திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்

திருநாதர் குன்று என்னும் சிறுகடம்பூர் குன்று, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிறுகடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மைமிக்க சமணத் தலமாகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயம் இப்பகுதியில் செழித்தோங்கி இருந்தது. இந்தச் சமண நினைவுச்சின்னம் பலராலும் நன்கு அறியப்பட்ட சமண சமய யாத்திரைத் தலமாகும். இங்குள்ள சமண தீர்த்தங்கரர்களின் திறந்தவெளி சமணச் சிற்ப அரங்கமும், கல்வெட்டுகளும் புகழ்பெற்றவை ஆகும். AASAI / REACH அறக்கட்டளை நடத்தி வரும் தமிழ் கல்வெட்டுப் பயிற்சி பாடத்திட்டத்தின் ஆறாவது தொகுதியை (Batch) சேர்ந்த மாணவர்கள் 2016 பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று களப் பயணம் மேற்கொண்டனர், இப்பயணத்தில் திருநாதர் குன்றும் அடங்கும்.

அமைவிடம்

திருநாதர் குன்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிறுகடம்பூர் கிராமத்தில் (பின்கோடு 604202) அமைந்துள்ளது. இவ்விடத்தின் புவியிடக்குறியீடு 12°16′N அட்சரேகை 79°25′E தீர்க்கரேகை ஆகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சிறுகடம்பூரில் மொத்த மக்கள் தொகை 3225 ஆகும். செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் சாலையில் இக்குன்று அமைந்துள்ளது. இவ்வூர் சிங்காவரத்திலிருந்து 1.0 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 2.7 கி.மீ. தொலைவிலும், மேல்சித்தாமூரிலிருந்து 15.6 கி.மீ. தொலைவிலும், கூட்டேரிப்பட்டிலிருந்து 30.6 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 30.9 கி.மீ. தொலைவிலும், சேத்துப்பட்டிலிருந்து 31.0 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 41.6 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 43.8 கி.மீ தொலைவிலும், அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிப் பகுதி, பண்டைக்காலத்தில், சிங்கபுரி நாடு என்று அழைக்கப்பட்டது. சமணப் பாரம்பரியம் மிக்க பகுதியாக இப்பகுதி திகழ்ந்துள்ளது. இப்பகுதி சக்கராபுரம், கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சிறுகடம்பூர் ஊரின் வடமேற்குப் பகுதியில் இந்தக் குன்று அமைந்துள்ளது. ஊரிலிருந்து இக்குன்று 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்குன்று பண்டைக்காலத்தில் அடர்ந்த காடாக இருந்திருக்க வேண்டும்.

திருநாதர் குன்றிற்குச் செல்வதற்கான படிக்கட்டு

திருநாதர் குன்றை நோக்கிப் பயணம்

சாலையிலிருந்து ஒரு மண் சாலை வழியாகக் குன்றின் அடிவாரத்தை அடையலாம். இந்தக் குன்றின் அடிவாரத்தை அடைவதற்குள் நண்பகலாகிவிட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்விடத்தை அடைவதற்காகக் குறுகிய படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 44 படிக்கட்டுகளும் தற்போது சற்று சீர்குலைந்துள்ளன. மலைப்பாதையின் இரு மருங்கிலும் செடிகொடிகள் புதராக மண்டிக் கிடக்கின்றன. வெயில் சற்று கடுமையாக இருந்தது. அவ்வப்போது சிறிது காற்றும் வீசியது. குன்றின் உச்சியை அடைந்தோம். ஒரு புறம் செஞ்சி மலைக் கோட்டைகளும் மறுபுறம் சிங்காவரம் கோவிலும் பறவைப் பார்வையாகத் தெரிந்தன.

