை ஒட்டிய பாறையில் தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள்

இருபுறமும் இரண்டு இயக்கர்கள் சூழ, மகாவீரர் முக்குடையின் கீழ் அர்த்தபரியங்காசனத்தில் காணப்படுகிறார். இந்தச் சிற்பக் கோட்டத்தின் மூலையில் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு
நாட்டுத் தி
ருக்குறண்டி அந
ந்த வீரியப்பணி

இக்கல்வெட்டின் காலம் கி.பி.9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். குறண்டி (அருப்புக்கோட்டை வட்டத்தில் ஒரு பகுதி பண்டைய காலத்தில் வெண்புநாடு என்று அழைக்கப்பட்டது.. வெண்பு நாட்டிலிருந்த குறண்டி புகழ்பெற்ற சமணத் தலமாகும்) என்ற ஊரைச்சேர்ந்த அனந்த வீரியன் என்ற அடியார் இத்திருமேனியைச் செய்வித்தது குறித்து இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. அருகிலுள்ள கோட்டத்தில் பார்சுவநாதர் ஐந்துதலை நாகத்தின் கீழே, தர்நேந்திரன் பத்மாவதி ஆகியோருடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். மூலையில் கல்லைச் சுமந்தவாறு கமடன் உருவமும் காணப்படுகிறது. இங்கு பொறிக்கப்பட்டுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு வாணன் பலதேவன் செய்வித்த சிற்பம் என்று சுட்டுகிறது.

‘ஸ்வஸ்திஸ்ரீ சிவிகை ஏறினபடையர்
நீலனாஇன இளந்தம்மடிகள்
மாணாக்கன் வாணன் பலதேவன்
செவ்விச்ச இப்பிரதிமை’

காசிவிஸ்வநாதர் மச்சமுனி சுனை பாறைச் சிற்பத்தொகுப்புகள் சுனைத் திண்டில் தமிழ் பிராமிக் கல்வெட்டு

திருப்பரங்குன்றம் மலைமீது காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. மலைமேல் உள்ள இக்கோவிலுக்குச் செல்வதற்கு, சரவணப்பொய்கையை அடுத்து, படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இதனையொட்டி மச்சமுனி என்ற சித்தரின் ஜீவசமாதியும் சன்னதியும் அமைந்துள்ளது. இங்குள்ள சுனை நீரில், மச்சமுனி, மீன் உருவில் நீந்துவதாகத் தலபுராணக் கதைகள் சொல்கின்றன. இந்தச் சுனையை ஒட்டி அமைந்துள்ள உயரமான பாறை மீது பார்சுவநாதர் மற்றும் பாகுபலி ஆகியோருக்கான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்களின் காலம் கி.பி 8 – 9 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை.

மச்சமுனி பாறைச் சிற்பத் தொகுதி

காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள மச்சமுனி சன்னதிக்கு அருகே அமைந்துள்ள சுனையின் உள்ளே இருக்கும் திண்டில் பொறிக்கப்பட்ட 2000 வருடப் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்று 2013 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.

Location
மச்சமுனி சன்னதி, சுனை, தமிழ் பிராமி கல்வெட்டு

’மூ நா க ர’
’மூ ச க தி’

முதல் வரியில் உள்ள ’மூ நா க ர’ என்ற எழுத்துக்கள் மூநகர் என்று படிக்கப்பட்டுள்ளன. மூத்த நகரான மதுரையைக் குறிக்கும் சொல் இதுவாகும். இரண்டாம் வரியில் உள்ள ’மூ ச க தி’ என்ற எழுத்துக்கள் மூசகதி என்று படிக்கப்பட்டுள்ளன. மூசக்தி என்பது மூத்த சக்தியான இயக்கியைச் சுட்டுகிறது.

தென்பரங்குன்றம் உமையாண்டார் கோவில்

திருப்பரங்குன்றம் மலையின் தென்முகச் சரிவில் தெற்குப் பார்த்தவாறு அகழப்பட்ட ஒரு குடைவரை அகழப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையிலிருந்து மலை அடிவாரத்திற்குச் செல்லும் மண் சாலை வழியே சென்றால் இக்குடைவரையைச் சென்றடையலாம். குடைவரைக்குச் செல்லத் தொல்லியல் துறையினர் நீண்ட படிக்கட்டுகளை அமைத்துள்ளார்கள்.

