பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2

பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 (தொடர்ச்சி)

பாதாமி குடைவரைக் கோவில் 2

முதல் குடைவரையிலிருந்து 64 படிகளைக் கடந்து சென்றால் உங்கள் வலது புறத்தில் பாதாமியின் இரண்டாவது குடைவரைக் கோவிலைக் காணலாம். விஷ்ணுவே இக்குடைவரையின் மூலவர் ஆவார். இக்குடைவரையில் விஷ்ணுவின் அவதாரங்களான வராஹர், திரிவிக்கிரமன் ஆகியோரைக் காட்டும் சிற்பத் தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கி.பி. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டதாகும். பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரை அமைக்கப்பட்டதாக நம்ம்பபடுகிறது. இந்த இரண்டாம் குகையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் இரண்டாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது.

முதல் குடைவரையைவிட இரண்டாம் குடைவரை சற்று சிறியது. என்றாலும் முதல் குடைவரையின் தரைத்தளத் திட்டத்திற்கு (floor plan) ஒப்பாக  இரண்டாம் குடைவரை அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரைக் கோவில் வடக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளது.

badami_caves_3

பாதாமி இரண்டாம் குடைவரை PC: Wikimedia Commons

வடக்குத் திசையை நோக்கி அமைந்துள்ள இந்தக் குடைவரைக்கு முன்னால் அமைந்துள்ள சமதளத்திலிருந்து குடைவரையை அடைய, இரு புறமும் கைபிடிச்சுவருடன் கூடிய, ஆறு படிகள் உதவுகின்றன. இந்தச் சமதளம் தற்காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். இந்த இரண்டாம் குடைவரையில், உபானம், ஜகதி, குமுதம், கண்டம் போன்ற உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளத்தில் நடனமாடும் குள்ளவடிவக் கணங்கள் (frieze of dancing ganas) செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இரண்டாம் குடைவரை முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், அர்த்தமண்டபம் சதுர வடிவிலான கருவறை ஆகிய அங்கங்களைக் கொண்டுள்ளது. குடைவரையின் முகப்பு போதிய அளவுக்கு அகலமாகவும், உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.  குடைவரையின் முகப்பில் பட்டிகையை அடுத்து சதுரம், கட்டு, சதுரம் வடிவில் அமைந்த நான்கு முழுத்தூண்களையும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களையும் கொண்டமைந்துள்ளது. மொத்தம் ஐந்து அங்கணங்களையும் (தூண் இடைவெளிகள்) காணலாம். தூண்களின் மேல்  போதிகைகள் உத்தரம் தாங்குகின்றன.

தூண்களுக்கு மேல் போதிகைகளுக்கு மேல் அமைந்துள்ள உத்தரத்தின் உதைகால்களின் (Strut) மேல் (கொடுங்கைகளின் (Cornice) கீழ்) சிலையுருவத்தூண்களாக (Caryatid) மனித உருவங்கள், வானுலக த்தேவதைகள் மற்றும் விலங்குகளின் உருவங்களை அமைத்துள்ளனர்.

உத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன. உத்தரத்திற்கு மேலே வாஜனம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. கூரையின் நீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாக நன்கு சமன்படுத்தப்பட்டுள்ளது.

துவாரபாலகர்கள்

முகப்பின் இரு பக்கங்களிலும் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இரண்டு துவாரபாலகர்கள் (வாயிற் காவலர்கள்) காவல் புரிகிறார்கள். இவர்கள் இரண்டு கால்களையும் சமபங்கமாகத் தரையில் ஊன்றியுள்ளனர். தலையில் ஜடாபாரம், கழுத்தில் சரப்பளி, உபவீதமாக யஞ்யோபவிதம், உதரபந்தம், கைவளை, தோள்வளை எல்லாம் அணிந்துள்ளனர். இடையில் ஆடை கற்றையாய் சுருக்கிஇடுப்புப் பட்டையுடன் இணைக்கப்பட்ட முடிச்சு இடதுபுறம் தொடைவழியே தொங்குகிறது. இடது கை இடைக்கட்டின்மேலும், வலது கை பூக்களை ஏந்தியவாறும் உள்ளன.

 

badami30_1024

துவாரபாலகர் PC: GOPAN G NAIR

வராஹா சிற்பத் தொகுப்பு

இரண்டாம் குடைவரையில் அமைத்துள்ள ஒரு மிகப்பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி வராஹா சிற்பத் தொகுதியாகும்.

