ஆளும்மூட்டில் மாளிகை: மணிச்சித்ரத்தாழு மலையாளத் திரைப்படத்திற்கான கதைக்கரு வழங்கிய பேய் மாளிகை

‘ஆளும்மூட்டில் மேடா,’ என்ற தறவாட்டு மாளிகையின் (பண்டைய கேரளாவின் பாரம்பரிய வீடு) (Tharavad), காரணவர் பொறுப்பிலிருந்த கொச்சு குஞ்சு சாணார் என்ற ஈழவ நிலச்சுவான்தார் அவருடைய மருமகனால் படுகொலை செய்யப்படுகிறார். திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், நிகழ்ந்த கொடூரமான படுகொலையும், பேய் நடமாட்டம் உள்ளதாக நம்பப்படும் மர்ம மாளிகையும் ஒரு பிரபல மலையாளப் படத்தின் திரைக்கதையாகப் புனையப்பட்டுள்ளது. மது முட்டம் (Madhu Muttom) என்ற திரைக்கதை ஆசிரியர் எழுதி, ஃபாசிலின் இயக்கத்தில் படமாக்கப்பட்ட ‘மணிசித்திரதாழு’ என்ற உளவியல் அடிப்படையிலான மலையாளத் திகில் திரைப்படம், இங்கு நடைபெற்ற மர்மமும் சோகமும் நிறைந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அமைவிடம்

‘ஆளும்மூட்டில் மேட, ‘ என்ற தறவாட்டு மாளிகை (பாரம்பரிய வீடு) (Tharavad), கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு (Malayalam: ഹരിപ്പാട്) வட்டம், முட்டம்  (Malayalam: മുറ്റം) கிராமம் (பின்கோடு  690511) அருகே அமைந்துள்ளது. இது வியபுரம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. இந்த இடம் ஹரிபாடிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், ஆலப்புழையிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அமைவிடம்  9°18′0″N அட்சரேகை 76°28′0″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 7 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

நங்கியார்குளங்கரா சந்திப்பிலிருந்து (Nangiarkulangara Junction) மாவேலிக்கரா (Mavelikkara) செல்லும் NH 47 தேசிய நெடுஞ்சாலையில், முட்டம் வனத்தின் வலப்பக்கத்தில், கம்பீரமாக நிற்கும் ஆளும்மூட்டில் பாரம்பரிய மாளிகையை எளிதில் அடையாளம் காணலாம். இதன் பெயர் ஆளும்மூட்டில் மேடா (ஆளும்மூட்டில் பாரம்பரிய இல்லம்) ஆகும்.

நாலுகெட்டு வீடு

கேரளத்தின் தோட்டத்தின் நடுவே கட்டப்பட்ட பாரம்பரிய நாலுகெட்டுத் தறவாட்டில் காலங்காலமாகத் தாய்வழிக் குடும்பத்தினர் வசித்து வந்தனர். கேரளத்துப் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட இந்த செவ்வக வடிவ கட்டுமானத்தில் நான்கு கூடங்களை ஒரு நடு முற்றத்துடன் இணைத்துக் கட்டியுள்ளார்கள். வடக்குக் கூடம் வடக்கினி என்றும், கிழக்குக் கூடம் கிழக்கினி என்றும், தெற்குக் கூடம் தெக்கினி என்றும் மேற்குக் கூடம் படிஞ்ஞாட்டினி (Padinjattini) என்றும் அழைக்கப்பட்டன. சீமை ஓடு வேயப்பட்ட கோம்பைக் கூரை கட்டமைப்பு (Gabled Roof Architecture) இந்த நாலுகெட்டு வீட்டின் தனித்துவம் ஆகும். படிப்புரா (Entrace at the Compound wall), பூமுகம் (Prime Portico), சுத்துத் தாழ்வாரம் (Slope Roofed Verandah), சாருபடி (Charupady = typical wooden windows), ஆம்பல் குளம் (Own Pond for bathing of Family Members), நடுமுற்றம் (Central Courtyard), பூசை அறை, ஆகிய உறுப்புகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த நாலுகெட்டு வீடுகளில் இவர்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்துள்ளனர். கேரளாவில் நாயர் இனத்து நிலச்சுவான்தார்கள் வாழ்ந்த நாலுகெட்டு வீட்டிற்குத் தறவாட் (Malayalam: തറവാട്‌) என்று பெயர். மேல்தட்டு ஈழவர்கள் மற்றும் தீயா இனத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் வாழ்ந்த நாலுகெட்டு வீட்டிற்கு தறவாட் என்றும் மேட (Malayalam: മേട‌) என்றும் பொருள். சத்திரியர்கள் வாழ்ந்த மாளிகைக்கு கோவிலகம் (Malayalam: കോവിലകം) மற்றும் கொட்டாரம் (Malayalam: കൊട്ടാരം) என்று பெயர். நம்பூதிரிகளின் வாழ்விடங்களுக்கு இல்லம் என்று பெயர்.

