அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்

‘அழகர் கோயில்’ என்னும் பண்பாட்டாய்வு நூலை,  பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் (தொ.ப என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்) 70 வயது நிறைவடைந்த பண்பாட்டு ஆய்வறிஞர், எழுத்தாளர், மார்க்சிய பெரியாரியக் கொள்கைகளில் பற்றுடையவர், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, பாளையங்கோட்டை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில்  பேராசிரியராகப் பணியாற்றியவர். மூன்று தசாப்தங்களாக மார்க்சிய-பெரியாரிய அடிப்படையில் வெகுசன வழக்காறுகள், சடங்குகள், நம்பிக்கைகள் சார்ந்த பண்பாட்டாய்வுகளை மேற்கொண்டு வரும் பண்பாட்டாய்வாளர், மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்து கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொண்டு வரும் இந்த ஆராய்ச்சியாளர், ஏறக்குறைய 18 ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டவர், பழகுவதற்கு இனிமையானவர்,  வாசகர்களின் பெருமதிப்பைப் பெற்றவர். தற்போது இவர் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.

கோவில் வரலாறு என்பது மண்ணின் வரலாறு மற்றும் பண்பாட்டு வரலாறு

கோவில் வரலாறு என்பது பெரும்பாலும் அவதாரக் கதைகள், இதிகாசக் கதைகள், புராணக்கதைகள், ஆகமங்கள், பக்தி இலக்கியங்கள், திருவிழாக்கள், வேண்டுதல்கள், பரிகாரங்கள், ஆகிய தலைப்புகளிலேயே எழுதப்பட்டு வந்துள்ளன. பிற்காலத்தில் கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, படிமக்கலை, கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயவியல், தொல்லியல் அகழ்வாய்வுகள், பிரம்மதேயங்கள், சதுர்வேதிமங்கலங்கள், ஊர்ச்சபைகள், மகாசபைகள், வணிகத் தொடர்புகள் ஆகிய வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் கோவில் வரலாறு எழுதப்பட்டது.

“கோயில் பற்றிய சமூக ஆய்வுகள் நாட்டு வரலாற்றாய்வாக மட்டுமின்றிச் சமூக, பண்பாட்டாய்வுகளாகவும் விளங்கும் திறமுடையான. தமிழ்நாட்டில், கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் தரும் செய்திகளும், கோயில்களின் கட்டடக்கலை, சிற்பக்கலைச் சிறப்புகளுமே பெரிதும் ஆராயப்படுகின்றன. கே.கே.பிள்ளையின் “சுசீந்திரம் கோயில்”, கே.வி.இராமனின் “காஞ்சி வரதராஜஸ்வாமி கோயில்,” ஆகிய நூல்களும், சி.கிருஷ்ணமூர்த்தியின் “திருவொற்றியூர் கோயில்” எனும் அச்சிடப்படாத ஆய்வுநூலும் குறிப்பிடத் தகுந்தவையாகும். தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையினரும் திருவெள்ளறை, திருவையாறு, ஆகிய ஊர்க்கோயில்களைப் பற்றி நூல்கள் வெளியிட்டுள்ளனர்.

ஒரு கோவிலுக்கும் அதனை வழிபடும் அடியவர்க்கும் உள்ள உறவு, சமூகத்தில் வழங்கும் கதைகள், பாடல்கள், வழக்கு, மரபுச் செய்திகள், அக்கோயிலை ஒட்டி எழுந்த சமூக நம்பிக்கைகள், திருவிழாக்களில் அவை வெளிப்படும் விதம் ஆகியவை பற்றிய ஆய்வுகள் தமிழ்நாட்டில் பெருகி வளரவில்லை.”  (அழகர்கோயில், முன்னுரை. தொ.பரமசிவன்)

அழகர்கோயில் குறித்த ஆய்வு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டார்களின் வழிபாட்டுச் சடங்குகளையும், நம்பிக்கைகளையும், செவிவழிக் கதைகளையும், வர்ணிப்புப் பாடல்களையும் பண்பாட்டுக் கூறுகளாகப் பார்க்கும் ஆய்வு முறைமை வரலாற்றாய்விற்குப் புதியது. கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பு குறிப்பிட்ட சாதிகளை முன்னிறுத்தி ஆராயப்பட்டது. மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்துக் கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வு முறைமை புதுமையானதும் முழுமையானதும் ஆகும்.  கோயில் ஆய்வுகளுக்கு, பேராசிரியர். தொ.பரமசிவன் அவர்கள் மேற்கொண்ட இந்தக் கள ஆய்வு முன்னோடியாகத் திகழ்கிறது.

