தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் செழித்தோங்கியது. இம்மாவட்டத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கிப் பல சமண சமயச் சான்றுகள் கிடைத்துள்ளன. செஞ்சி வட்டத்தில் உள்ள மலைக்குன்றுகளில் 2000 ஆண்டுகள் பழமையான சமணர் குகைத் தளங்களும், கற்படுக்கைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், பாறைகளில் செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன.

தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகைத் தளம், கற்படுக்கைகள், 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைக் காணலாம். கல்வெட்டு கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமணர் குகைத்தளம் தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் இல்லாதது வியப்புக்குரியது.  பராமரிப்பு இல்லாமல் பாழடையும் இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

தொண்டூர் அருகே வயல் வெளியில், விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இந்த அனந்தசயன விஷ்ணுவின் நீண்ட கிரீடமகுடம் கம்போடிய படிமவியல் கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது.    கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்திலிருந்து கொங்கு நாட்டின் வழியே தமிழகத்திற்குள் சமணம் பரவியது. முதலில் பாண்டிய நாட்டிலும் பின்னர் தொண்டை நாட்டிலும் சமணம் பரவியது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சுற்றி அவலூர்ப்பேட்டை, ஆனத்தூர், ஊரணித்தாங்கல், சே. புதூர், தளவானூர், திருநாதர்குன்று, தொண்டூர், பறையன்பட்டு, மேல்கூடலூர், நெகனூர்பட்டி ஆகிய ஊர்களை ஒட்டி அமைந்துள்ள குன்றுகளில் சமணத் துறவிகள் வாழ்ந்ததற்குச் சான்றாகப் பல இயற்கைக் குகைத்தளங்களையும், இவர்கள் தங்குவதற்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகளையும் காணலாம். திருக்கோவிலூரைச் சுற்றி ஜம்பை, சந்தைப்பேட்டை, மேல்கூடலூர் ஆகிய ஊர்களுக்கு அருகேயுள்ள மலைக் குன்றுகளிலும் சமணர்களின் குகைதளங்களையும் கற்படுக்கைகளையும் காணலாம். அகலூர், ஆலகிராமம், எய்யில், கண்ணாலம், கல்லக்குளத்தூர், கள்ளப்புலியூர், கீழ்வைலாமூர், கோழியனூர், மேல் சித்தாமூர், திருநறுங்குன்றம், தையனூர், நெடுமொழியனூர், பெருமந்தூர், பேரணி, விழிஞம், வீடூர், ஆகிய ஊர்களில் பழமை வாய்ந்த சமணக் கோவில்கள் உள்ளன.

சமணர் குகைத் தளங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் போன்றவற்றைத் தொல்லியல் களப்பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் நாட்டில் சமணம் பரவத் தொடங்கியது. சமணத் துறவிகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த குன்றுகளில் அமைந்திருந்த குகைத்தளங்களில் தங்கி சமண சமயப் பணியுடன் கல்விப் பணி மற்றும் மருத்துவ சேவை செய்து வரலாயினர்.

அரசர்கள், சிற்றரசர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள்,சமணத் துறவிகளுக்குக் கற்படுக்கைகள், நீர்ச்சுனைகள் எல்லாம் அமைத்துக் கொடுத்தனர். இந்தச் செய்தி கல்வெட்டாகப் பாறைகளில் பொறிக்கப்பட்டது. கற்படுக்கைகள் பஞ்சபாண்டவர் படுக்கை, பஞ்சாணப் படுக்கை, மாண்டவர் படுக்கை என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன.

தொண்டூர்

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டம், தொண்டூர், பின் கோடு 605502, கிராமத்தின் அருகே ஏரியை அடுத்து ஓலக்கூர் பசுமலை எதிரில் அமைந்துள்ள பஞ்சனாப்பாடி குன்றில் இரண்டு சமணக் குகைதளங்களும் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. தொண்டூர் கிராமத்தை ஒட்டியுள்ள வயல்வெளிகளின் நடுவில் விண்ணாம்பாறை அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 12°20’50″N அட்சரேகை 79°28’26″E தீர்க்கரேகை ஆகும்.  கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 46 மீ. ஆகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1676 ஆகும். இவர்களில் பெண்கள் 845 பேரும் ஆண்கள் 831 பேரும் உள்ளனர்.

