லெபாக்ஷி

விஜயநகரக் கட்டிடக்கலை என்பது விஜயநகர இந்துப் பேரரசின் (கிபி 1336 – 1646) ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் தோன்றிய குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை மரபாகும். விஜயநகர மன்னர்கள் நிறையக் கோயில்கள், விமானங்கள், சிற்பங்கள், இராஜகோபுரங்கள் (இராயகோபுரங்கள்), விஜயநகரக் கலை மரபில் அமைந்த மண்டபங்கள் (பதினாறு (அ) நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம், நிருத்த மண்டபம், கல்யாண மண்டபம், யாளி (அ) புரவி மண்டபம்),  கோவிலுனுள்ளே அமைந்த திருக்குளங்கள், கம்பீரமான கோட்டைகள், எழில்மிகுந்த மாளிகைகள் எல்லாம் தற்போதைய கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ் நாடு ஆகிய இந்திய மாநிலங்களில் காட்டியுள்ளார்கள். இவற்றுள் யுனெஸ்கோ 56 விஜயநகர மரபுச் சின்னங்களையும் கர்நாடக அரசு 650 விஜயநகர மரபுச் சின்னங்களையும் சான்று வழங்கிப் பராமரித்து வருகின்றன.

விஜயநகரப் பேரரசு லெபாக்ஷியில் வீரபத்திரர் கோவிலைக் கட்டியுளார்கள். இந்தக் கோவிலினுள் சிவன், விஷ்ணு, வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்குச் சிறு கோவில்களைக் கட்டியுளார்கள. இங்குள்ள வீரபத்ரர் கோவில் மட்டும் கலைநயம் வாய்ந்தது. மற்ற கோவில்கள் அளவில் சிறிய கோவிகள் என்று சொல்லலாம். கூர்மசைலம் (ஆமை வடிவில் அமைந்த மலை) என்று பெயரில் வழங்கப்படும் சிறிய குன்றின் மேல் அமைந்த கோவில் வளாகத்திற்குள் பாபநாதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர், துர்க்கை ஆகிய தெய்வங்களுக்குக் கோவில்கள் உள்ளன.  இவற்றுள் லெபாக்ஷியில் கட்டப்பட்டுள்ள வீரபத்திரர் கோவில் புகழ்பெற்ற விஜயநகரக் கட்டிடக்கலை சகாப்தத்தில் ஒரு மைல்கல் எனலாம். விஜயநகரப் பேரரசு கட்டிடக்கலையின் உன்னத நிலையில் இருந்தபோது அமைத்த நேர்த்தியான சிற்பங்களையும் ஓவியங்களையும் காண்பதற்காக லெபாக்ஷிக்குச் செல்வது சிறப்புமிக்கது.

அமைவிடம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம், லெபாக்ஷி மண்டலில் அமைந்துள்ள லெபாக்ஷி பின் கோடு 515331 என்ற அழகிய நடுத்தரமான கிராமம் விஜயநகரக் கட்டிடக்கலை மரபில் அமைந்த 16 ஆம் நூற்றாண்டின் கலைப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்நூல் ஆகிய தென் மாவட்டங்களை உள்ளடக்கிய புவியியல் பகுதியான ராயலசீமாவில் அமைந்துள்ளது. லெபாக்ஷி கர்நாடகா – ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. ராயலசீமாப் பகுதிகளில் சாலையின் இருமருங்கிலும் உருளைக்கல் குவிந்த மலைகளைக் காணலாம். இது வறட்சி மிகுந்த பகுதியாகும். இதன் அமைவிடம் 13° 48′ 6.64″ N அட்சரேகை, 77° 36′ 34.37″ E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 624 மீ. (2047 அடி) ஆகும்.