நூல் வெளியீடு

1980 ஆம் ஆண்டு இந்த நூல் பல்கலைக் கழகப் பதிப்பிற்குரியதாகத் தேர்வானது.  ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், 1989 ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டாலும் 1997-98 ஆம் ஆண்டளவிலேயே வாசகர்களைச் சென்றடைந்ததாகவும் வாசகர்களிடம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றதாக   நூலாசிரியர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் இரண்டாம் பதிப்பை கே.கே.புக்ஸ் நிறுவனம், (தி. நகர்  சென்னை) வெளியிட்டுள்ளது.

பேராசிரியர். முனைவர் தொ. பரமசிவன்

இனி தொ.ப, வின் அழகர் கோயில் நூல் குறித்துப் பார்க்கலாம். இந்த நூல் மொத்தம் 11 இயல்களைக் (Chapters) கொண்டுள்ளது. மொத்தப் பக்கங்கள் 452 ஆகும். பின்னிணைப்பாக பழமுதிர்ச்சோலை, பலராமன் வழிபாடு குறித்த இரண்டு கட்டுரைகளும், அச்சிடப்படாத ஐந்து வர்ணிப்புப் பாடல்களும், வரைபடங்களும், புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அழகர் கோயிலின் தோற்றம், கோயில் அமைப்பு, தமிழ் இலக்கியங்கள் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களுடனான தொடர்புகள், கோவிலின் வைணவ ஆகம நடைமுறைகள், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள், சமுதாய உறவு, அதாவது  கோயிலோடு நாட்டுப்புறத்து அடியவர்கள் கொண்டுள்ள உறவு ஆகியவற்றை விளக்க முயன்றதன் விளைவாக எழுந்தது இந்த ஆய்வேடு என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நூலின் உள்ளடக்கம்

இந்த நூல் பதினோரு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. அழகர்கோயிலின் அமைப்பு என்னும் முதலாம் இயலில் அழகாபுரிக் கோட்டை (வெளிக்கோட்டை) இரணியங் கோட்டை (உட்கோட்டை) ஆகிய கோட்டைகளைக் குறித்தும் அழகர் மலையின் தென்முக அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர்கோயில் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்குத்  திருமாலிருஞ் சோலை, உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி,  விருஷபாத்திரி அல்லது இடபகரி ஆகிய பெயர்களுண்டு.

இவ்வூரின் அமைவிடம் 9.33°N அட்சரேகை : 78.03°E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 300 மீட்டர் (984 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் அமைவிடம் மதுரையிலிருந்து 21 கி.மீ தொலைவிலும்; மேலூரிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகே இக்கோட்டைகள் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. மதில் சூழ் சோலைமலை என்ற பெரியாழ்வாரின் வரியினை நூலாசிரியர் முன்வைத்து விவாதிக்கிறார்.   இப்பகுதியை ஆண்டுவந்த வானாதிராயர்கள் 14 – ஆம் நூற்றாண்டில் வெளிக்கோட்டையைக் கட்டியதாகத் தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி கருதுவதையும் குறிப்பிடுகிறார். யதிராஜன் திருமுற்றப்பகுதி, தொண்டைமான் கோபுரம், சுந்தரபாண்டியன் மண்டபம், படியேற்ற மண்டபம், மகாமண்டபம், கருவறை, முதலாம் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்று, ஆடி வீதி, வசந்த மண்டபம் ஆகிய பகுதிகள் குறித்து நூலாசிரியர் விவரித்துள்ளார்.

