சங்க இலக்கியத்தில் கொற்கை முத்து, முத்துக்குளித்தல், கடல் வணிகம் பற்றிய செய்திகள்

சங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் பண்டைய தமிழகத்தில் பாண்டிய நாட்டின் கொற்கைத் துறையில் கிடைத்த உலகப் புகழ்பெற்ற முத்துக்கள் பற்றியும் இப்பகுதியில் செழித்தோங்கிய முத்துக்குளித்தல் தொழில்  பற்றியும் ரோம் மற்றும் அரேபிய நாடுகளுக்கு முத்து ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. இந்தப்பதிவில் முத்து பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வழங்க ஒரு சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

முத்து, விலை மதிப்பற்ற நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது வகையான மணிக்கற்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முத்து ஒன்பது நவரத்தினங்களுள் இரண்டாம் இடம் வகிக்கிறது. முத்து திடமானதும், ஒளி பொருந்தியும், வெண்மை நிறத்துடனும், உருண்டை அல்லது முட்டை வடிவத்துடனும் காணப்படுகிறது. உயர்ந்த வகை உருண்டை வடிவ முத்துக்களுக்கு ஆணிமுத்து என்று பெயர். அளவில் சற்று பெரிதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும் அதிக ஒளிருந்தன்மையுடன் பளபளப்பாகக் காணப்படும்.

முத்துக்கள் (Pearls) வாழும் உயிரனமான முத்துச் சிப்பிகளிலிருந்து பெறப்படும் மணிக்கற்களாகும் (Gemstone). முத்து எப்போது யாரால் எப்போது கண்டறியப்பட்டது என்று தெரியவில்லை. இக்கற்களை, ஆதி மனிதன் (Pre Historic Man) கண்டறிந்து உலகுக்கு அளித்த, இயற்கையான கொடையாகக் கருதலாம். உணவுக்காக ஆதிமனிதன் கடல் மற்றும் ஏரிகளிலிருந்து சிப்பிகளைச் சேகரிக்கும்போது நிகழ்ந்த கண்டுபிடிப்பு இதுவாகும்.

இயற்கை, முத்தைத் தயாரித்து முடிக்கப்பட்ட பொருளாகவே (Finished Product) நமக்கு அளிக்கிறது. இதற்கு மேல் முத்தைப் பட்டை தீட்டவோ (Cutting) பளபளப்பாக்கவோ (Polishing) தேவையில்லை. பளபளப்பு (Lustre), ஒளிர்வு (Brilliance) போன்ற தன்மைகள் இயற்கையிலேயே அமையப்பெற்ற நன்முத்துக்கள், கனிமங்களிலிருந்து பெறப்பட்டு, மனிதனால் பட்டை தீட்டிப் பளபளப்பாக்கப்பட்ட மணிக்கற்களை விடச் சிறந்தவை ஆகும்.

மேல்தொனி (Overtone) கீழைப் பண்பு (Topographic Orientation) போன்ற தனித்தன்மையுடன் கூடிய ஒளியியல் பண்புகள் (Unique Optical Properties) கொண்ட முத்துக் கூட்டில் (Nacre) ஒளிவிலக்கம் பெற்ற ஒளி பல்லடுக்குகளிலும் பாய்கின்றன. இதனால் முத்துக்கள் தனித்தன்மையுடன் கூடிய பலநிறக் கலவைகளைத் (Unique Color Combinations) பெறுகின்றன. இது போன்ற பண்புகளை வைரம் போன்ற கனிம மணிக்கற்களில் கூடக் காணமுடியவில்லை.

முத்து. தூய்மை (Purity), புனிதம் (Sanctity), முழுமை (Perfection) போன்ற தன்மைகளின் சின்னங்களாகவும் (symbols), நல்லொழுக்கம் (Virtue), அன்பு (Love), ஞானம் (Wisdom), நீதி (Justice), ஆன்மீகம் (spirituality) மற்றும் நியாயமுடைமை (righteousness) போன்ற மனிதப் பண்புகளைப் பிரதிநிதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

முத்துமாலை PC: விக்கிபீடியா

முத்துக்கள் பிறக்கும் இடங்கள் இருபது 

திருவேங்கடையர் தொகுத்துப் பதிப்பித்த உவமான சங்கிரகம் என்னும் நூலில் முத்துக்கள் பிறக்கும் இடங்கள் இருபது என்று குறிக்கும் தனிப்பாடல் இது:

தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்
இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே
(உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்)

யானைக் (தந்தி) கொம்பு, பன்றிக் (வராகக்) கொம்பு, முத்துச்சிப்பி, (பூகம்) பாக்குமரம், (கதலி) வாழைமரம், (நந்து) நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீன் தலை, கொக்குத் தலை, தாமரை (நளினம்), பெண்கள் கழுத்து (மின்னார் கந்தரம்), நெல் (சாலி), மூங்கில் (கழை), கரும்பு (கன்னல்), மாட்டுப் பல் (ஆவின் பல்), பாம்பு (கட்செவி), முகில் (கார்), கற்பூரம், முடலை, உடும்பின் தலை ஆகிய இருபது இடங்களில் முத்து பிறக்கும் என்பது  இதன் பொருள்.

வேறு பெயர்கள்

முத்திற்கு தமிழில் நித்திலம் (எ.கா: நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளி (சிலப்பதிகாரம்.), தூமணி (எ.கா: துங்கக் கரிமுகத்துத் தூமணியே – (நல்வழி) என்று சில பெயர்கள் உண்டு. வடமொழியில் முக்த (Muktha) என்று பெயர். வட்டம், அனுவட்டம், ஒப்பு, குறு, சப்பாத்தி, இரட்டை, கரடு என பல முத்து வகைகள் இருந்ததாகச் சோழநாட்டுக் கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன.

