பார்த்திவசேகரபுரம் செப்பேடு: ஆய் மன்னன் கோகருந்தடக்கன் நிறுவிய பார்த்தசாரதி கோவிலும் சாலையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்)

பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885), ஸ்ரீ வல்லப பார்த்திபசேகரன் என்ற பாண்டியர் பெயரைச் சூடிக்கொண்டான். இவன் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

கோகருநந்தடக்கன் முஞ்சிறை கோவில் ஊராளர் சபையினரிடம் நெல் வயலுக்கு ஈடாகக் கொடுத்து பரிவர்த்தனை வாயிலாகக் கோவில் கட்டுவதற்காகப் பெற்ற நிலத்தில், கி.பி. 857 ஆம் ஆண்டு, பார்த்தசாரதிக்குக் கோவில் கட்டினான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். காந்தளூர் சாலை சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தொண்ணூற்றைந்து சட்டர்க்கு (மாணவருக்கு) ஒரு சாலையையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்) உருவாக்கினான். வேதப் பயிற்சி தவிர, ஆயுதப் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டது. கோவில் மற்றும் சாலை ஆகியவற்றை அமைத்த பின்னர், அவை முறையாக நடைமுறைப் படுத்துவதற்காக இம்மன்னன் திட்டமிட்டு உருவாக்கிய நிர்வாக விதிமுறைகள் ஹுஸுர் அலுவலக (பார்த்திவபுரம்) செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சாலைகள் (கல்வி நிறுவனங்கள்) எவ்வாறு செயல்பட்டன என்பதை இச்செப்பேட்டில் இருந்து அறியலாம்.

அமைவிடம்

கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், முஞ்சிறைப் பஞ்சாயத்தில் பார்த்திவபுரம் (பின்கோடு 629171) கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் மார்த்தாண்டம் தேங்காப்பட்டணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகில் அமைந்துள்ள ஊர் புதுக்கடை ஆகும். இதன் புவியிடக் குறியீடு 8°16’30″N அட்சரேகை 77°10’15″E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து 29 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முஞ்சிறையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், மார்த்தாண்டத்திலிருந்து 8.8 கி.மீ. தொலைவிலும், குழித்துறையிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், தொலைவிலும், கோவளத்திலிருந்து 32.1 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 32.6 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 45.9 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 55.5 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் குழித்துறை ஆகும். அருகிலுள்ள விமானநிலையம் திருவனந்தபுரம் விமானநிலையம் ஆகும்.

கோவில் கட்டடக்கலை

பார்த்தசாரதி கோவில் வளாகம் சுமார் 2.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டுமானம் (structure), மூலவர் விமானம், நான்கு தூண்கள் கொண்ட முகமண்டபம் மற்றும்  முகப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மூலவர் விமானத்தைச் சுற்றிச் சுற்றுப் பாதை அமைந்துள்ளது. சுற்றுப்பாதையில் ஒரு மடப்பள்ளி (சமைலறை) மட்டும் உள்ளது.

ശ്രീ പാര്‍ത്ഥിവപുരം പാര്‍ത്ഥസാരഥി ക്ഷേത്രം
பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில்

பாதபந்த அதிஷ்டானம் முதல் சிகரம் வரை விமானம், சதுர வடிவில், கட்டப்பட்டுள்ளது. அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை கருங்கல்லாலும், மேற்கட்டுமானம் செங்கல், சுண்ணாம்பு, சுதையாலும்  கட்டப்பட்டுள்ளது. திராவிடப் பாங்கில் அமைக்கப்பட்ட இந்த முத்தள விமானம் (Three tier vimana), திராவிட விமானத்திற்கு ஒரு சிறந்த  எடுத்துக்காட்டாகும்.

பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் விமானம்

இந்த விமானத்தின் ஆதிதளம் கருங்கல் கட்டுமானமாகவும், இரண்டாம், மூன்றாம் தளங்களும், கிரீவம், சிகரம் முதலிய உறுப்புகளை உள்ளடக்கிய மேற்கட்டுமானம் செங்கல், சுண்ணாம்புக் காரைக் கட்டுமானமாகவும் அமைந்துள்ளன. மேற்கட்டுமானத்தைச் சுதைகள் அலங்கரிக்கின்றன.

பிரதிபந்த அதிஷ்டானம் உபானம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், கம்புகள் தழுவிய கண்டம் பட்டிகை முதலான உறுப்புக்களுடன் அமைந்துள்ளது. அதிஷ்டானத்தின் மீது கருங்கற்களால் ஆன சுவர்ப்பகுதிகள் எழுகின்றன. சுவரின் சில பகுதிகளில் சுண்ணாம்புக் காரை பூசப்பட்டுள்ளது. அரைத்தூண்களால் பகுக்கப்பட்டுள்ள வெளிப்புறச் சுவரின் பத்திகளின் மையங்களில் கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. கர்ணம்-சாலை-கர்ணம் என்ற முறையில் பத்திப்பிரிப்பு மிகவும் நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளது. சாலைகள் கோட்டங்கள் பெற்றுள்ளன. கோட்டங்களில் கடவுளின் உருவங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

கருவறையின் வடபுறச் சுவரின் குமுதத்தில் திருமுழுக்காட்டு நீர் செல்லும் கோமுகி சிம்ம முக வடிவில் (Simha Pranala) வளைந்த தாமரை மொட்டு முனையுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோமுகிக்குக் கீழே ஒரு பூதகணம் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.

தூண்களின் மீதுள்ள போதிகைகள் உத்தரம் தாங்குகின்றன. போதிகைக்கு மேல் வாஜனமும், அதற்கு மேலுள்ள வலபியில் பூதகணங்களும் காட்டப்பட்டுள்ளன. இதன்மீது மேலே கபோதத்துடன் கூரைப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. கபோதம் விமான கோட்டங்கள் தாண்டி மண்டபக் கோட்டங்கள் வரை நீட்சி பெற்றுள்ளது. கபோதத்தில் அமைந்துள்ள நாசிக்கூடுகளில் சிற்றுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கபோதத்திற்கு மேல் பூமிதேசத்துடன் தரைத்தளம் முடிவு பெறுகின்றது. பூமிதேசத்தில் யாளிவரி அமைக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம்  தளங்களில் கர்ணக்கூடு, பஞ்சரம், சாலை, பஞ்சரம், கர்ணக்கூடு என்னும் வரிசையில்  உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. விமானத்தின் இரண்டாம் தளத்தின் நாற்புறங்களிலும் சாலைக் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கில் யோகநரசிம்மன், வடக்கே பிரம்மன், கிழக்கில் இந்திரன் ஆகிய தெய்வங்களின் சுதை வடிவங்களைக் காணலாம். இரண்டாம் தள ஆர உறுப்புகளுக்குப் பதிலாக மூலைகளில் ஒன்றையொன்று பக்கவாட்டில் நோக்கியபடி இரண்டிரண்டாக எட்டு சிங்கங்கள் உள்ளன.