வேசர (வட்ட வடிவ) விமானம் என்னும்  சோமசந்த விமானத்தின் கீழே அமைக்கப்பட்ட கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்திக்கு அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் (ரிஷபத்ரிநாதர்) என்று பெயர். தாயார் பெயர் கல்யாணசுந்தரவல்லி. தீர்த்தம் நூபரகங்கை. பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார் என்று 6 ஆழ்வார்கள் 123 பாசுரங்களைப் பாடி மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களுள் இது 93 வது திவ்ய தேசம் ஆகும். இப்பெருங்கோவில், நாட்டார் தெய்வ வழிபாட்டிற்கும் புகழ்பெற்றது.

2. அழகர்கோயிலின் தோற்றம், என்னும் இரண்டாம் இயலில் இக்கோயிலின் தோற்றம் குறித்து கல்வெட்டுச் சான்றுகளோ இலக்கியச் சான்றுகளோ இல்லை என்பதால், அறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமியின் கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறார். பண்டைக்காலத்தில் கள்ளழகர் கோவில் பௌத்தக் கோவிலாக இருந்தது என்று மயிலையார் சில குறிப்புகளின் அடிப்படையில் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார்.  மயிலையார் கூறிய கருதுகோளின் ஏற்புடைமை குறித்த விவாதம் இந்த இயல் முழுதும் விரிந்துள்ளது. நூலாசிரியர் மயிலையாரின் கருதுகோளிற்கு தன் ஆதரவை நல்கியுள்ளார்.

கள்ளழகர் திருக்கோயிலுக்கு தென்மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டுள்ள பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பக்தர்களோடு  இந்தப் பெருங்கோவில் கொண்டுள்ள உறவுகளையும் உறவின் தன்மைகளையும் விளக்கும் நோக்கம் கொண்டது இந்தக் களஆய்வாகும்.  சமூக ஆதரவினைப் பெருக்குவதற்காகத் தமிழ்நாட்டு வைணவம், சிறுதெய்வ வழிபாட்டு நெறிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையையும் இக்கோவிலை முன்னிறுத்தி விளக்கியுள்ளார். 

3. இலக்கியங்களில் அழகர்கோயில் என்னும் மூன்றாம் இயலில் பரிபாடல், சிலப்பதிகாரம், ஆகிய சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியமான ஆழ்வார் பாசுரங்கள், அந்தாதி, அலங்கார மாலை, அம்மானை, கலம்பகம், குறவஞ்சி, தசாவதார வர்ணிப்பு, தூது, பிள்ளைத்தமிழ், ஆகிய சிற்றிலக்கியங்கள் கூறும் செய்திகளை அழகர் கோயிலோடு தொடர்புபடுத்தி விரிவாக விவாதிக்கிறார்.

மாதிரிக்கு ஒரு பாசுரம்

சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான் சுழலையில் நின்று உய்துங்கொலோ?

(ஆண்டாள், நாச்சியார் திருமொழி)

திருமாலும் பலராமனும் ஒன்றாக வழிபடப்பட்ட செய்தியினை பரிபாடல் மூலம் தெளிவுபடுத்துகிறார். ஆழ்வார் பாசுரங்களும், உரைகளும் தமிழகத்தில் சமண பௌத்த எதிர்ப்புணர்ச்சி நிறைந்திருந்த காலத்தையும், சமண பௌத்த எதிர்ப்பில் இக்கோவில் பெற்றிருந்த பங்கையும் சுட்டிக்காட்டுவதையும் விவாதிக்கிறார். “சமணக் கோயில்களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும்போது முதலில் நரசிம்ம மூர்த்தியை அமைப்பது வழக்கம்” என்ற மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் கருத்து அழகர்கோயிலுக்குப் பொருந்தி வருகிறதா? என்ற வினாவை எழுப்பி அதற்கான் விடை காணவும் முயற்சிக்கிறார். அழகர்கோயிலில் வைணவத்தால் எதிர்க்கப்பட்ட புறமதத்தவர் யார்? என்ற வினாவிற்கும் விடை காண முயன்றுள்ளார். வேசர (வட்ட வடிவ) விமானம் என்னும் கட்டட அமைப்பு பிற்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதுகிறார். காஞ்சி கரபுரீஸ்வரர் கோவில், நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம், அழகர்கோயில் ஆகிய தலங்களில் மட்டுமே இத்தகைய வேசர (வட்டவடிவ) விமான வடிமைப்பு காணப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