மலையின் உச்சியில் உள்ள சமதளத்தில் கருங்கல் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று புறமும் பாறைகள் சூழ்ந்துள்ளன. இங்குள்ள திறந்தவெளிப் பாறைச் சிற்பங்கள் (Open Air Sculpture Gallery) புகழ்பெற்றனவாகும். இங்கு மிகப்பெரிய பாறை ஒன்று காணப்படுகிறது. இந்தப்பாறையில் 24 தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள், இரண்டு வரிசைகளில், வரிசைக்குப் பன்னிரெண்டு வீதம் செதுக்கப்பட்டுள்ளன. சமண மரபில் இந்தச் சிற்ப அமைப்பு சதுர்விம்சதி என்று அழைக்கப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்து காணப்படுகின்றனர். தீர்த்தங்கரர்களுக்கு மேலே திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடை காட்டப்பட்டுள்ளது. சந்திராதித்தம், நித்தியவினோதம், சகலபாசனம் என்னும் முக்குடைகளின் கீழே தீர்த்தங்கரர்கள் வீற்றிருக்கின்றனர். இந்தப் புடைப்புச் சிற்பங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இது சமண வழிபாட்டுத்தலமாகத் திகழ்ந்துள்ளது. ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் இடையில், ஒன்றின் குறுக்காக ஒன்றாக, இரண்டு சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்தப் புடைப்புச் சிற்பங்கள் ஒரே அளவில் காணப்படுகின்றன. இது போன்ற திறந்தவெளி பாறைச் சிற்பங்கள் இரண்டு இடங்களில் காணப்படுகின்றன. ஒன்று திருநாதர் குன்றில் உள்ளது. மற்றொன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் உள்ள கழுகுமலையில் (நெற்சுரத்தில்) காணப்படுகிறது.

திருநாதர் குன்றின் பாறையில் செதுக்கப்பட்ட நின்ற நிலையில் காணப்படும் தீர்த்தங்கரர் சிற்பம்

இந்தப் பாறையின் இடது புறம் மேலே பார்சுவநாதரின் சிறு புடைப்புச் சிற்பம் ஒன்று நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. செஞ்சிப்பகுதியில் வாழும் சமணர்கள் சித்திரை மாதத்தில் ஒரு நாளில் இங்கு வந்து 24 தீர்த்தங்கரர்களின் சிற்பத் தொகுதிக்கு நீராட்டிப் பூசைகள் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கல்வெட்டு

திருநாதர் குன்றில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு கல்வெட்டுகள், வீடுபேறு அடைவதற்காக சல்லேகனை என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த இரண்டு சமணத் துறவிகளின் நிசீதிகைகளை (உயிர்துறந்த இடம்) சுட்டும் கல்வெட்டுகளாகும். மூன்றாவது கல்வெட்டு இங்கிருந்த கோவிலில் விளக்கெரிக்க நானூறு ஆடுகள் தானமளித்த செய்தியினைப் பதிவு செய்துள்ள கல்வெட்டாகும்.

முதலாவது கல்வெட்டு

முதலாவது கல்வெட்டு, 24 தீர்த்தங்கரர் பாறையிலிருந்து சுமார் 10 – 20 மீட்டர் தொலைவில் உள்ள சமதளப்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டாகும். பல்லவ நாட்டில் கண்டறியப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு என்ற சிறப்பும் இக்கல்வெட்டிற்கு உள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி 5-6 ஆம் நூற்றாண்டு என்று காலவரையறை செய்யப்பட்டுள்ளது.

பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். பரமேஷ்டி என்றால் உயர்நிலையில் உள்ளவர் என்பது பொருள். சாதுக்கள், உபாத்தியாயர் அல்லது உபச்சர் (உவஜ்ஜாய), ஆச்சாரியர் அல்லது ஆசிரியர், சித்தர், அருகர் அல்லது தீர்த்தங்கரர், ஆகியோர் பஞ்சபரமேஷ்டிகள் ஆவர். பஞ்சபரமேஷ்டிகள் என்னும் குருமார்கள் சமண மடாலயங்களில் (Jain Monasteries) இருந்தவாறு சமண சமயக் கருத்துக்களைப் பரப்பியும் விவாதித்தும் வந்துள்ளனர்.

