சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்

சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தச் சமூக சீர்திருத்தவாதி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இவர் தன் கணவர் ஜோதிராவ் கோவிந்த ஃபூலேயுடன் இணைந்து இந்தியாவில் பெண்களின் உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடுவதில் முக்கிய பங்கு வகித்தார். மகாராஷ்டிர சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கியமான நபராக இவர் கருதப்படுகிறார். இதன் காரணமாகவே இவரை “முதல் தலைமுறையைச் சேர்ந்த நவீன இந்திய பெண்ணியவாதி” என்றும் “இந்தியப் பெண்ணியத்தின் தாய்” என்றும் “ராஷ்டிரமாதா” (தேசத்தின் தாய்) என்றும் குறிப்பிடப்படுகிறார். இந்தத் தம்பதியினர் 1848 ஆம் ஆண்டில் புனே நகரின், பிடே வாடா பகுதியில் முதல் பெண்கள் பள்ளியை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றண்டில் வாழ்ந்த இவர் முன்னோடி பெண்ணியவாதியும், சமுதாய மறுமலர்ச்சியாளரும், கல்வியாளரும் கவிஞரும் ஆவார். பல இந்தியர்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, இந்தத் தம்பதியைப் பற்றித் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

Statues of Jyotirao Phule and Savitribai Phule, at Aurangabad in Maharashtra (மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் நகரில் நிறுவப்பட்டுள்ள ஜோதிராவ் ஃபூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் சிலைகள்)

கண்டோஜி நெவாசே பாட்டீல் – லட்சுமி பாய் தம்பதிகளின் மூத்த மகளான சாவித்ரிபாய் ஃபூலே, பிரிட்டிஷ் இந்தியாவின், பம்பாய் மாகாணம் (Bombay Presidency), (மகாராஷ்டிரா), சதாரா (Satara) மாவட்டத்தில் உள்ள நைகான் (Naigaon) கிராமத்தில் 1831 ஜனவரி 3 அன்று பிறந்தார். இவ்வூர் புனேயிலிருந்து சுமார் 50 கிமீ (31 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. 1840 ஆம் ஆண்டு, இவருடைய 9 ஆவது வயதில், ஜோதிராவ் கோவிந்த ஃபூலேயுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஜோதிராவ் ஃபூலே – சாவித்திரிபாய் ஃபூலே தம்பதி புனேவில் தலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் வசித்து வந்தனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தக் காலத்தில் குழந்தை திருமணமே முக்கிய சடங்காகத் திகழ்ந்தது. பெண்களுக்கான கல்வியும் மறுக்கப்பட்ட காலம் அதுவாகும். எனவே சாவித்திரி பாயும் படிக்காதவராக இருந்தார். ஜோதிராவ் சாவித்திரிபாய்க்கு வீட்டிலேயே அடிப்படைக் கல்வி புகட்டினார்.

அந்தப் பள்ளிக்குச் சென்ற பெண்களின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றினார்கள். ஜோதிராவ் தன் மனைவி சாவித்திரி பாயைத் தன்னுடனேயே பள்ளிக்கு அழைத்துச் சென்றார். சாவித்திரி தனக்கு இழைக்கப்பட்ட பல அவமானங்களைப் பொறுத்துக்கொண்டு தனது பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது கணவர் இவருக்கு உறுதுணையாக இருந்தார்.

பள்ளிக் கல்வியினை முடித்த பின்னர், ஆசிரியர் கல்விக்கான பயிற்சியினைப் பெற சாவித்திரிபாய் விழைந்தார். இவருடைய ஆசிரியர் பயிற்சி கல்விக்கான பொறுப்பை ஜோதிராவின் நண்பர்களான சகரம் யஷ்வந்த் பரஞ்ச்பே மற்றும் கேசவ் சிவராம் பவல்கர் (ஜோஷி) ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

அகமதுநகரில் இருந்த சிந்தியா ஃபாரர் (Cythia Farrar) நிறுவிய அமெரிக்க மிஷனரியிலும், புனேயின் புனேயில் திருமதி மிட்செல் நார்மல் பள்ளியிலும் (Normal School of Ms. Mitchell) ஆசிரியர் பயிற்சி பெற்றார். புனேவில் உள்ள மஹர்வாடாவில் முதல் இந்திய ஆசிரியையாகவும் பணியில் அமர்ந்தார். அங்கு பெண்களுக்கு முதன்முறையாகக் கல்வி புகட்டினார். இவரும் இவருடைய கணவரும் சகுணாபாய் என்பவருடன் இணைந்து, பிடே வாடா (Bhide Wada) என்னுமிடத்தில் பெண்களுக்கான தனது சொந்தப்பள்ளியை ஜனவரி 1, 1848 நாளன்று நிறுவி, கல்விப் பணியைத் தொடர்ந்தனர். இதே பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

