பாதாமியில் நாம் கண்ட இந்த நான்கு குடைவரைக் கோவில்களைத் தவிர, வேறு சில இயற்கைக் குகைகளும் இடைக்காலத்தைச் சேர்ந்த கற்கோவில்களும் உள்ளன. முன்பு நாம் பார்த்த அகஸ்தியர் தீர்த்த குளத்தையொட்டி கிழக்குத் திசையில் பூதநாதா கோவில்களின் தொகுதியின் அருகே கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய அளவில் அமைந்த சாளுக்கியர் காலத்து இயற்கைக் குகைத் தளம் ஒன்று காணப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சிறிய கோவில் ஒன்று அனந்தசயன விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனந்தசயன விஷ்ணு பாம்பணையில் சயனித்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளார். பூதநாதா தீர்த்தக் குளத்திற்குப் போகும் வழியில் மணற்பாறை ஒன்றில் வராஹர், கணேசர், மும்மூர்த்திகள், மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர் ஆகியோர் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். பாதாமியின் வடக்குக் கோட்டைப் படிக்கட்டையொட்டி சற்றுத் தொலைவில் செங்குத்தான பாறையில் கப்பெ அரபட்டா (Kappe Arabhatta) என்ற பெயருடன் கன்னடக் கல்வெட்டு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது.
இயற்கையாக அமைந்த குகைத் தளம் புத்தர் குகை என்று அறியப்படுகிறது. இக்குகைத் தளம் மேம்படுத்தப்பட்டிருந்தாலும் இது தொடக்கக் காலத்தைச் (early period) சேர்ந்ததாக இருக்கலாம். இக்குகைத் தளத்திற்குள் கைகளாலும் முழங்கால்களாலும் தவழ்ந்துதான் உள்ளே செல்ல முடியும்.

பாதாமி புத்தர் குகை. PC: Wikimedia Commons
இந்த இயற்கையாக அமைந்த குகைதளத்தில் அரியணையின் மேல் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் ஓர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தலைக்குமேல் ஒளிவட்டமும், கோட்டுருவாய் தாமரை இதழ்களும் காட்டப்பட்டுள்ளன. பீடத்தின் முகத்தில் உள்ள இரண்டு பக்க பேனல்களின் (Side Panels) இரண்டு சிங்கங்கள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளன. நடுவில் உள்ள பேனலில் அடையாளம் காணவியலாத உருவம் ஒன்று இரு சக்கரங்களுக்கு நடுவில் காட்டப்பட்டுள்ளது.
அமர்ந்து காணப்படும் இந்த உருவத்தின் இரு மருங்கிலும் சாமரம் வீசும் மாந்தர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சாமரம் வீசும் மாந்தர்களின் நெற்றியில் காணப்படும் விபூதிக் கீற்றுகள் பிற்காலத்தில் வரையப்பட்டிருக்கலாம். ஓர் அரச மரமும் (Pipal tree), தாக்கும் நிலையில் யானைகளும் சிங்கங்களும் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தின் ஒரு புறத்தில் சக்கரமும் மறுபுறத்தில் சங்கும் காட்டப்பட்டுள்ளன. வலது கை அபய முத்திரை காட்ட இடது கை மடியின் மீது வைக்கப்பட்டுள்ளது. கைகளில் காணப்படும் விபூதிக் கீற்றுகள் பிற்காலத்தில் வரையப்பட்டிருக்கலாம். இந்த உருவம் மார்பில் யஞ்யோபவிதமும் உடம்பில் ஏராளமான நகைகளும் அணிந்து காணப்படுகிறது. உருவத்தின் முகம் சிதைந்துள்ளது.