சமண சமயத்தில் கணங்கள் என்ற பெயரில் துறவிகளின் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கணத்திற்கும் தலைமையேற்ற மூத்த சமணத் துறவிக்குக் கணி (கணத்தின் தலைவர்) என்று பெயர்.

இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு, சந்திரநந்தி என்ற சமணத் துறவி (பஞ்ச பரமேஷ்டிகளுள் மூன்றாம் இடம் வகிக்கும் ஆச்சார்யா அல்லது ஆசிரியர் ஆவார்) இங்கு குறியிட்டுக் காட்டிய இடத்தில் 57 நாட்களாக சல்லேகனை நோன்பிருந்து (‘சல்லேகானா’) உயிர்நீத்தது குறித்துப் பதிவுசெய்துள்ளது. இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சந்திரநந்தி என்னும் ஆச்சார்யா நந்தி கணத்தைச் சேர்ந்தவராவார். சல்லேகனை என்ற சொல்லுக்கு மெலிதல் என்று பொருள்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் I%2BThirunatharkundru.jpg
திருநாதர் குன்று வட்டெழுத்துக் கல்வெட்டு

இக்கல்வெட்டு முதிர்ந்த நிலை தமிழ் பிராமி எழுத்து வடிவம், வட்டெழுத்தாக உருமாறிய காலகட்டத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்ற பெருமையைக் கொண்ட கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் முதன் முதலாக “ஐ” என்னும் எழுத்து வடிவம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. இதற்கு முன்பு “ஐ” என்ற எழுத்துப் பயன்படுத்தப்படவில்லை. சூலம் போன்ற குறியுடைய “ஐ” என்னும் எழுத்துடன் இக்கல்வெட்டு தொடங்குகிறது. (படிமப் புரவு திருச்சி பார்த்தி அவர்கள்). இக்கல்வெட்டில் மெய்யெழுத்துகள் புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளன.

திருநாதர் குன்றில் இயங்கிவந்த சமணப்பள்ளியின் ஆசிரியருள் ஒருவரான சந்திர நந்தி என்னும் துறவியார் ஐம்பத்தேழு நாள்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்னும் செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டில் காணப்படும் அனசனம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘உண்ணாமை’ என்பது நேரடிப் பொருளாகும். அசனம் என்றால் உண்ணுதல் என்று பொருள். ”அன்” என்ற முன்னொட்டு அசனம் என்ற சொல்லுடன் இணைந்து உண்ணா நோன்பு என்று பொருள் தருகிறது.

‘ஆராதனி’ என்றாலும் உண்ணா நோன்பு என்றே பொருள். பறையன்பட்டுக் கல்வெட்டில் ஒரு சமணத்துறவி சாகும்வரை உண்ணாநோன்பு இருந்ததை ‘ஆராதனி நோற்று முடித்த’ என்று குறிப்பிடப்படுகிறது.

சமண மதத்தைச் சார்ந்த துறவிகள் சல்லேகனை என்றும் சந்தாரா என்றும் அழைக்கப்படும் உண்ணா நோன்பினை மேற்கொண்டு உயிர்விடும் சடங்கை மேற்கொள்வது வழக்கம். வீடு பேறு பெறுவதற்காக இந்த உண்ணா நோன்பு சமணர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது வாழ்க்கையில் விருப்பமில்லாமல் இருத்தல், முதுமை, தீராத நோய் கண்ட ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகக் காட்டப்படுகிறது.  நோன்பிருப்போர் படிப்படியாக உணவைத் துறப்பார்கள், பின்னர் நீர் அருந்துவதையும் தவிர்ப்பார்கள். இது ஒரு அகிம்சை முறை. இது தற்கொலையல்ல.