தொடக்க காலத்தில் இது சமணக் குடைவரையாகத் திகழ்ந்துள்ளது. கி.பி.8-9 ஆம் நூற்றாண்டளவில் மதுரையில் சமணம் தழைத்தோங்கிய காலத்தில் இக்குடைவரை அகழப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் புகழ் பெற்றவனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1239) ஆட்சிக்காலத்தில், கி.பி.1223 ஆம் ஆண்டளவில், இது சிவனுக்கான குடைவரைக் கோவிலாக மற்றம் கண்டுள்ளது.

உமையாண்டார் குடைவரைக் கோவில் திருப்பரங்குன்றம்

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில், பிரசன்ன தேவர் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க, ‘சுந்தரபாண்டிய ஈஸ்வரம்’ என்னும் குடைவரைக் கோவிலை திருப்பரங்குன்றம் மலையின் தென்புறச் சரிவில் எடுத்த செய்தினை, இக்குடைவரையினுள் பொறிக்கப்பட்டுள்ள மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. இக்குடைவரைக் கோவில் தற்போது உமையாண்டார் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இக்குடைவரை முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், மற்றும் கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இது  சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குடைவரைக்கு முன்னால் அமைந்துள்ள சமதளத்திலிருந்து குடைவரையை அடைய இரண்டு படிகள் உதவுகின்றன. உபானம், ஜகதி, குமுதம், கண்டம் ஆகிய உறுப்புகள் கரடுமுரடாகச் செதுக்கப்பட்ட தாங்குதளத்தைக் காணலாம். முகப்பில் பட்டிகையை அடுத்து, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்புடன் கூடிய, இரண்டு முழு நான்முகத் தூண்களையும் (பிரம்மகாந்தத்தூண்) இரண்டு புறமும் இரண்டு நான்முக அரைத் தூண்களையும், மூன்று அங்கணங்களையும்  (தூண் இடைவெளிகள்) காணலாம். தூண்களின் சதுரங்களின் மீது மலர்ப்பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களுக்கு மேல் விரிகோணப் போதிகைகள் உத்தரம் தாங்குகின்றன. உத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன. கூரையின் நீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாக நன்கு சமன்படுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வடிவதற்கு குகையின் புருவத்துப் பாறையில், விரிகோண வடிவில் (obtuse angle), வடிகால் வெட்டப்பட்டுள்ளது.

கணபதி, பிரசன்னதேவர், அமர்ந்தகோல மணிவாசகர்

குடைவரை முகப்பையொட்டி, அமைந்துள்ள வெளிப்புறப் பாறையின் இரு மருங்கிலும் தலா மூன்று கோட்டங்கள் (சுவரில் மாட அமைப்பில் குடையப்பட்ட இடம்) வெவ்வேறு அளவுகளில் அகழப்பட்டுள்ளன. கணபதி, பிரசன்னதேவர், அமர்ந்த கோல மணிவாசகர் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் ஒரு கோட்டத்தில் வடிக்கப்பட்டுள்ளன. தேவார மூவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் உருவங்கள் மற்றொரு கோட்டத்தில் செதுக்கப்பட்டுள்ளன. வேறொரு கோட்டத்தில் இரு கரங்களுடன் திகழும் பைரவர் திருமேனி நாயுடன் செதுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் குடைவரையில் செதுக்கப்பட்ட நடராஜர், சிவகாமி, விநாயகர், முருகன், சுப்பிரமணியன், வள்ளி, தெய்வானை, பைரவர் சிற்பங்கள் கோட்டம்.

நடராஜர் கோட்டம்: மண்டபத்தின் வடக்குச் சுவரின் மீது, இரண்டு கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. அளவில் பெரிதான ஒரு கோட்டத்தில் புடைப்புச் சிற்பங்களாக நடராசர் சிவகாமி அம்மை சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஆடும் நடராசரின் உருவம் இடுப்பிற்குக் கீழே சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நடராசரின் சிற்பத்திற்கு மேலே வலப்புற மூலையில் விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. வலப்புற கீழ் மூலையில் பைரவர் சிற்பமும், தேவார மூவர் (சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) சிற்பங்களும் கட்டப்பட்டுள்ளன. இச் சிற்பக் கோட்டத்தை அடுத்து இடப்புறம் அகழப்பட்டுள்ள கோட்டத்தில் முருகன், வள்ளி, தெய்வானை புடைசூழக் காட்சிதரும் புடைப்புச் சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு: மண்டபத்தின் தென்புறச் சுவரில் நீளமான இரண்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ் கல்வெட்டுகள் வட்டெழுத்திலும், வடமொழிக் கல்வெட்டு கிரந்த எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1239) ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டு கி.பி.1223 ஆம் ஆண்டளவில் பொறிக்கப்பட்டுள்ளது. பிரசன்னதேவர் என்னும் சைவ அடியாரின் வேண்டுகோளின்படி சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்னும் பெயரில் சிவன் கோயிலாக மாற்றம் பெற்ற செய்தியும், இக்கோவிலின் தினசரி பூஜை மற்றும் பராமரிப்புக்காகவும், கோயிலுடன் தொடர்புடைய ஆதிசிவ பிராமணர்களின் ஊதியத்திற்காகவும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், புளிங்குன்றூர் என்ற கிராமத்தை, வரி நீக்கிய நிலக்கொடையாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அர்த்தநாரீஸ்வரர் விக்கிமீடியா காமன்ஸ்