இவ்வூர் முக்குனத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், கருங்குழியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், வல்லத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 34 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகர் விழுப்புரத்திற்கு வடக்கில் 51 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 134 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திண்டிவனத்திலிருந்து நாட்டார்மங்கலம், பனப்பாக்கம், அவியூர், அகலூர் வழியாகத் தொண்டுருக்குச் செல்லலாம். இவ்வூருக்கு அருகே 10 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் எந்த இரயில் நிலையமும் இல்லை. காட்பாடி சந்திப்பு இரயில் நிலையம் 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சமணர் குகைத்தளங்கள், பஞ்சனாபாடி மலை. தொண்டூர்

tamilnadu20-20thondur20-20hill20-20382

பஞ்சனாப்பாடி மலை. தொண்டூர்

பஞ்சனாப்பாடி குன்று அமைந்துள்ள இடத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி வட்டமும் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டமும் இணைகின்றன. பஞ்சனாப்பாடி குன்றில் இரண்டு இடங்களில் சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன. கற்படுக்கைகள் அமைந்துள்ள இடங்களைக் கருத்தில் கொண்டு தரைதளம், முதல் குகைத்தளம் இரண்டாம் குகைத்தளம் என்று களப்பணியாளர்கள் பிரித்து அடையாளப் படுத்தியுள்ளனர்.

கல்வெட்டு

தரைத்தளத்தில் சமணத் துறவிகள் தங்குவதற்காக மூன்று கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கற்படுக்கைகளின் கால்மாட்டிற்குச் சற்றுக் கீழேயுள்ள பாறைச் சரிவில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது.

தொண்டூர்

“[இ] ளங்காயிபன் ஏவ அகழ் ஊர் அறம் மோசி செய்த அதிட்டானம்”

தொண்டூர் அருகே உள்ள அகழ் ஊரில் (அகலூரில்) வாழ்ந்த அறம் மோசி என்பவர் இளங்காயிபன் என்பவரின் கட்டளையை ஏற்று சமணத் துறவிகளுக்குக் கற்படுக்கைகள் செய்த செய்தி இந்தக் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஙகர மெய் புள்ளி பெற்றுள்ளமை கவனிக்கத் தக்கது. இக்கல்வெட்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கல்வெட்டு நடுநாடு என்று வழங்கப்பட்ட (ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம்) பகுதியில் கண்டறியப்பட்ட மிகப்பழமையான கல்வெட்டு என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இக்கல்வெட்டு. திரு.மா.சந்திரமூர்த்தி, துணை இயக்குனர் (ஒய்வு) தமிழ் நாடு அரசு, மாநில தொல்லியல் துறை அவர்களால் 18-01-1991 ஆம் தேதி அன்று கண்டறியப்பட்டது.

இளங்காயிபன் என்ற பெயரைப் போலவே ஒலிப்புக்கொண்ட செங்காயிபன் என்னும் பெயர் கரூர் – புகழூர் அருகே ஆறுநாட்டார் மலையில் உள்ள சேரர் கல்வெட்டில் காணப்படுகிறது. (“மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயிபன் உறை, கோஆதன் சேரல் இதும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் இளங்கடுங்கோன் இளங்கோ ஆகி ஆகி அறுபித்த கல்”) இது போல மதுரை ஆனைமலையில் உள்ள சமணர் கல்வெட்டில் அரட்ட காயபன் என்னும் பெயர் காணப்போடுகிறது. (“இவ்குன்றத்து உறயுள் பா தந்தான் அத்துவாயீ அரட்ட காயபன்”).

மோசி என்னும் பெயர் சங்க இலக்கியங்களில் நாம் காணும் பெயராகும்.  மோசி கீரனார் மற்றும் மோசி சாத்தனார் என்ற பெயர்களில் சங்ககாலப் புலவர்களின் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.  இந்தப் பெயரின் அடிப்படையில் இக்கல்வெட்டுச் சங்ககாலத்தைச் சேர்ந்ததாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலே குறிப்பிட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டின் இறுதியில் மூன்று பக்கக் கோடுகள், விபூதிப் பட்டையைப்போல, பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோடுகள் மூன்று படுக்கைகளைக் குறிக்கின்றனவா? அல்லது சமண சமயத்தின் சின்னமான முக்குடையைக் குறிக்கின்றனவா? அல்லது கல்வெட்டு வாக்கிய முடிவைக் குறிக்கின்றனவா என்று தெரியவில்லை.

