ஆந்திரப் பிரதேச மாநிலம், தடா மண்டல் (థాడా మంటల్), ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு (எஸ்.பி.எஸ்.ஆர்.) நெல்லூர் மாவட்டம், தடா (థాడా) பின் கோடு 524121 நகரம் அருகில் உள்ள ஸ்ரீ சிட்டிக்கு (శ్రీ సిట్టి) வடக்கே தடா அருவி (తడ వస్తుంది)(உப்பலமடுகு நீர்வீழ்ச்சி அல்லது கம்பகம் அருவி) அமைந்துள்ளது. சென்னையிலிருந்து தடா நகரம் வழியாக ஸ்ரீ காளஸ்திக்குச் செல்லும் வழியில் வரதையாபாளம் (அமைவிடம் 13.6°N அட்சரேகை 79.9333°E தீர்க்கரேகை ஆகும்) என்னும் ஊரை அடையலாம். வரதையாபாளம் சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும்; ஸ்ரீ காளஹஸ்தியிலிருந்து 34.3 கி.மீ. தொலைவிலும்; தடாவிலிருந்து 11.7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
கம்பகம் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள தடா அருவி என்னும் உப்பலமடுகு நீர்வீழ்ச்சியைக் கல்லிவேட்டு வழியாக அடையலாம். மலையேற்றம் தொடங்கும் இடம் வரை, சுமார் 7 கி.மீ தூரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. உயர்ந்த தரையிளக்கம் (High Ground Clearance) உடைய ஜீப் போன்ற ஊர்திகள் இந்தக் கரடுமுரடான நிலப்பரப்பில் (rough terrain) செல்ல ஏற்றவை. ஆட்டோரிக்ஷாக்களும் கிடைக்கின்றன. வழியில் உள்ள ஒரு செக் போஸ்ட்டில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ. 50/- உம் மற்றும் ஒவ்வொரு கேமிராவுக்கும் ரூ. 50/- உம் வசூலிக்கிறார்கள். வரதையாபாளத்தில் கிராமத்தவர்களை வழிகாட்டியாக அமர்த்திக்கொள்வது உத்தமம். பயணத்திற்குத் தேவையான உணவு, குடிநீர், மலையேற்ற உபகரணங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு செல்வது நல்லது.