இவ்வூரின் மொத்த மக்கள் தொகை 9023 (ஆண்கள் 5055 பெண்கள் 3968) ஆகும். இதன் பரப்பளவு 1891 ஹெக்டேர். இவ்வூர் அனந்தப்பூரிலிருந்து 14 கி.மீ தொலைவிலும்; பெனுகொண்டாவிலிருந்து 29 கி.மீ. தொலைவிலும்; புட்டபர்த்தியிலிருந்து 63 கி.மீ. தொலைவிலும்; கதிரியிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவிலிருந்து 124 கி.மீ. தொலைவிலும்; திருப்பதியிலிருந்து 225 கி.மீ. தொலைவிலும்; சித்தூரிலிருந்து 245 கி.மீ. தொலைவிலும்; வேலூரிலிருந்து 275 கி.மீ. தொலைவிலும்; சென்னையிலிருந்து 368 கி.மீ. தொலைவிலும்; ஹைதராபாத்திலிருந்து 478 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வீரபத்திரர்

வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாவார். வீரபத்திரர் கோலம் சிவனினின் சம்ஹார திருக்கோலம் அல்லது அழிவு திருக்கோலங்களில் ஒன்றாகும். தட்சனின் யாகத்தை நிர்மூலம் செய்து சிவபரத்துவத்தை நிலை நிறுத்த அவதரித்த மூர்த்தியே வீரபத்திரர் ஆவார். “வீரம்” என்றால் “அழகு,” என்று பொருள், “பத்திரம்” என்றால் “காப்பவன்” என்றும் பொருள். வீரபத்திரன் என்றால் “வீரம் காக்கும் கடவுள்” என்பது பொருள். ஆந்திர மாநிலம் எங்கும் வீரபத்திரர் வழிபாடு பரவியிருப்பதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். விஜயநகர ஆட்சியாளர்கள் காலத்தில், வீரபத்திரர் அவர்களின் குல தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். எனவே வீரபத்திரருக்கு என்று தோன்றிய விஜயநகரப் படிமக்கலை கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிறப்பான வளர்ச்சி பெற்றது. குறிப்பாகத் தமிழகத்தில் விரிஞ்சிபுரம், தேவிகாபுரம், மதுரை, தாடிக்கொம்பு, தாரமங்கலம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் இப்படிமம் காணப்படுகிறது.

பெயர்க்காரணம்

ஜடாயூ பறவை சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டு வீழ்ந்த இடம் லெபாக்ஷி என்று இராமாயணத்தில் வருணிக்கப்பட்டுள்ளது. போராடிக் காயம் அடைந்த ஜடாயூவின் உடலில் இரத்தம் வழிந்தது. இதனால் கடவுளின் கருணையை ஜடாயூ பெற்றது. கடவுள் ‘லே பக்ஷி’ (பறவைவையே எழுந்து போ) என்று (தெலுங்கில்!) சொன்னாராம். எனவே லெபாக்ஷி என்று பெயர் வந்ததாக ஒரு கதை உள்ளது. ஸ்கந்தபுராணம், 108 சைவத் தலங்களில் ஒன்று என லெபாக்ஷியைக் குறிப்பிட்டுள்ளது. இக்கோவில் அகத்தியரால் நிறுவுப்பட்டதாக ஒரு புராணக்கதை சொல்கிறது.

துளுவ மரபின் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் (கி.பி. 1509–1529) தலைமையில் அமைந்த விஜயநகரப் பேரரசின் பொற்கால ஆட்சியில் இவர் தம்பி அச்சுத தேவராயர் (கி.பி.1529–1542) இப்பகுதியை ஆட்சி செய்துள்ளார். வீரண்ணா, விரூபண்ணா சகோதரர்கள் பெனுகொண்டா என்ற பகுதியின் மண்டலாபதிகளாக (Vijayanagar Governor of Penugonda) நியமிக்கப்பட்டிருந்தார்கள். விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட மண்டலங்களில் பெனுகொண்டாவும் ஒன்று. பெனுகொண்டாவுக்கும் லெபாக்ஷிக்கும் இடையே உள்ள தூரம் 29 கி.மீ. தொலைவு.