உயர்தரமான அல்லது முதல்தரமான முத்தினை ஆணிமுத்து என்று குறிப்பிடுவர்.
(எ.கா.)
கண்டேனே முத்துறையும் நாடும்கண்டேன் கருவான ஆணிமுத்து தானுங்கண்டேன்
கொண்டேனே வெகுதூரங் குளிகைகொண்டு கொப்பெனவே முத்துறையும் பதியுங்கண்டேன்
விண்டிட்ட குளிகையது பலத்தினாலே வீரான ஆழிவரை சுத்திகண்டேன்
உண்டதொரு குண்ணளவு முத்துகண்டேன் வுகமையுள்ள சிப்பிமுத்து கண்டேன்பாரே
(போகரின் சப்த காண்டம் 4109)

இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகள் (Physical and Chemical Properties)

முத்து ஒரு கனிப்பொருள் (Mineral) அல்ல. இந்த முத்து அரகோனைட் மற்றும் கால்சைட் ஆகிய இரு கால்சியம் கார்பனேட் கனிமங்களால் உருவாகிறது. இந்தக் இரண்டு கனிமங்களும், படிகமாகும் (crystallization) தன்மையில் வேறுபடுகின்றன. கால்சைட் என்ற பொதுவான கனிமம் முக்கோணப் படிகங்களால் (trigonal crystals) உருவாகிறது. அரகோனைட் செஞ்சாய்சதுரப் படிகங்களால் (Orthorhombic Crystals). உருவாகிறது. அரகோனைட் என்னும் கனிப்பொருளும் காஞ்சீலின் (ஒரு புரதம்) (Conchiolin (a Protein) என்ற பிணைப்புப் பொருளும் (Binding Materials) கலந்து முத்து உருவாகிறது.

இந்தச் சேர்க்கையை முத்துக்கூடு (Nacre) அல்லது தாய் முத்து (Mother-of-Pearl) என்று அழைக்கிறார்கள். சில குறிப்பிட்ட வகைகளில் கால்சைட் என்னும் கனிமக் கலவை (கால்சியம் கார்பனேட்டால் உருவாகிய மற்றொரு கனிமம்) காணப்படுகிறது. முத்துச் சிப்பி மற்றும் கருநீலச் சிப்பிகளுடைய ஓட்டின் உட்புறப் பூச்சில் முத்துக்கூடு (Nacre) உருவாகிறது. ஒரு சிறந்த முத்து உருண்டை  வடிவில் இருக்கும். எனினும் வேறு சில வடிவங்களும் பொதுவாகக் காணப்படும்.

Various_pearls

முத்துக்களின் வகைகள் PC: விக்கிபீடியா

 • வகை: கார்பனேட் கனிமம்
 • வேதியல் வாய்ப்பாடு: CaCO3
 • கலவை: கால்சியம் கார்பனேட் சில சமயங்களில் ஸ்ட்ரான்ஷியம் (Strontium), ஈயம் (Lead) மற்றும் துத்தநாகம் (Zinc)
 • மாற்று வாய்ப்பாடு: (Ca,Sr,Pb,Zn)CO3
 • நிறம்: நிறமற்றது (Colorless), வெண்மை (white), பழுப்பு (brown), சாம்பல் நிறம் (gray), மஞ்சள் (yellow), சிவப்பு (red), இளஞ்சிவப்பு (pink), ஊதா (purple), ஆரஞ்சு (orange), நீலம் (blue), பச்சை (green)
 • கீற்றுவண்ணம் (Streaks): வெள்ளைக் கீற்றுகள்
 • வலிமை (Hardness) மோவின் அளவு கோல்: 3.5 – 4
 • படிக அமைப்பு: செஞ்சாய்சதுர படிகங்கள் (Orthorhombic Crystals)
 • ஒளி ஊடுருவும் தன்மை (Transparency): ஒளிபுகும் தன்மை (Transparent) முதல் ஒளிபுகாத் தன்மை வரை
 • ஒப்படர்த்தி (Specific Gravity): 2.9 – 3.0
 • மிளிர்வு (Lustre): கண்ணாடிதன்மை (Vitreous), மந்தமான (Dull) மிளிர்வு
 • பிளவு (Cleavage): 3,1 – பட்டகம் (prismatic) ; தெளிவாகத் தெரியாத (indiscernible),2
 • முறிவு (Fracture): Subconchoidal
 • விகுவுத்தன்மை (Tenacity): நொறுங்கத்தக்கது (Brittle)

சான்று: அரகோனைட்டு, விக்கிபீடியா

நுரையற்ற பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்கும். முத்தை ஊறவைத்த நீரைப் பருகினால் வயிற்றில் அமில சக்தியைப் போக்கி குடல் நோய் வராமல் பாதுகாக்கும். முத்து கல்லீரல் இயக்கத்தைச்  சீராகப் பாதுகாக்கும். இது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் பண்பு கொண்டது.  புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்த முத்தினை அணிந்தால் அஃது உடலில் உரசி உரசிக் கரையும். அப்போது உடல் சூடு தணியும். முத்து நீண்ட ஆயுளைத் தரவல்லது என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன. முத்தினை மூலிகைச் சாற்றுடன் புடம் போட்டுப் பஸ்பம் செய்யும் வழிமுறை சித்த மருத்துவ நூல்களில் இடம்பெற்றுள்ளது.

சந்திரனின் இராசியில் பிறந்த கடக (ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்த) ராசிக்காரர்கள்; சந்திரதிசை நடப்பில் உள்ள ஜாதகர்கள்; எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களிலும், 7,16, 25 தேதிகளிலும் பிறந்தவர்கள், ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள்; இசை,கணிதம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள்; ஆகியோர் முத்தினை அணியலாம் என்று இராசிக்கல் வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.

வரலாறு 

முத்துக்கள் மனித வரலாற்றுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. இவை உலகின் மிகப் பழமையான மணிக்கற்களாக வரலாற்றுக் காலத்திற்கு முன்பிலிருந்தே மதிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே முத்துக்களின் கண்டுபிடிப்பிற்கு ஒரு நபரை மட்டும் பொறுப்பாக்க இயலாது. கடற்கரை ஓரங்களில் ஆதிமனிதன் உணவைத் தேடி அலைந்த போது முத்துக்கள் கண்டறியப்பட்டதாக நம்பப்படுகிறது.

