சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? இது எங்கு அமைந்துள்ளது என்று அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளதா? தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருவிசநல்லூர் யோகநாதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள சூரிய ஒளி கடிகாரம் இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தர சோழன் காலத்தில் மதிற்சுவரில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடிகாரம் தமிழர்களுக்கு வானியல் துறையில் உள்ள ஆழ்ந்த புலமையும், துல்லியமாக நேரம் கண்டறியும் திறனும் மேலோங்கி இருந்ததற்கான எடுத்துக்காட்டாகும்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிசநல்லூர் (திருவியநல்லூர்) பின் கோடு 612105, பிற்காலச் சோழர்களோடு தொடர்புடைய, வரலாற்று சிறப்புமிக்க கிராமம். வேம்பற்றூர் (வேப்பத்தூர்) என்றும் சோழமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம் என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டது. தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர் இரண்டாம் ஷஹாஜி (1684-1712 A.D) 1695 ஆம் வருடம் 46 அந்தணர்களுக்கு நிலக்கொடையாக திருவிசநல்லூரை கொடுத்த காரணத்தால் இது ஒரு பிரம்மதேசம் ஆயிற்று. ஷஹாஜிராஜபுரம் என்ற பெயரும் உள்ளது. 1952 ஆம் ஆண்டு வரை இது ஒரு இனாம் கிராமம். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களிருப்பதால் இவ்வூர் “பண்டாரவாடை திருவிசலூர்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் அமைவிடம் 11° 0′ 4.122″ N அட்சரேகை : (லாட்டிட்யூட்) 79° 25′ 38.4492″ E தீர்க்கரேகை : ( லான்ஜிட்யூட்) ஆகும். இவ்வூர் அமைவிடம் திருவிடைமருதூரிலிருந்து 6.6 கி.மீ தொலைவு ; கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 7.9 கி.மீ தொலைவு; தஞ்சாவூரிலிருந்து 47.2 கி.மீ தொலைவு; திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 82.8 கி.மீ தொலைவு.

திருவிசநல்லூர் இராஜகோபுரம் படம் உதவி சுப்பிரமணியனின் தளம்
இவ்வூரில் அமைந்துள்ள யோகநாதீஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவில். இக்கோவில் செங்கல் கட்டுமானத்திலிருந்து முழு கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. கோவில் மற்றும் பரிவார சன்னதிகள் முதலாம் இராஜேந்திர சோழனால் (1012-1044A.D.) விரிவுபடுத்தப் பட்டுள்ளன. கருவறையை ஒட்டி அமைந்துள்ள பிரகாரம் மற்றும் விமானம் விக்கிரம சோழனால் (1118-1135 A.D.) கட்டப்பட்டது. ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் பரந்து விரிந்துள்ள இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தாரால் நிர்வாகிக்கப்படுகிறது. திருவிடைமருதூர் – வேப்பத்தூர் சாலையில் சென்றால் இக்கோவிலுக்கு செல்லலாம். கார்த்திகை மாதம் நடைபெறும் அய்யாவாள் ஆண்டு உற்சவம் மிகவும் பிரசித்தம்.
இறைவன் இறைவி
இறைவன் யோகநாதீஸ்வரர் என்ற சிவயோகிநாதர். இவரை புராதானேஸ்வரர், வில்வாரண்யேசுவரர் என்றும் அழைப்பதுண்டு. அம்பிகை சவுந்திரநாயகி என்ற சாந்தநாயகி முதலாம் பிரகாரத்தில் தெற்குப்பார்த்த சன்னதியில் எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 43 ஆம் தலம். மூலவர் கிழக்கு நோக்கிய சன்னதியில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். சித்திரை மாதம் 1-3 மூன்று தேதிகளில் சூரியக் கதிர் சிவலிங்கத்தின் மேல் படிவது இக்கோவிலின் சிறப்பு. தலவிருட்சம் அரசமரம். ஜடாயு தீர்த்தம்.
புராணம்
படைப்புக் கடவுளான பிரம்மன், விஷ்ணு சர்மாவின் மகனாக, இவ்வூரில் அவதரித்தார். தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் இயைந்து சிவனை வேண்டி தவமியற்றினார். தவம் கண்டு மனமிரங்கி நேரில் தோன்றிய சிவன் இந்த ஏழு யோகிகளை ஏழு ஜோதி வடிவங்களாக்கி தன்னுள்ளே ஐக்கியப்படுத்திக்கொண்ட நாள் சிவராத்திரியாகும். எனவே இங்கு சிவனுக்கு சிவயோகிநாதர் என்று பெயர்.