ஆளுநர் விரூபண்ணா லெபாக்ஷியில் இருந்த கூர்மசைலத்தின் மீதிருந்த குகையில் வீரபத்திரர் சிலையைக் கண்டறிந்துள்ளார். வியப்பும் பக்தியும் மிகுந்த இவர் வீரபத்திரரைக் குன்றின்மீது நிறுவிக் கோவில் ஒன்றைக் கட்டத் தொடங்கினாராம். இந்த லெபாக்ஷிக் கோவிலை விஸ்வகர்மா பிராமண ஸ்தபதிகள் ஆமை வடிவக் குன்றின் மேல் வடிவமைத்துக் காட்டியுள்ளார்கள். கோவில் கட்டுவதற்காக விஜயநகரப் பேரரசின் கஜானாவைப் பயன்படுத்தினாராம். இது காரணமாகப் பேரரசுக்குக் கப்பம் கட்ட முடியாமல் போனது. விஜயநகர அரசர் ஆளுநர் விரூபண்ணா கோவில் கட்டுவது பற்றிக் கேள்வியுற்று லெபாக்ஷி சென்று கோவிலைப் பார்வையிட்டுள்ளனர். சோதனையில் கோவில் பணிக்குக் கஜானாப் பணம் செலவிடப்பட்டதால் கஜானாக் காலியானது பற்றித் தெரிய வந்தது. கஜானாப் பணத்தைக் கோவில் பணிக்குச் செலவிட்ட குற்றத்திற்காக விரூபண்ணாவிற்குத் தண்டனை வழங்கப்பட்டது. விரூபண்ணா தன் கையால் தன் கண்களைக் குத்திக்கொள்ள வேண்டும் என்பது தண்டனை. விரூபண்ணாவும் கண்களைக் குத்திக்கொண்டு குருடானார். இந்த நிகழ்வுகள் எல்லாம் கி.பி. 1538 ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது. இவ்வூருக்கு லெபாக்ஷி என்ற பெயர் வர இந்த நிகழ்வே காரணமாகும். ‘லோபம்’ என்றால் குறுகுதல்; ‘அக்ஷி’ என்றால் கண். இதன் பொருள் குருடாக்கப்பட்ட கண்களையுடைய கிராமம் (a village of blinded eyes) என்று பொருள். முடிவில் கோவில் திருப்பணிகள் முடிவுறாமல் நின்றுபோயுள்ளது.

lepakshi_entrance_temple_adj

நுழைவாயில் PC: Life is a Vacation

லெபாக்ஷியைச் சென்றடைந்தவுடன் ஊருக்கு ஒரு கி.மீ. கிழக்கில் நாம் முதலில் காண்பது ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கிய மாபெரும் நந்தி சிலையாகும். சிவனுடைய வாகனமாகிய இந்தக் கவர்ச்சிமிக்க கருங்கல் நந்தி சிலை ஒருபக்கம் சாய்ந்தபடி அமர்ந்துள்ளது. மாலைகளாலும், மணிகளாலும் இந்த நந்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது. 4.5 மீட்டர் உயரமும், 8.23 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நந்தி சிலை இந்தியாவிலேயே மிகப்பெரியது என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

lepakshi_nandi_10

ஒற்றைக் கருங்கல் நந்தி சிலை PC: Wikimedia Commons

லெபாக்ஷி கோவில்

லெபாக்ஷியின் தெற்குப்பகுதியில் ஒரு பாறையின் மேல் இரண்டு ஒழுங்கற்ற வடிவ சுற்றுமதில்களுக்கு நடுவே இக்கோவில் அமைந்துள்ளது. வெளிச்சுற்று மதில்களைத் தாண்டி கோவிலை அடைய மூன்று நுழைவாயில்கள் உள்ளன. வடபகுதியில் அமைந்துள்ள நுழைவாயிலே இங்கு வரும் பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சற்று வித்தியாசமான கோணத்தில் அமைந்த இந்த வடக்கு நுழைவாயிலை கடந்து சென்றால் உட்சுற்று மதில்களைக் கிழக்கு நுழைவாயில் வழியாகக் கடந்து செல்லலாம்.