மருமக்கதாய முறை

மருமக்கதாய முறை (Malayalam: മരുമക്കത്തായ രീതി) என்றால் என்ன? பண்டைய கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ‘மருமக்கதாய முறை’ அல்லது தாய்வழி வாரிசுரிமை (Matrilineal System of Inheritance) என்றொரு முறை வழக்கத்தில் இருந்து வந்தது. இந்த வழக்கத்தின்படி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பரம்பரைச் சொத்து, அக்குடும்பத் தலைவரின் மறைவிற்குப் பிறகு அவருடைய ஆண் வாரிசுகளுக்குப் போய்ச் சேராது. மாறாக அவருடைய சகோதரிகளின் வயிற்றில் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு (மருமக்களுக்குப்) போய்ச் சேரும்.

நம்பூதிரிகள் கேரளத்துப் பிராமணர்கள் ஆவர். கேரளத்தில் 1957 ஆம் ஆண்டளவில் கேரள நில சீர்திருத்தங்கள் தொடங்கும்வரை வரை மலபார் பகுதியில் நிலத்தின் பெரும்பகுதி இவர்கள் வசம் இருந்தது. மதம், அரசியல், சமூகம், பொருளாதாரம், கேரளக் கலாச்சாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மலையாளம் பேசும் நாயர்கள் திராவிடர்கள். நீண்ட காலமாகக் கேரளத்தின் உயர்சாதியைச் சேர்ந்த நம்பூதிரிகளும் நாயர்களும் மருமக்கதாய முறையைப் பின்பற்றி திருமண உறவு வைத்துக் கொண்டனர்.

மருமக்கதாய முறைப்படி நடைபெற்ற திருமணங்களுக்குப் பின்னர் மருமகன் தனது மனைவியின் வீட்டிலேயே தங்கிவிடுவான். திருமணத்தின் பொருட்டு அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் பிரிந்து இன்னொரு குடும்பம் அல்லது வேறு சாதியினரின் கைகளில் போய்ச் சேருவதைத் தடுத்து நிறுத்துவதற்காக, நிலவுடைமைச் சமூக அமைப்பைச் சேர்ந்த உயர்சாதிப் பிரிவினர்களால் உருவாக்கப்பட்டதே மருமக்கதாய முறையாகும்.