பார்சுவநாதர் சிற்பம்

இந்தப் படுக்கையை ஒட்டியவாறு அமைந்துள்ள பாறாங்கல்லில் சமண சமயத்தின் 23  ஆம் தீர்தங்கரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அகலூர் பென்னகர் ஊரவர்கள் வணங்கும் தெய்வமாக இந்தப் பார்சுவநாதர் சிற்பம் திகழ்கிறது. இவருடைய சன்னதி நாயினார் கோவில் என்றும் அறியப்படுகிறது. இந்தச் சிற்பம் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் தளம்

பஞ்சனாப்பாடிக் குன்றின் தென்பகுதியில் ஏறிச் சென்றால் முகப்பு வாயிலையொட்டி, சமணத் துறவிகளுக்காக வெட்டப்பட்ட, 5 கற்படுக்கைகளைக் காணலாம். இந்த இடத்திலிருந்து மேலே செல்ல சிறிய படிகள் உதவுகின்றன. படியில் ஏறிச்சென்றால் குன்றின் உச்சியில் மேலும் 2 கற்படுக்கைகளைக் காணலாம்.

tamilnadu20-20thondur20-20hill20cave20-20383

சமணர் கற்படுக்கைகள். பஞ்சனாப்பாடி மலை. தொண்டூர்

tamilnadu20-20thondur20malai20-20parsuvnathar20-20386

பார்சுவநாதர் சிற்பம். பஞ்சனாப்பாடி மலை. தொண்டூர்

தொண்டூர் கிராமபுறத்தின் வயல்வெளியில் உள்ள  ஒரு பாறையில் விஷ்ணு பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயன விஷ்ணுவாக யோக நித்திரையில் காட்சி தருகிறார். விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் இந்த ஒற்றைப் பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட விஷ்ணு மூன்றாம் நந்திவர்ம (கி.பி. 846–869) பல்லவன் காலத்திய கலைப்பாணி ஆகும். இந்த சிற்பத்தொகுதி இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

விண்ணாம்பாறை சயனக்கோல விஷ்ணுவின் சிற்பத்தொகுதி சுமார் 20 அடி நீளமும் 10 அகலமும் கொண்ட நீள்சதுர வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் படிமம் பொதுவாக நான்கு கைகளுடன் அமைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.  ஆனால் இந்த விண்ணாம்பாறை பெருமாள் இரண்டு கைகளுடன் ஆயதங்கள் எதுவுமின்றிக் காணப்படுவது சிறப்பு. பெருமாளின் நாபியில் பிரம்மா இல்லை. தலைமாட்டில் ஸ்ரீதேவியும் கால்மாட்டில் பூதேவியும் காணப்படவில்லை.

அனைத்து தலங்களிலும் விஷ்ணுவின் சயனக்கோல சிற்பம் இடப்புறம் தலைவைத்து வலப்புறம் கால்நீட்டியவாறு காட்சி தருவது வழக்கம். விண்ணாம்பாறை விஷ்ணு பாறையின் வலப்புறம் தலைவைத்து இடப்புறம் கால்நீட்டியவாறு வித்தியாசமாகக் காட்சி தருகிறார். இடது பக்கமாய் ஒருக்களித்த நிலையில், கால்களை நீட்டி இடது கையை நீட்டியவாறு, இமைகளை முக்கால் பங்கு மூடிய நிலையில், விழிகள் மேலே சொருகிவாறு யோகநித்திரையில் காட்சி தருகிறார். வலக்கை மான்தலை (ம்ருஹி) முத்திரை கட்டுகிறது.

விஷ்ணு சிற்பத்தை வலப்புறம் தலைவைத்து இடப்புறம் கால்நீட்டியவாறு செதுக்குவதில் ஒரு விசித்திரமான நம்பிக்கை உள்ளது. இவ்வாறு விஷ்ணு சிற்பத்தைப் பக்கம் மாற்றிச் செதுக்கினால் போர்க்களத்தில் எதிரிக்கு துர்அதிஷ்டதைக் கொண்டுவருமாம். வலப்பக்கமாகத் தலைவைத்து இடப்புறம் கால் நீட்டியவாறு காட்சிதரும் விஷ்ணு சிற்பம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. ஒன்று தொண்டூர் விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம். மற்றொன்று காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் விஷ்ணு சிற்பம்.

