Tag Archives: பல்லவர்

தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியது. இம்மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கிப் பல சமண சமயச் சான்றுகள் கிடைத்துள்ளன. செஞ்சி வட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 2000 ஆண்டுகள் பழமையான சமணர் குகைத் தளங்களும், கற்படுக்கைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன.

தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகைத் தளம், கற்படுக்கைகள், 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைக் காணலாம். கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமணர் குகைத்தளம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லாதது வியப்புக்குரியது.  பராமரிப்பு இல்லாமல் பாழடையும் இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். 

தொண்டூர் அருகே வயல் வெளியில், விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த அனந்தசயன விஷ்ணுவின் நீண்ட கிரீடமகுடம் கம்போடிய படிமவியல் கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது.    கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். Continue reading

Posted in சமண சமயம், தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்

மூன்று சிவலிங்கங்கள் படிமக் கலை வரலாற்றில் காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம்,  ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும். இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் சிவலிங்கமும் இதுவாகும். மற்ற இரண்டு சிவலிங்கங்களும்  குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். இந்த இலிங்கங்களின் வடிவமைப்பு மற்றும் வழிபாடு போன்றவை படைப்பற்றல் சின்னமாகிய விரைகுறி வழிபாட்டுடன் (phallic worship) தொடர்புபடுத்தப்படுகின்றன. இவை வழிபாட்டில் இல்லை மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

1. உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பிடா (Bhita) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏகமுக இலிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.
2. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கங்கலி திலா (Kankali Tila) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள (பதிவு. எண் 83.3).பஞ்சமுக லிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.

இந்தப் பதிவு குடிமங்கலம் சிவலிங்கப் படிமக்கலை பற்றியும் பரசுராமேஸ்வரர் கோவில் கட்டடக்கலை பற்றியும் விவரிக்கிறது.  Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

பல்லவர்கள் பேணிக் காத்த காஞ்சிக் கடிகை

தென்னிந்தியாவில் கடிகைகள் வடமொழிக் கல்விச் சங்கங்களாகத் (Academy) திகழ்ந்தன. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து காஞ்சிக் கடிகை பல்லவர்களின் முடியாட்சி (Monarchy), இறைமாட்சி, ஆட்சி அமைப்பு முறை (Polity), அரசியல் (Politics), அமைச்சு (Ministry), படையியல் (Military), குடியியல் (Civics) போன்ற துறைகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்று குறள் கூறும் நெறிகளுக்கேற்ப பல்லவ மன்னர்களின் அவையில் இடம்பெற்றிருந்த  கடிகையார் மிகவும் இன்றிமையாத தருணங்களில், அரசின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் அங்கமாக இருந்தனர். காஞ்சிபுரம், கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல், தட்சஷீலா (கி.மு. 5 – கி.பி. 5 நூற்றாண்டு, பஞ்சாப், பாகிஸ்தான்) , நாளந்தா (கி.பி. 5 – கி.பி. 12, நூற்றாண்டு, பீகார்), விக்ரமஷிலா (கி.பி. 8 – 13 நூற்றாண்டு, பீகார்),   போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே, ஒரு வேதாகமப் பல்கலைக்கழகமாகவும் புகழ் பெற்றிருந்தது. காஞ்சிக் கடிகை காஞ்சிபுரத்தின் மேம்பட்ட வேதக் கல்வி மையம் (Advanced Vedic Education Centre) என்று பரவலாக மதிக்கப்பட்டது. இஃது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களைத் தன்பால் ஈர்த்தது. நாளந்தாவில் இருந்த புத்தமத அறிஞரும் துறவியுமானர் தர்மபால காஞ்சியில் இருந்து வந்தவர் ஆவார். Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்