திருவாங்கூர் சமஸ்தானம்

திருவாங்கூர் சமஸ்தானம் 1729 ஆம் ஆண்டு தொடங்கி 1949 வரை இந்த மரபில் வந்த ஆட்சியில் இருந்தது. “தி ஐவரி த்ரோன்ஸ் – க்ரோனிக்கல்ஸ் ஆப் தி ஹவுஸ் ஆப் திருவாங்கூர்” (The Ivory Thrones – Chronicles of the House of Travancore. HarperCollins, India, 2016) என்ற நூலை மனு எஸ்.பிள்ளை எழுதியுள்ளார். திருவிதாங்கூரின் நவீன வரலாறு 1731 ஆம் ஆண்டில் மன்னர் மார்த்தாண்ட வர்மா (கி.பி.1729–1758) காலத்திலிருந்து தொடங்குகிறது. அடக்குமுறைகளுக்குப் புகழ்பெற்ற திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பற்றி இந்த நூல் பேசுகிறது. மனு தர்ம விதிப்படி ஆட்சி நடைபெற்ற இந்தச் சமஸ்தானத்தில் வாழ்ந்த ஈழவர் (Malayalam: ഈഴവര്‍) வகுப்பினர்கள் சாணார் அல்லது சாணான் (Channar or Channan) என்ற சாதிப்பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளனர். மக்களை 18 வகைச் சாதியாகப் பிரித்தார்களாம். இதில் சாணார் இனத்தவர்கள் கடைசியாக 18 ஆவது சாதியாகப் பட்டியலிட்டார்களாம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கையேட்டில் (The Travancore State Manual), “துளு பிராமணர்கள் கேரளத்திற்கு வருவதற்கு முன்பு, கேரளாவில் நிகழ்ந்த பௌத்த சமயம் எழுச்சி பெற்ற காலத்தின் போது, “ஈழவர்கள் பெரும் செல்வச் செழிப்புடன் அதிகார மையங்களாகத் திகழ்ந்தனர்,” (The Travancore State Manual vol.II, 845) என்று எழுதியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழவர் என்ற சொல் ஈழம் (இலங்கை) என்ற சொல்லில் இருந்து கிளைத்திருக்கலாம் என்று ஒரு சிலரும், வில்லவர் என்ற சொல்லில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று வேறு சிலரும் கருதுகிறார்கள். இந்தக் குலத்தவர்கள் சேரர் பரம்பரையைச் சேர்ந்த வில்லவர்கள் என்ற இனத்தின் வழித் தோன்றல்கள் என்றும் கருதப்படுகிறது. கேரளத்தின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவிகிதம் கொண்ட ஈழவர்கள் இம்மாநிலத்தின் மிகப்பெரும் இந்துப் பிரிவினராகவும் திகழ்கின்றனர். மலபார் பகுதிகளில் தீய்யா என்று அழைக்கப்படுகின்றனர்.

ஆளும்மூட்டில் தறவாட்

ஆளும்மூட்டில் தறவாட் (Malayalam: ആലുംമൂട്ടിൽ തറവാട്) அல்லது ஆளும்மூட்டில் குடும்பம் என்பது கேரளாவின் திருவிதாங்கூர் மையப் பகுதியைச் சேர்ந்த ஈழவ மேற்குடியைச் சேர்ந்த நில உரிமையாளர் குடும்பம் (Feudal Landlords under Travancore State) ஆகும். திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மன் காயங்குளத்தை வென்ற ஆண்டான கி.பி. 1731 ஆம் ஆண்டிற்குச் சற்று முன்னர் இந்தக் குடும்பம் தலையெடுத்தது. இக்குடும்பத்தில் தோப்பில் (Malayalam:തോപ്പിൽ) பிரிவு, கொக்கட்டீது (Malayalam: കൊക്കാട്ടീത്) பிரிவு, படியெட்டெட்டில் (Malayalam: പറ്റിയിട്ടത്തിൽ) பிரிவு ஆகிய பிரிவுகள் இருந்தன. மருமக்கதாயம் முறை இந்தக் குடும்பத்திலும் பின்பற்றப்பட்டது. ஆளும்மூட்டில் காரணவர் (Malayalam: ആലുംമൂട്ടിൽ കാരണവർ) இந்தக் குடும்பத்தின் தலைவராவார். ஆளும்மூட்டில் தறவாட்டின் நிர்வாகத்தை காரணவர் கவனித்துக் கொண்டார். கொச்சோத்தி சாணார் முதல் கொச்சு குஞ்சு சாணார் வரை நான்கு காரணவர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர்.

இந்த கி.பி. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில், காயம்குளம் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களின்  சேனைகளுக்குப்  போர்வீரர்கள் (Infantry) மற்றும் குதிரைப்படைகளை (Cavalry) சேகரித்து அனுப்பிவைப்பதில் இந்தக் குடும்பம் பெரும் பொறுப்பேற்றிருந்தது. திருவிதாங்கூர் மன்னர்கள் அந்தக் காலத்திலேயே மூன்று அல்லது நான்கு கார்களை வைத்திருந்தார்களாம். தேங்காய் நார் கயிறு வணிகம் புரிந்த ஆளும்மூட்டில் காரணவரும் (Karanavar of Alummoottil) சில கார்களை வைத்திருந்தாராம்.