சரி இந்த உருவம் யாரைக் குறிக்கிறது? இது பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. புத்தர் உட்கார்ந்த நிலையில் காட்சி தருவதாக ஒரு கருத்து உள்ளது. இந்தக் கருத்தையொட்டி இருபுறமும் சாமரம் வீசும் மாந்தர்கள் போதிசத்துவர்கள் (Bodhisattva) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜார்ஜ் மிச்செலும் (George Michell) ஒளி வட்டம், அரச மரம், அங்கி போன்ற ஆடையைக் கொண்டு இவ்வுருவம் புத்தரே என்று நிறுவுகிறார். இக்குகைத்தளம் பெளத்த வழிபாட்டிலிருந்து இந்து வழிப்பாட்டிற்கு மாறிய காலத்தைச் சேர்ந்தது என்பது இவருடைய வாதம்.
இந்தியாவின் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகத்தைச் (Prince of Wales Museum) சேர்ந்த பொறுப்பாளரும் தொல்லியல் அறிஞருமான (Curator and Archaeologist) திரு.பி.வி.செட்டி (B.V. Shetti), விஷ்ணுவின் 9 வது அவதாரமாக இந்தப் புத்தரை அடையாளம் காட்டுகின்றனர். இந்தப் புத்தர் சிற்பம் பெளத்த வழிபாட்டிலிருந்து இந்து வழிபாட்டிற்கு மாறிய காலத்தைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். இவருடைய வாதத்திற்கு ஆதரவாகப் புத்தர் படிமவியலில் (Buddhist Iconography) சக்கரம், சங்கு, நகைகள் போன்றவை காணப்படுவதைச் சுட்டுகிறார். இந்து புராணங்களின் மாயமோஹா (Mayamoha of the Hindu Puranas) அல்லது விஷ்ணுவின் புத்த அவதாரம் (Buddhavatara Vishnu) என்னும் மதமாற்ற காலத்தைச் சேர்ந்ததாக இந்தப் புத்தர் உருவத்தைக் கொள்ளலாம்.

அரியணையில் அமர்ந்த நிலையில் புத்தர் PC: Wikimedia Commons

அனந்தசயன விஷ்ணு PC: Wikimedia Commons
சர்ச்சைக்குரிய புத்தர் குகைதளத்திற்கு அருகில் அமைந்துள்ள கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய தளம் நான்கு கரங்களுடன் காட்சி தரும் அனந்தசயன விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ‘விஷ்ணு’ என்றால் ‘எங்கும் வியாபித்திருப்பவன்’ என்று பொருள்படும். பரம், வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என ஐந்து வகை நிலைகளில் இருந்து உலகத்தைக் காத்தருளுகிறார் மகா விஷ்ணு என்று வேதங்கள் உரைக்கின்றன. பெருமாளின் எட்டு வகை சயனக் கோலங்கள்: 1. உத்யோக சயனம், 2. மாணிக்க சயனம், 3. தவ சயனம், 4. தர்ப்ப சயனம், 5. போக சயனம், 6. வீர சயனம், 7. வடபத்ர சயனம், 8. புஜங்க சயனம்.
வலது மேல்கையைத் தலைக்கு அணைவாக வைத்துக்கொண்டு வலது பக்கம் ஒருக்களித்துப் படுத்தவாறு விஷ்ணு பாம்பணையில் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். ஏழுதலை அனந்த நாகம் குடையமைத்துள்ளது. திருமுடியில் கிரீடம், காதில் குண்டலங்கள், கழுத்தில் ஆபரணங்கள், மார்பில் யஞ்யோபவிதம் ஆகிய எல்லாம் அணிந்துள்ளார். கீழ் வலதுகையை மார்பில் பதித்துள்ளார். மேல் இடக்கையில் கீழ் இடது கையை இடப்புறத் தொடையில் பதித்துள்ளார். வலதுகாலை நீட்டியும் இடது காலை வலது காலின் மேல் குறுக்காக மடித்தும் வைத்துள்ளார். அமர்ந்த கோலத்தில் இலக்குமியும் நின்ற கோலத்தில் கருடனும் வணங்கிய நிலையில் காணப்படுகிறார்கள்.