தெற்கு, வடக்கு மற்றும் மேற்குத் திசைகளில் உள்ள நுழைவாயில்கள் வழியாக முகமண்டபத்திற்குள் நுழையலாம். தென்புற வாயிலை ஒட்டி மடப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்துடன் இணைக்கப்பட்ட  சிறு முகப்பை இரண்டு தூண்கள் தாங்குகின்றன. முகப்பின் தளத்தை அடைவதற்கு நான்கு படிக்கட்டுகள் உதவுகின்றன.

முகப்பின் முன்பு காணப்படும் நமஸ்கார மண்டபம் பிற்காலத்து இணைப்பாகும். நமஸ்கார மண்டபத்திற்கு மேல் கூரை இல்லை. இம்மண்டபத்தின் நான்கு புறங்களிலும் கருங்கல் தூண்களைக் காணலாம். மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் மரத்தூண்களை அமைத்து மர அலங்கார வளைவுகளால் இணைத்துள்ளனர். மரத்தால் ஆன உத்தரங்களும் குறுக்குச் சட்டங்களும் இணைக்கப்பட்டு நமஸ்கார மண்டபத்தின் மீது கூரை அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயிலை ஒட்டி அழகான பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற திருச்சுற்றுப்பாதையில், அம்பாடி கண்ணன், காந்தேஸ்வர சிவன், வடக்கப் பெருமாள், வராஹமூர்த்தி, நரசிம்மன் மற்றும் அய்யப்பன் ஆகிய தெய்வங்களுக்குத் தனித் துணைக் கோவில்கள் உள்ளன. இங்கு நாகருக்குத் தனி பீடம் இருப்பது சிறப்பு. ஆனால் தாயாருக்கென்று தனிக்கோவில் எதுவும் இல்லை. கருடாழ்வாருக்கென்றும் இங்கு சன்னதி கிடையாது.

சாலை: பெயர்க்காரணம்

சாலா (Sanskrit:  शाला) என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “வீடு,” “தங்குமிடம்,” “வீடு” அல்லது வேறு சில வகையான கட்டிடங்கள் என்று பொருள். யோகா சாலா என்றால் யோகப் பயற்சியினைக் கற்பிக்கும் இடம். வேதபாடசாலா என்றால் வேதங்களைக் கற்பிக்கும் பள்ளி. புத்தபிக்குகள் அறநெறிகளைக் கற்பித்த மடாலயங்களும் பாடசாலை என்றே அழைக்கப்பட்டன. வேதசாலா (Sanskrit: वेदशाला) என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானியல் ஆய்வுக்கூடம் (English: Observatory) என்ற பொருளும் உள்ளது.  கி.பி. 1725 ஆம் ஆண்டில் இரண்டாம் மகாராஜா ஜெய் சிங் அவர்களால் கட்டப்பட்ட ஒரு ஆய்வகத்திற்கு உஜ்ஜைனி வேத சாலை (Ujjain Vedh  Shala) (ஜந்தர் மந்தர்) என்று பெயர்.

‘சாலா’ என்ற சமஸ்கிருதச் சொல், தமிழில் சாலை என்று வழங்கப்படுகிறது. மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் அறச்சாலை என்ற சொல்லுக்கு உண்டியும், உடையும், உறையுளும் வழங்கும் சாலை என்று பொருள். முதலாம் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியில் இடம்பெறும்  ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி” என்ற தொடருக்கு, ‘சேரர்களின் காந்தளூர் சாலையில் கலம் (உணவளித்தல் அல்லது உணவளிக்கும் சாலை) நிறுத்தப்பட்டது (discontinued the kalam (by implication, the feeding) in Kandalur salai (or the feeding house at Kandalur),’ என்று திரு. டி.ஏ. கோபிநாதராவ் பொருள் கொள்கிறார். கலம் என்பது ஒரு மாணவருக்கான உணவுச்செலவைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம் என்றும்,’காந்தளூர் உணவளிக்கும் இடத்தில் பிராமணர்களுக்கு உணவளிப்பதை கட்டுப்படுத்துதல் [சாலை]” (“regulation of the Brahmin feeding at Kandalur Feeding House [salai]”),’ என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கருதுகிறார். ‘காந்தளூரில் ஆயுதமேந்திய பிராமணர்களுக்கு [சத்தர்] உணவளிப்பதை நிறுத்தியது / அழித்தது (“discontinued/destroyed the feeding [kalam] of the armed Brahmins [Chathar] at Kandalur”),’ என்று எளம்குளம் பி.என். குஞ்சன்பிள்ளை (Elamkulam P. N. Kunjan Pillai) கருதுகிறார். கலம் என்பது இங்கு ‘Stipend- கல்வி உதவித்தொகை’யைத்தான் குறிக்கிறது. அருளிய என்பது மாணவர் ஒவ்வொருவருக்கும் சரியான விகிதத்தில் பிரித்துக்கொடுத்ததைத்தான் குறிக்கிறது என்று செந்தீ நடராசன் கருதுகிறார்.

கேரளத்துக் கோவில்களில் இடம்பெற்ற பூசை முறைகள் தாந்த்ரீக முறையில் நடைபெற்றன. கோவிலோடு இணைந்திருந்த வேதபாடசாலைகளில் தாந்த்ரீக வேதமான அதர்வண வேதத்தையும் இணைத்துக் கற்பித்தார்கள். ஆய் நாட்டில் உருவாக்கப்பட்ட காந்தளூர் சாலையிலும், பார்த்திவசேகரபுரம் சாலையிலும் மாணவர்களுக்கு குருகுல முறையில் இத்தகைய உயர்கல்வி வழங்கப்பட்டது. இவற்றில் வழங்கப்பட்ட உயர்கல்வி தனித்தன்மை வாய்ந்தது. இன்றைய இந்திய நிர்வாகப் பணிக்கான (Indian Civil Service) பயிற்சியை ஒத்தது எனலாம்.