4. ஆண்டாரும் சமயத்தாரும் என்ற நான்காம் இயல் ஆண்டார் என்னும் பரம்பரைப் பணியாளரைப் பற்றியும் இவர்களின் பணி மற்றும் நடைமுறைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.  பிராமணரல்லாத சாதியைச் சேர்ந்த அடியார்களுக்கு சமயத்தார் என்ற பெயர் ஏற்பட்டது குறித்த விளக்கமும் இங்கு இடம்பெற்றுள்ளது. இந்தச் சமயத்தார் வாயிலாக மக்களை இக்கோவில் வைணவத்திற்குள் ஈர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் விளக்கப்பட்டுள்ளன.

5. அழகர்கோயிலும் சமூகத்தொடர்பும் என்ற ஐந்தாம் இயல் சற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சமயத்தாரோடு தொடர்புடைய நாட்டுப்புற மக்கள் இக்கோயிலோடு இன்றளவும் கொண்ட உறவு இந்த இயலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. நாட்டுப்புற மக்கள் என்போர் மேலைநாட்டுக் கள்ளர், இடையர், வலையர் ஆகிய பிற்படுத்தப்பட்ட சாதியினரும் பறையர் பள்ளர் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் ஆவர். அழகர்கோயிலோடு இந்தச் சாதியினர் கொண்டிருந்த உறவினை நூலாசிரியர் விளக்கி மதிப்பிடப்பட்டுள்ளார். துணை இயல் 5. 1 கோயிலும் கள்ளரும், துணை இயல் 5.2 கோயிலும் இடையரும், துணை இயல் 5.3 கோயிலும் பள்ளர் பறையரும், துணை இயல் 5.4 கோயிலும் வலைரும் ஆகிய துணை இயல்களில் இந்தச் சாதியினரின் சமூகத் தொடர்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பு குறிப்பிட்ட சாதிகளை முன்னிறுத்தி ஆராயப்பட்டது. உழவர்களின் இந்திர வழிபாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப்  பலராம வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுத்த வைணவம், பின்னாளில் பலராம வழிபாட்டை ஒரு வைணவப் பிரிவாக மாற்றியதன் கூறுகளும் ஆராயப்பட்டது.       

6. திருவிழாக்கள் என்ற ஆறாம் இயலில் சித்திரைத் திருவிழா தவிர பிற திருவிழாக்களும் அவற்றின் சமூகத் தொடர்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

7. சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் என்ற ஏழாம் இயலும் சித்திரைத் திருவிழா தவிர பிற திருவிழக்களும் அவற்றின் சமூகத் தொடர்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

8. வர்ணிப்புப் பாடல்கள் என்னும் எட்டாம் இயலில் அழகர்கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த நாட்டுப்புறப்பாடல்கள் ஆராயப்படுகின்றன. இப்பாடல்களுள் அச்சிடப்பட்டவையும் அச்சிடப்படாதவையும் அடங்கும்.

9. சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள்   என்னும் ஒன்பதாம் இயலில் பழமரபுக் கதைகள் (Folk tales), வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புறக் கூறுகள் (Folk Elements) ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற மக்களின் கலைமரபுகள், பண்பாடு, ஆகியவை அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெளிப்பட்டுத் தோன்றுவதை நூலாசிரியர் விவரித்துள்ளார்.

10. கோயிற் பணியாளர்கள் என்னும் பத்தாம் இயலில் அழகர்கோயில் ஆட்சிமரபு பதினான்கு பணிப்பிரிவுகளாக, முப்பத்திரெண்டு நிர்வாகங்களுடன் அமைந்திருந்ததாகக் கோயிற் பரம்பரைப் பணியாளர்கள்,  நூலாசிரியர் மேற்கொண்ட கள ஆய்வில் தெரிவித்துள்ளனர். இவர்களின் சாதிப்பிரிவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. பரம்பரைப் பணியாளர்களைப் பற்றிய கல்வெட்டுகளும் விளக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் பல பணிப்பிரிவுகள் மறைந்து போய் இன்றைய நடைமுறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.