பேலூர் அனந்தசயன விஷ்ணு PC: S.Murugavel Pinterest
விஷ்ணு அண்ட சுழற்சியை (Cosmic Cycle) மீண்டும் துவக்கி உயிர்களுக்கு மீண்டும் பிறப்பளித்துக் காக்கிறார். அனந்தசயன விஷ்ணுவிற்கு மேலே விஷ்ணுவின் மத்சயம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனம், பரசுராம, ராம, கிருஷ்ணா, புத்த, கல்கி ஆகிய பத்து அவதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. நரசிம்மருக்கும் வாமனருக்கும் இடையில் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்து பிரமன் காட்சி தருகிறார். பிரமனுக்கு இடப்புறம் மும்மூர்த்திகளாக விஷ்ணு, சிவன் மற்றும் பிரமன் காட்சிதருகிரார்கள். ஒரு பசுங் கன்றுக்கு பால் புகட்டியவாறு காணப்படுகிறது.

PC: kevinstandagephotography
அனந்தசயன விஷ்ணு தளத்திலிருந்து பூதநாதா கோவில் தொகுதிகளுக்குச் செல்லும் வழியில் ஒரு மணற்பாறையில் வராஹர், கணேசர், பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்), மகிஷாசுரமர்த்தினி (துர்க்கை), உக்கிர நரசிம்மர் (ஹிரண்ய வதம்) ஆகியோர் உருவங்கள் அடங்கிய பேனல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குக் கீழே செதுக்கப்பட்டுள்ள மற்றொரு பேனல் வரிசை தெளிவற்ற நிலையில் காணப்படுகிறது.

கப்பெ அரபட்டா கல்வெட்டு கன்னட பாடல் PC: Wikimedia Commons
கப்பெ அரபட்டா (English: Kappe Arabhatta; Kannada: ಕಪ್ಪೆ ಅರಬ್ಹಟ್ಟಾ) ஒரு சாளுக்கிய போர் வீரன். இவ்வீரன் ஒரு பழைய கன்னட கல்வெட்டுச் செய்யுள் மூலம் அறியப்படுகிறான். இந்தக் கல்வெட்டு பாதாமியில் அகஸ்தியா தீர்த்தக் குளத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள செங்குத்தான பாறையில் (Cliff) பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கன்னடக் கல்வெட்டு பத்து வரிகளுடன், ஐந்து செய்யுள் பத்திகளைக் (stanza) கொண்டுள்ளது. எழுத்து வடிவம் (Script) கன்னடமாகும். ஐந்து செய்யுள் பத்திகளில் இரண்டாம் பத்தி சம்ஸ்கிருத ஸ்லோகமாக இடம்பெற்றுள்ளது. மீதி நான்கு பத்திகள் திரிபாதி என்னும் கன்னட இலக்கியச் சந்தத்தில் (Tripadi, a Kannada verse metre) இயற்றப்பட்டுள்ளது. இந்தச் கல்வெட்டுச் செய்யுளில் தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே இஃது இயற்றப்பட்ட காலம் கி.பி. 700 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
பம்பாய் பிரசிடென்சியின் அரசிதழ் 1884 ஆம் ஆண்டு, பக்கம். 558 படி (Gazetteer of the Bombay Presidency 1884, p. 558), கப்பெ அரபட்டா கல்வெட்டு பாதாமி நகரின் (அகஸ்தியா) செயற்கை ஏரியை நோக்கியவாறு (தென்கிழக்கு மூலையில்), அமைந்துள்ளது:
பாதாமி, தட்டுகோட்டி (Tattukoti) குக்கிராமத்தின் வடமேற்குப் பகுதியில், (அகஸ்தியா) ஏரியின் வடகிழக்கு மூலையில், தரையில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு அடி உயரத்தில், பொறிக்கப்பட்ட தேதி குறிப்பிடாத (undated inscription), ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆகும். இந்தச் செங்குத்தான பாறைக்குச் செல்லும் வழி, (அகஸ்தியா) நீர்தேக்கதிற்குச் செல்லும் வழியில் இடதுபுறமாக, பவன்பந்தே கோட்டே