கி.மு.2300 ஆம் ஆண்டுக்கு முன்பே முத்து சீன அரச குடும்பத்தினருக்கு பரிசாக வழங்கப்பட்டது. முத்துக்கள் பற்றிய மிகவும் பழமையான குறிப்புப் பழங்காலச் சீனாவில் இருந்து கிடைக்கிறது. சீனாவில் கி.மு. 2,350 ஆம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட மிகப் பழமையான புத்தகங்களில் ஒன்றான ஷோ கிங் (சூங் சூ) (Sho King (Chuang Tzu) என்ற நூலில் ஹூவாய் ஆற்றில் கிடைத்த முத்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல், வரி ஆவணங்கங்களிலும், இறப்பிற்குப் பின் அளிக்கப்படும் முத்து வெகுமதி வரிசையிலும் முத்து பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.மு. 1000 ஆம் ஆண்டு வெளிவந்த பண்டைய சீன அகராதியான the Nh’ya இல் ஷென்-சை பிரதேசத்தில் கிடைத்த முத்தை விலைமதிப்பற்ற நகை என்று பொருள் கூறுகிறது. கி.பி. 1000 ஆம் ஆண்டில் சின்னஞ்சிறிய ஈய புத்தர் சிலைகளை (Tiny Lead Buddha Statue) முத்துச் சிப்பிக்குள் செலுத்தி முதன்முதலாக வளர்ப்பு முத்துக்களைத் தயாரித்த (Production Cultured Pearls) பெருமையையும் சீனமே பெறுகிறது. யூத மதத்தின் புனித நூலான டால்மூதில் (Talmud) அசாதாரண அழகான மற்றும் மிக விலையுயர்ந்த முத்துக்களைக் குறித்துப் பல குறிப்புகள் உள்ளன.

விவிலியம் குரான் போன்ற புனித நூல்களில் முத்து இடம்பெற்றுள்ளது. முத்துக்களின் தோற்றம் புராணக்கதைகள் மற்றும் பிரபஞ்சவியல் சொல்லாட்சிகளின் (Mythological and Cosmological Terms) மூலம் அடிக்கடி விவரிக்கப்பட்டுள்ளது.

விவிலியம் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரு தொகுப்புகளிலும் முத்துக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. புதிய ஏற்பாட்டில் எட்டு இடங்களில் முத்துக்கள் பற்றி குறிப்பிடப்படுகிறது: மாத்யூ 2 குறிப்புகள்; உயிர்த்தெழுதல் (Revelation) 4 குறிப்புகள்; திமோதி 2 குறிப்புகள்

ரோம் நாட்டில் முத்தில் செய்யப்பட்ட நகைகள் அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டன. கி.மு. முதலாம் நூற்றண்டிலேயே உருள் முத்துக்கள் அரிதான மணிகளாக மதிக்கப்பட்டன. ஜூலியஸ் சீசர் காலத்தில் அரச குடும்பத்தினர் குறைவாக முத்து ஆபரணங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டது..

பாரிஸ் நகரில் லூவர் அருங்காட்சியகத்தில், பெர்சிய இளவரசியின், கி.மு. 420 ஆம் ஆண்டு எனக் காலவரையறை செய்யப்பட்ட பழங்காலக் கல் சவப்பெட்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இளவரசியின் உடலில் உடைந்த முத்து நகைத் துண்டு கண்டறியப்பட்டுள்ளது. இதன் வாயிலாக முத்து கி.மு. 420 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே அணிகலனாகப் பயன்படுத்தியது தெளிவாகியுள்ளது. எகிப்தில் முத்துச் சிப்பிகளை கி.மு.நான்காம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர். மாவீரன் அலெக்சாண்டரின் (கி.மு. 4 ஆம் நூற்றாண்டு) ஆட்சிக் காலத்தில் முத்து வணிகமும், வணிகப் போக்குவரத்தும் மேலைநாடுகளுக்குப் பரவியது. செங்கடலும் மத்திய கிழக்கு பகுதியும் முத்து வணிகத்தின் இன்றியமையாத மையங்களாக விளங்கின.

பெர்சிய வளைகுடாவின் கடற்கரைப் பரப்பில் முத்துச் சிப்பிகள் அதிக அளவில் காணப்பட்டது அரபியக் கலாசாரத்தின் மதிப்பை உயர்த்தியது. செயற்கை முத்துக்கள் கண்டறியப்பட்டதற்கு முன்பே பெர்சியா முத்து வணிகத்தின் மையமாக விளங்கியது. வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகள் கண்டறியப்பட்டதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே முத்து பெர்சிய வளைகுடா நாடுகளின் செல்வத்திற்கான ஆதாரமாகத் திகழ்ந்துள்ளது.

இவ்வளவு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட முத்து நாளடைவில் புராணக் கதைகளிலும் கட்டுக்கதைகளிலும் (Legends and Myths) கலந்துவிட்டதில் வியப்பேதுமில்லை. பண்டைய சீனத்தில், முத்து நகைகள் அதனை அணிபவருக்குத் தூய்மையைத் தரவல்லது என்று நம்பப்பட்டது. இருண்ட காலத்தில் (Dark Ages) போர்வீரர்கள் முத்து நகைகளை அணிந்து கொண்டால் பாதுகாப்பு என்று கருதினர். புராணக்கதைகளின்படி உலக அழகி கிளியோபாத்ரா முத்தை நொறுக்கி மதுபானத்தில் கலந்து மார்க் அந்தோணிக்கு இரவு விருந்தாக அளித்ததுதான் உலக வரலாற்றிலேயே விலை உயர்ந்த இரவு உணவாகக் கருதப்படுகிறது.

வேதம், இதிகாசங்களில் முத்து

வேதத்தில் முத்து பற்றிய குறிப்புகள் உள்ளன. ரிக் வேதத்தில் (கி.மு. 1,700-1,100) க்ரிசனா (Krisana) என்ற சொல் பல ஸ்லோகங்களில் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பொருள் முத்தைக் குறிக்கின்றனவாம். அதர்வண வேதத்தில் (கி.மு. 1,200-1,000) முத்துப் பதித்த மோதிரம் பற்றிக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

இராமாயணம், கிஷ்கிந்தா காண்டத்தில் (4-41-18), சீதையை தென்திசை நோக்கித் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது:

ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८
युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः |

கவாடம் பாண்ட்யானாம் என்ற சொற்றொடர் பாண்டியனின் கோட்டைக் கதவு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவாடம் என்பதைக் கோட்டை மதில் எனக் கொள்ளாமல் கவாடபுரம் என்ற இடைச்சங்கத்துப் பாண்டியர் தலைநகராகவும் கொள்ளலாம். அல்லது பாண்டியரின் கொற்கை போன்ற கடற்கரைப் பட்டினமாகவும் கொள்ளலாம். பாண்டியரின் இரண்டாம் தலைநகரமாக இது இருந்திருக்கக்கூடும்.