தீண்டாமை மேலோங்கித் திகழ்ந்த திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், மன்னர் இக்குடும்பத்திற்குச் சாணான் (Channan) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். சாணான் என்பது சாதிப்பெயரோ இனப்பெயரோ அல்ல. இதற்குப் பிறகு ஆண்கள் தங்கள் பெயருடன் சாணான் என்பதைப் பின்னொட்டாக இணைத்துக் கொண்டனர். பெண்கள் சாணாத்தி என்ற பெயரைப் பின்னொட்டாக இணைத்துக் கொண்டனர். திருவிதாங்கூர் அரசர் வழங்கிய பட்டம் ஆகும். ஆளும்மூட்டில் மேட சாணானின் (Channan) பூர்வீக இல்லம் ஆயிற்று. இந்த இல்லத்தை  ஈழவர் குடும்பத்திற்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது திருவிதாங்கூர் மன்னர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

ஆளும்மூட்டில் மேட

ஆளும்மூட்டில் வளாகத்தில் உள்ள முக்கிய மாளிகை 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதும் அளவில் பெரிய கட்டுமானமும் ஆகும்.  இந்த மாளிகையை ஆளும்மூட்டில் கொச்சு குஞ்சு சாணார் என்பவர் கட்டியுள்ளார்.

ஆளும்மூட்டில் மேடா வளாகத்தைச் சுற்றிலும் தற்போது புதர் மண்டியுள்ளது.  எனினும் இங்குள்ள கட்டுமானங்கள் இன்றும் பொலிவுடன் காணப்படுவது வியப்பாக உள்ளது. சில மைல்கள் தொலைவிலிருந்து கூட, வரலாற்றுப் புகழ்பெற்று விளங்கிய இந்த மாளிகையைக் காணமுடிகிறது.

இந்த மாளிகையை ஒட்டி கேரள மரபுப்படி கட்டப்பட்ட அழகான எட்டுக்கெட்டு கட்டடம் ஒன்றைக் காணலாம். மருமக்கதாய முறைப்படி வாழும் கூட்டுக்குடும்பங்கள் இத்தகைய வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளனர். எட்டுக்கெட்டு வீட்டைச் சுற்றி நான்குபுறமும் தாழ்வாரம் அமைத்துள்ளார்கள். தாழ்வாரத்தைச் சுற்றி ‘சாருபடி’ என்ற அழகான மரவேலைப்பாடு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் வசித்த வாழ்விடப் பகுதிகளையும் வாழ்விடம் அல்லாத பகுதிகளையும் இந்த வளாகத்தில் காண இயலும். சிறப்புமிக்க இந்தக் கட்டமைப்புகளின் மறைந்திருக்கும் செல்வத்தையும் செவிவழிக் கதைகளையும் முழுமையாகக் கண்டறிந்து ஆய்வதற்குக் குறைந்தபட்சம் வாரங்களோ மாதங்களோ தேவைப்படும்.

இங்குள்ள ஆண்கள் முதன்மை மாளிகையிலும் பெண்கள் அருகிலிருந்த எட்டுக்கெட்டு மாளிகையில் வசித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இந்தத் தறவாட்டில் பணியாற்றியுள்ளார்கள். இவர்களுக்கெனத் தனி வாழ்விடங்கள் இருந்தன.

பரந்து விரிந்த இந்த வளாகத்தில் நாம் காணும் கால்நடைக் கொட்டடியில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டுள்ளன எனலாம். இங்கு கிடைத்த பால் பொருட்கள்   (diary products) இந்தக் குடும்ப உறுப்பினர்களின் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாளிகைக்கு யார் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

கொச்சு குஞ்சு சாணார் – காரணவர்படுகொலை

கொச்சு குஞ்சு சாணார் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டு வரை காரணவர் பொறுப்பில் இருந்துள்ளார். திருவிதாங்கூர் மன்னன் ஸ்ரீ மூலம் திருநாள் காலத்தில் இவர் இந்தப் பொறுப்பை வகித்து வந்தார். மன்னருக்கும் நெருக்கமாக இருந்தார். இவருடைய தந்திரமும் சமரசமுமற்ற நடவடிக்கைகளால் குடும்பத்தின் நான்கு பிரிவினரிடையே பல பூசல்களும் ஒற்றுமையின்மையும் இருந்தன. காரணவரின் மீது அதிருப்தியும் இருந்தது. இது இறுதியாக 1921 இல் அவரது படுகொலைக்கு வழிவகுத்தது. இதை நேரில் கண்ட சாட்சியான ஒரு வேலைக்காரப் பெண்ணும் படுகொலை செய்யப்பட்டாள். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தவர் அவரது சகோதரியின் பேரனான ஸ்ரீதரன் சாணார் ஆவார். இந்த வழக்கில் ஸ்ரீதரன் சாணாருக்கு அவருடைய 24 ஆம் வயதில், 1922 ஆம் ஆண்டு, மன்னர் மரண தண்டனை வழங்கினார். பள்ளிப்பட்டு குஞ்சுகிருஷ்ணன் எழுதிய ‘ஆளும்மூட்டில் குடும்ப சரித்திரம்’ என்ற புத்தகம் இவர்களின் வரலாற்றை விரிவாக எடுத்துச் சொல்கிறது.