என்ற வடக்குக் கோட்டைக்குப் பின்புறம் அல்லது கிழக்கு மலைப்பாதை தொடங்குமிடத்தில், தட்டுகோட்டி மாருதி கோவில் செல்லும் வழியில், அரைவாசி தூரத்தில் அமைந்துள்ளது. கல்வெட்டு 3 அடி 4 ½ அங்குல உயரமும் 2 அடி 10 அங்குல அகலமும் கொண்டது. (கல்வெட்டின்) பொருள் (meaning) தெளிவாக இல்லை, ஆனால் உள்ளூரில் புகழ் பெற்ற புனிதரான கப்பெ அரபட்டாவின் பதிவு இஃது என்று தெரிகிறது. கல்வெட்டிற்குக் கீழே 3 அடி 7 அங்குல பரப்பளவில், வட்ட வடிவப் பட்டையின் நடுவில், பத்து இதழ்களுடன் கூடிய தாமரை மலரின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
Cut on the cliff, ten or twelve feet from the ground, on the north-west of the hamlet of Tattukoti, on the north-east corner of the lake, is an undated inscription of the sixth or seventh century. The way to the cliff is on the left going up from the reservoir by the rear or east ascent to the Bavanbande-kote or north fort and about half-way up to the shrine of Tattukoti Maruti. The writing covers a space of 3 feet 4½ inches high by 2 feet 10⅓ inches broad. The meaning is not clear, but it seems a record of Kappe Arabhatta, a saint of local fame. Below the inscription and covering a space of about 3 feet 7 inches is cut a round band with a floral device apparently a ten-leaved lotus inside it, and with what seems to be a fillet, with a ribbon crossed in a double loop, handing from it.

கப்பெ அரபட்டா கல்வெட்டு
கல்வெட்டுப் பாடம் கன்னட மொழியில் (Text of the Inscription in Kannada)
ಕಪ್ಪೆ ಅರಭಟ್ಟನ್ ಶಿಷ್ಟಜನಪ್ರಿಯನ್ ಕಷ್ಟಜನವರ್ಜಿತನ್ ಕಲಿಯುಗ ವಿಪರೀತನ್ ವರನ್ತೇಜಸ್ವಿನೋ ಮೃತ್ತ್ಯರ್ನತು ಮಾನಾವಖಣ್ಡನಂ ಮೃತ್ತ್ಯುಸ್ತತ್ಕ್ಷಣಿಕೋ ದುಃಖಮ್ ಮಾನಭಂಗನ್ ದಿನೇದಿನೇ ಸಾಧುಗೆ ಸಾಧು ಮಾಧೂರ್ಯ್ಯಂಗೆ ಮಾಧೂರ್ಯ್ಯಂ ಬಾಧಿಪ್ಪ ಕಲಿಗೆ ವಿಪರೀತನ್ ಮಾಧವನೀತನ್ ಪೆರನಲ್ಲ ಒಳ್ಳಿತ್ತ ಕೆಯ್ವೊರ್ ಆರ್ ಪ್ಪೊಲ್ಲದುಮ್ ಅದರನ್ತೆ ಬಲ್ಲಿತ್ತು ಕಲಿಗೆ ವಿಪರೀತಾ ಪುರಾಕೃತಂ ಇಲ್ಲಿ ಸನ್ಧಿಕ್ಕುಂ ಅದು ಬಂದು ಕಟ್ಟಿದ ಸಿಂಘಮನ್ ಕೆಟ್ಟೊದ್ ಎಮಗೆನ್ದು ಬಿಟ್ಟವೊಲ್ ಕಲಿಗೆ ವಿ[]ರೀತ ಅಹಿತರ್ಕ್ಕಳ್ ಕೆಟ್ಟರ್ ಮೇಣ್ ಸತ್ತರ್ ಅವಿಚಾರಮ್
ஆங்கிலத்தில் ஒலிபெயர்ப்பு
kappe arabhTTan shiSTajanapriyan kaShTajanavatjitan kaliyuga vipareetan varantEjasvinO mrutyu na tu mAnAvakhandanam mruttyustatkaNikO dukham mAnabhngan dinEdinE sAdhuge sAdhu mAdhUryyange mAdhUyyam bAdhippa kalige kaliyuga viparItan mAdhavan Itan peRanalla oLLitta keyvor Ar ppolladum adaRnte ballittu kalige viparItA purAkrutam illi sandhikkum adu bandu kaTTida singhaman keTTod En emagendu biTTavol kalige vi[p]arItan ahitarkkaL keTTar mEN sattar avicAram
மொழிபெயர்ப்பு