வராஹா சிற்பத் தொகுப்பில் விஷ்ணு வராஹ அவதாரத்தில் இந்தப் பூமியின் கடவுளான பூதேவியைக் கடலின் ஆழத்திலிருந்து மீட்டு வருவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. வராஹர் வலது காலைத் தரையில் ஊன்றியும், இடது முழங்காலைச் சற்று மடித்துச் சற்று உயரத்தில் ஊன்றியுள்ளார். இவர் நான்கு கரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.  தன் மேல் வலது கையில் சக்கரத்தையும், கீழ் வலது கையில் கதையையும்,  தன் மேல் இடது கையில் சங்கையும்  ஏந்தியுள்ளார். தன் கீழ்  இடது கையால் பூதேவியைத்  தூக்கிப் பிடித்துள்ளார். ஒல்லியான தேக அமைப்புடன் காட்டப்பட்டுள்ள பூதேவி தன் உடலை வராஹரை நோக்கி வளைத்துள்ளார். பூதேவியின் வலது கை வராஹரின் மூக்கைத் தொட்டவாறு காட்டப்பட்டுள்ளது. வராஹரின் காலடியில் சேஷ நாகத்தின்  மார்பளவு மனித உருவம் வணங்கிய நிலையிலும் மார்பிற்குக் கீழே பாம்பின் உருவம் சுருளாகவும் காட்டப்பட்டுள்ளது. மார்பளவில்  மற்றும் இரண்டு மனித உருவங்கள் வணங்கிய நிலையிலேயே செதுக்கப்பட்டுள்ளனர். வராஹர் சிற்பத் தொகுப்பிற்குக் கீழே  கணங்களின் (குள்ளர்களின்) வரிசையைக் காணலாம்.

badami_cave_2_si05-1588

வராஹச் சிற்பத் தொகுதி PC: Wikimedia Commons

குப்தர்களின் (கி.பி. 4-6 நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்த ஒரு வராஹச் சிற்பத் தொகுப்பு மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உதயகிரி குகையில் காணப்படுகிறது. இதில் வராஹர் பூதேவியைத் தன் கொம்பில் ஏந்தியுள்ளார். இது போன்ற வராஹச்  சிற்பத் தொகுப்பு மாமல்லபுரம் வராஹ மண்டபத்தின் வடக்குச் சுவற்றில் நடுநாயகமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி. 630 – 668) காலத்தில் அகழப்பட்ட இக்குடைவரை பண்டைய திராவிடக் கட்டடக் கலைப்பாணியைப்  பறைசாற்றுகிறது. நாமக்கல்லில் நரசிம்மஸ்வாமி குடைவரைக் கோவிலில் ஒரு வித்தியாசமான வராஹர் சிற்பத் தொகுப்பைக் காணலாம்.

வராஹர் புராணக் கதை

விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மூன்றாவதாக அமைந்த அவதாரம் வராஹ அவதாரம் ஆகும். இரணியாட்சன் பலமிக்க அசுரன். தன்னுடன் போர் புரியச் சமமான எதிரியைத் தேடி வந்தான். இவனுக்குச் சமமாக யாரும் இல்லை என்று ஆணவம் கொண்டான். பூமியைப் பாய்போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்துவிட்டான். கதாயுதத்தை ஏந்தியபடி கர்ஜனை செய்துகொண்டு சுற்றித் திரிந்தான். தேவர்கள் இவன் கொடுமையிலிருந்து தப்பிக்க விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

விஷ்ணு, தன் அடியவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டி, பிரம்மாவின் நாசித்துவாரத்திலிருந்து வெள்ளைப் பன்றியின் உருவெடுத்துத் தோன்றினார். தொடக்கத்தில் கட்டைவிரல் அளவிலேயே இருந்தார். தொடர்ந்து ஒரு யானையின் அளவுக்குத் தன் உடலை வளர்த்தினார். மென்மேலும் வளர்ந்து மண்ணுக்கும் விண்ணிற்குமாக நின்றார். தன் கூரிய கொம்புகளால் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த பூமியைத் தூக்கி நிறுத்தியவாறு வெளிப்பாட்டார். சினமிகுந்து வராஹரிடம் போரிட்ட இரணியாட்சனை வதம் செய்து தர்மத்தை நிறுவினார். இது வராஹ புராணம் கூறும் கதை.

திரிவிக்ரமன் சிற்பத் தொகுப்பு

இரண்டாம் குடைவரையில் அமைத்துள்ள மற்றொரு மிகப்பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி திரிவிக்ரமன் சிற்பத் தொகுதியாகும்.

திரிவிக்ரமன் புராணக் கதை

புராண காலத்தில் மகாபலி என்ற அசுரன்  மூவுலகையும் வென்று அடக்குமுறைமிக்க ஆட்சி புரிந்தான். தவமியற்றி இவன் பெற்ற வரங்கள் ஏராளம். தானம் புரிவதில் நிகரற்றவன் என்றாலும் ஆணவம் மிகுந்து தேவர், முனிவர் உள்ளிட்ட அனைவருக்கும் அச்சம் விளைவித்துத் துன்புறுத்தி வந்தான். தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். இந்த நிலையில் மகாபலி மாபெரும் யாகம் நடத்தி அந்தணர்களுக்குத் தானம் அளித்துவந்தான். விஷ்ணுவும் தன் அடியவர்களைக் காக்கத் திருவுளம் கொண்டு குள்ள உருவங்கொண்ட வாமணனாக அவதாரம் எடுத்தார்.