கருவறைக் கோட்டம்: கருவறையின் பின்புறச் சுவரில் உள்ள கோட்டத்தில் அர்த்தநாரியின் புடைப்புச் சிற்பம் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் தலைப் பகுதியில் அசோகா மரக்கிளைகள் காட்டப்பட்டுள்ள காரணத்தால், இது சமணத் துறவி அல்லது தீர்த்தங்கரரின் சிற்பமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் இது அர்த்தநாரி சிற்பமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சைவக் குடைவரையாக மற்றம் கண்டது என்பதற்கான சான்றாக இதனைக் கொள்ளலாம்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் (பரங்கிநாதர், பரங்குன்றநாதர் கோவில்)

வரலாறு / கல்வெட்டு

குடைவரையாக அகழப்பட்டுள்ள இந்தக் கருவறைகளை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 765-815) ஆட்சிக் காலத்தில், இவனது படைத்தலைவனும் சாமந்தபீமன், வைத்யமுக்கியன் எனும் பட்டங்களை உடையனுமான சாத்தன் கணபதி என்பவன் எனும் உயர்நிலை அலுவலனால் பரமசிகரினி எனும் இம்மலையில் சம்புவாகிய சிவபெருமானுக்காக இக்கோயிலை கலியாண்டு 3874 ஆம் ஆண்டு (கி.பி.773 ஆம் ஆண்டு) எடுப்பித்தான் என்று ஒரு வடமொழியில் கிரந்த எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது.

வட்டெழுத்தில் அமைந்த மற்றொரு தமிழ்க் கல்வெட்டு பாண்டியமன்னன் முதலாம் வரகுணன் (கி.பி. 792-835) என்னும் கோமாறஞ்சடையனின் ஆறாம் ஆட்சியாண்டில் மகாசாமந்தனாகிய சாத்தன் கணபதி எனும் கரவந்தபுரத்தில் வசிக்கும் வைத்தியன் பாண்டி அமிர்தமங்கலவரையன் இந்தக் குடைவரையையும், திருக்குளத்தையும் திருத்தங்கள் செய்தான் என்றும், அவன் மனைவியாகிய நக்கங்கொற்றி என்பாள் அங்கு துர்காதேவி கோயிலையும், ஜேஷ்டையார் கோயிலையும் எடுப்பித்தாள் என்றும் பதிவு செய்துள்ளது.

பராந்தக நெடுஞ்சடையனைத் தொடர்ந்து மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572 – 1595), திருமலை நாயக்கர் (1623 – 1659) ஆகிய நாயக்க மன்னர்களும் இராணி மங்கம்மாளும் (1689 – 1704) இக்கோவிலின் விரிவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

தலபுராணம்

தலபுராணம் 1: சூரபத்மனை திருச்செந்தூர் படைவீட்டில் வதம் செய்தபின்னர், பிரம்மா, தேவர்கள் மற்றும் பராசுர முனிவரின் ஆறு புதல்வர்கள் ஆகியோரின் வேண்டுதல்களை ஏற்று, முருகன் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினார். தனக்கு மீண்டும் இந்திரப் பதவியை மீட்டளித்த முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகள் தெய்வானையை மணமுடித்துக் கொடுத்த தலமும் இதுவாகும்.

தலபுராணம் 2: கயிலாயத்தில் சிவன் பார்வதிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை கூறி அருளியபோது, பார்வதியின் மடியில் அமர்ந்திருந்த முருகனும் கேட்க நேர்ந்தது. பிரணவ மந்திரத்தின் பொருளை குருவின் மூலமாகவே அறிதல் மரபு. மறைமுகமாக அறிதல் மரபன்று. இது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகன் திருப்பரங்குன்றம் வந்து தவமேற்கொண்டார். சிவனும் பார்வதியும் தைப்பூச நன்னாளில் முருகன் முன் தோன்றி முருகன் தவத்தை மெச்சி அருள்பாலித்தனர்.