காந்தளூர்ச் சாலை இருந்தது எங்கே? கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டிக் கேரள மாநிலத்தில் நெய்யாற்றங்கரை அருகே அமைந்துள்ள காந்தளூர் என்று திரு.கே.வி.சுப்பிரமணிய அய்யர் உள்ளிட்ட ஒரு தரப்பினர் அடையாளம் கண்டனர். உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காந்தளூர் பற்றி திரு. எஸ்.இராமச்சந்திரன் விவத்தித்துள்ளார். இதற்கான சான்றுகள் எதுவுமில்லை. திருவனந்தபுரம் நகரின் ஆரியசாலையை அடுத்து வலியசாலையில் அமைந்துள்ள காந்தளூர் மகாதேவா கோவிலில் இந்தச் சாலை செயல்பட்டிருக்கலாம் என்று திரு. டி.ஏ. கோபிநாதராவ் கருதுகிறார். கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அனந்தபுரி வர்ணனம் என்ற சம்ஸ்கிருத நூலில் ஆரியசாலை குறித்த வர்ணனை இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதி பிராமணர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்துள்ளது. திரு. கெ.சிவசங்கரன்நாயர் என்ற ஆய்வாளர், காந்தளூர்ச்சாலை வேதபாடசாலை, ஆரியசாலை, செந்திட்டை, வலியசாலை ஆகிய பகுதிகளுக்கு நடுவே இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார். இப்பகுதியில் பழைய சாலா, ஆர்ய சாலா, வலிய சாலா, சின்ன சாலா ஆகிய நான்கு சாலைகள் இருந்துள்ளன என்று தெரிகிறது. மலைப்புரம் மாவட்டம் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூரே இந்தச் சாலை அமைந்திருந்த காந்தளூராக இருந்திருக்க வேண்டும் என்று திரு.எஸ்.இராமச்சந்திரன் கருதுகிறார்..

பார்த்திவசேகரபுரம் சாலையின் மாணவர்கள் சட்டர் (cattar) என்றும், ஆசிரியர்கள் அல்லது மூத்தவர்கள் சட்டப்பெருமக்கள் (cattaperumakkal) என்றும் அழைக்கப்பட்டனர். சட்டர் என்ற சொல்லை சில அறிஞர்கள் சாத்திர (English Shastra Sanskrit शास्त्र) என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் தொடர்பு படுத்துவர்.

சட்டர்கள், வேதங்கள், மற்றும் மீமாம்சை (One of the six systems of Indian Philosophy), வியாகரணம் (Grammar), பௌரோஹித்யம் (Ritual) ஆகிய வேத தத்துவ தரிசனங்களை, நன்கு கற்றுத் தேர்ந்த மாணவர்கள் ஆவர் . இந்தச் சட்டர்கள் ஆயுதம் ஏந்தவும் போரிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். யஜுர் வேதத்தின் அங்கமான தனுர்வேதம், போர்க்கலைகளில் ஒன்றான வில்வித்தை குறித்து விவரிக்கிறது. அஸ்திர சாலைகள், இது போன்ற பயிற்சிகளை அளித்து வந்தன. முடியாட்சி (Monarchy), அரசாட்சி முறை (Governance), பொது நிர்வாகம் (Public Administration), போர் வியூகம் (War Strategy), போர்க்கலை (Martial arts), ஆகிய எல்லாவற்றையும் வேத நூல்கள் வாயிலாகவும் நடைமுறைப் பயிற்சிகள் மூலமும் சட்டர்களுக்குக் கற்றுத் தந்த கல்விச் சங்கமே (Academy) சாலை ஆகும். தற்காலத்தில் இருப்பதுபோல இராணுவம், பொது நிர்வாகம் ஆகிய இரண்டு துறைகளுமே தனித்தனியாக இல்லாமல் ஒரே துறையாகத் திகழ்ந்தது. இராணுவம் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய இரண்டு துறையிலும் சட்டர்கள் பயிற்சியும், திறனும் பெற்றுச் சிறக்க முயன்றனர்.

பண்டைய கேரளத்தில் நிலங்கள் கோவில்களுக்குச் சொந்தமானதாகும். கிராமங்களில் இருந்த கோவில்களை ஊர்ச்சபையினர் பராமரித்தனர். நிதி, நீதி, பொதுநிர்வாகம் ஆகியவை கோவிலை மையமாகக் கொண்டு ஊர்ச்சபையுடன் இணைக்கப்பட்டடிருந்தன. இவை உள்ளாட்சி முறையின் அடிப்படை அலகுகளாகத் திகழ்ந்தன. முஞ்சிறை சபையினர் ஆய் நாட்டில் பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவிலுக்கான நிலத்தை அளிப்பதில் பெரும் பங்குவகித்தனர். இக்கோவிலோடு இணைத்துப் பராமரிக்கப்பட்டிருந்த இந்தச் சாலை எவ்வித அரசியல் குறுக்கீடுமின்றிச் சுதந்திரமாக நடைபெற்றது. அரசனின் முழு ஆதரவு கிடைத்தது. சாலாபோகம், தேவதானம் போன்ற நிவந்தங்கள் சாலைகளுக்கு அளிக்கப்பட்டன. சட்டர்கள் சாலையில் குருகுல முறையில் தங்கி கல்வி பயின்றனர். இவர்களுக்கு உணவும், உடையும், உறைவிடமும், தரப்பட்டது.

கேரள வரலாற்றறிஞர் திரு. எம்.ஜி.எஸ். நாராயணன் அவர்கள் காந்தளூர்ச்சாலை என்பது பிராமணர்களுக்குப் போர்ப் பயிற்சி – நிர்வாகப் பயிற்சி வழங்கிய கல்விச் சாலையாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார். காந்தளூர்ச் சாலையில் போர்ப் பயிற்சியும் நிர்வாகப் பயிற்சியும் பெற்ற மாணாக்கர்கள் க்ஷத்திரிய வர்ணத்தவராகவே இருந்திருக்க வேண்டும். பார்த்திவசேகரபுரம் சாலையைப் போன்று த்ரைராஜ்ஜிய வ்யவஹாரத்துக்குரிய பிராமண மாணவர்களுக்குப் பயிற்சியளித்த நிறுவனமாக இது இருந்திராது என்று தொல்லியல் அறிஞர் திரு. எஸ்.இராமச்சந்திரன் ஊகிக்கிறார் .

களரிப் பயிற்சி

சாலைகளில் சட்டர்களுக்குப் போர்ப்பயிற்சியாக, களரிப் பயிற்சி தரப்பட்டிருக்கலாம். களரிப் பயிற்சியில் மல்யுத்தம், வாள் பயிற்சி, சிலம்பம் போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்ட கோடாலி, மழு போன்ற ஆயுதங்களையும் இக்கலையில் பயன்படுத்தினர். உடலில் மறைந்திருக்கும் முக்கியமான வர்மங்களைக் கணித்து அந்த இடத்தில் எதிரியைத் தாக்கி நிலை குலையச் செய்யவும் களரியில் கற்றுத்தரப்பட்டது. களரி பயிற்சி பெற்ற மாணவர்கள் சட்டர்கள் எனப்பட்டனர். இச் சாலைகளுக்கு தலைமை ஏற்றவர்கள் பட்டதிரி எனப்பட்டனர். அரசர்கள் சாலைகளுக்கு சாலாபோகமாக நிலங்களைத் தானமாக வழங்கினர்.

பல்லவர்களின் காஞ்சிக் கடிகை

தென்னிந்தியாவில் கடிகைகள் வடமொழிக் கல்விச் சங்கங்களாகத் (Academy) திகழ்ந்தன. தட்சஷீலா (கி.மு. 5 – கி.பி. 5 நூற்றாண்டு, பஞ்சாப், பாகிஸ்தான்) , நாளந்தா (கி.பி. 5 – கி.பி. 12, நூற்றாண்டு, பீகார்), விக்ரமஷிலா (கி.பி. 8 – 13 நூற்றாண்டு, பீகார்),   போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே, காஞ்சிக் கடிகை ஒரு வேதாகமப் பல்கலைக்கழகமாகவும் புகழ் பெற்றிருந்தது. காஞ்சிக் கடிகை காஞ்சிபுரத்தின் மேம்பட்ட வேதக் கல்வி மையம் (Advanced Vedic Education Centre) என்று பரவலாக மதிக்கப்பட்டது.  கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து காஞ்சிக் கடிகை பல்லவர்களின் முடியாட்சி (Monarchy), இறைமாட்சி, ஆட்சி அமைப்பு முறை (Polity), அரசியல் (Politics), அமைச்சு (Ministry), படையியல் (Military), குடியியல் (Civics) போன்ற துறைகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது. 

கி.பி. 4 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில், சத்தியசேனன் என்னும் அரசனிடமிருந்து காஞ்சிக் கடிகையைக் கைப்பற்றினான்  (தென்னிந்திய கல்வெட்டுகள் – தொகுதி II, பகுதி- III – பக்கம் 349). கடம்ப குல மன்னன் மயூரவர்மன், கி.பி. 4 ஆம் நூற்றாண்டளவில்,  குரு வீரசன்மனிடம் மேம்பட்ட கல்வி கற்பதற்காகக் காஞ்சிபுரத்திலிருந்த காஞ்சிக் கடிகை சென்ற செய்தியினை தலகுண்டாச் செப்பேடு குறிப்பிடுகிறது. வேலூர் பாளையம் கல்வெட்டு காஞ்சிக் கடிகையின் மறுமலர்ச்சி மற்றும் கட்டுமானம் பற்றியும் நரசிம்ம பல்லவன் காஞ்சிக் கைலாசநாதர் கோவில் கட்டியது குறித்தும் குறிப்பிடுகிறது (தென்னிந்தியக் கல்வெட்டு தொகு I, பகுதி V). சாளுக்கிய மன்னன்   விக்ரமாதித்ய சத்யஸ்ரயாவின் (கி.பி. 533 -545) காஞ்சி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு காஞ்சிக்கடிகை பற்றிக் குறிப்பிடுகிறது. (எபிகிராபிகா இண்டிகா – தொகுதி III, பக்கம் – 360). காஞ்சிபுரத்தில் நான்கு வேதங்கள் கற்பிக்கப்பட்டது பற்றி  நந்திவர்மப் பல்லவனின் (கி.பி. 826 – 849) காசாக்குடி செப்பேடு  குறிப்பிடுகிறது.

சாலைகள்

பண்டைய கேரளத்தில் சாலைகளை அமைப்பதிலும், மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் ஆய் மற்றும் சேர நாடுகளின் அரசர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஆய் மற்றும் சேர நாட்டு அரசர்கள் பொறித்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் சாலைகளைப் பராமரிப்பதற்காக மேற்கொண்ட முறைமை பற்றிய செய்திகளைத் தருகின்றன. கந்தளூர் சாலை, பார்த்திவபுரம் சாலை, ஸ்ரீவல்லபப்பெரும்சாலை அல்லது இராஜராஜப்பெரும்சலை, திருவல்லா சாலை மற்றும் மூழிக்குளம் சாலை ஆகியவை மிக முக்கியமான சாலைகள் ஆகும். இவற்றுள் காந்தளூர், பார்த்திவபுரம் மற்றும் ஸ்ரீவல்லபப்பெரும்சாலை  ஆகியவை ஆய் மன்னர்களின் (கி.பி 788 – 925)  காலத்தில் தோன்றியவை ஆகும். திருவல்லா மற்றும் மூழிக்குளம் சாலைகள் சேரமான் பெருமாள் /  குலசேகரர்கள் (கி.பி 800 – 1102) காலத்தில் தோன்றியவை ஆகும்.

முதலாம் இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி காந்தளூர் சாலை குறித்தும், பாஸ்கர ரவிவர்மனின் திருமூழிக்குளம் கல்வெட்டு மூழிக்குளம் சாலை குறித்தும், திருவல்லா செப்பேடு திருவல்லா சாலை பற்றியும்,  இவற்றின் பராமரிப்புக்கான ஏற்பாடுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளன. இந்த ஆவணங்களில் சாலைகளின் அன்றாட நடவடிக்கைகள், கல்வி முறை போன்றவை பற்றிய குறிப்புக்கள் இல்லை.

பார்த்திவசேகரபுரம் சாலை பற்றி ஹுஸூர் அலுவலகச் செப்பேடுகள் கூறும் செய்தி

பிற்காலத்து ஆய் மன்னர்கள் (Later Ay kings) வெளியிட்ட ஆறு உதிரிச் செப்பேடுகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகத் திகழ்ந்த திருவனந்தபுரத்தின் அரசாங்கத்  தலைமை அலுவலகத்தில் கண்டறியப்பட்டன. இவற்றுள் ஒரு செப்பேட்டில் ஆய் மன்னன் விக்கிரமாத்தித்திய வரகுணன் வெளியிட்ட சாசனம் முழுமையாக இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள ஐந்து செப்பேடுகளில் ஆய் மன்னன் கோகருநந்தடக்கன், கி.பி. 866 ஆம் ஆண்டு, வெளியிட்ட சாசனம் இடம்பெற்றுள்ளது. இந்த ஐந்து செப்பேடுகள், இந்தச் சாசனத்துடன் தொடர்புடையவை என்றாலும் சாசனம் முழுமை பெறவில்லை.  இந்தச் சாசனத்தின் முதற்செப்பேடும், இறுதிச் செப்பேடும் கிடைத்துள்ளன. மற்ற மூன்று செப்பேடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றுக்  காணப்பட்டன. இந்த ஐந்து சாசனங்களையும் எழுதியது (scriber) ஒருவரல்ல, இரண்டு பேர். ஹுஸுர் அலுவலகச் செப்பேடு (Huzur Office Plates) என்றும் பார்த்திவசேகரபுரம் செப்பேடு என்று பெயரிடப்பட்ட இந்தச் செப்பேட்டை,  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தொல்லியல் துறையில் பணியாற்றிய திரு டி.ஏ. கோபிநாதராவ், படித்துத் தொகுத்துத் திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை எண் ஒன்றாக (1910-1913) தொகுத்து வெளியிட்டார்.

பல்லவர் காலத்துத் தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட இந்தச் செப்பேடு, பார்த்திவசேகரபுரம் கோவிலில் சாலை உருவாக்கப்பட்ட செய்தியினையும், சாலையின் அமைப்பைப் பற்றியும் விவரிக்கிறது.

மேலே இங்கு குறிப்பிட்ட சாலைகள் யாவும் ஆய் மற்றும் சேரமான் பெருமாள் / குலசேகரர் நாட்டின் பகுதிகளில் இடம்பெற்றிருந்தன. எனினும் மற்ற சாலைகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு, ஹுஸூர் அலுவலகச் செப்பேட்டில் பதிவிடப்பட்ட பார்த்திவசேகரபுரம் சாலையின் செயல்பாடுகளைத் தொடர்புபடுத்திப் புரிந்தகொள்ள முடிகிறது. ‘தென்னகத்தின் நாளந்தா’ என்று அறியப்பட்ட காந்தளூர் சாலை, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது. காந்தளூர்ச் சாலை பற்றி இந்தச் செப்பேடு குறிப்பிடுவதன் வாயிலாக அதன் புகழும்  தகுதியும் சுட்டிக்காட்டப்படுகிறது. பார்த்திவபுரம் சாலையில் கற்பிக்கப்பட்ட கல்வி முறை குறித்து ஹுஸூர் அலுவலகச் செப்பேடு குறிப்பிட்டுள்ளது. பார்த்திவபுரம் சாலை, காந்தளூர் சாலையின் விதிகளை  முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இச்செப்பேடு குறிப்பிட்டுள்ளது.

கருநந்தடக்கனின் ஹுசூர் அலுவலகச் செப்பேடுகள், பார்த்திவபுரம் கோவில் மற்றும் பார்த்திவபுரம் சாலை ஆகியவற்றின் அனைத்துச் செயல்பாடுகளையும் விவரிக்கும் அதிகாரப்பூர்வமான ஆவணமாகும். பார்த்திவபுரம் சாலையில் கடைப்பிடிக்கத் தக்க நிர்வாகம், கல்வி முறை (educational system), விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் (rules and regulations), நடத்தை விதி முறைகள் (Code of Conduct) பற்றிய விரிவான செய்திகளை இவை வழங்குகின்றன.

ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக்கோட்டுநாள் பதினான்கு நூறாயிரத்தி நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்ற நாள் | கோக்கரு நந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைந்து
முடாலநாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச்சவையாருடைய உழக்குடி
[வி]ளை என்னு நிலம் இவகளுக்கு அடிக்கடி நிலைக்குடுத்து மாறிக்கொண்டு இந்நிலம் பிடிசூ
ழ்ந்து ஸ்ரீ கோயில் எடுத்து விஷ்ணுபட்டாகரை பிரதிஷ்டை செய்து பார்த்திவசேகரபுரம் எ
ன்று பேர் இட்டு காந்தளூர் மர்யாதையால் தொன்னூற்று ஐவர் சட்டர்க்குசா
லையுஞ் செய்தான் ஸ்ரீ கோகரு நந்தடக்கன் |

முதல் செப்பேடு : முதல் செப்பேட்டில் தேதி / நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாசனம் கலியுகக் கோட்டுநாள் பதினான்கு நூறாயிரத்தி நாற்பத்து ஒன்பதாயிரத்து எண்பத்து ஏழு (1449087) ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்தது. இந்த நாள் கோகருநந்தடக்கனின் ஆட்சியாண்டு ஒன்பது, நாள் பதினைந்து ஆகும். கலியுகம் கி.மு. 3101- ஆம் ஆண்டு தொடங்கியது என்பது நமக்குத் தெரியும். கலி அப்தம் 3967 ஆம் ஆண்டு கற்கடக மாதம் 15 ஆம் நாளுக்கு இணையான ஆங்கிலத் தேதி கி.பி. 866 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் நாள் ஆகும். பார்த்திவசேகரபுரம் செப்பேடு என்னும் ஹூசூர் அலுவலக ஏட்டை (Huzur Office Inscription) ஆய் மன்னர் கருநந்தடகன் (கி.பி 857-83) கி.பி. 866 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் நாளன்று (கொல்லவர்ஷம் 41) வெளியிட்டான்.

கோகருநந்தடக்கன், முஞ்சிறை கோவில் ஊராளர் சபையினரிடம் நெல் வயலுக்கு ஈடாகக் கொடுத்துப் பரிவர்த்தனை வாயிலாகக், கோவில் கட்டுவதற்கான நிலத்தைப் பெற்றுக்கொண்டான். இந்த ஊரின் எல்லைகளை முடிவுசெய்து, பார்த்திவசேகரபுரம் என்று பெயரிட்டான். இவ்வாறு நிர்மாணித்த இந்த ஊரில் விஷ்ணுபட்டாகரர்க்கு (திருமால்) ஒரு கோவிலைக் கட்டினான். கி.பி. 857 ஆம் ஆண்டு இந்தக் கோவிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பார்திவசேகரபுரம் கோவிலுடன், காந்தளூர் சாலை மரியாதையால் (சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு) தொண்ணூற்றைந்து சட்டர்க்கு ஒரு சாலையையும் அவர் உருவாக்கினான். சட்டர் என்ற சொல்லை சாஸ்த்திர என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் தொடர்பு படுத்துகிறார்கள்.

சாலை என்றால் தொண்டாற்றும் ஒரு பொது நிறுவனம் (Salai means a public institution of charitable nature) என்று டி.ஏ.கோபிநாத ராவ் பொருள் கொள்கிறார். மரியாதை என்றால் (Custom or rules of society) பல காலமாக வழங்கி வருவதால் எழுதப்படாத சட்டம் என்று பொருள். சட்டர் என்ற சொல்லை சாஸ்த்திர என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் தொடர்பு படுத்துகிறார்கள். சட்டர் என்ற சொல் குறிப்பிட்ட ஒரு வேதத்தில் மட்டுமின்றி வியாகரணம், மீமாம்சை, பெரோஹித்தியம் ஆகியவற்றிலும் கல்வித் திறம் பெற்றிருந்த ஒருவரைக் குறிப்பிடுகிறது. சட்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த சாலையைப் பராமரிக்க சாலாபோகத்திற்கு விடப்பட்ட நிலங்கள் தவிர, தேவதான நிலங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. கோவில் நிர்வாகம், இந்தச் சாலையின் வசம் இருந்தது. இதன் வாயிலாக சட்டர்கள் வெறும் வேதக்கல்வி கற்றுவந்த மாணவர்கள் என்று கருதமுடியவில்லை. சாலையில், முடியாட்சி (Monarchy), அரசாட்சி முறை (Governance), பொது நிர்வாகம் (Public Administration), போர் வியூகம் (War Strategy), போர்க்கலை (Martial arts), குறித்த கல்வி பயின்றதாகக் கொள்ளலாம். பெண் யானையை நடக்கவிட்டு எல்லைகள் வகுத்தல் மிக முக்கிய சடங்காக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யானை நடந்து சென்ற இடத்தின் பரப்பளவினை கோவிலுக்கு நிலக்கொடையாக அளிக்கப்பட வேண்டும் என்று இச்செப்பேடு குறிப்பிடுகிறது. யானையின் உருவமே ஆய் அரசின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டதற்கு இந்த நிகழ்வுகூட காரணமாக இருக்கலாம்.

பார்த்திவபுரம் சாலையில் கற்பிக்கப்பட்ட கல்வி முறை குறித்து ஹுஸூர் அலுவலகச் செப்பேடு குறிப்பிட்டுள்ளது. பார்த்திவபுரம் சாலை, காந்தளூர் சாலையின் விதிகளை  முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இச்செப்பேடு குறிப்பிட்டுள்ளது. ஹுஸூர் அலுவலகச் செப்பேட்டில் குறிப்பிடப்படும் கல்வி முறையே காந்தளூர் சாலையிலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். கோகருநந்தடக்கன் இதே கல்வி முறையை பார்த்திவபுரத்திலும் அமுல்படுத்தியிருக்க வேண்டும்.

இரண்டாம் செப்பேடு :

அகநாழிகைப் பணிசெய்வார் படா
ரரை ஆட்டப் பொழுதிற் பந்நிரு குடநீராக முப்ப
[த்த] குடநீர் குடுப்பது | பூ இடுவான் குணந்த பூ இரண்டையுமாலையுங் கட்
டிக் குறைவறக் குடுப்பது |

கோவிலின் கருவறையில் பணிபுரியும் ஊழியர்கள்   36 குடங்களில் திருமேனிகளை முழுக்காட்டுவதற்கான நீரை, இரண்டு முறை எடுத்து வரவும், பூக்காரன் மலர் மாலை மற்றும் இண்டைகளைத் தவறாது கட்டித்தரவும், நந்தா விளக்கெரிப்பதற்கான எண்ணெய்க்காக அளிக்கப்பட்ட நிலக்கொடை குறித்தும் குறிப்பிடுகிறது.

விழாப்புறமாக ஏழுநாடிருவிழாச்செய்து பங்குனி வியாகம் ஆறாடுவதாகவும் | சட்டப்பெருமக்களும் பணிமக்க
ளும் ஏழுநாளும் படி இரட்டி ஆணியம் பெருவதவு | மற்றும் விழவினுக்
குவேண்டுவதுக்குமாக

கோவிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முடியும்படியாக ஏழு நாட்களுக்கு விழாக் கொண்டாடப்படவேண்டும். ஏழாம் நாள் விசாக நட்சத்திரத்தன்று திருமேனியை முழுக்காட்ட வேண்டும். இதற்காக சட்டர்பெருமக்களுக்கும் (மூத்த சட்டர்கள்) பணிப்பெருமக்களுக்கும் இந்த ஏழு நாட்களுக்கும் இருமடங்கு ஊதியம் வழங்கப்படவேண்டும். இந்த விழாவினை நடத்துவதற்காக நிலம் நிவந்தமாக வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது செப்பேடு :

அகநாழிகைப் பணிசெய்வார் (கோவில் அர்ச்சகர்), சாந்தி செய்வான், பஞ்சகவ்யம் தெளிப்பான், பூத்தொண்டு செய்வான், இசைக்காரர் ஆகிய கோவில் ஊழியர்களின் ஊதியத்திற்காக நிலங்கள் நிவந்தமாக ஒதுக்கப்பட்டது. சாலையின் வாழ்வாதாரத்திற்கும் பராமரிப்பிற்கும் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலம் சாலபோகம் (கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்) மற்றும் தேவதானம் (அரசன் கோவிலுக்கு என்று கொடையாகத் தரும் நிலங்கள்) என்று அழைக்கப்பட்டன. இதற்காக  வழங்கப்பட்ட கிராமங்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் அல்லது நெல் வயல்கள் ஆகியவற்றைக் குத்தகைக்கோ (lease) வாடகைக்கோ (rent) கொடுக்கப்படுவதுண்டு. “அனேகாயிரம் கலம்பாடு நிலம்” (“anekayiram kalampadu nilam”)  வழங்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. ஒரு பரா என்பது கேரளாவில் அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை அளக்கப் பயன்படும் அளவீட்டுப் பாத்திரம் ஆகும். ஒரு கலம் = பத்து பரா ஆகும். பரா பாத்திரங்கள் பித்தளையில் செய்யப்பட்டவை ஆகும்.