கௌடில்யர் தாம் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் தாமிரபரணி, பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

சங்க இலக்கியத்தில் முத்து 

சங்க இலக்கியத்தில் முத்துக்கள் பற்றி பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. சங்க காலத்தில் முத்துச்சலாபம் (முத்துக்குளித்தல்) பாண்டிய நாட்டில் மிகுதியாக நடந்தது. பாண்டிய நாட்டில் விளைந்த முத்துக்கள் உலகப் புகழ்பெற்று விளங்கின.

வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து; தெண்ணிர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.
(அவ்வையார் – தனிப்பாடல் )

என்ற தனிப்பாடலில் அவ்வையார் பாடியது போல பாண்டியனின் தென்னாடு முத்திற்குப் புகழ் பெற்றிருந்தது.

கொற்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே கொற்கை (பின் கோடு 628801) ஆகும். அமைவிடம் 8°38′0″N அட்சரேகை 78°4′0″E தீர்க்கரேகை ஆகும். ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் அமைந்துள்ள இவ்வூர் இன்றைய வங்கக் கடற்கரையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து 3 கி.மீ.  தொலைவிலும் அமைந்துள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து  24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூரின் மக்கள்தொகை 3986 (ஆண்கள் 1969 பெண்கள்  2017 மொத்த வீடுகள் 1074) ஆகும்.

கொற்கையின் தொன்மையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காகத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பல அகழ்வாய்வுகளை இப்பகுதியில் மேற்கொண்டனர். கொற்கை அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் கொற்கையில் அகழ்வாய்வுக் காப்பகம் ஒன்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இந்த அகழவாய்வுக் காப்பகம் தற்போது திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்படுகிறது.

இந்தக் கொற்கையே கி.பி. 130 ஆம் ஆண்டுவரை பாண்டியர்களின் முதன்மை தலைநகரமாகத் திழ்ந்துள்ளது என்று தாலமியின் பயணக் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது. பெரிபுளூஸ், பிளினி போன்ற மேலைநாட்டு பயணிகளும் கொற்கைத் துறைமுகத்தையும் இங்கு விரிவாக நடைபெற்ற முத்து வணிகம் பற்றியும் வியந்து குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 130 ஆம் ஆண்டிற்குப் பின்பு இவ்வூர் பாண்டியர்களின் துறைமுகப் பட்டணமாகவும் இரண்டாம் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது. விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் கொற்கையை ஆண்டுவந்த செய்தியினைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த காலத்தில் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் செவ்வனே நிறைவேற்றினான் என்பதும் சங்க இலக்கியச் செய்திதான். இவ்வூர் சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை (Colchi), கொல்கை குடா’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன
(அகநானூறு 27: 8 – 9, மதுரைக் கணக்காயனார்)

பல போர்களில் வீரத்துடன் போரிட்டுக் காத்து வந்த பாண்டியர்களின் கொற்கையின் பெரிய துறையின் முத்தைப் போலப் புன்னகை பூக்கும் ஒளிபொருந்திய பற்களும் பவளம் போன்று சிவந்த வாயும் கொண்ட தலைவி.

கொற்கை முத்துக்கள் சிறந்தனவாக மதிக்கப்பட்டன என்பதை நற்றிணையும் ஐந்குறுநூறும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன.

 …    …    …     …     ….     …      …     ஈண்டு நீர்
முத்துப்படு பரப்பின் கொற்கை முன் துறை
(நற்றிணை 23: 5 – 6, கணக்காயனார்

கொற்கைத் துறையின் கடல் நீரில் முத்துக்கள் விளையும்

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்
(ஐங்குறுநூறு 185; 1 – 2, அம்மூவனார்)

அல்லிப் பூக்கள் தள்ளாடி அசையும் கொற்கைத் துறையின் நுழைவாயிலில் சிதறிக் கிடக்கும் முத்தைப்போல ஒளிரும் பற்களையும் சிவந்த வாயினையும் உடைய இளம்பெண்.

புகழ் மலி சிறப்பின் கொற்கை முன் துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
(அகநானூறு 201; 4 – 5, மாமூலனார்)

ஒளிர்விடும் பொன்னால் செய்த நெற்றிப்பட்டம் அணிந்த வெற்றிக் களிறுகளை உடைய பாண்டிய மன்னனின் கொற்கைத் துறையில்  ஒளிர்விடும் முத்துக்களும் வலம்புரிச் சங்கும் சிதறிக் கிடக்கிறது.

இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும்  10
நற்தேர் வழுதி கொற்கை முன் துறை
(அகநானூறு 130; 9 – 11, வெண்கண்ணனார்)

கொற்கைத் துறையில் கடல் அலை கரையில் முத்துக்களைக் குவிக்கின்றன. கடற்கரையில் சிதறிக் கிடக்கும் இந்த முத்துக்கள் செல்வந்தர் ஏறிவரும் குதிரையின் காலடிக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமைகிறது. இந்த அளவிற்கு முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றனவாம்.

சீர் உடைய விழு சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்
இலங்கு வளை இரும் சேரி
கள் கொண்டி குடி பாக்கத்து
நல் கொற்கையோர் நசை பொருந
(மதுரைக்காஞ்சி 134 – 138

மதுரைக் காஞ்சி வரிகளில் கொற்கைத் துறைமுகத்தின்  சிறப்பு  வியந்து போற்றப்படுகிறது.

’கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு’ (சிலப்பதிகாரம். 14. 180)

கொற்கையின் பெருந்துறை முத்துக்களை பெற்றுள்ளது என்று சிலப்பதிகாரம் விவரிக்கிறது.

மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியப் பாடல்களில் “கொற்கை முன்துறை” என்று கொற்கை குறிக்கப்படுகிறது. “கொற்கைப் பெருந்துறை” என்றும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. இதற்கான விளக்கத்தை விக்கிபீடியாவில் முன்துறைமுகம் என்ற தலைப்பில் காணலாம் இந்த விளக்கத்தின் அடிப்படையில் கொற்கை தாமிரபரணி நதியின் கழிமுகப் பகுதியில் இருந்த துறைமுகப்பட்டணம் ஆகும்.