கோவில் கட்டமைப்பு

கி.பி.773 ஆம் ஆண்டு மலைச்சரிவில் அகழப்பட்டுள்ள வடக்கு நோக்கிய குடைவரைக் கோவிலுடன் பிற்காலக் கட்டுமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 48 தூண்களுடன் கூடிய சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் கோவில் முகப்பில் அமைந்துள்ளது. யாளிகள் மற்றும் குதிரைவீரர்களுடன் செதுக்கப்பட்ட தூண்கள், திரிபுராந்தகர், நர்த்தன விநாயகர், துர்க்கை, வீரபாகு, பத்திரகாளி, முருகப் பெருமான் தெய்வானை திருமணக்கோலம், மஹாவிஷ்ணு, 50 அடி உயரம் கொண்ட, மகாலெட்சுமி ஆகிய தெய்வங்களுக்கான சிற்பங்கள் நிறைந்த சிற்பக் கலைக்கூடமாக இம்மண்டபம் திகழ்கிறது. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட இராஜகோபுரம், கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. கோபுர வாசலைக் கடந்தால் திருவாட்சி மண்டபம் எனும் கல்யாண மண்டபத்தைக் காணலாம். இது ஆறுகால் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளன. தீர்த்தத்தின் மேல்புறம் வல்லப கணபதி, மடைப்பள்ளி, ஆகியவை உள்ளன. இதனருகே நந்தவனம் காணப்படுகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

கல்யாண மண்டபத்தையொட்டி கொடிமர மண்டபம் என்னும் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களைக் காணலாம். கொடிமர மண்டபத்தையொட்டி மகாமண்டபம் உள்ளது. மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் சிலைகள் உள்ளன. தென்மேற்கில் உற்சவர் மண்டபத்தைக் காணலாம். தென்கிழக்கில் 100 அடி நீளம் கொண்ட சுரங்கப்பாதையைக் காணலாம். இதனுள் புடைப்புச் சிற்பமாக உள்ள ஜேஷ்டா தேவி சன்னிதியை சாத்தன் கணபதி என்பவரும், அவரது மனைவி நக்கன் கொற்றியும் எட்டாம் நூற்றாண்டில் கட்டியுள்ளனர். ஜேஷ்டாதேவியுடன் இவளது மகன், மகள் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

கம்பத்தடி மண்டபத்திலிருந்து மகாமண்டபம் செல்லும் வழியில் அதிகார நந்தீஸ்வரர், காலகண்டி அம்மையார், இரட்டை விநாயகர் ஆகிய தெய்வங்களைக் காணலாம். மகாமண்டபத்தில் மேற்பகுதியில் கோவர்த்தனாம்பிகைக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சோமாஸ்கந்தர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, நடராசர், பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவியருடன் சூரியன் ஆகிய தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைந்துள்ளன. கீழ்ப்பகுதியில் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளன. அறுபத்து மூவர், தேவார நால்வர், செந்திலாண்டவர், சனி பகவான் ஆகிய தெய்வங்களுக்கான சிலைகளும் இங்குள்ளன. இக்கோவிலில் நவக்கிரக சன்னதி கிடையாது.

அர்த்தமண்டபம்: இக்குடைவரைக்கோவில் அர்த்தமண்டபம் கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அர்த்தமண்டபத்தில் மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை (கொற்றவை) மற்றும் முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் கிழக்கு நோக்கியும், பவளக் கனிவாய்ப் பெருமாள் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

கருவறை: கருவறையில் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

கருவறைக்கு மேற்புறத்தில் தெய்வானை மற்றும் நாரதர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் திருச்சுற்றுப் பாதை கிடையாது. ஆகவே மலையைச் சுற்றி (கிரிவலம்) வருவது மரபு.

மூலவர் பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் என்று திருஞானசம்பந்தரால் போற்றப்படுகிறார். அம்பிகை ஆவுடை நாயகி. சரவணப் பொய்கை, லட்சுமி தீர்த்தம், பிரம்ம கூபம் முதலான ஐந்து தீர்த்தங்கள் இங்குள்ளன. தல விருட்சம் கல்லத்தி மரம். திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலே பரங்கிநாதர் கோவில் என்று கருதப்படுகிறது. இங்குள்ள ஆதிசொக்கநாதரை வணங்கிய பின்னரே முருகனை வணங்குவது மரபு. விழாக்காலங்களில் சிவனுக்கே கொடியேற்றம் அடைபெருகிறது.

