பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வதி என்ற குறுகலான சாலையும், பெருவழி என்ற நெடுஞ்சாலையும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. தட்சிணப் பெருவழி (Dakshina Patha) என்னும் பிரதான பெருவழி வடஇந்திய நகரங்களையும் (மகதம்!) தென்னிந்திய நகரங்களையும், மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளின் புகழ்பெற்ற துறைமுகப் பட்டணங்களையும் இணைத்தன. இதுவல்லாமல் காஞ்சிபுரத்திலிருந்து மகாராஷ்டிர நகரங்களுக்கு ஒரு பெருவழி சென்றது (பூனே?). மேற்கு கடற்கரையிலிருந்து அழகன்குளம் வரை ஒரு பெருவழி சென்றது. இராமேஸ்வரம் இப்பெருவழியுடன் இணைக்கப்பட்டிருந்தது. மேற்கு கடற்கரை பட்டணங்களிலிருந்து (கோவா?) தஞ்சாவூர் வழியாக பூம்புகார் சென்றது ஒரு பெருவழி. தமிழ் கல்வெட்டுகள் பல பெருவழிகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ளன. இவை அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, இராசகேசரிப் பெருவழி, இராஜமஹேந்திரப் பெருவழி, கொங்கப் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, மகதேசன் பெருவழி, வடுகப் பெருவழி, வீரநாராயணப் பெருவழி போன்ற பெருவழிகளைக் குறிப்பிடுகின்றன.
இப்பதிவு 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை கண்டறியப்பட்ட பெருவழி காதக்கற்கள் (அதியமான் பெருவழி), யோசனைக் கற்கள் (மகதைப் பெருவழி), புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், மேட்டுப்பட்டி கேட், கூழையான்விடுதி மற்றும் ஆதனக்கோட்டை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட ஆங்கிலேயர் கால மைல் கற்கள் பற்றியும், இவை வழியாக அறியப்படும் செய்திகள், பயன்டுபத்திய எண்முறை, குறியீடுகள் பற்றியும் விவரிக்கின்றது.
அதியமான் பெருவழி காதக்கல்
இவற்றுள் அதியமான் பெருவழி, அதியமான் என்ற சங்ககால குறுநில மன்னர் பரம்பரையின் பெயரைச் சுட்டுகிறது. இந்த சங்ககாலப் பெருவழி பற்றி பல குறிப்புகள் கிடைத்துள்ளன. இந்தப் பெருவழியில் பயணிகளுக்கு உதவும் வகையில் நகரத்தின் பெயரையும், தொலைவையும் பொறித்த காதக்கற்கள் நடப்பட்டிருந்தன. இரண்டு காதக்கற்கள் இந்தப் பெருவழியிலிருந்து கண்டறியப் பட்டுள்ளன. காதக்கற்களின் எழுத்தமைதியை ஆராய்ந்த கல்வெட்டறிஞர்கள் இவற்றின் காலத்தை 13 ஆம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனர். இரு காதக் கற்களும் தரும் செய்தி: தகடூரிலிருந்து குறிப்பிட்ட நகரம் எவ்வளவு தொலைவு என்பதை கற்றவர் அறியும்படி எண்ணாகவும் (numbers) , கல்லாதார் அறியும்படி குறியீடாகவும் பொறித்துள்ளனர்.
இரண்டு அதியமான் பெருவழிக் காதக் கற்களில் ஒன்று நாவல்தாவளம் 19 காதம் தொலைவில் உள்ளது என்றும், மற்றொன்று நாவல்தாவளம் 27 காதம் தொலைவிலுள்ளது என்றும் குறிக்கின்றன. தமிழ் எண்களை குறிக்கும் எழுத்துமுறையையும், பெரிய மற்றும் சிறிய அளவிலான குழிகளையும் குறியீடுகளாகப் பயன்படுத்தியுள்ளனர். பெரிய குழி பத்து என்ற அளவையும் சிறிய குழி ஒன்று என்ற அளவையும் குறித்தன.