தற்போது ஆளும்மூட்டில் மாளிகையில் பேய் நடமாட்டம் உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த வளாகத்தில் யாரும் வசிக்கவில்லை. இந்த மாளிகை பூட்டிக்கிடக்கிறது. களையிழந்து கிடக்கும் இந்த வளாகத்திற்கு ஆர்வத்துடன் வந்து செல்லும் சுற்றுப்பயணிகளும் வரலாற்று ஆர்வலர்களும் இங்கு நிகழ்ந்த படுகொலை குறித்தும், பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படும் இந்த மாளிகை குறித்தும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

மது முட்டம் – ‘மணிச்சித்திரத்தாழு’ திரைப்படக் கதாசிரியர்

மது முட்டம் (Madhu Muttom) என்ற மது கே. பணிக்கர் மலையாளத் திரையுலகில் ஓரளவு புகழ்பெற்ற எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும் ஆவார். ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாட் வட்டம், ஹரிப்பாட் (Harippaad) என்ற நகரில் பிறந்தவர் ஆவார். மது முட்டம் திருமணமாகாதவர். தற்போது ஹரிபாட் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்.

புகழ்பெற்ற மலையாளத் திரைப்பட இயக்குனரான ஃபாஸில் இயக்கிய ‘மணிச்சித்திரத்தாழு’ (Malayalam മണിച്ചിത്രത്താഴ്) என்ற மலையாள திரைப்படத்திற்காக இவர் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். இந்தப்படத்தின் கதை, ஆளும்மூட்டில் மாளிகையில் நடந்த (படுகொலை) உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது ஆகும். ஒரு மனதாகப் பலராலும் பாராட்டப்பட்ட மணிச்சித்திரத்தாழு இவரது மூன்றாவது திரைப்படமாகும்.

இவருடைய முதல் திரைப்படம் சங்கீத், சோனியா நடித்த ‘என்னென்னும் கண்ணேட்டன்ட’ (Malayalam: എണ്ണും കണ്ണേട്ടന് (1986) என்ற மலையாளத் திரைப்படம் ஆகும். இதையும் ஃபாஸில் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வருஷம் 16’ படத்தில் கார்த்திக், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். ரேவதி மற்றும் அம்பிகா நடித்த கக்கோதிக்காவிலே அப்பூப்பன் தாடிகல் (Malayalam: കാക്കോത്തിക്കാവിലെ അപ്പൂപ്പൻ താടികൾ) (1986) என்ற படம் இவருடைய திரைக்கதையில் வெளிவந்த இரண்டாவது திரைப்படமாகும்.

மணிச்சித்திரத்தாழு திரைப்படத்தின் கதை


நிலச்சுவான்தாரான சங்கரன் தம்பி காரணவர் வெகுநாட்களுக்கு முன்னர் மாடம்பள்ளி தறவாட்டில் (மாளிகையில்) செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். தமிழ்நாட்டிலிருந்து நாகவல்லி என்ற நாட்டியப் பெண்ணை அழைத்து வந்து தன் காமக்கிழத்தியாக ஆக்கிக்கொண்டார். நாகவல்லியின் காதலனான இராமநாதனும் அவளைப் பின்தொடர்ந்து இங்கு வருகிறான். இருவரும் ஓடிப்போகத் திட்டமிடுகிறார்கள். இது தெரிந்த காரணவர் நாகவல்லியை அவளது அறையில் வைத்துப் படுகொலை செய்கிறார். அவளது ஆவியினை மந்திரவாதிகள் துணையுடன் தெக்கினி (மாளிகையின் தென்புறத்து) அறையில் அடைத்துவிடுகிறார். அங்கே அவளுடைய ஆவி உலாவுகிறது. .சில நாட்களுக்குப் பிறகு சங்கரன் தம்பியும் தற்கொலை செய்துகொள்கிறார்.