PC: Tamil Nadu Tourism

PC: Tamil Nadu Tourism

PC: Wikimedia Commons
அருவிக்குச் செல்லும் பாதையில் பெயர்ப்பலகைகளையோ அல்லது வழிகாட்டும் குறியீடுகளையோ காணமுடியவில்லை. எனவே வழிநெடுகப் பிறரிடம் வழிகேட்டுக்கொண்டே செல்ல வேண்டியிருக்கும். அருவிக்குச் செல்ல சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணிநேரம் வரை ஆகலாம். இஃது எளிதானதென்றோ அல்லது மிகக்கடினமானதென்றோ சொல்ல இயலவில்லை. ஆனால் ஓரளவுக்குக் கடினமானதுதான். வயதானவர்கள், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் மலையில் ஏறிச்செல்வதைத் தவிர்த்தல் நல்லது. உடல்நலமிக்க மக்களால் மட்டுமே இவ்விடத்தை அடைய முடியும். கற்கள் மேல் நடக்க விரும்பாதவர்களுக்கு இஃது ஏற்ற இடம் அல்ல.
தடா நீர்வீழ்ச்சிக்குச் செல்வதற்கு அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரை ஏற்ற பருவகாலம் (season) ஆகும். நீர்வரத்து அதிகம் இருக்கும் காலம் இது. மகாசிவராத்திரியன்று இங்கு ஏராளமான மக்கள் குறுகியகாலச் சுற்றுலாவாக வந்து அருவியில் குளித்துக் கொண்டாடுகிறார்கள். தடா அருவி ஓர் இயற்கையான அருவி. அதிகம் அறியப்படாத அற்புதமான சுற்றுலாத்தளங்களில் தடா அருவியும் ஒன்று. வனச்சரகத்திற்குள் நுழைந்தவுடன் நேர்த்தியான பாலம் ஒன்று ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சித்துலியா கோண வனப்பகுதியைப் பின்புலமாகக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இனிமையான இயற்கைக் காட்சிகளைக் காணலாம். பசுமையான அடர்ந்த வனப்பகுதி, சலசலக்கும் நீரோடை, சில்லென்ற காற்று தவழும் சூழல் எல்லாம் கண்களுக்கும் மனதிற்கும் விருந்தளிப்பதாக இருக்கிறது.
இயற்கை அழகை இரசிப்போர், பறவைகளைக் கவனிப்பவர்கள், மலையேறும் குழுக்கள் போன்றோருக்கு ஏற்ற இடம் இந்த மலைக்குச் செல்லும் காட்டுவழியும் அருவியுமாகும். முதலில் குறைவான உயரத்திலிருந்து கொட்டும் அருவி. வருகிறது. அருவியின் அடிவாரத்தில் இயற்கையாய் அமைந்த நீச்சல்குளம் உள்ளது. சுத்தமான நீர்நிரம்பிய இக்குளம் மலையேறி வருவோர் நீந்திமகிழவும் ஓய்வெடுக்கவும் ஏற்ற இடம். குடும்பமாய்ச் சுற்றுலா வருவோருக்கு இது மிகவும் ஏற்ற இடம். அருவியை ஒட்டி நிறையப் பிக்னிக் இடங்களைக் காணலாம்.
அருவியைச் சுற்றிப் பாறைகளால் ஆன மலைகளுக்கும் பசுமையான காடுகளுக்குமிடையே சுமார் 100 மீட்டர் உயரத்திலிருந்து பல வெள்ளி நீர்வீழ்ச்சிகள் பிரவாகிக்கின்றன. இந்த அருவிக்குச் செல்லும் அழகிய கரடுமுரடான பாதை இந்தியாவின் பல மலையேற்றக் குழுவினரைச் சுண்டியிழுக்கின்றது. சவால்கள் நிறைந்த மலையேற்றத்தின்போது மலையேறுவோர் தங்கவும் ஓய்வெடுக்கவும் பல இடங்கள் உள்ளன. ஒன்றரை முதல் இரண்டுமணி நேர மலையேற்றத்திற்குப் பின்பு எழில்மிகுந்த அருவிகளின் கண்கவர் தோற்றம் கண்முன்னே விரிகிறது. மலையேறிய களைப்புப் பறந்தோடிப்போகிறது. நினைவில் நிற்கும் அனுபவம் இதுவாகும்.
சித்துலியா கோவில்
இப்பகுதியில் மிகவும் பிரபலமான சிவன் கோவில் உப்பலமடுகு கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள இப்பகுதிக்குச் சித்துலியா கோண என்ற பெயரும் உண்டு. உப்பலமடுகு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளதனால் இங்கும் சுற்றுலாப் பயணிகளும் யாத்திரீகர்களும் வருகிறார்கள். சிவராத்திரியன்று ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.
ரூ. 400 கோடியில் உருவாகியுள்ள கல்கி பகவான் தங்கக் கோவில் நகரம் மற்றும் பழவேற்காடு ஏரி போன்றவை இதன் அருகே அமைந்த பிற சுற்றுலாத் தலங்களாகும்.
வரதையாபாளம் செல்ல…
கோயம்பேடு சி.எம்.பி.டி பஸ் நிலையத்திலிருந்து திருப்பதி மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி செல்லும் எஸ்.இ.டி.சி மற்றும் ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி பஸ்கள் வரதையாபாளயத்தில் நின்று செல்கின்றன.
அருகிலுள்ள இரயில் நிலையம் தடா. சென்ட்ரல் (மூர்மார்கெட்) நிலையத்திலிருந்து தடாவுக்கு இ.எம்.யூ யூனிட்டுகள் சென்று வருகின்றன.
அருகிலுள்ள விமானநிலையம் மீனம்பாக்கம் சென்னை.