தொடக்க காலத்தில், திருப்பரங்குன்றம் மலைக்கு தென்புறச் சரிவிலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே முருகன் கோவிலாக வழிபாட்டில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிற்காலத்தில் இக்கோவில் வடபுறச் சரிவில் அகழப்பட்ட குடைவரைக் கோவிலுக்குத் திருப்பி அமைக்கப்பட்டது. எனவே இக்கோவில் “திருப்பிய பரங்குன்றம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. “தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே” என்று அருணகிரிநாதர் (15ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருப்புகழில் (பாடல் 9) குறிப்பிட்டுள்ளதைச் சான்றாகக் கொள்ளலாம். இங்கு முருகனை “சோமசுப்பிரமணியர்’ என்ற அழைக்கிறார்கள். சோமன் என்ற பெயர் சிவனைக் குறிக்கும்.

தற்காலத்தில் முருகனின் அருபடைவீடுகளுள் முதல் படைவீடாகக் கருதப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் முருகன், தெய்வானையை மணம் முடித்த கோலத்தில், அமர்ந்தபடி காட்சி தருகிறார். இக்கருவரையில் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. மூலவரான முருகனுக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய இருவரும் பரங்கிரிநாதரையே இக்கோவிலின் மூலவராகப் போற்றிப் பதிகம் பாடியுள்ளனர். தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் (சிவன்) கோவிலுக்கு வருகை தந்தது மட்டுமின்றி ஒரு பதிகமும் பாடியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாரும் இக்கோவிலுக்கு வருகைதந்து தேவாரப் பதிகம் பாடியுள்ளார். சேரமான் பெருமான் நாயனாரும் இத்தலத்தை வழிபட்டுள்ளார். அருணகிரிநாதர் (முருகன் மீது பாடிய திருப்புகழ் பாடல்கள் 0007 முதல் 0020 வரை) மற்றும் பாம்பன்சுவமிகள் ஆகியோரும் இங்கு வருகைபுரிந்து பாடல்களை இயற்றியுள்ளனர். பாண்டிய நாட்டு 14 சைவத் திருத்தலங்களுள் முக்கியமானதாகக் கருதப்படும் இத்தலம், பரங்கிரி, திருப்பரங்கிரி, சத்தியகிரி, என்றும் தேவார மூவர் காலத்தில் அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனார், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மும்மணிக்கோவை ஆகிய இலக்கியங்கள் சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி, விட்டணுதுருவம், கந்தமாதனம், கந்தமலை, சுவாமிநாதபுரம், முதல்படை வீடு ஆகிய பல பெயர்களாலும் குறிப்பிட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் தர்கா

.

சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஷாஹீத்தின் தர்கா

திருப்பரங்குன்றம் மலையுச்சியில் இஸ்லாமிய தர்கா ஒன்றைக் காணலாம். இந்த தர்காவில் இஸ்லாமிய துறவி ஹஸ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷாஹீத் ரதியல்லா தால் அன்ஹூவின் கல்லறை அமைந்துள்ளது. சிக்கந்தர் பாதுஷா ஜெட்டாவின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் ஹஸ்ரத் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத் பாதுஷாவுடன் இணைந்து, கி.பி. 1182 ஆம் ஆண்டு, மதீனாவிலிருந்து தமிழ நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த எர்வாடிக்கு வந்தனர். திருப்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு மறுத்த காரணத்தால், எர்வாடி பாதுஷா சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத் (RA), திருப்பாண்டியனுடன் போரிட்டு மதுரை மண்டலத்தை வென்றார். ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மதுரை மண்டலத்தின் மன்னனாக முடிசூட்டப்பட்டார்.

ஹஸ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் (ரலி…)

தோற்று ஓடிய திருப்பாண்டியன், திருப்பதி சென்றான். இழந்த அரசை மீட்டெடுக்க தன் நண்பர்களை உதவிக்கழைத்தான். நண்பர்களுடைய பெரும்படை கொண்டு மதுரையைத் தாக்கினான். ஹஸ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா தன் படைகளுடன் திருப்பரங்குன்றம் மலைமேல் ஏறி ஒளிந்து கொண்டார். பாண்டியர் படை மலைமீது நிகழ்த்திய தாக்குதலில் சிக்கந்தர் பாதுஷா ஷாஹீத் திருப்பரங்குன்றம் மலைமீது கொல்லப்பட்டார். இவருக்கு இங்கே கல்லறை அமைக்கப்பட்டது. சிக்கந்தர் ஷாவின் கல்லறை மீது ஒரு நினைவுச்சின்னம் 17 முதல் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னாளில் மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் இந்தத் தர்காவிற்கு நிலக்கொடையாக 40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை வழங்கினார். இதற்கான செப்பு பட்டயமும் வழங்கப்பட்டது.