பெருமாள் அணிந்துள்ள உயரமான கிரீட மகுடம் கம்போடியா கலைப்பாணியை நினைவுபடுத்துகிறது. இந்தப் படிமம், கம்போடியா நாட்டுடன் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்புக்கு சான்றாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கம்போடியாவின் தொடக்ககால அங்கோர்வாட் கோவில் பல்லவ வம்சத்தைப் பூர்விகமாகக்கொண்ட கம்போடிய அரசர்களால்  கட்டப்பட்டதாகவும்  நம்பப்படுகிறது.

விஷ்ணுவின் காதுகளில் மகரகுண்டலங்கள், கழுத்தில் பட்டையான கழுத்தணிகள், மார்பின் குறுக்கே உபவீதமாக வஸ்திர யக்ஞோபவிதம் (துணியில் முப்புரி நூல்), விலாவில் உதரபந்தம், தோள்களில் தோள்வளை, மேற்கைகளில் கேயூரம், மணிக்கட்டில் கடகவளை, வளையல்கள் ஆகிய அணிகலன்களை அணிந்துள்ளார். இடுப்பில் கீழ்ப் பாய்ச்சு முறையில் கட்டப்பட்டுள்ள பட்டு பீதாம்பரம் அலை மடிப்புகளுடன் அலங்கரிக்கின்றன. அனந்தசேஷ நாகம் விஷ்ணுவின் தலைக்கு மேல் ஏழு தலைகளுடன் படமெடுத்துக் குடை அமைத்துள்ளது.

மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் விஷ்ணு பாம்பணையில் பள்ளிகொண்டிருக்க மது கைடபர்கள் இவரைத் தாக்க வருவதுபோல வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் உள்ளது. மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலில் பள்ளிகொண்ட நிலையில் ஜலசயனப் பெருமாள் காட்சி தருகிறார். மகிஷாசுரமர்த்தினி மண்டபத்து பள்ளிகொண்ட விஷ்ணுவின் புடைப்புச் சிற்பத்தொகுதியை தொடக்ககால யோகசயன விஷ்ணுவிற்கான எடுத்துக்காட்டாக கே.வி.சவுந்தரராஜன் கருதுகிறார். இந்த சிற்பத் தொகுதி தொடக்க கால புராணங்களில் (ஸ்ரீமத் பாகவதத்தில்) விவரிக்கப்படும் விஷ்ணுவின் உருவ அமைப்பை ஒத்திருக்கிறது என்றும் கருதுகிறார்.

மிகவும் சுருக்கமாக அறியப்பட்ட இந்த சிற்பத் தொகுதி, தென்னிந்தியாவிலுள்ள அனந்தசாயியின் பிற வடிவங்களுடன் ஒப்பிடுகிறார். 1. தேவகார் (Deogarh) தசாவதாரக் கோவிலில் உள்ள குப்தர்கள் காலத்திய அனந்தசயன சிற்பத்தொகுதி, 2. உதயகிரி (Udayagiri (M.P) குடைவரை 13 இல் உள்ள குப்தர்கள் காலத்திய அனந்தசயன விஷ்ணுவின் சிற்பத் தொகுதி, 3. ஐஹோளே ஹுச்சப்பபையா கோவிலில் (Hucchappaya temple, Aihole) உள்ள சாளுக்கியர் காலத்திய அனந்தசயன விஷ்ணுவின் சிற்பத் தொகுதி, 4. பாதாமியில் சிறு குகையில் உள்ள அனந்தசயன விஷ்ணு, 5. எல்லோரா குகையில் உள்ள இராஷ்ட்ரகூடர்களின் அனந்தசயன விஷ்ணுவின் சிற்பத் தொகுதி, 6. உண்டவல்லி குடைவரையின் (ஆந்திர மாநிலம்) இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள அனந்தசயன விஷ்ணுவின் சிற்பத் தொகுதி ஆகியவை இவற்றுள் அடங்கும். இந்த ஒப்பீட்டில் விண்ணாம்பாறை விஷ்ணுவின் சிற்பத் தொகுதியையும் கே.வி.சவுந்தரராஜன் குறிப்பிடுகிறார். (Glimpses of Indian Culture vol. II Architecture Art and Religion. KV Soundara Rajan. Sundeep Prakashan, Delhi, 1981)

