சிலா தோரணம்: திருமலா திருப்பதி மலையில் 160 கோடி ஆண்டுகள் பழைமையான பாறைப் படிமம்

சிலா தோரணம் (Telugu: సిలా తిరోనం English: Silathoranam) என்பது இரண்டு கற்பாறைகள் இயற்கையாகத் தோரண வடிவில் பாலம் போல் இணைந்து அமைந்துள்ள அபூர்வமான பாறை ஆகும். “சிலா” என்றால் “கல்,” “தோரணம்” என்றால் “வளைவு” என்றும் பொருள். சிலா தோரணம் என்றால் இயற்கையாக அமைந்த அபூர்வமான பாறை ஆகும். இந்த சிலா தோரணம் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், திருமலா (Telugu: తిరుమల) பின் கோடு 517504 நகரிலிருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இதன் அமைவிடம் 13º41’9.56″ N அட்சரேகை 79º20’26.52″ E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 976 மீ. (3,202 அடி) ஆகும்.

சிலாதோரணத்தைக் காண்பதற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. ஆட்டோ மற்றும் ஜீ போன்ற வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கும். நடந்து செல்ல விரும்பினால் வராகீஸ்வரர் கோவிலிலிருந்து நடந்து செல்வதற்கு 15- 20 நிமிடங்கள் வரை ஆகலாம்.

புராண நம்பிக்கைகள்

இயற்கையாக அமைந்த இப்பாறையில் சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், கருடன் மற்றும் ஐராவதம் போன்ற உருவங்கள் தெரிகிறது என்று சுற்றுலா பயணியர் கூறுகிறார்கள். திருமலையின் இந்த சிலா தோரணப் பாறையின் உயரமும் திருமலை மூலவரின் சிலை உயரமும் ஒன்று என்றும் கூறுகிறார்கள். மூலவரான வெங்கடேஸ்வரப் பெருமாளின் சிலை இந்த குவார்ட்ஸ் பாறையால் செதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. திருமலையின் மூலவர் திருமலையில் தன் பாதத்தை முதன் முதலில் பதித்த இடம் ஸ்ரீவாரி பாடலு அல்லது பாடலு என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் திருமலையில் மிக உயரமான இடமாகும். பெருமாள் தன் அடுத்த அடியை இந்த சிலா தோரணம் அமைந்துள்ள பாறையின் மீது வைத்தாராம். மூன்றாவது அடி தற்போதைய கருவறை அமைந்துள்ள இடத்தின் மீது வைத்து அங்கேயே நின்று அருள் பாலிக்கிறார்.

திருமலையின் மூலவரான வெங்கடேஸ்வரர் உருவச்சிலையில் எந்த நேரத்திலும் 110 டிகிரி வெப்பம் நிலவுகிறது என்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 3202 அடி உயரத்தில் அமைந்துள்ள குளிர் நிறைந்த பருவ நிலை நிலவும் திருமலையின் கருவறையில் மூலவருக்குக் காலை 4.30 மணிக்கு குளிர்ந்த தண்ணீர், பால் மற்றும் பல திரவியங்களால் திருமஞ்சனம் செய்விக்கிறார்கள். திருமஞ்சனம் நிறைவடைந்தவுடன் வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு வியர்த்துக் கொட்டுகிறதாம். அர்ச்சகர்கள் பீதாம்பரத்தைப் பயன்படுத்தி வியர்வையை ஒற்றி எடுக்கிறார்களாம். ஒவ்வொரு வியாழனன்றும் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்வதற்கு முன்பு பெருமாளின் ஆபரணங்களைக் கழற்றுவது வழக்கம். அப்போது இந்த ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதாக அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.

சிலா தோரணம்: புவியியல் தகவல்கள்

இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் புவியியல் வல்லுநர்கள் திருமலா திருப்பதி பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது இந்தச் சிலா தோரணத்தைக் கண்டறிந்து அறிவித்துள்ளனர். இந்த சிலா தோரணத்தின் அகலம் 8 மீ (26.2 அடி), உயரம் 3 மீ. (9.8 அடி) ஆகும்.

குவார்ட்சைட் என்பது மிகவும் நெருக்கமான, கடினமான, மணியுருப் பாறையாகும் (extremely compact, hard, granular rock). பல வண்ணங்கள் கொண்ட குவார்ட்ஸ் என்னும் இந்தப் படிகக்கல் பெரும்பாலும் மாற்றுருவமடைந்த மணற்கல்லாகும். இது செம்பரான் (sarsen) கல்லைப்போல அடிக்கடி சிலிகானாக மாற்றம் காணும் மணற்கல்லாகும்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி மண்டலம், நகரி நகரின் அருகில் அமைந்துள்ள நகரி மலைகளில் இந்த குவார்ட்ஸைட் முதன்முதலாகக் கண்டறியப்பட்டதாம். எனவே இதற்கு ‘நகரி குவார்ட்சைட்’ என்று பெயராகும். தமிழ் நாடு மாநிலம், திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம் மற்றும் குடியம் குகை வளாகங்களில் கண்டறியப்பட்ட கற்கால ஆயுதங்கள் இந்த நகரி குவார்ட்சைட்டால் ஆனது. எனவே நகரி குவார்ட்சைட் பாறைகள் 160 கோடி ஆண்டுகள் பழைமையானது என்று புவியியல் அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். நகரி மலை குவார்ட்ஸைட் பாறை, சிலா தோரணக் குவார்ட்ஸைட் கற்பாறையைவிடச் சற்று பழமையானது.