மகாபலியின் யாகத்தில் கலந்துகொண்டு அந்த மன்னனிடம் தானம் பெற எண்ணி அங்குச் சென்றார். மகாபலியும் வாமணருக்குப் பூஜை செய்து வரவேற்றான். வாமணர் தன் திருவடியால் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். அசுரகுரு சுக்ரச்சாரியாரோ வாமணராக வந்திருப்பது விஷ்ணுவே என்று தெரிந்து மகாபலியைத் தடுக்க எண்ணினார்.

வாமணனுக்குப் பூஜைகள் செய்த மகாபலி அவன் விரும்புவதை அளிப்பதாக வாக்களித்தான். வாமணனாக வந்த மகாவிஷ்ணு, தன் திருவடியால் மூன்றடி மண் வேண்டுமெனக் கேட்டான். அவன் ஆதிமறை நாயகன் நாராயணனே என்பதை அறிந்து கொண்ட அசுர குரு சுக்கிராச்சார்யார், மகாபலியின் தானத்தைத் தடுக்க முயன்றார். விஷ்ணுவே தன்னிடம் தானம் கேட்பது பெருமைக்குரியதுதானே என்று கருதிய மன்னன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் துணிந்தான்.

வாமணன் அனைவரும் வியக்கும் வண்ணம் திரிவிக்ரமனாக மண்ணுக்கும் விண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்தார்.  ஒரு காலால் மண்ணையும் மற்றொரு காலால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று மகாபலியைக் கேட்டார்.

மூன்றாவது அடியைத் தன் தலை மேல் வைத்துத் தன் தலையை அளந்து கொள்ளுமாறும்,  தன்னையும், தன் உடைமைகளையும் ஏற்று அருள் புரியுமாறும் வேண்டிக் கொண்டான். திரிவிக்ரமனும் தன் பாதத்தை மன்னனின் தலைமீது  வைத்து அவனைப் பாதாள லோகத்துக்குத் தள்ளினார்.

7th_century_trivikrama2c_vishnu_avatar_vamana_legend_in_cave_22c_badami_hindu_cave_temple_karnataka

திரிவிக்ரமன் சிற்பத் தொகுதி PC: Wikimedia Commons

திரிவிக்ரமன் சிற்பத் தொகுதி

இந்தச் சிற்பத் தொகுதியில் திரிவிக்ரமன் எட்டுக்கைகளுடன், வலது காலை நிலத்தில் ஊன்றியவாறு இடக் காலால் வையத்தை அளந்தபடி காட்சி தருகிறார். மேல் வலக் கையில் சக்கரமும், கீழ் வலக் கைகளில் கதையும், வாளும், மேல் இடக் கையில் சங்கமும்,  கீழ் இடக் கைகளில் வில்லும், கேடயமும் ஏந்தியுள்ளார்.  ஒரு புறம் மகாபலி திரிவிக்ரமனின் வலது காலைப் பற்றியவாறு மன்றாடுவது போலவும்  ,மறுபுறம் மகாபலி திரிவிக்ரமனின் இடது காலுக்குக் கீழே சாபவிமோசனம் பெற்றுத் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் பாதாள உலகத்திற்குச் செல்லுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.

திரிவிக்ரமன் சிற்பதிற்குக் கீழே இடப்புறம் வாமணன் மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாகப் பெரும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாபலிச் சக்ரவர்த்தி தன் அரசியுடன் நின்றவாறு நீர் வார்த்துத்  தானம் அளிக்கும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

இது போன்ற திரிவிக்ரமன் சிற்பத் தொகுப்பு மாமல்லபுரம் வராஹ மண்டபத்தின் வடக்குச் சுவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி. 630 – 668) காலத்தில் அகழப்பட்ட இக்குடைவரை பண்டைய திராவிடக் கட்டடக் கலைப்பாணியைப்  பறைசாற்றுகிறது. நாமக்கல்லில் நரசிம்மஸ்வாமி குடைவரைக் கோவிலில் ஒரு வித்தியாசமான திரிவிக்ரமன் சிற்பத் தொகுப்பைக் காணலாம்.