லெபாக்ஷி கோவிலில் நான்கு அங்கங்களைக் காணலாம். முகமண்டபம் (இதற்கு அரங்க மண்டபம் என்ற பெயருமுண்டு), அர்த்தமண்டபம், கருவறை மற்றும் நாட்டிய மண்டபம் ஆகிய நான்கு அங்கங்கள் உள்ளன. இந்தக் கோவில் மண்டபங்களில் அதிக அளவில் சூரிய வெளிச்சம் பரவுகிறது. ஹம்பியிலுள்ள விருபாக்ஷர் கோவிலைப் போலவே லெபாக்ஷியிலும் விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் சமமதிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் வீரபத்திரர், அனந்தர், மற்றும் துர்கா தேவி ஆகிய தெய்வங்களுக்குத் தினந்தோறும் வழிபாடு நடைபெறுகின்றது.

கிழக்கு நுழைவாயிலைத் தாண்டியவுடன் நடுவில் நிறைய இடம்விட்டுக் கட்டிய ஒரு திறந்தவெளி நாட்டிய மண்டபத்தை அடைவீர்கள். மண்டபத்தின் புறவரிசைத் தூண்கள் அழகிய வேலைப்பாடமைந்த தளத்தின் மேல் நிறுவப்பட்டுள்ளன. தூண் முகங்களில் குதிரை மற்றும் வீரனின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தூண்களுடன் மெல்லிய துணைத் தூண்களும் (colonettes) செதுக்கப்பட்டுள்ளன. தூண்கள் ஆழமான வளைவுகளைக் கொண்ட இறவாறங்களுடன் (Eaves) இணைக்கப்பட்டுள்ளன.

dsc_0719

Pillars of Unfinished Kalyan Mandapam, Lepakshi PC: Ee Prapancha

நடுவில் உள்ள முன்றிலில் உள்ள பருத்த தூண்களின் முகப்புகளில் நேர்த்தியான சிற்பங்களைச் செதுக்கியுள்ளார்கள். வடகிழக்குப் பக்கமுள்ள தூணில் பிரம்மா, மிருதங்கம் வாசிப்பவர், நடேசர் ஆகிய சிற்பங்களைக் காணலாம்.

dsc_0344-e1349335372952

தேவலோக அப்சரஸ்களின் அரசியான அரம்பை

ஒரு நடனமாடும் நங்கை மிருதங்கம் வாசிப்பவருக்கும் ஜால்ரா அடிப்பவருக்கும் நடுவில் நின்று அபிநயம் பிடிப்பதைத் தென்கிழக்குத் தூணில் காணலாம்.  இந்த நடனமங்கை சிற்பம் தேவலோக அப்சரஸ்களின் அரசியான அரம்பையை நினைவுபடுத்துகிறது. தென்மேற்குத் தூணில் பார்வதி இரண்டு புறமும் பணிப்பெண்கள் சூழக் காட்சி தருகிறாள். மூன்று கால் பிருங்கி முனிவருக்கும் பிட்சாடனருக்கும் நடுவில் மிருதங்கம் வாசிப்பவர் நிற்பதை வடமேற்குத் தூணில் காணலாம்.

lepakshi_dattatreya_adj

மூன்று தலைகளுடன் தத்தாத்ரேயர் PC: Life is a Vacation

மூன்று தலைகளுடன் தத்தாத்ரேயர் (ப்ரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் தொகுப்பு) கையில் தமரு ஏந்தியபடி காட்சிதருகிறார். இடைப்பட்ட தூண்களில் இசைக்கருவிகளை மீட்டுபவர்களையும் முனிவர்களையும் உயிருள்ள சிற்பங்களாகக் காணலாம். நுட்பமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்களில் பாவாடையின் மடிப்புகள், அணிகலன்கள், வில்லாக வளர்ந்த புருவங்கள், மற்றும் பிற ஒப்பனைகள் எல்லாம் தெளிவாகக் காணமுடிகிறது. இந்த நாட்டிய மண்டபத்தில் மொத்தம் 60 அழகிய தூண்களைக் காணலாம். இந்தத் தூண்கள் ஹம்பியின் விட்டலர் கோவிலில் அமைந்துள்ள தூண்களை நினைவு படுத்துகின்றன.