கல்வெட்டு

விழுப்புரம் மாவட்டம், தொண்டூர், விண்ணாம்பாறை அருகே அமைந்துள்ள பாறையில் பல்லவ மன்னன் விஜய தந்திவர்மனின் கல்வெட்டு S.I.I. vol. XIV, no. 42; A. R. No. 283 of 1916 பொறிக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னன் விஜய தந்திவர்மனின் 6 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு (S.I.I. vol. XIV, no. 42; A. R. No. 283 of 1916), இப்பகுதியின் குறுநிலத் தலைவனான விண்ணகோவரையார், 16 கழஞ்சு பொன்னைக் கொடையாக அளித்து, இதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் எற்றுக் குன்றனார் பட்டாரி அம்மனுக்கு படையல் செய்வதற்கான ஏற்பாட்டைப் பதிவு செய்துள்ளது. அம்மனுக்குப் படைத்த பிரசாதம் யாத்திரிகர்களுக்கு உணவாக அளிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. நிவந்தமாக வழங்கப்பட்ட 16 கழஞ்சு பொன்னை சிங்கபுர நாடு, ஆறுவகூர் சபையோர் (the assembly of Aruvagur in Singapura-nadu) பெற்றுக்கொண்டனர். நிவந்தம் முறையாகப் பராமரிக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு வாரியத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அங்கத்தினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆறுவகூர் கிராமம் செஞ்சி தாலுகாவில் உள்ளது.

குறிப்புநூற்பட்டி

 1. தொண்டூர்: சங்ககாலக் கல்வெட்டியல் மற்றும் தொல்லெழுத்தியல். சந்திரமூர்த்தி, மா. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆய்வரங்கச் சிறப்பு மலர்  பக். 356  – 357
 2. செஞ்சி அருகே பழங்கால கற்படுக்கைகள், ஓவியங்கள் கண்டுபிடிப்பு தினமலர் 01 அக்டோபர் 2012
 3. #விண்ணாம்பாறை தஞ்சை ஆ.மாதவன்.https://twitter.com/ThanjaiMadhavan
 4. South Indian Inscription Volume XIV Pallava inscriptions no. 42. Tondur, Gingee Taluk, South Arcot District. On a Boulder in a field near the ‘Vinnamparai-rock’.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சமண சமயம், தொல்லியல், படிமக்கலை, வரலாறு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

 1. பிங்குபாக்: தொண்டூர்: பஞ்சனாப்பாடி குன்றில் சமணர் குகைத்தளங்கள், பல்லவர் கால விண்ணாம்பாறை விஷ்ணு சிற்பம்

 2. ஸ்ரீராம் சொல்கிறார்:

  நான் அந்த மூன்று கோடுகள் முற்றுப்புள்ளி போலவோ, பத்தி பிரிக்கவோ என்று யோசித்தேன்! பிராமி எழுத்துகள் பார்க்கும்போது தமிழுடன் சம்பந்தமே இல்லாது போல இப்போது தோன்றுகிறது!

  Like

 3. ஸ்ரீராம் சொல்கிறார்:

  தஞ்சைக்கு அருகிலும் ஒரு வல்லம் இருக்கிறது.. (நம்ம வல்லவரையன் வந்தியத்தேவர் ஊர்)

  Like

 4. ஸ்ரீராம் சொல்கிறார்:

  அந்தக் காலத்தைய 5 பெட்ரூம் குகைகள்!! புடைப்புச் சிற்பங்கள் பற்றிய தகவல் – குறிப்பாக விஷ்ணு பற்றிய தகவல்கள் – சுவாரஸ்யம்.

  Like

  • முத்துசாமி இரா சொல்கிறார்:

   இத்தகைய குகைத் தளங்கள் குளிர்சியூட்டப்பட்ட அறையைப் போல இருக்கும். விழுப்புரம் மாவட்டத்து வெய்யிலை உணர முடியாது. இங்கு சென்றால் திரும்ப மனம் வராது. சமணத் துறவிகள் இங்கு ஆற்றிய பொதுத் தொண்டுகள் மட்டுமின்றி பதினென்கீழ்க்கணக்கு தமிழ் இலக்கியங்களையும் படைத்துள்ளர்கள்.

   Like

 5. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  சமணர் படுக்கைகள் வியப்பை ஏற்படுத்துகின்றன ஐயா
  தங்கள் பதிவு வழக்கம் போல் ஆய்வுப் பதிப்புதான் ஐயா

  Liked by 1 person

 6. தகவல்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது நண்பரே

  Like

 7. Dr B Jambulingam சொல்கிறார்:

  விழுப்புரம் மாவட்டத்தில் சமணம் பற்றிய அரிய செய்திகளை அறிந்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது அப்பகுதிக்கு வரவுள்ளோம்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.