மகாபாரதம் மகரிஷி வேத வியாச முனிவரால் உருவாக்கப்பட்ட இதிகாச காவியம். விநாயகப் பெருமானின் கருணையினால் வியாசர் விவரிக்க விநாயகப்பெருமான் எழுதி முடித்தாராம். இந்தக் கதை ஜனமேஜெயன் என்ற குருவம்சத்து மன்னர் வாயிலாக மக்களுக்குச் சென்றடைந்தது. குழந்தைகளுக்காக எளிமையாகச் சொல்ல நான் மேற்கொண்ட முயற்சி இதுவாகும். பிடித்திருந்தால் உங்கள் கருத்தை எழுதுங்கள். மறக்காமல் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி.
மகாபரதம் ரொம்ப நீளமான புராணக்கதை. இதுக்கு இதிகாசம் அல்லது புராணக் காவியம்னு (Epic) பேரு உண்டு. புராணத்தையும் தத்துவத்தையும் சரியான விகிதத்திலே கலந்து நீளமான கதையா சொல்லியிருக்காங்க.
வேத வியாசர்னு ஒரு மகரிஷி தான் மகாபாரதக் கதையை எழுத நினைச்சாராம். இவருதான் பதினெட்டு புராணத்தையும் எழுதினாருன்னும் சொல்றாங்க. வேதங்கள் எல்லாத்தையும் தொகுத்துக் கொடுத்ததுனாலே இவருக்கு வேத வியாசர்னு பேரு உண்டாச்சாம்.
வேத வியாசருடைய அப்பாவும் ஒரு மகரிஷிதான். அவருக்குப் பராசரர்னு பேரு. முதல் புராணம்னு சொல்ற விஷ்ணுபுராணத்தை எழுதினது இவரு தான். அம்மா பேரு மச்சகந்தி. ஒரு சமயம் யமுனை ஆற்றங்கரைலே இருந்த திட்டில் பராசரரும் மச்சகந்தியும் சந்திச்சுதுக்கு அப்புறமா வேத வியாசர் பொறந்தாராம். இந்தக் கொழந்தை கருப்பாப் பொறந்ததுனாலே கிருஷ்ண த்வைபாயனர் அப்படிங்கற பேரும் இவருக்கு இருந்துச்சாம். இவரை மகாவிஷ்ணுவோட அம்சம்னும் சிலர் நம்பறாங்க.
வேத வியாசனுக்கு மகாபாரதக் கதைய எழுதி வைச்சா எல்லாரும் தெரிஞ்சிக்குவாங்கன்னு நெனச்சு இதிகாசமா எழுத ஆசைப்பட்டாரு. இதுக்காகப் பிரம்மாவை வேண்டித் தவம் செஞ்சாராம். பிரம்மா வியாசர் தவத்தைப் பார்த்து சந்தோசப்பட்டு வியாசர் முன்னாடி காட்சி கொடுத்திருக்காரு.
வியாசனும் தன்னோட விருப்பத்தைச் சொல்லி வேண்டிக் கேட்டிருக்காரு. மகாபாரதத்தை உன்னால எழுத முடியாதுன்னு வியாசன்கிட்ட பிரம்மா சொல்லிட்டாராம். அழுத்திக் கேட்டுக்கிட்டதாலே, விநாயகர் அறிவுக் கூர்மைக்குப் பேர் போனவர் என்கிறதனாலே விநாயகரோட அறிவும், தயவும், தொணையும் இருந்தா சுலபமா எழுதி முடிக்கலாமுன்னு சொல்லி மறைந்சுட்டாரு.
வியாசனும் விநாயகனை நோக்கித் தவம் செஞ்சிருக்காரு. வியாசன் தவத்தைக் கண்டு விநாயகர் மனசு வைச்சு என்ன ஏதுன்னு கேட்டப்போ மகாபாரதத்தை எழுதறதுக்கு விநாயகர் தொணை வேணும்னு வேண்டிக்கிட்டாரு.
விநாயகரும் வியாசனுக்கு உதவறதுக்கு மனசு வெச்சாரு. வேண்டுதலுக்கும் ஒத்துக்கிட்டாரு. வியாசரும் தான் சொல்லும் சுலோகத்தோட அர்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்டு எழுதனும்னு விநாயகர்கிட்ட வேண்டிக்கிட்டாரு. விநாயகரும் ஒரு நிபந்தனைய வெச்சாரு. அந்த நிபந்தனை என்னன்னு தெரியுமா? வியாசர் மகாபாரதக் கதையை வடமொழியில் சுலோகமாகச் சொல்லணும். அப்படிச் சொல்றப்போ எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தாமல் சொல்லணும்கிறதுதான் நிபந்தனை. இது எப்படி இருக்கு? வியாசனும் சரின்னு சொல்லி கதையைச் சொல்லத் தொடங்கினாரு. விநாயகரும் விறுவிறுன்னு எழுத்தாணியால நிறுத்தாமல் எழுத ஆரம்பிச்சாரு.
வியாசர் சுலோகத்தைச் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே விநாயகரும் அர்த்தத்தைப் புரிஞ்சுகிட்டு வேகமா எழுதிக்கிட்டே இருந்தாரு. அடடே இங்க பாருங்க, எழுதின வேகத்திலே, விநாயகரோட எழுத்தாணி கூட ஒடஞ்சு போச்சு! அவ்வளவு வேகம்! விநாயகரும் தான் போட்ட நிபந்தனைய தானே மீறலாமா? அப்படின்னு யோசிச்சாரு. தன்னோட இடதுபக்கதுத் தந்தத்தைச் சடார்னு ஒடச்சு அதைக்கொண்டு மகாபாரதத்தைத் தொடர்ந்து எழுதி முடிச்சிட்டாராம். இதுக்குப் பின்னாடி ஒத்தைத் தந்தத்தோட இருந்ததனாலே விநாயகருக்கு ஏகதந்தான்னு பேரு வந்திருச்சு.
சரி! இப்படி விநாயகரும் வியாசரும் எழுதி முடிச்ச மகாபாரதக் கதை என்னாச்சுன்னு தெரியுமா? இந்தக் கதைய:
வியாசர் தன்னோட மகனான சுகப்பிரம்ம ரிஷிக்குச் சொல்லியிருக்கார்;
சுகப்பிரம்ம ரிஷியோ இந்தக் கதைய கந்தர்வர்களுக்கும் ராட்சசர்களுக்கும் சொன்னாராம்;
இதையே தேவர்களுக்கு நாரதன் சொன்னாராம்;
வியாசரோட சிஷ்யனான வைசம்பாயனர் ஜனமேஜெயன் என்ற அரசனுக்குச் சொன்னாராம். இந்த ஜனமேஜெயன் யாருன்னு தெரியுமா? மகாபாரதத்திலே வர்ற பஞ்சபாண்டவர்களின் வாரிசான பரீட்சித்து மன்னனின் மகனும், அபிமன்யுவின் பேரனும், அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஆவார். கடைசில மனிதகுலம் விளங்குவதற்காக ஜனமேஜெயன் எல்லோருக்கும் சொல்லிவைத்தாராம்.
இப்ப நம்ம எல்லாருக்கும் மகாபாரதக் கதை நல்லாத் தெரியுது.
For English Version of this POST Click Here
குழந்தைகள் எல்லாருக்கும் இந்தக்கதை தெரிஞ்சா நல்லது.
அறியாத தகவல் தெரிந்து கொண்டேன் நண்பரே
LikeLike
வருகைக்கு மிக்க நன்றி ஐயா..
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike