சந்திரகிரி கோட்டை

விஜயநகரப் பேரரசைப் பற்றிப் பேசும்போது பெருமைக்குரிய மாமன்னர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரையும் இப்பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பியையும் நாம் நினைவுகூருவது வழக்கம். நம்மில் பலருக்கு விஜயநகரப் பேரரசின் இரண்டாம் தலைநகரும் கோடைகாலத் தலைநகருமான பெனுகொண்டாவைப் பற்றியும், மூன்றாம் தலைநகரான சந்திரகிரியைப் பற்றியும், நான்காம் தலைநகரான வேலூரைப் பற்றியும் தெரிந்திருக்காது! ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம், சந்திரகிரிக் கோட்டையின் கீழ்க்கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இராஜா மஹால், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் அருங்காட்சியகம், இராணி மஹால், சிறு ஏரி, புல்வெளி, சிதைந்த கோவில்கள், நுழைவாயில் மண்டபங்கள் பற்றிய பதிவு இதுவாகும்.

இம்மடி நரசிம்ம யாதவ ராயரின் சந்திரகிரிக் கோட்டை

IMG_20171104_130355.jpg

இராஜா மஹால், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் அருங்காட்சியகம்

சந்திரகிரிக் கோட்டை கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் நாராயணவனத்தைத் தலைநகராகக் கொண்டு சந்திரகிரி மண்டலப் பகுதியை மண்டலாதிபதியாக இருந்து ஆண்டு வந்த இம்மடி நரசிம்ம யாதவ ராயர் என்ற குறுநிலத் தலைவனால் கட்டப்பட்டது.  திருப்பதி – ஊத்துக்கோட்டை – சென்னை வழியில் இந்த நாராயணவனம் (அமைவிடம் 13° 25′ 12″ N அட்சரேகை, 79° 34′ 48″ E தீர்க்கரேகை) உள்ளது. இவ்வூர் திருப்பதியிலிருந்து இவ்வூர் 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காடுகளை வெட்டி நகரத்தை ஏற்படுத்தி அரசாண்டவர் இவர். தற்போது அந்த நகரம் கார்வேட்டிநகரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. கார்வேட்டி நகர மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. இந்தக் குறுநிலத்தலைவருக்கு எதிரிகளிடம் இருந்து தனது எல்லையைக் காத்துக்கொள்ள உரிய பாதுகாப்புடன் கோட்டை இல்லை. தனது எல்லையைக் பாதுகாக்க எப்படியாவது ஒரு கோட்டையைக் கட்ட வேண்டும் என்ற தன் திட்டத்தைத் தன்னுடைய அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்தார்.

ஒரு சமயம் திருமலையில் வெங்கடேஸ்வர சுவாமியின் சன்னதியில் இவர் வழிபாடு செய்தபோது எதிரியால் எளிதில் வெல்ல முடியாத ஒரு நல்ல இடத்தை அமைத்துத் தர வேண்டினாராம். தரிசனத்திற்குப் பிறகு கார்வேட்டி நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது யாதவ ராயரின் தலைப்பாகையைக் கருடன் ஒன்று திடீரெனப் பறித்துச் சென்றது. தலைப்பாகையைக் கருடனிடம் இருந்து மீட்பதற்காக ராயரின் காவலர்கள் அதைப் பின்தொடர்ந்தனர். கருடன் சந்திரகிரியின் மலை உச்சியில் தலைப்பாகையைப் போட்டுவிட்டுப் பறந்து சென்றது. தலைப்பாகையை மீட்க மலை உச்சிக்குச் சென்ற காவலர்கள் அங்கிருந்து பார்த்தபோது பிறைச் சந்திரவடிவில் அமைந்த மலை இயற்கையில் பாதுகாப்பு மிக்கதாய் விளங்கியது கண்டு வியப்படைந்தனர். இப்பகுதியில் கோட்டை அமைத்தால் எதிரிகளிடம் இருந்து தன் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கோட்டை ஒன்றைக் கட்டிய ராயர் இப்பகுதியை மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார். அதுதான் சந்திரகிரிக் கோட்டை.

சந்திரகிரி (Telugu: చంద్రగిరి).! ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அழகான கிராமம். ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலத்தில் அமைந்துள்ள சந்திரகிரி பின் கோடு 517101 கி.பி 1367 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டு வரை விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கியது என்றால் நம்பத்தான் வேண்டும்! இன்று சிறு கிராமமாகக் காட்சியளிக்கும் சந்திரகிரி ஒரு மண்டல தலைமையகமாகும். விஜயநகரப் பேரரசின் ஆட்சியில், இன்றைய ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்நூல் ஆகிய தென் மாவட்டங்களை உள்ளடக்கிய புவியியல் பகுதி ராயலசீமா என்று பெயரிடப்பட்டு இப்பேரரசின் நிர்வாகப் பகுதியாக இருந்துள்ளது. இந்த ராயலசீமா புவியியல் பகுதியில்தான் சந்திரகிரி அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 13° 34′ 59.88″ N அட்சரேகை (லாட்டிட்யூட்) மற்றும் 79° 19′ 0.12″ E தீர்க்கரேகை (லாங்கிட்யூட்). கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 204 மீட்டர் (669 அடி) ஆகும். இந்தக் கிராமம் 1956 ஹெக்டேர் பரப்பளவுடையது. இவ்வூரின் மொத்த மக்கள் தொகை 17014 (ஆண்கள் 8474 பெண்கள் 3881) ஆகும். இவ்வூர் திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவு; சித்தூரிலிருந்து 56 கி.மீ. தொலைவு; வேலூரிலிருந்து 99 கி.மீ தொலைவு; சென்னையிலிருந்து 145 கி.மீ. தொலைவு; நெல்லூரிலிருந்து 147 கி.மீ. தொலைவு; பெங்களூருவிலிருந்து 236 கி.மீ தொலைவு ஆகும். சந்திரகிரி மற்றும் கோட்டால இரயில் நிலையங்கள் இவ்வூரின் அருகே அமைந்துள்ளது. ரேணிகுண்டா இரயில்வே ஜங்ஷன் இவ்வூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது. திருப்பதி விமானநிலையம் 31 கி.மீ. தொலைவில் உள்ளது.

கி.பி.1336 ஆம் ஆண்டில் சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் ஹரிஹரர் (கி.பி.1336-1356) மற்றும் முதலாம் புக்கராயர் (கி.பி.1356-1377) என்போரால் நிறுவப்பட்ட விஜயநகரப் பேரரசு கி.பி. 1646 வரை நீடித்தது. ஹம்பி என்னும் இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. சந்திரகிரி கோட்டை கி.பி. 1367 ஆம் ஆண்டு முதல், அதாவது முதலாம் புக்கா ராயர்  ஆட்சிக் காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. பெனுகொண்டா கோட்டையினுள் கிடைத்த கல்வெட்டுகள், பெனுகொண்டா மாநிலம் முதலாம் புக்க ராயரின் மகன் விருப்பண்ண உடையாருக்கு இவர் தந்தையால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது பற்றித் தெரிவிக்கின்றன. விருப்பண்ண உடையார் காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டைக்குக் கங்காரி என்ற பெயருமுண்டு.

சங்கம மரபின் கடைசி அரசனாகப் பிரௌத தேவ ராயன் கி.பி.1485 ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசின் அரசராக முடி சூட்டிக்கொண்ட பின்பு  மிகக் குறுகிய காலமே ஆட்சியில் நீடிக்க முடிந்தது. சந்திரகிரிப் பகுதியில் ஆளுநராக இருந்த சாளுவ மரபைச் சேர்ந்த சாளுவ நரசிம்ம ராயர் (கி.பி. 1485-1491), துளுவ நரச நாயக்கர் என்பவரை  விஜயநகரத்துக்கு அனுப்பிப் பிரௌத ராயரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டுத் தானே அரசராக முடிசூட்டிக்கொண்டார். சாளுவ நரசிம்ம ராயர் காலத்தில்தான் சந்திரகிரிக்கோட்டை முக்கியத்துவம் பெற்றது.

துளுவ வம்சத்தைச் சேர்ந்த வீரநரசிம்ம ராயர் (கி.பி. 1503-1509) புதல்வனான ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் (Krishnadevaraya) (கி.பி. 1509-1529) விஜயநகரப் பேரரசின் பேரரசர்களிலே மிகவும் புகழ் வாய்ந்தவரும், இந்தியாவின் பெருமைமிகு அரசர்களில்ஒருவருமாவார்.. இவரது ஆட்சிக் காலமே பேரரசின் பொற்காலம் எனலாம்.  இவர் ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராமரமணன் என்ற பெயர்களால்  அழைக்கப்பட்டவர்.  இவர் துளுவ வம்சத்தைச் சேர்ந்த பேரரசர் ஆவார்.

ஸ்ரீ கிருஷ்ணதேவராயருக்கு கி.பி. 1509 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெனுகொண்டாவில் முடி சூட்டப்பட்டது. முடிசூட்டுவிழாவிற்கு முன்னரே சந்திரகிரிக் கோட்டையில் இளவரசனாகத் தங்கியிருந்த இவர் தன் தந்தையான வீர நரசிம்மருடன் இணைந்து ஒரே நேரத்தில் அரசாட்சியில் பங்குகொண்டார். இவரின் காதல் மனைவியான சின்னாதேவியை இந்தச் சந்திரகிரியில்தான் முதன்முதலாகச் சந்தித்தாராம்.

ஸ்ரீ கிருஷ்ணதேவராயர்  மறைவுக்குப் பின்னர் அச்சுத தேவ ராயர் (கி.பி. 1529-1542) என்ற அச்சுத ராயர் துளுவ மரபின் மூன்றாவது விஜயநகரப் பேரரசராக, முடிசூட்டிக் கொண்டார். இவர் காலத்தில் இப்பேரரசின் வலிமை குன்றத் தொடங்கியது. இவர்  கிருஷ்ண தேவராயரின் மருமகனான அலிய ராம ராயரின் (கி.பி.1542-1565) போட்டியையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அச்சுத தேவ ராயர் 1543 ஆம் ஆண்டில் மறைந்ததை அடுத்து அலிய ராமராயரின் வலுவான ஆதரவினால்  சிறுவனாக இருந்த சதாசிவ ராயர் (கி.பி. 1542-1570) துளுவ மரபின் நான்காவது விஜயநகரப் பேரரசராக, முடிசூட்டப்பட்டார். எனினும், ராம ராயர் தானே பதில் ஆளுனர் (Regent) ஆகி அரச நிர்வாகத்தை நடத்தி வந்தார்.

கி.பி.1565 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தக்காணத்துச் சுல்தான்களுக்கும் அலிய இராம ராயருக்கும் நடந்த ராட்சஸி – தங்காடிப் போர் என்னும் தலைக்கோட்டைப் போரில்  ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் விஜயநகரப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. சுல்தானின் படை தலைநகரான ஹம்பியை உருக்குலைத்துச்  சூறையாடியது. நாம் இன்று காணும் உருக்குலைந்த ஹம்பி மீண்டெழவேயில்லை. அலிய இராம ராயரின் மறைவுக்குப் பிறகு, அரவிடு  வம்சத்தின் அரசரான திருமல தேவ ராயர் பெனுகொண்டா நகரை நிறுவி விஜயநகரப் பேரரசின் தலைநகரை அங்கு மாற்றினார். பெனுகொண்டா நகரம் (14° 5′ 6″ N அட்சரேகை , 77° 35′ 45.6″ E தீர்க்க ரேகை) ஆந்திர பிரதேசம், அனந்தபூர் மாவட்டத்தில், அனந்தபூரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கி.பி. 1646 ஆம் ஆண்டில் சந்திரகிரிக்கோட்டை கோல்கொண்டா பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பின்பு இக்கோட்டை மைசூர் இராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கி.பி. 1792 ஆம் ஆண்டிற்குப் பின்பு வரலாற்றுப் பதிவுகளிலிருந்து மறைந்து போனது.

சந்திரகிரிக் கோட்டை

கோட்டை வளாகத்தின் நுழைவதற்கு முன்பே ராஜராஜேஸ்வரி, வேணுகோபாலன், கார்த்திகேயன், சிவன் மற்றும் ஹனுமானுக்கான கோவில்களைக் காணலாம்.

69415947

சந்திரகிரிக் கோட்டை நுழைவாயில் PC Panoramio

கீழ்க்கோட்டை மற்றும் மேல்க்கோட்டை என்று அமைந்துள்ள சந்திரகிரிக் கோட்டை வளாகத்திற்குள் நுழைவதற்கு இரண்டு நுழைவாயில்களைக் கடந்து செல்லவேண்டும். விஜயநகரக் கலைப்பாணியில் அழகாகச் செதுக்கப்பட்ட கூட்டுத் தூண்களால் அமைக்கப்பட்ட இந்த நுழைவாயில் மண்டபங்களின் வழியே நுழைந்து கோட்டை வளாகத்தின் வாயிலை அடையலாம். கீழ்க்கோட்டையின் பின்புலமாக ஒரு குன்று அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தில் மழைநீர் சேகரமாகிறது. கோட்டை வளாகத்தின் நீர்த்தேவையை இந்த நீர்நிலை பூர்த்தி செய்கிறது. இந்தக் கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள அகழியிலும் நீர் நிரம்பி கோட்டைக்குக் கூடுதல் பாதுகாப்புத் தருகிறது. செடிப்புதர்கள் மூடியுள்ள நிலையில் கோட்டையின் சுற்று மதில்களைக் காணலாம். சந்திரகிரிக் கோட்டை வளாகத்திற்குள்ளே எட்டு உருக்குலைந்த சைவ வைணவக் கோவில்களும், இராஜா மஹால், இராணி மஹால் மற்றும் சில சிதைந்த கட்டமைப்புகளும் உள்ளன.

dsc03388

உருக்குலைந்த கோவில் PC: Vadadriblog

9

உருக்குலைந்த கோவில்

இராஜா மஹால்

வடக்குப் பார்த்து அமைந்துள்ள இராஜா மஹால் விஜயநகரப் பேரரசின் இந்தோ சரசனிக் கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். கவர்ச்சிகரமான மூன்றடுக்கு மாளிகையும் உச்சியில் அமைந்த கோபுர அமைப்பும் இந்துக் கட்டடக்கலையின் சில கூறுகளைக் குறித்துக் காட்டுகின்றன. கல், செங்கல், சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட இக்கட்டத்தில் மரம் பயன்படுத்தப்படவில்லை என்பது வியப்பான செய்தி! பருத்த தூண்களையும் சுதைகளால் அலங்கரிக்கப்பட்ட சுவர்களையும் இம்மஹால் பெற்றுள்ளது.  மூன்று தளங்களையுடைய இம்மஹாலில் ஆர்கேடுகள் என்னும் மேலே மூடப்பட்ட நீண்ட வரிசைத் தூண்களையுடைய நடைபாதைகள், இணைப்புடன் கூடிய நடைபாதைகள், வரிசையாக அமைந்த தாழ்வாரக் கூடங்கள், பிதுக்கமாக அமைந்த சன்னல்கள் மற்றும் பால்கனிகளுடன் கூடிய அரங்கங்கள், அறைகள் எல்லாம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இராஜா மஹால் ஹம்பியின் லோட்டஸ் மாளிகையின் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கிறது. இராணிமஹால் அளவில் சிறியது என்றாலும் லோட்டஸ் மாளிகையை நினைவு படுத்துகிறது.