பாண்டியர்களின் பெரும் துறைமுக நகரமாகத் திகழ்ந்த கொற்கையில் அயல் நாட்டு வணிகர்களான அரபியர், யவனர், சீனர் முதலானோர் வந்து தங்கி வணிகம் புரிந்துள்ளனர். இவர்கள் மூலம் முத்து வணிகம் மேலோங்கியது. முத்தும் பல்வகை ஆடைகளும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்
மரம் போழ்ந்து அறுத்த கண்ணேர்? இலங்கு வளை
பரதர் தந்த பல் வேறு கூலம்
இரும் கழி செறுவில் தீம் புளி வெள் உப்பு
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர்
கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்
விழுமிய நாவாய் பெரு நீர் ஓச்சுநர்
நன தலை தேஎத்து நல் கலம் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தொறும் வழி வழி சிறப்ப
(மதுரைக்காஞ்சி 316 – 325)

கடல் வணிகர்கள் கடலில் உண்டான முத்துக்களையும், சங்குகளை அறுத்துச் செய்த வளையல்களையும், நவதானியங்கள், மீன்களை உப்பிட்டு உலரவைத்த கருவாடு ஆகியவற்றை நாவாய்களில் ஏற்றிச் சென்று அயல்நாடுகளில் விற்ற செய்தியினை மதுரைக் காஞ்சி விவரிக்கிறது.

கொற்கைத் துறைமுகத்தின் வழியாக 16,000 அரேபியக் குதிரைகள் பாய்மரக் கலங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுப் பாண்டிய நாட்டுக் குதிரைப் படையுடன் இணைத்த செய்தியை வாசப் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். “நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்” என்ற சங்க இலக்கியத் தொடர் மூலம் குதிரை இறக்குமதியான செய்தி பற்றி அறிந்துகொள்ளலாம்.

கிளாடியஸ், நீரோ (கி.பி. 54-68) போன்ற ரோமானிய மன்னர்களின் ஆட்சியின்போது அரச தூதர்களைப் பரிமாறிக் கொண்டு பாண்டிய நாட்டுடன் வணிகம் மேற்கொண்டுள்ளனர். அகஸ்டஸ் என்னும் ரோமானிய மன்னனின் ஆட்சியில் பாண்டிய வேந்தர்கள் ரோமானியர்களின் அரசவைக்கு கொற்கை முத்துக்களைப் பரிசாக அனுப்பிய செய்தியை வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ குறிப்பிடுகிறார். ரோமப் பேரரசி கிளியோபட்ரா முத்துக்கள் மீது மிகுந்த ஆசை கொண்டிருந்தார். ரோமநாட்டின் பெண்கள் தமிழகத்து முத்துக்களையும் மணிகளையும் வாங்கி ரோமானியக் கருவூலத்தைக் காலிசெய்ய அனுமதிக்கக் கூடாது என்று ரோமானிய செனட்டில் தாலமி பேசியதாக ஒரு செய்தி உண்டு. கொற்கை முத்தைப் பெரிதும் விரும்பி வாங்கியதால் ரோமானியப் பொருளாதாரமே நலிவுற்றதாக மற்றொரு ரோம நாட்டு மன்னன் இந்த செனட்டில் தெரிவித்துள்ளான்.

முசிறி 

சேரநாட்டின் துறைமுகமான முசிறி சுள்ளி என்னும் பேரியாறு (தற்போது பெரியார்) கடலோடு கலக்கும் இடத்தில் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில் அமைந்திருந்தது. கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை முசிறிஸ் என்றும், வடமொழியாளர்கள் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள். தற்போது பரவூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பட்டணம் (Malayalam: പട്ടണം) (அமைவிடம் 10.15654°N அட்சரேகை 76.208982°E தீர்க்கரேகை) என்னும் கிராமமே அன்றைய முசிறி துறைமுகப் பட்டணம் என்பதை 2007, 2008 மற்றும் 2015 ஆண்டுகளில் முசிறி மரபுத் திட்டத்தின்  (Muziris Heritage Project) கீழ் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உறுதி செய்துள்ளன.

பந்தர் 

சேரநாட்டுத் துறைமுகப் பட்டணமாகிய முசிறியில் முத்துக்கள் கிடைத்தன. இந்த முத்துக்கள் பந்தர் என்னும் ஊரில் விற்கப்பட்டன. பெரிபுளூஸ் பந்தர் துறைமுகத்தை Balita என்று குறிப்பிட்டுள்ளார். ‘பந்தர்” என்ற அரபுச் சொல்லுக்குத் துறைமுகம் என்று பொருள். அரபிக் கடலோரத் துறைமுகங்களான கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டும் பத்துப்பாட்டில் இணையாகவே குறிப்பிடப்படுகின்றன.

“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபில் கைவல் பாண!
தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை”
பதிற்றுப்பத்து 7-ஆம் பத்து 7-ஆம் செய்யுள்

“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்”
பதிற்றுப்பத்து 8-ஆம் பத்து 4-ஆம் செய்யுள்

சங்க இலக்கியத்தில் முத்துக் குளித்தல் 

சங்ககாலத்தில் முத்துக்குளித்தல் தொழில் புகழ்பெற்றிருந்தது. சங்க இலக்கியங்களில் கூறப்படும் செய்திகளிலிருந்து பரதவர் முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல் போன்ற தீரமிக்கச் செயல்களாலும், கடல் கடந்த வணிகங்களிலும் சிறந்தோங்கினார் என்பது தெளிவாகிறது.

‘முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரம் போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறை இய துடிக்கட் டுணியல்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோடனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப’
(மதுரைக் காஞ்சி 315-324)

மதுரைக் காஞ்சி நெய்தல் நில இயல்பை விவரித்துக் கூறுகிறது. முழங்குகின்ற கடல் தந்த முத்து, அரம் கொண்டு அறுக்கப்பட்ட சங்கு வளையல், பரதவர் தரும் பொருட்கள், தீம்புளி, வெண்மையான உப்பு, கானல், நாவாய் ஆகிய பொருட்களும் கடல் வணிகம், முத்துக்குளித்தல் சங்கு அறுத்து வளையல் செய்தல், மீன் பிடித்தல், மீன்விற்றல், உப்புக் காய்ச்சுதல், மேலைநாட்டின் குதிரைகள் துறைமுகங்களில் இறக்குமதி செய்து விற்றல் உள்நாட்டு அணிகலன்களைப் பிற நாடுகளுக்குக் கொண்டுசென்று விற்றல், முத்து, சங்கு மற்றும் கூலம் ஏற்றிய மறக்கலங்களைச் செலுத்துதல் ஆகிய தொழில்கள் நெய்தல் நிலத்தே நடந்தன.