சதுர்கால பைரவர்
சதுர்கால பைரவர்
இவ்வாலயத்தில் முதலாம் பிரகாரத்தில் மேற்கு பார்த்த சன்னதியில் நான்கு பைரவர்கள், சதுர்கால பைரவர் (ஞானகால பைரவர், சுவர்னாகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர் மற்றும் யோகபைரவர்) என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு சுக்கில பட்ஷ அஷ்டமி வழிபாடு சிறப்பு.
நந்தி சற்றே தலையைச் சாய்த்து எதையோ கேட்டபடி வலது பக்கம் சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இரிஷப இராசிக்குரிய பரிகார தலம் இது. கற்கடேஸ்வரர் கோவில் இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சோழர் கால சூரியஒளி கடிகாரம்

சூரியஒளி கடிகாரம். படம் உதவி ராஜமாலா. வோர்ட்ப்ரஸ்

சூரிய ஒளி கடிகாரம் படம் உதவி சுப்பிரமணியனின் தளம்
கோவிலின் தென்புறம் அமைந்துள்ள மதிற்சுவருக்கு அருகில், அம்மன் சன்னதிக்கு எதிரில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சூரியஒளி கடிகாரம் அமைந்துள்ளது. இரண்டாம் பராந்தக சோழன் என அழைக்கப்படும் சுந்தர சோழன் (957–973 AD) காலத்தில் அமைப்பட்டதாகக் கருதப்படும் இச்சுவர்க் கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயங்க பேட்டரி தேவையில்லை. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் கணக்கிட்டு இக்கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரானைட் கல்லில் அரைக்கோள வடிவில் டயல் பேட் (dial pad) செதுக்கப்பட்டுள்ளது. நடுவில் மூன்று இன்ச் நீளத்தில் பித்தளையால் செய்யப்பட்ட முள் (ஆணி) செங்குத்தாக (vertical) நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் நிழல் இந்த ஆணியில் பட்டு நிழல் எந்த புள்ளியில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம். கோவிலுக்கு வந்த பக்தர்கள், சூரியஒளி ஆணியில் பட்டு டயல் பேடில் நிழல் விழும் புள்ளியை கண்டு இந்த நேரம் என்று கணக்கிடுவதுண்டாம்.
பத்தாம் நூற்றாண்டில் (957–973 AD) எழுப்பப்பட்ட கோவிலில், இந்த சூரிய ஒளி கடிகாரம், சூரிய ஒளி உள்ளவரை நேரம் காட்டும். சூரியன் மறைவுக்குப் பிறகு இதனைப் பயன்படுத்தவியலாது. பித்தளை முள் சூரிய ஒளியால் வெளுத்துப் போனதால் கிரானைட் கல்லுக்கும் முள்ளுக்கும் நிறத்தில் வேறுபாடு காணமுடியவில்லை.
இன்று நாம் காணும் எண்கள் ஆங்கிலேயரால் அவர்கள் வசதிப்படி கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. 46 லட்ச ரூபாய் செலவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சூரிய கடிகாரத்தை பழுது பார்த்து ஒப்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ‘இன்று இந்த சூரிய ஒளி கடிகாரம் காட்டும் காலம் துல்லியமானதல்ல’ என்று திரு.ஆறு.இராமநாதன் (இவர் தேவகோட்டை திரு. ஏ.ஆர்.எம். ஏ.எல்.ஏ அருணாசலம் செட்டியார் பேரன்) கருதுகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு 1931இல் ஆறு.இராமநாதன் இக்கடிகாரத்தைப் புதுப்பித்துள்ளார்.
கல்வெட்டுக்கள்
நூறு கல்வெட்டுக்கள் இக்கோவிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. சோழர்கள் கல்வெட்டுக்களில் இத்தலம் “வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு, மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் ” என்றும், இறைவன் பெயர் “திருவிசலூர் தேவ பட்டாகரர், சிவயோகநாதர் ” எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இரண்டாம் பராந்தக சோழன் பொறித்த கல்வெட்டில், கோவிலில் விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் நிவந்தம் அளித்த தகவலையும், திருமுழுக்காட்ட நில நிவந்தம் கொடுத்த செய்தியையும், காவிரியிலிருந்து திருமுழுக்காட்ட நீர் கொண்டுவர ஊழியர்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன.
இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டில், அரசன் கோயிலுக்கு அளித்த நிலக்கொடை பற்றிய செய்தியையும், இவனது அரசி சுவாமிக்கு தங்க நகைகளும், அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த தகவல்களையும் அறிவிக்கின்றது.
கண்டராதித்தன் மனைவியும் உத்தம சோழனின் தாயுமான செம்பியன் மாதேவியார் தங்க நகைகள் மற்றும் பாத்திரங்கள் பரிசளித்துள்ளார். முதலாம் இராஜராஜன் மற்றும் இவரின் அரசியார் தங்க துலாபாரம் அளித்துள்ளனர். கிருஷ்ணதேவராயர் கோவிலுக்கு சில வரிவிலக்குகளை அளித்துள்ளார். 1903 ஆம் மற்றும் 1933 ஆண்டுகளில் தேவகோட்டையைச் சேர்ந்த செட்டியார்கள் கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.
திருவிசலூர் செல்ல…
அருகிலுள்ள பெரிய இரயில் நிலையம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து இவ்வூர் சாலைகளோடு இணைக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் டாக்சி வசதி உண்டு. தங்கும் விடுதிகள் கும்பகோணத்தில் கிடைக்கும்.
குறிப்பு நூற்பட்டி
- அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், தினமலர்
- A slice of history. R Krishnamurthy The Hindu April 07, 2011
- It’s time to refurbish unique sun clock at Thiruvisainallur temple Dennis Selvan Times of India Apr 14, 2013