எதிலப்பா நாயக்கர், தளி பாளையக்காரர்: ஆங்கிலேயத் தூதனைத் தூக்கிலிட்ட கல்வெட்டு

The tomb of the Englishman on which the early epitaph dating back to 1801 was discovered, in Coimbatore | Express
தளி பாளையப்பட்டில் உள்ள ஆங்கிலேயாதூதனின் சமாதி, தமிழ்க் கல்வெட்டு
பொதுவாக ஆங்கிலேயர்கள் நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பிடித்து தூக்கில் போடுவது வழக்கம். ஆனால் இந்திய அரசர்களின் யாரேனும் ஒருவர், ஒரு ஆங்கிலேயாரையாவது தூக்கில் போட்டிருக்கிறார்களா? ஆமாம் கொங்கு நாட்டில் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு பாளையப்பட்டு கிராமத்தில் இந்த சம்பவம் 1801 ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது.
 
டாக்டர் எஸ்.ரவி பிரபலமான தொல்லியல் அறிஞர், சிறந்த கல்வெட்டாய்வாளர். இவர் உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு கிராமத்தில் இருந்த ஒரு தமிழ்க் கல்வெட்டைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.  இப்பகுதியில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இப்பகுதியின் பாளையக்காரகளால் நிகழ்ந்த கிளர்ச்சி பற்றிப் பேசுகிறது. ஒரு ஆங்கிலேயத் தூதன் எதிலப்பா  நாயக்கர் எனும் தளி பாளையக்காரரால் தூக்கிலிடப்பட்டது பற்றிய சரித்திரம் இக்கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது.  இது பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம்

மதுரையில் 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர் ஆட்சி மலர்ந்தது. பெரும்பான்மையான பாளையங்களில் தெலுங்கு மொழியை பேச கூடிய ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்லப்படும் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர். இவர்கள் வடுகர் என்றும் தமிழ் நாட்டில் அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பூர்விகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். இப்பகுதி கம்பளம் என்றும் கம்பள நாடு என்றும் அறியப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டு வந்த பாளையக்காரர். தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்.
எதிலப்பா நாயக்கர் தளி பாளையப்பட்டை ஆண்டு வந்த பாளையக்காரர். இவரும் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தில் பிறந்தவர். கட்டபொம்மனின் வம்சாவளியைச் சேர்ந்தவர். 
உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பழையப்பட்டு என்பது வீரபாண்டிய கட்டபொம்மனால் நிறுவப்பட்ட சண்டை பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இராணுவ முகாம். இது பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
எதிலப்பா நாயக்கர், 1797 – 1798 இல் நடந்த முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் இணைந்து  ஆலன்துரையின் ஆங்கிலேயப்படைக்கு எதிராகப் போராடியவர். பானர்மென் எனும் ஆங்கிலேயத் தளபதி செப்டம்பர் 5, 1799 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டார். கடும் போர் நடைபெற்று பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். என்றாலும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறவே செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
1799 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட பிறகு பல பாளையக்காரர்கள் ஏதிலப்பா நாயக்கரின் தலைமையில் ஒன்றிணைந்தனர். இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போர் 1801 இல் நிகழ்வதற்கு இவர் தலைமையில் அமைந்த கூட்டணி காரணமாக அமைந்தது. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி படை வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை புத்துயிர் பெற்றது. ஊமைத்துரையைக் கைது செய்வதற்கு வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றார். பின்னர் இவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு 24.05.1801 இல் கோட்டையைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்.
ஆங்கிலேய அதிகாரிகள் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு உதவிய பாளையக்காரர்களின் பட்டியலைத் தயார் செய்தனர். எதிலப்பா நாயக்கர் தான் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு மூல காரணம் என்று தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், தூதர்களை நாயக்கரின் கோட்டைக்கு அனுப்பினர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது பற்றி அறிந்து கொதித்துப் போயிருந்த நாயக்கர், ஆன்ட்ரே கட்டி என்ற அந்த ஆங்கிலேய தலைமைத் தூதனைப் பிடித்து சாகும்வரை தூக்கில் தொங்கவிட்டாராம். சடலத்தை அங்கிருந்த தோட்டாத்தில் புதைத்து விட்டாராம்.  இந்தச் சம்பவம் நடந்தது  வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு. இந்த ஆங்கிலேய தூதனின் சமாதியில் உள்ள தமிழ்க் கல்வெட்டு, தூதன் பெயர் ஆன்ட்ரே கட்டி என்றும் மரணித்த தேதி வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை நகரத்திலிருந்த
ஆங்கிறாய் கேத்தி பரங்கி
இருபத்தேழு வயதில்
தெய்வீகமாகிஅடங்கின சமாது

 (Angirai Kethi, a twentyseven year old Englishman from Tanjore “attained divinity and buried here”)

தேவராய நாயக்கர் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் இது. தூதனை தூக்கில் தொங்குவித்த மரம்கூட இந்தத் தோட்டத்தில் இருக்கிறதாம். இந்த சமாதி உள்ள தோட்டம் ‘தூக்குமரத்தோட்டம்’ என்று இந்த கிராமத்தவர்களால் அழைக்கப்படுகிறது. காலகாலமாய் கம்பளத்து நாயக்க மக்களிடம் பேச்சு வழக்கில் புளங்கி வந்த இக்கதை அரங்கசாமி கவுண்டரால் தொகுக்கப்பட்டு ‘எதிலப்பன் வரலாறு’ என்று நூல் வடிவம் பெற்றுள்ளது.

மேற்கோள்
  1. 19th century epitaph reveals new history. The New Indian Express.  05th August 2013
  2. The Kongu Chieftain who hanged a British Messenger. The New Sunday Express. 19 October 2014
  3. வீரபாண்டியகட்டபொம்மனின் 255 வது பிறந்த நாள். தமிழ் மீடியா, டிசம்பர் 05, 2014

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in வரலாறு. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.