Category Archives: தொல்லியல்

சிதாறல் சமணப் பள்ளி, குடைவரை, குகைத்தளச் சிற்பங்கள், கல்வெட்டுகள்

‘சிதறல்’ என்ற ஊரில் ‘திருச்சாரணத்து மலையில்’ அமைந்துள்ள குகைக்கோவில் மற்றும் குடைவரைக் கோவில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் வட்டம், வெள்ளங்கோடு பார்க் ஜங்க்சன் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள குடைவரை, இயற்கைக் குகைத்தளத்தில் செதுக்கப்பட்டுள்ள கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கன் / இயக்கி ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் ஆகியவை கண்டு களிக்கத்தக்கன. இந்தச் சமணக் கோவில் 13 ஆம் நூற்றாண்டளவில் பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சமணத்தளம் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது. திருச்சாரணத்து மலை வளாகத்தில் 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 12 கல்வெட்டுகள் சமண சமயத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை. ஆய்மன்னன் விக்கிரமாதித்திய வரகுணனின் கல்வெட்டுகள், மிகவும் தொன்மையானவை, கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு அண்மையில் பொறிக்கப்பட்டது ஆகும்.
Continue reading

Posted in குகைகள், குடைவரைக் கோவில், சமண சமயம், சுற்றுலா, தொல்லியல் | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பார்த்திவசேகரபுரம் செப்பேடு: ஆய் மன்னன் கோகருந்தடக்கன் நிறுவிய பார்த்தசாரதி கோவிலும் சாலையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்)

பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885) 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இம்மன்னன் முஞ்சிறை கோவில் ஊராளர் சபையினரிடம் நெல் வயலுக்கு ஈடாகக் கொடுத்து பரிவர்த்தனை வாயிலாகக் கோவில் கட்டுவதற்காகப் பெற்ற நிலத்தில், கி.பி. 857 ஆம் ஆண்டு, பார்த்தசாரதிக்குக் கோவில் கட்டினான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். காந்தளூர் சாலை சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தொண்ணூற்றைந்து சட்டர்க்கு (மாணவருக்கு) ஒரு சாலையையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்) உருவாக்கினான். வேதப் பயிற்சி தவிர, ஆயுதப் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டது. கோவில் மற்றும் சாலை ஆகியவற்றை அமைத்த பின்னர், அவை முறையாக நடைமுறைப் படுத்துவதற்காக இம்மன்னன் திட்டமிட்டு உருவாக்கிய நிர்வாக விதிமுறைகள் ஹுஸுர் அலுவலக (பார்த்திவபுரம்) செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சாலைகள் (கல்வி நிறுவனங்கள்) எவ்வாறு செயல்பட்டன என்பதை இச்செப்பேட்டில் இருந்து அறியலாம்.
Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, கேரளா, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

திருநந்திக்கரை குடைவரைக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம்

திருநந்திகரை குகைக் கோவில், ஒரு குடைவரைக் கோவிலாகும். இது நந்தியாற்றங்கரையில் அமைந்துள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதியாகும். இக்குடைவரைக் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்; கல்குளம் வட்டம், திருநந்திக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் தொன்மையான குடைவரைக் கோவிலாகக் கருதப்படுகிறது. கி.பி. 8 ஆம் ஆண்டில் அகழப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், சமண மதத்தின் தொன்மைமிக்க கோவிலாகவும் கருதப்படுகிறது. இக்குடைவரை முகப்பு, மண்டபம், முகமண்டபம், உள்மண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.இக்குடைவரையில் நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, படியெடுக்கப்பட்டுள்ளன.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சமணர்களால் அகழப்பட்ட இக்குடைவரை பிற்காலத்தில் பிராமணீய இந்துக் கோவிலாக மாற்றப்பட்டது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வீரநந்தி என்ற சமண முனிவர் இந்தக் கோவிலில் தங்கி சமண சமயப்பணி ஆற்றியுள்ளார். முதலாம் இராஜராஜ சோழன் முட்டம் என்ற ஊரைக் கைப்பற்றி அதற்கு மும்முடி சோழ நல்லூர் என்று பெயர் மாற்றம் செய்வித்தான். கி.பி. 1003 ஆம் ஆண்டு, இம்மன்னன் இக்கோவிலில் தங்கித் தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான் Continue reading

Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்