அதே மாடம்பள்ளி தறவாட்டில் இவருடைய பரம்பரையில் வந்த தம்பி, தன் மனைவி மற்றும் மகள் ஸ்ரீதேவி மகன் சந்துவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஆவிகள் குறித்த மூடநம்பிக்கைகள் உண்டு. தம்பியின் மருமகன் நகுலன் அவர் மனைவி கங்கா ஆகிய இருவரும் விடுமுறையைக் கழிக்க இந்தக் குடும்பத்திருடன் வந்து தங்குகிறார்கள். பாரம்பரியமிக்க இந்த மாளிகையில் தெக்கினி (தென்புறத்து) அறையின் மணிசித்திரதாழு (அலங்கரிக்கப்பட்ட பூட்டைத்) கங்கா திறந்தபோது, பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த நாகவல்லியின் ஆவி கட்டவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து கங்கா, நாகவல்லியின் கதையைத் தெரிந்துகொள்கிறாள். அவள் தன்னை நாகவல்லி என்று நினைத்துக்கொண்டு உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். அமெரிக்காவில் வசித்து வந்த, புகழ்பெற்ற மனநல மருத்துவரான, டாக்டர் சன்னி ஜோசப் தன்னுடைய நண்பனின் வேண்டுகோளை ஏற்று மடம்பள்ளித் தறவாட்டிற்கு வருகிறார். கங்காவின் இரட்டை ஆளுமைச் சிக்கலை (Split Personality) ஊகிக்கிறார். நாகவல்லி குறித்த பழங்கதை (Myth) எவ்வாறு உளவியலுடன் (Psychology) தொடர்பு படுத்தப்படுகிறது என்பது இந்தத் திகில் படத்தின் மீதிக் கதை. சன்னி ஜோசப், கங்காவை ஒரு நடைமுறைத் தந்திரம் மூலம் குணப்படுத்துகிறார்.

பாசில் இயக்கிய இப்படத்தை ஸ்வர்காச்சித்ரா அப்பச்சன் தயாரித்துள்ளார். எம்.ஜி.இராதாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நெடுமுடி வேணு, இன்னசென்ட், வினயா பிரசாத், கே. பி. ஏ. சி. லலிதா, ஸ்ரீதர், கே.பி.கணேஷ்குமார், சுதீஷ், மற்றும் திலகன் ஆகியோரும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் 1993 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படம் வெளியாகி 27 வருடங்கள் ஆகிறது. இன்றும் இப்படத்தைப் பார்ப்பதில் அலுப்புத்தட்டவில்லை. உண்மைச்சம்பத்தை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட இக்கதையைத் திரைப்படம் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பிரபலமான திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. கங்கா / நாகவல்லி பாத்திரங்களை ஏற்று நடித்த ஷோபனாவிற்குச் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

இந்தப் படம் இந்தியில் இந்தியில் பூல் புலையா (Bhul Bhulaiyya – Direction Priyadarshan) என்றும், தமிழில் சந்திரமுகி (Chandramukhi – Direction P Vasu) என்றும், கன்னடத்தில் ஆப்தமித்ரா (Apthamitra – Direction P Vasu) என்றும், வங்க மொழியில் இராஜ்மஹால் (Rajmohol – Direction Swapan Saha) என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

ஒரு வரலாறு திரைப்படமாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது நிறைவாக உள்ளது.

குறிப்புநூற்பட்டி

  1. கேரளத்தில் குடும்ப உறவுகளும், உறவுமுறைச் சொற்களும் ஏ.எம்.சாலன் கீற்று 24 நவம்பர் 2015
  2. ‘சந்திரமுகி’ படத்திற்கு பின் ஒரு பழங்கால வரலாறு – சுவாரஸ்ய தகவல்கள் Daily Hunt
  3. சாணார் விக்கிபீடியா
  4. History of largest community of Kerala Ezhava Facebook
  5. Kerala’s Nalukettus Thulasi Kakkat The Hindu August 18, 2012
  6. Mani chitrathaal Nakarajan Blogspot
  7. Manichitrathazhu Wikipedia

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கேரளா, மலையாளம், வரலாறு and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.