பார்த்திவபுரம் சாலையில், படைகலன்கள் (military weapons) பற்றிச் செப்பேட்டில் உள்ள பல குறிப்புகள், இங்கிருந்த ஒரு சில சட்டர்கள் முறையான இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. கோவில் மற்றும் சாலையின் வருவாய் மூலம் ஈட்டிய  சொத்துக்களைப் பாதுகாப்பதில் சட்டர்கள் தன்னார்வத் தொண்டர்களாகவும் செயல்பட்டனர். ஆயுதப் பயிற்சியுடன் கண்ணும் கருத்துமாக வேதக் கல்வி பயின்ற சட்டர்கள், இடைக்கால ஐரோப்பாவின் இராணுவத் துறவிகளில் ஒருவரை நினைவூட்டுவதாக எம்.ஜி.எஸ். நாராயணன் கருதுகிறார்.

நான்காவது செப்பேடு :

மாயநாட்டார், செங்கழு நாட்டார், முடால நாட்டார், படைப்பா நாட்டார், வள்ளுவ நாட்டார் ஆகிய நாட்டு மக்களை ஒன்று கூட்டி இந்த அறச்சாலையைக் காக்கும் பொறுப்பு வற்புறுத்தப்படுகிறது.

இச்சாலைக்குப் பெய்த கலத்தில் பவிழிய சரணத்தார் உடைய கலம் நாற்பத்
தைந்து | தயித்திரியச் சரணத்தார் உடைய கலமுப்பத்தாறு | தலவகார சரணத்தார் உடைய
கலம் பதினாலு | இனிவருங்காலமூன்று சரணத்தார்க்கும் ஒப்பது |

பார்த்திவபுரம் சாலையில் தங்கிக் கல்வி கற்பதற்காக  95 இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்கு தங்கி வேதக்  கல்வி கற்ற மாணவனுக்குச்  சட்டர்  (Cattar) என்று பெயர்.  இந்தச் சாலையில் 45 பவிழிய (ரிக் வேதத்தில் ஒரு சாகை) சரணப்  பிரிவினரும். 36 தயித்திரிய (தைத்திரீய (யஜுர்வேதத்தில் ஒரு சாகை) சரணப் பிரிவினரும். 14 தலவகார (சம வேதத்தின் ஜைமினியாப் பள்ளி)    சரணப்  பிரிவினரும் தங்கி உண்ணுவதற்குச் செய்யப்பட்ட ஏற்பாடு பற்றிக் குறிப்பிடுகிறது.

சிறுவிளக்கம் முற்காலத்தில் வேதபாடசாலைகளில் ஒருவரே நான்கு வேதங்களைக் கற்றுக்கொள்கிற வழக்கம் இருந்தது. தற்காலத்தில்   வேதபாடசாலைகளில் ரிக், யஜுஸ், ஸாம, அதர்வ வேதங்களுக்கான 1133 சாகைகளுள்  (ரிக் வேதத்தில் 21 சாகைகள்; யஜுஸில் 101; ஸாமத்தில் 1000; அதர்வத்தில் 11; மொத்தம்  சாகைகள்) ஏதாவது ஒரு வேதத்தின் ஒரு சாகையைத் தேர்ந்தெடுத்துக்   கற்றுக்கொள்ளவும் (அத்யயனம்) சாத்திரப்படி சடங்குகளை முறையாகச் செய்யவும் (அநுஷ்டானம்) பயிற்சி அளிக்கிறார்கள்.  இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சாகையை  முழுவதுமாக (சம்ஹிதா + பிராமண + ஆரண்யகா + கல்பசூத்ரா + மற்றும் ஏதேனும் கூடுதல் நூல்களையும்) படிப்பதுடன் அதற்கான சடங்குகளையும் நிறைவேற்றும் ஒரு வேதியர் குழு அல்லது பிரிவினைச் சரண (English Caraṇa Sanskrit चरण) என்று குறிப்பிடுகிறார்கள்.

சேர்க்கை விதிமுறைகள்

வியகரஞ் செய்யும்
பரிசு வையாகரண மீமாயப்புரோஹிதபுன்பாய் புவிஸ்ரம் இலன் த்ரைராஜ்ஜிய வ்யவஹார
த்துக்கு வேண்டும் ஒத்துடையான் இது உத்தரவாம் என்று ஐவர் சட்டரைக் கொண்டு பஞ்சக்க
ஞ்செய்தான் புகவுபெறுவான் |

பார்த்திவபுரம் சாலையில் புத்திசாலி மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற வேண்டும் என்பதற்காக, கடுமையான சேர்க்கை விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.

  1. இந்தச் சாலையில் சேர்வதற்கு ஒவ்வொரு விண்ணப்பதாரரும், ஐந்து சட்டர்கள் / சட்டப்பெருமக்களிடமிருந்து (மூத்த மாணவர்கள்) பெற்ற உறுதி மொழிகளைச் சமர்பிக்கவேண்டும்.
  2. குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு; அ. இலக்கணம், ஆ. மீமாம்சை, இ. புரோகிதருக்கான கடமைகளில் தேர்ச்சி, மற்றும் ஈ. மூன்று அரசுகளின் (முடியுடைய மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய நாட்டு) விவகாரங்களை நிர்வாகிப்பதற்கான பயிற்சியும், அறிவும், திறனும், இருப்பதாகவும் ஐந்து பெருமக்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்.

சட்டர்களுக்கான நடத்தை விதிமுறைகள்

முக்கால் வட்டத்துவைத்து ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவனாயில் பெருமக்க
ளுக்கு அஞ்சுகானம் பொன்றண்டம் இட்டுச் சாலை உண்பது | குட்டுவானாயில் ஒரு காசு தண்டம் இட்டு சாலை உண்பது | படைக்கலத்தால் புண்செ
ய்தான் அறத்துக்குப் புறத்தானாவது | சட்டர் படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்கு செல்லப் பெறார் | சட்ட
.. யிலகப்பட்ட எச்சூது முக்கால்வட்டத்திருந்து பொரப்பெறார் | பொருவார் அற்றைக்கலம் இழப்பது | சட்டர் வெ[ள்] ளாட்டிகளை மடத்தில் வைத்துக் கொள்ளப்பெறார் | சாலாபோகமுந் தேவதான
மும் சத்திமுகம் இன்றி விலக்கப் பெறார் | விலக்குவார் மெய்வேற்றுவகை ஐங்கழைந்து பொன்இட்டன்றிச்சாலை
உணப்பெறார் | சாலாபோகத்திலுந் தேவதனத்திலு[ங்]குடியை வலியக் கொண்ட முதல் ஒன்றுக்குப்பத்தாகக் குடுப்பது | சவைக்கடமை கடவார் பக்க
ல் மூவர் சரணத்திலு மூவர் சென்று புக்கது பாடாவது | பாடு[ப்]போகில்ஐம்பத்துநாலு காணம் பொன்த
ண்டமும் பட்டு கடமையுங் குடுப்பது | தேவர் சென்னடையும் பதினாழிச்சாலையும் இவ்வழக்கு சொல்லியும் வி
லக்கப் பெறார்| விலக்குவார் நி[ய]தி கழஞ்சு பொன்தண்டம் இட்டன்றிச்சாலை உணப்பெறார் | பணிமக்கள் சட்டரை
ப்பிழைக்கப் பேசுவார் ஒருகாசு தண்டப்படுவது |