சுருக்கம்: இந்தப் போர்வீரன் இவனுக்கு நன்மை செய்பவர்களுக்கு நல்லவன். இவனை சிரமப்படுத்துவோருக்கு இவன் மிகக் கொடூரமானவன். இந்த தரத்தில் இவன் விஷ்ணுவைத் தவிர வேறில்லை. முந்தைய வாழ்க்கையின் கர்மாவின் விளைவாக தீய செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். இந்த சிந்தனையற்றவர்கள், அறியாமல் கூண்டில் அகப்பட்ட சிங்கத்தை விடுவிப்பதைப் போல, துன்பகரமான மரணத்தைத் தழுவுவார்கள். (Summary: ArabhaTTa is avoided by villainous persons and liked by good people. This warrior is good to those who are good to him and extremely cruel to those who inconvenience him. In this quality he is none other than Lord Vishnu. There are people who indulge in evil deeds consequent of their karma of the previous lives. These thoughtless people will die a miserable death like those who unwittingly release a caged lion.)
குறிப்புநூற்பட்டி
- பாதாமி: பூதநாதா கோவில், மல்லிகார்ஜுனா கோவில் மற்றும் அகஸ்தியர் தீர்த்தக்குளம்
- An Image of Buddhavatara of Vishnu at Badami
- Badami Caves and Temples. https://kevinstandagephotography.wordpress.com/2015/04/13/badami-caves-and-temples/
- Badami cave temples Wikipedia
- Badami’s supremacy set in stone
- Best Memorial Stones of Karnataka. Karnataka Itihasa Academy.
- Inscription of Kappe Arabhatta discovered. The Hindu. February 03, 2011
- Kappe Arabhattana Shasana, 700 A.D.
- Natural Cave shrine discovered. Manjunath Sullolli. The New Indian Express. June 10, 2013.
எவ்வளவு விடயங்கள் பிரமிப்பாக இருக்கிறது. கன்னட மொழியிலும் கொடுத்து இருப்பது சிறப்பு.
LikeLiked by 1 person
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி…
LikeLiked by 1 person
எங்கிருந்து ஐய்யா இவ்வளவு தகவல்கள் உங்களுக்கு கிடைக்கின்றன
LikeLiked by 1 person
தங்கள் வருகைக்கும் மனமுவந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி. நேரில் பார்த்தும் படித்தும் தொகுத்த செய்திகள் இவை.
LikeLiked by 1 person
மிக நன்று
LikeLiked by 1 person
நன்றி ஐயா.
LikeLiked by 1 person
வணக்கம் சகோதரரே
நல்ல விளக்கமாக புரிந்து கொள்ளும விற்கு பாதாமி குகை கோவில் குறித்து எழுதிய பதிவு அருமை.
படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நிறைய விஷயங்கள் தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். படங்களும் சிற்பங்களும் மிகவும் அழகு. விபரங்களுக்கும், அதை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
LikeLiked by 1 person
பார்த்ததையும் படித்ததையும் பகிர்ந்துகொள்கிறேன். தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
LikeLiked by 1 person
படிக்கப் படிக்க வியப்புதான மிஞ்சுகிறது ஐயா
நன்றி
LikeLiked by 1 person
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
LikeLiked by 1 person
ஆழமான ஆராட்ட்சி இல்லாமல் இவளவு தெளிவான தகவல்கள் வாசகர்க்கு கொடுக்கமுடியாது…மனமார்ந்த பாராட்டுகள் அய்யா…பாறைகள் உடைத்து வீடு கட்டும் காலத்தில் , நூற்றாண்டுகளின் வரலாறை சொல்லும் குடைவரைகள் அற்புதம் தான்…வாழ்த்துக்கள்..
LikeLiked by 1 person
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி.
LikeLiked by 1 person