799px-hampi_aug09_226

ஹம்பியின் லோட்டஸ் மாளிகை PC: Wikimedia

கட்டடத்தின் நடுவில் கட்டப்பட்டுள்ள கோபுரத்தின் கீழ் அமைந்துள்ள இரண்டு தளங்களிலும் தர்பார் மண்டபங்கள் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதியன்று சந்திரகிரிக் கோட்டையில் இராஜா மஹால் தர்பார் மண்டபத்தில் வீற்றிருந்த ஸ்ரீ ரங்க ராயர், வந்தவாசியை விஜயநகரப் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்த ஆளுநர் (வேலம நாயக்கான) தாமர்ல சென்னப்ப நாயக்கடுவின் மகன் தாமர்ல வெங்கடாத்திரி நாயக்கடுவுடைய கட்டுப்பாட்டில் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்த மூன்று சதுர மைல் பரப்பளவுள்ள ஒரு நிலத்துண்டினை வர்த்தகத்திற்காகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியான ஃபிரான்சிஸ் டே (கி.பி.1605–1673) க்கு சட்டப்படி குத்தகைக்கு வழங்க உத்தரவிட்டார். இன்று இந்த ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி சென்னை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அழகான இந்த அழகிய மாளிகையைப் பருத்த தூண்கள் தாங்குகின்றன. சுற்றுகள் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்ட சுவற்றின் மேல் நுண்ணியச் சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இம்மாளிகை புதுப்பிக்கப்பட்டு இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத் துறையால் பராமரிக்கப்படுகின்றது.

இராஜாமகாலில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் 1988-1989 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மியூசியம் வரலாற்றுச் சிறப்பு மிக்கக் குடிமல்லம்(Gudimallam) (சித்தூர் மாவட்டம்), கண்டிகோட்டா (Gandikota) (கடப்பா மாவட்டம்), யாகண்டி (Yaganti) (கர்நூல் மாவட்டம்) ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட கல் மற்றும் உலோகச் சிற்பங்கள் மற்றும் கலாச்சாரச் சுவடுகளையும் கொண்ட அரிய சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. மியூசியத்தில் சைவ, வைணவ மற்றும் சமண மதத்தைச் சார்ந்த கல் மற்றும் உலோகச் சிற்பங்கள் உள்ளன.

IMG_20171104_121508.jpg

சிவலிங்கம் அபஸ்மாரபுருஷனின் மேல் நிற்கும் ருத்ரன்

குடிமல்லம் பரசுராமேஸ்வரா கோவிலின் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் புகழ்வாய்ந்த சிவலிங்கத்தின் பிரதியில் (replica) கம்பிரமான ருத்ரன் அபஸ்மாரபுருஷனின் மேல் நின்றநிலையில் காணலாம். குடிமல்லம் கோவிலின் மாதிரியையும் (model) காட்சிப் படுத்தியுள்ளார்கள். மற்றோரு பக்கத்தில் சந்திரகிரிக் கோட்டையின் உருப்படிவமும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இங்கு நடந்த அகழ்வாய்வில் பெறப்பட்ட தொல்பொருட்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசு, விஜயநகரப் பேரரசின் பிற்காலத்தைச் சிறந்த வெண்கல சிற்பங்களின் நேர்த்தியான தொகுப்பிணை இங்குள்ள வெண்கலக் கலைக்காட்சிக்கூடத்தில் காணலாம். உமாமஹேஸ்வரர், சோமாஸ்கந்தர், ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் வேணுகோபால ஸ்ரீனிவாசனாகவும், கோதண்டராமனாகவும் காட்சி தரும் விஷ்ணு, விநாயகர், ஹனுமான், பூஜைத்தட்டுகள், மணிகள், கீர்த்திமுகம், சிங்கத்தின் கால்கள், விஜயநகரப் பேரரசின் நாணயங்கள் போன்ற வெண்கல சிற்பங்களும் தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

IMG_20171104_121053.jpg

ஸ்ரீகிருஷ்ணதேவராயர் – இரு மனைவிகளுடன்

இராஜாமஹாலின் பெயருக்கேற்ப விஜயநகர அரசர்களான ஸ்ரீகிருஷ்ணதேவராயர் மற்றும் அவருடைய இரு மனைவிகளான சின்னாதேவி மற்றும் திருமலாதேவியுடனும் காட்சி தரும் ஆளுயர வடிவிலான உலோகச் சிற்பங்களும் வெங்கடபதிராயர் மற்றும் ஸ்ரீரங்கராயர் ஆகியோர் அவரவர் அரசியுடன் காட்சிதரும் ஆளுயரக் கற்சிற்பங்களும் உலோகச் சிற்பங்களும் தர்பார் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கலத்தைச் சேர்ந்த போர்க்கருவிகளான வாள், குத்துவாள், நாணயங்கள், ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட காகித ஆவணங்கள் எல்லாம் இந்தக் கூடத்தில் உள்ளன. அழகுமிக்க சந்திரகிரி பள்ளத்தாக்கையும் கோட்டை மதில்களையும், வளாகத்திலுள்ள கட்டடங்களையும் அளவு மாதிரியாகக் (scaled model) காட்சிப் படுத்தியுள்ளனர்.