‘நிசீதிகை’ என்ற சொல்லுக்கு இருக்கை என்று பொருள். ஒரிசா மாநிலத்தில் உள்ள உதயகிரிக் குகையில் உள்ள காரவேலனின் கல்வெட்டில் நிசீதிகை என்ற சொல் சமண முனிவர்களின் இருக்கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாதர் குன்றிலும், பறையன்பட்டிலும் சமணத்துறவிகள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த இருக்கை அல்லது இடம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கிருந்து உயிர்நீத்த செய்தி சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. உலக வாழ்வைத் துறக்க விரும்பிய ஒருவர் வடக்கிருந்து உயிர் நீத்தல் சங்ககால மரபு. சேரமான் பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் பொருதிய போரில் முதுகில் புண்பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்த செய்தியினை புறநானூறு (பாடல்கள் 65, 66,) அகநானூறு 55ஆம் பாடல் பதிவு செய்துள்ளன.

தன் மைந்தர்கள் அரசாட்சி கேட்டுப் போர் தொடுத்தது கண்டு நாணிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்தான். பாண்டிநாட்டுப் புலவர் பிசிராந்தையாரும் உறையூர் மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் காணாமலே நட்புப் பூண்டிருந்தனர். புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனுடன் ஒன்று சேர்ந்து உறையூரில் வடக்கிருந்து உயிர் விட்ட நட்பின் மாட்சிமையும் புறநானூற்றுப் பாடல்கள் 214, 216, 218 மூலம் அறியப்படுகிறது.

இரண்டாம் கல்வெட்டு

மற்றொரு கல்வெட்டு இதே பறைத்தளத்தின் மற்றொரு மூலையில் தமிழ் வரிவடிவில் பொறிக்கப்பட்டுள்ளது.

முப்பதுநாளன சநோற்ற
இளைய படாரர் நிசிதிகை

கி.பி. 8 – 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கல்வெட்டு தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த இளைய படாரர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டாகும். சமணத்துறவிகள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த இருக்கை அல்லது இடம் என்ற பொருளில் ‘நிசிதிகை’ (‘நிசீதிகை’) என்ற சொல் இக்கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருநாதர் குன்று இளைய படாரர் நசிதிகை கல்வெட்டு

பட்டாரகர், பட்டாரர், பட்டாரியர், ஆகிய சொற்களின் திரிந்த வடிவமே படாரர் ஆகும். படாரர் என்ற சொல் சமணத் துறவிகளையும் தீர்த்தங்கரர்களையும் குறிக்கிறது. இச்சொல் முதன்முதலில் சமண சமயத்தில் பயன்பட்டிருக்க வேண்டும் என்று திரு. ஏ.ஏகாம்பரநாதன் கருதுகிறார். கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2 நூற்றாண்டு வரையிலான தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும், கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும், படாரர் அல்லது பட்டாரர் என்ற சொல் பயின்று வந்துள்ளது. பின்னர் சமண சமயத் தெய்வங்களையும் படாரர் என்றே கல்வெட்டுகள் குறித்துள்ளன. எடுத்துக்காட்டு, ‘திருநேச்சுரத்து திருமலை மேற்பட்டாரகர்’ என்று கழுகுமலையின் சமணத் தெய்வத்தையும், பார்சுவபடாரர் என்று ஐவர் மலையிலுள்ள 23 ஆம் தீர்த்தங்கரரான பர்சுவநாதரையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சிதாறல் மலையில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படும் பார்கவ படாரரும் பார்சுவநாதரே ஆவார். இந்து சமயத்தில் சிவன், விஷ்ணு, முருகன், ஆகிய தெய்வங்களின் பெயர்களுடன் பட்டாரர் அல்லது பட்டாரகர் என்ற சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூன்றாவது கல்வெட்டு