தருமபுரி அகழ்வைப்பகம்: அதியமான் பெருவழிக்கல். PC: Wikimedia Commons
அதியமான் பெருவழிக் காதக்கல்லில் ஒன்று (19 காதம் என்று குறிப்பது) அதியமான் கோட்டை-பாலக்கோடு சாலையின் மேற்குபக்கம் வயல்களுக்கு இடையில் தமிழக தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மற்றொரு காதக்கல் (27 காதம் என்று குறிப்பது) தருமபுரி-கன்னிப்பட்டி நகர பேருந்து சாலையில் தருமபுரியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தம்பட்டி என்னும் ஊரில் சாலையின் வலப்புறம் உள்ள கிணற்று மேட்டில் கண்டறியப்பட்டது. இரண்டாம் கல் சேலம் பா. அன்பரசு மற்றும் மா. கணேசன் ஆகியோரால் கண்டறியப்பட்டது.

PC: Wikimedia Commons
நாவல்தாவளம் என்னும் பண்டையகால வணிகர்கள் தங்குமிடம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை வணிகர்கள் தங்கிச்செல்வதற்கும், அங்கேயே வணிகம் செய்வதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்ட தங்குமிடங்கள். “இந்த நாவற் தாவளம் ஊர் எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தகடூருக்கு வடகிழக்கில் இன்றைய வேலூர் மாவட்டத்தில் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.” இந்த பொருளில் அமைந்து இன்றுவரை நாமறிந்த ஊர்கள் இவை: வேம்படித்தளம் (வேம்படித்தாவளம், சேலம் மாவட்டம்), மஞ்சுபுலத்தாவளம் (கோவை மாவட்டம்), தாவளம் (கிருஷ்ணகிரி மாவட்டம்), வேலந்தாவளம் (கேரள மாநிலம்) மற்றும் வண்டித்தாவளம் (கேரள மாநிலம்).
ஆறகழூர் மகதை பெருவழி யோசனைக்கல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் ஆறகளூர் கிராமம் பின் கோடு 636101 – 11° 33′ 39.1428” N அட்சரேகை 78° 47′ 29.5332” E தீர்க்கரேகையில் – அமைந்துள்ளது ஒரு கிராமம். ஆறு அகழிகளால் சூழப்பட்ட நகரம் என்பதால் ஆறகளூர் எனப் பெயர் பெற்றதாம். வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் (Chieftain) ஆட்சி செய்யப்பட்ட மகதை மண்டலம், இப்பகுதியிலுள்ள கிராமங்களை உள்ளடக்கிய, ஒரு குறு நாடு (Chieftaincy) ஆகும். இவ்வூர் காமநாதீஸ்வரர் ஆலயமும் இங்குள்ள அஷ்ட பைரவர் சன்னதியும் புகழ்பெற்றவை.
இவ்வூரில் கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே ராமனின் விளைநிலத்தில் வரப்பின் மீது 13-ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு (ஆறகழூர் மகதை பெருவழி யோசனைக்கல்) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. திரு. பொன்.வெங்கடேசன், சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர், ஆய்வு செய்தபோது கூறியதாக நாளிதழில் வெளியான செய்தி இது:
“ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும், புரவாரியாருக்கு’ என கல்வெட்டு துவங்குகிறது. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்துள்ள களப்பாளராயர் என்பவர் நிலங்களை நிர்வகித்து வந்துள்ளார். புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர்.
அப்போது வாழ்ந்த வணிகர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை. இதற்கு பதிலாக வடக்கில் வாயிலில் உள்ள உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனாருக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைக்கும், திருப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. தாவளம் என்பது ஒரு மிகப் பெரிய வணிக நகர். ஆறகழூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்துள்ளது. அதில், “ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்’ என கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.
ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல்லில் உள்ள 16 குழிகள் ஆறகழூரிலிருந்து காஞ்சிபுரத்துக்குமிடையே உள்ள தொலைவை குறிக்கிறது. இந்த மைல் கல் கல்வெட்டு தற்போது சேலம் மாவட்ட அருங்காட்சியகத்தில் கட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டில் ‘தன்மதாவளம்’ என்ற சொற்றோடர் காணப்படுவது போலவே அதியமான் பெருவழியில் ‘நாவல்தாவளம்’ என்ற சொற்றோடர் பயன்பாட்டில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
கூகுள் குழுவின் (Google Group) ஹூஸ்டன் தமிழ் மன்றத்தில் (Forum ) ஏப்ரல் 16, 2017 ஆம் தேதியிட்ட ஆறகழூர்க் கல்வெட்டு காட்டும் யோசனை தூரம் என்ற தலைப்பில் பல அரிய செய்திகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்த யோசனைக்கல் கல்வெட்டை சு. இராசகோபால் படித்துள்ளார். பொன். வெங்கடேசன் கொடுத்த படி இது: https://groups.google.com/forum/#!msg/mintamil/sNUFVgCBc98/I44i6dsTEQAJ
1.ஸ்வஸ்திஸ்ரீ களப்
2.பாளராயனும் புரவ
3.ரியாருக்கு செய்யும்படி
4.வடக்கில் வாயிலில் உலக
5.ங்காத்த சோளீச்0வரமு
6.டைய னாயனார்கு வா
7.ணியர்கு முந்பு நம் ஒன்
8.பதாவது தை மாதம் மு
9.தல் இ நாயனார்கு பூ
10.ஜைக்குந் திருப்பணி
11.க்குமுடலாகக் குடுத்
12.தோம் என்று திருவெழு
13.த்துச் சாத்தின திருமுகப்
14.படிக்கு கல்வெட்டு
15. இது தன்ம தாவ
16.ளந் தந்மம்

ஆறகழூர் மகதை பெருவழி மைல் கல் PC: ஆறகழூர் பொன் வெங்கடேசன்
அன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம் மைல் கல்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டம் அன்னவாசல் ஊராட்சி (அமைவிடம் 10.47°N 78.7°E ஆகும்), புதுக்கோட்டை – விராலிமலை சாலையில் அன்னவாசல் கிராமத்தில் (பின் கோடு 622101) ஒரு மைல் கல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அமைவிடம்: ‘அரசு மாணவர் விடுதிக்கு நேர்எதிரில் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 200 அடி கிழக்கு – வனத்து சின்னப்பர் குருசடிக்கு மேற்கு ஜெயமேரி இல்லம் என்னும் வீட்டின் முன்புறம்’ உள்ளது. இந்த மைல் கல்லில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ‘சாலையைப் பார்த்தவண்ணம் நடப்பட்டுள்ள இக்கல்லின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஊர்ப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு திசைகளிலும் இருந்து வரும் பயணிகள் தெரிந்துகொள்ள வசதியாக இந்த ஏற்பாடு.’
மேட்டுப்பட்டி கேட், புதுக்கோட்டை மாவட்டம், மைல் கல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ஆலங்குடி மார்க்கத்தில் செல்லும் சாலையில் மேட்டுப்பட்டி கேட் (பின் கோடு 622001) பேருந்து நிறுத்தத்தில் சாலையின் தென்புறம் சாலையில் கிடந்த ஒரு மைல் கல்லை நா.அருள்முருகன் மற்றும் ராசி. பன்னீர்செல்வன் ஆகியோர் 06.10.2013 அன்று கண்டறிந்துள்ளனர்.
கூழையான்விடுதி, புதுக்கோட்டை மாவட்டம், மைல் கல்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், புதுக்கோட்டை அருகே தஞ்சை சாலையில் அமைந்துள்ள கூழையான்விடுதி கிராமத்தில் கடந்த 2014-ல், ஒரு மைல் கல்லை கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த ஆ.மணிகண்டன் கண்டுபிடித்தார். அதில், ஆதனக்கோட்டை 6 மைல் என்றும், புதுக்கோட்டை 9 மைல் என்றும் தமிழ் மற்றும் ரோம எண்களில் எழுதப்பட்டிருந்தது.
18ம் நூற்றாண்டின் மைல் கல்: ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், ஆதனக்கோட்டை கிராமம் பின் கோடு 622203, (அமைவிடம் 10° 35′ 40.65” N அட்சரேகை 79° 10′ 19.8732” E தீர்க்கரேகை) புதுக்கோட்டையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஹைதர் அலிக்கும் தொண்டைமானுக்கும் போர் நடந்துள்ளது. இங்கு சிதிலமடைந்த நிலையில் ஒரு சாஸ்தா கோவில் உள்ளது. இவ்வூரில் காவல் நிலையம் அருகே 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைல் கல் ஒன்று தமிழ் மற்றும் ரோமன் எண்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த ஆ.மணிகண்டன், மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் களஆய்வு மேற்கொண்டபோது மண்ணில் புதைந்த நிலையிலிருந்த இந்த மைல் கல்லை கண்டறிந்துள்ளனர்.