 

 

 

IMG_20171104_123240_HDR.jpg

சந்திரகிரி பள்ளத்தாக்கு கோட்டை வளாகம் அளவு மாதிரி (scaled model)

வேலைநேரம், நுழைவுக்கட்டணம், ஒலி, ஒளிக்காட்சி

மியூசியம் வேலைநேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
நுழைவுக்கட்டணம்: பெரியவர் – ரூ.20/- சிறியவர் ரூ.10/-
ஒலி மற்றும் ஒளிக்காட்சி:
முதல் காட்சி (தெலுங்கு) நவம்பர் – பிப்ரவரி : மாலை 6.30 முதல் 7.15 வரை; மார்ச் -அக்டோபர் : மாலை 7.00 முதல் 7.45 வரை.
இரண்டாம் காட்சி (ஆங்கிலம்) நவம்பர் – பிப்ரவரி : மாலை 7.30 முதல் 8.15 வரை; மார்ச் -அக்டோபர் : மாலை 8.00 முதல் 8.45 வரை.

p1000703

தெனாலி ராமனின் வசிப்பிடம்

இராஜமஹாலுக்கு எதிரில் நேர்தியாகப் பராமரிக்கப்படும் புல்தரையில் நாவல் மர நிழலில் ஆங்காங்கே இரும்புப் பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புல்தரையை ஒட்டி அழகான சிறிய ஏரி ஒன்றையும் காணலாம். இவ்வேரியில் ஃபைபர் படகில் படகுசவாரியும் போகலாம்.

இராணி மஹால்

இராஜமஹாலுக்கு வலதுபுறம் ராஜமஹாலைவிடச் சிறிய அளவில் கிழிக்குப்பார்த்து அமைந்துள்ள இராணி மஹாலைக் காணலாம். தரைதளம் வெறுமையாகவும், முதல் தளம் அறைகளுடனும் அமைந்துள்ளன. சமப்படுத்தப்பட்ட மேல்தளத்தில் சுதை வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய தோரணங்களையும், நேர்த்தியான சிகரங்களையும் காணலாம். இம்மஹால் இராணிகளின் அந்தப்புறமாக இருந்துள்ளது என்று பரவலாகப் பேசப்படுகிறது. வரலாற்றுச் சான்றுகள் இந்த மஹாலைப் படைத் தலைவர்களின் தங்குமிடம் என்று தெரிவிக்கின்றன.

IMG_20171104_125749_HDR.jpg

இராணி மஹால்

IMG_20171104_125028_HDR.jpg

IMG_20171104_115343.jpg

குறிப்புநூற்பட்டி

  1. Archaeological Museum, Chandragiri (District Chittoor, Andhra Pradesh) http://asi.nic.in/asi_museums_chandragiri.asp
  2. Chadragiri (Wikipedia)
  3. Chandragiri – Relics of the fallen empire http://www.tripwip.com/chandragiri-relics-of-the-fallen-empire/
  4. Chandragiri Fort. Happy Trips. https://www.happytrips.com/tirupati/chandragiri-fort/ps47148174.cms
  5. Chandragiri Fort. India mike. March 05, 2017 http://www.indiamike.com/india/andhra-pradesh-and-telangana-f92/chandragiri-fort-t257457/
  6. Memories of a glorious past to come alive at historic Chandragiri fort. K. Umashankar The Hindu September 22, 2016 http://www.thehindu.com/todays-paper/tp-national/Memories-of-a-glorious-past-to-come-alive-at-historic-Chandragiri-fort/article13984156.ece
  7. Photo Essay: Chandragiri – where Vijayanagara empire breathed its last. The New Minute July 16, 2016 http://www.thenewsminute.com/article/photo-essay-chandragiri-where-vijayanagara-empire-breathed-its-last-46627
  8. Raja & Rani Mahal, Chandragiri Fort http://asi.nic.in/asi_monu_tktd_ap_chandagiri.asp

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.