பெண்கள் வெறும் பொருள்களாகக் கருதப்பட்ட காலத்தில், சமத்துவக் கல்விக்கு வழிவகுப்பதற்கான ஒரு தீப்பொறியை அவர் பற்றவைத்தார். தீண்டாமையின் கொடுமை மிகுந்து விளங்கிய பிரிட்டீஷ் இந்தியாவில் அனைத்து மக்களுக்குமான அதாவது சூத்திர (shudra), அதிசூத்திர (atishudra) மற்றும் ஒடுக்கப்பட்ட தலித்துப் பெண்கள் என அனைவருக்குமாக இயங்கிய ஒரே பள்ளி அதுதான். இப்பள்ளியில் மேற்கத்திய பாடத்திட்ட அடிப்படையில், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இன்று, 173 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. 1851 ஆம் ஆண்டின் இறுதியில், சாவித்ரிபாய் மற்றும் ஜோதிராவ் ஃபூலே ஆகியோர் புனேயில் பெண்களுக்காக மூன்று வெவ்வேறு பள்ளிகளை நிறுவி நடத்தினர். இம்மூன்று பெண்கள் பள்ளிகளிலும் சுமார் 150 பெண் மாணவிகள் சேர்ந்து படித்தனர்.


சாவித்திரி பாய் பள்ளிக்குச் செல்வதற்கு உடையணிந்து தயாரான பின்னர், பையில் ஒரு மாற்று உடையை எடுத்துக்கொண்டு செல்வதுண்டாம். பள்ளிக்குச் செல்லும் வழியில், மேல்சாதியைச் சேர்ந்த பழமைவாதிகள், மாலி (Mali) என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாவித்திரி பாய் மீது கற்களையும், மாட்டுச் சாணத்தையும், மனித மலத்தையும் வீசுவதுண்டாம். பள்ளிக்குச் சென்ற பின், இவர் குளித்து உடை மாற்றிக்கொண்டு தன் பணியைத் தொடர்வாராம். மேல்சாதி பிராமணர்கள், இவர்கள் ஆற்றிய கல்விப் பணி, சனாதன நூல்களின் அடிப்படையில், பாவகரமானது (Sin) என்று பழி சுமத்தினர். இதன் காரணமாக, ஜோதிராவ் ஃபூலேயின் தந்தையின் வீட்டில் வசித்து வந்த இந்தத் தம்பதிகளை, ஜோதிராவ் ஃபூலேயின் தந்தை வீட்டை விட்டே வெளியேற்றினாராம். ஜூலை 1887 ஆம் ஆண்டு, மாரடைப்பால் ஏற்பட்ட பக்கவாதம், ஜோதிராவ் உடலின் வலது பாகத்தை முடக்கியது. சாவித்திரிபாய் அவரைக் கண்ணும் கருத்துக்கொண்டதால் அவர் குணமடைந்தார்.

1950 ஆம் ஆண்டுகளில் இந்தத் தம்பதிகள் இரண்டு கல்வி அறக்கட்டளைகளை நிறுவினார்கள். முதலாவது அறக்கட்டளை புனேயில் வாழ்ந்த பூர்வீக பெண்களுக்கானது. இரண்டாவது அறக்கட்டளை மஹர் (Mahar), மாங் (Mang) ஆகிய வகுப்பினர்களுக்கான கல்வியை மேம்படுத்தும் சங்கம் (Society for Promoting the Education) சார்ந்தது. அவர் தனது கணவருடன் சேர்ந்து, பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கற்பித்தார். இவர்கள் தங்கள் ஆசிரியப்பணிக் காலத்தில் மொத்தம் 18 பள்ளிகளைத் திறந்தனர்.