11. பதினெட்டாம்படிக் கருப்புசாமி என்னும் பதினொன்றாம் இயலில் சிறுதெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படிக் கருப்பசாமி அழகர் கோயிலின் இராஜகோபுர வாயிலில் உறைவதாக நாட்டுப்புற மக்களால் நம்பப்படுகிறது. பதினெட்டாம்படிக் கருப்புசாமிக்கு உருவமில்லை. பதினெட்டாம்படிக் கருப்புசாமி கிராமங்களின் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறார். இந்தத் தெய்வத்திற்கு மதுரையைச் சுற்றிலும் பட்டிதொட்டிகளில் சிறுதெய்வ வழிபாட்டிற்காகச் சிறிய கோவில்கள் அமைக்கப்பட்டு உருவ வழிபாடு நடைபெறுகிறது. கோவிலின் இராஜகோபுரக் கதவுகள் அடைக்கப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலை சூட்டி, கற்பூரம் காட்டி வழிபடுகின்றனர். ஆடிமாதம் நடைபெறும் குறிப்பிட்ட திருவிழா நாளன்று இக்கதவு திறக்கப்படும். நாட்டுப்புற மக்கள் தொடுக்கும் வழக்குகளின் போது சத்தியப்பிரமாணம் செய்யும் சமயத்திலும் இக்கதவுகள் திறக்கப்படுவதுண்டு.   கருப்புசாமி சன்னதி அமைப்பு, நாட்டுப்புறக் கதைகள், கதைப்பாடல்கள், காணிக்கை, திருவிழா, குறித்த பல செய்திகள் இந்த இயலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெருங்கோயிலில் குடிகொண்டுள்ள இந்தச் சிறுதெய்வ வழிபாட்டு நம்பிக்கை சற்று தனித்துவமானதுதான்.

முடிவுரையில் அழகர்கோயில் பௌத்தக் கோவிலாக இருந்தது என்னும் மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்தைச் சான்றுகளுடன் உறுதி செய்து ஏற்றுக்கொள்கிறார். பரிபாடல், ஆழ்வார் பாசுரங்கள், அலங்காரமாலை உள்ளிட்ட அச்சிடப்பட்ட இலக்கியங்களும் அச்சில் வராத சுவடி இலக்கியமும் ஆராயப்பட்டு இவற்றின் சமூகப் பயன்பாடும் நிறுவப்பட்டுள்ளன. ஆழ்வார் பாசுரங்களில் உள்ளடக்கமாகக் காணப்படும் பிற மதக் காழ்ப்புணர்ச்சிகள் சுட்டிக்கட்டப்படுகின்றன.

பிற்சேர்க்கையின் முதல் பகுதியில் அறுபடை வீடுகளும் பழமுதிர்சோலையும், தமிழ் நாட்டில் வலியோன் (பலராமன்) வழிப்பாடு, கல்வெட்டுக் குறிப்புகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

பிற்சேர்க்கையின் இரண்டாம் பகுதியில் அழகர் அகவல், அழகம்பெருமாள் வண்ணம், அழகர் வர்ணிப்பு (அச்சிடப்படாதது), வலையன் கதை வர்ணிப்பு, பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு, கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு, ராக்காயி வர்ணிப்பு, கருப்பசாமி சந்தானம் சாத்தும் வர்ணிப்பு, ஆகியன இடம்பெற்றுள்ளன.

பிற்சேர்க்கையின் மூன்றாம் பகுதியில் வெள்ளியக் குன்றம் பட்டயம்: 1 மற்றும் 2, தொழில் அட்டவணை (28-6-1806), ஆட்டவிசேஷம் கோடைத்திருநாள் சித்திரைப் பெருந்திருவிழா, வெள்ளையத் தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலை, ஆகியன இடம்பெற்றுள்ளன.