குறிப்புநூற்பட்டி

  1. Subramania Swamy Temple : Subramania Swamy Subramania Swamy Temple Details | Subramania Swamy – Tiruparankundram | Tamilnadu Temple | சுப்பிரமணிய சுவாமி (dinamalar.com)
  2. அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்- Dinamani
  3. சங்கத் தமிழ்ச்சான்றோர் காட்டும் கோயில்கள். இதழ். Blogspot. 29 February 2016
  4. தமிழி: திருப்பரங்குன்றம் காசி விசுவநாதர் கோயில் கல்வெட்டு… (thamizhii.blogspot.com)
  5. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் – தமிழர் உலகம் (tamizharulagam.in)
  6. திருப்பரங்குன்றம் | கந்தகோட்டம் (kanthakottam.com)
  7. திருப்பரங்குன்றம் – சமய நல்லிணக்கச் சின்னம். சொ.சாந்தலிங்கம். கீற்று 27 செப்டம்பர் 2012
  8. திருப்பரங்குன்றமலையில் பசுமைநடை- பகுதி 2: சில இணைப்புகள் | சித்திரவீதிக்காரன் (wordpress.com)
  9. திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் (விக்கிப்பீடியா)
  10. பரங்குன்றத்தில் இருப்பது பரமன் கோயிலா, குமரன் கோயிலா? | – Dinakaran

YouTube

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், மதுரை, வரலாறு and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

  1. திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன்.
    ஆனால் இக்காட்சிகளை எல்லாம் காணாமலேயே வந்திருக்கிறேன்

    Like

  2. seshadri சொல்கிறார்:

    //‘எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தான் ஆய்சயன நெடுசாதன்’//இழ என்ற சொல் வறியவன் என்ற பொருளது குடும்பிகன் என்பது பூசகன் என்ற பொருளது. இதாவது எருகாட்டூர் வறிய பூசகன் போலாலயன் சார்பாக நெடுசாத்தன் கற்படுக்கை செய்தான் என்பது இதன் முழுப்பொருள்.  

    Like

  3. Raju Rajendran சொல்கிறார்:

    இந்த பாண்டியர்கள் எந்த காலத்தவர்? சங்கம், இடை?

    Like

    • முத்துசாமி இரா சொல்கிறார்:

      இடைக்காலப் பாண்டியர்கள்
      கடுங்கோன் (கி.பி. 590–620) முதல் மூன்றாம் மாறவர்மன் ராஜசிம்மன் III கி.பி. (900–920) வரை . முதலாம் வரகுணன் (கி.பி. 765–815) குறிப்பிடத்தக்கவன்

      சோழ பாண்டியர்கள்
      சோழ பாண்டியர்கள் என்ற பட்டப்பெயருடன் சோழ வைஸ்ராய்கள் கி.பி. 1020 முதல் கி.பி. 1216 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தனர்.

      பிற்காலப் பாண்டியர்கள்
      முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1216–1238) முதல் நான்காம் வீரபாண்டியன் (கி.பி. 1309–1345) வரை. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216–1238) குறிப்பிடத்தக்கவன்

      Like

    • தோழா் டி.கே.எஸ்.பாண்டியன் சொல்கிறார்:

      தமிழா்கள் சமணர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
      அதற்கு இங்கு பதிவு செய்துள்ள காணொலியே சான்று.
      சமண கோயிலை மன்னா்கள் துணையுடன் சைவ கோயிலாக மாற்றியுள்ளனா்.
      இது பல இடங்களில் தமிழகம் முழுவதும் நடந்துள்ளது..

      Like

  4. Dr B Jambulingam சொல்கிறார்:

    திருப்பரங்குன்றம் சென்றபோது சில பகுதிகளைப் பார்த்துள்ளேன். இப்பதிவு மூலமாக முழுமையாகக் காணும் வாய்ப்பும், பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தன. அடுத்த முறை செல்லும்போது அனைத்தையும் இப்பதிவின் துணையோடு காண்பேன். நன்றி.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.