கடலுள் முத்து விளையும் இடங்கள் சலாபம் எனப்பட்டன. முத்துக்குளிப்பு (Pearl Fishery) முத்துச் சலாபம் என்றும் அழைக்கப்பட்டது. சலாபம் என்றாலே முத்துக்குளித்தல் என்று பொருள். சிலர் சிலாபம் என்றும் கூறுவார். இதுபோலப் பவளக்குளிப்பு (Coral Fishery) பவளச் சலாபம் என்றும் அழைக்கப்பட்டது.

முத்துக் குளிப்போர் கடலுக்குள் படகில் சென்று  முத்துக்குளிப்பர். படகின் உரிமையாளருக்கு ‘சம்மாட்டி’ என்று பெயர். இவர்கள் குழுவாகவே செயல்படுவர். முக்குளித்து முத்துச் சிப்பி, சங்குகளை எடுப்பவர்கள் ‘குளியாளிகள்’ என்று அழைக்கப்பட்டனர். முறையான நீர் மூழ்குதல் (Diving) பயிற்சி பெற்ற பரதவக் குளியலாளிகள்  தங்கள் இடுப்பில் வலையைக் கட்டிகொண்டு, கடலுக்குள் மூழ்குவர். வலையை விரித்து, அங்குள்ள முத்து சிப்பிகளைச் சேகரித்து, மேலே வந்து படகுகளில் அவற்றைக் கொட்டி, சிறிது நேரம் ஓய்வெடுப்பர். பின், மீண்டும் நீரில் மூழ்கி, சிப்பி எடுப்பர். இவ்வாறு, காலை முதல் மாலை வரை, முத்துக்குளிப்பு நடைபெறும். மாலையில், படகுகளில் தாம் குவித்துள்ள சிப்பிகளையும், கிளிஞ்சல்களையும் கடற்கரைக்குக் கொண்டு வந்து, மணலில் பரப்பி, ஓடுகளை உடைத்து, உள்ளிருக்கும் முத்துகளை எடுப்பர்.

தொடர்புடைய படம்

முத்துச் சிப்பியில் விளைந்த முத்து PC: TamilCNN

ஆழமான கடற்பகுதிகளில் அதிகமாக வாழும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் (freshwater pearl mussel) ஆகிய மெல்லுடலிகள் (Mussel) வாழும் படுகைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சேகரித்து வருவதற்குப் பயிற்சியும் தனித் திறன்களும் வேண்டும்.

முத்துக் குளிக்கும் பரதவர்கள் சுறா மீன்களால் அடிக்கடி தாக்கப்பட்டிருக்க வேண்டும். சுறா மீன்களால் ஏற்படும் இந்த இடரைத் தடுத்து சுறாமீன்களிடமிருந்து காப்பற்றுவதற்கு “சுறா வசியம்” என்னும் மந்திரம் ஓதியுள்ளார்கள்.

இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை
(அகநானூறு – 350)

முத்துச்சிப்பிக்களையும் சங்குகளையும் முத்துக்குளித்த பரதவர்கள் கடலிலிருந்து அள்ளிக்கொண்டு வந்து விற்றனர் .

பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி
நாரரி நறவின் மகிழ்தொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை
(அகநானூறு – 296)

இலங்கை – தமிழகத்துக்கு இடையே உள்ள கடல், அதிக ஆழமில்லாதவை ஆகும். பரதவர்கள் முத்துக்குளிக்கும் திறமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். பாண்டியர்கள் இவர்களை ஆதரித்தனர். பாண்டியர்கள் வலிமை பெற்றிருந்த காலங்களில் பரதவர்களுக்குப் பொது வரிவிதிப்பிலிருந்து விலக்களித்தது மட்டுமின்றிப் பாதுகாப்பும் அளித்துக் காத்தனர். பரதவர்கள் யாருக்கும் கட்டுப்படாத தனிச் சலுகைகள் பெற்றுத் தொழில் செய்தனர். முத்துக் குளிக்கும் பரதவர்கள் குளியாளிகள் என்று அறியப்பட்டனர். இவர்கள் தொழில்முறையில் முத்துக் குளிப்பவர்கள் ஆவர். முத்துக்குளியளிலும் சங்குக் குளியளிலும் இவர்கள் ஈடுபடுவர்.

‘Pearl fishing on the coast of Tuticorin by Paravars using thoni’ from ‘La galerie agreable du monde. Tome premier des Indes Orientales.’, published by P. van der Aa, Leyden, c. 1725 (Source: columbia.edu)

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய நாட்டுப் பயணியான மார்கோ போலோ எழுதிய Travels of Marco Polo என்ற நூலில் தமிழகத்தின் தூத்துக்குடியில் கடலில் இறங்கி முத்தெடுக்கும் நிகழ்வான ‘முத்துக் குளித்தல்’ குறித்துப் பதிவுசெய்திருக்கிறார்.

முத்துக் குளிப்போருக்கு, முத்தெடுக்கும் போது, கடல் வாழ் உயிரினங்களால், தீங்கு ஏற்படாமல் தடுக்க, கரையில் அமர்ந்து, மந்திரம் ஜெபிப்பர் அந்தணர்கள். சுறா மற்றும் திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் வாயை தனது மந்திர சக்தியால் கட்டி வைத்துவிடுவர். மாலையில் முத்தெடுப்பு முடிந்ததும், மாற்று மந்திரங்களைச் சொல்லி, மந்திரக் கட்டை அவிழ்த்து விடுவர்.