03-1491218891-7

சிலா தோரணம், PC: Native Plabet

20151121_171922

சிலா தோரணம்

சிலாதோரணத்தைப்போல இயற்கையில் தோரண வடிவில் பாலம் போல் அமைந்த பாறை அமைப்புகள் இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஒன்று கூடா வானவில் (ரெயின்போ) பாலம் (Rainbow Arch Bridge), உட்டா (Utah); இரண்டு டால்ரேடியன் படிகப்பாறை (Dalradian Quartzite), ஸ்காட்லாந்து.

கூடா வானவில் (ரெயின்போ) பாலம் தேசிய நினைவுச்சின்னம். (Navajo Nation), யூட்டா (Utah), அமெரிக்கா (USA). ஒரு மிகப்பெரிய இயற்கைப் பாலம் ஆகும். இந்த ரெயின்போ பாலம், 290 அடி உயரமும் 170 அடி உயரமும் கொண்ட மிகப்பெரிய இயற்கைப் பாலம் ஆகும்.

utah_rainbow_arch

Rainbow Arch Bridge, Utah, USA

6e-langstone-arch

Dalradian Quartzite

சமீபத்தில், சிலா தோரணம் சுற்றுலாத் துறையின் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போது சிலா தோரணம் திருமாலா சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டம் கூட்டமாகச் சுற்றுலா பயணிகள் பஸ்களில் இங்கு வந்து சக்ர தீர்த்தத்தையும் சிலா தோரணத்தையும் பார்வையிடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தை, சிலா தோரணச் சுற்றுலாப் பயணத்திற்குத் தேவையான ஏற்பாட்டைச் செய்யும்படியான சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள். திருமலா திருப்பதி தேவஸ்தானமும் சிலா தோரணத்தைச் சுற்றி “சிலா தோரணத் தோட்டம்” என்னும் ஒரு பூங்காவை அமைத்துள்ளார்கள். பூக்களும், செடிகளும், ஓய்வெடுக்கப் பெஞ்சுகளும் நிறைந்துள்ள இந்தத் தோட்டத்தில் சுற்றுலாப்பயணியர் உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள், மர விளையாட்டுச் சாமான்களை விற்கும் கடைகள் என்று பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.

சிலா தோரணம் அமைவிடம்: திருமலை கோவிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிலாதோரணமும் சக்ர தீர்த்தமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. எனவே இரண்டையும் ஒன்றாகக் காண்பதற்கான உங்கள் சுற்றுப்பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம். இந்த இடங்களுடன் ஸ்ரீவாரி பாதம், பாபவிநாசம் போன்ற இடங்களுக்கும் சென்று வரலாம். இந்த இடங்களுக்குச் சென்றுவர வாடகை ஜீப் உள்ளது. நபர் ஒன்றுக்கு ரூ. 50.00 அல்லது முழு வாகன வாடகை ரூ. 300.00 கட்டணம் ஆகும்.

குறிப்புநூற்பட்டி

  1. திருப்பதி – திருமலை தோரணக் கல் http://mymintamil.blogspot.in/2017/03/natural-arch-at-tirumala-hills-by-Singanenjam.html
  2. திருப்பதியில் ஓர் அதிசயம்! http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9066&ncat=20&Print=1
  3. திருப்பம் தரும் திருப்பதி சக்தி விகடன் செப்டம்பர் 14, 2014 https://www.vikatan.com/sakthivikatan/2014-sep-16/special-story/98440.html
  4. சிலா தோரணம் விக்கிப்பீடியா
  5. Carved by time The Hindu July 20, 2011
  6. Natural Arch Tirumala Hills (Wikipedia)
  7. Silathoranam (శిలాతోరణం) (Tirumala) Wikimapia http://wikimapia.org/9250406/Silathoranam-%E0%B0%B6%E0%B0%BF%E0%B0%B2%E0%B0%BE%E0%B0%A4%E0%B1%8B%E0%B0%B0%E0%B0%A3%E0%B0%82

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், சுற்றுலா and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to சிலா தோரணம்: திருமலா திருப்பதி மலையில் 160 கோடி ஆண்டுகள் பழைமையான பாறைப் படிமம்

  1. Venkat சொல்கிறார்:

    சிலா தோரணம் பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    Like

    • முத்துசாமி இரா சொல்கிறார்:

      நன்றி. திரு.வெங்கட் ஐயா.

      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      புது தில்லி எனக்கு பழக்கமான நகரம் தான். என்றாலும் தங்கள் பார்வை புதிதாகவும் சுவையாகவும் உள்ளது. பயணங்களை சுவையாக விவரித்துள்ளீர்கள். எடுத்துக்காட்டு வைசாக்கின் அருகிலுள்ள அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் போர்ரா குகை பற்றிய தொடர் பதிவுகள். வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. அடிக்கடி தங்கள் வரவை எதிர்நோக்கியுள்ளேன்.

      நன்றி
      அன்புடன்
      இரா.முத்துசாமி

      Like

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    சிலா தோரணம் அறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன் ஐயா
    நன்றி
    முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
    இனி தொடர்வேன்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.