Jyotiba-Savitribai-Phule
ஜோதிராவ் கோவிந்த ஃபூலே – சாவித்திரிபாய் ஃபூலே

சாவித்திரி ஃபூலே ஒரு சிறந்த பெண்ணியவாதியுமாவார். குழந்தைத் திருமணம் தலைதூக்கியிருந்த காலத்தில், குழந்தைப் பெண் விதவைகளுக்கு தலை முடியை மழித்து வீட்டில் முடக்கிவிடும் பிற்போக்கு சமுதாயக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. இத்தகைய பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடியதன் வாயிலாக இந்தப் பிற்போக்காளர்களையே மனமாற்றம் அடையச் செய்யும் அளவுக்குத் தீவிரமாகப் போராடி வெற்றி பெற்றவர்கள் ஃபூலே தம்பதிகள் ஆவர். இவர்கள் மூடநம்பிக்கை தலைதூக்கியிருந்த அக்காலத்திலேயே பல விதவைக் குழந்தைகளுக்கு மறுமணம் நடத்தி வைத்தனர். அனைத்துப் பெண்களும் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் என்று இவர் கோரினார். 1874 ஆம் ஆண்டில், ஃபூலே தம்பதியினர் பிராமண விதவையான காஷிபாயின் மகனைத் தத்தெடுத்தனர். தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு யஷ்வந்த் ராவ் என்று பெயரிட்டனர். பின்னர் யஷ்வந்த் மருத்துவரானார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுக் கருவுற்ற பெண்களுக்காக, “பல்ஹத்யா பிரதிபந்தக் கிருஹா” என்றழைக்கப்படும் பேறுகாலப் பராமரிப்பு மையத்தையும் நிறுவினர். 1897 ஆம் ஆண்டு, புனே அருகில் சாசனே மலா (ஹடாப்சர்) என்னுமிடத்தில், சாவித்திரிபாய் ஃபூலேயும் மகன் மருத்துவர் யஷ்வந்தும், பிளேக் தொற்று நோயால் பீடிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவமனையை நிறுவினர்.

சாவித்திரிபாய் ஃபூலே சிறந்த கவிஞரும் ஆவார். இவரது கவிதைகள், மராத்திய நவீன கவிதைப் போக்கினைத் தொடக்கி வைத்ததாக மராத்திய இலக்கிய வாதிகள் கருதுகிறார்கள். இவர் 1854 ஆம் ஆண்டில் ‘காவ்யா ஃபூலே’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். அப்போது இவரின் வயது 23 மட்டுமே. இதில் இயற்கை, சமூகப் பிரச்சினைகள் மற்றும் கற்பித்தல் குறித்த 41 கவிதைகள் இடம்பெற்றுள்ளது. இக்கவிதைகள் வாயிலாகச் சாதி அடிப்படையிலான அடிமைத்தனத்தை உடைக்குமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார். அவரது சில கவிதைகள் சாதி ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாக, ஆங்கிலம் கற்பதில் கவனம் செலுத்துமாறு மக்களை ஊக்குவித்தன.

இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு “பவன் காசி சுபோத் ரத்னாகர்” (“Bavan Kashi Subodh Ratnakar”) (English: “The Ocean of Pure Gems”) என்ற தலைப்பில் 1892 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. Braj Ranjan Mani Pamela Sardar என்பவர் ‘The Forgotten Liberator: The Life and Struggle of Savitribai Phule’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்ட கவிதை மற்றும் தொகுதியில் இடம்பெற்றிருந்த “Go, get education” மற்றும் “Rise, to learn and act” இரண்டு கவிதைகள், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

25 டிசம்பர் 1856 ஆம் தேதியன்று ஜோதிராவின் உரைகளை, சாவித்ரிபாய் ஃபூலே தொகுத்து வெளியிட்டார். ஜோதிராவ் ஃபூலேக்கு சாவித்திரிபாய் ஃபூலே எழுதிய கடிதங்களும் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டது. மாதோஸ்ரீ சாவித்திரிபாய் ஃபூலே ஆற்றிய உரைகள், 1892 ஆம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது.

அஞ்சல்தலை

சாவித்திரிபாய் ஃபூலேயும் பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 10, 1897 ஆம் நாளன்று இறந்தார். இவரது நினைவினைப் போற்றிப் பாராட்டும் விதமாக மார்ச் 10, 1998 ஆம் நாளன்று, இந்திய அஞ்சல் துறைஒரு அஞ்சல் தலையினை வெளியிட்டது. 2015 ஆம் ஆண்டு, புனே பல்கலைக்கழகம், சாவித்திரிபாய் ஃபூலே பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் கண்டது. மகாராஷ்டிர அரசு, பெண் சமூகச் சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் விதமாக, சாவித்திரிபாய் ஃபுலேயின் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தினர்.

குறிப்புநூற்பட்டி

 1. சாவித்திரிபாய் புலே விக்கிபீடியா
 2. சாவித்திரி புலே, பள்ளிக்குச் செல்லும்போது, மாற்று உடையை தினமும் எடுத்துச்சென்றது ஏன்? விகடன் 03 Jan 2019
 3. A saviour called Savitribai: She stood tall against caste and gender oppression. Yet, Savitribai Phule is a forgotten hero
 4. Savitri bai phule (pdf)
 5. SAVITRIBAI PHULE AND WOMEN’S EDUCATION IN INDIA
 6. The Life And Times Of Dnyanjyoti Krantijyoti Savitribai Phule Nupur Preeti Alok -September 5, 2016

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கற்பிக்கும் கலை, பெண்ணியம் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்

 1. Dr B Jambulingam சொல்கிறார்:

  அருமையான கட்டுரை. பல புதிய செய்திகளை அறிந்தேன்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.