மைல் கல் வரலாறு பற்றி திரு.மணிகண்டன் தெரிவித்துள்ள கருத்துக்கள் இவை:
’18ம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக சாலை அமைத்து முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மைல்கல் கல்வெட்டில் ஆதனக்கோட்டை “ய௬” அதாவது 16 மைல் என்றும் தஞ்சை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை “௧௪ “ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வருபவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டுள்ளது.
இதேபோல் மேட்டுப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட மைல் கல்லிலும் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதனக்கோட்டையின் புறப்பகுதியிலும் மைல்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதனக்கோட்டையிலிருந்து கூழியான்விடுதி வரை தற்போதுள்ள நெடுஞ்சாலையும் அதனைத்தொடர்ந்து புதுகைக்கு செல்லும் பாதை மேட்டுப்பட்டி வழியாகவே அப்போதைய புதுக்கோட்டைக்கான நெடுஞ்சாலை அமைந்துள்ளதை இந்த மைல்கல் கல்வெட்டு உறுதி
தற்போது நடைமுறையிலுள்ள அரபு எண்கள் புதுகை சமஸ்தானத்திற்குட்பட்ட மைல்கற்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதோடு ரோமன் எண்களையும் தமிழ் எண்களையும் மட்டுமே பயன்படுத்தி இந்த மைல்கல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன. தமிழ் எண்கள் சமீப காலமாகத்தான் புழக்கத்திலிருந்து போயிருக்கிறது என்பதையும் தெளிவாக்குகிறது’
பேரையூர் மைல்கல்

பேரையூர் மைல்’ கல் PC: தினமலர்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி – முதுகுளத்துார் சாலையில் பேரையூர் கிராமம் பின் கோடு 623708 உள்ளது. (அமைவிடம் 9° 21′ 23.9958” N அட்சரேகை 78° 27′ 12.7987” E தீர்க்கரேகை ஆகும்). இப்பகுதியில் ஆங்கிலேயர்களால் ௧௦௦ ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன ‘மைல்’ கல், கண்டறியப்பட்டுள்ளது. இன்றைக்கும் உருக்குலையாமல் மிடுக்குடன் காணப்படும் இக்கல்லில் உள்ள தகவல்களும், மிகத் தெளிவாகப் படிக்க முடிகிறது.
குறிப்புநூற்பட்டி
- 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு தினமணி ஏப்ரல் 13, 2017
- அதியமான் பெருவழி (ta.Wikipedia)
- ஆறகழூர்க் கல்வெட்டு காட்டும் யோசனை தூரம் பார்வை 1 பார்வை 2
- இரா.நாகசாமி,தருமபுரி கல்வெட்டுகள், முதல் தொகுதி எண்.1974/85;ARE 169/1968-69
- உலகிற்கே வழிகாட்டும் பண்டை தமிழகத்தின் மைல்கற்கள் – ஒரு சுவாரஸ்ய பயணம்! தினமணி ஏப்ரல் 20, 2017 http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/apr/20/tamilnadu-and-its-rich-history-of-highways-and-milestones—an-interesting-journey-2687836–1.html
- கம்பீரமாக காட்சியளிக்கும் ஆங்கிலேயர் கால ‘மைல்’ கல் தினமலர் ஆகஸ்டு 19, 2017
- தமிழ் எண்களுடன் 18ம் நூற்றாண்டு மைல் கல்:புதுகை அருகே கண்டுபிடிப்பு தினமலர் ஜூலை 8, 2016.
- தாவளம் (ta.Wikipedia)
- நட்ட கல்லும் பேசுமே… மே 18, 2014
மிக அருமையான கட்டுரை ஐயா. மைல் கல்கள் பற்றியும் தாவளங்களைப்பற்றியும் தொகுத்து சிறப்பாக வெளியிட்டு உள்ளீர்கள் மிக்க நன்றி
ஆறகழூர் பின்.வெங்கடேசன்
LikeLiked by 1 person