அரசனின் அனுமதி பெற்ற பின்பே, கடலில் முத்தெடுக்க வேண்டும். திரட்டப்படும் முத்துகளில் பத்தில் ஒரு பங்கு, மன்னனுக்கும், இருபதில் ஒரு பங்கு, மந்திரம் ஓதும் பிராமணருக்கும் கொடுத்து விட வேண்டும். இது தவிர, மிகச் சிறந்த, மதிப்பு வாய்ந்த முத்துக்கள் கிடைத்தால், அதை, வணிகர்களிடம், விலை கொடுத்து, மன்னன் வாங்கிக் கொள்வதுண்டு.

கொற்கைத் துறைமுகம் கடற்கோளால் தூர்ந்துபோன பின்பு காயல் என்னும் ஊர் சிறந்த துறைமுகப் பட்டணமாக உருவெடுத்தது. காயல் என்பது இவ்வூரின் பழைய பெயர் ஆகும். இன்று இவ்வூர் பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம் ஆகிய மூன்று பகுதிகளாக உள்ளது. இந்த ஊரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவுமில்லை. காரணம் சங்ககாலத்தில் கொற்கை மட்டுமே மிகுந்த புகழ்பெற்ற துறைமுகம் ஆகும். காயல்பட்டிணம் கொற்கைக்குத் தெற்கிலும் கயல்பட்டிணத்திற்குத் தெற்கில் வீரபாண்டிய பட்டணமும் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்திற்கு அரேபியா மற்றும் சீனத்திலிருந்து கப்பல்கள் வந்து சென்ற செய்தியை கால்டுவெல் என்ற மேல்நாட்டு அறிஞர் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். இதே நூலில் காயல் துறைமுகத்தில் பரதவர் முத்துக்குளித்த செய்தியும் விரிவாக இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டுப் பயணியரின் பயணக் குறிப்புகள்  

எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) பண்டைய ரோமின் கடல் சார்ந்த வர்த்தகம் (Maritime Trade) (அதாவது, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல்) குறித்த மிகவும் இன்றியமையாத ஒற்றைத் தகவல் மூலமாகும் (single most important source of information). இந்த ஆவணம் கிழக்கு ஆப்பிரிக்கா (eastern Africa), தென் அரேபியா (southern Arabia) மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரங்களில் பல்வேறு துறைமுகங்களில் வாங்குவதற்கும் விற்பதற்குமான ரோம எகிப்தின் (Roman Egypt) செங்கடல் துறைமுகத்திலிருந்து வந்தவர்களுக்கான ஒரு சிறிய கையேடு எனலாம்.

மன்னார் வளைகுடா வழியாகக் கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் பாதையில், இந்திய – இலங்கைக் கடற்கரைப் பகுதிகளில் இருந்த எபிடோரஸ் (Epidorus) (இலங்கையை ஒட்டி அமைந்திருந்த மன்னார் வளைகுடாவில்?)   முத்துக் குளித்தல் நடைபெற்றது பற்றிப் பெரிபுளூஸ் விரிவாக விவரித்துள்ளார். பெரிபுளூஸ் எழுதிய கடல் வழிகளில் பெர்சியன் வளைகுடா பற்றி விரிவாகக் குறிப்பிடவில்லை. என்றாலும்  இந்த வளைகுடாவின் முத்துக்குளித்தல் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.  “கொற்கையில் (Colechi) முத்துக்குளித்தல் நடைபற்றது. கொற்கை பாண்டிய அரசிற்குச் சொந்தமானது. இவர்கள் முதுக்குளித்தலை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைக் (Condemned Criminals) கொண்டு நடத்தினார்கள்” என்று பெரிபுளூஸ் பதிவு செய்துள்ளார். இவர் மொத்த மன்னார் வளைகுடாவையும் கொல்கை வளைகுடா (Colchic Gulf) என்று பதிவு செய்துள்ளார்.

புவியியலாளரும், வானியலாளரும், சோதிடருமான தாலமி (Ptolemy) என்னும் குளோடியஸ் தொலெமாயெஸ் (Claudius Ptolemaeus) “Geographia” என்னும் தன் நூலில் பெர்சிய வளைகுடாவின் (Persian Gulf) டைலோஸ் தீவில் (பஹ்ரைன்) (Island of Tylos (Bahrain) நினைவிற்கு எட்டாத காலந்தொட்டு (from time immemorial) விறுவிறுப்பாக நடைபெற்ற முத்துக் குளித்தல் (Pearl Fishery) பற்றி விவரித்துள்ளார். தாலமி கொற்கையை Kolkhoi என்று அழைத்துள்ளார். இந்தப் பட்டணத்தைப் பேரங்காடி (Emporium) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1838 ஆம் ஆண்டு கொற்கை கால்டுவெல்லால் மீண்டும் அடையாளம் காணப்பட்டது. இவர் தாமிரபரபரணிக் கழிமுகத்தில் அமைந்திருந்த இப்பகுதியை அகழ்வாய்வு செய்தார். ஏரல் என்னும் ஊரின் அருகே அழிவின் விளிம்பில் அமைந்திருந்த இந்தத் தளமே (Site) கொற்கை என்று கண்டறிந்தார். இராமாயணம் குறிப்பிடும் பாண்டிய கவாடமும் கலித்தொகை குறிப்பிடும் கபாடபுரமும் இதுவென்று கூறுவார் சிலர்.

கொற்கையில் முனைவர்.நாகசாமி மேற்கொண்ட அகழ்வாய்வில் பல தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. கொற்கை கிராமத்தில் அக்கசாலை விநாயகர் கோவில் என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஒரு இடத்தில் அக்கசாலை என்னும் நாணயம் தயாரிக்கும் தொழிற்கூடம் செயல்பட்டதாக நம்புகிறார்கள். இதற்குச் சான்றாக அக்கசாலை ஈஸ்வரமுடையார் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவதால் இக்கோவில் சிவன் கோவிலாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இன்று விநாயகர் இக்கோவிலின் மூலவராகத் திகழ்கிறார். இக்கோவிலின் அடிக்கட்டுமானம் கருங்கல்லாலும் மேற்கட்டுமானம் மற்றும் நாகர விமானம் சுதையாலும் ஆனது. இங்கு கண்டறியப்பட்டுள்ள முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில் இவ்வூர் கொற்கை என்றும் மதுராந்தக நல்லூர் என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவல்லபன், வீரபாண்டியன் ஆகிய பாண்டியர் கல்வெட்டுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் குடநாட்டுக் கொற்கை, கொற்கையாகிய மதுரோதைய நல்லூர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் மூலம் இத்தளத்தை பாண்டியர்களின் துறைமுகமாகிய கொற்கை என்று உறுதி செய்யலாம்.