hanging-pillar-lepaksi-532x800

தொங்கும் தூண் ஓர் அதிசயம் PC: Temples of South India

இங்கு மண்டபத்திலுள்ள ஒரு தூண் உத்திரத்திலிருந்து தொங்கியபடி காணப்படுகின்றது (Hanging Pillars). இந்தத் தொங்கும் தூண் ஓர் அதிசயம் ஆகும். கி.பி. 1900 ஆம் ஆண்டுகளில் ஒரு ஆங்கிலக் கட்டிடப் பொறியாளர் (British Civil engineer) இந்தக் கட்டிடக்கலை அதிசயத்தைப் பார்வையிட வந்துள்ளார். இவர் இந்தத் தூணைத் தள்ளியபொழுது இது பழுதாயிற்று. இதுகாரணமாய் மேலே அமைந்த கட்டிடக்கலைச் சிற்பங்களும், சுற்றியுள்ள தூண்களும் சமநிலை இழந்துவிட்டன. இந்தத் தூண்தான் உண்மையில் மொத்தக் கோவிலின் அடித்தளமாகவும் கோவில் கட்டிடத்தின் மொத்த எடையையும் தாங்குகின்றது. இதைக்காணும்போது தூணின் அடியில் ஒரு ந்யூஸ் பேப்பரையோ அல்லது கைக்குட்டையையோ தரையில் ஒரு பக்கத்தில் நுழைத்து மறுபக்கம் வழியாக வெளியே எடுத்துப்பார்க்க மறக்காதீர்கள்.

dsc_0378

விஜயநகர கட்டிடக்கலை: கூரை ஓவியங்கள் PC: Road less Travelled

நேர்தியாகப் பாதுகாக்கப்பட்டுவரும் மண்டபத்தின் கூரையில் விரிவான கூரை ஓவியங்கள் விஜயநகரப் பேரரசின் ஓவியக்கலைக்குச் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கருவறைச் சுவர்களிலும், கூரை உட்புறத்திலும் அழகுமிளிரும் சிவபுராண ஓவியங்களைக் காணலாம். இந்த அழகிய வண்ணச்சித்திரங்கள் (frescos) அண்மையில் முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளபடியால் இவற்றின் மேலுள்ள கறுப்புக் கோடுகள், துடிப்பான காவி, பழுப்பு மற்றும் பச்சை நிறங்களைத் தெளிவாகக் காணமுடிகிறது. இந்த ஓவியத் தொகுப்புக்களில் நாம் காணும் ஆடை அணிகலன்கள் மற்றும் முகபாவனைகள் எல்லாம் பெரிய அளவில் நம்மை ஈர்க்கின்றன.

வரலாற்றுப் பதிவுகளின்படி ஜனவரி 26, 1565 ஆம் ஆண்டில் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசின் படைகளை பாமினி சுல்தானின் படைகள் தோற்கடித்தனர். இதைத் தொடர்ந்து சுல்தான்களின் படைகள் ஹம்பி நகரத்தை ஐந்து மாதங்களுக்குள் அழித்துவிட்டார்கள். சுல்தான்களின் படைகள் லெபாக்ஷிக்கும் வந்துள்ளார்கள். ஆனால் ஹம்பியில் ஏற்படுத்திய சேதத்தைப் போல இங்கு அவ்வளவாக சேதம் ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் இங்குள்ள அழகான ஓவியங்கள் சேதமுற்றது.

lepakshi-tour-837

ஏழு தலை நாகத்தின் சுருள்களின் நடுவே மடியில் கருப்பு நிற இலிங்கம் PC: Tourism of India

இக்கோவிலைச் சுற்றி சில அழகிய சிற்பங்களைக் காணலாம். ஏழு தலையுடன் படமெடுத்தாடும் நாகத்தின் சுருள்களின் நடுவே மடியில் பளபளப்பான கருப்பு நிறத்தில் இலிங்கம் உள்ளது. ஏழு தலை நாகத்தின் பாதத்தில் சப்த கன்னிகைகளின் தொகுப்பு செதுக்கப்பட்டுள்ளது. இதுவல்லாமல் இக்கோவிலில் மேலும் ஐந்து இலிங்கங்களைக் காணலாம்.