பார்த்திவபுரம் சாலையில் 95 சட்டர்கள் (மாணவர்கள்) தங்கவும் உணவளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தச் சாலையில் சட்டர்களுக்கும் சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் விதிக்கப்பட்ட கடும் நடத்தை விதிமுறைகளைப் பற்றி ஹுஸூர் அலுவலகச் செப்பேடு குறிப்பிட்டுள்ளது.  

  1. சட்டர்கள் ஒருவருக்கொருவர் வசைமொழிகளைப் பேசக்கூடாது.
  2. ஒரு சட்டர் மற்றொரு சட்டரை அடித்தால் / தாக்கினால், அடித்தவரிடமிருந்து  ஒரு காசு அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.
  3. ஒரு சட்டர் மற்றொருவரை ஆயுதம் கொண்டு தாக்கிக் காயப்படுத்தினால், தாக்கியவர் உடனே சாலையை விட்டு நீக்கப்பட வேண்டும்.
  4. சட்டர்கள் தாங்கள் தங்குமிடங்களில் எந்தக் கூத்தியையும் (காமக்கிழத்தி) வைத்துக் கொள்ளக்கூடாது.
  5. மூலவர் சன்னதி மற்றும் சாலையில் மேற்கொள்ள வேண்டிய தினசரி கடமைகளை நிறுத்துவதற்கு எவருக்கும், எந்தச் சந்தர்ப்பத்திலும்,  அனுமதியில்லை. தவறிழைப்பவர் சாலையில் உணவருந்தத் தடை செய்யப்படுவர். பெருமக்கள் விதிக்கும் ஒரு கழஞ்சை அபராதமாகக் கட்டிய பின்னர் இவர்கள் சாலையில் உணவருந்தலாம்.
  6. சட்டரை, ஊழியர் யாரேனும் அவமதித்துப் பேசினால், அவ்வூழியருக்கு ஒரு காசு அபராதம் விதிக்கப்படும்.

கோவிலுக்காக நிர்ணயிக்கப்பட்ட விளைச்சலைக் கொடுக்கத் தவறினால், குத்தகைக்கோ வாடகைக்கோ விடப்பட்ட சொத்து மற்றும் அதன் சாகுபடியை விலக்குவதற்காக  மூன்று சரணங்களைச் சேர்ந்த மூன்று சட்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் அரசனின் ஆணையின்றி, சட்டர்கள், சலாபோகத்தை முறிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐந்தாம் ஏடு

இப்பரிசு தெங்கநாட்டு வெண்ணீர் வெள்ளாளன் தெங்கநாடு கிழவனாயின சாத்தமுருகன் ஆணத்தியாக ஓமாயனாட்டுப்பா கோட்டுபாப்பிகைகோட்டு திரையன் ஒமாயனாடு கிழவனாயின சிங்கங்குன்றப் போழன்

இந்த ஏற்பாடுகளைச் செய்தவர்கள் ஆஞ்ஞாபதி,  சாத்தமுருகன் என்ற தெங்கநாட்டுக் கிழவன், ஒரு தெங்கநாட்டு வெண்ணீர் வெள்ளாளன், மற்றும் பாக்கோடு பகுதியிலிருந்த  பாப்பிகைகோட்டைச் சேர்ந்த திரையன் ஓமாயனாட்டுக்  கிழவன் என்ற சிங்கன் குன்றபோலன். 

குறிப்புநூற்பட்டி

  1. காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி சொல்வனம் எஸ்.இராமச்சந்திரன் சொல்வனம் அக்டோபர் 2, 2020
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்து வெளியீடு எண் 325. உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை. 1999. பக். 400.
  3. Hajjur inscription http://www.keralaculture.org/hajjoor-plates/352
  4. Lest we forget Achuthssankar S Nair The Hindu February 14, 2014 https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/lest-we-forget/article5689518.ece
  5. Narayanan, M.G.S.1973. Aspects of Aryanisation in Kerala. Trivandrum: Kerala Historical society.
  6. Organisation and Conduct of Parthivapuram Sala as Gleaned from the Huzur Office Copper Plates Ajit Kumar https://www.academia.edu/31165884/Organisation_and_Conduct_of_Parthivapuram_Sala_as_Gleaned_from_the_Huzur_Office_Copper_Plates.
  7. Parthivapuram Sree Parthasarathy temple A Historical Study https://www.rjisacjournal.com/parthivapuram-sree-parthasarathy-temple-a-historlical-study/
  8. Travancore Archaeological Series No. I-Three Inscriptions of Kokkarundadakkar, No. II. the Huzur Office Plate of Vikramaditya Varaguna : Rao, T. A. Gopinatha : Free Download, Borrow, and Streaming : Internet Archive
  9. Valiyasala Mahadeva Temple, Thiruvananthapuram https://www.keralatourism.org/temples/thiruvananthapuram/kanthalloor-valiyasala-mahadeva
  10. ശ്രീ പാര്‍ത്ഥിവപുരം പാര്‍ത്ഥസാരഥി ക്ഷേത്രം

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கற்பிக்கும் கலை, கல்வி, கேரளா, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to பார்த்திவசேகரபுரம் செப்பேடு: ஆய் மன்னன் கோகருந்தடக்கன் நிறுவிய பார்த்தசாரதி கோவிலும் சாலையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்)

  1. Dr B Jambulingam சொல்கிறார்:

    பார்த்திவகேசபுரத்தைப் பற்றிய சிறப்பான கட்டுரை. இப்போதுதான் இந்த ஊரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். இப்பதிவு மூலம் பல செய்திகளை அறிந்தேன்.

    Like

  2. ஸ்ரீராம் சொல்கிறார்:

    நிறைய தகவல்கள்.  வழக்கம் போல சுவாரஸ்யமான கட்டுரை.

    Like

  3. Raju சொல்கிறார்:

    ஓமாயனாட்டுக்= ஒய்மாநாடு?

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.