மகாமண்டபம்

மகாமண்டபத்தில் அமைப்பட்டுள்ள உட்புறத் தூண்களின் அடிப்பகுதி நான்முக வடிவிலும் மேற்பகுதி நான்முக வடிவிலும் கும்பம் (pin cushion capital) குமிழ்வான (bulbous) நான்முக வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. தூணின் தலைப்பகுதிக்கு மேலே அமைந்துள்ள பட்டைகளுடன் கூடிய விரிகோணத் தரங்கப் போதிகைகள்  (Ribbed Potikas with Median Bands) (தரங்கப் போதிகை = அலைகளுக்கு அலை அலையான மேற்பரப்புடன் நடுவில் சிறிய பட்டையையும்  கொண்டிருக்கும்). போதிகைக்கு மேல் அமைந்துள்ள கூரை உறுப்புகளில் உத்திரம், வாஜனம், வாலபி போன்றவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

badami24_1024

PC: GOPAN G NAIR GOPS Photography

மண்டபத்தின் கூரை குறுக்கு உத்தரங்களால் பத்திகளாகப் (Coffers) பிரித்தமைக்கப்பட்டுள்ளன. கூரையின் ஒரு சதுரச் சட்டகத்தில் பதினாறு மீன்களைக்கொண்டு ஆரங்களைப் (spokes) போல அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இரு புறமும் அமைக்கப்பட்டுள்ள சட்டகங்களில் பறக்கும் நிலையில் ஆண்-பெண் இணையும் (flying couple) ஸ்வஸ்திகாக் கட்டமும் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தில் உத்தரத்திற்கு மேல் உள்ள பகுதியில் இந்துப் புராண நூலாகிய பாகவத புராணத்துக் கதைகள்  சிற்ப வரிசைகளாகக் (friezes) காட்டப்பட்டுள்ளன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி (சமுத்திர மந்தன்); கிருஷ்ணரின் பிறப்பு மற்றும் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சி போன்றவை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அர்த்தமண்டபம்

அர்த்தமண்டபம் 33.33 அடி (10.16 மீ) அகலமும் (width), 23.583 அடி (7.188 மீ) ஆழமும் (depth) மற்றும் 11.33 அடி (3.45 மீ) உயரமும் (height) பெற்றுள்ளது. இம்மண்டபத்தை, வரிசைக்கு நான்கு வீதம், இரண்டு வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ள எட்டு சதுர தூண்கள் தாங்குகின்றன. அர்த்தமண்டபக் கூரையில் பறக்கும் தம்பதிகள், பிரம்மா, சேஷ நாகத்தின் மேல் பள்ளிகொண்ட விஷ்ணு ஆகிய சிற்பங்களைக் காணலாம்.

கருவறை

குடைவரையின் பின்புறம் உள்ள சுவரில் ஒரு சதுர வடிவக் கருவறை அகழப்பட்டுள்ளது. கருவறைக் கதவு நிலையின் விட்டத்தில் தலை சிற்பங்களாகக் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் குடைவரையைச் சுற்றிப் பார்த்தோம். குடைவரையில் பல சிற்பத் தொகுப்புகளைக் கண்டோம். நேர்த்தியான செதுக்கல்களையும் கண்டோம். அடுத்த குடைவரைக்குச் செல்வோமா? குடைவரை மூன்றாம் குடைவரையும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புநூற்பட்டி

  1. Badami cave temples https://en.wikipedia.org/wiki/Badami_cave_temples
  2. Badami Cave Temples – Four Ancient Rock cut Templeshttp://www.wondermondo.com/Countries/As/India/Karnataka/Badami.htm
  3. Badami : Magnicient Caves of Ancient India http://gops.org/?p=973
  4. The Remarkable Cave Temples of Southern India. George Michell.https://www.smithsonianmag.com/travel/remarkable-cave-temples-architecture-nagara-dravidian-southern-india-deccan-chalukya-180957971/

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

9 Responses to பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2

  1. அரிய தகவல்கள் அறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே…
    தொடர்கிறேன்…..

    Like

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    படங்களும் தகவல்களும் வியப்பைத் தருகின்றன ஐயா
    நன்றி

    Like

  3. Subha Raveendran சொல்கிறார்:

    குடைவரை கோவிலுகளின் பதிர்வு அறிவை விரிவுப்படுத்துது..ரொம்ப நல்லா இருக்குது…3_ம் நூற்றாண்டில் (அப்படி ஞாபகம்) உள்ள அஐந்தா கோவில்களை ஞாபகப்படுத்தம் சிற்பங்கள்… வாரகமூர்த்தி இலக்மியை தேற்றயில் தூக்கி உயர்த்தும் சிற்பம் அமோகமாயருக்கு…அதன் பக்கம் நாக உடல் உள்ள உருவமும் செதுக்கியிருக்கு..வாழ்த்துக்கள் சார்..

    Like

  4. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3 | அகரம்

  5. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3 | அகரம்

  6. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3 – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.