பிற்சேர்க்கையின் நான்காம் பகுதியில் வேடமிட்டு வழிபடும் அடியவர்கள்: வினாப்பட்டியும், விடையளித்தோர் பட்டியல், சித்திரைத் திருவிழாவிற்கு மாட்டுவண்டி கட்டிவந்த அடியவர்களின் ஊர்கள்: ஒரு மாதிரி ஆய்வு, வரைபடங்கள், துணைநூற் பட்டியல், புகைப்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்  திரு.கமல்ஹாசனின் நூலறிமுகம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில்  திரு.கமல்ஹாசன் அவர்கள் வாரந்தோறும் படிக்க வேண்டிய ஒரு நூலை அறிமுகப்படுத்தி மதிப்பாய்வு செய்து வருகிறார். கடந்த வாரங்களில் ஆல்பர்ட் காமு எழுதிய ப்ளேக், சாதத் ஹாசன் மாண்டோ எழுதிய ஹடக், ஜெயமோகன் எழுதிய வெண்முரசு, ப. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி ஆகிய நூல்களை அறிமுகம் செய்தார். கடந்த நவம்பர் 1, 2020 ஆம் தேதியன்று பிக்பாஸ் நடந்த நிகழ்ச்சியில் அழகர் கோயில் நூலை அறிமுகப்படுத்தினார். “ஒரு பகுத்தறிவாளர் எழுதிய புத்தகத்தில் பக்தர்களின் உணர்வுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறார் என்பதற்கான சான்று” என்று நூலறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதே நிகழ்ச்சியில் முனைவர். தொ.பரமசிவனையும் காணொளி மூலம் பேசவும் வைத்தார்.

தனது ஆய்வில் தொ.ப. நிகழ்த்திய சாதனைகள்

கோயில்கள் வழ்படும் இடங்களாக மட்டும் ஆகா. அவை சமூக நிறுவனங்களுமாகும். எனவே சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் கோயில் உறவு கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட கோயிலோடு அரசர்களும் உயர்குடிகளும் கொண்ட உறவினைப் போலவே , ஏழ்மையும் எளிமையும் நிறைந்த அடியவர்கள் கொண்ட உறவும் ஆய்வுக்குரிய கருப்பொருளாக முடியும். அவ்வகையில் அழகர்கோயிலோடு அடியவர்கள் – குறிப்பாக நாட்டுப்புறத்து அடியவர்கள், கொண்டுள்ள உறவினை விளக்க முற்படும் முன் முயற்சியாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது. (தொ. பரமசிவன், அழகர்கோயில், முன்னுரை, நோக்கம்.)

மேற்குறித்த நோக்கத்துடன் மேற்கொண்ட இந்தப் பண்பாட்டாய்வில் பேராசிரியர். தொ.பரமசிவன் முழு வெற்றி பெற்றுள்ளதாகவே கருதலாம். சிறுதெய்வநெறியில் ஈடுபாடுடைய சாதியினைச் சேர்ந்த சமூகத்தவர்கள், அழகர்கோயில் என்னும் பெருந்தெய்வக்கோயிலோடு கொண்டுள்ள உறவினையும் உறவின் தன்மையையும் உறுதியான சான்றுகளுடன் நிறுவியுள்ளார். கள்ளர், இடையர், பறையர் பள்ளர், வலையர் ஆகிய சாதிகளைச் சேர்ந்த நாட்டுப்புற மக்களோடும், கோயிற் பணியாளரோடும் இக்கோயில் கொண்டுள்ள உறவினை தமிழ்நாட்டு வைணவப் பின்னணியில் தெளிவாக விளக்கியுள்ளார். எளிய மக்களின் ஆதரவினைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டு வைணவம் சிறுதெய்வ வழிபாட்டு நெறிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையினை இந்நூல் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம் நிறைவேறுவதற்கு தொ.ப. மேற்கொண்ட கள ஆய்வினை ஒரு மட்டக்குறியாக (Bench Mark) கொள்ளலாம். அழகர்கோயிலில் மேற்கொண்டது போன்ற ஆய்வினை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சங்கரன் கோயில், காரமடை ரங்கநாதர் கோயில், சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் போன்ற கோயில்களிலும் மேற்கொள்ளலாம்.

நூல் பெயர் : அழகர்கோயில்
நூலாசிரியர் : தொ.பரமசிவன்
பதிப்பு எண் : 105
பக்கங்கள் : 452
விலை : ரூ 46.50/- கிண்டில் பாதிப்பு ரூ. 150/-
வெளியீடு (முதல் பதிப்பு) : பதிப்புத்துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், பல்கலைநகர், மதுரை – 625021 .
திறவுச்சொல் : கோவில் ஆய்வு

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தமிழ்நாடு, நூலறிமுகம், விழாக்கள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.