திருநாதர் குன்றின் அடிவாரத்திலிருந்து குன்றின் உச்சிக்குச் செல்லும் வழியில், உங்கள் இடப்புறம் இரண்டாக (சரிபாதியாக) உடைந்த நிலையில் ஒரு தனிக் கருங்கற் சிற்பத்தைக் காணலாம். அர்த்தபரியாங்காசனத்தில் தவமியற்றும் சமண தீர்த்தங்கரரின் சிற்பம் இதுவாகும். மகாவீரர் சிற்பம் என்று திரு.லெனின் யூகிக்கிறார். ஒரு பாதி தரையில் கவிழ்ந்து கிடக்கிறது. மற்றொரு பாதி நின்ற நிலையில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ. . . யம் பெ3\
2. த்தர ப2… ஆவது திரு-
3. வாஞ்..மேல் மேதா-
4. விகுந். . .ண்ண யாண்டு ப-
5. . . கோயில் தேவ-
6. . . . . விளக்கு ச2ந்த்ராதிய-
7. . . . க வைத்த சா.-
8. . . . பேராடு நானூஞ்-
9. .. . . து இவை ர-
10. . . .. தமென் –
11. . . . . மெலன

உடைந்த தமிழ் கல்வெட்டு

இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. கல்வெட்டு எழுத்தமைவின் அடிப்படையில் இக்கல்வெட்டு கி.மு. 10 – 11 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கல்வெட்டு சுட்டும் அரசனின் பெயரையோ, ஆட்சிக்காலத்தையோ, சமண தெய்வத்தின் பெயரையோ தெரிந்துகொள்ளவோ ஊகிக்கவோ முடியவில்லை. மலைக் கோவிலில் விளக்கெரிப்பதற்குத் தேவையான நெய் தயாரிக்க உயிருள்ள மூப்பு அடையாத பால் தரக்கூடிய நானூறு ஆடுகள் வழங்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. சந்திராதித்தவர் உள்ள வரை இந்தக் கொடை தொடரவேண்டும் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. தானத்தைக் காப்பாற்றிக் கடைப் பிடித்தவர் பாதங்கள் என் தலை மேல் என்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநாதர் குன்றில் விளக்கெரிப்பதற்காக ஆடுகள் தானம் அளித்த செய்தி கூறும் கல்வெட்டு

கி.மு. 10 – 11 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் இந்துக் கோவில்களுக்கு மட்டுமே விளக்கெரிப்பதற்கு ஆடுகள், மாடுகள், எருதுகள் ஆகிய கால்நடைகள் தானமாக வழங்கப்பட்டன. சில சமண சமய ஆலயங்களுக்கும் ஆடுகளும், பசுக்களும் தானமாக வழங்கப்பட்ட செய்தியினைச் சில கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. திருநாதர் குன்று கல்வெட்டு இவற்றுள் ஒன்றாகும்.

குறிப்புநூற்பட்டி

  1. ‘ஐ’ பிறந்து தை பிறந்தது. விஜி சக்கரவர்த்தி. இந்து தமிழ் திசை 16 Jan 2015
  2. சல்லேகனை விக்கிபீடியா
  3. திருநாதர் குன்று – வட்டெழுத்துக் கல்வெட்டு. கொங்கு கல்வெட்டு ஆய்வு. 12 டிசம்பர், 2018
  4. திருநாதர்குன்றில் சிதைந்த தமிழ்க் கல்வெட்டு  பெ. இலெனின்,செஞ்சி July 19, 2014. 

கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது. 
1. ஸ்வஸ்தி ஸ்ரீ. . . யம் பெ3\
2. த்தர ப2… ஆவது திரு-
3. வாஞ்..மேல் மேதா-
4. விகுந். . .ண்ண யாண்டு ப-
5. . . கோயில் தேவ-
6. . . . . விளக்கு ச2ந்த்ராதிய-
7. . . . க வைத்த சா.-
8. . . . பேராடு நானூஞ்-
9. .. . . து இவை ர-
10. . . .. தமென் –
11. . . . . மெலன

யூட்யூப் விடியோ நன்றி The Stories of India

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குகைகள், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், படிமக்கலை and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.