lepakshi-3

கணேசரின் சிலை PC: Discover the World

இங்குள்ள கணேசரின் சிலை ஹம்பியில் உள்ள சசிவேகளு கணேசரை நினைவு படுத்துகிறது. இக்கோவிலில் இன்னும் சில சிற்பங்கள் உங்கள் கவனத்தைக் கவரலாம். மூன்று தலையுடைய பசுமாட்டின் ஒரு தலை மேய்வதைப் போலவும், இரண்டாம் தலை எங்கேயோ பார்த்தவாறு உள்ளதைப் போலவும், மூன்றாம் தலை கன்று பால் குடிப்பதைப் பார்த்தவாறு உள்ளதைப் போலவும் செதுக்கப்பட்டுள்ளது. அஞ்சனேயஸ்வாமி சிலை இங்கு ஒரு தொட்டிலில் கிடத்தப்பட்டுள்ளது.

lepakshi48

மூன்று தலையுடைய பசுமாடு PC:My Journey in India

இங்குள்ள முற்றுப்பெறாத கல்யாணமண்டபத்தின் தூண்களின் முகப்புகளில் பற்பல வடிவமைப்புகள் (designs) செதுக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் செதுக்கப்பட்ட வடிவமைப்பைப்போல இக்கோவிலில் வேறு எங்கும் காண இயலவில்லை. இக்கோவிலில் காணப்படும் வடிவமைப்புகள் லெபாக்ஷி வடிவமைப்பு என்ற பெயரில் புடைவை, துணிகள் மற்றும் நகைகள் போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

லெபாக்ஷிக்குச் செல்ல

அனந்தப்பூர் செல்வதற்கு எல்லா முக்கிய நகரங்களிலிருந்து ஆந்திரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் (Andhra Pradesh State Road Transport Corporation – APSRTC) பஸ்கள் உள்ளன.

அருகிலுள்ள ஹிந்துபூர் இரயில் நிலையம் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அனந்தபூர் இரயில் நிலையம் பெங்களூரு ஹைதராபாத் மார்க்கத்தில் அமைந்துள்ளது. நந்தியால் மற்றும் கர்னூல் ஆகிய இரயில் நிலையங்களும் இந்த மார்க்கத்தில் அமைந்துள்ளன.

அருகிலுள்ள பெங்களூரு விமானநிலையம் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்புநூற்பட்டி

  1. லெபாக்ஷி விக்கிபீடியா
  2. வீரபத்திரர் http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/veerabathrar.htm
  3. விஜயநகரக் கட்டிடக்கலை, விக்கிப்பீடியா
  4. Bhardwaj, D. S. (1 January 1998). Domestic Tourism in India. Indus Publishing. ISBN 978-81-7387-078-1.
  5. Lepakshi http://www.anantapur.com/travel/lepakshi.html
  6. Lepakshi Temple Indian Mirror http://www.indianmirror.com/temples/lepakshi-temple.html
  7. Lepakshi- Where Stones Speak Volumes. Life is a Vacation.
  8. Marvels of History Lepakshi. August 14, 2015. Road Less Travelled.
  9. Southern India: A Guide to Monuments Sites & Museums. Michell, George (1 May 2013). Roli Books Private Limited. ISBN 978-81-7436-903-1.
  10. Spiritual India Handbook. Knapp, Stephen (1 January 2009). Jaico Publishing House. ISBN 978-81-8495-024-3.
  11. The snake and the bull. J. Kamath. Business Line. January 13, 2003 http://www.thehindubusinessline.com/life/2003/01/13/stories/2003011300060300.htm
  12. Veera Bhadra Temple, Lepakshi and Bhoganandeeswara Temple Nandi Hills, India – A Photo Essay. Alison – June 15, 2011 (Updated: November 21, 2014). Cheese Web https://cheeseweb.eu/2011/06/veerabhadra-temple-lepakshi-bhoganandishwara-temple-nandi-hills-india-photo-essay/
  13. Veerabhadra Temple, Lepakshi Wikipedia
  14. Virabhadra Wikipedia

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், சுற்றுலா and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.