இவ்வூரில் உள்ள குளத்தினுள் உள்ள கருங்கற்கோவிலில் வெற்றிவேல்நங்கை (துர்கையின் வடிவில்) அம்மன் அருள்பாலிக்கிறாள். வெற்றிவேல் செழியன் கண்ணகிக்காகக் கட்டிய கோவில் என்று கருதப்படுவதால் இதற்குக் கண்ணகி கோவில் என்ற பெயருமுண்டு. செழியன் இங்கு ஆயிரம் பொற்கொல்லர்களைக் .கழுவேற்றிக் கொன்றான் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இங்கு சாய்ந்த நிலையில் நிற்கும் வன்னி மரம் 2000 ஆண்டுகள் பழமையனது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருதுகிறது.

குறிப்புநூற்பட்டி 

 1. அரகோனைட்டு, விக்கிபீடியா
 2. கிரேக்கத்தில் மின்னிய மதுரை முத்து நித்தியா பாண்டியன் 30 Aug 2017 https://roar.media/tamil/main/history/pearl-trade-madurai/
 3. கொற்கை, விக்கிபீடியா
 4. கொற்கை தமிழனின் அடையாளம் https://thavasimuthumaran.blogspot.com/2017/02/blog-post_20.html
 5. தாமிரபரணி: நதிக்குள் புதையுண்ட ரகசியங்கள் அழிவின் சாட்சியாய் நிலைத்த ‘கொற்கை’ இந்து தமிழ் திசை 22 Aug 2015
 6. பழம் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கை https://kallarperavai.weebly.com/296530182993302129653016.html
 7. பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கை, http://thirumuruganpalani.blogspot.com/2016/09/blog-post.html
 8. மல்லல் மூதூர் மதுரை – 3. ப. பாண்டியராஜா புராண இதிகாசங்களில் மதுரை
 9. முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524) Tamil and Vedas 8 January 2017
 10. History of the Discovery and Appreciation of Pearls – the Organic Gem Perfected by Nature – Page 1
  https://www.internetstones.com/history-discovery-appreciation-of-pearls-organic-gem-perfected-by-nature-1.html
 11. PEARL, a composite of Aragonite and Conchiolin http://www.galleries.com/minerals/gemstone/pearl/pearl.htm
 12. The history of pearls: one of nature’s greatest miracles http://www.thejewelleryeditor.com/jewellery/article/history-of-pearls-pearl-jewellery-rings-earrings-necklaces/

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தமிழ், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to சங்க இலக்கியத்தில் கொற்கை முத்து, முத்துக்குளித்தல், கடல் வணிகம் பற்றிய செய்திகள்

 1. வேந்தன்அரசு சொல்கிறார்:

  யானை மருப்பிலிருந்து முத்துகள் கிடைக்கும் எனும் செய்திகள் சங்கப்பாடலில் உள்ளன. அதுபற்றியும் குறிப்பிடலாமே.

  “நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை 35
  முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப”

  யானையின் தந்தத்தில் முத்து: அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 – வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ, குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.

  https://learnsangamtamil.com

  Liked by 1 person

 2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  படிக்கப் படிக்க வியப்புதான் ஏற்படுகிறது ஐயா
  முத்துக்கள் என்றலே கோள வடிவில்தான் இருக்கும் என்று இதுநாள் வரை எண்ணியிருந்தேன்
  நன்றி ஐயா

  Liked by 1 person

 3. இரா.கோமகன் சொல்கிறார்:

  நிறைவான பொருட்செரிவான கட்டுரை.முத்து பற்றிய ஒட்டு மொத்தமான பதிவு.பெரிபுளூஸ் பார்வை,முத்துக்குளிப்போர் அரசனுக்கும் அந்தணருக்குமான காணிக்கை போன்றவை வலுசேர்ப்பவை.வெற்றிகரமான எழுத்தமைவு,நன்றியும் வாழ்த்தும்.

  Liked by 1 person

 4. Dr B Jambulingam சொல்கிறார்:

  முத்துக் குளிப்போருக்கு, முத்தெடுக்கும் போது, கடல் வாழ் உயிரினங்களால், தீங்கு ஏற்படாமல் தடுக்க, கரையில் அமர்ந்து, மந்திரம் ஜெபிப்பர் என்பதும், முத்தெடுப்பு முடிந்ததும் மந்திரக்கட்டு அவிழ்த்துவிடப்படும் என்பதும் வியப்பாக இருந்தது. முத்தின் வடிவம் பற்றி தற்போது தெளிவாக அறிந்தேன். அரிய கட்டுரைக்கு பாராட்டுகள்.

  Liked by 1 person

 5. அரிய விடயங்கள் நண்பரே

  Liked by 1 person

 6. K R A Narasiah சொல்கிறார்:

  நல்லதொரு பதிவு. இத்த்கவல்களில் பலவற்றை நான் எனது கடல் வழி வணிகம் எனும் நூலில் பதிவு செய்துள்ளேன். செங்கடல் வழிகாட்டி என்ற தலிப்பின் கீழ் பெரிப்ளஸ் பற்றிய முழு தகவல்களையும் சொல்லியுள்ளேன் இது யூ ட்யூபிலும் கிடைக்கலாம். சென்ற வருடம், மெட்ராஸ் லிடரரி சொசைடி லைப்ரரியில் பேசுகையிலும் விரிவாக எடுத்துரைத்தேன் உங்கள் பதிவில் நல்ல விஷயங்கள் உள்ளன. வாழ்த்துகள் நரசய்யா

  Liked by 1 person

  • முத்துசாமி இரா சொல்கிறார்:

   தங்கள் நூலான “கடல் வழி வணிகம்” பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். படிக்கவேண்டும். யூ ட்யூப் பார்த்தேன். தங்கள் மேலான வருகைக்கும் சிறப்பான கருத்தினைப் பின்னூட்டத்தில் இட்டதைப் பெருமையாக உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா..

   Liked by 1 person

 7. Praveen N சொல்கிறார்:

  Migavum arumayana padhivu. Mikka nandri Aiyaa.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.