புன்னதாலா, கேரளா: இஸ்லாமியர்கள் நிதியளித்து கட்டிய ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவிலில் இஃப்தார் நோன்பு விருந்து!

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறுபான்மையினரைக் குறிவைத்து மாட்டு இறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சமயத்தில், கேரள மாநிலதிலுள்ள புன்னதாலா என்ற கிராமத்தில் உள்ள இந்து வைணவக் கோவில், 2017 மே மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாலை இக்கிராமத்தில் வாழும் 500 இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாத நிகழ்வான இஃதார் நோன்பு திறப்பு விருந்தளித்து மகிழ்துள்ளது.

இது பற்றி திரு. மோகனன், செயலாளர், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில், புன்னதாலா  சொன்ன கருத்து இது: ‘‘எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட (‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில் புனரப்பு திருப்பணிகளுக்கு’), சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும், எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி ‘மனிதம்‘ என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்.‘’

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த புன்னதாலா பின் கோடு 676552 (அமைவிடம் 10° 56′ 32.1954” N அட்சரேகை 76° 1′ 2.7149” E தீர்க்கரேகை ஆகும்). கள்ளிக்கோட்டையிலிருந்து 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி கண்ணுக்கு குளிர்ச்சியாக மலைகளும், நீரோடைகளும் நிறைந்து வளம் கொழிக்கும் பிரதேசம். கடலுண்டிப்புழா என்ற நதி மலப்புரத்தில் பாய்ந்து வளம் கூட்டுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மலப்புரம் மாவட்டத்தின் மக்கள் தொகை 4, 112, 920; இவர்களில் 27.60 சதவிகிதத்தினர் மட்டுமே இந்துக்கள், மீதி 70.24 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள். பெருமளவு இஸ்லாமியர்கள் வாழும் இப்பகுதியில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள்.

மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான இஸ்லாமியர்கள் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். வளைகுடா நாட்டிலிருந்து இவர்கள் ஈட்டும் வருவாய் இப்பகுதியை பணம் கொழிக்கும் பூமியாகவும் மாற்றியுள்ளது. மலப்புரதுக்கு கேரள மாநிலத்தின் ‘கால்பந்து தலைநகரம்’ என்ற பெருமையும் உண்டு. நவீன பாணியில் கட்டப்பட்ட அழகிய மசூதிகள் நிறைந்த மாவட்டம் இது.

இந்த அழகிய புன்னதாலா என்கிற இஸ்லாமிய கிராமத்தில் மசூதிகளுக்கு நடுவில் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமிக்கு ஒரு சிறிய ஆலயம் உள்ளது. சுமார் நூறு ஆண்டுகள் பழைமையான ஆலயம் இது. இந்த ஆசாரமான வைணவ ஆலயத்தில் ஸ்ரீமான் நாராயணன் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஒட்டுமொத்த கிராமத்திலுள்ள இந்துக்களுக்கு இந்த ஒரு ஆலயம் மட்டுமே உண்டு. 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இக்கோவில் நாளடைவில் இடிந்து,  சிதைந்து. சிதிலமடைந்து போய் புனரப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தது. புன்னதாலா கிராமத்து இந்துக்கள் எப்படியாவது ஆலயத்தை புனரமைத்து விடவேண்டும் என்று வேண்டிய அளவு முயன்றாலும் போதிய நிதி வசதி இன்மையால் ஆலயப்புணரமைப்பு தள்ளிப்போனது. ஒரு காலகட்டத்தில் இதற்குமேல் இக்கட்டுமானம் தாங்காது என்ற நிலை வரவே இந்துக்கள் திகைத்து நின்றனர். புன்னதாலா கிராம இஸ்லாமியர்கள் இந்துக்களின் நிதி பற்றாக்குறையையும், கோவில் புனரைமைப்பு பணிகளின் அவசியத்தையும் கருதி மனமுவந்து உதவ முன்வந்தனர்.

22789002_512315022472210_1555607662090900920_n

PC: Facebook: Temples Closed Group

‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில் புனரப்பு திருப்பணிகளுக்கு நாங்கள் நிதி திரட்டித் தருகிறோம்’ என்று இஸ்லாமியர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள். சொன்னதோடு நில்லாமல் செயலிலும் இறங்கினர் சுமார் 20 லட்ச ரூபாய் திரண்டது. வைணவர்கள் கண்களிலோ ஆனந்தக்கண்ணீர்! காண்பது கனவல்ல நிஜம்.

temp_10021

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில் PC: Vikatan

திரட்டிய பணத்தை ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில் திருப்பணி கமிட்டியிடம் கொடுத்து திருப்பணிகளை தொடங்க உதவியதோடு மட்டும் நில்லாது தங்கள் உடல் உழைப்பையும் தர முன்வந்தது மேலும் சிறப்பு. திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றன. இஸ்லாமியர்களின் இந்த மனிதநேயமிக்க உதவியால் இந்துக்கள் நெகிழ்ந்து போனார்கள். என்ன கைம்மாறு செய்து இந்த நன்றிக்கடனைத் தீர்ப்பது?

temp1_10232

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில் வளாகத்தில் புன்னதாலா இஸ்லாமியர்களுடன் பிற மதத்தினரும் இணைந்து 30.5.2017 மாலை இஃப்தார் (சைவம்) விருந்து உண்டனர்

அது புனித ரமலான் மாதம். புன்னதாலா இஸ்லாமியர் ரமலான் நோன்பினை அனுசரித்து வந்தனர். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மமூர்த்தி சுவாமி கோவில் நிர்வாகம் தன்னுடைய இந்து கோவில் வளாகத்தில் புன்னதாலா இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு திறப்புக்காக 2017 மே மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மாலை இஃப்தார் (சைவம்) விருந்து வழங்க முடிவு செய்தது. ஊரிலுள்ள இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் முறையாக அழைக்கப்பட்டனர். இந்த இஃப்தார் விருந்தில் இஸ்லாமியர்களுடன் பிற மதத்தினரும் இணைந்து சுமார் 400 பேர் மகிழ்வுடன் பங்கேற்றனர். பரிமாறப்பட்ட இனிய சைவ இஃப்தார் விருந்து மனதை மட்டுமல்ல மதங்களையும் இணைத்தது.

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும் – தேசம்
மலர் மீது துயில் கொள்ளட்டும் – கவிஞர்.வைரமுத்து

குறிப்புநூற்பட்டி

Temple organises iftar party for all in Malappuram Deccan Chronicle ஜூன் 2, 2017

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், மதம் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.